எங்கள் அய்யா எனக்குச் சொல்லி இருக்கின்றார். இன்றைக்கு 96 வருசங்களுக்கு முன்பு தாது நெல் ஒரு ரூபாய்க்குப் பட்டணம் படியால் அரிசி 8 படி விற்றதாம். அன்றைக்கு அரிசி வாங்கப் பணம் இல்லாமல் மக்கள் பொத்து பொத்தென்று விழுந்து செத்தார்களாம். பிணங்களை எல்லாம் முனிசிபாலிட்டி வண்டியில் அள்ளிப் போட்டுக்கொண்டு போனார்களாம். அதுதான் தாது வருசத்துப் பஞ்சம் என்பது. அப்போது விளைந்த தானியம் விலை போகாமல் குழியில் போட்டு அது கெட்டு எருவாகுமாம். இன்று ஜனப்பெருக்கம் காரணமாக விளைவு போதாமல், 1 படி, ஒன்றரை படி 2 ரூபாய் வீதம் மக்கள் பணம் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கின்றார்கள். ஆனால், அரிசிதானே போதிய அளவுக்கு இல்லை.
அன்றைக்கு விளைந்த நிலத்தின் அளவை விட இன்றைக்கு 3 மடங்கு, 4 மடங்கு நிலம் விளைகின்றது. என்றாலும், உணவு தானியம் போதவில்லையே, ஏன்?
இப்படி அதிகப்படியான நிலம் விளைந்தாலும், மக்கள்தொகை அதைவிட அதிகமான அளவுக்கு அல்லவா வளர்ந்து வருகின்றது.
மக்கள் ஒரு பாவமும் பண்ண வில்லை. கண்ணை மூடிக்கொண்டு முட்டாள்தனமாகப் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளிக் கொண்டே இருப்பதினால்தான் துன்பத்தை - கவலையினை அனுபவிக்கின்றனர்.
இப்படியே போனால், நாடு என்ன ஆவது? இப்பவே 10 வருசத்துக்கு ஒரு தடவை எடுக்கப்படும் ஜன கணிதப்படி, 25 சதவிகிதம் மக்கள் அதிகரிக்கின்றார்கள்.
இனி வரப்போகின்ற காலத்தில் இன்னும் அதிகரிக்குமே! 25 சதவிகிதம் என்பது 50 ஆக ஆனாலும், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லையே.
வரப்போகின்ற 50 வருச காலத்தில் மனிதன் ஒவ்வொருவனும் சாதாரணமாக சராசரி 100 வயதாவது இருந்துதான் சாவான்.
என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் 93 வயது ஆகியும் இன்னும் இருக்கின்றேனே. என்னுடைய சினேகிதர்கள் எல்லாம் 80, 40 வருசங்களுக்கு முன்னதாகவே செத்துவிட்டார் களே.
எனக்கு இருக்கக் கூடிய நோய்கள் அநேகம். அவைகளுக்கெல்லாம் பரிகாரம் - வைத்திய வசதிகள் ஏற்பட்டதன் காரணமாக இன்னும் உயிர் வாழ்கின்றேன். எனவே, மனிதன் லேசிலே சாகமாட்டான்.
இதற்கெல்லாம் பரிகாரமாகத்தான் பிறப்பு விகிதத்தைக் குறைக்கவேண்டும் என்று நான் 35, 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இன்றைக்கு அரசாங்கமும் இதற்காக ஏராளமான பணத்தைச் செலவு செய்து காரியம் ஆற்றி வருகின்றது.
*****
தோழர்களே, கி.பி. 1-ஆம் வருசத்தில் அதாவது 2000 வருசத்துக்கு முன்பு உலகின் ஜனத்தொகையே 20 கோடிதான்.
அதற்கு முன்பு உலகம் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் இருந்து இருக்கும்? அதற்கு முன்பு 20 கோடிக்கும் குறைவாகத்தான் மக்கள் இருந்து இருக்கக்கூடும். அப்போது மக்களின் வயது சராசரி 5 கூட இருந்து இருக்க முடியாது? கி.பி. ஒன்றாம் வருசத்தின் உலக ஜனத்தொகை 20 கோடி. கி.பி. 1460-இல் உலக ஜனத்தொகை 47 கோடி தான். 1500 வருடங்களில் கிட்டத்தட்ட இரண்டரைப் பங்குதான் வளர்ந்தது. அப்போது சராசரி வயது 10 கூட இருந்திருக்காது. கி.பி. 1800-இல் அது 70 கோடியாக வளர்ந்து 1914-இல் 165 கோடியாகியது. 1064-இல் 350 கோடியாகியது. இன்று சுமார் 400 கோடியாக வளர்ந்து உள்ளது.
இதேபோல் போனதால் இன்னும் 50 வருசத்தில் உலக ஜனத்தொகை 100 கோடிக்குமேல் உயர்வதிலும் அதிசயப்பட ஒன்றும் இல்லை. நாமும் 100 கோடி ஆகிவிடுவோம்.
மக்களுக்கு அந்த அளவுக்கு உணவு, உடை, வீட்டு வசதி முதலியனவும் பெருகவேண்டுமே! எங்கே போவது? வேலைக்கு எங்கே போவது?
எனவே, மனிதன் ஒருவனை ஒருவன் அடித்துச் சாப்பிடும்பிடியான நிலைமை வரக்கூடும்.
இப்படி மக்கள் பெருக்கம் ஏற்படுவதினால் சமுதாயத்திற்குத்தான் என்ன பயன்? சமுதாயத்தில் ஒழுக்கம், நாணயம் நிலைக்கப்பெற வேண்டுமானால், மனக் கவலை கஷ்டங்கள் குறைக்கப்பட வேண்டுமானால், மக்கள் பெருக்கம் கட்டுப்படுத்துவது மூலம்தான் முடியும்.
இந்த அரசாங்கம் மட்டும் இன்னும் 15 ஆண்டுகளாவது நிலைத்து இருக்கும்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிரிகள் பொறாமைக் காரர்கள் மத்தியில் பல நல்ல காரியங்கள் ஆற்றி வருகின்றது. சட்டத்தின் மூலமே நிறுத்திவிடக்கூட முடியும்.
இன்றைக்கு இரண்டு பிள்ளையே போதும் என்று கூறுகின்றார்கள். நாளைக்கு இரண்டு பிள்ளைகளுக்கு மேலே பெற்றவர்கள் வேலையில் இருந்தால் பிரமோசன் இல்லை என்று ஆக்கிவிட வேண்டும்.
திருட்டை விடப் பெரிய குற்றமாக, அதிகப்படி பிள்ளை பெறுவதைக் கொள்ள வேண்டும். வருங்காலத்தில் திருமணத்தைக்கூட ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
24, 25 வயதுக்குக் குறைந்த பெண்கள், ஆண்களுக்குத் திருமணம் நடத்துவதைத் தடை செய்யவேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஒவ்வொரு தம்பதிகளும் பெறக்கூடிய 2, 3 பிள்ளைப் பிறப்பையாவது தவிர்க்க முடியும்.
இன்றைக்கு அரசாங்கம் என்னமோ பெண்கள் 18 வயதுக்கு முன் திருமணம் செய்துகொள்வது கூடாது என்று சட்டம் கொண்டுவரப் போகின்றதாம். அதுவும்கூடப் போதாது. குறைந்தது 20 வயதாவது ஆக்கவேண்டும். இன்றைக்கு 13, 14 வயதில்கூட பெண்களுக்குத் திருமணம் செய்து விடுவதால், அதிகப்படியாக பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு சீரழிகிறார்கள்.
``கொச கொச என்று பிள்ளையைப் பெற்றுக்கொண்டு அதிலேயே மனிதன் உழலுகின் றானே ஒழிய, மனிதன் வளர்ச்சியைப் பற்றிச் சிந்திக்க வழி இல்லாமல் போகின்றதே! மனிதனாகப் பிறந்தவன் உலக நன்மைக்கு ஏதும் செய்ய முடியாதவனாக அல்லவா ஆகிவிடுகின்றான்.
பெண்டாட்டி, பிள்ளை குட்டி, குடும்பம் இத்தோடு அல்லவா நின்று விடுகின்றான். இதனால் உலக நன்மைக்கு - வளர்ச்சிக்குப் பயனற்றவனாக ஆகிவிடுகின்றான்.
அதிகப்படியாகப் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்வதினாலேயே பெண்கள் ஒரு காசுக்கும் உபயோகமற்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள். அவர்களுக்குப் போட்ட குட்டிகளைக் காப்பாற்று வதும், புருசனுக்குப் பணிவிடை செய்யவுமே காலம் எல்லாம் சரியாகி விடுகின்றது.
இதன் காரணமாக 54 கோடி மக்களில் 27 கோடியாக உள்ள பெண்கள் நாட்டுக்கோ, உலகத்துக்கோ பயன்பட முடியாதவர்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
ஆதலால் இனி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பிள்ளைப் பெறுவதில் வெட்கப்பட வேண்டும். கடவுள் செயல் என்று சொல்லி முட்டாளாக, மானமற்றவனாக ஆகாமல், டாக்டரிடம் சென்று பிள்ளை பெறாமல் இருக்கும் சிகிச்சை செய்துகொண்டால், கையில் (ஏழைகள்) 30 ரூபாயும் பெற்றுக் கவலையற்ற வாழ்வு வாழ ஆசைப்படுகிறேன் என்று கேட்டுக் கொண்டார்.
------------------------24.11.1971 அன்று சேலத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு `விடுதலை, 29.12.1971.
0 comments:
Post a Comment