தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியாரை உரசுவதா?
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையைத் தொடர்ந்து இப்பொழுது தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினை சில ஏடுகளில் வெடித்துக் கிளம்பியுள்ளது.
அப்பிரச்சினையில் தந்தை பெரியார் அக்கறை காட்டாதது போன்ற ஒரு கருத்தை வலம் வரவிட்டுள்ளன.
தேவையில்லாத உரசல்
இனி போவதற்கு வேறு கட்சியில்லை என்ற நிலையில் காந்தி தேசத்தில் பயணிக்கும் தோழர் ஒருவர் அளித்த பேட்டியில் தேவிகுளம் - பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியாரை தேவை இல்லாமல் உரசி இருக்கிறார்.
குளமாவது - மேடாவது என்று சொன்ன காமராசர்பற்றி அவரால் குறிப்பிட முடியவில்லை. காரணம். இன்னும் விட்ட குறை - தொட்ட குறை என்பதில் நண்பர் அவர்கள் ஊசலாடிக் கொண்டு இருப்பதுதான்.
மாதம் இரு முறை இதழ் ஒன்றில்...
மாதம் இருமுறை இதழ் ஒன்றில் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையில் - குலக்கல்வித் திட்டத்தில் ஆச்சாரியாருக்குச் சாமரம் வீசிய திருவாளர் ம.பொ.சி. அவர்களால் எழுதப்பட்டுள்ள எனது போராட்டம் என்ற நூலிலிருந்து ஒரு நீண்ட பகுதி எடுத்துப் போடப் பட்டுள்ளது.
தந்தை பெரியாரின் நிலைப்பாடு என்ன?
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களின் நிலைப்பாடு என்ன? ம.பொ.சி. அவர்கள் இந்தப் பிரச்சினையில் எப்படி முரண்பாடாக நடந்து கொண்டார் என்பதற்கு நீண்ட விளங்கங்கள் தேவையில்லை.
தந்தை பெரியார் அவர்களின் மூன்று அறிக்கைகள்
இது குறித்து தந்தை பெரியார் அவர்கள் கையொப்பமிட்டு விடுதலை யில் வெளியிட்ட மூன்று அறிக்கைகளே போதுமானது. அவை இதோ:
திரு. ம.பொ.சிக்கு பெரியார் கடிதங்கள்
கூட்டுக் கிளர்ச்சிக்கான திட்டங்கள்
திருச்சி ஜன.21 (1956):
அன்புள்ள நண்பர் சிவஞானம் அவர்களுக்கு ஈ.வெ.ரா. வணக்கம்.
தங்கள் தந்தி இன்று பகல் கிடைத்தது. அதில் குறிப்பிட்ட கடிதம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைப் பற்றி தங்களுக்கு ஒரு தந்தி அனுப்பிவிட்டு விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ளும்படி தோழர் குருசாமி அவர்களுக்கு டெலிஃபோன் பேசினேன். அவர் ஊரில் இல்லை என்று அவர்கள் வீட்டில் சொன்னார்கள். வந்த உடனே தங்களைக் கண்டு பேசி விவரம் எழுதும்படி சொல்லி முடித்தேன். பிறகு இப்போது 3.50க்கு தங்கள் டெலிஃபோன் வந்தது. டெலிஃபோனில் பேசிய விஷயங்களை உறுதிப்படுத்த இக்கடிதம் எழுதுகிறேன்.
நாம் 19 ஆம் தேதி பேசி முடிவு செய்து கொண்டபடி நடவடிக்கை எடுத்துக் கொள்வதில் அன்று மாலையில் தாங்கள் மற்றும் இரண்டொருவரை சந்தித்து முடிவு தெரிவிப்பதாகச் சொன்னீர்கள். நான் என்னுடைய நிலைமையை தெரி வித்துவிட்டு புறப்பட்டு வந்துவிட்டேன். தங்கள் டெலிஃபோன் வந்த பிறகும் இப்பொழுதும் அந்த முடிவை நான் உறுதிப்படுத்துகிறேன். அதாவது இப்பொழுது இந்திய அரசாங்கம் தமிழ் மக்களுக்குச் செய்துள்ள - செய்து வருகிற - செய்யப்போகின்ற - அநீதிகளை சிந்தித்தால் நாம் நமது எதிர்ப்பை ஏதாவது ஒரு கிளர்ச்சியின் மூலம் இந்திய அரசாங்கம் உணரும்படி செய்ய வேண் டியது அவசியம் என்று கருதுகிறேன். இது போலவே தங்களுக்கும் மற்றும் சில நண்பர்களுக்கும், ஸ்தாபனக்காரர்களுக்கும் கருத்து இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப்படி செய்வதில் கிளர்ச்சிக்கு நமது லட்சியம் என்ன என்பதை அரசாங்கத்தார் உணரும்படியும், பொதுமக்களும் தெரிந்து நமக்கு ஆதரவளிக்க ஆவல் கொள்ளும் படியும் விளக்குகிறேன்.
1. எல்லைக் கமிஷன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு (தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்.
2. இந்தி மொழியை யூனியனுக்கு ஆட்சி மொழியாகவும், இந்தியாவுக்கு தேசிய மொழியாகவும் ஆக்கப்படுவதற்கு பல வழிகளில் அரசாங்கம் முயற்சிப்பதைத் தடுப்பது.
3. தமிழ் யூனியன் ஆட்சி என்பதில் படை, போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற அதிகார ஆட்சி உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படிச் செய்யவேண்டும்.
இதற்கு ஒரு விளக்கம் : திராவிடர் கழகம், தமிழ் நாடு, யூனியனிலிருந்து பூர்ண சுயேச்சை உரிமையுடன் தனித்து இயங்கவேண்டும் என்பதாக முடிவு செய்து கொண்டிருந்த போதிலும், அந்த கொள்கைக்குப் பாதகம் இல்லாமலும் மேற்கண்ட விஷயங்களைப் பற்றிய கிளர்ச் சியை முன்னிட்டு மற்ற ஸ்தாபனக்காரர் களுடைய ஒத்துழைப்பையும் நட்பையும் முன்னிட்டு இந்த மூன்றாவது வாசகத் துக்கு இணங்குகிறது.
4. சரித்திர சம்பந்தமாகவே தமிழ்நாடு என்ற பெயரைக் கொண்டு இயங்கி வரும் நம் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலத்தில் மதராஸ் என்ற பெயரையோ, சென்னை என்ற பெயரையோ கொடுத்து தமிழ் நாட்டைப் பிரித்து, தமிழ்நாட்டுப் பெயரை நிரந்தரமாக மறைப்பதைத் தடுப்பது.
5. தமிழ்நாடு தனித்து இயங்கி தமிழ் நாட்டின் முன்னேற்ற விஷயத்தில் தமிழ் மக்கள் பாடுபட முன்வந்து தமிழ்நாட்டின் நலம் என்று சிறிதாவது உணர்ச்சி பெற் றிருக்கின்ற இந்த சமயத்தில் தமிழர்களின் பழக்க வழக்கம், கலாசார பண்பு, தமிழர் நலம் ஆகியவைகளைப் பற்றி கவலை கொள்ள அவசியம் இல்லாத மற்ற நாட்டாரை ஒன்று சேர்த்து தென்மண்டலம் என்பதாகப் பிரிக்க ஏற்பாடு செய்துள்ள மத்திய அரசாங்க முடிவை சிதைப்பது ஆகிய காரியங்களுக்கு நாம் போராட்டம் துவங்கவேண்டும். இசையும் ஸ்தாபனங்களையும், இசையும் தனிப்பட்ட மக்களையும் சேர்த்து பொதுமக்கள் ஒத்துழைப்பையும் பெறுவதற்கான காரியங் கள் செய்து போராட்டத் திட்டம் வகுக்கப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காக யோசிப்பதற்கென்று ஒரு நாள் குறித்து மற்ற ஸ்தாபன தோழர்களுக்கும், தனிப்பட்ட தோழர்களுக்கும் தாங்கள் மேற்கண்ட கருத்துக்களைக் காட்டி அழைப்பு அனுப்புவதை நான் மனப்பூர்வ மாக ஆதரிக்கிறேன். (இது விஷயமாக நாம் நேரிலும் பேசியிருக்கிறோம்.) அதன்படி அனுப்பப்படும் அழைப்பில் என் பெயரையும் திராவிட பார்லிமென்டரி கட்சித் தலைவர் திரு சுயம்பிரகாசம் அவர்கள் பெயரையும் சேர்த்துக் கொள்ள சம்மதிக்கிறேன்.
அழைப்பை அருள்கூர்ந்து நண்பர் குருசாமி அவர்களுக்கும் காட்ட வேண்டிக்கொள்கிறேன்.
தங்கள் அன்பன்
25.1.1956 ஈ.வெ. ராமசாமி
தந்தை பெரியாரின் இரண்டாவது அறிக்கை
கிளர்ச்சி நடத்தவேண்டிய முறைபற்றி
தமிழ் மக்களுக்கு பெரியார் வேண்டுகோள்
சென்னை, ஜன. 25:
இந்திய யூனியன் மத்திய அரசாங்கத்திற்கு தலை கனத்துவிட்டது. இட் லரிசம் துவக்கப்பட்டுவிட்டது. ஜனநாயகம் என்ற வேஷத்தில் சர்வாதிகார நாயகம் நடத்தப்படுகிறது.
இந்தச் சமயத்தில் சுயநலக்காரர்களும், விளம்பரக் காரர்களும் பொது வாழ்வின் பேரால் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும், மக்களின் பிரதிநிதிகள் என்னும் வேஷத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். இவர்களது போலி நடிப்பில், பொதுமக்கள், இளைஞர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், ஏமாறுகிறார்கள்.
இன்று யூனியன் மத்திய அரசாங்கத்தின் நடத்தை நாளுக்கு நாள் தமிழர்களை - தமிழ் நாட்டை - அழுத்தி வட நாட்டுச் சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் அடிமையாக்கும் காரியத்தில் முனைந்திருக்கிறது.
அடிமை வாழ்வை விட எதிர்த்து அழிந்து போகும் வாழ்வே மேலானது.
இப்போது தமிழ்நாட்டைப் பற்றி மத்திய அரசாங்க நடத்தைகள், தீர்ப்புகள், உத்தேசங்கள் பற்றித் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கிடையில் பெரும் குமுறல் இருந்து வருகிறது.
இது காரணமாய், கடிவாளம் இல்லாத குதிரைகள் போல் தமிழ் நாட்டுப் பாமர மக்கள் பலரும், மாணவர்கள் பலரும் தன்னிச்சை முறையில் கண்டபடி நடந்து பெரும் காரியங்களைச் செய்கிறார்கள். இவை தேவையும் வரவேற்கத் தக்கதுமா னாலும் தக்க லட்சியமில்லாத பொறுப்புக்கு ஆளில்லாத தன்மையில் அவசரத் தில் நடைபெற்று வருவது அறிகிறேன். இந்தப்படி குறைபாட்டுடன் நடக்கு மானால், இது சீக்கிரத்தில் ஓய்ந்து விடக்கூடுமென்று பயப்படுகிறேன்.
இந்திய அரசாங்கம் செய்து வரும் மற்றும் பல கேடுகளை முன்னிட்டு மக்களுக்கு விளக்கிக் காட்டி மக்களின் எல்லோருடையவும் பலமான ஆதரவு கிடைக்கும்படி செய்து கொண்டு நடத்த வேண் டிய கிளர்ச்சியின் லட்சியத்துக்கு இன்றி யமையாத தேவையாக இன்று மக்களி டையில் இலட்சிய விளக்கமே இல்லாமல் ஒருவரைப் பார்த்து ஒருவர் நடப்பது போல் சில காரியங்கள் நடைபெறுகின்றன. பின்னால் நடக்க வேண்டிய காரியம் முன்னாலும், முன்னால் நடக்க வேண்டிய காரியம் பின்னாலுமாய் நடப்பதாக இருக்கிறது.
கிளர்ச்சி எவைகளுக்காக நடத்துவது, எப்படி நடத்துவது, யார் யார் ஆதரவுகளைத் தேடிக்கொண்டு துவக்குவது அதற்குத் திட்டங்கள் யாவை - என்பன முதலியவை பற்றியெல்லாம் சென்ற 10 ஆம் தேதி சென்னையில் ஒரு நண்பர் வீட்டில் திரு. சிவஞான கிராமணி உட்பட சில தோழர்கள் கலந்து பேசி இரண் டொருவர் விரும்பிய திட்டங்களையும், மற்றும் பொதுத் திட்டங்களையும் டைப் அடித்து கூடிப் பேச ஒரு நாள் குறிப்பிட்டு ஒரு இடத்தையும் குறிப்பிட்டு அந்த நாளைக்கு வரும்படி இன்ன இன்னாருக்கு அழைப்பு அனுப்புவது. அதில் இன்ன இன்னார் கையெழுத்து இருப்பது எனப் பல விஷயங்களைத் தெளிவாய்ப் பேசி முடிவு செய்து கொண்டதோடு பிரிந்து கொண்டோம்.
அன்று மாலையிலேயே, திரு.கிராமணி யார் என்னைக் கூப்பிட்டு அழைப்பில் யார் யார் கையொப்ப மிடுவது என்று பேசி ஒப்புக் கொண்டவர்களில் சிலரிடம் தாம் சம்மதம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், அவர்கள் பீர்மேடு, தேவிகுளம் விஷயம் ஒன்றுக்குத்தான் கிளர்ச்சி செய்யும் லட்சியத்திற்குக் கையொப்பமிட சம்மதிக்கிறார்கள்; மற்றது பற்றி தயங்குகிறார்கள் என்று சொன்னார். அதற்கு நான் பீர்மேடு போலவே மற்றும் முக்கியத்துவம் பொருந்திய 4 விஷயங்களையும் அவருக்கு வலியுறுத்தி, இவைகளுக்கு சம்மதித்தவர்கள் கையொப்பம் மட்டும் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு திருச்சிக்குப் புறப்பட்டுவிட்டேன். இதன் மீது திரு.கிராமணியார் அவர்கள் 20 ஆம் தேதி சென்னையில் இருந்து,
நீங்கள் 19 ஆம் தேதி என்னிடம் கூறிய மூன்று விஷயங்களையும் இலட்சியத்தில் சேர்த்து பல தலைவர்களுக்கு பிரமுகர்களுக்கு, சர்வ கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்புவது என்று முடிவு செய்து விட்டேன். அழைப்பு நகல் இத்துடன் வருகிறது. அதில் கையொப்பமிட்டு மறு தபாலில் அனுப்பினால் அச்சடித்து எல் லோருக்கும் அனுப்பிவிடுகிறேன். தங்கள் நண்பர் குருசாமியிடம் கொடுத்த வேலைத் திட்டங்களும் பெற்றேன் என்பது ஆக ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
மற்றும் 21 ஆம் தேதியில் அவரே,குருசாமியிடம் கலந்தேன்; என் கடிதப்படி உங்கள் சம்மதத்தை தந்தியில் சொல்லுங்கள் என்பதாக எனக்கு ஒரு தந்தி கொடுத்தார்.
அந்தத் தந்தி பார்த்தவுடன், உங்கள் தந்தி வந்தது; கடிதம் எனக்குக் கிடைக்க வில்லை என்று திரு.கிராமணியாருக்கு நான் தந்தி கொடுத்துவிட்டேன்.
தந்தி கொடுத்த சிறிது நேரத்திற்குள் திரு. கிராமணியார் சென்னையிலிருந்து டெலிஃபோனில் என்னைக் கூப்பிட்டார். நான் உடனே விவரம் கேட்டு, விபரம் தெரிந்து சம்மதம் கொடுத்துவிட்டு நாங்கள் பேசிய டெலிஃபோன் பேச்சை உறு திப்படுத்தி ஒரு கடிதமும் எழுதிவிட்டேன்.
இவ்வளவும் நடந்தபிறகு திரு. கிராமணியார் கூட்டத்திற்கு அழைப்பு அனுப் பாமல், வேறு எவ்விதத் தகவலும் எனக்குத் தெரிவிக்காமல் நான் கலந்து கொண்டேன் என்றும், சம்மதித்தேன் என்றும் பல கூட்டங்களில் பேசியும் பல பத் திரிகைகளில் வெளிவரும்படி செய்து விட்டு நாட்டில் கிளர்ச்சிக்கும் தூண்டி விட்டார்.
மக்களுக்கு லட்சியம் உணர்த்தப்பட வில்லை. ஒழுங்கு முறை கற்பிக்கப்பட வில்லை. பல பொதுமக்கள், முக்கியஸ்தர்கள் என்பவர்களிடம் தக்கபடி சம்மதம், சம்பந்தம் வைத்துக் கொள்ளவில்லை. ஆங்காங்கு கிளர்ச்சி தாறுமாறாக நடக் கின்றன; கைது ஆகிறார்கள். போலீசால் துன்புறுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட இந்த நிலையை அனுமதிப்பது ஒரு தலைவருக்கு நியாயமல்ல என்பதோடு மற்ற தோழர்களுடன் கலந்து பேசிய பேச்சு முடிவுகளை அலட்சியப்படுத்தி அவர்கள் ஆதரவு இருப்பதாக மக்களுக்குக் காட்டிக்கொண்டு இருப்பதும் அரசியல் ஒழுங்குக்கு ஏற்றதுமல்ல என்பதை வெளியிட வருந்துகிறேன்.
இது எப்படி இருந்தாலும் கிளர்ச்சி பலனற்றுப் போகுமே என்று பயப்படுகிறேன் என்பதோடு எனது கவலையெல்லாம் பீர்மேடு விஷயம்போலவே மற்றும் அதை விட முக்கியம் என்று கூட பலர் கருதும்படி தமிழர்களுக்கு யூனியன் அரசாங்கம் செய்த மற்றும் பல கேடுகள் இருக்கின்றன. இம்மாதிரி செய்கையால், அவை பின்னணிக்கு மறைந்து போகவும் ஆகிவிடும் போலிருக்கிறது. ஆதலால், இக்கிளர்ச் சியை எல்லா லட்சியங்களுக்காகவும் பொதுக் கிளர்ச்சியாகவும் செய்ய வேண் டியது அவசியம் என்று கருதுகிறேன்.
அதற்காகவே நான் சென்னையில் இரண்டொரு நாள் தங்கி பலரையும் சந்திக்க ஆசைப்படுகிறேன். சட்ட சபை அங்கத்தினர்களையும் தனிப்பட்ட பிரமுகர் களையும் கலந்து பேச இஷ்டப்படுபவர்களையும் காண ஆவலாய் இருக்கிறேன்.
நல்ல வழக்கு சரியானபடி விவரிக்காததால், கெட்டுப் போகக்கூடாது என் பதுதான் இந்த வெளியீட்டின் தத்துவம்.
முக்கிய குறிப்பு: எனது கிளர்ச்சித் திட்டம் பலாத்காரம், உயிர்ச்சேதம், நாசவேலை, பொருள் நஷ்டம், பொதுஜன அசவுகரியம் ஆகிய காரியங்களுக்கு பெரிதும் இட மில்லாமல் இருக்கும் படியாகவும் இருக் கும். எதிர்பாராமல் அவை நேரிடுமானால் சமாளிக்கும்படி இருக்குமே தவிர, ஓடும்படி இருக்காது. ஆதலால், கிளர்ச்சி என்பவைகளில் இவை முதன்யாகக் கவனிக் கப்படவேண்டியது அறிவும் பொறுப்பும் உடைய காரியமாகும்.
26.1.1956 ஈ.வெ.ராமசாமி
தந்தை பெரியாரின் 3 ஆவது அறிக்கை
ம.பொ.சி. கூட்டத்திற்கு வரமுடியாது
பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை
இன்று ம.பொ.சிவஞானம் அவர்கள் தமது சொந்த கையெழுத்திட்டு அச்சடித்த ஒரு அழைப்புக் கடிதம் தபாலில் கிடைத் தது.
அந்த அழைப்பு கண்டு நான் வியப்படைந்தேன்.
என்னிடம் அவர் நேரில் ஒப்புக்கொண் டது. 4, 5 விஷயங்களுக்காக எதிர்ப்புக் கிளர்ச்சி நடத்துவது என்பதாகும்.
பிறகு அவர் 20 ஆம் தேதி சென்னை யிலிருந்து எழுதி அது எனக்கு 22 ஆம் தேதி கிடைத்தது. அக்கடிதத்தில் 3 விஷயங்களுக்கு ஆக கிளர்ச்சி நடத்துவது என்று ஒப்புக் கொண்டு எனது சம்மதம் கேட்டார். அது எனக்கு அடுத்த நாள் 21 ஆம் தேதி கிடைக்காததால் ஃபோனில் அவர் சம்மதம் கேட்டதில் 5 விஷயங் களுக்கு என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இடம் - மகாஜனசபை, அழைப்பில் கைழுத்திடுவது,
திருவாளர்கள்
1. ம.பொ.சி. 2. ஈ.வெ.ரா. 3. அந்தோணி பிள்ளை. 4.சுயம்பிரகாசம். 5. கம்யூனிஸ்டு கட்சி அல்லது பி.டி.ராஜன்.
இப்போது அதற்கு நேர்மாறாக தானே கையொப்பமிட்டு, வேறு ஒருவருடைய தனி இடத்தில் - பீர்மேடு என்கின்ற ஒரே பிரச்சினைக்குக் கிளர்ச்சி என்பது ஆக.
இது சிறிதும் நேர்மை அற்ற காரியம் என்பது எனது கருத்து. இப்படிப்பட்ட வர்களுடன் நான் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தில் கலந்து மக்களை ஈடுபடச் செய்ய முடியும்? ஆதலால் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை விசனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு: இப்போது தட்சிண பிரதேச பிரச்சினை பலம் பெற்று இருப்பதால் பீர்மேடு பிரச்சினை செத்துவிட்டது என்று கருதவேண்டியதாகிவிட்டது. அதாவது 3 நாடுகளை ஒன்று சேர்ப்பதானால் பீர்மேடு எதற்காக பிரியவேண்டும் என்கிற கேள்வி எழுமல்லவா? அதை முதலில் ஒழிக்க வேண்டாமா?
சி.ஆர். 3 நாடு ஒன்று சேருவதற்கு தட் சிண பிரதேசத்திற்கு ஒப்புக் கொண்ட தால் அதை விட்டுவிட வேண்டுமா?
மற்றும் இவை சம்பந்தமான சில தகவல்கள் பின்னால் வெளியிடப்படும்.
27.1.1956 ஈ.வெ.ராமசாமி
தந்தை பெரியார் அவர்களின் மேற் கண்ட மூன்று அறிக்கைகளைப் பார்த்த பிறகாவது உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் தமிழர்கள்.
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினையில் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நிறுத்தப் பட்டதாக ம.பொ.சி. அறிவித்து விட்டார். அதனைக் கண்டித்து விடுதலை (28.1.1956) தலையங்கம் தீட்டியது. ம.பொ.சி.யை நம்பினால் இதுதான் என்று எழுதுகிறது விடுதலை.
அரை நூற்றாண்டுகள் கடந்த நிலையில் யாருக்குத் தெரியப் போகிறது? எதையும் கண்டமாதிரி எழுதலாம் என்று நினைக்க வேண்டாம்.
அதுவும் தவிர, இம்மக்களையும், மண்ணையும் காப்பாற்றும் மாபெரும் பாதுகாவலரான தந்தை பெரியார் அவர்களைப் பற்றிக் கூறும்பொழுது, எழுதும்போது, விமர்சிக்கும்போது மேலான பொறுப்பு ணர்ச்சியும், ஜாக்கிரதையான நிதானமும் தேவை!
தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழுந்துநின்ற அதே கால கட்டத்தில்தான் தட்சிணப் பிரதேசம் என்ற - தமிழன் கழுத்துக்குக் கத்தித் தீட்டும் பிரச்சினையும் எழுந்துநின்றது.
வங்காளம், பிகார், அஸ்ஸாம் சேர்ந்து ஒன்று, ஆந்திராவும், ஒரிசாவும் ஒன்று, குஜராத்தும், இராஜஸ்தானும் ஒன்று, தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் சேர்ந்த ஒன்று, மகாராட்டிரம் தனியே, மத்தியப் பிரதேசம் தனியே, உத்தரப்பிரதேசம் தனியே, பஞ்சாப் தனியே ஆக இந்தியாவை எட்டுப் பகுதிகளாகப் பிரிந்து ஆட்சி புரிவது என்று உள்துறை அமைச்சர் வல்லப பந்த் அவர்களின் பெயரால் ஒரு திட்டம் கருத்தரித்தது. தமிழ்நாடு, கேரளம், கருநாடகம் மூன்றும் ஒன்றாக இணைத்து ஆட்சி அமைக்கப்பட்டால், பார்ப்பனர்களோடு சேர்ந்து மலையாளிகளின் ஆதிக்கம்தான் கொட்டமடிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும், மலையாளக் குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப்பானுக்குள்ள புத்தியெல்லாம் மலையாளிக்கும் உண்டு. பார்ப்பனனைப் போலவே மலையாளிகள் மான ஈனமில்லாதவர்கள். மற்ற நாட்டில் போய் அண்டிப் பிழைக்கிறோமே என்ற எண்ணம் கூட இருக்காது. எதற்கெடுத்தாலும் திமிராகப் பேசவும், பார்ப்பனர்களைப் போல் தந்திரமாகப் பேசவும் தெரியும் என்றார் தந்தை பெரியார் . (வேலூரில் பெரியார் உரை 29.1.1956) மகாராஷ்டிரக்காரனுக்கும், பஞ்சாப்காரனுக்கும் தனி ஆட்சி. ஏமாந்தவர்கள் நாம் என்று நினைத்துக் கொண்டு ஒண்டிக் குடித்தனம். இதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள். தந்தை பெரியார் போர்ப்பறை கொட்டினார். 1956 பிப்ரவரி 1,2 ஆகிய நாட்களில் பெங்களூரில் தட்சிணப் பிரதேசம் அமைப்பு பற்றி இறுதி முடிவெடுக்க கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது.
பிரதமர் நேரு, சென்னையின் முதல் அமைச்சர் காமராசர் போன்றவர்கள் எல்லாமே அதில் கலந்து கொண்டனர். அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் பிரதமர் நேரு, முதல்வர் காமராசர் ஆகியோருக்கு ஒரு தந்தி கொடுத்தார்.
தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது என்பது தமிழர்களுக்கு வாழ்வா, சாவா? என்பது போன்ற உயிர்ப் பிரச்னையாகும். உங்களுக்கும், மற்றவர்களுக்கும் இது தற்கொலையானதும் ஆகும். தட்சிணப் பிரதேசம் ஏற்படுமேயானால் முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்கு தமிழ் மக்களை நெருக்குவதாகிவிடும். அருள் கூர்ந்து நம் எல்லாரையும், தமிழ் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டுகிறேன் என்பதுதான் தந்தை பெரியார் அனுப்பிய அந்தத் தந்தி வாசகமாகும்.
காமராசரும் அந்த முயற்சியைக் கைவிட்டார். 1956 அக்டோபர் முதல் தேதியிலிருந்து 15 மொழிவாரி மாநிலங்களும் 7 யூனியன் பிரதேசங்களும் இந்தியா என்ற அமைப்புக்குள் உருவாக்கப்பட்டன. தட்சிணப் பிரதேசத் துக்குக் கொடுக்கப்பட்ட அடி மற்றமற்ற மாகாணங்களிலும் உருவாக இருந்த கரு ஒட்டுமொத்தமாகச் சிதைக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
தட்சிணப் பிரதேசம் உருவாக்கப்பட்டால் தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழ வேண்டிய அவசியம் இல்லை என்று சமாதானம் சொன்னவர்களும் உண்டு. தேவிகுளம், பீர்மேடு பிரச்சினை எழுந்து வருகிற போது, அதனோடு தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக தந்தை பெரியார் மீது கல்லெறிவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
---------------கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் -”விடுதலை”18-1-2012
3 comments:
பொங்கள் புதுநாள் தோன்றியது ஏன்?
உழுது பாடுபட்ட பாட்டாளி உழு பயன் காணும் நாள்! உலகம் மகிழும் நாள்! மழையென்றும் வெய்யில் என்றும் பாராமல், மனைவி மக்கள் ஆகிய முழுக் குடும்பத்துடனும் மாட்டுடன் போட்டி போட்டுழைத்து, எதிர்பார்த்தும் - எதிர்பாராமலும் வரும் எல்லாவகைக் கேட்டினையும் சமாளித்து, இரத்தத்தை வியர்வையாகப் பிழிந்து, அதுபோதாமல் அட்டைகளுக்கும் பாம்பு-களுக்கும் பச்சை ரத்தம் பரிமாறிய உழவன், நெளியும் நெற்குலைகண்டு நீண்ட நெட்டுயிர்ப்-போடு, ஆனந்தப் பரவசனாய் அடையும் அமைதிக்கு எதனைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்லமுடியும்?
இரட்டைப் பிள்ளைகளைச் சுமந்து வருந்திய தாய், பின் ஈன்றபோது, அவற்றின் இன்முகம் கண்டு மகிழும் மகிழ்ச்சியைக்கூட, உழவனின் மகிழ்ச்சிக்கு ஒப்பாகச் சொல்லமுடியாது. ஆம்! தாய்மை உணர்ச்சியில் ஒரு தனிப்பெரும் இன்பம் உண்டென்றால், அந்தத் தாய்மை உணர்ச்சி என்பது, உழவனின் தாய்மை உணர்ச்சியின் முன்பு ஒரு மிகச் சிறிய பகுதியேயாகும்.
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே அல்லவா? வரப்புயர்ந்தால்தான் மற்றவை உயர முடியு-மல்லவா? எங்கு சுற்றியும் உழவனின் காலடியை நோக்கித்தானே இவ்வுலகம் கிடக்கின்றது? அதனால்தான் உழவனின் உள்ளப்பூரிப்பைத் தன் பூரிப்பாக, உழவனின் புது வருவாயைத் தன் புது வருவாயாக, அவன் அகத்தின் புத்துணர்ச்சியைத் தன் புத்துணர்ச்சியாக, புறமும் அகமும் புதுமை பொலிந்து நாடு கொண்டாடிடப், பொங்கல் புதுநாள் தோன்றியிருக்கிறது - தோன்றியிருக்க வேண்டும்.
உழவனின் பாட்டுக்கு ஒரு பெரும் துணையாய் நின்று உழைக்கும், அவனின் ஒப்பற்ற செல்வமாகிய ஆவினத்தை அவன் எப்படி மறந்துவிட முடியும்? சாரத்தைக் கொடுத்துவிட்டுச் சக்கையை உண்டு வாழும் உன் உழைப்பல்லவா, உன்னுடைய ஒத்துழைப்-பல்லவா என்னை இன்று உலகம் கொண்டாடுகிறது! உன்னை நான் மறந்தால் உய்வேனா? உனது பாட்டால் அல்லவா நான் பெருமையடைகிறேன்! ஆகவே, நான் உன்னைப் போற்றுகிறேன், உன் நன்றியை ஒருநாளும் மறவேன் என்கிறான் உழவன் ஆவினத்தை நோக்கி. அவனுக்குப் பின்பாட்டுப் பாடுகிறது உலகம் மாட்டுப்பொங்கல் வைத்து. ஏன் அவன் வழிதானே உலகம் செல்லமுடியும்?
உழைப்போன் உறுபயன் காணும் நாள்! உலகம் மறுமலர்ச்சியடையும் நாள்! உழைப்புக்கு நன்றி செலுத்தும் பொங்கல்நாள்! சரி, இன்று உழவனின் நிலை என்ன? உழவு வேலையைச் செய்பவன், மன்னனுக்கு மன்னன் என்ற நிலைவேண்டாம். மனிதனாகவாவது மதிக்கப்-படுகிறானா? மிருகத்தினிடத்துக் காட்டும் ஒரு பரிவு விசுவாசம் - இரக்கவுணர்ச்சியைக்கூட அவனிடம் காட்டுவதற்குத் தயங்குகிறது இன்றைய உலகம். உழவுத் தொழில் செய்வோர் சண்டாளர்கள் என்று உறிஞ்சிப் பிழைக்கும் பார்ப்பனர்கள் எழுதிவைத்துக் கொண்டிருப்பது போல. இன்று எவரும் எழுதும்படியான அநாகரிகக் காட்டுமிராண்டி நிலையில் இல்லாவிட்டாலும், அதற்கு மாறாக, உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று முழங்கும்படியான நாகரிக நிலையில் இருக்கின்றார்கள் என்றாலும், உழவன் தன்னைத்தானே சண்டாள நிலையில் வைத்துக்கொள்ளும்படியாக, அதாவது அறிவுத் துறையை அணுகும் வாய்ப்பில்லாதவனாய், அனுபவிக்கும் பண்பாடு அணுவளவும் அற்றவனாய், குறுகிய அளவுக்குள் குட்டையான உலகத்தில் கிடந்து உழல்பவனாய் இருந்து வருகிறான். அவன் அப்படி இருந்து வரவேண்டியதை என்றைக்குமே சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறது. அதாவது, அறிவோ பொருளோ அவனை நெருங்க விடாதபடி, நெருங்கினாலும் பறிமுதல்செய்து விடும்படியாய் இருந்து வந்திருக்கிறது. அவனைச் சுற்றிச் சூறையாடும் சமுகம். இருந்தும் நயவஞ்சக நரிக்குணம் படைத்த சமுதாயம், பொங்கல் விழாவிலே பங்கு கொள்ளத்தான் செய்கிறது!
உழவை, உழவுத் தொழில் செய்பவனைப் போற்றும் இந்த நாள் உண்மையில் பாவனையாக, சடங்காக, பரம்பரைப் பழக்கமாகக் கொண்டாடப்பட்டு வருகிறதே தவிர, மேலும் இந்தச் செய்நன்றி நாளுக்கு மிகமிக ஆபாசமான கதைகள் வேறு பின் நாட்களில் கற்பிக்கப்பட்டு இருக்கிறதே தவிர வேறு என்ன?
இன்று யார் யார் உழவுத்தொழிலைச் செய்கின்றார்களோ, சேற்றிலும் பனியிலும் கிடந்து சீரழிகின்றார்களோ அவர்களுக்கு நிலத்திலே உரிமையில்லை. ஒரு சிலருக்கு, ஏதோ ஒரு அளவுக்கு உண்டு என்றாலும் அது இறங்குமுகமாக, நாளுக்குநாள் கரைந்து-கொண்டுதான் வருகிறது. ஏன் இந்த நிலை? என்றைக்குமே இவர்களுக்கு நிலத்தில் உரிமையிருந்ததில்லையா? இல்லை என்று எவராவது கூற முன்வரமுடியுமா? காடு திருத்தி வயலாக்கிக் கழனியாகக் கண்டவன் _- அவன் பரம்பரை _ பின் சந்ததிக்கு எதனால் அந்தக் கழனியில் உரிமை இல்லாது போயிற்று? வயல் வரப்பையே மிதித்தறியாத, வாடாத மேனியருக்கு அந்தவுரிமை எப்படி வந்தது? ஏமாந்த காலத்தில் சிலர் ஏற்றங்கொண்டுவிட்டார்கள் என்றால், எப்படிச் சிலர் ஏமாற்றினார்கள், பலர் ஏமாந்தார்கள்? உரிமையற்ற உழவனுக்கு உழைப்பால் விளைந்த பெரும்பயன் எப்படி உவகையை உண்டாக்கும்? - உள்ளம் பூரிப்பால் பொங்கும்? எண்ணிப்பார்க்கும் இயல்பையு-டையவன் என்றால் எரிமலையை யல்லவா அவன் உள்ளம் தோற்கடிக்கும் - தோற்கடிக்க வேண்டும்! உழைத்தேன்! உறுபயன் கண்டேன்!! என்று அவன் உள்ளம் ஆனந்தப்பள்ளு பாட முடியுமா இந்தப் பொங்கல் நாளில்?
இன்று உழவனின் நிலை என்னவோ, அதுதான் இந்நாட்டுப் பெரும்பாலோரின் நிலை! உழவன் எதனால் எப்போது எப்படி ஏமாற்றப்பட்டானோ, அப்படித்தான் மற்றப் பெரும்பாலோரும் ஏமாற்றப்பட்டனர்! உழவன் நிலை - உழைப்போன் நிலை என்றைக்கு உயர்வு அடையுமோ, அன்றுதான் மற்றையோரின் நிலையும் வளம்பெற முடியும்! உழவனும், அவன் நிலையிலுள்ள மற்றையோரும் இப்பொங்கல் நாளில் இதற்கு மாற்றம் காண, பொங்கல் நாள் பயன்படட்டும்.
இப்பொங்கல் இதழுக்கென, நம் குறைந்த கால வேண்டுகோளை ஏற்றுப் பேரன்போடு பெரியாரவர்களும் மற்றும் பல அறிஞர்களும் பல சிறந்த தேவையான கருத்துகளைத் தந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு நம் நன்றி!
பெரியார் -”குடிஅரசு”, தலையங்கம் : 15.01.1949
தமிழர்க் கொரு திருநாள்
தமிழர்க் கொரு திருநாள் - அது தைத்திங்கள் முதல் நாள்
சமயத்துறை அறவே - உயர்
தமிழ் வாழ்த்தும் பெருநாள்.
நமை ஒப்பார் யாவர்? - நம்
தமிழ் ஒப்பது யாது?
கமழ் பொங்கல் நன்னாள் - புதுக்
கதிர் கண்ட பொன்னாள்!
ஏரோட்டும் இரு தோள் - ஒரு
சீர் போற்றும் திருநாள்!
ஆரோடும் உண்ணும் - நெல்
அறுவடை செய் பெருநாள்!
போராடும் கூர் வாள் - பகை
போக்குவ தோர் பெருநாள்!
ஊரோடும் உறவோ - டும்
உள மகிழும் திருநாள்.
மாடுகளும் கன்று - களும்
வாழியவே என்று
பாடுகின்ற நன்னாள் - கொண்
டாடுகின்ற பொன்னாள்!
வீடுதெரு வெங்கும் - எழிற்
சோடனை விளங்கும்
நீடுதமிழ் நாடு - புகழ்
நீட்டுகின்ற திருநாள்!
---------புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
Post a Comment