Search This Blog

24.1.12

உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா?பரபரப்பான விற்பனையில்...


இதுவரையில் திராவிட மாயை, திராவிடப் புரட்டு என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் ஆரிய திராவிடப் புரட்டு என்று வந்தார்கள் பாருங்கள் - அதுவே நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதற்கு அடையாளம். பெரியார் வெற்றி கண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளம் என்று எடுத்த எடுப்பிலேயே ஆணித்தரமான கருத்தை முன்வைத்தார் தி.க.தலைவர் கி.வீரமணி.

சென்னை பெரியார் திடல், திராவிட இயக்கத்தின் தலைமைப் பீடம். அங்கிருந்துதான் பெரியாரின் கொள்கைப் போர்வாள் கி.வீரமணி அவர்களின் போர் முழக்கம் இன எதிரிகளின் புரட்டு நூலுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது. வரலாறு இல்லாத ஆரியக் கும்பல் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதிவைத்து, அதற்கு கடவுள் வண்ணம் பூசி, புராணங்களாக்கி, மக்களை முட்டாளாக்கி வைத்திருந்தது. பெரியார் ஏந்திய அறிவாயுதம் அந்த மடமையை மாய்த்தது. அறியாமையை விலக்கி அறிவை விதைத்தது. அதன் பின்னர் புதிய புராணங்களைப் புளுக முடியாத ஆரியம் வரலாற்றுப் புரட்டைச் செய்யத் தொடங்கியது. அதன் ஒரு திட்டமிட்ட புரட்டாக வெளிவந்துள்ள ``உடையும் இந்தியா?ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்று நூலின் பொய்யுரைகளைத் தோலுரித்த நிகழ்வில்தான் அப்படிப் பேசினார் ஆசிரியர் கி.வீரமணி.

உடையும் இந்தியாவா?உடையும் ஆரியமா? என்ற அந்த நிகழ்வில் திராவிட இனத்தின் தொன்மையை அறிஞர்களின் மேற்கோளுடன் எடுத்துக் காட்டி அரிய உரையை நிகழ்த்தினார். உடையும் இந்தியா? என்ற இந்த நூலில் பக்கம் 122-ல் சொல்லப்பட்டிருக்கிற செய்தியைப் படிக்கின்றேன்.

ராபர்ட் கால்டுவெல்லின்- பிராமண வெறுப்பே பின்னாளைய திராவிட இயக்கத்தின் பிராமண வெறுப்பியலின் அடிப்படையாக இருந்தது.

ராபர்ட் கால்டுவெல்லின் வெறுப்பைத் தான் திராவிட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார்கள். எனக் கூறிய கி.வீரமணி, அப்படியானால், கபிலர் யார்? ராபர்ட் கால்டுவெல்லுக்கு முந்தியவரா? பிந்தியவரா?

கபிலருடைய பாடலை சாதாரணமாகப் பாடும்பொழுது சொல்வார்கள்,
பார்ப்பன மாந்தர்காள்
பகர்வது கேண்மின்!
... ... ...
நால்வகை ஜாதியை
இந்நாட்டில் நாட்டினீர்
என்று வரிசையாக பாடல் வரும்.

பற்பல நாட்டிலும் பார்ப்பனர் இல்லையோ என்றுதான் முடியும் எனக் கூறினார்.

திராவிடம் என்ற வார்த்தையைக் கால்டுவெல் தான் பரப்பினார் எனக் கூறும் புரட்டை மறுத்து, மனுதர்மத்தில் இருந்தே திராவிடம் என்ற வார்த்தைக்கான ஆதாரங்களை எடுத்து வைத்தார்.

மனுதர்மம் பத்தாவது அத்தியாயம்,
-சுலோகம் 43-ல்

பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் க்ஷத்திரியஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத் தன்மையை யடைந்தார்கள்.

சுலோகம் 44ல்
பௌண்டரம் ஔண்டரம் திரவிடம்
காம்போசம் யவ நம் சகம் பாரதம்
பால் ஹீகம் சீநம் கிராதம் தரதம் கசம்
இந்தத்தே சங்களை யாண்டவர்க ளனைவரும்
மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் பார்ப்பான் என்ற சொல்லைத் தவிர பிராமணன் என்ற சொல் வரவில்லை.

இது தமிழ் இலக்கியமல்ல. மனுதர்ம சாஸ்திரம். இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மனுதர்மத்தில் என்ன சொல்லு கிறது? பௌண்டரம், ஔண்டரம், திரவிடம், காம்போசம், யவநம் சகம், பாரதம்.

இவைகளை எல்லாம் ஆண்டவர்கள் மேற்சொன்னபடி சூத்திராளாய் விட்டார்கள்.
மனுதர்மம் சுலோகம் 45ல்

உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும் சங்கர சாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாயும் சிலர் சமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள்.

ஆகினும் அனைவரும் தஸ்யூக்களென்று சொல்லப்படுவார்கள்.

கீழ்ஜாதிக்காரன் தப்பித் தவறி சமஸ்கிருதம் படித்திருந்தால்கூட அவர்கள் யார் என்றால், அவர்கள் அனைவரும் தஸ்யூக்கள் என்று மனுதர்மம் சொல்வதை எடுத்துக் காட்டி, திராவிடம் என்ற ஒரு நிலப்பிரிவு இருந்ததையும் ஆரியர்கள் உருவாக்கிய நால்வருண ஜாதி முறையையும் அவர்களே ஒப்புக்கொண்டதை நிறுவினார்.

ஆ.சிங்காரவேலு முதலியார் தொகுத்த அபிதான சிந்தாமணி என்ற நூலின் 1079 பக்கத்தில் தேசம் என்ற தலைப்பில்


இந்த நாட்டில் 56 தேசங்கள் இருந்திருக்கிறது என்ற குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. அதில் திராவிடம் என்பதும் ஒன்று! என்பதையும் எடுத்துக்காட்டினார்.

இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்து கவலைப் படுவது போல பாவனை செய்வோர் மேற்கு வங்கத்தில் முதன்முதலில் சிராஜ் யுத்தவலாவை அழைத்து வந்து வெள்ளைக்காரனுக்குக் காட்டிக் கொடுத்தது உமீன்சந்த் என்ற பார்ப்பனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இந்த நாட்டில் அய்ரோப்பியர் ஆதிக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டதே அவர்கள்தான். இவ்வளவு பெரிய தீமைக்கு வித்திட்டவன் யார்? புஷ்ய மித்திர சுங்கன் எப்படி மவுரிய சாம்ராஜ்ஜியத்தையே அழித்தான்? எத்தனை கொலை? எத்தனை கொள்ளை? இப்படி வரலாற்றில் வரிசையாக சொல்லிக் கொண்டு போகலாம். அதுமட்டுமல்ல, மனுதர்மத்தை மட்டும் விளக்கிச் சொன்னால் ஏராளம் சொல்லலாம் என்று கூறியவர் பி.டி. சீனிவாச அய்யங்கார் எழுதிய தமிழர் வரலாறு நூலில் திராவிடம் என்றால் திராவிடர்கள் இருந்த இடம் என்.று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டினார்.

இவற்றை ஆரிய திராவிடப் புரட்டு என்று எழுதுகிறவர்கள் மறைப்பது ஏன்-?

மேலும் அதே தமிழர் வரலாறு பக்கம் 91 இல் உள்ளதாவது:

ரிக் வேதம் X 61.8

சரத்பாதா ந தட்சிணா பராவ்ர்ண் ந தா ங மே பர்சந்யோ ஜக்ர்ப்ரே என்பதில் வரும் தட்சிணா தென்னாட் டையே குறித்ததாக மக்டானல், கீத் ஆகியோர் கூறுவதே சரி. (தட்சிணா = கொடை என சயனர் கூறுவது சரியல்ல).

அய்த்தரேய பிராமணத்தில் VII -18 தனது 50 மகன்களையும், விசுவாமித்திரர் (கி.மு.2500) சபிக்கும்பொழுது அவர்கள் வாரிசுகள் (ஆரிய வர்த்த) எல்லைக்கப்பால் வசிக்கும் ஆந்திர, புண்டர, சபா, புலிந்த இனத்தாராக அதாவது அனாரிய தஸ்யுக்களாக பிறப்பார்கள் எனச் சபிப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது .

பிற்கால மனுஸ்மிருதியும் (இது மனுஸ்மிருதிக்கு முன்னாலே) (1122,44) இமயமலைக்கும், விந்திய மலைக்கும் நடுவில் உள்ளதும், கருநிறமான மானின் வாழ்விடமும் ஆன பகுதியே ஆரிய வர்த்தம் என்கிறது. இதை எழுதியது யார் பி.டி. சீனிவாச அய்யங்கார். பெரியார் அல்ல என்று கி.வீரமணி எடுத்துரைத்தார்.

தட்சிண பாதா, தக்க்ஷிண எனச் சுருங்கியது. பிராகிருதத்தில் தக்கிண, பண்டைக் காலத்தில் தட்சிண என்பது தமிழ்நாடு உள்பட தென்னிந்தியா முழுவதை யும் குறித்தது. பிற்கால முகமதியர்களும், அவர்களைப் பின்பற்றி ஆங்கிலேயர்களும் தான். தக்கணம் என்பதை தக்கண பீட பூமியை மட்டும் (தமிழகம் நீங்கலாக) குறிக்கப் பயன்படுத்தினர் தமிழ்த்தென்றல் திரு.வி.க-. சொல்லுகிறார் திராவிடம் என்கிற சொல் பிராமி மொழியிலும் இருக்கிறது. பிராமி மன்னன் நிக்கலஸ் ஆட்சி சரித்திரத்தில் திராவிடர் களைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

ஸ்மிருதியிலும் பஞ்ச திராவிடம் குறிக்கப்பட் டிருக்கிறது. மலையாளம், ஆந்திரம், கேரளம் அவற்றோடு அய்ந்து திராவிடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. எல்லையப்பரின் மொழி பெயர்ப்பின் மூலம் நாம் இதை அறியலாம். சுமார் 55 ஆண்டு களுக்கு முன் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சபாபதி நாவலர் என்கிற தமிழ் நாவலரால் எழுதப்பட்ட திராவிடப் பிரகாசிகா என்னும் நூலிலும், திராவிடம் என்ற வார்த்தைக்குப் பல ஆதாரங்கள் காட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம் என்று சொல்லியுள்ளதையும், இன்று இந்த நாட்டின் தேசிய பாட்டாக வழங்கி வரும் ஜனகனமனவிலும் கவி ரவீந்திர நாத் தாகூர் அவர்கள் திராவிட உத்கலவங்கா என்று சொல்லியிருக்கின்றாரா இல்லையா?

தேசிய கீதத்திலேயே திராவிடம் இடம்பெற் றிருக்கிறதா இல்லையா? என்று திரு.வி.க கேட்டதையும் எடுத்துரைத்தார்.

ஆகவே திராவிடம் என்பது கற்பனை இல்லை என்று சொல்லுவதற்கு மனு தர்மத்தையே சுட்டிக் காட்டுகிறோம்.. அப்புறம் என்ன கால்டு வெல்?

கால்டுவெல்லிடமிருந்து கரு எடுத்துக் கொண்டார் என்று சொன்னால், மனு யார்? கால்டு வெல்லுக்கு மச்சானா? நாங்கள் மட்டுமல்ல.. வருகிற தலைமுறையினர் கேட்க மாட்டார்களா? நடுநியைளர்கள் சிந்திக்க வேண்டாமா? மனுவுக்கும் கால்டுவெல்லுக்கும் என்ன தொடர்பு?- என்ன ஒற்றுமை?

திராவிடர் என்று நாம் சொல்லுவது இருக்கிறதே அது பண்பாட்டை நமது பழக்க வழக்கத்தைப் பொறுத்ததுதானே தவிர இந்த காலத்தில் யாரும் ரத்த ஆராய்ச்சி பண்ணிக் கொண்டு பார்க்கத் தயாராக இல்லை.

ரத்தப் பரிசோதனை நடத்தி பிரிப்பதில்லை

யாருடைய ரத்தம் யாருக்கு வேண்டு மானாலும் கொடுக் கலாம். எந்த ரத்த குரூப் உள்ளவனோ அவருக்கு அந்த குரூப் ரத்தம் பொருந்தும். அது யாராக இருந்தாலும் சரி. உலகப் பூராவும் அறிவியல் பூர்வமாக ரத்தத்தைப் பிரித்திருக்கிறார்கள்.

அதனால் ஆரியம்- திராவிடம் என்று நாங்கள் பிரிக்கும் பொழுது ரத்த பரிசோதனை நடத்திப் பிரிப்பதில்லை. ஆரிய மனப்பான்மையும், பார்ப் பனீயத் தன்மையும் எப்படி இருக்கிறது? என்று கி.வீரமணி ஆதாரங்களை அடுக்கினார்.

நாங்கள் சமீபத்தில் வெளியிட்டிருக்கின்ற குடிஅரசு 34ஆவது தொகுதி அதாவது 1945 குடிஅரசில் திராவிடர் வார்த்தை விளக்கம் என்று பெரிய தலையங் கத்தை தந்தை பெரியார் எழுதியிருக் கின்றார்.

அதிகாரப் பூர்வமாக அதில் பல செய்திகளை தந்தை பெரியார் சொல்லுகின்றார்.

அதிலே ஒரு பகுதியை நான் சுட்டிக் காட்டுகிறேன்.

ஆரியன், திராவிடன் என்பது கலந்து போய் விட்டது. பிரிக்க முடியாதது. ரத்தப் பரீட்சையாலும் வேறு படுத்த முடியாது என்று ஒரு சிலர் வாதாடலாம். அது நமது கருத்தை அறியாமல் பேசும் அறிவற்ற பேச்சு என்றே சொல்லுவேன். (பெரியார் சொல்லுகிறார்) ஆரிய, திராவிடர் ரத்தம் கலந்து விட்டிருக்கலாமே தவிர, ஆரிய- திராவிட ஆச்சார, அனுஷ்டானங்கள் கலந்துவிட்டனவா? ஏன் இன்னமும் தமிழ் ஆண்டு வேண்டும் என்று கேட்டால் ஏன் பார்ப்பனீயம் சங்கடப்படுகிறது?

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன். பிரம்மாவின் தோளில் பிறந்தவன் சத்திரியன். தொடையில் பிறந்தவன் வைசியன். காலில் பிறந்தவன் சூத்திரன் என்று எழுதி வைத்து இன்றும் அது மனுதர்மத்தில் இருக்கிறதா இல்லையா? இதை நியாயப்படுத்துகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் தலைவராக இருந்த கோல்வால்கர், 1940-லிருந்து இது போன்ற கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

அவருடைய Bunch of Thoughts என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தத்துவார்த்த விளக்க நூலில் இந்தக் கருத்து இருக்கிறது.

Bunch of Thoughts என்ற புத்தகமும் உடையும் இந்தியா? என்ற புத்தகமும் ஒன்றுதான். அது பழைய வடிவம்; இது புதிய வடிவம் அவ்வளவுதான்.

இந்த நாட்டை ஒன்றுபடுத்தியவன் வெள்ளைக் காரன். இந்த நாட்டை பிரிவுபடுத்திய ஆரியன், ஜாதியிலே பிரித்து வைத்தான். ஆனால் நாங்கள் பிரிவினை கூடாது மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். நீங்கள் இன்னமும் பூணூல் போட்டிருக்கிறீர்களே! நீங்கள் பிரிவினைக் காரர்களா? அல்லது நாங்கள் பிரிவினைக் காரர்களா? இப்பொழுது சொல்லட்டும் உடைப்பது நீங்களா? அல்லது நாங்களா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், நான் படிப்பது குருஜி கோல்வால்கர் நூல். The Bunch of Thoughts என்பதன் மொழிபெயர்ப்பு. நம் தாய்நாட்டுப் புதல்வர்கள் என்ற பகுதியில் உள்ள முக்கியமானதைப் படிக்கின்றேன். புனிதமான நமது தாய்நாட்டில் தொன்றுதொட்டு இந்து என்றழைக்கப்படுகின்ற ஒரு பெரும் நாகரிகம் படைத்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்துஎன்பது உங்களுடைய பெயரா? உன் எதிரி உன்னை வெறுப்பதற்காக உன்னை அடையாளப்படுத்துவதற்காக அவன் கொடுத்த பெயர்.

வெறுக்கத்தகுந்தது என்று நான் சொல்ல வில்லை. சட்டபூர்வமாக கோட் செய்து நீங்கள் ஆதாரம் கேட்பீர்களேயானால் வழக்கறிஞர் என்ற முறையிலே சொல்லுகின்றேன். மைக்கேல் X வெங்கடேசுவரன் இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நீதிபதி பி.வி.ராஜமன்னார் கொடுத்த தீர்ப்பு இருக்கிறது. அதில், இந்து என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கூற முடியாது. எந்த மொழியிலிருந்து இந்து என்ற சொல் பிறந்தது என்பதையும் ஆதாரபூர்வமாக சொல்ல முடியாது?

இது இந்திய பிறப்பிலிருந்தும் வந்த வார்த்தை அல்ல.என்று கூறப்பட்டது.

தெய்வத்தின் குரலில் சங்கராச்சாரியார் சொல்லுகிறார். இந்து என்கிற பெயர் அந்நியன் நமக்கு வைத்த பெயர். இந்த மதத்திற்கு இந்து மதம் என்று பெயர் கிடையாது. சொல்லுவது யார்? சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார்.
மனுதர்மத்தில் இரண்டாவது அத்தியாயத்தில் 19 ஆவது சுலோகம் மிக முக்கியம். ஒவ்வொரு இடத்திலும் யார் யார் வாசித்தார்கள். என்னென்ன பெயர் அந்தப் பகுதிக்கு இருந்தது என்பதை மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கின்றபடி அந்த கருத்துகளை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

மனுதர்மத்தில் 17 ஆவது சுலோகத்தில் சொல்லப்பட்டிருப்பதை படிக்கின்றேன்.

சரஸ்வதி யென்னும் திருஷத்து
வதி என்னும் தேவ நதிகளுடைய மத்தியப் பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மா வர்த்ததேசமென்று சொல்லப்படும்.

சுலோகம் 18:

அந்தத் தேசத்தில் பெரியோர் கள் எப்போதும் வசிக்கின்றமை யால் பிராமணாதி வருணத்தா ருக்கும் சங்கர சாதிகளுக்கும் சிஷ்டாசாரமானது அநாதியா யவ் விடத்தினின்று முண்டாகிறது.

(சங்கரஜாதி என்றால் கீழ்ஜாதி கல்பில் வந்தவர்கள்)
சுலோகம் 19:
மச்சதேசம் பாஞ்சால தேசம்-
வடமதுரை இதுகள் பிரம்ம
ரிஷிகள் வசிக்கின்ற தேசங்கள் இவைகள் பிர்மா வர்த்த தேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சங் குறைந்திருக்கின்றன.

சுலோகம் 20:

இந்தத் தேசங்களில் பிறந்த பிராமண னிடத்தினின்றும் சகலரும் தன்தன் தருமங் களையறிந்து கொள்ளக் கடவர்கள்.

சுலோகம் 21:

இ மோர்ப்பர்வதத்திற்கும்
விஞ்சை பர்வதத்திற்கும்-
நடுவாயும் சரஸ்வதி நதி-

மறைந்த விசனச தேசத்திற்குக் கிழக்காயும், பிரயாகைக்கு மேற்காயும் இருக்கிற இட மானது மத்திய தேசமென்று சொல்லப் படுகின்றது.

சுலோகம் 22:

கிழக்கு சமுத்திரந் தொடங்கி மேற்கு சமுத்திரம் வரையில் முன் சொன்ன மலைகளின் நடுப் பிரதேசமானது சாதுக்கள் வசிக்கிற ஆரியா வர்த்ததேசமென்று சொல்லப் படுகின்றது.

சுலோகம் 24:

கிருஷ்ண சாரமென்னுமானானது எந்த விடத்தில் சுபாவமாய் சஞ்சரிக்கின்றதோ அந்தவிடந்தான் யாகஞ் செய்தற் குறியது மற்ற விடம் அசுத்தமான மிலேச்ச தேசமென்று சொல்லப்படும்.
இப்படிப்பட்ட புண்ணிய தேசங்களை துவிஜர்கள் வேறு தேசத்திற் பிறந்தவராயினும் வந்தடைய வேண்டியது அல்லது சூத்திரன் ஊழியத் தொழிலைவிட வேறு விர்த்தியை எந்தவிடத் திலடைய மாட்டானோ அந்த விடத்தில் வசிக்கத்தக்கது.

சூத்திரனிடத்தில் கூலி கொடுத்தேனும், கூலி கொடுக்காமலேயும் வேலை வாங்கலாம். இப்படியெல்லாம் மனுதர்மம் சொல்லுகிறது.

சூத்திரன் அவன் சம்பாதித்த பொருளாக இருந்தாலும், அதை அடித்தும் நாம் (பார்ப்பனர்கள்) எடுத்துக்கொள்ளலாம். மனுதர்மத்தில் இருக்கிறதா? இல்லையா? சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி, ஆரிய திராவிடப் புரட்டு என்று அப்பட்டமாகப் புளுகுவதைத் தோலுரித்தார்.

இந்த நூலில் முக்கியமாக இன்னொரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி. திருக்குறளை இந்து மத நூல் எனத் திரித்ததாகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற மனிதநேய சிந்தனையை உலகுக்குத் தந்த தமிழ்மறையான திருக்குறளை வெட்கமில்லாமல் இந்து நூல் என்று திரிபுவாதம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆரிய தர்மமான மனுதர்மம் பிறப்பில் பேதம் கற்பிக்கிறது. தமிழ் மறையான திருக்குறள் பிறப்பில் பேதம் இல்லை என்கிறது. இரண்டையும் இந்து மத நூல்கள் என்று சொல்ல எத்தர்களான ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரால் முடியும்?

இந்து என்ற வார்த்தையே இந்தியாவிலுள்ள எந்த மொழியையும் சேர்ந்ததல்ல. அது ஒரு பாரசீகச் சொல். உண்மை இப்படியிருக்க தமிழ்இந்து என்று ஒரு புதிய புளுகுப் பிரச்சாரத்தை உடையும் இந்தியா நூலிலிருந்து தொடங்கியிருக்கிறார்கள். பொய்யான தகவல்களைக் கொண்டு ஊதிப் பெரிதாகக் காட்டப்படும் இந்த ஆரிய பலூனை உண்மை என்ற திராவிட ஊசி மூலம் உடைத்து நொறுக்க பெரியாரியம் தயாராகி விட்டது. வெளிப்படையாக தமது உயர் ஜாதி மனநிலையை அடியோடு விட்டுவிட்டு மனிதர்களாகத் தம்மை ஆரியம் காட்டிக் கொள்ளும் காலம் வரும் வரை இத்தகைய திரிபுவாதங்களுக்கும், பொய்யுரை களுக்கும், புரட்டுகளுக்கும் பெரியார் திடலிலிருந்து பதிலடி வந்து கொண்டேயிருக்கும். - பெரியாரிடி

குறிப்பு: இந்துத்துவத் திரிபுவாதங்களை முறியடிக்கும் ஆதாரப்பூர்வ தகவல்கள் அனைத்தும் அடங்கிய விரிவான நூல் தயாராகிக் கொண் டிருக்கிறது, விரைவில் மக்களின் சிந்தனைக்கு வழங்கப்படவுள்ளது.

------------------”உண்மை” 22-1-2012


உடையும் இந்தியாவா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில் ராஜீவ் மல்ஹோத்ரா - அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் எழுதியுள்ள புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தவறான - இட்டுக்கட்டப்பட்ட தகவல் களுக்கும் கருத்துகளுக்கும் மறுப்பு தெரிவிக்கும் வகை யிலும், பார்ப்பன சக்திகளின் பொய்த் திரைகளை கிழித்து காட்டுகிற வகையிலும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை பெரியார் திடலில் (ஜனவரி 8, 9 - 2 நாள்கள்) உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவுடன் பின் இணைப்பாக ஏராளமான ஆதாரங்களுடன் உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாளில் வெளியிடப்பெற்று பரபரப்பாக விற்பனை யாகி வருகிறது.

வெளிவந்த 10 நாள்களில் முதல் பதிப்பு முற்றிலும் விற்று முடியும் நிலையில், இரண்டாம் பதிப்பு தயாராகி வருகிறது.

256 பக்கங்கள் கொண்ட கிடைத்தற்கரிய ஆய்வுப் புத்தகத்தின் நன்கொடை ரூ. 80/- மட்டுமே!
உங்கள் பிரதியை இன்றே வாங்கிடுவீர்!

பெரியார் புத்தக நிலையம்

பெரியார் திடல், 84/1, (50) வேப்பேரி, சென்னை - 600 007
ொலைபேசி: 044-26618163
பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி - 620 017
தொலைபேசி: 0431-2771815

-------------------”விடுதலை” 22-1-2012


4 comments:

தமிழ் ஓவியா said...

விவேகானந்தரின் புதிய பதிப்பு


இந்துத்துவா வாதிகள் உருட்டல் புரட்டல் செய்வதில் மகாமகா தந்திர சாலிகள். தங்களுக்குத் தேவைபட்டால் காந்தியாரை மகாத்மா ஆக்கிக் காட்டுவார்கள் பயன்படவில்லை என்று தெரிந்தால் துர் ஆத்மா ஆக்கி விடுவர் - துப்பாக்கிக் குண்டுகள் மூலம்.

இதோ ஒரு நவீன விவேகானந்தர் புதுப்பதிப்பாக வெளி வந்துள்ளார். குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை (போட்டோ ஷாப்) கணினி வித்தையில் விவேகானந்தராக்கி விளம்பரம் செய்துள்ளனர். விவேகானந்தர் பார்ப்பனரல்லர்; அவருக்கு இருந்த பேச்சாற்றலைப் பயன்படுத்திக் கொண்டு இந்துத்துவாவின் பீரங்கியாகச் சித்தரித் தனர்.

மோடியும் பார்ப்பனர் அல்லர்; ஆனாலும் அவருக்குள் இருக்கும் ஹிந்துத்துவா வெறியை கொலை வெறியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இந்தப் புரட்டல் வேலையில் இறங்கியுள்ளது பார்ப்பன இந்துத்துவா!
------”விடுதலை” 24-1-2012

தமிழ் ஓவியா said...

தமிழ்நாடு தேர்வாணையக் குழுத் தலைவர் இந்து ஆன்மிக சேவை அமைப்பின் தலைவரா?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆர். நட்ராஜ் அவர்கள் ஆன்மிக சேவைக் கண்காட்சி யின் தலைவராம்.

சென்னையில் தனியார் கல்லூரியில் இந்து ஆன்மிக, சேவைக் கண்காட்சி நடக்க சகல ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்துகிறார். இந்திய அரச மைப்புச் சட்ட தன்னதிகாரம் பெற்ற முக்கிய பதவியில் உள்ள ஒருவர் குறிப்பிட்ட ஒரு மத அமைப்பிற்குத் தலைவராக இருக்கலாமா?

இந்து ஆன்மிகம் என்றால் பச்சையான ஆர்.எஸ்.எஸ். என்று பொருளாகும்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவராக இதுவரை இருந்த எவரும் மதச் சார்பற்ற தன்மையோடு தான் நடந்து கொண்டுள்ளனர். இப்பொழுது புதிதாக இந்தப் பொறுப்புக்கு அ.தி.மு.க. அரசால் நியமிக்கப்பட்டவர் பச்சையாக தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரராக, இந்துத்துவவாதி யாகக் காட்டிக் கொள்வது சரிதானா?

இந்(து)த மனப்பான்மையில் உள்ள ஒருவர் தேர்வாணையத்தின் பொறுப்பில் பொதுவான மனநிலையில் நடந்து கொள் வார் என்று எதிர்பார்க்க முடியுமா?
----------”விடுதலை” 24-1-2012

தமிழ் ஓவியா said...

மாவட்ட ஆட்சியர் அலுவலகமா? மந்திரவாதிகளின் கூடாரமா?


சேலத்தில் நடந்த மூடத்தனக் கூத்து!

சேலம்,ஜன 24 - சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், தை அமாவாசை என்று கூறி கடந்த சனியன்று ஆடு, கோழி தலைகள் கிடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட் டது. மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், அமாவாசை பரிகார பூஜை நடத்தியதாக, திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, சேலத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு, 2010 ஆகஸ்ட் 20இல் திறந்து வைக்கப்பட்டது. அப்போது, தி.மு.க., ஆட்சி என்பதால், எவ்விதப் பரிகார பூஜைகளும் மேற் கொள்ளப்படவில்லை. இதனால், ஊழியர்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டதாகவும், பல ஊழியர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப் பட்டதாகவும் அதிருப்தியில் இருந்தன ராம். அலுவலக வளாகத்திலேயே, பல ஊழியர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால், பரிகார பூஜை நடத்த ஊழியர்கள் ரகசியமாக திட்டம் தீட்டி வந்தனராம்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அய்.ஏ.எஸ்., - அய்.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். இன்னும் பலர் மாற்றப்படும் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில், அதிரடி மாற்றங்களைத் தவிர்க்கும் வகையிலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பு வதற்கும், அதிகாரிகள் சிலர் குலதெய் வங்கள், இஷ்ட தெய்வங்களுக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வருகின் றனராம்.

இந்நிலையில், தை அமாவாசை நாளான சனியன்று, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆடு, கோழி தலைகள் வெட்டி வீசப்பட் டிருந்தன. இந்த தலைகளில் குங்குமம், திருநீறு, சந்தனம் வைத்து பூக்கள் தூவப்பட்டிருந்தன. பரிகார பூஜை செய்ததற்கான அனைத்து அடை யாளங்களும், இந்தத் தலைகளில் காணப்பட்டன.

இது குறித்து, அப்பகுதியைச் சேர்ந்த சின்னப்பன், கடந்த வாரம் மந்திரவாதி ஒருவர், பகல் நேரத் திலேயே ஆட்சியர் அலுவலகம் வந்து சென்றார். அவரின் அறிவுரைப்படி, அமாவாசை நாளான சனியன்று விடியற்காலையில் அலுவலக வளாகத் தில் பரிகார பூஜை நடத்தப்பட்டு, ஆடு, கோழியை வெட்டித் தலைகள் மற்றும் எலுமிச்சம் பழம், பூசணிக் காய் ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போடப்பட்டது' என்றார்.

மாவட்ட ஆட்சியர்கள் அய்.ஏ.எஸ்., அதிகாரிகளாக இருந்தாலும் படிப்புக் கும், அறிவுக்கும் சம்பந்தமில்லாமல் நடப்பது குறித்து வெட்கப்பட வேண்டாமா!
---”விடுதலை” 24-1-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் சர்ச்சை


கடவுள் ஒரு பொய் முகம் (The god Delusion) என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் நாத்திக அறிஞர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்கள் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் இரத்தினச் சுருக்கமாக முற் போக்குச் சிந்தனை முத்துக்களை உதிர்த்துள்ளார். அவர் எழுதிய அந்த ஆங்கில நூல் கடவுள் ஒரு பொய் முகம் என்று மறைந்த பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தால் வெளியிடப் பட்டு, சிறந்த மொழிபெயர்ப்புக்கான நூல் என்று தமிழ்நாடு அரசின் பரிசையும் பெற்றது என்பது நினைவூட்டத்தக்கதாகும்.

ரிச்சர்ட் டாக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல் உலகளவில் மிக மிக அதிகமாக விற்கப்பட்டு மதவாத உலகை ஒரு கலக்குக் கலக்கி விட்டது.

அதேபோல ஜெய்ப்பூரில் அவர் பேசிய உரையும் இந்திய அளவில் பெரும் அலைகளையும் ஏற்படுத்தி விட்டது; என்னதான் இந்து போன்ற ஆங்கில ஏடுகள் அவர் உரையை இருட்டடித்துப் பார்த்தாலும் மக்கள் மத்தியில் ஏதோ ஒரு வகையில் சென்று அடையத்தான் செய்துள்ளது.

"எனது வாழ்நாளிலேயே மதம் என்பது முற்றிலுமாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்"

மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப்படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப்படை யிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனு தாபம் காட்டப்படக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் ஆழமாகச் சிந்திக்கப்பட்டு வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனைக் கருத வேண்டும்.

மதம் மனிதனுக்குப் பிடித்தாலும் சரி, மிருகங் களுக்குப் பிடித்தாலும் ஆபத்தானதுதான். இதில் உள்ள கெட்ட வாய்ப்பு என்னவென்றால் மதத்தைப் பற்றி விமர்சிக்கவே கூடாது என்று செய்து வைத்திருக்கும் மோசமான ஏற்பாடாகும்.

மதம் எந்தக் காலத்தில் உருவாக்கப்பட்டது? மனிதன் வளர்ந்து கொண்டே வருகிறான். இந்த நிலையில் மூடத்தனத்தாலும், இயற்கைச் சூழலைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அச்சத்தாலும் உருவாக்கப்பட்ட கடவுளும், மதமும், வேத நூல்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக எப்படி இருக்க முடியும்?

இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமானால், மனிதனின் அறிவு வளரவே கூடாது என்பதே இதன் பொருளாகக் கருத வேண்டும். எவ்வளவு சாமர்த்திய மாகக் கூறுகிறார்கள் என்றால், மதம் கடவுளால் உண் டாக்கப்பட்டது என்று கெட்டிப்படுத்தி வைத்துள்ளனர்.

இவர்கள் சொல்கிறபடி அந்தக் கடவுளுக்கு மகாசக்தி இருப்பது உண்மையானால் மதத்தைப்பற்றி விமர்சனம் செய்யும்போது, கடவுள் பார்த்துக் கொள் வார் என்று நினைக்க வேண்டுமே தவிர இவர்கள் யார் கடவுளுக்காக வக்காலத்து வாங்குவதற்கு?

மதம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறுவதாலும், அதற்குச் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தி வைப்பதாலும் எந்தக் காலத்திலோ எழுதி வைக்கப் பட்ட மதத்தின் சரத்துகள் குறிப்பிட்ட சிலருக்கு வசதியாகவும், பெரும்பாலோர்க்குப் பெரும் துன்பம் விளைவிப்பதாகவும் உரிமைகளைப் பறிக்கக் கூடியதாகவும் இருக்கிறதே - இதற்கு என்ன சொல்ல?

உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமை களுக்காகக் கிளர்ந்து எழக் கூடாது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா?

இதில் இன்னொரு மோசமான கொடுமை என்னவென்றால் ஒவ்வொரு மதக்காரர்களும் தங்கள் மதம்தான் உயர்ந்தது - சிறந்தது என்று கூறி ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் இழிவான போக்காகும். மதக் காரணங்களுக்காக மனித ரத்தம் சிந்தப்பட்டது போல, வேறு காரணங்களுக்காகச் சிந்தப்படவில்லை என்பதுதான் வரலாறு கற்பிக்கும் பாடமாகும்.

இந்த நிலையில்தான் மானுடத்தின் மகத் துவத்தைப் போற்றும் வகையிலும், அறிவு வளர்ச்சிமீது கொண்ட அளப்பரிய மதிப்பீட்டின் முறையிலும் எனது வாழ் நாளிலேயே மதம் அழிந்து போக வேண்டும் என்று நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரிச்சர்ட் டாக்கின்ஸ். நாடெங்கும் இந்தக் கருத்துப் பரவ வேண்டியது அவசியமாகும். பகுத்தறிவாளர்கள் பரப்புரை செய்வார்களாக!
----------"விடுதலை” தலையங்கம் 26-1-2012