Search This Blog

18.1.12

கிறிஸ்தவரா வைகோ?


இந்தக் கேள்வியைப் படித்ததும் இன்னும் ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்து விடுவார்கள். வைகோ அவர்கள் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய முன் வரா விட்டாலும் தான் ஒரு பகுத்தறிவுவாதி என்று பல இடங்களில் கூறி வருபவர் தான். அவரைப்போய் கிறிஸ்தவரா என்று கேட்கலாமா என்று கேட்பது நியாயமான ஒன்றே.

13.1.2012 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். வார ஏடான விஜயபாரதம் 20,21ஆம் பக்கத்தைப் புரட்டுங்கள்.

சபரிமலை யாத்திரையை சீர்குலைக்க கிறிஸ்தவர்கள் சதி என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அய்யப்பப் பக்தர்களில் 50 சதவிகிதத்தினர் குமுளி வழியாக சபரி மலைக்குச் செல்கிறார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக குமுளி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளாவிலும், இப்போதுள்ள அணையே நீடிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த இரண்டு போராட்டத்திற்கும் பின்னணியில் இருப் பது கிறிஸ்தவர்கள் தான்.

தமிழ்நாட்டில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் வைகோ போன்றவர்கள் ஏறத்தாழ கிறிஸ்தவர்கள் தான். அய்யப்பனைத் தரிசிக்கச் சென்றால் உயிரோடு திரும்பி வர முடியாது என்ற அளவுக்குப் பீதி கிளப்பப்பட்டுள் ளது. இதனால் பல பக் தர்கள் தங்கள் இருப் பிடத்திற்குப் பக்கத்திலேயே உள்ள அய்யப்ப சுவாமி கோவில்களில் விரதத்தை நிறைவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ். விஜய பாரதம் மூக்கால் அழுகிறது.

இதன் நோக்கம் சபரிமலை சென்று அய்யப்பப் பக்தர்கள் வணங்க வேண் டும். அய்யப்பன் கோவிலுக்குள்ள மவுசு, விளம்பரம் எந்த வகையிலும் மங்கிப் போய் விடக் கூடாது.

அய்யப்பன் கோவில், திருப்பதி கோவில், குருவாயூரப்பன் கோவில் என்று கோவில்கள்தான் பரவலாக அறியப்பட்டுள் ளன.

அதற்கு வில்லங்கம் வந்துவிட்டால் பக்தியின் மகிமை படுத்து விடும் - இந்துத்துவாவிற்கு ஹானி ஏற்பட்டுவிடும் என்பதால்தான் இப்படிப் படபடக்கிறார்கள்.
உள்ளூர் கோவிலுக்குச் சக்தியில்லை என்பதையும் மறைமுகமாக ஒப்புக் கொண்டு விட்டனர்.

வைகோ போன்றவர்கள் இதுபோன்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பது இல்லையென்றாலும் அவாள் பார்வையில் எப்படிப் பார்க்கப்படுகிறார் என்பதுதான் முக்கியம்.

என்னதான் அரசியல் கட்சி என்றாலும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்களுக்குப் பகுத்தறிவுப் பிரச்சாரம் மிகவும் தேவைப் பட்ட ஒன்று என்பதைப் புரிந்துகொண்டால் சரி!

------------------- மயிலாடன் அவர்கள் 18-1-2012 ”விடுதலை”யில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தீமை எடுத்துக்கொண்டு ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று நாட்டிய மணி ஸ்ரீநிதி நினைப்பதில்லையாம்.

ஆனால், இவ்வாண்டு ஒரு தீமை (Theme) எடுத்துக்கொண்டு இருக்கிறாராம். அதுதான் அயோத்திப் பிரச்சினை.

நீ பொறுமையின் பிறப்பிடம். ஆனால், நீ பிறந்த இடம் இன்று பிரச்சினைக்குரியதாகி விட்டதே என்ற பாடலுக்குத் தயாராகி விட்டாராம் ஸ்ரீநிதி.

என்ன இருந்தாலும் அவாளின் பண்பாட்டைத் தூக்கி நிறுத்துவதில் அவாள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா!

இராம பக்தி என்னும் தளத்தையும் கடந்து சங் பரிவார் தடத்திற்குத் திடீரென்று பாய்ந்து விடுகிறார்கள். நம் தமிழிசை கலைஞர்கள் இதனைக் கொஞ்சம் மனதில் போட்டு ஊற வைத்து கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு இந்திரஜித்தின் வீரத்தை, இரணியனின் போர்க் குணத்தை வெளிப்படுத்தக் கூடாதா?

அய்யப்பப் பக்தர்களுக்குத் தரமான பிரசாதம் - தேவஸ்வம் போர்டு உத்தரவாதம் தரவேண்டும். அரசு கண்காணிக்கவேண்டும்.

இதன் பொருள் என்ன? பக்தர்களின் பணத்தை மட்டும் பறித்துக் கொள்ளலாம். உண்டியல் வைத்துப் பணத்தை உறிஞ்சலாம். ஆனால், அவர்களுக்குக் கொடுக்கும் பிரசாதம் மட்டும் தரத்தில் இல்லையென்றால், நியாயமா? டின்களில் அடைத்துக் காசுக்கு விற்கப்படும் பிரசாதம் தரக் குறைவாம். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு 28 ஆயிரம் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பக்தர்களின் உயிரோடு விளையாடுகிறார்களே - யாரிடம் சொல்லுவது?
அய்யப்பனிடமா? அதுதான் கல்லாயிற்றே!

40 வயதுக்குமேல்தான் ராஜாஜியின் சிறப்பை உணர்ந்தேன்.
- தமிழருவி மணியன்

முதலமைச்சர் பதவியைவிட நான் ஒரு பிராமணன் என்ற தகுதியை நான் அதிகம் மதிக் கிறேன் என்றவர். காமராசரைக் கறுப்புக் காக்கை என்று சொல்லி அதனைக் கல்லால் அடிக்கவேண்டும் என்று சொன்னவர். குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து, சிரைப்பவன் மகன் சிரைக்க வேண்டும்,வெளுப்பவன் மகன் வெளுக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தவர்.

இந்தச் சிறப்புகளையெல்லாம் தன் 40 வயதுக்குப் பிறகுதான் தெரிந்துகொண்டுள்ளார் போலும்.

இனத்தின் அடையாளங்களை இனம், மொழி, ஆன்மிக உணர்வைத் தமிழர்கள் மறந்துவிடக் கூடாது. - தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதர்

இனம் சரி, மொழி சரி... அது என்ன ஆன்மிகம்?

ஜாதி - அதன் சமாச்சாரங்கள் தவிர பார்ப்பன ஆன்மிகத்தில் என்ன வாழ்கிறது?

தைமுதல் நாள்தானே தமிழ்ப் புத்தாண்டு. இதில்தானே தமிழும், தமிழரும் (இன அடையாளம்) இருக்கிறது.

தினமணி வைத்தியநாதய்யர் உள்பட வலியுறுத்தும் சித்திரை முதல் தேதிதான் தமிழ்ப் புத்தாண்டு. அந்த ஆண்டுகளின் பெயர் தமிழில் இருக்கிறதா?

பிரபவ தொடங்கி - அட்சய என்பதில் முடியும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு பெயர் தமிழில் உள்ளதா? இந்த இலட்சணத்தில் இனத்தின், மொழியின் அடையாளம்பற்றி தினமணி ஆசிரியர் சிலாகித்து இருப்பது - எந்த இனத்தின் அடையாளமோ!

இதே தினமணியின் ஆசிரியர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் திரு. அய்ராவதம் மகாதேவன் தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறுதியிட்டுக் கூறியுள்ளாரே -

அவரை விட ஆராய்ச்சி திலகமோ இந்த வைத்தியநாத அய்யர்வாள்?
--------------"விடுதலை”18-1-2012

தமிழ் ஓவியா said...

இனமானப் புயல் சுழன்றடிக்கும்!


தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ஒட்டியும், தமிழர்களின் அறுவடைத் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிறுத்தியும் திராவிடர் கழகத் தோழர்களால் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்ட விழாக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டன.

எந்த ஆண்டையும் விட இவ்வாண்டு கூடுதல் உணர்வுடனும், தார்மீகக் கோபத்துடனும் கருஞ் சட்டைத் தோழர்கள் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு விழா நடத்திட முன்வந்தனர்.

ஆரியப் பண்டிகையான தீபாவளியைப் புறந் தள்ளுவதற்கு இது ஒரு சரியான மாற்று என்பதாகவும் கொள்ளலாம்.

பார்ப்பனப் பண்பாட்டின் படையெடுப்பால் பாதிப்புக்கு உள்ளான இனம் நமது திராவிட இனம். எந்த விலை கொடுத்தேனும் ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க வேண்டும் என்பதிலே சமுதாயப் புரட்சி இயக்கமாம் திராவிடர் கழகம் முன் வரிசையில் தோள் தட்டி நிற்கிறது.

தந்தை பெரியார், திராவிடர் இயக்கம், தமிழ்ப் பேரறிஞர்கள் ஒரு முகமாகத் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தனர்.

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பாக அறிவிக்கவேண்டும் என்பதற்காகவே மலேசிய தலை நகரமான கோலாலம்பூரில் உலகத் தமிழர்களின் மாநாடே கூட நடந்ததுண்டு.

திராவிடர் கழகத்தின் மாநாடுகளிலும், பொதுக் குழுக் கூட்டங்களிலும் இந்த வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புரட்சிக் கவிஞர் விழாவில் கோரிக்கையாக வைக்கப்பட்டதுமுண்டு.

இவ்வளவுக்கும் பிறகு வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், உலகத் தமிழர்களின் உணர்வின் அடிப்படையிலும், தை முதல் தாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றப்பட்டது தமிழ்நாட்டில் (2008).

இப்போது அது ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழர்களின் மத்தியிலே இன உணர்வையும், பண் பாட்டு உணர்வையும் தட்டி எழுப்ப வேண்டிய கடமை யைத்தான் திராவிடர் கழகம் செய்து கொண்டிருக் கிறது.

தலைநகரமாம் சென்னையிலே, திராவிடர் கழகத்தின் தலைமையிடத்திலே, பெரியார் திடலிலே நடைபெற்ற மூன்று நாள் விழாக்கள் தமிழ் மண்ணில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

தமிழர்களால் நடத்தப்படும் ஏடுகள் கூட இதற் குரிய முக்கியத்துவத்தை உணராதது வெட்கப்படத் தக்கதாகும். இந்த மரத்துப் போன நிலைதானே தமிழர்களின் வீழ்ச்சிக்கு முதன்மையான காரணம். ஆனாலும் கருஞ்சட்டைப் பட்டாளத்தின் கடமைப் பயணம் யார் ஆதரித்தாலும், ஆதரிக்காவிட்டாலும் தொடரும், தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பது மட்டும் கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும்.

கோவையிலே தமிழ்ப் புத்தாண்டு அன்று இனிப்பு வழங்கி விழா கொண்டாடுவது காவல் துறையால் தடை செய்யப்பட்டு, கழகத் தோழர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

பொங்கல் நாளில் குடும்பத்தாருடன் பொங்கல் உண்பதைக்கூடத் தவிர்த்து கைதானார்களே - அந்தக் கொள்கை உள்ளத்தைப் பலபட பாராட்டு கிறோம்! பாராட்டுகிறோம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த அய்யனார் குளத்தில் 32 ஆண்டுகளாகப் பொங்கல் விழா திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்த நிலையில் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி பேசும், தமிழர்கள் வாழும் தமிழ் நாட்டில், அவர்களின் அடையாளமான - பண்பாட்டுச் சின்னமான பொங்கல் விழாவை நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்படுகிறது என்றால் நாம் தமிழ் நாட்டில்தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

இதனை எந்த நிலையிலும் அனுமதிக்கப் போவதில்லை. எதிர்ப்புகள் வரும்பொழுதுதானே எம் தோழர்கள் எரிமலைகளாக வெடித்துக் கிளம்புவார் கள் என்பது கழகச் சரித்திரம் ஆகும்.

சீப்பை ஒளித்து வைத்துத் திருமணத்தை நிறுத்தி விட முடியாது. சீறும் சிங்கத்தின் முன் சிறு எலிகள் விளையாட ஆசைப்படக்கூடாது - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இனவுணர்வுப் பிரச்சாரப் புயல் முன்னிலும் சுழன்றடிக்கட்டும்! சுழன்றடிக்கட்டும்!!
---”விடுதலை” 18-1-2012