மரணப் பதிவு நிலையம் டாக்டர் பூ.பழனியப்பன் அவர்களின் படத்திறப்பில் உருவான பகுத்தறிவுக் கொள்கை முடிவு
சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் எத்தனை எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு.
ஆனால், கடந்த 28ஆம் தேதி மாலை நடைபெற்ற
நிகழ்ச்சி அதில் பங்கேற்றோர் எடுத்து வைத்த கருத்துகள், தகவல்கள் பல
வரலாற்று மகரந்தங்களை உள்ளடக்கிக் கொண்டனவாக மணம் வீசின!
இரு நூல்கள் வெளியீட்டு விழா, திராவிடர்
கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூலான
அய்யாவின் அடிச்சுவட்டில் (பாகம் 4) சூழியம் சூழ்வலர் பெரியார் பேருரையாளர்
பேராசிரியர் புலவர் மா. நன்னன் அவர்கள் வெளியிட்டார்.
மகப்பேறு துறையில் உலகப் புகழ் பெற்ற
மருத்துவ நிபுணரும் பி.சி. ராய் விருது பெற்றவருமான டாக்டர் பூ. பழனியப்பன்
- ப. சுமங்கலி ஆகியோர்களால் எழுதப்பட்ட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய
நோய்கள் எனும் நூலை பிரபல சிறுநீரகவியல் துறை அறுவைச் சிகிச்சை மருத்துவர்
அ. இராசசேகரன் வெளியிட்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு நம்மிடையே
மகிழ்ச்சியோடு உறவாட இருந்த டாக்டர் பூ. பழனியப்பன் அவர் கள் எதிர்பாராத
விதமாக மறைவுற்ற காரணத்தால் அவர்தம் நூல் வெளியீட்டு விழாவோடு அவரின்
படத்திறப்பும் இணைக்கப்பட்டது.
அவரது இணையரும், மகன், மகள் உள்ளிட் டோர் இவ்விழாவில் பங்கேற்றது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
டாக்டர் பூ. பழனியப்பன் அவர்கள் சுய
மரியாதை இயக்க - திராவிடர் கழகக் குடும்ப வழி வந்த பெருமகன் ஆவார்;
பகுத்தறிவாளராக வாழ்ந்து காட்டியவர் - தம் குடும்பத்தவர்களை அந்தப்
பாட்டையில் பீடு நடைபோடச் செய்தவர்.
அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை மதச் சடங்கின்
அடிப்படையில் நடத்திட உற்றார் உறவினர் துடிதுடித்ததையும், அவற்றை டாக்டர்
பூ. பழனியப்பன் அவர்களின் மகன் பொறியாளர் ப. சேரலாதன் அவர்களும்,
குடும்பத்தினரும் எதிர் கொண்டு புறந்தள்ளிய புரட்சியையும் சேரலாதன் அவர்கள்
எடுத்துக் கூறியபோது பார்வையாளர்கள் பகுதியில் நிசப்தம் தன் ஆளுமையைச்
செலுத்தியது.
இது போன்ற துக்க நிகழ்வுகளில்,
குடும்பத்தார் துயரத்தின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள சூழ்நிலையைப்
பயன்படுத்திக் கொண்டு, மூடநம்பிக்கையாளர்கள், மதவழிச் சிந்தனை யாளர்கள்
தலைக்குத் தலை நாட்டாண்மை செய்யும் நிலைமையெல்லாம் உண்டு.
அந்த நேரத்திலும் அயராமல் தம் வாழ்வில்
வரித்துக் கொண்ட கொள்கையை நிலை நாட்டுவதுதான் நிலைத்த கொள்கையுடைய சீரிய
மாந்தரின் கடமையாக இருக்க முடியும்.
அதனைத் தம் குடும்பத்தில் நிகழ்த்திக்
காட்டிய சாதனையைப் பெருமிதத்தோடு குறிப்பிட்ட பொறியாளர் சேரலாதன் கழகத்
தலைவரிடம் வேண்டுகோள் ஒன்றினை வைத்தார். கண்கொடை (Eye Bank) குருதிக் கொடை
(Blood Bank) என்று வைத்திருப்பது போல மரணம் அடையும் சுயமரியாதைக்காரர் களை
- பகுத்தறிவாளர்களை அடக்கம் செய்ய வழிமுறை ஒன்றை நமது கழகம் ஏற்படுத்திட
வேண்டும். முன்கூட்டியே தோழர்கள் பதிவும் செய்து கொள்ளலாம் கட்டணம் கூட
வைக் கலாம். மரண சாசனம் - மரண ஒப்பந்தம் என்ற ஒரு முறையை உண்டாக்கலாம்.
சுயமரியாதைக்காரர் மரணம் அடைந்தால் அந்த
உடலை திராவிடர் கழகத்தினர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து,
பகுத்தறிவுத் தன்மையில் இறுதி நிகழ்ச்சியை நடத்துவதற்கு நமது தமிழர் தலைவர்
அவர்கள் ஒரு வழியைக் கண்டால் அது சிறப்பானதாக இருக்கும் என்ற ஓர் அரிய
கருத்தினை எடுத்து வைத்த சேரலாதன் அவர்கள், நான் என்றும் இந்தக் கொள்கை
வழியைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறவன். நமது தலைவர் அவர்கள்
வழிகாட்டுதல்படி என் இயக்கப் பணி தொடரும்! என்று முத்துக்கோத் ததுபோல
கருத்துக்களை எடுத்து வைத்த பாங்கு அனைவரையும் கவர்ந்தது.
ஏற்கெனவே பல கருஞ்சட்டைத் தோழர்கள் மரண
சாசனம் என்ற ஒன்றை உயிரோடு இருக் கும் பொழுதே எழுதி அதனை தம்தம் வீட்டி
லேயே கண்ணாடி சட்டம் போட்டு மாட்டியும் வைத்து விடுகிறார்கள்.
அண்மைக் காலமாக மரணத்திற்குப் பின் கண்
கொடை என்பது சர்வ சாதாரணமாக ஆக விட்டது; அதையும் தாண்டி மருத்துவமனை
களுக்கு உடற்கொடை அளிக்கும் போக்கு புதிய வேகத்தில் தொடர ஆரம்பித்துள்ளது.
இதற்காக பெரியார் உடற்கொடை இயக்கம் ஒன்றையே கழகம் நடத்தியும் வருகிறது.
தென் மாவட்டங்களில் முதன் முதலாக உடற்கொடை
அளித்த பெருமைக்குரியவர் கழக வீராங்கனை மானமிகு சண்முகம் வடிவு (நெல்லை
மாவட்டக் கழகத் தலைவர் மானமிகு காசி அவர்களின் இணையர்) அவர்கள் ஆவார்கள்.
மனிதன் செத்தாலும் அவன் உடல் உறுப்புகள்
மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது எவ்வளவுப் பெரிய வாய்ப்பு! செத்த
பின்பு செய்யப்படும் சடங்குகளால் அவர் சொர்க்கத் திற்கும் போவார் என்ற
கட்டுக் கதைகளால் மக்களைக் கட்டிப் போட்டு, மக்களின் பொரு ளைச் சுரண்டும்
புரோகிதத் தொழிலின் தந்திரம் இதன் பின்னணியில் உள்ளது.
பார்ப்பான் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்று தன்மான இயக்கத் தோழர் கள் முழங்கியதுதான் நினைவிற்கு வருகிறது.
பொறியாளர் சேரலாதன் அவர்கள் சொன்ன இன்னொரு தகவல்:
தமது தந்தையார் மறைவுச் செய்தியை இந்து
ஆங்கில ஏட்டில் விளம்பரமாக வெளியிடப்பட்டு, தொடர்புக்குத் தொலைப்பேசி
எண்ணும் அதில் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதனைப் படித்தறிந்த மயிலாப்பூரைச் சேர்ந்த
புரோகிதத்தை ஒரு தொழிலாக பணம் பறிக்கும் ஏற்பாடாகக் கொண்டிருக்கும் அமைப்
பினர் பொறியாளர் சேரலாதன் அவர்களோடு தொடர்பு கொண்டு, தங்கள் தந்தையாரின்
ஈமச் சடங்குகளைச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் குழுவில்
இத்தனைப் பேர்கள் இருக்கி றோம் - எங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று
தொலைப்பேசியில் தொடர்பு கொண் டதைக் குறிப்பிட்டார்.
மனிதன் செத்தாலும் பார்ப்பனீயத்தின் சுரண்டல் தொழில் மட்டும் விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.
கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணெய் மோர்ப்புகா விரிந்த பூ உதிர்ந்த காய் மீண்டும் போய் மரம் புகா
உடைந்து போன சங்கின் ஓசை
உயிர்களும் உடற்புகா
இறந்தவர் பிறப்பதில்லை
இல்லை இல்லை இல்லை! என்று
சில வாக்கியச் சித்தர் பாடிச் சென்றார்.
உடைந்து போன சங்கின் ஓசை
உயிர்களும் உடற்புகா
இறந்தவர் பிறப்பதில்லை
இல்லை இல்லை இல்லை! என்று
சில வாக்கியச் சித்தர் பாடிச் சென்றார்.
ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு,
பிதிர் லோகம் இவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன், நம்புகிறவன் மடையன்,
இவற்றால் பலன் அனுபவிக்கிறவனை மகா மகா அயோக்கியன் என்ற விஞ்ஞான உண்மையை
சமுதாய விஞ் ஞானியாம் தந்தை பெரியார் கூறியதை ஆசாபாசமின்றிச் சிந்தித்தால்
இதற்குள் இதழ் விரிக்கும் உண்மையின் விரிவு புலப்படும்.
மக்களின் மடமை சார்ந்த நம்பிக்கைகளை ஊதிப்
பெரிதாக்கி, அதனை இலாவகமாக தமது வருவாய்க்குரிய சாதனமாக ஆக்கிக் கொள்ளும்
பித்தலாட்டத்தை என்ன சொல்ல!
உத்தர கிரியை எனும் பெயரால் செத்துப் போனவர்களுக்காகக் கருமாதி செய்யவரும் புரோகிதப் பார்ப்பான் கொடுக்கும் ஜாபிதா (பட்டியல்) இதோ:
மஞ்சள் தூள் 50 கிராம், குங்குமம் 50
கிராம், புஷ்பம் 10 முழம்; சந்தனம் 20 கிராம்; ஊதுபத்தி 1 பாக்கெட்,
கற்பூரம் - 20 கிராம், கதம்பப் பொடித்தூள் 50 கிராம், வெல்லம் 100 கிராம்,
வாழைப்பழம் 1 டஜன், வாழை இலை 15, வெற்றிலை 2 கவுளி, களிப் பாக்கு 100
கிராம், தேங்காய் 6, கொட்டைப் பாக்கு 11, எலும்பிச்சை பழம் 11, நல்லெண்ணெய்
100 கிராம், சீயக்காய்த் தூள் 1 பாக்கெட், பால், தயிர் 1 பாக்கெட், தேன்
பாட்டில் 1, நெய் 100 கிராம், நெல் பொரி 5 ரூபாய், நவதானியம் 5 ரூபாய்,
கலசக் குடுவை 5, கலசத்துண்டு அரை மீட்டர், சோறு குடுவை நூல் உருண்டை - 2
சில்லை பனம் இலை 101, பஞ்ச வர்ணத்தூள் 2 ரூபாய், பச்சரிசி மாவு 1 ஆழாக்கு,
தீப்பெட்டி 2, வரட்டி ரூ.10, எள்ளு 50 கிராம் அய்யர் வேஷ்டி துண்டு 8
முழம் ஜதை அய்யர் கட்டணம் ரூ.1500 (ரேஷன் அரிசி வாங்கக் கூடாது) பாய்
அல்லது ஜமக்காளம், தாம்பாளத் தட்டு - 4, வீட்டில் போட்ட நவதானியம் செடி,
சொம்பு 4, டம்ளர் (ஸ்டீல்) 4, மனை 2, குடம் அல்லது பக்கெட், காமாட்சி
விளக்கு 1.
மேற்கண்ட பட்டியலை பார்ப்பனப் புரோகிதர்
கேட்டுப் பெற்றுக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்கிறதா? உண்மையைச் சொல்லப்
போனால் பொருள் - புரோகித பார்ப்பானுக்குப் போய்ச் சேருவதுதான்.
இந்தப் பொருள்களுக்கும் செத்துப் போன
வருக்கும் என்ன தொடர்பு - அவருக்குப் போய்ச் சேரப் போகிறதா? போய்ச் சேர
போவதோ புரோகிதப் பார்ப்பான் வீட்டுக்குத்தான்! இந்தச் சூட்சுமத்தைப்
புரிந்து கொள்ள வேண்டாமா?
ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது - அரிசி
என்கிறபோது - ரேஷன் அரிசி கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக சொல்லப்பட்டு
இருப்பதை நினைத்தால் சிரிப்பு வரலாம் - ஆனால் சீரியசாகச் சிந்தித்தால்
அதில் உள்ள பார்ப்பனத் தந்திரம் புலப்படாமல் போகாது.
இவற்றைப்பற்றியெல்லாம் திராவிடர்
கழகத்தைத் தவிர, கவனம் செலுத்தப் போவோர் யார் இருக்கிறார்கள்? கேட்டால் இது
ஓர் அற்ப விஷயம் என்று சொல்லக் கூடிய அதிமே(ல்) தாவிகள் நாட்டில்
இருக்கத்தான் செய்வார்கள்.
அற்ப விஷயமல்ல! மக்களைச் சுரண்டும்
மகத்தான மோசடி - பொருள் மட்டுமல்ல - மனிதனின் விலை மதிப்பில்லாத
அறிவும்தான் மொட்டை அடிக்கப்படுகிறது.
எனவே இதில் கவனமும் கருத்தும் செலுத்த வேண்டியது மிக மிக அவசியமே!
நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய திராவிடர்
கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பினை
வெளியிட்டார் இயக்க வரலாற்றில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்ட முக்கிய
அறிவிப்பாக இது கருதப்படும்.
மரணப் பதிவு நிலையம் ஒன்று பெரியார்
திடலில் தொடங்கப்படும். மரணத்திற்குப் பிறகு தங்கள் இறுதி நிகழ்ச்சி
மூடநம்பிக்கைகளுக்கு, சடங்குகளுக்கு இடமின்றி எளிதாக நடைபெற வேண்டும் என்று
விரும்புபவர்கள் இந்த நிலை யத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அதற்குரிய
நடைமுறைகள் உருவாக்கப்படும் என்று அறி வித்தார்.
திருமணத்தில் புதிய வழிமுறையை தந்தை
பெரியார் உருவாக்கிக் கொடுத்தார். அது போலவே வாழ்க்கையின் மிக முக்கிய
நிகழ்வான மரணத்தின் போதும் ஒரு சரியான தெளிவான பகுத்தறிவுக் கொத்த வழிமுறை
உருவாக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் சிந்தனை - கோரிக்கை சுயமரியாதைச்
சிந்தனையாளர் டாக்டர் பூ. பழனியப்பன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சியில்
உருப்பெற்றது - சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படும் -
பேசப்படும் என்பதில் அய்யமில்லை.
---------------------------------- ”விடுதலை” 30-03-2014