Search This Blog

8.1.12

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! - 26

அண்ணா போப்பை சந்தித்தது - ஏன்?


anna

வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தின் போது, போப்பாண்டவர் அவருக்குத் தரிசனமும், ஆசீர்வாதமும் அளித்தார். அப்போது அண்ணாதுரை சமய மரபுகளிலிருந்து வழுவாமல் நடந்து கொண்டார் என்று பூடகமாகக் குறிப்பிடுகிறார் திருவாளர் கே.சி.லட் சுமி நாராயணன் அய்யர் (துக்ளக் 28.-12.-2011).

இந்த வரிகளைப் படிக்கும்போது அண்ணா அவர்கள் தமது பகுத்தறிவுக் கொள்கைளை விட்டுவிட்டு நடந்து கொண்டது போல தரிசனம், ஆசீர் வாதம், சமய மரபுகளிலிருந்து நழுவாமை என்ற வார்த்தைகளைச் சன்னமாகப் பயன்படுத்தியுள்ள பார்ப்பனத்தனத் தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

போப் கத்தோலிக்க மதமக்களின் தலைவர் மட்டுமல்லர்; வாடிகன் நகரின் ஆட்சியாளரும் கூட. அண்ணா அவர்கள் முதல் அமைச்சர் என்ற முறையில் வாடிகன் ஆட்சியாளரைச் சந்தித்தார் என்பதுதான் உண்மை. அதனை வேறு வகையில் எழுதித் தன் புரட்டுத் தனப் புத்தியைக் காட்டுகிறது துக்ளக்.

வாடிகன் அதிபர் போப் ஆண்ட வரை முதல்வர் அண்ணா சந்தித்து வைத்த கோரிக்கை - அதன் விளைவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

கோவா, டையூ, டாமன் ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த போர்ச்சுகீசிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து உரிமைப் போர் தொடுத்திருந்த நேரம் அது. அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய ரானடேயைக் கைது செய்து போர்ச்சுகல் அரசு தங்கள் நாட் டுக்குக் கொண்டு சென்று சிறையில் அடைத்தது. போர்ச்சுகீசியர் இந்தியாவை விட்டுச் சென்ற பிறகும், கோவா விடுதலை பெற்ற பிறகும் கூட ரானடே விடுதலை செய்யப்படவில்லை. இந்திய அரசு செய்த முயற்சியும் பயனளிக்கவில்லை. போர்ச்சுகீசிய அரசு போப்பின் செல்வாக்குக்கு உட்பட்டதால், ரானடேயை விடுதலை செய்யுமாறு அண்ணா அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று போப் ரானடேயை விடுதலை செய்யச் செய்தார்.

விடுதலை அடைந்த அந்த விடுதலை வீரன் நன்றி தெரிவிக்க சென்னை வந்தபோது அண்ணா அவர்கள் உயிருடன் இல்லை என்பது மிகப் பெரிய சோகம் ஆகும்.

திராவிட இயக்கத் தீரரான அண்ணாவுக்கு இந்தப் பெருமைகள் போய்ச் சேர்ந்துவிடக்கூடாது என்பதில் பார்ப்பனர்களுக்குத்தான் எவ்வளவு விழிப்பு!

இதனை இருட்டடித்ததோடு மட்டு மல்லாமல், அண்ணா தன் பகுத்தறிவுக் கொள்கையை விட்டு போப்பின் தரிசனத்துக்குக் காத்திருந்தது போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் காட் டுவது பார்ப்பனர்களின் யோக்கியதைப் பொறுப்புக்கு ஓர் அடையாளம்தான்.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, ஒரு நிகழ்ச்சி. அப்பொழுது மத்திய போக்கு வரத்துத் துறை அமைச்சர் டாக்டர் வி.கே.ஆர். வி.ராவ் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தூத்துக்குடி துறைமுகத் திட்டம்; அது வெற்றிகரமாக ஆன நிலையில் மத்திய அமைச்சர் ராவ் அவர்கள் காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜர் கோவிலுக்குச் சென்று நன்றி செலுத்திட அண்ணாவை அழைத்தார். அப்பொழுது முதல்வர் அண்ணா என்ன சொன்னார்? நான் கோவிலுக்கு வருவதில்லை. வேண்டுமானால் துணைக்கு ஒருவரை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினாரே!

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளை எதிர்க்க முடியாதவர்கள், தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை வெல்ல முடியாதவர்கள், ஒரு பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழித்துவிட்டது உண்டு; விடுவதும் உண்டு.

பெரியார் வீட்டுக்குள்ளும் பிள்ளை யார் படம் இருக்கிறது என்கிற கட்டுக் கதைதான் அது. இந்தக் கோழைத்தனம் இன்றளவும் இந்தப் பார்ப்பனர்களுக்கு உண்டு; நாளையும் அவர்களை விடப்போவதில்லை.

கே.சி. லட்சுமிநாராயண அய்யர் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்.

1962 பொதுத் தேர்தலின் போது ராஜாஜியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எனக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் நான் பகவத் கீதையைப் படிக் கிறேன் என்று அண்ணாதுரை தெரிவித்ததை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன் என்று எழுதுகிறார்.

பகுத்தறிவாளர்கள் கீதையை மட்டுமல்ல; இராமாயணம், மகாபாரதம், பதினெண் புராணங்களையும் படிக்கக்கூடியவர்கள்தான். எதையும் படித்துப் பார்த்துதான் அவற்றின் மூடத்தனத்தை, முடை நாற்றமெடுக்கும் ஆபாசத்தின் முகத்திரையைக் கிழித்து எடுத்துக் காட்டி வருகிறோம்.

தந்தை பெரியார் அவர்கள் படிக்காத இராமாயணங்களா? அப்படி அக்குவேர், ஆணிவேர், மூலவேர் வரை சென்று படித்துப் பார்த்துதான் இராமாயணப் பாத்திரங்கள் எனும் நூலை எழுதினார். அது ஆங்கிலத் திலும், மராட்டியத்திலும், இந்தியிலும் கூட மொழிபெயர்க்கப்பட்டு இலட்சக்கணக்கில் மக்களைச் சென்று அடைந்ததும் உண்மை.

இதுவரை பார்ப்பனர்களாலோ, எந்தக் கொம்பர்களாலோ ஒரு வரியை மறுக்க முடிந்ததா?

அண்ணா அவர்கள் ஏதோ பகவத் கீதையால் தன் பகுத்தறிவைப் பறி கொடுத்துவிட்டார் என்ற தொனியில் எழுதுவது யோக்கியமானதுதானா?

இந்த ஆரிய ஏடுகளை எல்லாம் கொளுத்த வேண்டும் என்று எழுதியவர், பேசியவர் அண்ணா ஆவார்.

புலியைக் கொன்று தோலை ஆசன மாக்குவது போல் சுயமரியாதைக்காரர் களாகிய நாங்கள் ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம், அதிலே புதைந் துள்ள ஆரிய நச்சுக் கொள்கைகளை நாட்டு மக்கள் கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

எமது செயலின் விளைவாக அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந் தொழிந்திடின், புலி செத்த பின் தோலை உபயோகிப்பது போல் ஆரியம் அழிக்கப்பட்ட பிறகு, ஏடுகளின் இலக்கண, இலக்கிய எழிலை எடுத்துத் தழுவிக் கொண்டு நீங்கள் பூரித்து வாழுங்கள்.
(திராவிட நாடு - _ 9.-5.-1943)

இப்படிப்பட்ட அண்ணாவைத் தான் கீதைப் பக்தராக மாற்றிக் காட்டப் பார்க்கிறது ஆரியம்.


பள்ளிப் புத்தகத்தைப் பார்க்கிறோம். ஆரம்பப் பள்ளியின் புத்தகத்தில் ஒரு படம் இருக்கும். ஒரு குழந்தை குனிந்து நிற்க, இன்னொரு குழந்தை முதுகில் ஏறி உறியிலிருந்து வெண்ணெய் எடுப்பதாகப் படம் இருக்கும்.

கண்ணன் தின்னும் பண்டம் எது? கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படிப் போட்டிருக்கும். கைக் கெட்டாத பொருளை எவருக்கும் தெரி யாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.அந்தக் கருத்தை இங்கு சொல்ல வில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.

பள்ளிக்கூடத்துக் கட்டடத்திற்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட் டத்தில் காய்த்துத் தொங்குகிற மாங்கனியைப் பறிக்க சோனிப் பையன் ஒருவனை குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளை களுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இந்தக் கருத்தை பகுத்தறிவு என்று எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும், தரமும் பெருகும்.

முதலமைச்சர் அண்ணா. கல்வி மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 23-.3.-1967 இல் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது. - விடுதலை 25.-03.-1967)

உண்மையைச் சொல்லப் போனால் சுயமரியாதை பிரச்சாரத்தின் காரணமாக ஆண்டாள் கதை பொய் என்று சொன்னவர் ராஜாஜி; சோதிடம் பொய் என்று ஆச்சாரியாரைக் கூறச் செய்தது சுயமரியாதை இயக்கம் என்று சொல்ல முடியுமே!

ஓர் உண்மையை ஒப்புக் கொண் டவர் ராஜாஜி என்பது துக்ளக் கூட் டத்துக்குத் தெரியுமா?

நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைதான் அதிகம் என்றாரே முதலமைச்சராக இருந்த ராஜாஜி.

(சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் 15-.4.-1953).

ராஜாஜி பெரியார் வழிக்கு வந்தார் என்றால் அக்ரகாரம் ஏற்றுக் கொள்ளுமா?

துக்ளக்கோ, கே.சி. நாராயணன்களோ, தாங்கள் தமிழர் அல்லர்; பார்ப்பனர்கள் என்னும் மனப்பான்மையுடன்தானே ஒவ்வொன்றையும் அணுகுகின்றனர்.

சந்தானம் அய்யங்காரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூட எப்படி அறிமுகப்படுத்துகிறது துக்ளக்?

க.சந்தானம் பெரும் சுதந்திரப் போராட்ட வீரர், வரலாற்று சிறப்பு மிக்க வேதாரண்யம் உப்பு சத்தியா கிரகத்தில் ராஜாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அடுத்தபடியாக சந்தானம் அப் போராட்டத்திற்குப் பொறுப்பேற்றார். அடுத்த நாலைந்து தினங்களில் அவரும் கைதாகிச் சென்றார். (துக்ளக் 26.-12.-2011)

இந்த வேதாரண்யம் உப்புச் சத்தியாக் கிரகத்தில் தனக்குப் பிறகு ராஜாஜி சந்தானத்தை தலைமை தாங்கச் சொன்னது ஏன்? அதன் பின்னணியில் உள்ள இனப் பாசம் எத்தகையது? பூணூல்தனத்தின் டிகிரி என்ன?

இதோ திரு.வி.க. அவர்களே எழுதுகிறார்:

தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகப் போருக்கு உரிய களனாக வேதாரண்யம் குறிக்கப்பட்டது. இராஜ கோபாலாச் சாரியார் தண்டுகளுடன் திருச்சியினின்றும் புறப்பட்டார்.

சிதம்பரத்தண்டு

சிதம்பரத்தினின்றும் ஒரு தண்டை நடாத்திச் செல்லத் தண்டபாணி பிள்ளை உள்ளிட்ட சிலர் முயன்றனர். அதற்கு என் தலைமை விரும்பப் பட்டது. அவ்விருப்பத்தைக் குலைக்க என் மனம் எழவில்லை. அதே சமயத்தில் இராஜகோபாலாச்சாரியார் பிடிபட்டதும் தொடர்ந்த போருக்கு நான் நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கேள்வியுற்றேன். இராஜகோபாலாச் சாரியார் கடிதமும் எழுதவில்லை; வேறு வழியாகத் தெரியப் படுத்தவுமில்லை. எனது நியமனம் வெறும் வதந்தி என்று கருதினேன். எதற்குஞ் சித்தமாயிருக்க லாமென்று எண்ணினேன்.

பத்திரிகைத் திருவிளையாடல்

திருச்சியினின்றும் புறப்பட்ட படையையன்றி வேறு படைகள் யாண்டும் திரளலாகாதென்றும், அவை வேதாரண்யம் நோக்கலாகாதென்னும் ஓர் அறிக்கை இராஜகோபாலாச்சாரி யாரிடமிருந்து வெளிவந்தது. ஆச் சாரியாருக்குப் பின்னர் கே.சந்தானம் நியமிக்கப் பட்ட செய்தியும் எட்டியது. சிதம்பர முயற்சி சிதறியது. எழுந்த என் உள்ளமும் விழுந்தது. நிகழ்ந்தன இவ்வளவே.

பத்திரிகை உலகம் திருவிளையாடல் புரியத் தொடங்கியது. சில பத்திரிகைகள் கலியாணசுந்தர முதலியார் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சித்தமாயிருந்தார்; ஏமாற்றப்பட்டார். ஒரு பிராமணரல்லாதார் தலைமை பூண்டு படையைத் திரட்டிச் செல்லப் பிராமணர்கள் கண்பார்க்குமோ என்று எழுதின. வேறு சில பத்திரிகைகள், முதலியார் வேதாரண்யம் புறப்பட்டு விட்டார் என்று திரித்தன. மற்றுஞ்சில பத்திரிகைகள் உண்மையை வெளி யிட்டன. பத்திரிகைச் செய்திகள் நாட்டைக் குழப்பின. போர் முடியும் தறுவாயில் எனக்கு அழைப்புகள் வந்தன. அவை என் மனத்தைக் கவரவில்லை.

(திரு.வி.க. எழுதி வைத்த வாழ்க்கைக் குறிப்பு- I பக்கம் 318-319)

வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ராஜாஜி சந்தானத்தைத் தனக்குப் பின் தலைமை தாங்கச் செய்த சூழ்ச்சியின் பின்னணி இதுதான். இதனை பெரியார் சொல்லவில்லை.

ஒரு கால கட்டத்தில் பார்ப்பனர் களின் செல்லப் பிள்ளையாக இருந்த திரு.வி.க.தான் வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் விளையாடிய பார்ப்பனத் தனத்தைத் தன் சன்னமான எழுத்துகளால் வழிய விட்டுள்ளார்.

-------------------------------- (இன்னும் உண்டு)
------------------------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 7-1-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: