திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு
அறிவியலுக்கு விரோதமான ஜோதிட மூடநம்பிக்கையை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
ஜோஸ்யம், சோதிடம் என்பது அறிவியல் அல்ல. போலி அறிவியல் (Not Science, but only PSUDO Science) என்பது நிறுவப்பட்ட ஒன்று. ஆராய்ச்சியா ளர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் - இந்நாட்டைச் சேர்ந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம், அமிர்த்தியாசென், இராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் உள்பட அனைவரது ஒருமித்த கருத்து இது.
அண்மையில் சென்னை வந்து ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய, அண்மையில் நோபல் பரிசு பெற்ற இராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் என்ற கேம்ப்ரிட்ஜ் விஞ்ஞானி - இந்தக் கருத்தை வலியுறுத்தி, அறியாமை இருள்போக்க இத்தகைய மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினார். பல நாளேடுகளிலும் இவ்வுரை வெளிவந்தது!
வானவியல் (Astronomy) என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
ஜோஸ்யம் (Astrology) என்பது அறிவியலுக்கு மாறானது ஆகும்!
பிறந்த நேரம், நட்சத்திரம் என்பதை வைத்து ஜாதகம் கணித்துக் கூறுவது சரியான முறை ஆகாது!
அது மட்டுமா? தந்தை பெரியார் அவர்கள் இது ஒரு மூடநம்பிக்கை என்று விளக்கி 1938லேயே சோதிடப் புரட்டு என்ற நூலை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பியுள்ளார்கள் - தனது சுயமரியாதை, திராவிடர் கழக இயக்கங்கள் வாயிலாக. வடதுருவம், தென்துருவம்போல தந்தை பெரியார் கருத்துக்கு நேர் எதிர்மாறான கொள்கை கொண்ட ராஜாஜி என்று அழைக்கப்படும் சி. ராஜகோபாலாச் சாரியார்கூட, ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை; தனக்கு அதில் ஈடுபாடு கிடையாது என்று மறுப்புக் கூறி எழுதியவர்; அவரது சீடர் கல்கியும் கூட எழுதியுள்ளார்! சுப்பிரமணிய பாரதியார் - ஜோதிடந்தனை இகழ் என்று ஆத்திச்சூடியே பாடியுள்ளார்! பிரபல நாத்திக விஞ்ஞானியான மனோ தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஆப்ரகாம் கோவூர் அவர்கள் இதுபற்றி பல்வேறு மறுக்க முடியாத ஆதாரங்களை அவரது கட்டுரைகளில் அடுக்கி அடுக்கிக் காட்டியிருக்கிறார்.
நெப்டியூன் (தொலையில் உள்ள கோள்) யுரேனஸ் (சனி, நெப்டியூன் தனது சுற்று வழியைக் கொண்டது) Pluto (பூமியிலிருந்து அருகில் உள்ள 9ஆம் கோள்) போன்ற கிரகங்களை முன்னாள் ஜோசியர்கள் அறிந்ததே இல்லை.
மாறாக, ராகு, கேது என்று கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு தமது கட்டங்களில் செலுத்துகிறார்கள் - காட்டுமிராண்டி காலத்தில் இவை இரண் டும் பாம்புகள் என்று (கற்பனையாக) கூறப்பட்டன.
பிரான்ஸ் நாட்டறிஞர் வால்டேர் 32 வயது வரையில் தான் உயிர் வாழ்வார் என்றனர் சோதிடர். (அதுபோலவே ராஜீவ்காந்திக்கும்கூட ஜோஸ்யம் கணித்தவர்களும் உண்டு) ஆனால் வால்டேர் 84 வயதுவரை வாழ்ந்தார்; ராஜீவ்காந்தியோ அகால மரணமடைந்ததும் வேதனைக்குரிய செய்தி.
ஜோதிடம் உண்மையல்ல என்பதற்கு இதற்கு மேல் என்ன கூற வேண்டும்?
நாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டு அறிவியல் உச்சத்தினை எட்டிய நூற்றாண்டு, மனிதன் செவ் வாயில் குடியேறலாம் அங்கே மீத்தேன் வாயு நீராவி - உண்டு என்பதால் உயிரினம் வாழும் நிலை - அனுமானம் உண்டு என்று வானவியலாளர்கள், விண்வெளி விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அறிவியலைச் சொல்லிக் கொடுத்து, மாணவர்களை, இளைஞர்களை அறி யாமை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டிய பல்கலைக் கழகங்கள் - பழைய, பா.ஜ.க. காவி ஆட்சியில் கல்வியைக் காவிமயமாக் கும் திட்டத்தில் கொண்டு வந்த ஜோதிடத்தை மாண வர்களுக்குப் பாடமாக்கிப் பட்டயம், பட்டம் தருவோம் என்பது மிகவும் கொடுமையானதும், கேவலமானதும் அல்லவா?
நமது இந்திய அரசியல் சட்டத்தின் 51A(h) பிரிவு கூறும் குரனேயஅநவேயட னுரவநைள அடிப்படைக் கடமைகளில் Scientific Temper Spirit of Enquiry Humanism இத் தகைய விஞ்ஞான மனப்பாங்கு, ஏன்? எதற்கு? என்ற ஆராய்ச்சி மனிதநேயம் பரப்புதல் ஒவ்வொருவரது அடிப்படை கடமை என்று விதித்துள்ளதே!
அதற்கு மாறாக இப்படி பல்கலைக் கழகங்கள் செய்யலாமா?
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இதனைக் கொண்டு வரவிருக்கும் முடிவினை துணைவேந்தர் இல்லாத (தலை இல்லாத) ஒரு தற்காலிக ஆளுமைக் குழு முடிவு எடுத்து இருப்பது கண்டனத்திற்குரியது!
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இதனைக் கண்டித்துள்ளது; நாம் ஏற்கெனவே பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றியும் உள்ளோம்.
மீண்டும் இதை நுழைக்கப் பார்ப்பது அறிவு விரோத, அறிவியல் மனப்பான்மை ஒழிப்பு வேலை அல்லவா?
எனவே இதனைக் கண்டித்து மதுரையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கள், இளைஞர்கள் வருகிற ஜனவரி 21 - சனிக்கிழமை மாநகரில் முக்கிய இடத்தில் நடத்தவுள்ளனர். (விவரம் தனியே நாளை வெளிவரும்).
ஒத்த கருத்துள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
இதனை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் அவசியப்பட்டால் நடத்துவோம்.
----------------கி. வீரமணி - தலைவர் திராவிடர் கழகம் -”விடுதலை” 12-1-2012
0 comments:
Post a Comment