Search This Blog

15.1.12

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு -பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

தமிழ் பகைவர்கள்!

1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த முடிவு. அதிலும் முதன்மைத் தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர்சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரும் அந்த அவையில சுடர்விட்ட தமிழ் ஆய்ந்த பெரும்புலிகள்! அறிவுக் கருவூலங்கள் அணி செய்த அந்த மிக உயர்ந்த மேடையிலே, அவையிலே எடுக்கப்பட்ட அரும்பெரும் முடிவுகள் மூன்று.

(1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது

(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப் பட்டது.

அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழினச் சிங்கங்கள் கூடின.

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!

பெரியார் இப்படிக் கூறியதுதான் தாமதம். தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து என்னு டைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார். இன்று அதே சுயமரி யாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னு டைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அது முதற்கொண்டே பொங்கல் தமிழ்ப் புத்தாண்டினை ஆதரித்துக் கருத்துகள் எழுதப்பட ஆரம்பித்துவிட்டன. என்றாலும் கருத்துருவில்தான் நின்றது. அரசு ஆணையாக, சட்டமாக அரும்பிட வில்லை.

இந்தத் தொடர்ச்சியின் தொடு புள்ளியாகத்தான் அய்ந்தாம் முறையாகத் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கான - தமிழர் பண்பாட்டுத் திசையில் பெருமைக்குரிய மணிமகுட மான சட்டத்தினை நிறைவேற்றினார். (29.1.2008)

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகப் பந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் பெருக்கத்தில் திளைத்தனர்.

ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதியதோர் சட்டம் பாய்ந்து விட்டது - ஆம், பாய்ந்தே விட்டது. (23.8.2011) தமிழ்நாட்டு சட்டம் 2011 என்ன சொல்லுகிறது?


சித்திரை முதல்நாள்தான் புத்தாண்டுப் பிறப்பாக மாற்றப்பட வேண்டும் என்று யாரோ கோரிக்கைகளை வைத்தார்களாம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்களாம். யார் அந்தத் தொல்பொருள் அறிஞர்கள்? யார் அந்தப் பொது மக்கள்.

தினமணியின் முன்னாள் ஆசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் என்ன சொல்லுகிறார்?

சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ் சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற்காலத் தில் அயனப் பிறப்பு நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கங்கள் வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதைக் காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டுவிடலாம். என்றாரே அய்ராவதம் மகாதேவன் என்ற தொல்லியல் அறிஞர். (தினமணி: 26.1.2008)

அதே தினமணியில்தான் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முதல் நாள் கட்டுரை வருகிறது. மறுநாளே சட்டப் பேரவையில் அது சட்டமாகிறது - என்னே கொடுமை!

முதல் அமைச்சர் உரையில் கூட விளக்கம் இல்லையே. வழக்கமான அரசியல் வாடைகலந்த பேச்சுக் கச்சேரி தானே நடந்திருக்கிறது. கலைஞர் தலைமையிலான அரசால் நிறை வேற்றப்பட்ட சட்டம் ஒரு சுயவிளம்பரத்திற் காகவாம்.

அப்படிப் பார்க்கப்போனால், தந்தை பெரியாரும், மறைமலை அடிகளார், திரு.வி.க., உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?

நிதானம் வேண்டாமா? கலைஞரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்குரிய பெரும் தலைவர்களை யெல்லாம் இழிவு படுத்தலாமா?
பிரபவ என்று தொடங்கி அட்சயஎன்று முடிவுறும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? எல்லாம் பார்ப்பன மொழியான சமஸ்கிருதத்தைச் சார்ந்ததுதானே!

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது இதனைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்வானா? ஒரு சட்டம் போட்டு அதிகார பூர்வமாக தமிழன் தலை மீது பார்ப்பன கலாச்சாரத்தைச் சுமத்தி வைக்கும் அரசு - எப்படி அண்ணா அரசாகும்? திராவிட இயக்க அரசாகும்? அந்தப் போர்வையில் நடக்கும் ஆரிய ஆட்சி - பச்சையான பார்ப்பன ஆட்சி என்றுதானே பொருள்?

புத்த மதத்தில் ஆரியம் புகுந்த அவலம். திராவிட இயக்கத்துக்கும் நேர்ந்துவிட்டது என்றுதானே வரலாறு எழுதும்? என்னே அவலம்! என்னே அவலம்!! இதற்கு நேர்முக மாகவோ மறைமுகமாகவோ ஒப்புதல் அளித்த உறுப்பினர்கள் எந்தக் கட்சியைத் சார்ந்திருந்தாலும் அவர்கள் வரலாற்றில் கருப்புப்புள்ளி களுக்குச் சொந்தக்கார்களே! தமிழர் மீதான பண்பாட்டுப் படை யெடுப்பை மீட்டெடுத்தார் கலைஞர். மீண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்பித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்றுதானே வரலாறு கூறும். கலைஞரை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே தமிழின விரோத வலை விரித்துச் சிக்கிக் கொள்ளலாமா? 2008 தி.மு.க. சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சந்துரு வழங்கிய தீர்ப்பு என்ன?

சமஸ்கிருதத்தில் உள்ள அறுபது ஆண்டுகளின் பெயர்களைக் கூட தமிழில் மாற்ற குழு ஒன்று அமைக்கலாம் என்கிற அளவுக்கு நீதி பதி கூறியுள்ளார். முதல் அமைச்சர் ஜெயலலி தாவோ சமஸ்கிருதத்தில் அப்படியே இருக்க வேண்டும்; அதில் கை வைக்கக்கூடாது என்று ஒட்டாரம் செய்வது எந்த இன உணர்வின் அடிப்படையில்? கேள்வி எழாதா? தமிழர்கள் கேட்கமாட்டார்களா?

நீதிபதியின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?

தமிழ் கால நெடுங்கணக்கில் 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று உள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதத்தில்தான் பெயர்கள் உள்ளன. இது எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை எந்த அறிஞரும் விளக்க வில்லை. எனவே, இந்த 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று தொடர்பான விவாதம் முடி வற்றதாக உள்ளது. தமிழர்கள் இப்போது வாழும் நிலப்பரப்பை பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங் களில் ஆண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் மத நம்பிக்கை சார்ந்த உத்தரவின் அடிப்படையில் அல்லது ஆட்சியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சகாப்தம் என்பது காலந் தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது.

தமிழ்நாடு இதே போல பல சகாப்தங்களைக் கண்டுள்ளது.

1. சாலிவாகன சகாப்தம்

2. ஹிஜ்ஜிரி சகாப்தம்

3. கிறிஸ்துவ சகாப்தம்

4. சகா சகாப்தம் (திருவாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியில் நடைமுறை யில் இருந்தது.)

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகு, இப்போதைய அரசு திருவள்ளுவர் சகாப்தத்தை ஆண்டுக் கணக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. திருவள்ளுவரின் சகாப்தத் தின்படி இப்போது நடைபெற்றுக் கொண்டிருப் பது 2039 ஆம் ஆண்டு ஆகும். தமிழர்கள் இப்போதுதான் முதல் முறையாக தங்களுக்கென ஒரு சகாப்தம் உருவாக்கப்பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கு முறையை மாற்றி, மற்றொரு காலக் கணக்கு முறையை அரசு புகுத்துவது என்பது புதிதானதல்ல. அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை சரியாக உணர்ந்து கொள்ளப்படாத மத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி கேட்பது ஏற்கத்தக்கதல்ல. சமஸ்கிருதத் திலுள்ள 60 ஆண்டுகளின் பெயர்களையும் தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து பரி சீலித்து உரிய திருத் தத்தைப் பரிந்துரைக்க ஒரு வல்லுனர்கள் குழுவை அரசு நியமிக் கலாம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்கும் போது தமிழ் சகாப்தத்தை நடைமுறைப்படுத் தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது தான் அர்த்தமாகும். தமிழ் சகாப்தம் தொடர் பான அறிவிப்பை, 2008ஆம் வருடத்தில் 2ஆவது சட்டமாக அரசு கொண்டு வந்துள்ள தில் சட்ட முரண் பாடோ அல்லது அரசியல் சாசனத்திற்கு புறம் பான நிலையோ எதுவுமே இல்லை. என்றாரே நீதியரசர்!

டிராபிக் ராமசாமி என்னும் பார்ப்பனரும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை எதிர்த் துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

மாண்பமை நீதியரசர்கள் முகோபாத்தி யாயா மற்றும் வேணுகோபால் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனரே! (13-2-2008)

(இதற்கு மாறாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இப்பொழுது. சமச்சீர் கல்வி யில் செய்த அதே குளறுபடி இதிலும் இருக்கத்தான் செய்கிறது.)

யாரோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும், வானியல் அறிஞர்களும் சொன்னார்களாமே! இதைக் குறித்து தமிழ்ப் பேராசிரியர் தமிழண்ணல் என்ன சொல்லுகிறார்?

சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும் என்றல்லவா கூறியுள்ளார். இதனை மறுக்க முடியுமா? இவ்வாண்டு நூற்றாண்டு காணும் டாக்டர் மு.வ. என்ன கூறுகிறார்?

இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே! என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாத மாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பி விட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரிய னால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண் டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழ முடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர் கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத் தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடை களை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திரு விழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார் கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.
- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்).

அதே நேரத்தில் பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர். இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் யாவை?

பதில்: அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண் டாடப்படும். கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். அவ்வளவுதான். வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (துக்ளக் 30.1.2008)

ஃ ஃ ஃ அனைவருக்கும் வணக்கம். பொங்கல் வாழ்த்துகள் (ஒரு வாசகர் - புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்) அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன். நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தால் அதற்காக எங்களுக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் செய்வதற்கு நான் தயாராக இல்லை.
எந்தப் பண்டிகை வழக்கமாக நம்பிக்கை யின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ, அந்தப் பண்டிகையைத் தான் நான் ஏற்றுக் கொள்கிறேனே யொழிய, இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும் சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக்கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. கலாச்சாரத்திற்கு விரோத மானது. நான் இதை ஏற்கவில்லை.
(துக்ளக் ஆண்டு விழாவில் சோ. ராமசாமி - துக்ளக் 27.1.2010)
முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சட்டத் தின் வாசகத்திலும், முதல் அமைச்சரின் அது தொடர்பான சட்டப் பேரவைப் பேச்சிலும் துக்ளக் சோ ராமசாமி எழுதி வந்த, பேசி வந்த அந்தப் பச்சையான வாடை அப்படியே வீசுகிறதே - இதன் பின்னணி என்ன?

கேள்வி: ஜி.ஜெயராமன், கூந்தலூர்.

தமிழர்களின் புத்தாண்டு தைமுதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல்வர்?

பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணை யில் அமர்த்திய கதைதான்! (கல்கி 27.1.2008)
பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் பிசிறு சிறிதும் இல்லாமல், சுருதி பேதம் இல்லாமல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் பூணூலை முறுக்கிக் கொண்டு சிலம்பம் ஆடுவதன் நோக்கம் என்ன?

தமிழா சிந்தித்துப்பார்!

****

தை முதல்நாள் - கழகத்தின் முயற்சியும் கலைஞரின் செயல்பாடும்

சென்னை கலைவாணர் அரங்கில் 29-4-1990 அன்று நடந்த புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல்வர் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார்கள்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல் நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ளத் தமிழக முதல்வர் அவர்கள் ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழ்ப் புத்தாண்டு என்று கூறப்படும் அறுபது ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ்ச் சொல்லே அல்ல! நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த குழந்தைகள்தான் பிரபவ என்று தொடங்கி, அட்சய என்று முடியும் 60 குழந்தைகள் என்று கூறுவது தமிழர் பண்பாட்டிற்கும், பகுத்தறிவுக்கும் பொருத்தமற்ற அருவருப்பான கதையாகும். உலக மத்தியில் தமிழர்களைத் தலை குனிய வைக்கும் செய்தியாகும். தமிழுணர்வும், இனவுணர்வும் படைத்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் இக்கால கட்டத்திலேயே இந்த ஆபாசத்துக்கு விடை கொடுக்கப்பட்டு, தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டுமாய் புரட்சிக் கவிஞரின் நூற்றாண்டு விழா நடைபெறும் இந்தப் பொருத்தமான நாளில் கேட்டுக் கொள்கிறோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கலைஞர் அவர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கிறார்கள்.இவ்வாறு மானமிகு கி.வீரமணி அவர்கள் முதல்வர் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்து அவ்விழாவில் முதல்வர் கலைஞர் பேசும்போது கூறியதாவது:

தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் முதல் துவங்கவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் எனது அருமை இளவல் வீரமணி இங்கே குறிப்பிட்டார். தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். - இவ்வாறு முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார்.

-------------------------------விடுதலை, 30.4.1990

தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு சட்டம்

தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம்தான் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதாகும். 29.1.2008 அன்று நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ் விரோதம்

27.8.2011 அன்று அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமிழ்நாடு தமிழ்ப் புத்தாண்டு (விளம்புகை) நீக்க சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், யாருக்கும் பயனளிக்காத காலங்காலமாகப் போற்றிப் பாதுகாத்து வந்த மரபுகளை மீறுகின்ற, தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்ற, இந்தச் சட்டத்தினை ரத்து செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எனது கருத்தினைப் பதிவு செய்கிறேன் என்றார் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா (27.8.2011).

இதன்மூலம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி தமிழ், தமிழினப் பண்பாட்டுக்கு தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைக்கும் விரோதமான ஆட்சி என்பதைத் தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டார்.

----------------கலி.பூங்குன்றன் அவர்கள் 12-1-2012 “விடுதலை” பொங்கல் சிறப்பு மலரில் எழுதிய கட்டுரை

2 comments:

தமிழ் ஓவியா said...

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு


தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று

பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தை முதல் நாள் பொங்கல் நன்னாள்; நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு

அண்டிப் பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு

தரணி ஆண்ட தமிழர்க்கு

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

பொங்கலும் தந்தை பெரியாரின் இசைவும்!

(மலேசியா நாட்டின் தலைநகரம் கோலாலம்பூரில் 6.1.2001 அன்று நடைபெற்ற தை முதல் நாளே தமிழ் புத்தாண்டுத் தொடக்கம் என்பதை வலியுறுத்தி உலகப் பரிந்துரை மாநாட்டின் போது வெளியிடப்பட்ட பொங்கல் சிறப்பு மலரில் புலவர் க.ப.சாமி அவர்களுடன் நேர்காணல் தொகுப்பி லிருந்து)

1935இல் திருச்சியில் அகில தமிழர் மாநாடு என்று ஒரு மாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்றது. அதில் கா.சுப்பிரமணியனார், மதுரை தமிழ்வேள், பி.டி.இராசன், திரு.வி.க. மறைமலையடிகளார் முதலான தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நானும் அக்காலத்தில் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு பெற்றிருந்தமையால் அங்கு இருந்த சூழ்நிலையில் அம்மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில்தான் பலத்த விவாதம் நடைபெற்றது. பொங்கல் சமய விழாவா, சமயமற்ற விழாவா என்று பலத்த விவாதம். அப்படி பலத்த விவாதம் செய்யும் போது, இறுதியாக மறைமலையடிகளார் திட்டவட்டமாகச் சொல்லி விட்டார், பொங்கலைச் சமய விழா என்று சொல்லி சர்ச்சையை கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம்மாநாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டார். இது சமயச் சார்பு இல்லாத விழா. எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான். எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்தப் புராணம் இருக்கிறது? எந்த இதிகாசம் இருக்கிறது? என்று கேட்டு மிகவும் சீற்றம் அடைந்தார். எனவே எந்தப் புராணமும் இல்லாத போது தமிழில் புறநானூற்றில் பிட்டங்கொற்றனின் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கிறது. இதை யார் மறுக்க முடியும் என்றார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் தெளிவாக பதிலுரைத்தார். பெரியார் தான் இம்மாநாட்டை நடத்தினார். பொங்கல் மதச்சார்பற்ற முதன்மையான பொன்னான தமிழர் விழா என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று பெரியார் சொன்னதும், அனைவரும் கையொலி எழுப்பினர். இவ்வாறு பெரியார் சொன்னதும் திருவி.க. எழுந்து, என்னுடைய அருமை நண்பர், ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்த சுயமரியாதை இயக்கத்தை; நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார்; இன்று அதே சுயமரியாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் இந்தப் பொங்கலை சமயச் சார்பற்ற ஒரு தனிப்பெரும் தமிழன் விழா என்று ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழுலகமே பாராட்டுதலை செய்வதற்குக் காத்து கொண்டிருக்கிறது அதன் பிறகுதான் மிகச் சிறந்த விழாவாக பொங்கலை அனைவரும் ஏற்கத் தொடங்கினர்.

இச்செய்தி பலருக்கு தெரியாது. பெரியார் ஏற்றுக் கொண்ட பிறகுதான் குடியரசு இதழிலும் ஏனைய திராவிடர் கழக ஏடுகளிலும் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டினை ஆதரித்து கருத்துகள் எழுதப்பட்டன. நான் அம்மாநாட்டில் கலந்து கொண்டேன். எனக்கு அப்பொழுது 19 வயது.

அச்சிறப்புக்குரிய மாநாட்டில் கலந்து கொண்ட சிறப்பு வருகையாளர்கள், அறிஞர்கள் வருமாறு:

1. கரந்தை தமிழ்ச் சங்கத் தவைர் உமா.மகேசுவரனார்,

2. பேராசிரியர் கா.சுப்பிரமணியம் பிள்ளை

3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

4. திரு.வி.க. அவர்கள்

5. மறைமலையடிகளார்

6. தந்தை பெரியார்

7. பி.டி.ராஜன் தமிழவேள் (மாநாட்டு சிறப்புச் சொற்பொழிவாளர்)

இன்னும் பலரும் வந்திருந்தனர். அதை தவிர்த்து தமிழைப் பற்றியும் தமிழரைப் பற்றியும் பேசியவர் ஆற்காடு இராமசாமி முதலியார். பாவேந்தர் பாரதிதாசனும் வந்திருந்தார். ஆனால் அப்பொழுது அவர் அவ்வளவு சிறப்பு பெறவில்லை. அக்கூட்டத்தில் மூன்று மணிநேரம் மிகச் சிறப்பாக தமிழனின் வீரத்தை அள்ளி வைத்து பிழிந்து எடுத்தவர், பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆவார்.

அம்மாநாடு முதன்மையாக இந்தி மொழியை எதிர்ப்பதற்குக் கூட்டப் பெற்றதுதான். அதில்தான் பொங்கலைப் பற்றிய தீர்மானம் முன்மொழிந்து வழிமொழியப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிந்தவர் பி.டி.ராஜன், வழிமொழிந்தவர் திரு.வி.க. அவர்கள்.

எனவே பொங்கலுக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் அதுவே தமிழர் திருநாள், அது மதச்சார்பற்ற ஒரு விழா என்பதை நான் ஆணித்தரமாகக் கூறுவேன். 12-1-2012