அய்யப்பப் பக்தர்கள் கேரளாவுக்குச் சென்று சபரி மலையில் அய்யப்பனைத் தரிசிக்க வேண்டுமா? தமிழ்நாட்டிலே அய்யப்பனுக்குக் கோவில் கட்டி இங்கேயே கும்பிடக் கூடாதா என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியதற்கு திருவாளர் சோ ராமசாமி வரிந்து கட்டிக் கொண்டு பதில் சொல்ல முயற்சித்துள்ளார். (துக்ளக் 4.1.2012) அப்படி என்ன பதில் சொல்கிறார்? ஏன் கோவிலைக் கட்டித்தான் அய்யப்பனை வணங்க வேண்டுமா? மனதிலே அய்யப்பனை நினைத்து வணங்கினால் போதாதா? கோவில்களுக்கு இருக்கக் கூடிய புனித தன்மையை, நாம் லட்சியம் செய்யப் போவதில்லை என்று தீர்மானித்து விட்டால் அய்யப்பன் கோவிலும் வேண்டாம், திருப்பதியும் வேண்டாம், திருச்செந்தூரும் வேண்டாம். பஸ் ஸ்டாப் விநாயகர்கூட வேண்டாம். இந்த ஞான நிலையை எத்தனை பேர் அடைந்து விட்டார்கள்? என்று பதில் சொல்லியிருக்கிறார். எப்பொழுதுமே சோவின் வாதம் என்பது தர்க்கத்தின் அடிப்படையில் இருப்பதில்லை. அவராக தன் வசதிக்கு பிரச்சினையை வளைத்துக் கொண்டு போய் அதி புத்திசாலியைபோல பதில் கூறுவார் - கேட்ட கேள்விக்கு நேரிடையாகப் பதில் இருக்காது. தே.மு.தி.க. தலைவர் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லவில்லையே - தம் மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குத்தானே தமிழ்நாட்டிலிருந்து பக்தர்கள் வருகிறார்கள் - என்ற மனப்பான்மை சிறிதுமின்றி அவர்களை அடிப்பது - உதைப்பது என்றால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா? என்ன அடிபட்டாலும், உதை கிடைத்தாலும் அய்யப்பனை நினைத்து மனம் உருகி - அடியையும் உதையையும் சபரிமலை அய்யப்பனுக்கே அர்ப்பணித்துச் செல்ல வேண்டும் என்று கூற வருறாரா திருவாளர் சோ? காவி உடை நாமெடுப்போம்; காக்கும் கடவுள் அவன் எடுப்பான் என்று பாட்டுப் போட்டுப் பாடிக் கொண்டு செல்கிறார்களே - பாட்டில் உள்ள வரிப்படி அந்த அய்யப்பன் காக்க வந்தானா? விஜயகாந்த் என்ன சொல்லுகிறார்? கோவிலுக்குப் போகாதே என்று சொல்லவில்லை - பகுத்தறிவுவாதியைப் போல. மாறாக உதை வாங்கிக் கொண்டு சபரிமலைக் கோவிலுக்குப் போகாதே உள்ளூர் கோவிலுக்குப் போகத்தான் சொல்லுகிறார். அதைத் திசைமாற்றி சாமர்த்தியமாகப் பதில் சொல்லுவதாக நினைத்துக் கொண்டு கிறுக்கு கிறார் சோ. கோவில் புனிதத் தன்மைபற்றி எழுதுகிறார். காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் தேவநாதன் சங்கதி வெளிவந்ததற்குப் பிறகு இப்படி ஒரு புனிதத் தன்மையைப் பேசுவதற்கு அசாத்திய துணிவு தேவைதான்.
சோ சுட்டிக் காட்டியுள்ளாரே - அந்தத் திருப்பதியில்தான் என்ன வாழுகிறது?
திருப்பதியில் புனிதமான சூழ்நிலை காணப்பட வில்லை. அமைதியும், தூய்மையும் காணாமல் போய்விட்டன கிளப் போல பப்போல திருமலை மாற்றப்பட்டு விட்டது. (மாலை முரசு 11.12.2011) என்று சொல்லியிருப்பவர் சாதாரணமானவர் அல்லர். திரிகண்டி சின்ன ராமானுஜ ஜீயர்தான் இப்படி சொல்லியிருக்கிறார்.
பார்ப்பனர்களுக்கு மிகவும் வேண்டிய சர்.சி.பி. ராமசாமி அய்யரே தமிழ்நாட்டுக் கோவில்களின் கேவலமான யோக்கியதையை அரசுக்கு அறிக்கையாகக் கொடுக்கவில்லையா? சபரிமலை அய்யப்பன் கோவில் மட்டும் என்ன வாழ்கிறது? பம்பா நதி மலக்காடாகக் காட்சி அளிக்கிறது என்று ஏடுகள் எடுத்துச் சொன்ன தில்லையா? உத்தரப்பிரதேச கோவில் நகரங்கள் எய்ட்ஸின் புகலிடம் என்று பயோனீர் ஏடு படம் பிடித்ததே! கோவில்கள் விபச்சார விடுதிகள் என்று காந்தியார் சொன்னது ஏன்? காந்தியார் என்ன நாத்திகரா? எது கெட்டாலும் கோவிலுக்கு மட்டும் அழிவு வந்து விடக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் குறியாக இருப்பார்கள்; ஏன் எனில் அதுதானே அவாளின் உயர்ஜாதி ஆதிக்கதிற்கும், சுரண்ட லுக்கும் தேவைப்படும் முக்கிய கேந்திரம்.
ஏமாளித் தமிழன் எப்பொழுது இதைப் புரிந்து கொள்ளப் போகிறானோ!
------------------------"விடுதலை” தலையங்கம் 3-1-2012
0 comments:
Post a Comment