Search This Blog

1.1.12

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! - 25

யார் இந்த சந்தானம் அய்யங்கார்?

மக்களை ஏமாற்றிய துரோகி என்றெல்லாம் அண்ணாவைப் பற்றி அர்ச்சித்த திருவாளர் கே.சி.லட்சுமி நாராயண அய்யர்வாள் கடந்த வார துக்ளக்கில் (28.-12.-2011) கொஞ்சம் உசத்தியாக எழுது ஆரம்பித்துள்ளார்.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் க.சந்தானம் அய்யங்காரை சந்தித்து, தமிழ் நாட்டில் கூட்டுறவு இயக்கத்தின் செயல்முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.

அதனால்தான் அண்ணாவுக்குப் பாராட்டு, -வேறு காரணம் இல்லை.

சந்தானம் குழு அறிக்கை பற்றி மாநில மந்திரிசபை கூட்டத்தில் பேசப் பட்டது. சந்தானம் ஒரு பார்ப்பனர் என்று ஓர் அமைச்சர் குறிப்பிட்டார்.

உடனே, முதல்வர் அண்ணாதுரை அதற்கும் பதில் அளித்தார். ஆம். சந்தானம் பார்ப்பனர்; அவர் நம்மவர்; நம்மிலே ஒருவர்; சிறந்த தமிழர்; அறிவும் ஆற்றலும் அனுபவமும் மிக்கவர். அத்தகைய பெரியவரின் ஆலோசனைகள் நமக்குக் கிடைத் திருக்கின்றன.

உண்மையிலே நாம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்று அண்ணாதுரை அழுத்தமாகக் கூறினார் என்று எழுதியுள்ளார்!

இப்படி அண்ணா கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் எடுத்துக் காட்ட வில்லை துக்ளக் கட்டுரையாளர்.

ஏதோ மானாவாரியாக மனக்குரங்கு பாய்ந்த திசையில் எழுதியுள்ளார்.

ஒரு அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைவிட ஒரு வி.எல். எதிராஜ் சிறந்த வழக்கறிஞர் என்று கூறுகிறது என் இனப்பற்று; ஒரு அரியக்குடி அய்யங்காரை விட ஒரு நாயனாப் பிள்ளை சிறந்த பாடகர் என்று கூறுகிறது எனது இனப்பற்று; ஒரு ரெங்காச்சாரியைவிட ஒரு லட்சுமண சாமி சிறந்த டாக்டர் என்று கூறுகிறது எனது இனப்பற்று; ஒரு சத்தியமூர்த்தி அய்யரை விட ஒரு ஆர்.கே. ஷண்முகம் சிறந்த பேச்சாளர் என்று கூறுகிறது என் இனப்பற்று; ஒரு பாரதியாரை விட ஒரு கனகசுப் புரத்தினம் சிறந்த கவிஞர் என்கிறது என் இனப்பற்று. (விடுதலை 15-.10.-1958) என்று சொன்னவர் அறிஞர் அண்ணா என்பதை ஆரியர் மறக்கவேண்டாம்.

முதல் அமைச்சர் என்ற முறையில் சந்தானம் அய்யங்காரைச் சந்திப்பதோ, கருத்துக்களைக் கேட்பதோ சாதாரண மானதுதான். அந்தக் காரணத்தாலேயே சந்தானம் அய்யங்கார் தமிழர் ஆகி விட மாட்டார். அண்ணா அதை ஏற்றுக் கொள்வதும் இல்லை.

தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து தமிழ் பேசும் அனைவரும் தமிழர் என்பர். ஆனால் உள்ளுற உணர்வர் தமிழர் என்றால் தமிழ் மொழியினர் மட்டுமல்ல; மொழி வழி விழி, மூன்றிலும் தமிழர்! நோக்கம், நெறி இரண்டும் (விழி, வழி) தமிழர்க்குத் தனி! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர் எனில் தனி இனம் என்ற கருத்தே தவிர மொழியிலே மட்டுமல்ல! (விடுதலைப் போர் பக்கம் 27 - அந்தத் தைரியம் எனும் தலைப்பில்) என்றார் அண்ணா.

தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும், பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்பும் பற்றும் கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியாகக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருதத்தின் மீது தான். (திராவிட நாடு 2-1.1-.1947)

பார்ப்பனர்கள் பற்றி இவ்வளவு துல் லியமாகப் படம் பிடித்தவர் அண்ணா.

சந்தானம் அய்யங்காரை தமிழரெனச் சொல்லி விட்டாராம் அண்ணா. ஆரியம் அடேயப்பா எவ்வளவுத் துள்ளு துள்ளுகிறது.

தமிழ் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்கும் கூட லாயக்காக மாட் டோம் (துக்ளக் 23.-6.-2010) என்று எழுதவில்லையா?

தை முதல் நாள்தான் தமிழர்ப் புத்தாண்டு என்ற தமிழ் அறிஞர்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க.ஆட்சி அதற்கான சட்டத்தை நிறைவேற் றியபோது இதே துக்ளக் என்ன எழுதியது?

தமிழ்ப் புத்தாண்டு இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது, நம்பிக் கைக்கு விரோதமானது என்று எழுதவில்லையா? (துக்ளக் 27-.1.-2010). இதுதான் இவர்கள் தமிழர்கள் என்பதற்கு அடையாளமா?

மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழி யாக்கிக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் குருநாதர் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்களுள் ஒருவரான கோல் வாக்கர் கூறவில்லையா?(Bunch of Thoughts) - அத்தியாயம் 3 பக்கம் 113).

தொழிலாளர்களின் மிகப் பெரிய தலைவர் என்றும் முற்போக்குப் பேர்வழி என்றும் பார்ப்பனர்களால் பரணில் வைத்துக் கூத்தாடப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி என்ன சொன்னார் தெரியுமா?

சமஸ்கிருதம் நாட்டு மொழியாக ஆக்கப்பட்டால் மொழிப் பிரச்சினையே இருக்காது. இதை நான் 1955 முதல் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன் என்று பேசினாரே!

(சிலப்பதிகார சமஸ்கிருத மொழி பெயர்ப்புப் புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையிலிருந்து 2-.1.-1963).

நான் சர்வாதிகாரியாக இருந்தால் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாகப் படிக்கச் செய்வேன் என்று சொன்னவர்தானே திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் (மெயில் 25.-1.-1938)

அண்ணா சொன்னதை இவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உண் மைப் பூனைக்குட்டி கோணிப் பைக்குள் இருந்து வெளியில் வந்துவிடுமே!

இந்தத் தமிழர் க.சந்தானம் அய்யங்கார் யார் தெரியுமா?

சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கு தனிப்பந்தி - பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனி பந்தி என்று பேதம் செய்த திருவாளர் வ.வே.சு. அய்யருக்குப் பக்க பலமாக இருந்தவர்தான்.

குருகுலம் ஜாதிவெறி பிடித்து கூத்தாடுவதால் காங்கிரஸ் நிதியிலிருந்து ஏற்கனவே அளிக்கப்பட்ட அய்யாயிரம் ரூபாய் போக, மீதி அய்யாயிரத்தை அளிக்கக்கூடாது என்று அன்றைய தமிழ் மாநில காங் கிரஸ் தலைவர் டாக்டர் பி.வரத ராஜூலு நாயுடுவும், செயலாளர் பெரியார் ஈ.வெ.ரா.வும் முடிவெடுத்த நிலையில் அதனை அறிந்த வ.வே.சு. அய்யர் என்ன செய்தார் தெரியுமா? தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் இணை செயலாளராக இருந்த க.சந் தானம் அய்யங்காரிடம் இருந்து மீதி அய்யாயிரம் ரூபாய்க்கான காசோலையை (Cheque) தந்திரமாகப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

செயலாளர் இருக்கும் பொழுது அவருக்குத் தெரியாமல் குருகுலம் மிகப் பெரிய சர்ச்சைக்கு ஆளாகிக் கொண்டிருந்த போது இப்படி அறிவு நாணயமின்றி நடந்து கொண்ட பெரிய மனிதர்தான். கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள் தூக்கி வைத்து முத்தம் கொடுக்கும் சந்தானம் அய்யங்கார்.

சேரன்மாதேவி குருகுலப் போராட் டம் குறித்து விவாதிக்க 1925ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் தமிழ் நாடு காங்கிரஸ் செயற்குழு கூடியது. இந்தப் பிரச்சினை மிகக் கடுமையாக சூடு பிடித்தது.

பாரத கலாச்சாரம் என்பது வேதக் கலாச்சாரம்தான். அதன்படி தானே நடந்து கொண்டார் அய்யர்? இதில் என்ன குற்றம் இருக்கிறது என்று ஒரு பார்ப்பனர் பேசிய நேரத்தில், ஜாதி பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரமும் விதி வகுத்திருந்தால் அந்த வேதத்தையும் சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் தன்மான எரிமலையாக வெடித்தார்.
பிறப்பினால் கற்பிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளை இந்திய சமூக வாழ்க்கையில் பாராட்டக் கூடாது என்று இந்தக் குழு கருதுகிறது. இந்தக் கொள்கையை தேசிய இயக்கம் தொடர்பான எல்லா நிறுவனங்களும் பின்பற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. சேரன்மாதேவி குருகுலத் தில் இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்த உதவியாக இந்தக் குழு (1) தேவக்கோட்டை வி.தியாகராசச் செட்டியார் (2) எஸ். இராமநாதன் (3) ஈரோடு வெ.இராமசாமி. ஆகியவர் களைக் கண் காணிப்புக் குழுவாக நியமனம் செய்கிறது என்பது எஸ்.இராமநாதன் அவர்களால் கொண்டுவரப்பட்ட தீர்மானமாகும். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் மொத்தம் 26 பேர்களில் 19 பேர் ஆதரித்தனர். ராஜாஜி உட்பட ஏழு பேர் எதிர்த்தனர்.

இந்த நிலையில் நான்குபேர் காங் கிரஸ் செயற் குழுவிலிருந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்கள். இந்த நான்கு பேர்களும் பார்ப்பனர்கள்; அதில் ஒருவர்தான் துக்ளக் துதிபாடும் தமிழர்(?) க.சந்தானம் அய்யங்கார்.

(ஆதாரம்: குருகுலப் போராட்டம் - நாரா. நாச்சியப்பன்)

இந்த சந்தானம் அய்யங்கார் எப்படிப்பட்ட பார்ப்பன வெறியர் என்கிற விடயம் காந்தியார் வரை சென்று சிரிப்பாய் சிரித்ததுமுண்டு.
இதுகுறித்து குடிஅரசு (6-.3.-1927) விரிவாக எழுதி வெளியிட்டிருந்தது. அது இதோ.

மகாத்மாவிற்கு இந்தப் பார்ப்பனர் களின் யோக்கியதை நன்றாய்த் தெரியும் என்பதற்கு நாம் ஒரு உதாரணம் சொல்லுவோம். பெல்காம் காங்கிரசின் போது மகாத்மாவிடம் நாம் பேசிக் கொண்டிருந்த சமயம் அதாவது கதர் போர்டு சம்பந்தமாக அதிலுள்ள உத்தி யோகங்கள் மிகுதியும் பார்ப்பனர் களுக்கே கொடுக்கப்பட்டு வருகிறது என்கிற காரணத்தால் நமக்கும் கதர் போர்டு காரியதரிசி என்ற முறையில் ஸ்ரீமான் கே.சந்தானம் அவர்களுக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டுவிட்டது. இதில் ஸ்ரீமான் இராஜ கோபாலாச் சாரியார் ஸ்ரீமான் சந்தானத்திற்குப் பக்க பலமாயிருந்தார். இது விஷயமாய் எங்களுக்குள் ஒரு முடிவும் ஏற்பட இடமில்லாமல் போகவே கடைசியாக காரியதரிசி ஸ்ரீமான் சந்தானம் அவர்கள் ராஜினாமா கொடுத்துவிட்டார்.

ராஜினாமா கொடுத்துவிட்டதோடு (சும்மா இராமல் இந்த ராஜினாமாவை மகாத்மா தகவலுக்கே கொண்டு போய் ஸ்ரீமான் சந்தானத்தின் ராஜினாமாவை பின்வாங்கிக் கொள்ளும்படி செய்ய மகாத்மாவையும் தூண்டப்பட்டது). மகாத்மா நம்மைக் கூப்பிட்டு ஸ்ரீமான் சந்தானம் ஏன் ராஜினாமா கொடுத்தார் என்று கேட்டார்.

நான் (தந்தை பெரியார்) கதர் போர்டு சம்பந்தமான உத்தியோகங் களைப் பெரிதும் பார்ப்பனர்களுக்கே அவர் கொடுப்பதால் அதன் தலைவர் என்ற முறையில் பார்ப்பனரல்லா தாருக்கும் கொடுக்க வேண்டும் என்பதாகச் சொன்னதனால் அவருக்குத் திருப்தி இல்லாமல் அவர் ராஜினா மாவைக் கொடுத்து விட்டார் என்று சொன்னேன்.

மகாத்மா: - இது ஸ்ரீமான் ராஜகோ பாலாச்சாரியாருக்குத் தெரியாதா என்றார்.

நான்:- இதுவிஷயத்தில் அவர்கள் எல்லோரும் ஒன்று தான் என்று சொன்னேன்.

மகாத்மா: - அப்படியானால் உமக்கு ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியாரிடம் கூட நம்பிக்கை இல்லையா என்றார்.

நான்:- பார்ப்பனர்களுக்கு அவர் களிடம் இருக்கும் நம்பிக்கை அவ்வளவு எனக்கு அவரிடம் இல்லை என்று சொன்னேன்.

மகாத்மா:- அப்படியானால் பார்ப் பனர்களிடத்திலேயே உனக்கு நம்பிக்கை யில்லையா என்றார்.

நான்: இந்த விஷயத்தில் நம்பிக் கையே உண்டாவதில்லையே என்றேன்.

மகாத்மா:- அப்படியானால் உலகத் திலேயே நல்ல பார்ப்பனர் இல்லை என்பது உமது அபிப்பிராயமா என்றார்.

நான்:- என் கண்ணுக்குத் தென் படுவதில்லையே நான் என்ன செய்யட்டும் என்றேன்.

மகாத்மா: அப்படிச்சொல்லாதீர்கள். நான் ஒரு நல்ல பார்ப்பனரைக் கண்டிருக்கிறேன். அவர்தான் கோகலே. அவர் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக்கொண்டதே கிடையாது. யாராவது அவரை பிராமணன் என்று கூப்பிட்டாலும், மரியாதை செய்தாலும் ஒப்புக் கொள்ளாததோடு உடனே ஆட்சேபித்துத் தனக்கு அந்த யோக்கியதை இல்லை என்பதை எடுத்துக் காட்டுவார்.

நான் :- மகாத்மா கண்ணுக்கே ஒரே ஒரு யோக்கியமான பிராமணன் மாத்திரம் தென்பட்டு இருக்கும்போது என்போன்றவர்கள் கண்ணுக்கு எப்படிதென்படக் கூடும் என்றேன்.

மகாத்மா: - (வேடிக்கையாய் சிரித்து விட்டு) மறுபடியும் ஸ்ரீமான் சந்தானம் ராஜினாமாவை வாபீஸ் பெற்றுக் கொண்டு காரியதரிசி வேலை பார்க்கக் கூடாதா என்று என்னைக் கேட்டார்.

நான்:- நன்றாய் பார்க்கலாம் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. ஆனால் பார்ப்பனரல்லா தாருக்கு சரிபகுதி அதாவது 100க்கு 50 உத்தி யோகமாவதுகொடுக்க கட்டுப்பட வேண்டும் என்றேன். ஸ்ரீமான் பாங்கர் ஆச்சரியப்பட்டு 100க்கு 50 வீதம் போதுமா? அது கூடவா இப்போது கொடுக் கப்படவில்லை என்கிறீர் என்று கேட்டார்
நான்: ஆம் என்றேன்,

சங்கர்லால் பாங்கர்:- ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் 100க்கு 50 போது மென்கிறாரே இது என்ன அதிசயம்? என்றார்.

மகாத்மா:- நான் ஒருபோதும் சம்மதி யேன் 100க்கு 90 கொடுக்கவேண்டும்.

நான் :- 100-க்கு 50 கொடுப்பதாய் தீர் மானம் போட ஒப்புக்கொள்ள முடி யாது என்கிறவர்கள் 100-க்கு 90- கொடுப்பதெப்படி? என்றேன்.

மகாத்மா:- தீர்மானம் போட வேண்டும் என்று நான் சொல்லவர வில்லை ஆனால், 100க்கு 90 கொடுக்க வேண்டியது கிரமம் என்று சொல் லுவேன் என்று சொல்லி விட்டு ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து பார்ப்பனரல்லாதாருக்கு உத்தியோகம் கொடுப்பதில் உமக்கென்ன ஆட் சேபணை என்று கேட்டார்.

சந்தானம் :- எனக்கு ஒன்றும் ஆட்சே பணை இல்லை. ஒருவரும் வருவ தில்லையே நான் என்ன செய்யட்டும் என்று சொன்னார்.
மகாத்மா:- என்னைப் பார்த்து என்ன நாயக்கர் ஜீ? யாரும் வருதில்லை என்கிறாரே என்ன சொல்லுகிறீர்?

நான்;- அது சரியல்ல, ஏன் வருவ தில்லை என்பதற்கே காரணம் வேண்டும். முதலாவது வேலை கொடுக்க வேண்டும். வேலை கொடுத்து அவனை மரியாதையாக நடத்த வேண்டும். இந்த இரண்டு காரியம் இருந்தால் எவ் வளவோ பேர் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்.

மகாத்மா:- அப்படியானால் இனி மேல் உத்தியோகஸ்தர்களை நியமிக்கும் அதிகாரம் நீங்கள் வைத்துக் கொள் ளுகிறீர்களா?

நான்:- ஸ்ரீமான் சந்தானம் அவர்கள் தன்னால் முடியாதென்றால் நானே பார்த்துக் கொள்ளுகிறேன்.

மகாத்மா:- ஸ்ரீமான் சந்தானத்தைப் பார்த்து இனி உத்தியோகஸ்தர்கள் நியமனம் நாயக்கரிடம் விட்டுவிடுங்கள் என்றார்.

சந்தானம்;- எனக்கு ஆட்சேபனை யில்லை- சி.ராஜகோபாலாச்சாரியார் - குறுக்கே தலையிட்டு அது முடியாத காரியம். ஏனென்றால் யார் வேலை வாங்குகிறார்களோ அவர்கள் தான் வேலைக்காரரை நியமிக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஒருவர் நியமிப்பது, ஒருவர் வேலைவாங்குவதுமாயுமிருந் தால் வேலை நடக்காது என்றார்.

மகாத்மா:- உடனே (சிரித்துக் கொண்டு) நாயக்கர் சொல்லுவதில் ஏதோ உண்மை இருக்கும்போல் தோன்றுகிறது. இப்போது நான் காங்கிரஸ் பிரசி டெண்ட் ஸ்ரீமான் ஜவகர்லால்நேரு காரியதரிசி, நான் நியமித்த ஆளைக் கொண்டு ஜவகர்லால் வேலைவாங்க முடியாவிட்டால் நானாவது குற்ற வாளியாக வேண்டும், அல்லது ஜவகர்லாலாவது குற்றவாளியாக வேண்டும். நியமிக்கப்பட்ட ஆளிடம் குற்றமிருக்க நியாயமில்லை. சர்க்காரில் கூட நியமிப்பவர் ஒருவர். வேலை வாங்குபவர் ஒருவர்; அப்படிக்கிருக்க அதில் எங்கேயாவது வேலை வாங்கு பவர் நியமிக்காததால் வேலைக் காரர்கள் சரியாய் நடக்கவில்லை என்று ஏற்பட்டிருக்கிறதா? என்று கேட்டார்.

சி.ராஜகோபாலாச்சாரியார்: - வகுப்பு பிரிவினை பார்த்தால் போதுமா, வேலை நடக்க வேண்டாமா? தகுதியும் கூட பார்க்க வேண்டாமா என்றார்.

மகாத்மா:- நாயக்கர் அதையும் பார்த்துக்கொள்வார் என்றே நினைக் கிறேன். அப்படி பார்ப்பனரல்லாதாரை நியமித்ததின் மூலம் ஏதாவது வேலைகள் கொஞ்சம் கெட்டுப் போனாலும் குற்றமில்லை. இரண்டு காரியங்களும் நடக்கவேண்டியது தான். அதாவது கதர் விஷயம் எப்படி முக்கிய மானதோ அதுபோல வகுப்பு அதிருப்திகளும் நீங்க வேண்டியதும் மிக முக்கியமானது. ஆதலால் கதர்போர்டு சம்பந்தமான உத்தியோக நியமனம் நாயக்கர் கையில் இருக் கட்டும் என்று சொன்னார் காந்தியார்.

பிறகு எல்லோரும் சரி என்று ஒப்புக் கொண்டதாக அவருக்கு ஜாடை காட்டிவிட்டு வந்து விட் டோம். பிறகு எப்படி எப்படியோ பாடுபட்டு கதர் ஆதிக்கம் முழுவதும் தங்கள் கைக்கே வரும் படியாக பார்ப்பனர்கள் செய்து கொண் டார்கள். அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை. நாமும் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் கதருக்காக எவ்வளவு உழைக்கவேண்டுமோ அவ்வளவும் உழைத்தோம்; உழைத்துக் கொண்டு மிருக்கிறோம்; இனியும் உழைக்கப் போகிறோம். எனவே மகாத்மா காந்தி இவர்களை சரியானபடி அறிந்து கொள்ளவில்லை என நாம் நினைப் பது தப்பு என்றே சொல்லுவோம். (குடிஅரசு 6.3.1927)

நாயக்கர் (பெரியார்) சொல்வதில் உண்மை இருப்பதுபோல் தோன்று கிறது என்று காந்தியார் சொல்லும் அளவுக்கு ராஜாஜி உட்பட பார்ப் பனர்களில் தலைவர்களாக இருந்தவர் கள் நடந்து கொண்டனர் என்பது அம்பலமாகி விட்டதே!

------------------- -- (வளரும்)கலி.பூங்குன்றன் அவர்கள் 31-12-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

என்னே தமிழ்ப்பற்று!


திராவிடர் கழகத் தலைவர்: செல்லும் ஆண்டு, பல்வேறு அதிர்வுகளையும், வேதனைகளையும் மக்களுக்குத் தந்த சோதனை மிக்க ஆண்டாக அமைந்தது. வருகிற புத்தாண்டு, அனைவருக்கும், அனைத்தும் தரும் சாதனைமிக்க ஆண்டாக அமையட்டும்.

டவுட் தனபாலு: ஓட்டு வாங்கி அரசியல் நடத்துற கட்சித் தலைவர்கள் தான் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்றாங்கன்னா, தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழர்களுக்காகவே போராடி, தமிழினத்தையே மூச்சா வச்சுட்டு இருக்கிற, பகுத்தறிவுப் பகலவனான நீங்க எதுக்குங்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து சொல்றீங்க...? - (தினமலர், 1.1.2011)

ஏதோ இந்த ஆண்டு மட்டும் தான் திராவிடர் கழகத் தலைவர் ஆங்கிலப் புத்தாண்டு சொல்லுவது போல புதுக் கரடி விடுகிறதே தினமலர்? அப்பொழுதெல்லாம் எங்கே மேயப் போனது!

ஆங்கிலப் புத்தாண்டின் போது கோயில்களை இரவில் திறந்து வைக்கக் கூடாது என்று உங்கள் சங்கராச்சாரியார் கரடியாகக் கத்தி பார்த்தாரே - நடந்ததா? வரும்படியை விடுமா இந்தத் தினமலர் பார்ப்பன அர்ச்சகர் கூட்டம்?

அது சரி... இவ்வளவு எழுதும் இந்தத் தினமலர் கும்பல் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டி உச்சிக் குடுமியோடு திரிகிறதா - இன்னும் ஆங்கிலேயர் கலாச்சாரத்தை பேண்ட், டிசர்ட் சகிதமா திரிகிறதா?

தமிழுக்காக, தமிழர்களுக்காகப் பாடுபடுவது பெரியார் - அவர் வழிவந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி என்பதை ஒப்புக் கொண்டு விட்டது தினமலர் - பலே, பலே!

ஆமாம், திடீரென்று தமிழ் மீது என்ன பாசம்? தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று எழுதிய இதே தினமலர் சோற்றுப் பட்டாளத்துக்கு இப்பொழுது என்ன தமிழ் மீது திடீர் கரிசனம்?
---"விடுதலை” 1-1-2012

தமிழ் ஓவியா said...

இன்றே துவங்குவோம்!


இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப் படுகிறது. உலகம் ஓர் குலம் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அரிய தத்துவத்திற்கு அருமையான வாழ்வாதாரம் இது!

அது மட்டுமா? ஆங்கிலமும் தமிழும் நமக்கு இரு விழிகள்; தாய் மொழி நமது வீட்டின் கதவுகள் என்றால், ஆங்கிலம் உலகத்தை அறிந்து கொள்ளச் செய்யும் சாளரங்கள் அல்லவா?

சுதந்தரச் சிந்தனை, பல்நோக்கு, அடிமைத்தளைக்கு எதிரான போர்க் குரல், உரிமைக்குரல், தாராள மனப்பான்மை - இவை எல்லாம் ஆங்கிலம் படித்த தினால் வேகமாக உருவாகிய செயல் திறன் ஆகும்.

காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த நம்மை நாகரிகப் படுத்திடும் அறிவியலுக்கு ஆங்கிலம் அல்லவா நுழைவு வாயில்? எனவே ஆங்கிலப் புத்தாண்டை தமிழர்கள் திராவிடர்கள் கொண்டாடலாமா? என்று கேட்போர் ஒன்று விவரமறியாதோர்; இன்றேல் விஷமக்காரர்கள்!

இந்த புத்தாண்டில் பல பேர் உறுதிகள் எடுத்துக் கொள்ளுவது வழமை. பலர் சில நாள்கள் அதனைக் கடைப்பிடித்து பிறகு, மெல்ல மெல்ல அதனைக் கை விட்டு விடுவதும் உண்டு. ஆனால் சிலரோ மாறியவர்களாகவும், ஒரு எடுத்த முடிவைக் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நம் பாராட்டுதலுக்குரியவர்கள். மற்றொல்லா உறுதிகளை விட ஒரு எளிய ஆனால் பெரிய உறுதியை நாம் அனைவரும் எடுக்க முன்வர வேண்டும்.

நன்றி காட்டுதலை நம் வாழ்வின் முக்கிய மூச்சுக் காற்றாக்கிக் கொள்வோம் என்றே உறுதி செய்தல் மிகவும் முக்கியம் ஆகும். எவர் எத்தகைய உதவி செய்தாலும் அது சிறியதானாலும், பெரியதானாலும் உடனடியாக அதற்கு நன்றி கூறிடத் தயங்கக் கூடாது.

நன்றி என்பது பயனடைந்தவர் கள் காட்ட வேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர்கள் எதிர்பார்க்கக் கூடாது; அப்படி எதிர் பார்த்தால் அது சிறுமைக் குணமே என்றார் தந்தை பெரியார் அவர்கள். அது மனதில் செதுக்கப்பட வேண்டும். சிறு குழந்தை களுக்கும்கூட முதலில் வீடுகளில் பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டிய முதல் வார்த்தையே நன்றி - ஆங்கிலத்தில் Thanks என்பதாகும். நன்றி காட்ட மறந்த மக்களாலோ, சமுதாயத்தாலே ஒரு போதும் ஒரு நாளும் முன்னேறவே முடியாது. எனவே புது ஆண்டின் தொடக்க முதலே இந்தப் பழக்கத்தை நம் குழந்தைகளுக்கும், குழந்தைகளைவிட பெரியவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
---கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் வாழ்வியல் சிந்தனைகள் பகுதியிலிருந்து.. 1-1-2012