திருவாங்கூரைச் சேர்ந்த கொட்டாரக் கரையில் காலஞ்சென்ற ஸதாநந்த சுவாமிகள் தண்ட ஆசிரமமொன்றுள்ளது. அதில் தற்பொழுது சுவாமி ஆத்மாநந்தபாரதி அவர்கள் தலைமை வகித்து வருகிறார்கள். அன்னார் இப்பொழுது ஒரு குருகுலங் கண்டிருக்கிறார்கள். அதில் இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்க்கப்படவில்லை. இதைப்பற்றி, சுவாமிகள் குருகுல நிதிதிரட்ட நாகர்கோவில் வந்தபொழுது ஸ்ரீமான் டாக்டர் வி.ணி.. நாயுடு அவர்கள் பேட்டி கண்டு பேசினார்கள். அதற்கு சுவாமிகள் பிறப்பினாலேயே பிராமணர்கள் உயர்ந்தவர்களென்றும், ஏனையோர் ஸம்ஸ்காரத் தினாலேயே உயரவேண்டு மென்றும் கூறி சேரமாதேவிக் குருகுலம் நாசமாவதற்குக் காரணம் தாழ்த்தப் பட்டவர்களைச் சேர்த்ததினாலேயே என்றுங் கூறினார்கள். அதற்கு டாக்டர் அவர்கள் தாழ்த்தப் பட்ட இந்துக்களை ஏனைய மதத்தவர் வலிந்து இழுக்கும் போது இந்து மதத்தவரான நாம் அகற்றுவது அழகாகுமாவென்று கேட்டார்கள். அதற்கு சுவாமி அவர்கள் ஸம்ஸகாரமடைதல் யாவரையும் எடுத்துக்கொள்ளப் படுமென்றும் அக்காலம் தனக்குத் தெரியுமென்றும், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் பரவாயில்லை யென்றும் கூறினார்கள். இதைக் கேட்டவுடன் மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் உங்கள் இந்து மதம் அழிந்து ஒழிகவென்று கூறி வெளிவந்தார்கள். இதைப்பற்றி டாக்டர் அவர்கள் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் மன்னத்துபத்மனாப பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டார்கள். அதற்கு பிள்ளையவர்கள் சுவாமிகளின் வைதீகப் பார்ப்பனீயம் தனக்குப் பிடிக்கவில்லையென்றும் இதை முன்னிட்டுத்தான் இதற்கு முன்தான் ஒரு அபிப்பிராயமும் கொடுத்ததென்றுங் கூறி பதிலிறுத்தனர். ஜாதி பேதமும், தீண்டாமையும், நீங்கவேண்டுமென்று மும்முரமாக வேலைநடந்து வருமிவ் வேளையில் இந்துமதம் இத்தீண்டாமையெனுங் கொடுமையால் ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டுதோறும் அன்னிய மதத்திற்கு கொடுத்துவருமிக் காலத்தில் பாலர்களுடைய மாசற்ற இருதயங்களில் பேதநிலையை உண்டாக்காதவாறு காப்பதற்குமாறாக பேத நிலையை உண்டுபண்ணுவது கூடாது. சுவாமிகள் ஒரு பிராமணரல்லாதாராக விருந்தும் பார்ப்பனீயத்தை ஆதரிப்பது கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். சுவாமிகளும் சேரமாதேவி குருகுலத்தின் பேத நிலையால் வசூலான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்ட செட்டி நாட்டுக்குச் செல்வாரென்று தெரிகிறது. மாணவர்களுக்கிடையே பேதநிலைமை யுண்டு பண்ணாதிருந்தால் தான் அங்கே செல்வாக்கு கிடைக்குமே யொழிய அல்ல தில்லை. தன் குருகுலம் நல்ல நிலையையடைய வேண்டுமானால் தன் கொள்கையை அடியோடு விட்டுவிடவேண்டும். இனியாவது சுவாமிகள் தங்கள் கொள்கையை மாற்றி விடுவார்களென்று நம்புகிறேன்.
-தந்தைபெரியார் - “ குடிஅரசு”. கட்டுரை - 30.01.1927
2 comments:
இன்னும் இந்த ஒற்றை வார்த்தையைப் பற்றிக் கொண்டு பிழைப்பை ஓட்டுகிறீர்களே என்று உங்களை யாரும் கேட்பதில்லையா?
//Giri said...
இன்னும் இந்த ஒற்றை வார்த்தையைப் பற்றிக் கொண்டு பிழைப்பை ஓட்டுகிறீர்களே என்று உங்களை யாரும் கேட்பதில்லையா?
April 2, 2010 12:43 AM //
கேக்கறாங்க!....இந்த ஒத்த வார்த்தையை வைச்சி நாட்டையே ஏய்த்து பிழைப்பு நடத்தும் கூட்டத்தை ஓழிக்காம ஏன்? இன்னும் விட்டு வைச்சிருக்கீங்க? என்று கேள்விக் கேக்கறாங்க....!
Post a Comment