Search This Blog

27.1.12

என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா - எம்.என். ராய் அறிவிப்பு


இந்தியாவின் மர்ம மனிதன் என்று கூறப்படுபவர் வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய். பல நாடுகளைச் சுற்றியவர் - அந் நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளைக் கற்றுத் தேர்ந்தவர். ருசியாவில் தங்கி இருந்து லெனின், ஸ்டாலின் போன்றவர் களிடம் கருத்தாய்வு செய்தவர். அவர்களிடம் கருத்து முரண் பாடு கொண்டவர்.

பல்வேறு வழக்குகள் அவர் மீது வீறு கொண்டு பாய்ந்த துண்டு. மெக்சிகோவில் அவர் தங்கி இருந்த போது சமதர்மக் கட்சியை உருவாக்கினார். ருசியாவுக்கு வெளியே பொது உடைமைக் கட்சி என்பது இவரால்தான் உருவாக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானத்தின் வழியாக பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுக்கத் திட்டம் போட் டவர் - இந்த வகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஒப்பானவர்.

சமூகத்தில் நீண்ட நெடுங் காலமாகப் புரையோடிப் போன பழைமைப் பாசிகளை, கடவுள் மத நம்பிக்கைகளை முற்றாக எரித்து சாம்பலாக்கவேண்டும் என்பதில் எரிமலையாகத் தகித்து நின்றவர்.

வெறும் பொருளாதார மாற்றம் உண்மையான மாற்றத் திற்குப் பயன்படாது , கருத்துப் புரட்சி கை கோக்க வேண்டும் என்ற கருத்தில் தோய்ந்தவர். ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி என்ற ஒரு கட்சியை நடத்தி வந்தார்.

தமிழ்நாட்டில் புரட்சிகர மான சமூக இயக்கத்தை நடத்தி வரும் தந்தை பெரியார் பற்றி அவர் செவியுற்றவர். பெரியாரைக் காண வேண்டும் என்று அவர் ஆவல் கொண்டார்; தந்தை பெரியார் அவர்களுக்கும் அந்த எண்ணம் இருந்தது.

சிவகங்கையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் தெரிவித்த தகவல் மிக முக்கியமானது. இதோ, தந்தை பெரியார் பேசுகிறார்:

எம்.என்.ராயைக் காண வேண்டுமென்று நானும் எண்ணியிருந்தேன். ஒரு முறை சென்னைக்கு வந்திருந்த போது அவரைச் சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் என்ன செய்தார் தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து வணங்கினார். நான் மிகச் சங் கடப்பட்டு ஒரு பகுத்தறிவுவாதி இப்படி நடந்துகொள்ளலாமா? என்று கேட்டேன்.

பிறகு சில நாள்கள் அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்து வந்தேன். ஒரு முறை டேராடூனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். விருந்துக்கு வந்தவர்களிடையே நான் எழுதிய புத்தகங்களைப் பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப்படுத்தினார். அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பலமுறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர். (விடுதலை 22.4.1965)

கல்கத்தாவில் எம்.என்.ராய். ஏற்பாடு செய்திருந்த மாநாடு ரேடிகல் டெமாக்ரடிக் பார்ட்டி கான்பரன்ஸ் 27.12.1944 ஆம் ஆண்டில் நடந்தது. அதில் பெரியார் பேசினார். அம்மா நாட்டில் பெரியார் அவர்களை வரவேற்றுப் பாராட்டுரை வழங் கிய ராய், என் நாத்திக ஆசான் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பாராட்டி வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பெரியார் தம்மைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்ட மைக்குத் தாம் வெட்கப்படுவ தாகத் தம் பேருரையில் குறிப் பிட்டார். உடனே ராய் இடை மறித்து, நான் உண்மையைத் தான் சொன்னேன். உலகத்தில் நாத்திகத்தைப் பற்றி இத்தனை நூல்கள் எழுதியும் வெளியிட்டு முள்ள மேதை எனக்கு யாரும் தென்படவில்லை. இதற்கு ஆதாரமாகக் குடிஅரசுப் பதிப்பக வெளியீட்டு விவரங்களைக் காட்டி நீங்களே பாருங்கள் என்று அவையோரை நோக்கிக் கூறி உறுதிப்படுத்தினார்.

1887 மார்ச் 21-இல் பிறந்த ராய் 1954 ஜனவரி 25-இல் மறைந்தார். வாழ்க எம்.என்.ராய்!


------------------- மயிலாடன் அவர்கள் 27-1-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

4 comments:

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியில் இனிப்பும் கசப்பும்!


இந்தியாவின் 63ஆவது குடியரசு நாள் விழா இந்தியா முழுமையும் கோலாகலமாகக் கொண்டாடப் பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் இதே கொண்டாட்டம் தான், இருக்கட்டும்!

இந்த 63 ஆண்டுகளில் இந்தியாவின் சாதனைகள் என்ன? வளர்ச்சிப் போக்கு எத்தகையது? இதே கால கட்டத்தில் உரிமை பெற்ற சீனா எந்தக் கட்டத்தை எட்டிப் பிடித்திருக்கிறது?

ஆடுவதும், பள்ளுப் பாடுவதும் ஒருபுறம் இருக்கட்டும்! நம்மைப்பற்றி நாமே எடை போட்டுக் கொள்ள வேண்டாமா? சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டாமா?

1) கல்வி வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் உலகில் 72ஆம் இடத்தில் இருக்கிறோம். 10 ஆண்டுகளில் 14 வயதுக்கு உள்பட்ட அனை வருக்கும் கட்டாயம் அடிப்படைக் கல்விபற்றி இந்திய அரசமைப்புச் சாசனம் சொல்லுவது - வெறும் ஏட்டளவில்தானே!

2) வேலை வாய்ப்பு என்று எடுத்துக் கொண்டால் 11ஆம் அய்ந்தாண்டுத் திட்டத்தில் 4 கோடி பேர் களுக்கு வேலை வாய்ப்பு என்று இலக்கு நிர்ணயிக் கப்பட்டு இருந்தது. ஆனால் அளிக்கப்பட்ட வேலை வாய்ப்போ வெறும் 10 லட்சம்தான் (என்னே தலைகீழ் வீழ்ச்சி!)

12ஆம் அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் வேலை வாய்ப்பு அற்றோர் தொகை ஆறு கோடியாக இருக்கும் என்ற மிரட்டல் நாட்டை அச்சுறுத்திக் கொண்டுள்ளது.

ஒரு நாட்டில் வேலை வாய்ப்பின்மை என்பது வன்முறைக்கான தொழிற்பயிற்சிக் கூடத்தின் உற்பத்தி என்று பொருளே!

பொதுத்துறைகள் அருகி, தனியார்த் துறைகள் பெருக்கெடுக்கும் கால கட்டத்தில் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு என்ற சமூக நீதி கோரிக்கைபற்றி கேளாக் காதுடையதாக இந்திய அரசு இருப்பது கண்டனத்துக்கு உரியது. (வெகு மக்கள் எரிமலை ஆவார்கள், எச்சரிக்கை!)

3) இந்தியாவில் விவசாயப் பெருங் குடிமக்கள் 70 விழுக்காடு; பெரும்பாலும் கிராமங்களில் ஏதோ வாழ்கிறார்கள். இந்தியாவின் ஒட்டு மொத்தமான பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு என்றால், விவசாயத்துறை வளர்ச்சி ஒன்று முதல் இரண்டு சதவிகிதம்தான்.

5 பேர்கள் 2 மாடுகள் கொண்ட ஒரு விவசாயியின் மாத வருமானம் ரூ.2115 பைசா 10. இதைக் கொண்டு எப்படி வாழ்க்கையை நடத்துவது?

ஒவ்வொரு மணி நேரத்திலும் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 1993 முதல் 2006 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண் ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரம் என்று மத்திய அமைச் சர் சரத்பவார் நாடாளுமன்றத்திலேயே அறிவித்தாரே!

4) உலகில் பட்டினியால் சாகும் மக்கள் என்ற தலைப்பில் இந்தியாவுக்கு 67ஆவது இடமாம்! இவ்வளவுக்கும் உணவு சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் தானியங்கள் 5 கோடியே 70 லட்சம் டன்!

இவற்றைப் பட்டினியால் வாடும் மக்களுக்கு வழங்கக் கூடாதா என்று உச்சநீதிமன்றம் ஓங்கித் தலையில் குட்டிய பிறகும்கூட, இதுபோன்ற பிரச்சினை களில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று பிரதமர் சொல்லுகிறார் என்றால் - இதற்குப் பெயர் தான் மக்கள் நல அரசா?

5) இந்தியா ஏழை நாடாம். ஆனால் உலகில் மிகப் பெரிய பணக்காரர்கள் முதல் 10 பேர்களில் இந்தியாவில் இருப்போர் நான்கு பேர்களாம்.

உலகப் பணக்காரர்களின் வரிசையில் உள்ள அம்பானி மும்பையில் 530 அடி உயரத்தில் 27 மாடிகளைக் கொண்ட பெரிய பங்களாவில் குடியிருக்கிறார். இவ்வளவுக்கும் அம்பானியின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் ஆறு பேர்கள்தானாம்.

இந்தப் பங்களாவின் வசதிகள் எத்தகையது தெரியுமா? 168 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தலாம். 27ஆவது மாடியின் மேல் தளத்தில் ஹெலிகாப்டரை நிறுத்தலாம்.

இந்தப் பங்களாவில் பணியாற்றுவோர் மட்டும் 600 பேர்களாம்.

இவ்வளவுப் பெரிய பணக்காரருக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகையாம்! ஆட்சியாளர்களின் நிறம் இதுதான்!

இந்தியாவின் கிராமப்புறங்களில் 46 விழுக்காடு; நகரப்புறங்களில் 26 விழுக்காடு வறுமைக் கோட்டுக் குக்கீழ் வாழும் தரித்திர நாராயணன்கள்

63ஆவது குடியரசு விழா மகிழ்ச்சிக் கொண் டாட்டத்தில் மூச்சுத் திணறும் ஆட்சியாளர்கள் - இந்தக் கசப்பான உண்மைகள்மீதும் அசைப் போட்டு - அசையா நிலையிலிருந்து அசையும் நிலைக்கு ஆயத்தமாகட்டும்!
---”விடுதலை” தலையங்கம் 27-1-2012

தமிழ் ஓவியா said...

மனித குலத்துக்கு அடிமைக் கயிறு!


கடவுள் கருத்து எப்பொழுதும் சமுதாய உணர்வுகளை உறங்க வைத்திருக்கிறது; மழுங்கடித்திருக்கிறது. உயிருள்ளவற்றிற்குப் பதிலாக அந்த இடத்தில் இறந்ததை வைக்கின்றது அது எப்பொழுதும் அடிமைத் தனத்தின் கருத்தாகவே - மிகவும் படுமோசமான அடிமைத் தனத்தின் கருத்தாகவே இருந்திருக்கின்றது. கடவுள் கருத்து எந்தக் காலத்திலும் தனி நபரைச் சமுதாயத்துடன் இணைத்ததில்லை; அது எப்பொழுதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களைத்தான் ஒடுக்குபவர்களின் தெய்வத் தன்மைக் கற்பனையில் - கடவுள் நம்பிக்கை என்னும் கயிற்றால் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டிருக்கின்றது. மதம் என்னும் நுகத்தடி மனித குலத்தை அழுத்திக் கொண்டிருப்பது; சமுதாயத்துக்குள்ளேயே உள்ள பொருளாதார நுகத்தடியின் பிரதிபலிப்பு - அதன் விளைவுதான் என்பதை மறப்பது குறுகிய பூர்ஷவா புத்தியாகும். - லெனின்

தமிழ் ஓவியா said...

பெரியார் பேசுகிறார்

உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) - வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

தந்தை பெரியார், 4.10.1931

பொது உடைமை வேறு; பொது உரிமை வேறு. பொது உடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அநுபவம் என்பதாகும். தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமானால், தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொது உடைமை ஏற்பட வசதி உண்டாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும், அதிக உரிமை இருக்கிறவனிடந்தான் போய் சேர்ந்துக் கொண்டே இருக்கும் என்பது பொதுவுடமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

- தந்தை பெரியார், 25.3.1944

தமிழ் ஓவியா said...

திராவிடன் என்ற சொல்

திராவிடர் கழகத் தலை வருமான கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்று கையில்:

திராவிடன் என்ற சொல் இன்று நேற்று வந்ததல்ல; கால்டுவெல் கண்டுப்பிடிப்பும் அல்ல; மனுதர்மத்திலே திராவிடர் என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. திராவிடர் என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டுப்பிடிக்கவில்லை. பண்பாட்டால் கண்டுபிடிக் கப்படக்கூடியவை. தமிழ் பேசுகிறவர்கள் எல்லோரும் தமிழினம் கிடையாது. திராவிடர் இனம் என்று சொன்னால் ஆரியர்களை பிரித்துக் காட்டக் கூடியது. - இவ்வாறு பேசினார்.
”விடுதலை” 27-1-2012