குற்றாலத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி முகாமின்போது (27.5.2011) செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சமச்சீர் கல்வியின் அவசியத்தையும், அரசியல் கண்கொண்டு இதனை அணுகக் கூடாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்களும்கூட மிகப் பெருந்தன்மையோடு, எனது செம்மொழி பாடல் இடம்பெற்றதுதான் சமச்சீர் கல்வித் திட்டத்தையே நீக்குவதற்குக் காரணம் என்றால், அந்தப் பாடலை நீக்கிவிட்டு, சமச்சீர் கல்வித் திட்டத்தை செயல்படுத்தலாமே என்றும் கூறியிருக்கிறார்.
சமச்சீர் கல்வி திட்டம் என்பது தி.மு.க.வின் திட்டமல்ல; கல்வியாளர்களின் திட்டம்.
பணக்காரருக்கு ஒரு கல்வி, ஏழைக்கு இன்னொரு கல்வி, பார்ப்பானுக்கு ஒரு கல்வி, பஞ்சமருக்கும், சூத்திரருக்கும் இன்னொரு கல்வி என்னும் வருக்க - வருண வேறுபாட்டைக் கெல்லி எறியும் திட்டமாகும்.
எல்லோருக்கும் கல்வியா? அது கூடாது என்று சொல்லும் ஒரு கூட்டம் இந்த நாட்டில் இருந்து வருகிறது. சிரிப்பதுகூட இங்கிலீஷில் இருக்கவேண்டும் என்று எண்ணுகிறவர்கள் உண்டு. சமச்சீர் கல்வியில் தமிழ் கட்டாயம் என்ற நிலையும் உருவாக்கப்பட்டு விட்டது.
எங்களவாளின் தரம் வேறு - மற்றவாளின் தரம் வேறு என்று எண்ணுகிறவர்கள் கைகளில் ஊடகங்கள் இருக்கின்றன.
அந்தக் கூட்டம் வழக்கமான தந்திர உபாயத்தைக் கைகொண்டு எழுதுகின்றன. சமச்சீர் கல்வி தவறு என்று நேரிடையாகக் கூறாமல் - இதற்காகத் தயாரிக்கப்பட்ட பாடத் திட்டங்கள் சரியில்லை என்று அதனைப் பெரிதுபடுத்துகின்றன.
முன்னாள் கல்வி அமைச்சர் மானமிகு தங்கம் தென்னரசு அவர்கள் பாடத் திட்டங்கள் எந்த வகையில் தரமானதாக இல்லை என்பதை அரசு நிரூபிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பாடத் திட்டங்களைத் தயாரித்தது யார்? அரசியல்வாதிகளா, அமைச்சர்களா? இல்லையே, பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் கல்வியாளர் இல்லை என்று கூறப் போகிறார்களா? இந்தக் குழுவிற்குப் பல தரப்பினரும் தங்கள் கருத்துகளை, பரிந்துரைகளை எழுத்து மூலமாகக் கொடுத்தது உண்டே! போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டதே! கல்வியாளர்கள்தானே பாடங்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளனர்? அவர்கள்மீதும் அரசியல் சாயம் பூசலாமா - அது சரியானதுதானா? தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அயோத்திதாசர், பாரதிதாசன், எம்.ஜி.ஆர். போன்றவர்களின் பாடங்கள் இடம்பெற்றுள்ளனவே!
இந்து முன்னணி அமைப்பாளர் திருவாளர் இராமகோபால அய்யருக்கு இந்தத் தலைவர்கள் பற்றிப் பாடங்களில் இடம்பெற்றிருப்பது குறித்துக் கோபம் கொப்பளிக்கலாம் - அதனைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சமச்சீர் கல்வி தொடர்பான வழக்கின்போது அரசு சார்பில் வாதிட்ட தலைமை வழக்கறிஞர் தெரிவித்த கருத்து சமச்சீர் கல்வியையே குறைகூறும் ஒலி தொனிக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் வினா ஒன்றை எழுப்பியுள்ளார். சமச்சீர் கல்வி வேண்டுமா - வேண்டாமா? இதில் அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு என்ன என்ற வினாவை எழுப்பியிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முன்னணியினருள் ஒருவரான தீக்கதிரின் முன்னாள் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள், மெட்ரிக் பள்ளியின் முதலாளிகள் சமச்சீர் கல்வியைத் தடுப்பதில் ஒரு லாபி வைத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டி.கே. ரங்கராசன் அவர்களின் கருத்தில் சற்று சுருதி பேதம் காணப்படுகிறது என்றாலும், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளே கூட சமச்சீர்க் கல்வியின் அவசியத்தை வலியுறுத்துவதிலிருந்தே - சமச்சீர் கல்வியை அரசியலாக்கக் கூடாது; அதனைத் தடை செய்யக் கூடாது என்ற கருத்து வலுப்படவில்லையா? 500 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட ஒரு திட்டத்தை தூசாகத் தட்டிவிடலாமா? அது மக்கள் பணம் அல்லவா? ஓர் அரசு போய் இன்னொரு அரசு ஜனநாயக அமைப்பில் வருவது வழமையான ஒன்றுதானே! ஆட்சி மாறினால் அடிப்படைத் திட்டங்களும் மாற்றப்பட்டுத்தான் தீரவேண்டுமா? உயர்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியின்போது சைக்கிள்கள் வழங்கப்பட்டன; அ.தி.மு.க.விற்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு அந்தத் திட்டத்தை நிறுத்திவிடவில்லையே! சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முதலில் ஆதரித்துவிட்டு, பிறகு ராமன் பாலம் என்று காரணம் காட்டி, அந்தத் திட்டமே கூடாது என்ற முடிவை அ.தி.மு.க. எடுத்தது போன்ற நிலை- சமச்சீர் கல்விக்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், பெற்றோர் களுக்கும், கல்வியாளர்களுக்கும் இருந்து வருகிறது. அப்படியல்ல என்று காட்டவேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு உண்டு. மறுபரிசீலனை என்ற ஒன்று எதிலும் உண்டு - தமிழ்நாடு அரசு சிந்திக்கட்டும்!
------------------"விடுதலை” தலையங்கம் 1-6-2011
1 comments:
சமச்சீர் கல்வி வரவேண்டும் என்பதில் அதிமுக அரசு விரைவில் முடிவெடுக்கும் ... ஆனால் இதில் மத ரீதியான எதிர்ப்போ , சாதிய அரசியலோ இல்லை என்பதனை ஒத்துக் கொள்ள வேண்டும்.. நல்ல முறையில் பாட திட்டம் அமைய வேண்டும்.. அதனை பாட புத்தகமாக்கப் படும் போது அனைத்து தரப்பு மாணவரின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு வடிவமைக்கப் பட வேண்டும் என்பது ஒரு குறையாக காட்டப்படுள்ளது ... அதில் பார்பனியம் சம்மந்தப்படுத்தி பேசுவது எனக்கு சரியாகப் பட வில்லை...மற்றப்படி மாணவர் நலனில் , நல்ல திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தங்களின் கருத்துக்கள் ஏற்புடையன...
Post a Comment