க.ச. என்று இரண்டு எழுத்துக்களால் அன்போடு பொதுமக்களால் மதிக்கப்படும் தலைவர் பொத்தனூர் க.சண்முகம்
இதே ஊரில் நாமே முன்னின்று அவர்தம் நூற்றாண்டு விழாவையும் காண்போம்!
பொத்தனூர் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சியான உரை
சென்னை, அக். 27- மிகுந்த மதிப்போடும்,
அன்போடும் ஊர்ப் பொதுமக்களால் க.ச. என்று அழைக்கப்படும் - பெரியார்
சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின்
நூற்றாண்டு விழாவையும் நாமே முன்னின்று இதே ஊரில் நடத்துவோம் என்றார்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும்,
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான பொத்தனூர்
க.சண்முகம் அவர்களது புதிய வளாகக் கட்டடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார்
முழு உருவச் சிலையை 4.10.2014 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து
உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
92 வயது இளைஞர் அய்யா க.ச. அவர்கள்
மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய
நம்முடைய அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 136 ஆம் ஆண்டு பிறந்த
நாளினையொட்டி, இந்தப் பொத்தனூரில் கொள்கை விழா, குடும்ப விழா என்ற சிறப்பான
வகையில், நடைபெறக்கூடிய இந்தப் பெரியார் சிலை, பெரியார் வளாகம், அன்னை
நாகம்மையார், அன்னை மணியம்மையார், சகோதரியார் சுந்தராம்பாள் ஆகியோரின்
படத்திறப்பு நிகழ்ச்சிக்கு பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரியவராக
இருக்கக்கூடிய பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்று நம்முடைய
அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களால், அவர்களுடைய சொத்துக்கள்
அத்தனையும் பாதுகாக்கக்கூடிய ஒரு அற்புதமான ஒரு பொது அறக்கட்டளையை
உருவாக்கிய நிலையில், அதனுடைய ஆற்றல்மிகு தலைவராக, அடக்கமும், ஆழமும்,
கொள்கை உறுதியும் கொண்டவராக இருக்கக்கூடிய, இந்த விழாவிற்கு அவர்தான்
நாயகர் என்று குறிப்பிட்டால், அது பெருமையாக இருக்கும். அப்படிப் பட்ட
அய்யா க.ச. என்று இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களால், இரண்டு
எழுத்துக்களால் அறியப்படக்கூடிய அற்புதமான நம்முடைய விழாத் தலைவர் அய்யா
பெருமதிப்பிற்குரிய மானமிகு 92 வயது இளைஞர் அய்யா க.ச. அவர்களுக்கு
திராவிடர் கழகத்தின் சார்பிலும், தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பிலும்
இந்தப் பெருமையைச் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியை நாங்கள் எல்லோரும்
அடைகின்றோம்.
அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இதே
ஊரிலே நூற்றாண்டு விழாவையும் நாமே முன்னிருந்து நடத்து வோம் என்று சொல்லி
அவருக்கு இந்த சிறப்பைச் செய் கிறேன்.
நம்முடைய தலைவர் க.ச. அவர்கள், இந்த விழா
அழைப்பிதழை எனக்கு நேரில் கொண்டு வந்து கொடுத் தார்கள். ஏராளமானோருக்கு
இந்த அழைப்பிதழை அவர் கள் அனுப்பியிருக்கிறார்கள்.
ஒரு குடும்ப விழாவாக, கொள்கைக் குடும்ப விழாவாக...
இயக்கத்தின் திருவிழாவாக அவர்கள் இதை கொள்
கைத் திருவிழாவாகக் கொண்டாடவேண்டும் என்றும், இதை அவருடைய வாழ்நாள்
லட்சியமாக பொத்தனூரில் அய்யா அவர்களுடைய சிலையை அவர்கள் திறக்க வேண்டும்
என்ற ஒரு பேராசையை, வாழ்நாள் முழுவதும் அது பெரிய ஆசை - பேராசை என்று
சொன்னால் வேறு ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட ஒன்றை செய்துகாட்ட வேண்டும்
என்ற மன உறுதியோடு, இடையில் ஏற்பட்ட பல்வேறு சோதனைகள், வேதனைகள் இவைகளை
யெல்லாம் தாண்டி இன்றைக்கு இதை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய விழாவாக, ஒரு
குடும்ப விழாவாக, கொள்கைக் குடும்ப விழாவாக, இதனை நடத்திக் கொண்டிருக்கின்ற
இந்த நேரத்தில்,
இந்த விழா அழைப்பிதழை நான் பார்த்தேன்;
பொதுவாக நம்முடைய தோழர்கள் இயக்கத்தை முன்னிலைப்படுத்துபவர்களே தவிர,
தங்கள் குடும்பத்து உறுப்பினர்களைக்கூட முன்னிலை படுத்துவது கிடையாது.
ஏனென்றால் இயக்கம்தான் அவர்களுக்கு மூச்ச, வாழ்வு என்று கருதக்கூடியவர்கள்.
அப்படி நான் இந்த அழைப்பிதழைப்
பார்க்கும்பொழுது, இந்த அழைப்பிதழில் ஒரு சின்ன குறையைக் கண்டேன். அது
கொஞ்சம் நெருடலாக இருந்தது என் மனதுக்கு. உடனடியாக அவரிடம் பேசவேண்டும்
என்று நினைத் தேன். அதற்கொன்றும் பொருள் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு
நிலையில், நான் நினைத்துக்கொண்டே வந்து, அவரிடம் கேட்டேன். ஏனென்றால்,
இவ்வளவு பெரிய சிறப்புகள் செய்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வாழ்விணையராக
இருந்து, எல்லாவகையிலும் பங்கேற்று, அவருடைய இன்ப, துன்பங்கள்
அத்தனையிலும் உட னிருந்து, மறைந்த அருமைச் சகோதரியார் சுந்தராம்பாள்
அம்மையார் அவருடைய சிறப்புகளும் இதில் அமைந் திருக்கவேண்டும், இவ்வளவு
பெரிய விழாவில், அவரைப் பொறுத்தவரை மறைந்தும் மறையாமலும் நம்முடைய
நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் என்கிற உணர்வைக் காட்டவேண்டும் என்று
நினைத்த நேரத்தில்தான், நான் அதனை நினைத்துக்கொண்டே வந்தேன். இந்த விழாவில்
அந்த சிறப்பும் இணைய வேண்டும். அந்தக் குறைகூட இருக்கக்கூடாது என்பதற்காக
அவர்களி டத்தில் உரிமை எடுத்துக்கொண்டேன். ஏனென்றால், அவரைத் தலைவர் என்று
நாங்கள் அழைக்கக் கூடியவர் கள். அப்படிப்பட்டவர்களிடத்தில் உரிமை
எடுத்துக் கொண்டு, அம்மாவின் படத்தை எடுத்துக்கொண்டு வாருங் கள், இந்த
விழாவில் அந்தப் படத்தையும் திறக்கவேண்டும் என்று சொன்னேன்.
உங்களுக்கு
எவ்வளவு சிறப்பு செய்கிறோமோ அதேபோல, அவர்களுக்கும் சிறப்பு செய்யவேண்டும்.
ஏனென்றால், நம்முடைய நாட்டில் மகளிரைப்
பின்னுக்குத் தள்ளிவிடுவது, இன்னமும் ஆணாதிக்க சமுதாயத்தில் சாதாரணமானது.
ஆனால், கஷ்டத்தை முழுவதும் மகளிர்தான் அனுபவிக்கிறார்கள்.
இரண்டு பேருக்கும் சேர்த்தே போர்த்திவிடுகிறேன் என்று சொன்னார்கள்!
அதுமட்டுமல்ல, மகளிருக்கு இருக்கக்கூடிய
சமயோ சிதம் இருக்கிறது பாருங்கள், அது மிகவும் அற்புதமானது. இங்கே கூட
மணியம்மையார் பெயரில் இருக்கக்கூடிய மகளிர் குழு என்று மகளிர், தோழியர்கள்
வந்து எனக்கு சிறப்பாடை போர்த்துவதற்கு வந்தார்கள். உடனே நான் சொன்னேன்,
எனக்கு வேண்டாம்; அய்யாவிற்குப் போடுங்கள் என்று சொன்னேன். ஆனால், அந்த
அம்மையார் எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக இரண்டு பேருக்கும் சேர்த்தே
போர்த்திவிடுகிறேன் என்று சொன்னார்கள்.
அந்த மாதிரியான சிறப்பு மகளிர் மத்தியில்
எல்லோருக் கும் உண்டு என்ற முறையில், அம்மையார் சுந்தராம்பாள் அவர்கள்,
அய்யா அவர்களுடைய வாழ்நாளின் பெரும் பகுதியை, எங்களைப் போன்றவர்களும் சரி,
அறிவாசான் தலைவர் தந்தை பெரியாரும் சரி, அதேபோல், அன்னை மணியம்மையாரும்
சரி, அதுபோல, திராவிடர் இயக்கத் திலே, திராவிடர் கழகமாக மாறுவதற்குப்
முன்பு இருந்து, இங்கே பலர் வந்திருக்கிறார்கள். பல பேச்சாளர்கள், தலைவர்
எல்லோரும் பொத்தனூருக்கு வந்திருக்கிறார்கள்.
பொத்தனூர் நம்முடைய இயக்க வரலாற்றில்
நீண்ட காலத்திற்கு முன்பே பதிவு ஏற்பட்டதென்றால், அது அய்யா க.சா.
அவர்கள், மாணவர் பருவந்தொட்டே அவர்கள் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக்
கொண்டதன் விளைவாகும். நான், ஏ.பி.ஜனார்த்தனம் மற்ற நண்பர்கள் எல்லோரும்
வந்திருக்கிறோம். அப்படி வருகின்ற நேரத்தில், அவருடைய வீட்டிற்கு எதிரே
உள்ள அறையை அலுவலகமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உணர்வாக, கொள்கையாக...
நம்முடைய சுந்தராம்பாள் அம்மையாரையும்,
இந்த விழாவில் அவரையும் நினைவு கூர்வது மிகமிக அவசியம் என்ற முறையில்,
இவர்களைப் பாராட்டுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அந்த அம்மையாரின் படத்
தினையும் திறந்து வைப்பது, ஒரு அற்புதமான, கழகக் கடமை என்று கருதி,
அனைவரின் சார்பாகவும், அப்படத் தினைத் திறந்து வைப்பதிலும், இந்தக்
குடும்பத்தின் சார்பிலும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நான் அய்யாவிடம் சொன்னதும், உடனே படத்தைக்
கொண்டு வருகிறேன்; ஆமாம், எப்படியோ அது விட்டுப் போய்விட்டது என்று
சொல்லி, படத்தை எடுத்து வரச் சொன்னார்கள்.
அந்த வகையில், இந்த அரங்கத்தில் அவர்களும்
நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் உணர்வாக, கொள்கையாக என்ற அந்த
உணர்வோடு இந்தப் படத்தினைத் திறந்து வைக்கிறேன். (ஆசிரியர் அவர்கள்
அம்மையார் சுந்தராம்பாள் படத்தினை திறந்து வைத்தார்).
மதிக்கத்தகுந்த பெருங்குடும்பமாக அன்றும், இன்றும், என்றும்!
இந்தப் பொத்தனூர் எங்களைப் பொறுத்தவரையில்
இது ஒரு புதிய ஊர் அல்ல. மாணவர் பருவந்தொட்டு, ஏறத்தாழ 70
ஆண்டுகாலத்திற்கு முன்பு, இந்த ஊரில் பல நாள்கள் நாங்கள் எல்லாம்
தங்கியிருந்து முகாம் போட்ட ஊராகும். அய்யா சண்முகம் அவர்களுடைய
இல்லத்திற்கு வராத திராவிட இயக்கத் தலைவர்களே இல்லை; தொண்டர்களும்
அதேபோலத்தான். அவருடைய அன்பு என்பது, வற்றாத அன்பு. அவருடைய வாழ்க்கை
என்பது பல்வேறு மேடு பள்ளங்களை சந்தித்த வாழ்க்கை.
இயல்பான மதிக்கத்தகுந்த பெருங்குடும்பமாக
அன்றும், இன்றும், என்றும் இருக்கக்கூடிய ஒரு குடும்பம் என்றால், அது அய்யா
அவர்களுடைய பொத்தனூர் க.சண்முகம் அவர்களுடைய பெருங்குடும்பமாகும்.
அருமையாக, வழக்குரைஞர் காமராசர் அவர்கள்
சொன்னார்; அவருடைய சிறப்புகளைப்பற்றி. நான் நினைத்துக் கொண்டிருந்தேன்;
அவர் சொல்லிவிட்டார். ஒத்தக் கருத்துள்ளவர்கள் ஒரே மாதிரிதான்
சிந்திப்பார்கள்.
அவருடைய இல்லமே ஒரு பண்ணை. அதிலிருந்து வளர்ந்த இளைஞர்கள் ஏராளம்!
இந்த ஊரினுடைய இயல்பிற்கு மாறாக, நம்பவே
முடியாத அளவிற்கு கொஞ்ச நாள்களுக்கு முன்பு ஜாதிக் கலவரம் வந்தது.
அதைத்தான் அவர் சுட்டிக்காட்டினார். வந்திருக்கக்கூடாது, நம்ப முடியாது;
ஏனென்றால், அவ்வளவு நல்ல அன்பாகப் பழகக்கூடிய மக்கள் உள்ள ஊர் இது. இங்கே
யாரும் கொள்கைக்காக சண்டை போடு பவர்கள் கிடையாது. எவ்வளவுதான் கொள்கையாளர்
களாக இருந்தாலும், அவர்கள் சொல்லியதுபோல், முழுக்க முழுக்க திராவிட இயக்கப்
பண்ணையாகத்தான் அவர்கள் வளர்த்தார்கள். அவருடைய இல்லமே ஒரு பண்ணை.
அதிலிருந்து வளர்ந்த இளைஞர்கள் ஏராளம். அவர் வயது முதிர்ந்தவர் என்றாலும்,
வயதானவர்களும் அவரிடத்தில் மரியாதை காட்டுவார்கள்; அதேபோல், இளைஞர்களைப்
பார்த்தீர்க ளேயானாலும், அவரைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருப் பார்கள்.
அதுதான் அவருடைய தனித்தன்மையாகும். சில நேரங்களில், இளைஞர்களிடையே, இளைஞராக
இருப்பார்; மாணவர்களிடையே மாணவராக அவர்கள் இருப்பார். அதேபோல்தான், மற்ற
நேரங்களில் முதியவர்களும், வயதானவர்களும் எல்லோருமே அவரை மதிப்பார்கள்.
உள்ளூர்க்காரர்களுக்கு நான் அதிகம்
சொல்லத் தேவையில்லை. ஆகவே, மிகப்பெரிய அளவில் அவர் மதிக்கக்கூடியவராக
இருப்பார். அதுதான் சிறப்பானது.
நீங்கள் தான் நிரந்தரமாகத் தலைவர், துணைத் தலைவரா?
இப்பொழுதுதானே போட்டிகள், ஊராட்சித்
தேர்தலில் போட்டியெல்லாம் இருக்கிறது. இந்தப் பொத்தனூர் ஊராட்சி
மன்றத்திற்கு என்ன சிறப்பு என்றால் நண்பர்களே, அய்யா குப்பையாண்டி பிள்ளை
அவர்கள் காங்கிரஸ்காரர். தந்தை பெரியார் அவர்களிடத்தில் மிகுந்த மரியாதை
உடையவர். அவர் 35, 40 ஆண்டுகளுக்குமேல் அவர்தான் தலைவர். அதேபோல், துணைத்
தலைவர் என்றால், அய்யா க.ச.தான். நாங்கள் எல்லாம் அவரிடம் வேடிக்கையாகக்
கேட்போம், என்னங்க, நீங்கள் தான் நிரந்தரமாகத் தலைவர், துணைத் தலைவரா?
இங்கே மாற்றமே கிடையாதா! என்று கேட்போம்.
அவர் உடனே, இல்லீங்க, நாங்கள் வேண்டாம் என்றாலும், யாரும் விடுவதில்லை என்று சொல்வார்.
எல்லோரிடத்திலும்
அன்பாக இருப்பார்கள். அய்யா அவர்கள் வந்தால், அவருடைய இல்லத்தில்தான்
தங்கு வார். மற்ற வசதிகளைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். அம்மா சுந்தராம்பாள்
படத்திறப்புக்கு ஒரு காரணம் என்னவென்றால், அந்த அம்மையார்
எங்களுக்கெல்லாம் சமைத்துப் போட்டு, அன்பு காட்டி, விருந்தளித்து
உபசரித்திருக்கிறார்.
எனவே, இந்த ஊரில் இருக்கின்ற அத்துணை
பேரும், இவருடைய மாமா அவர்கள், மறைந்தும், மறையாமல் நம் நெஞ்சங்களில்
இருக்கக்கூடியவர். அவர் சைவப் பழம் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்ப்
பாட்டு, தமிழ் புலவராக இருந்தவர். எங்களிடம் அளவு கடந்த அன்பு காட்டுபவர்.
நூறாண்டைத் தாண்டி வாழ்ந்தவர்.
சிறந்த ஒழுக்கவாதி என்பதற்கான அடையாளம்தான், நம்முடைய அய்யா க.ச.
அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு அன்பு
பாராட்டுப வர்கள். திருவாசகத்திலிருந்து எல்லாவற்றையும் பேசுவார். அய்யா
அவர்களிடம் எல்லாக் கட்சிக்காரர்களும், எல்லாக் கருத்துள்ளவர்களும் வந்து
பேசுவார்கள். அய்யாவை மதிப்பார்கள்; அய்யாவை பொதுத் தலைவராக நினைப்
பார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால், இவருடைய ஒழுக்கம்; அதுதான் மிக
முக்கியம்.
ஒரு நல்ல நாத்திகர் என்பவர், நல்ல
சுயமரியாதைக்காரர் என்பவர், சிறந்த ஒழுக்கவாதியாக இருப்பார் என்பதற்கான
அடையாளம்தான், நம்முடைய அய்யா க.ச. அவர்கள். இந்த இயக்கத்திலே மற்றவர்கள்
சேருவதற்குரிய பக்குவம் அவர்களுக்கு வருகிறதா, இல்லையா என்பது அவர் களைப்
பொறுத்தது. ஏனென்றால், அவரவர்கள் தங்களுக் குள் சிறிய வட்டம்
போட்டிருப்பார்கள். ஓகோ, இதிலே இருப்பதற்கு நமக்குத் தகுதியில்லை என்று
நினைப்பார்கள். ஏனென்றால், இவ்வியக்கத்தில் இருந்தால், மிகவும் கட்டுப்
பாடாக இருக்கவேண்டும். இவ்வியக்கத்தில் இருந்தால், ஒழுக்கத் தவறுகளுக்கு
இடம் இல்லாமல் இருக்கவேண்டும்.
இந்த இயக்கத்தினுடைய பெருமை, பெரியார் கொள்கையினுடைய சிறப்பு!
அதையும்தாண்டி, இவ்வளவு இளைஞர்கள் எங்கள்
இயக்கத்திற்கு வந்திருக்கிறார்களே, இவ்வளவு கசப்பு மருந்துகளை
சாப்பிடுபவர்கள், இந்த இயக்கத்தினுடைய பெருமை, பெரியார் கொள்கையினுடைய
சிறப்பு என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆக, அந்த மாதிரியாக
இருக்கக்கூடியவர்கள்கூட, அய்யா பொத்தனூர் சண்முகம் அவர்களைப் பார்த்து,
இந்த இயக்கத்தைப் பார்த்து, அவ்வளவு பெருமையாக நினைப் பார்கள்.
அப்படிப்பட்ட அவர்களுக்கு, மிகப்பெரிய அள விற்கு, இந்த சுற்றுவட்டாரத்தில்,
வேலூராக இருந்தாலும், அதே மாதிரி சுற்றுவட்டாரத்தில் அவருக்கு நண்பர்களாக
இருக்கக்கூடியவர்கள். காமராசர் அவர்களுடைய தந்தையார் ஆச்சிக்கண்ணு என்று
அழைக்கப்படக்கூடிய அய்யா பழனிமுத்து அவர்கள், அதேபோல், தவுட்டுப் பாளையம்
பகுதிகளில், கச்சிப்பாளையம் கணபதி அவர்கள், இப்படி ஒவ்வொரு துறையைப்
பார்த்தீர்களேயானால், பல பேர் சுற்றுவட்டாரங்களில் அவர்களுடைய பெருமையை
நினைத்து, மிகப்பெரிய அளவிற்கு சொல்வார்கள்.
க.சண்முகம் வந்திருக்கிறாரா? கு.சண்முகம் வந்திருக்கிறாரா? எனக்கு பல நினைவுகள் வருகின்றன; அதைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இந்த ஊரில், அய்யாவைப் பார்க்க
வரும்பொழுது, சண்முகம் வந்திருக்கிறார் என்று புலவர் இமயவரம்பன் சொல்வார்.
உடனே அய்யா அவர்கள், எந்த சண்முகம் வந்திருக்கிறார்? க.சண்முகம்
வந்திருக்கிறாரா? கு.சண்முகம் வந்திருக்கிறாரா? என்று கேட்பார்.
இரண்டு சண்முகமும் பார்த்தீர்களேயானால், இரட்டை யர் போல வருவார்கள்.
அவருடைய நிலை என்பது வேறு; இவருடைய பக்குவம் வேறு.
எனக்கு நன்றாக ஒரு சம்பவம் நினைவில் இருக்கிறது.
என்னிடம் அவர் எப்பொழுதும் வருத்தப்பட்டது
இல்லை. என்னுடைய திருமணத்திற்கே அவர்தான் நோட் புத்தகத்தில் அன்பளிப்புப்
பட்டியல் எழுதியவர். திருச்சி பெரியார் மாளிகையில் அது இருக்கிறது.
என்னுடைய வாழ்நாளில் அவருடைய பங்களிப்பு எப்போதும் இருக் கிறது. எனது
திருமணத்திற்கு, அவர் காண்டேகர் புத்த கத்தை எனக்கு அளித்தார். அந்தப்
புத்தகமும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அவ்வளவு சிறப்பாக, மாணவர்
பருவத்திலிருந்தே என்னிடம் சிறப்பாக இருக்கக்கூடிய வர்கள்.
நான் விடுதலை ஆசிரியர் பொறுப்புக்குச்
சென்றவுடன் 1962ஆம் ஆண்டு, நான் சென்னை அடையாறில் அப் பொழுதுதான்
குடியேறினேன். அப்பொழுது க.ச.வும், கு.ச.வும், அவருடைய தம்பி டாக்டர்
ஆறுமுகம் எங்களு டன் திராவிடர் மாணவர் கழகத்தில் இருந்தவர். நம்முடைய
மறைந்த ஆறுமுகம், ரமணி அவர்கள், வீரப்பா அவர் களுடைய மகள்.
அவர்கள் வந்தபொழுது என்ன செய்தார்கள்
நண்பர்களே, இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்திருந்தார்கள்.
அப்பொழுது எனக்கு வயது குறைவாக இருந்த சூழ்நிலையில், யாராக இருந்தாலும்
எதாவது வாங்கி வந்து கொடுத்தால், ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் இந்தப்
பொறுப்பில் இருக்கிறோம். ஏன் என்றால், அதற்கு முன்பு பல பிரச்சினைகள்
ஏற்பட்டது. இவருக்கு இதைக் கொடுத்தால் சரிப்படுத்தலாம், அதைக் கொடுத்தால்
சரிப்படுத்தலாம் என்று நினைக்கின்ற சூழ்நிலைகள் எல்லாம் இருந்தன.
அய்யா அவர்கள் வாங்கிக் கொள்ளமாட்டார்; அதை மறுத்துவிடுவார்
அந்தச் சூழ்நிலையில், நான் அந்த உறுதியை
மேற் கொண்டிருந்தேன். சாதாரணமாக யாராவது பழம், வாங்கிக் கொடுத்தால் அய்யா
வாங்கிக் கொள்வார். ஆனால், பரிந்துரை என்று வரும்பொழுது, ஆப்பிள்,
வாழைப்பழம் போன்றவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்கள் என்றால், அதனை அய்யா
அவர்கள் வாங்கிக் கொள்ளமாட்டார்; மறுத்துவிடுவார்.
தலைவர் எவ்வழியோ, தொண்டன் அவ்வழியே!
அவ்வளவுதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. அந்த உறுதியோடு நான் இருந்த
நேரத்தில், இவர்கள் வந்து சேர்ந்தார்கள்; வழக்கமாக நம்மிடம் அன்பு
காட்டுபவர்கள்; குடும்ப நண்பர்கள். அவர்கள் பிஸ்கெட் பாக்கெட் வாங்கி வந்து
கொடுத்ததும், நான் உடனே, மன்னிக்கவேண்டும், நான் பிஸ்கெட் பாக்கெட்
வாங்குவதில்லை, அதை எடுத்துக்கொண்டு போய்விடுங்கள் என்று சொன்னேன்.
அய்யா அவர்கள் மிகவும் அடக்கமானவர் என்பது
உங்களுக்குத் தெரியும். ஆனால், மிகவும் சென்சிட்டிவ்வாக இருப்பார்.
இவராவது கொஞ்சம் பொறுத்துக் கொள்வார்; ஆனால், கு.ச. அவர்கள் பொறுத்துக்
கொள்ளமாட்டார். அவரைப் பற்றி உங்களுக்கெல்லாம்கூட தெரியும்.
பிறகு, அவர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக்
கடிதத்தை இன்னும் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், குடும்பத்து நண்பர்கள்
என்ற முறையில்தான், அன்பிற்காக மட்டும்தான் நாங்கள் அந்த பிஸ்கெட்
பாக்கெட்டை வாங்கிக் கொண்டு வந்தோம்; ஆனால், நீங்கள் அதைத் திருப்பி
எடுத்துக் கொண்டு போங்கள் என்று சொல்லியதும் எங்களுக்கு மிகவும் சங்கடமாகப்
போய்விட்டது. நாங்கள் உங்களிடம் எதையும் எதிர்பார்த்து அதைக்
கொடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
உடனே என்னுடைய துணைவியார் அவர்கள்,
என்னங்க இவ்வளவு மனம் புண்பட்டு எழுதியிருக்கிறார் களே, நீங்கள் விளக்கம்
சொல்லவேண்டாமா? சமாதானம் செய்யவேண்டாமா? என்று சொன்னார்கள்.
அப்படியில்லை. எனக்கு சில நேரங்களில் ஒரு
முரட்டுத் தனமான சிந்தனை. அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்க வேண்டிய
அவசியமில்லை. ஆனாலும், அது நியாயம்தான். ஒரு சிறு ஓட்டையை நாம் சில
நேரங்களில் உருவாக்கி விட்டோமேயானால், அந்த ஓட்டை மெல்ல மெல்ல பெரிதாகி,
பிறகு யானையே உள்ளே நுழைந்து, வெளியே வரக்கூடிய நிலைக்கு ஆளாகிவிடும்.
ஆகவே, அந்த மாதிரியான வாழ்க்கை முறையை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். பிறகு
அவர்களுக்கு விளக்கம் சொல்லிக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
பிறகு, நாங்கள் வழக்கம்போல,
சரியாகிவிட்டோம். எதற்காக இதை சொல்லுகிறேன் என்றால், அவ்வளவு நெருக்கமான
ஒரு சூழ்நிலை. எனக்கு எவ்வளவுதான் பணிகள் இருந்தாலும், அவருடைய இந்த விழா
தள்ளிப் போகக்கூடாது என்பதுதான் எனக்கு முக்கியம்.
கொள்கை உறவுக்காரர்களையெல்லாம் ஒன்றாக சேர்க்கவேண்டும் என்கிற உணர்வுஇந்தக் கட்டடத்தைக் கட்டி முடித்ததும்;
அதில் அய்யா சிலையை வைக்கவேண்டும்; அதைப் பெரிய விழாவாக நடத்தவேண்டும்.
இயக்கத் தோழர்கள், ஊர்ப் பிரமுகர்கள், நண்பர்கள், குடும்பத்தவர்கள்,
உறவுக்காரர்கள், கொள்கை உறவுக்காரர்களையெல்லாம் ஒன்றாகச் சேர்க்கவேண்டும்
என்கிற உணர்வு இருக்கிறது பாருங்கள், அந்த உற்சாகம்; ஆகவே, அதற்கு
இடந்தரவேண்டும் என்பதற்காகத்தான், இப்படிப்பட்ட ஒரு நல்ல விழா இங்கே
அமைந்திருக்கிறது. அவருடைய பிறந்த நாளான 90 ஆம் ஆண்டு விழாவினை மிகப்பெரிய
அளவிற்கு, இங்கே உள்ள பள்ளிக்கூடத்தில் சிறப்பாகச் செய்தோம். இன்றைக்கு
அடுத்த விழாவாக, அதற்குப் போனஸ் விழாவாக நடத்துவதற்கு வாய்ப்பு
வந்திருக்கிறது. ஏற்பாடுகளை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒரே தலைவர்; ஒரே கொள்கை; ஒரே கொடி!
திருச்சியிலுள்ள நேஷனல் கல்லூரி அது ஒரு
அக்கிரகார கல்லூரி அது. அப்படிப்பட்ட ஒரு கல்லூரியில் அவர்கள் படித்த
காலத்திலிருந்து இங்கே நண்பர்கள் சொல்லியதுபோல், இந்தக் கொள்கையில் அவர்
எந்தக் காலகட்டத்திலும், 70 ஆண்டுகாலத்திற்கு மேலாக, பெரியாரைத் தலைவராக
ஏற்றுக்கொண்டவர்கள், அன் றைக்கு அணிந்த அதே கருப்புச் சட்டை; அதே கொள்கை;
அதே கொடி; அதே தலைமை என்று வந்ததோடு மட்டு மல்ல, என்னைவிட அவர் பத்து வயது
அதிகமானவர்.
ஆனால், அமைப்பு முறையில், இந்த இயக்கத்தை
நடத்தவேண்டும் என்கிறபோது, அவருடைய கட்டுப்பாடு உணர்ச்சி; என்ன சொல்கிறோமே
அதைக் கேட்டுத்தான் அதன்படி நடப்பார். இந்த இயக்கத்திற்குப் பெருமையே
அதுதான். இங்கே மூத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வயதால்
மூத்தவர்கள்; அறிவால் மூத்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், ஒரு
ராணுவ கட்டுப்பாடு என்று சொன்னால் என்ன? பெரியாரின் தனி மனித ராணுவம்
இருக்கிறதே, அது ராணுவக் கட்டுப்பாட்டினையும் தாண்டிய ஒன்று என்ற
அளவிலேதான், இங்கே நம்முடைய கருப்புச் சட்டைத் தோழர்கள் சிறப்பாக
இருப்பார்கள்.
--------------------------தொடரும் - "விடுதலை” 27-10-2014
*******************************************
இரட்டை வாழ்க்கை முறை இல்லாததே பகுத்தறிவு!
பொத்தனூர் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, அக். 28- பகுத்தறிவு என்றால் அங்கு இரட்டை வாழ்க்கை என்பது அறவே கிடையாது - அத்தகு
வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர் கழகத் தோழர்கள் என்று பெருமிதத்தோடு குறிப்பிட்டார் திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவருமானபொத்தனூர் க.சண்முகம் அவர்களது புதிய வளாகக் கட்டடத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் முழு உருவச்சிலையை 4.10.2014 அன்று தமிழர் தலைவர் திறந்து வைத்து உரையாற்றினார்.
அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு
கருப்புச் சட்டைக்கு இப்பொழுது இருக்கிற மரியாதை என்ன என்று தெளிவாகத் தெரியும். கருப்புச் சட்டைபோடாத கட்சிக்காரர்களே கிடையாது இப்பொழுது. யாருக்காவது நெருக்கடி ஏற்பட்டால், அவர்களுக்குக்
கைகொடுக்கின்ற ஒரே சட்டை கருப்புச் சட்டைதான். தந்தை பெரியார் கொடுத்த கருப்புச்சட்டை. மிச்சம் மீதிஇருப்பவர்கள் அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள், அவர்களும் கருப்புச் சட்டை.
நீதி வழங்கவேண்டுமா? வழக்குரைஞர்களா? நீதிமன்றமா? அங்கேயும் கருப்புதான். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. எனவே, கருப்புடை தரித்தோர் உண்டு; நறுக்கியே திரும்ப நாட்கள் என்று சொன்ன மாதிரி,
அறிவாயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்!
இன்றைக்குக் கருப்புச் சட்டையினுடைய மதிப்பு, அந்தக் கொள்கையினுடைய மதிப்பு என்பது இருக்கிறதே, அதுஒரு பெரிய பயர் பேக்டர் மாதிரி இருக்கும். மூச்சுத் திணறும்பொழுதெல்லாம், ஆக்சிஜனைக் கொடுப்பதுபோல்
உள்ளது. நெருக்கடியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமா? அல்லது யாருக்காவது எச்சரிக்கைகொடுக்கவேண்டுமா? அதற்கெல்லாம் இந்தக் கருப்புச் சட்டைதான் பயன்படும் என்று சொல்லக்கூடிய
அளவிற்கு, ஒரு பெரிய அறிவாயுதமாக தந்தை பெரியார் அவர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.
அதைத்தான் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எனவே, அந்த சட்டையை க.ச. அவர்கள் எத்தனைஆண்டுகாலமாக அணிந்துகொண்டிருக்கிறார். சுயமரி யாதை இயக்கம், நீதிக்கட்சி, அந்தக் காலத்தில் இருந்தவர்கள்; பிறகு, சேலத்தில் திராவிடர் கழகமாக மாற்றியமைக்கப் பட்ட காலத்திலிருந்து, எத்தனையோ சலசலப்புகள்,எத் தனையோ புயல்கள்; எத்தனையோ பிரிவுகள்; இயக்கத்தில் இருந்தவர்களின் துரோகங்கள் இவையெல்லாம்இயக்கத்தில் வந்திருக்கின்றன. ஆனால், நம்முடைய தலைவர் அவர்கள், கொஞ்சம்கூட சிறு சபலத்திற்கோ,சலனத்திற்கோ ஆளாகாதவர். அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், அவர்களை அடையாளங்கண்டு,பிரிக்கப்படாத சேலம் மாவட்டத் தலைவராக, பிறகு அம்மா அவர்கள் அடை யாளங்கண்டு, அவர்களைமிகப்பெரிய அளவிற்கு, அறக் கட்டளைக்கு ஆயுட்கால உறுப்பினராக, பிறகு இன்றைக்கு அந்தஅறக்கட்டளையின் தலைவராக உயர்ந்துள்ளதற்கு, அவர்களின் நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதுதான்
முக்கியம்.
அவர்களுக்கு வந்த சோதனை, சாதாரணமான சோத னைகள் அல்ல. ஒரு கட்டத்தில் அவருடைய துணைவியாரை இழந்த ஒரு கட்டம்; அதேபோல், உடல்நிலையில் சில சங்கடங்கள் ஏற்பட்ட ஒரு கட்டம்; அதுபோல்,
வேறு சில பிரச்சினைகள், வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள், சில சம்பவங்கள் நடைபெறுவது மிகவும்சாதாரணமானது. ஆனால், எதிலும் அவர் தன்னுடைய நிதானத்தையோ, முதிர்ச்சியையோ இழக்கவில்லை.
இதுதான் ஒரு நல்ல பகுத்தறிவுவாதி, சிறந்த சுயமரியாதைக்காரன், உயர்ந்த பெரியார் தொண்டன் என்பதற்குஇலக்கணம். எனவே, அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு பாடம். அவருடைய வாழ்க்கை நமக்கு ஒரு நல்லபடிப்பினை. இளைஞர்கள் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும். தாய்மார்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.
முன்னாள் சுயமரியாதைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?
சில நேரங்களில் என்ன செய்வார்கள், இந்த இயக்கத் திற்கு என்ன பெருமை? இந்தக் கொள்கைக்கு என்னபெருமை என்று சொன்னால், பதவிக்கு வேண்டுமானால், முன்னாள் என்று சொல்லலாம்; முன்னாள் அமைச்சர்,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று பதவிக்கு வேண்டுமானாலும்போட்டுக் கொள்ளலாம். ஆனால், முன்னாள் சுயமரியாதைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா?
முன்னாள் கொள்கைக்காரர் என்று யாரையாவது சொல்ல முடியுமா? என்று நன்றாக நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும்.
அந்த வகையில்தான், எத்தனையோ நண்பர்கள், அவர்களிடத்தில் பழகியவர்களின் நீண்ட பட்டியல் உண்டு.
அவர்களோடு இருந்தவர்கள் உண்டு; மறைந்தவர்கள் உண்டு. ஆனாலும், அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு,ஒரு கொள்கைக்கு எழுச்சிமிகுந்த ஒரு நிலைப்பாட்டிலிருந்து, தன்னை மாற்றிக் கொள்ளாதவராக,உறுதிப்பாட்டில் நிலைத்தவராக இருக்கிறார்.
ஆகவே, அவர்கள் பல்லாண்டு காலம் வாழவேண்டும். அவருடைய வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடவுள் மறுப்பாளர்கள் கெட்டுப் போவார்கள். பெரியாரிடத்தில் சென்றவர்கள் எல்லாம் அழிந்துபோய்விடுவார்கள். இந்தக் கட்சிக்காகவே உழைத்தார்; ஒன்றுமில்லாமல் போய்விட்டார் என்று சில பேர்சொல்வார்கள். கட்சிக்காக யாராவது உண்மையாகப் பாடுபட்டிருந்தால், ஒன்றுமில்லாமல் போய் இருக்க
முடியாது. ஒன்றுமில்லாதவர்கள் நன்றாக வளர முடியும். ஏனென்றால், பெரியாருடைய வாழ்வியல் இருக்கிறதே, அது வரவுக்கு உட்பட்டு செலவழி! யோக்கியமாக இரு! நாணயமாக இரு! குறுக்கு வழியில் போகாதே!
மிக முக்கியமாக, ஏதாவது தவறு செய்திருந்தால், தண்டனையை அனுபவிக்கவேண்டும்! தண்டனையைக் கண்டுபயப் படாதே! தண்டனையிலிருந்து தப்பவேண்டும் என்று நினைக்காதே என்பதுதான் தந்தை பெரியாருடையவாழ்வியல் முறையாகும். வாழ்க்கை முறை என்பது இருக் கிறதே, சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்றுசொன்னார்.
திருவள்ளுவரின் திருக்குறள்களின் அடிப்படை அதுதான்.
எற்றென்று இரங்குவ செய்யற்க மற்றன்ன செய்யாமை நன்று - என்ற ஒரு குறள் உண்டு.அக்குறளின் கருத்து என்னவென்றால், இப்படிப்பட்ட காரியத்தை செய்யாதே! அந்தக் காரியத்தை செய்யாமல்இருப்பது நல்லது! அப்படி செய்துவிட்டால், அதற்குரிய தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்பதுதான்வள்ளுவர் குறளின் பொருள்.
அந்த அடிப்படையில், சுயமரியாதை வாழ்வு, சுகவாழ்வு என்று சொல்வதன் அடிப்படை என்ன?
அந்த சுயமரியாதை வாழ்க்கையில் எல்லோரும் தவறு செய்வோம்; தவறே செய்யவில்லை என்று யாரும்சொல்ல முடியாது. ஆனால், அந்தத் தவறை செய்தாலும்கூட, தங்களைத் திருத்திக் கொண்டு வாழவேண்டும்.
திருத்துவது என்பதும், திருத்தத்தின்மூலமாக உயர்வு என்பதும், மிகப் பெரிய வாழ்க்கையினுடைய அற்புதமானவிளைச்சல்கள். அதனை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
பழமொழியல்ல; இப்பொழுது புது மொழி!
அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், உன்னுடைய நண்பர் யார் என்று சொல்; நீயார் என்று நான் சொல்கிறேன் என்று.
ஆனால், இப்பொழுது அப்படியில்லை, நீ இருக்கின்ற இயக்கம் எதுவென்று சொல்; நீ யார் என்று நான் சொல்கிறேன் என்பதுதான்.
எனவே, இது ஒரு அற்புதமான விழாவாகும். அறிவா சான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடையசிலையை இங்கே நிறுவவேண்டும் என்று அவர்கள் நினைத்தது, தன்னுடைய தலைவன் என்கிற மரியாதைக்காக
மட்டு மல்ல; இந்தப் பக்கத்தில் செல்கிறபொழுது, பெரியார் அவர் களுடைய சிலையைப் பார்க்கும்பொழுது,கம்பீரமாக அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அவருக்கு வாழ்விணையராக மட்டுமல்ல, இந்த
இயக்கத் தையே காப்பாற்றியவர்களாக, அன்னை நாகம்மையாரும், அன்னை மணியம்மையார் அவர்களும்இருவரும் உறு துணையாக இருந்தது இருக்கிறதே, இதைவிட சுயமரி யாதை இயக்கத்தினுடைய சிறந்த
வெற்றிக்கு யார் அடித் தளமாக இருந்தார்கள் என்று காட்டுவதற்கு, இந்த கொள்கை வெற்றிக்கு, தியாகத்திற்குஎவ்வளவோ சோதனைகள் ஏற்பட்டாலும், அவர்களோடு நின்றவர்களுக்கு என்ன என்பதுதான், இந்தப்
பெரியார் வளாகத்தின் கீழே நின்று அந்த சிலையைப் பார்த்தால் தெரியும்.
அண்ணா அவர்கள் சொன்னார்!
அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார். பெரியாருடைய ஒரு போர் முறை. மிகவும் அற்புதமானது.பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம்; அவர் ஒரு காலகட்டம்; அவர் ஒரு திருப்பம்
என்றெல்லாம் சொன்ன அண்ணா அவர்கள்,
மற்றவர்களுடைய போர் முறைக்கும், பெரியாருடைய போர் முறைக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. மற்றவர்களுடைய போர் முறை என்பது, கண்களுக்கு எதிரே உள்ள எதிரிகளோடுதான் போராடுவார்கள். ஆனால்,
பெரியாருடைய பகுத்தறிவுப் போர் முறை இருக்கிறதே, கண்ணுக்கு அப்பாற்பட்டு, கண்களுக்குத் தெரியாதஎதிரிகளையும் அழிக்கக்கூடிய அளவிற்கு அவர்களுடைய போர் முறை இருக்கும்.
மூலபலம் எங்கிருக்கிறது என்று தெரிந்து, அதனை முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று
மிகத்தெளிவாகச் சொன்னார்.
யாராவது வந்து உதவி என்று கேட்டால், உடனடியாக செய்வார் அய்யா க.ச.!
இந்தப் பகுதிகளில் அப்படிப்பட்ட தோழர்கள் ஏராளம். அவர்களெல்லாம் தொண்டாற்றினார்கள். உதாரணமாக,நம்முடைய கொம்புப்பாளையம் கே.கே.பொன்னப்பா போன்றவர்கள் உள்பட எத்தனையோ பேர் தலைவரிடத்
தில் வருவார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய உழைப்பு மிகப்பெரிய அளவிற்கு, அய்யா அவர்களுடையசிறப்பு, அய்யா அவர்களிடம் இவர் காட்டிய அன்பு, அதுமட்டு மல்ல, யார் அழைத்தாலும், நம்முடையதலைவர் அவர்கள் அய்யா காலமாக இருந்தாலும் சரி, அன்னை மணியம் மையார் காலமாக இருந்தாலும் சரி,தன்னிடம் யாராவது வந்து உதவி என்று கேட்டால், உடனடியாக செய்வார். எதைப்பற்றியும்கவலைப்படமாட்டார்.
அப்படிப்பட்ட அளவிற்கு, மற்றவர்களும் வாழவேண் டும்; மற்றவர்களும் சிறப்பாக இருக்கவேண்டும் என்றுநினைப்பவர்கள். வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத் துணைப் பேரும் பயன்படவேண்டும் என்று நினைப்பவர்.
இந்தப் பகுதிக்கு நான் வரும்பொழுது இந்த நிலையில், அய்யாவினுடைய கொள்கைகள் எவ்வளவு தேவைஎன்பதை வழக்குரைஞர் காமராசர் சொன்னார்.
செய்தித்தாளைப் பார்த்து வேதனைப்பட்டேன்!
இன்று காலையில் பத்திரிகையில் நான் ஒரு செய்தியைப் பார்த்து வேதனைப்பட்டேன். இங்கேசுற்றுவட்டாரத்தில் உள்ள ஒரு கோவிலில், தலையில் தேங்காய் உடைப்பது; சாட்டையால் அடிப்பது; குழந்தை
இல்லையென்றால் இதுபோல் செய்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன்.
இப்பொழுதுதான் எங்கே பார்த்தாலும், Fertility Center என்று உருவாக்கி வைத்திருக்கிறார்களே! ஆணிடம்குறை இருக்கிறதா? பெண்ணிடம் குறை இருக்கிறதா? செயற்கை முறையில் கரு தரிக்கவேண்டுமா?
இதை எவ்வளவு காலத்திற்குமுன்பு சொல்லியிருக் கிறார், இனி வருங்காலத்தில் ஆண், பெண் சேர்க்கைஇல்லாமல் குழந்தை பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று. அது இன்றைக்கு நடைமுறையில் வந்திருக்கிறதா,
இல்லையா!
வளர்ப்புத் தாய் என்றுதான் இதற்கு முன்பு கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், இப்பொழுது வாடகைத்தாய்என்று சொல்கின்ற நிலைமை வந்திருக்கிறது.
தந்தை பெரியார் அவர்களின் இனிவரும் உலகம்!
இதை அய்யா அவர்கள், 60, 70 ஆண்டுகளுக்கு முன்பே, இனிவரும் உலகம் என்ற நூலில், இனிமேல்
உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.
அதனுடைய அடிப்படையை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், அறிவியல் உலகமே வியக்கக்கூடிய அளவிற்கு,அவர் சொல்லியது அத்தனையும் நடைபெற்றுக் கொண் டிருக்கிறது. உடனே, தந்தை பெரியாரை, தீர்க்கதரிசி,
அவதாரம் என்று நாங்கள் சொல்லமாட்டோம்.
பெரியார் சொன்னார், முழுப் பகுத்தறிவை வைத்து சிந்தித்துப் பார்; உன்னுடைய பகுத்தறிவை தாராளமாக விடு;
இதுவரையில்தான் பகுத்தறிவு, இதற்குமேல் பகுத் தறிவை விடாதே! கடவுளா? கேள்வி கேட்காதே! மதமா?கேள்வி கேட்காதே! சாஸ்திரமா? கேள்வி கேட்காதே! இவற் றுக்கெல்லாம் தடை போட்டார்கள். அந்த
இடத்தில்தான் தந்தை பெரியாருடைய உழைப்பு, யார் சொன்னாலும் நம்பாதே! உன்னுடைய அறிவு என்னசொல்லுகிறதோ அதன்படி நட! அறிவுக்கு மட்டும் மரியாதை கொடு என்று சொன்னார். அப்படிசொன்னவர்கள், இவ்வளவு தெளி வாகச் சொன்னவர்கள் மூன்று பேர்தான்.
புத்தர்
ஒன்று, புத்தர்; 2600 ஆண்டுகளுக்கு முன்பாக சொன்னார். அவர் தெளிவாகச் சொன்னார், முன்னோர்கள்நடந்தார்கள் என்பதற்காக நீ நடக்கவேண்டும் என்று அவசியம் அல்ல. முன்னோர்கள் எழுதினார்கள் என்பதற்காக, நீ நம்பவேண்டும் என்று அவசியம் அல்ல. முன் னோர்கள் பேசினார்கள் என்பதற்காக, அதனை ஏற்கவேண்டும் என்று அவசியம் இல்லை. உன்னுடைய அறிவு, பகுத்தறிவு என்ன சொல்கிறது என்று பார் என்றார்.
திருவள்ளுவர்
இரண்டாவதாக, வள்ளுவர்; வள்ளுவரும் அதையே தானே சொல்லியிருக்கிறார்,
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு
வள்ளுவர் இந்தக் குறளைச் சொல்லியிருக்கிறாரே, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? என்றுகேட்டார்,
தந்தை பெரியார்
பெரியார் சொன்னார், வள்ளுவரே சொல்லியிருக் கிறாரே, எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதே! ஏற்றுக்கொள்ளவேண்டியதை ஏற்றுக்கொள்! உன் அறிவு ஏற்றுக்கொள்ளுமா? அதுவரையில் செய் என்று தெளி வாகச்சொன்னார்.
ஆகவே, இப்படி எல்லாத் துறைகளிலும் பார்த்தீர்களே யானால், பகுத்தறிவு, அந்தப் பகுத்தறிவு சிந்தனைமட்டும் நம் நாட்டில் இருந்தால், மக்களுடைய வாழ்க்கைத் தரமாக இருந்தால், இப்படி தலையில் தேங்காய்
உடைப்பார்களா? மூளை இருக்கின்ற பகுதி அது. வேகமாக தேங்காயை உடைத்தால் என்னாகும்? அதனுடையபாதிப்பை மருத்து வர்கள் சொல்வதையெல்லாம் ஊடகங்களில் பேட்டி எடுத்து வெளியிடுகிறார்கள். ஆனாலும்,மீண்டும் மீண்டும் அங்கே சென்று, அதே செயலையே செய்கிறார்கள். பெண் களை சாட்டையை எடுத்துஅடிப்பது என்றால், எவ்வளவு காட்டுமிராண்டித்தனமாகும்!
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
என்று சொன்னபொழுது, பெரியாரிடம் ஆத்திரப்பட் டார்களே, இந்த நிகழ்வுகளையெல்லாம் பார்த்தீர்களேயானால், காட்டுமிராண்டிகளா? இல்லையா? இது நாகரிகமானவர்கள் கடவுளை கும்பிடுகிற முறையா இது
என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை வாழாதே! இரட்டை வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு என்பது இரட்டை வாழ்க்கை வாழாதே! என்று சொல்வதுதான் பகுத்தறிவு. எதைப்
பேசுகிறாயோ, அதனைத்தான் செய்யவேண்டும். எதை செய்கிறாயோ, அதனைத்தான் சொல்லவேண்டும் என்பதுதான்.
ஆனால், நம் நாட்டில் இரட்டை வாழ்க்கை முறைகூட அல்ல, மூன்று முறையான வாழ்க்கையை வாழ்கிறார்கள்.முப்பத்து முக்கோடி தேவர்கள், நாற்பத்தெட்டாயிரம் ரிஷிகளிலிருந்து, லேட்டஸ்ட் அய்யப்பன் சாமி வரையில்இருக்கக்கூடிய இந்தக் காலகட்டம்வரையில், இந்த நாட்டில் எவ்வளவு தூரம் இருக்கிறார்கள் என்று சொன்னால்,
இவர்கள் நினைப்பது ஒன்று; சொல்வது இன்னொன்று; செய்வது அதைவிட வேறு. ஆகவே, மூன்று வகையானவாழ்க்கை முறையை வாழுகிறார்கள்.
இதுபோல் இல்லாமல், நாங்கள் எதை சொல்கிறோமோ, அதை செய்கிறோம்; எதை செய்கிறோமோ, அதையேசொல்கிறோம். இவை அத்தனையும் நிறைந்த வாழ்க்கை தான், பெரியார் கண்ட பகுத்தறிவு நெறி என்ற
மிகப்பெரிய சுயமரியாதை வாழ்க்கை. பெரியார் எப்பொழுதும் தேவைப்படுவார்!
பெரியாருக்காக நாம் அதை யாரும் ஏற்கவேண்டிய அவசியமில்லை. இன்னமும் பெரியார் தேவையா என்றுசிலர் கேட்கிறார்கள். அதற்குத்தான் இந்தச் சம்பவங்கள் எல்லாம் உதாரணமாகும். பெரியார் எப்பொழுதும்
தேவைப்படுவார்.
இன்னமும் மருந்துக் கடைகள் தேவையா? என்று மருந்து கடைகளை மூடிவிட முடியுமா? இன்னமும்மருத்துவக் கல்லூரிகள் தேவையில்லை. மருத்துவர்கள் உருவாகத் தேவையில்லை என்று யாராவது சொல்ல
முடியுமா?
நீண்ட காலமாக அம்மை நோய் இருந்தது; அதனை அறவே ஒழித்துவிட்டோம் என்று சொல்லி,
மருத்துவர்களே தேவையில்லை என்று சொல்ல முடியுமா?
அந்த நோயை ஒழித்துவிட்டால், புதிதாக இன்னொரு நோய் வருகிறது. இப்பொழுது எபோலா என்ற புதியநோய் ஒன்று வந்திருக்கிறது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், நம்மூரில் பதவிக் காய்ச்சல் ஆகவே
இதுபோன்ற பல வகையான காய்ச்சல்கள் இருக்கின்ற சூழ்நிலையில், இவ்வளவுக்கும் மருந்து பெரியார் என்றமாமருந்து.
மருந்து எதற்காக? மருந்தை கண்டுபிடித்தவருக்கு மரியாதை காட்டுவதற்காகவா? ஏங்க மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால், மருந்துக் கடையை திறந்து வைத்திருக்கிறாரே, மருந்து சாப்பிடாவிட்டால் அவர்
வருத்தப்படுவாரே என்பதற்காகவா? அல்ல, நம்முடைய நோயைத் தீர்ப்பதற்காக!
அதுபோல், அறியாமை நோயைத் தீர்ப்பதற்கு, ஜாதி நோயைத் தீர்ப்பதற்குத்தான் பெரியார் தேவைப்படுகிறார்.தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஒரு முதலமைச்சருக்கே இந்தக் கொடுமை!
பீகாரில் ஒரு முதலமைச்சராக இருக்கக்கூடிய தாழ்த்தப் பட்டவர் கோவிலில் சாமி கும்பிட்டார் என்பதற்காக,அவர் சென்றதும் அந்தக் கோவிலை கழுவி விடுகிறார்களே?
தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் கழுவி விடுகிறான்; அவன்தான், மோடிக்கு முன்பாகவே, சுத்தப்படுத்து கின்ற வேலையை ஆரம்பித்துவிட்டான். மோடி
துடைப் பத்தை எடுத்தார்; அவன் தண்ணீர்க் குடத்தை எடுத்தான்.
ஆகவேதான், ஜாதி, தீண்டாமை, மனிதர்கள் ஒருவருக் கொருவர் எட்டி நிற்கவேண்டும் என்று சொல்வது,வேற்றுமை காட்டுவது, படிப்பு இன்னாருக்குத்தான் சொந்தம் என்று சொல்வது, இவற்றையெல்லாம் மாற்றியபெருமை யாரைச் சார்ந்தது என்றால், இதோ சிலையாக நிற்கிறாரே, அவர் தந்த சீலத்தினுடைய நெறிகள்தான்என்று போவோர், வருவோர் எல்லோருமே உயர்ந்து பார்த்து, தந்தை பெரியாருடைய சிலையைப் பார்த்து
பாடம் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.
மற்றபடி, நீங்கள் எதை வேண்டிக்கொண்டாலும், ஒரு சுற்று சுற்றிவந்தால் நடைபெற்றுவிடும் என்று சொல்வதற்காக இந்த சிலையை வைக்கவில்லை.
பெரியாருடைய கொள்கைக்கு ஒரு நல்ல பிரச்சாரமாக அமைந்த விழா இது!
எனவேதான், நண்பர்களே, இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சியை, ஒரு நல்லகுடும்ப விழாவாக மட்டுமே இருக்கக்கூடிய நிகழ்ச்சியை, ஒரு குடும்பத்தினுடைய நிகழ்ச்சியாக மட்டும் ஆக்கிக்கொள்ளாமல், கொள்கைத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் மீண்டும் பெரியாருடைய கொள்கைக்கு ஒருநல்ல பிரச்சாரத்தை அமைக்கவேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்த நம்முடைய க.ச. அவர்களுக்கும்,செங்குட்டுவன் அவர்களுக்கும், மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக் கின்ற அத்துணை குடும்பத்து
உறுப்பினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய மனமுவந்த பாராட்டுதல்களையும்,நன்றிகளையும் தெரிவித்து விடை பெறுகிறேன். வணக்கம்!
அய்யா க.ச. அவர்களுக்கு நூற்றாண்டு விழாவை நடத்துவோம்!
மீண்டும் இந்த ஊரில் நூற்றாண்டு விழாவை அவருக்கு நடத்துவோம், கொண்டாடுவோம் என்றநம்பிக்கையோடு, நூற்றாண்டு விழா என்பது இப்பொழுது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஏனென்றால்,
இப்பொழுது மருத்துவ முறை களும், கண்டுபிடிப்புகளும் வேகமாக வளர்ந்துகொண்டு, வந்துகொண்டிருக்கின்றகாலம்; அந்த நம்பிக்கையோடு விடைபெறுவோம்! நன்றி,வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.