Search This Blog

4.1.12

திருவள்ளுவர் பிறப்பே தமிழரின் தொடராண்டு மற்றும் புத்தாண்டு !

ஆங்கிலேயர்களும், கிறித்தவர் களும் ஏன் தமிழகம், இந்தியா உள்ளிட்ட உலகின் அனைத்து மக்களும் ஏசுநாதர் பிறப்பை மய்யப்படுத்திய கிறித் துவ ஆண்டையே தொடர் ஆண்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இசுலாமியர்களும், இசுலாமிய நாட்டினரும் ஹிஜிரி ஆண்டைத் தொடராண்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் தமிழர்கள் - இந்தியர்கள் - சைவர்கள் - இந்துக்கள் எனப்படுவோர் மட்டும் பிரபவ, விபவ என்னும் வடமொழியி லான 60 ஆண்டுகள் மட்டுமே மொத்தமாகக் கொண்ட சுழலாண்டுத் தத்துவத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு முறை, தொடராண்டுத் தத்துவத்தில் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆண்டு என்று பெயரே தவிர, அனைத்துப் பெயர்களும் வடமொழி என்னும் சமஸ்கிருத சார்பு பட்டதே ஆகும். இந்த ஆண்டுப் பெயர்களும், ஆண்டு முறையும், ஆண்டுகள் உண்டானதற்கான காரணக் கதைகளும் ஆரியர்க்கும், பிராமணர் கட்கும், பார்ப்பனர்கட்கும், இந்துமத நம்பிக்கையாளர்களுக்கும் மட்டுமே ஒத்ததாக, உகந்ததாக இருக்கலாம். இந்த நெறிமுறைகள் தமிழர்க்கு எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கன அல்ல; நம்பத்தக்கன அல்ல.

உலகத்தில் அனைத்து நாட்டினரும், இனத்தினரும் ஆண்டுக்கு எண் முறையில் எண்ணிக்கை தந்திருக்கிறார்களே தவிர, பெயர் வைத்தது இல்லை. பெயர் உள்ள ஆண்டு ஆரியர்க்கு மட்டுமே உரியதான பிரபவ, விபவ என்னும் அறுபதைக் கொண்ட இந்தச் சுழலாண்டே ஆகும்.

ஏன் இந்தக் குழப்பம்?

ஒரு பெயரையோ அல்லது பொருளையோ மய்யப்படுத்தி ஆண்டைக் கணித்தவர்கள், அதற்கு முந்தைய அதற்குப் பிந்தைய என்பதைக் குறிக்க கி.மு. என்றும், கி.பி. என்றும், தி.மு. என் றும், தி.பி. என்றும் அறிமுகப்படுத்தினர். (கிறித்து பிறப்பதற்கு முன்பு, கிறித்து பிறப்பிற்குப் பிறகு - திருவள்ளுவர் பிறப் பதற்கு முன்பு, திருவள்ளுவர் பிறப் பிற்குப் பிறகு) வரலாறு எழுதுபவர்க்கு - வரலாற்றைக் கணிப்பவர்க்கு இந்த முறை எளிமையாகவும், அருமையாகவும் பயன்படுகிறது. அறுபது ஆண்டுகள் கொண்ட சுழலாண்டுத் தத்துவத்தில் வரலாற்றை எந்த ஆதார அடிப்படையில் எழுத முடியும்? கணிக்க முடியும்? குழப்பம் தானே மிஞ்சும்! பிரபவ என்று சொன்னால் எந்தப் பிரபவ? எப்போது வந்த பிரபவ? சுழலாண்டு முறையில் ஆயிரம் பிரபவக்கள் வந்து சென்றுள்ளனவே!

இந்தக் குழப்பத்தைத் தவிர்க்கவும், மக்கட்கு குறிப்பாகத் தமிழர்க்கு நன்னெறியைத் தெரியப்படுத்தவும் தமிழறிஞர்கள் ஒன்று கூடி விவாதித்து, கலந்துரையாடி நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டு முறையை அறிமுகப்படுத்தினர்.

இதன் செயற்பாட்டை முத்தமிழ்க் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் வாய்மொழி வாக்குமூலம் தெரியப்படுத்த - தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வரலாறு

வள்ளுவர் வரலாறு எது? என்று அறிய புலவர்கள் அனைவரும் கூடி னார்கள். கூடிய நகரம் சென்னை. கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி. கூடிய நாள் 1929 மார்ச் 11. தலைமை வகித்தவர் மகாமகோபாத்தியாய. உ.வே. சாமி நாதய்யர், வந்திருந்த புலவர்கள் 530 க்கும் மேற்பட்டவர்கள். பேசியவர்கள் 11 பேர். பத்துப் பேர் பேசியுங் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை. பதினொன்றாவதாகப் பேசியவருடைய கருத்துதான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தினர் ஒப்பினார்கள். கூட்டத்தினர் என்ன, தலைமை வகித்திருந்த உ.வே. சாமிநாதய்யரே எழுந்திருந்து இதுதான் சரி என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகத் தழுவிக் கட்டிக் கொண்டு மக்களுக்கும் அறிவித்தார். அப்புறம் வசிஷ்டரே ராஜரிஷி என்று ஒப்புக் கொண்டபிறகு, உங்களுக்கும் நமக்கும் அதிலே என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்? ஒப்ப வேண்டியதுதான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் நாவலர் ச. சோமசுந்தர பாரதி. அந்தப் பேச்சினை உடனே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக் கொண்டு மதுரைக்குச் சென்று அச்சடித்து வழங்கினார்கள்.

என்ன பேசினார்?

தமிழர் ஆண்டுத் தொடக்கத்தின் முதல் மாதம் தை என்னும் சுறவம் மாதமே என்றும், தை என்னும் சுறவம் முதல் நாளே தமிழரின் பொங்கல் திருநாள் மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும், ஏசுநாதருக்கு 31 ஆண்டுகள் அதாவது 31 அகவை திருவள்ளுவர் மூத்தவர் என்றும், கிறித்து பிறப்பு ஆண்டோடு 31 அய்க் கூட்ட வருவது திருவள்ளுவர் பிறப் பாண்டு என்றும், இதுவே இனி தமிழர்களாகிய நாம் பின்பற்றி, கடைப்பிடித்து, செயற்பட வேண்டிய தொடராண்டு மற்றும் புத்தாண்டு என்றும் குறிப்பிட்டார். ஆண்டின் முதல் மாதம் சித்திரை என்பது தமிழர்க்கு உடன்பாடன்று. பிரபவ, விபவ என்னும் சுழலாண்டுத் தத்து வத்தில் ஆண்டுப் பிறப்பைக் கொண் டாடுகிற வடமொழி சார்பாளர்களான ஆரியர்கட்கு வேண்டுமானால் ஆண் டின் தொடக்க மாதமாகச் சித்திரை இருக்கலாம்.

ஆதாரம்

கோவை திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா அறிஞர் ஜி.டி. நாயுடு அவர்கள் கோபல் பாக் கண்காட்சி நிலையத்தில் நடந்தபோது திருச்சி திருவாளர் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் 15.02.1953-இல் நிகழ்த்திய பேருரை. கோவை மால் மில் ரோடு திருவள்ளுவர் படிப்பகத்தார் 01.11.1953-இல் இப்பேச்சினை வள்ளுவரும் குறளும் என்ற தலைப்பில் 86 பக்க நூலாக வெளியிட்டுள்ளனர். மேற்படிக் கருத்து பக்கம் 5 இல் இடம் பெற்றுள்ளது. இப்புத்தகம் ஒலிநாடாப் பதிவிலிருந்து அச்சு ஏற்றப்பட்டது. இப்புத்தகத்திற்குச் சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் முன்னுரையும், மதுரை தியாகராயர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் -_ சித்தாந்த கலாநிதி _ உரைவேந்தர் _ வித்துவான் திரு அவ்வை சு. துரைசாமி (பிள்ளை) அவர்கள் அணிந்துரையும் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு பெற்றவர் முத்தமிழ்க் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் ஆவார் என்பது நினைவு கூரத்தக்கது.

பெரியாரும் உடன்பட்டார்!

தந்தை பெரியாரின் அறிவுநெறி பேணும் பகுத்தறிவு இயக்கமான தன்மதிப்பியக்கமும் இக்கொள்கைக்கு உடன்படுகிறது. டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில் அமைந்த அந்நாளைய தமிழக அரசும் திருவள்ளுவர் தொடராண்டை அரசுபூர்வமாக அறி வித்து நடைமுறைப்படுத்த, அது இன் றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தயக்கம் ஏன்?

தமிழ்த்தாத்தா என்று தமிழர்களாலும், மகாமகோபாத்தியாய சித்தாந்த கலாநிதி என்று பார்ப்பனர்களாலும் பாராட்டி, போற்றி, புகழப்படுகின்ற உ.வே. சாமிநாத அய்யரும், ஊரும் உலகமும் அறிந்த பெரும் பேராசிரியர் டாக்டர் மு.வ. அவர்களும், ஆத்திக நெறியாளர் சைவ சிரோன்மணி அவ்வை சு. துரைசாமி (பிள்ளை) அவர்களும் திருவள்ளுவர் தொடராண்டைத் தமிழர்களின் புத்தாண்டாக ஏற்றுக் கொண்ட பிறகு, தமிழர்கள் சைவர்கள் அனைவரும் தயக்கமின்றி, தாமதமின்றி உடனடியாக ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டியது தானே.

அம்மையாரே என்ன பதில்?

சுழலாண்டைத் தள்ளுவோம்! தொடராண்டைக் கொள்ளுவோம்!!

---------------------"விடுதலை” 26-11-2011

0 comments: