காவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியலாமா?
தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
ஊழலை ஒழிப்பது என்ற பெயரால் காவியாட்சியை மீண்டும் கொண்டு வரும் சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ளாமல், காவிகளின் மிரட்ட லுக்கு மத்திய அரசு அடி பணியலாமா என்ற வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். இதுகுறித்த அறிக்கை வருமாறு:
ஊழலை ஒழிக்கிறோம் என்ற புதிய முகமூடியுடன் இந்துத்துவா - மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டில்லியில் அரங் கேற்றுகின்றன.
சுமார் 18 கோடி ரூபாய் செலவில் டில்லி ராம்லீலா மைதானத்தில் மின்விசிறிகள், மேடைகள் முதலிய தடபுடல் ஏற்பாடுகள்.
அண்மைக் காலத்தில் உடற்பயிற்சிகளில் ஒன்றான மூச்சுப் பயிற்சியான யோகா வித்தைகளைப் பரப்பி, பல நவீனரக பாபாக் களும், காவிகளும் ஆண்டவன் அவதாரங் களும், தத்துவார்த்த மழைபொழியும் நடிகர்களைத் தோற்கக் கூடிய ஒப்பனைக் குருமார்களும் புற்றீசல் போல கிளம்பி வருகின்றனர்!
தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு யாதவர் திடீரென - யோகா பயிற்சியில் முன்னணிக்கு வந்து, பாபா ராம்தேவ் ஆகி, பல அரசியல் தலைவர்கள் ஆதரவை ஆரம்பத்தில் பெற்று, பிறகு வெளி நாட்டுப் பணக்காரர் களையும் சீடர்களாக்கி, உலகப் பணக்கார ஆசிரமங்களையொத்த ராஜபோகத்தை எளிமை வாழ்வு எனக் கூறி நடத்துகின்றனர்!
அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா?
அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை பயமுறுத்திட இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர் - பாபா ராமதேவ், அன்னா ஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!
மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி - குறிப்பாக காங்கிரஸ் தலைமையில் உள்ள ஆட்சிக்கு எதிராக பா.ஜ.க. காவி ஆட்சியை மீண்டும் கொண்டு வரவே இப்படிப் பட்ட திடீர் ஊழல் ஒழிப்பு திடீர்க் காட்சிகள்!
டில்லியில் இதில் அரசியல்வாதிகள் மேடை யில் இருக்க அமைதிக்கப்படமாட்டார்களாம்! மாறாகக் கலந்து கொள்பவர்கள் யார் யார் தெரியுமா?
1. விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால்.
2. சாத்வி ரிதம்பரா
3. ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர்
4. இந்து அமைப்புகள்
இதில் அசோக் சிங்கால், சாத்வி ரிதம்பரா போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்பில் சம்பந்தப்பட்டு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள்; ஜஸ்டீஸ் லிபரான் கமிஷன் என்ற அறிக் கையை காங்கிரஸ் கட்சி செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு விட்டதே! அதிலும் அலகா பாத் உயர்நீதிமன்ற வழக்கிலும் இவர்கள் எல்லாம் உள்ளனர்!
இதை அய்க்கிய முற்போக்கு முன்னணி ஆட்சித் தலைமை, பிரதமர், அமைச்சர்கள் எவருமா புரிந்து கொள்ளவில்லை?
ஊழலை ஒழிக்க தயங்காது என்று கூறும் மத்திய அரசு தலைமை, இந்த சாமியார்களிடம் ஏன் கெஞ்ச வேண்டும் - அமைச்சர்களை தூது அனுப்பி இதை நிறுத்திடும்படிக் கெஞ்சுதல், கொஞ்சுதல் செய்ய வேண்டும்? அவ்வளவு பலவீனமான அரசாக இயங்குவது நல்லதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுங் கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இத னைக் கூறி சட்டங்களைக் கொண்டு வருவதே அரசியல் சட்டப்படிக்கு உள்ள கடமையாகும்.
அதைவிடுத்து, மிரட்டுகிறவர்களைச் சேர்த்து புதுக்கமிட்டி போட்டு, சட்டத்தைத் தயாரிப்போம் என்று கூறும் மத்திய அரசின் செய்கை, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட - ஏன் முரண்பட்ட நடவடிக்கை அல்லவா?
பாபா ராம்தேவ்வை ஒரு வியாபாரி என்று நன்றாக வர்ணித்து அறிக்கை கொடுத்ததோடு, அவரை நோக்கி அமைச்சர்களை அனுப்புவது ஏன் என்று கேட்டுள்ளார் திக் விஜய்சிங்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியவர்களுக்குத் தெரியாமலா இந்த இரண்டு அணுகுமுறைகள்?
ஒருபுறம் பேச்சு வார்த்தை காவிகளிடம்; இன்னொருபுறம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய்சிங் அறிக்கை - ஒன்றுமே புரியவில்லை நாட்டினருக்கு!
இந்த அரசியல் அலங்கோலங்கள்பற்றி நினைத்தால் ஜனநாயகம் இப்படி கேலிக் கூத் தாக்கப்படுகிறதே என்று எண்ணி வேதனைப் பட வேண்டியுள்ளது!
மீண்டும் காவிகள் அரியணை ஏறவே இந்த ஆயத்தங்கள் என்பதை புரிய வைக்க வேண்டி யது முற்போக்குச் சிந்தனை உடைய தலைவர் களின் கடமையாகும்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
ஊழலை ஒழிக்கும் உத்தமப் புத்திரர்கள் புற்றீசல் போல புறப்பட்டு விட்டார்கள். ஊழலை ஒழிக்கிறேன் என்று சொல்பவர்கள் பால் பொது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ள சிலர் முன் வருகின்றனர்.
அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தியின் மறுபதிப்பாக விளம்பரப்படுத்தப்பட்டு, இதோ ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கப் போகிறார் ஒரு மகான்! பராக், பராக் என்று பத்திரிகைகள் முண்டாசு கட்டி ஊளையிட்டன.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பதுபோல சில திரைமறைவு உண்மைகள் வெளிச்சத்தில் வந்து வீழ்ந்தன.
இந்த ஹசாரே அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ்.காரர் - அதன் பிரச்சாரப் பொறுப்பில் இருந்தவர் என்று கூறப் பட்டது. அது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியின் ஆட்சியைப் புகழ்ந்து தள்ளினார்.
இவர் உண்ணாவிரதம் இருந்த டில்லியில் உள்ள ஜந்தர்மந்தர் மேடை என்பது ஆர்.எஸ்.எஸின் வாடை மிகக் கடுமையாக வீசும் வகையில் இருந்தது. பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பிரச்சார மேடைகளில் இடம் பெறும் பாரத மாதா வந்து குதித்து விட்டார் - மேடை விரிப்புக்கூட காவி வண்ணத்தில்தான் வடிக்கப்பட்டு இருந்தது.
இந்த உண்ணாவிரதத்துக்காக 82 லட்சம் ரூபாய் நன்கொடை திரட்டப்பட்டது - யாரிடமிருந்து? பெரும் பண முதலைகளிடமிருந்து நன்கொடைகளைக் கணிசமாகத் திரட்டுபவர்களால் உண்மையில் ஊழலை ஒழிக்க முடியுமா என்பது நியாயமான கேள்வியாகும்.
82 லட்சம் நிதி திரட்டப்பட்டதிலிருந்து நான்கு நாள் உண்ணாவிரதத்துக்கு ரூபாய் 50 லட்சம் ரூபாய் தண்ணீராகச் செலவழிக்கப்பட்டுள்ளது என்றால் இதற்குள்ளிருக்கும் நேர்மையின் மாற்று என்ன?
லோக்பால் மசோதாவைத் தயாரிக்கும் ஆலோசனைக் குழுவில் இடம் பெறுவதற்காக ஹசாரேயால் பரிந்துரைக்கப்பட்டவர்களும் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இல்லையே!
லோக்பால் மசோதா நிறைவேற வேண்டும் - அதில் நான் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தால் அவர் பெரிய மனிதர்.
தான் உறுப்பினராக இருப்பதோடு, தன்னால் சொல்லப்படுபவர்தான் அந்தக் குழுவில் இடம் பெற வேண்டும் என்று அடம் பிடிப்பதெல்லாம் நேர்மையானது தானா என்ற கேள்வி எழவில்லையா?
சுவாமி அக்னிவேஷ், ராம் மாதவ், பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்கிற சாமியார் பட்டாளமும் ஹசாரேயின் பின்னால் அணி வகுக்க ஆரம்பித்து விட்டன.
பொதுவாக நாட்டில் சாமியார்களின் யோக்கியதை பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. பரலோகத்தைக் காட்டப் போகிறேன் என்று கோடி கோடியாகப் பணம் குவிக்கிறார்களே - இதன் பொருள் என்ன?
கோடிகளைக் குவிப்பதற்கு ஆன்மீகம், காவி, சாமியார் என்பது ஒரு புடம் போட்ட குறுக்குவழிமுறையே!
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து ஹோதாவில் குதித்துள்ள இந்த ராம்தேவ் யார்? ஆர்.எஸ்.எஸின் பசு பாதுகாப்பு யாத்திரையில் (கோ ரக்ஷா) யோகா வகுப்புகளை நடத்திக் கொண்டிருந்தவர். பத்தாண்டுகளுக்கு முன்வரை சைக்கிளில் சுற்றித் திரிந்தவர். இன்று தனி ஹெலிகாப்டரில் பறந்து திரிகிறாரே - இதற்கான பணபலம் வந்த வகை தொகை என்ன? வெளிப்படையாக விவரங்களை வெளியிடட்டுமே, பார்க்கலாம்.
இப்பொழுது உண்ணாவிரதத்தில் குதித்துள்ள பாபா ராம்தேவ் தம் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறியுள்ளார். அதில் ஒன்று என்ன தெரியுமா?
இங்கிலீஷ் இருக்கும் இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைக்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது? ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து வந்து குதித்தது?
இதிலிருந்தே இதன் பின்னணி என்ன என்ற முகத்திரை முழம் முழமாகக் கிழியவில்லையா?
பார்ப்பனீயம், சங்பரிவார்த்தனம் என்கிற பின்னணி யோடு ஒரு கும்பல் புறப்பட்டுள்ளது. இதில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சங்பரிவார்க் கும்பல் பெரும் சரிவை சந்தித்திருக்கும் கால கட்டத்தில், ஊழல் ஒழிப்பு என்ற குதிரையின்மீது சவாரி செய்து, மக்கள் மத்தியில் தங்கள் சட்டையை உரித்துக் காட்டுகிறார்கள். சட்டையை உரித்து விடுவதாலேயே பாம்பின் நஞ்சும் தேனாக மாறி விட்டது என்று நம்பினால் அதைவிட தற்கொலை ஒப்பந்தம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.
ஊழல் ஒழிக்கப்படட்டும் - வரவேற்போம்! வைத்தியரே முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள் ளுங்கள் என்று நோயாளிகள் கேட்கும்படி இருக்கக் கூடாதல்லவா!
---------------- "விடுதலை” தலையங்கம் 4-6-2011
1 comments:
கோடிகளைக் கொட்டி போராட்டம் நடத்துவதா? பாபா ராம்தேவுக்கு மேதாபட்கர் கண்டனம்!
பாபா ராம்தேவின் போராட்டம் அதிக செலவிலானது என்றும் கோடிகளை கொட்டி இத்தகைய போராட்டம் தேவையா என்று சமூக சேவகி மேதாபட்கர் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
ஊழலை ஒழிக்க கோரியும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தியும் யோகா குரு பாபா ராம்தேவ், டில்லி ராம் லீலா திடலில் இன்று (சனிக்கிழமை) முதல் கால வரையற்ற உண்ணா விரதம் தொடங்குகிறார்.
இந்தநிலையில் பாபா ராம்தேவின் இந்த போராட்டம் அதிக செலவிலானது என்று, பிரபல சமூக சேவகி மேதா பட்கர் கருத்து தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் மும்பை யில் குடிசைப்பகுதி களை அகற்றும் பிரச்சினையில் 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கர், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதா வது:-
பாபா ராம்தேவ் போராட்டம் அதிக செலவிலான ஒன்று. இதுபோன்று செலவு பிடிக்கும் போராட்டங்கள், போராட்டத்தின் மற்றொரு முகத்தை காட்டுகிறது. நாம் ஊழலை எதிர்க்கிறோம்.
ஆனால் பல கோடிகளை செலவழித்து, இதுபோன்ற அதிக செலவு ஆகும் போராட்டம் நடத்தப்படுகிறது. பாபா ராம்தேவ் போராட்டம் வெறும் கூட் டத்தை திரட்டும் ஒன் றாக முடிந்து விடும் ஆபத்து இருக்கிறது.
முதலாளித்துவ கொள் கைதான், கறுப்புப் பணத்துக்கு காரணம். இவ்வாறு மேதா பட்கர் தெரிவித்தார். பாபா ராம்தேவை வரவேற்பதற்காக விமான நிலையத்துக்கே அமைச்சர்கள் செல்கின்றனர். அவர்கள் அமைச்சர்களா அல்லது அவருடைய (ராம்தேவ்) ஆதரவாளர்களா? என்று மேதா பட்கர் கேள்வி எழுப்பினார்.
-"விடுதலை” 4-6-2011
Post a Comment