Search This Blog

17.1.12

தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி-கி.வீரமணி


தமிழர்களை தோள்மீது தூக்கி வைத்துக் காட்டுவதுதான் எங்கள் பணி பொங்கல் முதல் நாள் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி என்று தமிழர் தலைவர் தமிழர்களை தோள்மீது தூக்கி காட்டுவதுதான் எங்கள் பணி அவர்கள் கூறினார்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சென்னை பெரியார் திடலில் 15-1-2012 அன்று மதியம் 3 மணி முதல் கோலாகலத்துடன் தொடங்கியது. பெரியார் திடலே இந்நிகழ்ச்சிகளால் விழாக் கோலம் பூண்டது.

தமிழர்கள் குடும்பம் குடும்பமாக புத்தாடை அணிந்து சென்னை பெரியார் திடலுக்குள் குவிந்தனர்.

நாட்டுப்புறக் கலை விழாக்கள் மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மிகச் சிறப்பாக தொடங்கி நடைபெற்றது.

புத்தக வெளியீடு

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா ? என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைவர்தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அடங்கிய மிகச் சிறப்பான புத்தகம் அனைத்து மக்களுடைய கரவொலிக்கிடையே வெளியிடப்பட்டது.

திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமிதுரை வெளியிட, கோ.ஒளிவண்ணன், முன்னாள் சட்டப்பேரவை செயலாளர் மா.செல்வராஜ், முனைவர் ந.க.மங்களமுருகேசன், நெய்வேலி வெ.ஞானசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.


அடுத்து டி.கே.எஸ். கலைவாணன் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. டி.கே.எஸ். கலைவாணன் குழுவினருக்கு தமிழர் தலைவர் ஆடை போர்த்தி பாராட்டினார். டி.கே.சண்முகம், டி.கே.சங்கரன், டி.கே.பகவதி, டி.கே.முத்துசாமி இவர்கள் எல்லாம் தந்தை பெரியார் அவர்களுக்குப் பழக்கமானவர்கள். தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பற்று கொண்டவர்கள்.

டி.கே.சண்முகம் துணைவியார் காசநோயால் இறக்கும் தறுவாயில் இருந்த நிலையில், யாரும் வீடு கொடுக்க மறுத்த நிலையில், ஈரோட்டில் தந்தை பெரியார் வீடு கொடுத்து உதவியதை நினைவு கூர்ந்து பாராட்டினார் தமிழர் தலைவர். அடுத்து பெரியார் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சரண்யா பொன்வண்ணன், திரைப்பட இயக்குநர் பொன்வண்ணன், இயக்குநர் சற்குணம், ஓவியர் அரசு, மா.ஆன்ரோ பீட்டர், எழுத்தாளர் பாஸ்கர் சக்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆடை அணிவித்து பெரியார் புத்தகத்தை வழங்கி, பெரியார் விருதினை சிறப்பாக வழங்கினார்.

சரண்யா பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன் ஏற்புரையில் குறிப்பிட்ட தாவது: இந்த விருது பெற்றதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எத்தனையோ விருதுகளை வாங்கி இருக்கிறோம். இந்த விருது வித்தியாசமான விருதாக நினைத்து மகிழ்கிறேன். நமது குடும்பத்தில் உள்ளவர்கள், உற்றார் உறவினர்கள் கூடி விருது வழங்கினால் எப்படி எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ அது போன்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றோம் என்றார்.

இயக்குநர் பொன்.வண்ணன்

திரைப்பட இயக்குநர் பொன்வண்ணன் தமது ஏற்புரையில் , கணவன் மனைவியாக இருந்து பெரியார் விருது பெறுபவர்கள் நாங்களாகத்தான் இருப்போம் என்று கருதுகின்றேன். பலர் பல நேரங்களில் விருது கொடுக்கிறார்கள். அது ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது.

ஆனால் பெரியார் திடலில் நாங்கள் பெற்ற விருதை மனநிறைவோடு பெற்றோம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பெரியார் விருது எங்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. கடவுள் இல்லை என்று துணிச்சலுடன் சொல்லி கடவுள் பயத்தை பெரியார் போக்கினார். பெரியார் ஒரு பெரிய மனிதாபிமானி. பெரிய பொருளாதார நிபுணர். மன்மோகன்சிங், ப.சிதம்பரம் எல்லாம் பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அவர்கள் பொருளாதார நிபுணர்கள் இல்லை. பெரியார்தான் பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர். எறும்பு எப்படி ஒரு பொருளை இன்னொரு இடத்திற்குக் கடத்துகிறதோ, அது போல பெரியாரின் பன்முகத்தன்மையை திரைப்படத் துறையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடத்துவோம் என்றார்.

இயக்குநர் சற்குணம்

இயக்குநர் சற்குணம் தமது ஏற்புரையில் கூறியதாவது:
தந்தை பெரியார் என்பவர் ஒருவர் இல்லாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்த இடத்தில் நின்றிருக்க மாட்டோம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் பெரியார் விருது வாங்கியதில் உடம்பு சிலிர்க்கிறது என்றார்.

ஓவியர் அரசு

ஓவியர் அரசு தனது உரையில் கூறியதாவது:

பெரியார் படத்தை வரைய வரைய எனது உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இங்கு விருது வாங்கியது எனது சொந்த பந்தங்களிடமிருந்து விருது வாங்கியதாக பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என்றார்.

மா. ஆன்ட்ரோ பீட்டர் தனது ஏற்புரையில், நான் முழுக்க முழுக்க ஒரு கணினி பயிற்சியை சொல்லிக் கொடுக்கிறவன். சி.எஸ்.சி.கம்ப்யூட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நோபல் பரிசு பெற்ற ஒருவர் 390 ஆண்டு பழமையான வெளிநாட்டில் உள்ள கட்டடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்குதான் முதல் முறையாக பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்ட இடம். அங்கு சென்று அந்த இடத்தைக் காட்டினார். அந்த இடத்தில் பார்த்தாலும், அங்கேயும் பெரியார் படம் இருந்ததைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் அறிவைக் கொடுப்பது போல கம்ப்யூட்டர் அறிவை எல்லோரிடத்திலும் கொண்டு வரவேண்டும். 8 ஆம் வகுப்பிலிருந்தே கணினி அறிவைக் கொண்டு வரவேண்டும் என்றார்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பேசியதாவது:
என்னுடைய எழுத்துக்களில் தந்தை பெரியார் இடது சாரிக் கருத்துகள் எப்பொழுதும் இருக்கும். எந்த இடத்தில் இருந்து நாத்திகக் கருத்துகள் பரவிக் கொண்டிருக்கின்றனவோ அந்த இடத்திலிருந்து அந்த மூலஸ்தானத்திலிருந்து பெரியார் விருதை தமிழர் தலைவர் கரங்களால் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

தமிழர் தலைவர் உரை

நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரை வருமாறு:
தை முதல்நாள்தான் தமிழர்களுக்குப் புத்தாண்டு என்ற வகையில் இன்றைக்கு பொங்கல் திருநாளையும் நாம் சேர்த்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இங்கே கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியவர்கள் மற்றும் பாராட்டைப் பெற்றவர்கள் எல்லாம் எங்கள் தமிழர்கள்.

எங்கள் தமிழர்கள் ஆற்றலில், தகுதியில் , திறமையில் எந்த வகையிலும் இளைத்தவர்கள் இல்லை என்று காட்டியிருக்கின்றார்கள். இன்றைக்கு மேடையில் ஒரே ஒரு பெண்மணி மட்டும்தான் உட்கார்ந்திருக்கின்றார். அடுத்த ஆண்டு இந்த பக்கம் பாதி பேர் பெண்கள். அந்தப் பக்கம் பாதி பேர் ஆண்கள் என இருக்க வேண்டும்.

அத்துணை பேரும் உள்ளத்தை திறந்தார்கள்

இங்கே பேசிய அத்துணை பேரும் பேசவில்லை. அவர்களுடைய உள்ளத்தைத் திறந்து காட்டியிருக்கி றார்கள். அவர்களுடைய கருத்து கோடிக்கணக்கான மக்களுடைய உள்ளங்களையெல்லாம் திறக்கும்.

இங்கு பாராட்டப் பெற்றவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கி முத்திரை பதித்தவர்கள். அந்தந்தத் துறையில் ஒளி வீசக்கூடியவர்கள். கதிரொளி வீச்சுக்க்களாகத் திகழக் கூடியவர்கள்.

இங்கே எங்கள் குடும்பத்தினர் பாராட்டுகின்றவர் என்று நடிகை சரண்யா சொன்னார். இது பெரியாரின் குடும்பம். உலகளாவிய குடும்பம். இங்கே ஜாதி, மதம் என்பது முக்கியமல்ல. கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று சரண்யா சொன்னார். மதம் முக்கியமல்ல. மனித நேயம்தான் முக்கியம். பொன்வண்ணன் அவர்கள் கடவுள் இல்லை என்பதும் அது பயத்தினால் தோன்றிது என்பதையும் சொன்னார். கடவுளே மனிதனுடைய கற்பனையில் தோன்றியதுதான்.

கிராமத்திலிருந்து வந்தவர்கள்

நீங்கள் இருக்கின்ற துறையில் சிறப்பாக வளருங்கள். இங்கே மேடையிலே அமர்ந்திருக்கின்றவர்கள் எல்லாம் கிராமத்திலிருந்து வந்தவர்கள். வாய்ப்பு கொடுத்தால் அவரவர்களுடைய திறமை வெளிப்படும் என்பதற்கு இவர்கள் எல்லாம் உதாரணமாகத் திகழக் கூடியவர்கள். ஆற்றல் என்பது ஏகபோக உரிமை இல்லை. நாங்கள் 50 கூட்டத்தில் பேசுகின்ற கருத்துக்களை ஒரு கருத்து தாக்கத்தின் மூலம் நீங்கள் திரைப்படத்தின் வாயிலாகத் தெரிவிக்கின்றீர்கள்.

அழகர்சாமியின் குதிரை

நமது சுப.வீரபாண்டியன் அவர்கள் தொலைக் காட்சியில் பேசுவதைப் பார்த்தேன். அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படத்தைப் பற்றி விளக்கி இது ஜாதி மறுப்பை விளக்குகின்ற படம். சமுதாயத்திற்குத் தேவையான நல்ல பல கருத்துக்களை சொல்லக் கூடிய படம் என்றார். நான் உடனே சுப.வீ. அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் சொன்ன அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

அதற்கு அவர் சொன்னார். அய்யா. நானே அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை என்று சொன்னார். சிங்கப்பூருக்கு நானும் சுப.வீ. அவர்களும் சமீபத்தில் சென்றிருந்தோம். அங்கே அந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சொன்னவுடன் நண்பர்கள் சி.டி.யை வாங்கிக் கொண்டு வந்து விட்டார்கள்.

எனது மகள் வீட்டில் நான் எனது வாழ்விணையர், சுப.வீரபாண்டியன் எல்லோரும் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்க்க ஆவலுடன் உட்கார்ந்திருந்தோம். என் மகள் வீட்டில் இருந்த டி.வி.டெக் வேலை செய்யவில்லை. இதுவரை அந்தப் படத்தைப் பார்க்க வாய்ப்பு கிட்டவே இல்லை.

உங்களை தோள்மீது தூக்கி ஆடுவோம்

உங்களை எல்லாம் எங்கள் தோள் மீது தூக்கி ஆடவேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாங்கள். கணினி அறிவு என்பது முக்கியம். 21 ஆம் நூற்றாண்டில் யாருக்கு கணினி அறிவு இல்லையோ அவர்கள்தான் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று பொருள்.

ஓவியர் அரசு தன் உள்ளத்தை வரைந்தார். ஒரு முறை ஓவியர் மாநாட்டிற்கு என்னை அழைத்தார்கள். அந்த மாநாட்டில் பேசும்பொழுது சொன்னேன். நீங்கள்தான் உங்கள் தூரிகையால் கடவுளை உருவாக்கினீர்கள். கடவுளுக்கு தலை, கைகளை உங்களுக்குத் தோன்றிய வகையில் எல்லாம் வைத்தீர்க்ள். பல கைகள், பல தலைகளை வைத்தீர்க்ள். கால் மட்டும் ஏன் வைக்கவில்லை என்றால் சரியாக பேலன்ஸ் கிடைக்காது என்பதால், இரண்டு கால்களுக்கு மேல் வைக்கவில்லை., சிற்பிகளும் ஓவியர்களும்தான் கடவுளை உருவாக்கியவர்கள்.

உங்களுடைய திறமை, ஆற்றல் எல்லாம் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும். நீங்கள் நல்ல வளத்துடன் வாழவேண்டும்; வளரவேண்டும்.
-இவ்வாறு பேசினார் தமிழர் தலைவர்.

------------------"விடுதலை” 17-1-2012

0 comments: