Search This Blog

16.1.12

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? சித்திரை முதல் நாளா?

தமிழருக்கு தொடராண்டு இல்லை. தற்பொழுது நாம் கடைப்பிடிப்பது சித்திரை மாதம் முதல்நாள். அத்துடன் தை முதல் நாளைப் புத்தாண்டு பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம். மற்றைய இனத்தவர் களுக்கு புத்தாண்டு ஒன்றுதான். தமிழருக்கு மாத்திரம் ஏன் இரு ஆண்டுகள்? ஆகவே தமிழராகிய நாம் புத்தாண்டு தை முதல் நாளா! சித்திரை முதல் நாளா என்பதைத் திட்டவட்டமாக முடிவெடுத்து அதைப் பின்பற்ற வேண்டும்.

தற்பொழுது நாம் கொண்டாடும் புத்தாண்டு, சாலிவாகனன் எனும் வடநாட்டுமன்னரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படு கிறது. இவர் கி.பி.78இல் இம்முறையை ஏற்படுத்தினார். அவ்வாண்டுகள் பிரபவ விபவ பிரமோதூத என்ற 60 ஆண்டுகள். சித்திரை தொடக்கம் சுழற்சி முறையில் வருகின்றன. இவைகளில் ஒரு ஆண்டு கூட தமிழ்ப் பெயரோ அல்லது தமிழினத்துடன் தொடர்புடைய தாகவே இல்லை. ஆகவே தான் சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடுவது முறையல்ல என்று தீர்மானித்து, 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் புலவர்கள் கூடி தமிழர்க்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். ஆனால் அக்காலத்தில் பார்ப்பனர் மிகவும் பலம் வாய்ந்தவர்களாக இருந் தமையால், அவர்களின் கடும் எதிர்ப்பால் இம்முடிவை ஒத்திவைக்க நேரிட்டது.

1971ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் தமிழ் நாட்டு முதல்மைச்சராக இருந்த பொழுது, திருவள்ளுவர் ஆண்டு ஏற்று, தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். ஆனால் பார்ப்பனரின் எதிர்ப்பு வலுவாக இருந்தாலும், பார்ப்பனர்களுக்கு அடிவருடி களாக இருந்து செயற்பட்ட தமிழ் அரசியல் வாதிகளின் செயற்பாடுகளாலும் இத்திட் டம் குறித்து மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையே காணப்படுகிறது.

மீண்டும் கலைஞர் தற்பொழுது ஆட் சிக்கு வந்ததும், தான் ஒரு தமிழர், ஆகவே தான் 1971ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்த தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என் பதை மீண்டும் ஆணை பிறப்பித்து, அதற் கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை தமிழக ஆளுநர் மேதகு சுர்ஜித்சிங் பர்னாலா தொடங்கி வைத்த போது, தை முதல் நாளே தமிழ்த் திருநாளாக கலைஞர் அறிவித்ததையும் தெரிவித்து, இது இன்றிலிருந்து நடைமுறைப்படுத்தப்படு கின்றன என்றும் தெரிவித்தார். இது ஜெய லலிதாவிற்குப் பிடிக்கவில்லை. தான் ஒரு பிராமணப் பெண், தான் மீண்டும் தலை மைப் பதவிக்கு வரும்போது இச்சட்டத்தை மாற்றி அமைப்பேன் என்று முழக்கமிட்டு உள்ளார். ஆனால் கலைஞர் கூறுகிறார். செம்மொழி வருமென்று கருதியது உண்டா? வந்ததா இல்லையா? அதே போல தமிழாண்டு தை முதல் நாளே என்று வந்தே தீரும்.

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை வலியுறுத்துகின்றன.

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை அல்ல உனக்கு

தமிழ்ப் புத்தாண்டு

தரணி ஆண்ட தமிழருக்குத்

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

தையே முதற்றிங்கள்;

தை முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று,

பல்லாயிரத்தாண்டாய்த்

தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்.

புதுவருடப்பிறப்பு என்பது மகிழ்வுடன் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள். சித்திரை மாதம் தமிழரின் தாயகங்களான தமிழ்நாடு, புதுவை, தமிழீழம் ஆகிய பிர தேசங்களில் சூரிய வெப்பம் அதிகரிக்கும் மாதமாக உள்ளது. தை மாதம் சூடும் குளிரும் குறைந்த மாதம். அத்துடன் விவசாயிகள் அறுவடை முடித்து விட்டதால் தானி யங்களைத் தங்களது வீட்டிற்குக் கொண்டு வந்து மனநிறைவுடன் குடும்பத்தினர் அனைவருடனும், நண்பர்களுடனும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடு வார்கள். இவை எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கும் பொழுது தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக ஏற்று உலகத் தமிழினம் நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது.

----------------------நன்றி:சி.செல்லையா தலைவர், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம், கனடா- சுதந்திரன் வார இதழ், ஈழம் (தமிழாலயம் - 2008 ஜூலை - ஆகஸ்ட்)

1 comments:

தமிழ் ஓவியா said...

பொங்கலும் தந்தை பெரியாரின் இசைவும்!

(மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூரில் 6.1.2001 அன்று நடைபெற்ற தை முதல் நாளே தமிழ் புத்தாண்டுத் தொடக்கம் என்பதை வலியுறுத்தி உலகப் பரிந்துரை மாநாட்டின் போது வெளியிடப்பட்ட பொங்கல் சிறப்பு மலரில் புலவர் க.ப.சாமி அவர்களுடன் நேர்காணல் தொகுப்பி லிருந்து)

1935இல் திருச்சியில் அகில தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அதில் கா.சுப்பிரமணியனார், மதுரை தமிழ்வேள், பி.டி.இராசன், திரு.வி.க. மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால் அங்கு இருந்த சூழ்நிலையில் அம்மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில்தான் பலத்த விவாதம் நடைபெற்றது. பொங்கல் சமய விழாவா, சமயமற்ற விழாவா என்று பலத்த விவாதம். அப்படி பலத்த விவாதம் செய்யும் போது, இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார், பொங்கலைச் சமய விழா என்று சொல்லி சர்ச்சையை கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம்மாநாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இது சமயச் சார்பு இல்லாத விழா. எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான். எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம் இருக்கிறது? எந்த இதிகாசம் இருக்கிறது? என்று கேட்டு மிகவும் சீற்றம் அடைந்தார். எனவே எந்தப் புராணமும் இல்லாத போது தமிழில் புறநானூற்றில் பிட்டங்கொற்றனின் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும் என்றார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாக பதிலுரைத்தார். பெரியார் தான் இம்மாநாட்டை நடத்தினார். பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான பொன்னான தமிழர் விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும், அனைவரும் கையொலி எழுப்பினர். இவ்வாறு பெரியார் சொன்னதும் திருவி.க. எழுந்து, என்னுடைய அருமை நண்பர், ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்த சுயமரியாதை இயக்கத்தை; நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார்; இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் இந்தப் பொங்கலை சமயச் சார்பற்ற ஒரு தனிப்பெரும் தமிழன் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழுலகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்து கொண்டிருக்கிறது அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாக பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர்.

இச்செய்தி பலருக்கு தெரியாது. பெரியார் ஏற்றுக் கொண்ட பிறகுதான் குடியரசு இதழிலும் ஏனைய திராவிடர் கழக ஏடுகளிலும் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டினை ஆதரித்து கருத்துகள் எழுதப்பட்டன. நான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப்பொழுது 19 வயது.

அச்சிறப்புக்குரிய மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு வருகையாளர்கள், அறிஞர்கள் வருமாறு:

1. கரந்தை தமிழ்ச் சங்கத் தவைர் உமா.மகேசுவரனார்,

2. பேராசிரியர் கா.சுப்பிரமணியம் பிள்ளை

3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

4. திரு.வி.க. அவர்கள்

5. மறைமலையடிகளார்

6. தந்தை பெரியார்

7. பி.டி.ராஜன் தமிழவேள் (மாநாட்டு சிறப்புச் சொற்பொழிவாளர்)

இன்னும் பலரும் வந்திருந்தனர். அதை தவிர்த்து தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் பேசியவர் ஆற்காடு இராமசாமி முதலியார். பாவேந்தர் பாரதிதாசனும் வந்திருந்தார். ஆனால் அப்பொழுது அவர் அவ்வளவு சிறப்பு பெறவில்லை. அக்கூட்டத்தில் மூன்று மணிநேரம் மிகச் சிறப்பாக தமிழனின் வீரத்தை அள்ளி வைத்து பிழிந்து எடுத்தவர், பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆவார்.

அம்மாநாடு முதன்மையாக இந்தி மொழியை எதிர்ப்பதற்குக் கூட்டப் பெற்றதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் முன்மொழிந்து வழிமொழியப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்தவர் பி.டி.ராஜன், வழிமொழிந்தவர் திரு.வி.க. அவர்கள்.

எனவே பொங்கலுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அதுவே தமிழர் திருநாள், அது மதச்சார்பற்ற ஒரு விழா என்பதை நான் ஆணித்தரமாகக் கூறுவேன். 12-1-2012