குறளில் கோயில் இல்லை
இன்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 120 ஆம் ஆண்டு பிறந்த நாள். தந்தை பெரியார் அவர்களின் உரையைக் கவிதைத் தேனில் தந்த தேர்ந்த புலவன் பாரதிதாசன்.
ஒரு கட்டத்தில் மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு பாடிக் கொண்டிருந்த இந்தக் கவிஞர் புரட்சிக்கவிஞன் ஆனது மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்களின் ஒரு சொற்பொழிவைக் கேட்ட மாத்திரத்திலேயே ஆகும்.
இது தந்தை பெரியார் அவர்களுக்கு மட்டுமே உள்ள ஆளுமை! கருத்தின் வலிமை சேர்ந்த வளமை!!
தந்தை பெரியாரின் ஓர் உரை ஒரு புரட்சிக்கவிஞரைத் தமிழ்நாட்டுக்குத் தந்தது. ஒரு தொண்டரைத் திராவிடர் கழகத்துக்குத் தந்தது எனின் தந்தை பெரியார் அவர்களின் ஒப்புவமையில்லா சிந்தனைப் பெருக்கை எண்ணிப் பார்க்கவேண்டும் எவரும்!
தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்! தந்தை பெரியார் கருத்துகளை, கொள்கை முழங்கும் எழுத்துகளைக் கொண்டு சேர்ப்பதுவரைதான் நமது கடமையும், பணியும் ஆகும். அது கொண்டு போய் சேர்க்கப்பட்டால் அதன் வேலையைக் கண்டிப்பாய் செய்து முடித்தே தீரும் என்பதில் எவ்வித அய்யமும் கிடையவே கிடையாது! புரட்சிக்கவிஞரே இதற்கொரு ஈடில்லா எடுத்துக்காட்டாகும்.
இந்து சமய கலை விழா என்று கூறி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சென்னையில் 1983 இல் விழா ஒன்றை நடத்துவதாக அறிவித்தார். இந்துத்துவாவைத் திணிக்க, பரப்பிட சங்கராச்சாரியார் புது அவதாரம் எடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அந்த ஆண்டுமுதல் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவை தமிழர் கலை,பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திட முடிவு செய்தார்.
சங்கராச்சாரியார் அந்த ஆண்டோடு அதனை மூட்டைக் கட்டிக் கொண்டாலும் திராவிடர் கழகம் தொடர்ந்து புரட்சிக்கவிஞர் விழாவை தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழாவாக நடத்திக்கொண்டு வருகிறது.
இந்த ஆண்டு விழாவில், அவர் கூறிய கருத்து ஒன்றுக்கு வலிமை சேர்கிறது. குடும்ப விளக்கு நான்காம் பகுதியில் திருக்குறள் குறித்து புரட்சிக்கவிஞர் கூறும் வரிகள் மிகவும் முக்கியமானவை நயமானவை.
நாடி முத்து வேடப்பனிடம்
இன்றியமையா ஒன்றுக்காகக்
கடன் பத்து ரூபாய் கொடுவென்று கேட்டான்
வேடன் கொடுப்பதாய் விளம்பினான் அதற்குள்
அமிழ்து, திருக்குறள் ஒன்றை அங்கையில்
தூக்கி வந்து தொப்பென்று போட்டுக்
கோவிலுக் காட்டுப்பா என்று கூறினாள்
குறளில் கோயிலே இல்லையம்மா
என்றான் வேடன். இதனைக் கேட்ட
நாடிமுத்து நவிலுகின்றான்;
தில்லைக் கோவிலுக்குச் செல்ல எண்ணியே
பத்து ரூபாய் பணம் உன்னைக் கேட்டேன்
கோவில் இல்லையா குறளில்?
ஆயில் என் பணத்துக்கில்லை அழிவே!
இதன்மூலம் திருக்குறளில் கோயில் என்ற சொல்லே இல்லை என்பதை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கிறார் புரட்சிக்கவிஞர்.
இப்பொழுது தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான கருத்துத் தலைதூக்கி எழுந்துள்ளது. தமிழ்நாட்டு அரசின் சின்னம் இந்து மதக்கோயில் கோபுரமாக உள்ளது.
மதச்சார்பற்ற ஓர் அரசின் சின்னம் குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்ததாக இருக்கலாமா என்ற அர்த்தமுள்ள வினா சட்டப்பேரவையில் எழுப்பப்பட்டது. கோபுரத்திற்குப் பதில் திருவள்ளுவர் உருவத்தைப் பொறிக்கலாம் என்பதுதான் அந்த அறிவார்ந்த யோசனையாகும்.
திருக்குறளிலேயே கோவில் இல்லை என்கிறபோது, அரசு சின்னத்தில் கோயில் ஏன்? கோயிலையோ, கடவுள் என்ற சொல்லையோ எந்த இடத்திலும் குறிப்பிடாத மிகமிகச் சிறந்த மதச் சார்பற்ற புலவரான திருவள்ளுவர் உருவத்தை கோயிலுக்குப்பதில் பொறிப்பது என்பதுதானே பொருத்தமானதும், அறிவார்ந்ததுமாக இருக்க முடியும்?
இந்தக் கருத்தை சட்டப்பேரவையில் தோழர் ரவிக்குமார் தெரிவித்தாலும், இதற்கு அடியெடுத்துக் கொடுத்தவர் புரட்சிக்கவிஞர்தான் என்பதை, கவிஞரின் பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.
அடுத்த கட்டத்திற்கு இந்தக் கருத்தை நகர்த்த சூளுரைப்போம்!
----------------------- “விடுதலை” தலையங்கம் 29-4-2010
2 comments:
வீரமணி என்ற பெயர் குறளில் உள்ளதா? தமிழ்நாடு, இந்தியா,...? குறளில் உள்ளது மட்டும் தான் செல்லுமா?
திருவள்ளுவர் படத்தை யார் வரைந்தது இன்னபிற போன்றவற்றையும் பகிருங்கள் தமிழ் ஓவியா ஐயா!
Post a Comment