Search This Blog

29.1.12

பெரியார் எழுதிய - பதிப்பித்த நூல்கள்

(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை)


நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்.

தந்தை பெரியார் கருத்தாளர் என்பது அறியப்பட்ட உண்மை என்றாலும், அவர் எழுத்தாளர் அல்லர் என்று சொல்ல முடியாது; அன்னை நாகம்மையார் மறைந்த போதும், ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்தபோதும் அவர் எழுதிய எழுத்துகள் இரங்கல் இலக்கிய வரலாற்றில் என்றென்றுமே பேசப்படும்.


தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட குடிஅரசு இதழின் 16 ஆம் ஆண்டு தொடக்க இதழில் (18.8.1940, பக்கம் 10) எழுதும் அவர் சிங்க நடை இதோ:

பயங்கரமான பாதை!

பயமா அது என்னை என்ன செய்யும்?

சறுக்கு நிலம்! சந்திரனில்லா இரவு!!

காலை ஊன்றி நடப்பேன்!

கண்ணை அகலத் திறந்து பார்ப்பேன்!

பசியும், தாகமும் வாட்டும்

கிடைத்ததைப் புசிப்பேன் -

புதர்களிலிருந்து பலர் வெளிவந்து தாக்குவர்!

நான் கோழையல்ல!!

உனக்கு முன் பலர் இப்படித்தான் சென்று மாண்டனர்!!

நானும் அந்த வழியே செல்லுகிறேன் உயிர் வெல்லமல்ல!

நீ வெற்றி பெறுவது கஷ்டம்!

நான் என் கடமையைச் செய்கிறேன்!

உருவகமாக எழுதப்பட்ட தந்தை பெரியாரின் இந்த எழுத்துக்களில் துடிக்கும் துணிவை, வீரத்தை மனக்கண் முன் காண்கிறோமே!
எதைச் சொன்னாலும், எழுதினாலும் அவை பெரியாரின் தனித் தன்மையான சுய சிந்தனைகளாகும்.

தன்னைப்பற்றி பெரியார் சொல்கிறார்:

நான் எனது கொள்கைக்கு - பேச்சுக்கு எந்த மேற்கோளையும் காட்டி விளக்குபவன் அல்ல. அப்படி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று தேடித் திரிபவர்களின் செயல் அறிவுடைமை ஆகாது. ஆனால், நான் கூறிய கருத்துக்கு ஆதரவாக இன்னாரும் கூறியுள்ளார் என்று எடுத்துக்காட்ட வேண்டுமே அல்லாது, இன்ன இன்னார் இன்ன இன்ன கூறியுள்ளார் - ஆகவே நான் கூறுகிறேன் என்று எடுத்துக்காட்டக் கூடாது. (விடுதலை, 26.2.1961)

என்று கூறும் தன்னிலை விளக்கத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு இச்சொற்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தாது.

சென்னை சட்டக் கல்லூரியின் இயக்குநரும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான ஏ.எஸ்.பி. அய்யர் - தந்தை பெரியார் கலந்துகொண்ட சென்னை சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவுக்குத் தலைமை ஏற்றபோது சொன்ன கருத்துக் கணிப்பு முக்கியமானது (10.2.1960).

கீழை நாடுகளைப்பற்றி பெர்ட் ரண்ட் ரசல் ஒரு நூலில் எழுதும் போது, இங்குள்ளவர்கள் எதை எழுதினாலும், பேசினாலும் மேற் கோள்காட்டிப் பேசுவதுதான் வழக்கம். தனது கருத்து என்று வெளியிட மிகவும் தயங்குவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான் அறிந்தவரையில் மேற்கோள் காட்டிப் பேசாமல் தன் அறிவையே முன்னி றுத்திப் பேசும் தனித்த சிந்தனை யாளர் பெரியார் ஒருவர்தான் என்று குறிப்பிட்டார் நீதிபதி ஏ.எஸ்.பி. அய்யர் அவர்கள்.

திருக்குறளைப்பற்றி சொல்லும் பொழுதுகூட நான் சொன்ன கருத்தை திருவள்ளுவர் சொன்னார் என்று சொல்வாரே தவிர திருவள்ளுவர் கருத்தைத்தான் நான் சொல்லுகிறேன் என்று சொல்லமாட்டார் சிந்தனைச் சிற்பியான பெரியார்.

பேச்சு என்று எடுத்துக் கொண் டாலும், பெரியாருக்கு நிகர் பெரி யார்தான்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர் கள் மிக நேர்த்தியாக தந்தை பெரியார் அவர்களின் பேச்சை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டும்தான் மூன்று மணி நேரம் உட்கார்ந்து கேட்க முடிவுமென்று தயங்காமல் கூறுவேன். அவர் உலகானுபவம் என்னும் கலாசாலையில் முற்று முணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக் கின்றனவோ நானறியேன் என்று தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக் குறித்து கல்கி கூறியுள்ளார்.

பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவசாலி பெரியார்; 1925 ஆம் ஆண்டிலேயே குடிஅரசு இதழைத் தொடங்கி நடத்தியவர்; ஒரு கட்டத்தில் அனைத்தையும் அவரே எழுதிக் குவித்த நிலைகள் உண்டு.

அவரால் தோற்றுவிக்கப்பட்ட ஏடுகளின், இதழ்களின் பெயர்கள் தனித் தமிழ் மட்டுமல்ல; தனித்தன்மையும் கொண்டவையாகும்.
குடிஅரசு, பகுத்தறிவு, புரட்சி, விடுதலை, உண்மை என்ற பெயர்கள் அதனைப் பறைசாற்றும்.

வணிக நோக்குக்காக அவர் ஏடு நடத்தியது கிடையாது. கருத்துப் பிரச்சாரம்தான் அதன் முதன்மையான நோக்கமாகும்.

நீங்கள் எந்தப் புத்தகத்தைப் படித்தால்தான் என்ன பயன்?

படிப்பு என்பது அறிவு உண்டாவதற்கு. ஆனால், நீங்கள் படிக்கும் புத்தகம் எல்லாம் மடமை வளர்ப் புக்கும், மூடநம்பிக்கை ஏற்படவும் பயன்படுகிறது. அதனால்தான் இன்றும் நம் மக்கள் பகுத்தறிவற்று இருக்கிறார்கள்...

நீங்கள் குடிஅரசு பதிப்பகப் புத்தகங்களை வாங்கிப் படித்தால் கட்டாயம் பகுத்தறிவுவாதி ஆகிவிடு வீர்கள்.

இந்தப் புத்தகம் மதம், ஜாதி, நாடு, அரசியல் துறைகளில், அவற்றில் உள்ள புரட்டுகளை விளக்கி, உங் களைப் பகுத்தறிவுவாதிகளாக ஆக்கும். விலை மிகமிக மலிவுக்கு பொது நலத்தை முன்னிட்டு, நட்டத்திற்குப் பதிப்பிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் பெரியார் (1962).

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக வெளியீடுகள் இன்றுவரைகூட இந்த அடிப்படைத் தடத்தில்தான் பயணிக் கின்றன.

கருத்துப் பிரச்சார இலாபம்தான் இந்த வெளியீடுகளைக் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமாகும்.

பெரியார் அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசி முடித்து, வாகனத்தில் ஏறும்போது அவர் கேட்கும் முதல் கேள்வி, இன்றைக்கு எவ்வளவு ரூபாய்க்குப் புத்தகங்கள் விற்றன? என்பதுதான் அந்தக் கேள்வி.

பெருங்கூட்டம் இருந்து நூல்கள் விற்பனை குறைவாக இருந்தால், அவர் கருத்து பிரயோசனமற்ற கூட்டம்; மக்கள் கூட்டம் குறைவாக இருந்து நூல்கள் விற்பனை அதிகமாக இருந்தால், பயனுள்ள கூட்டம் என்பது அய்யாவின் கணிப்பு!

நூல்கள் பரவுதல் மூலம்தான் மக்கள் மத்தியில் கருத்துப் போய்ச் சேரும் என்பது பெரியார் அவர்களின் கருத்துக் கணிப்பாகும்.

இலட்சியத்தை நிறைவேற்றுவதில் பெரியார் கண்ட இயக்கத்தின் அணுகுமுறைதான் இரண்டு.

ஒன்று பிரச்சாரம் - மற்றொன்று போராட்டம். சுவர் கடிகாரத்தின் நடுத்தண்டு அசைவது போன்றது அது.

பெரியார் பேசி, எழுதி வெளிவந்த நூல்கள் நீண்ட பட்டியலுக்கு உரிய வையாகும்.

அறிவு விருந்து

கடவுள் மறுப்புத் தத்துவம்

வைக்கம் வீரர் சொற்பொழிவு

இராமாயண ஆபாசம் (முதற்பதிப்பு)

கர்ப்ப ஆட்சி

ஈ.வெ.ரா. இலங்கை உபந்யாசம்

ஈ.வெ.ரா. சீர்திருத்த மாநாட்டு உபந்யாசம்

சமதர்ம உபந்யாசம்

சோஷியலிசம்

சோதிடப் புரட்டு

பொதுவுடைமைத் தத்துவங்கள்

ெண் ஏன் அடிமையானாள்?

தமிழர் - தமிழ்நாடு - தமிழர் பண்பாடு

பிரகிருதிவாதம்

மதம் என்றால் என்ன?

குடிஅரசுக் கலம்பகம் (முதற்பாகம்)

சோதிட ஆராய்ச்சி

தமிழ்நாடு தமிழருக்கே!

திருவாரூர் மாநாட்டுத் தலைமையுரை

இனிவரும் உலகம்

இராமாயணப் பாத்திரங்கள்

தமிழ் இசை நடிப்புக் கலைகள்

கிராமச் சீர்திருத்தம்

உண்மைத் தொழிலாளி யார்?

தொழிலாளியின் இலட்சியம் என்ன?

இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து

தத்துவ விளக்கம்

விழாவும் நாமும்

தில்லையில் பெரியார்

சுயமரியாதை இயக்கத்தைத் தோற்று வித்தது - ஏன்?

திராவிடர் கழக இலட்சியம்

திராவிடர் ஆரியர் உண்மை

மொழி - எழுத்து

தூத்துக்குடி மாகாண மாநாட்டுத் தலைமை உரை

இந்திப் போர் முரசு (பெரியார் ஈ.வெ.ரா. மற்றும் தலைவர்கள்)

மொழியாராய்ச்சி

திருக்குறளும் திராவிடர் கழகமும்

மேல்நாடும் கீழ்நாடும்

புரட்டு, இமாலயப் புரட்டு!

புரட்சிக்கு அழைப்பு

முதலாளி தொழிலாளி ஒற்றுமைப் பிரச்சினை

சிந்தனைத் திரட்டு

கடவுள்

புராண ஆபாசங்கள்

அய்க்கோர்ட் அவதூறு வழக்கில் பெரியார் ஸ்டேட்மெண்ட்டும் தீர்ப்பும்

சித்திரபுத்திரன் எழுதுகிறார்

போர்ச் சங்கு

வெளியேறு!

நாடகமும், சினிமாவும் நாட்டை நாசமாக்குகின்றன

சுயமரியாதைத் திருமணம் ஏன்?

வாழ்க்கைத் துணைநலம்

நீதி கெட்டது யாரால்?

சித்திரபுத்திரன் கட்டுரைகள்

ஜனநாயகம்

அறிவுச் சுடர்

வாழ்க்கைத் துணைநலம்

தாய்ப் பால் பைத்தியம்

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்

அய்க்கோர்ட்டின் நீதிப்போக்கு (இரு பாகங்கள்)

தமிழ்நாடா? திராவிட நாடா?

மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி

ஆச்சாரியார் ஆத்திரம்

தீண்டாமையை ஒழித்தது யார்?

மறுத்தலும் பகுத்தறிவும்

கழகமும் துரோகமும்

புராணம்

மதுவிலக்கின் இரகசியங்கள்

தமிழருக்குச் சோதனை காலம்

ஏன் இல்லை - எல்லோருக்கும் கல்வி, உணவு, உடை, வீடு?

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி

அறிவுச் சுடர்

மதச் சார்பின்மையும், நமது அரசும்

கடவுளும், மனிதனும்

கடவுள் குழப்பம்

நமது இன்றைய நிலையும் - பரிகாரமும்

புத்த நெறி

சுயநலம் பிற நலம்

கடவுள் ஒரு கற்பனையே!

பெரியார் பேசுகிறார்

கோயில் பகிஷ்காரம் ஏன்?

உயர் எண்ணங்கள்

பெரியாரின் மரண சாசனம் (இறுதிச் சொற்பொழிவு) - என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

பெரியார் பதிப்பித்த நூல்கள்

ஞானசூரியன்

இந்தியாவின் குறைபாடுகள் Temple Entry (English)

லெனினும் மதமும்

கடவுளும், பிரபஞ்சமும்

கைவல்யம் அல்லது கலைக்கியானம்

இராமாயண ஆராய்ச்சி

பாரத ஆராய்ச்சி

மேயோ கூற்று மெய்யா, பொய்யா?

இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு

சுயமரியாதைப் பாடல்

சுயமரியாதைத் தாலாட்டு

பர்னாட்ஷா உபந்யாசம்

போல்ஷ்விக் முறை

மதப் புரட்சி (ஜோசப் மெக்கேல் - மொழி பெயர்ப்பு)

முன்னேற்றத்திற்கு மதம் முட்டுக்கட்டை

மதம் மக்களுக்குச் செய்த நன்மை என்ன?

பாதிரியும், பெண்களும், பாவமன்னிப்பும்

மதமும் விஞ்ஞான சாஸ்திரமும்

பிரபஞ்ச உற்பத்தி

நான் ஏன் கிறிஸ்தவனல்ல? (ரசல் - மொழி பெயர்ப்பு)

நான் சம்சயவாதி ஆனதேன்? - இங்கர்சால்

பகத்சிங்கின் நான் நாத்திகன் ஏன்? (ப. ஜீவானந்தம் மொழி பெயர்ப்பு)

பகுத்தறிவு அல்லது கத்தோலிக்க குருவின் மரண சாசனம் (மூன்று பாகங்கள்)

கைவல்ய சுவாமியார் கட்டுரைகள் (இரண்டு பாகங்கள்)

தமிழர் தலைவர் (பெரியார் வரலாறு)

சாதிக் குறி (தமிழ்)

Caste Mark 111 (ஆங்கிலம்)

Periyar - A Pen Portait (English)

பிர்லா மாளிகை மர்மங்கள்

சாதியை ஒழிக்க வழி

அப்பரும் சம்பந்தரும்

லெனினும் மதமும்

மார்க்ஸ் - ஏஞ்சல்ஸ் அறிக்கை

பொதுவுடைமை வினா-விடை

பலசரக்கு மூட்டை (குத்தூசி தொகுப்பு நூல்கள் - இரு பாகங்கள்)

அகத்தியர் ஆராய்ச்சி

மெய்ஞானமுறையும் மூட நம்பிக்கையும் (2 பாகங்கள்)

பெரிய புராண ஆராய்ச்சி

கோயில்கள் தோன்றியது ஏன்?

திருக்குறளும் - பெரியாரும்

நரகம் எங்கே இருக்கிறது?

கடவுள் தோன்றியது எப்படி? (இரண்டு பாகங்கள்)

கடவுளர் கதைகள்

உண்மை இந்து மதம் எது?

பேய் - பூதம் - பிசாசு

இரண்டு வழிகள்

பெரியார் ராமசாமி அவர்களைப் பற்றி....

மதப் புரட்சி

ஊழல் எங்கே? (நகர்வாலா மோசடி)

பகுத்தறிவு மணம்

கலியுக சமாதானம்

நமது குறிக்கோள்

இங்கர்சாலின் ஜீவிய சரித்திரம்

இந்தி எதிர்ப்புப் பாடல்கள்

காரல் மார்க்ஸ்

பஞ்சமா பாதகங்கள்

இராவணப் பெரியார்

சமதர்மக் கீதங்கள்

வால்டையரின் வாழ்க்கைச் சரிதம்

விவாக விடுதலை

இந்திய மாதா

இங்கர்சால் பொன்மொழிகள்

புராண ஆபாசங்கள்

கடவுளை நிந்திக்கும் கயவர்கள் யார்?

கோவில் பூனைகள் (கோவை கிழார்)

நமக்கு வேண்டியது எது? சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா? (மூன்று பாகங்கள்)

பெரியாரும் - இராமலிங்கரும்

பெரியார் ஒரு சகாப்தம்

கடவுள் தோன்றியது எப்படி?

(ஆங்கிலத்தில் கிராண்ட் ஆலன் தமிழில் பேராசிரியர் வெள்ளையன் மொழி பெயர்ப்பு)

இன்னும் ஏராளம் உண்டு.

ஓர் இயக்கத்தின் கொள்கையைப் பரப்புவதற்காக ஒரு நிறுவனத்தை நிறுவி அவற்றின் சார்பாக வெளியீடு களைக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் பரப்பும் பணியைத் திட்ட மிட்டுச் செய்த ஏற்பாடு தந்தை பெரியார் அவர்களுக்கே உரித்தானதாகும். அவர் செய்து வைத்த ஏற்பாடுகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கின்றன - மேலும் செழுமைப்படுத்தப்பட்டும் உள்ளன.

தந்தை பெரியார் அவர்களின் வெளியீடுகள் இரண்டு வகையானவை. உயர் எண்ணங்கள் மலரும் சோலை என்று புரட்சிக்கவிஞரால் போற்றப் பெற்ற பெரியார் அவர்களின் சுயசிந்தனைக் கருத்துக்களைக் கொண்டவை ஒருவகை.

எடுத்துக்காட்டாக, தத்துவ விளக்கம், மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதவாதம், இனிவரும் உலகம் போன்றவை.

சோதனைக் குழாய்க் குழந்தை யைப்பற்றி விஞ்ஞானிகள்கூட கற் பனை செய்திராத காலகட்டத்தி லேயே 1938இல் சிந்தித்துச் சொன்ன சமூக விஞ்ஞானி - தொலைநோக்காளர் பெரியார்.

இன்னொரு வகை நூல்கள் - எதிரிகளின் ஆயுதங்களைக் கொண்டே எதிரிகளைத் தாக்கி அழிக்கும் ஆதாரங்களைக் கொண்ட நூற்கள்.

எடுத்துக்காட்டாக தந்தை பெரியார் அவர்களின் இராமாயணப் பாத்திரங்கள் மற்றும் இராமாயணக் குறிப் புகள். இதுவரை 50-க்கும் மேற்பட்ட பதிப்புகளாக இலட்சக்கணக்கில் மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. இந்தியிலும், ஆங்கிலத்திலும், மராட் டியத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி வந்துள்ளன.

இந்த நூலில் காணப்படும் ஆதாரங்களை மூல நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி கூட்டங்களில் பெரியார் பேசுவார். அதன் விளைவு என்ன தெரியுமா? அந்த மூல நூல்களிலிருந்து அடுத்த பதிப்பில் மாற்றம் செய்யப் பட்டதும் உண்டு. அந்த மாற்றம் செய்யப் பட்ட நூல்களையும் பொதுக்கூட்ட மேடை களில் எடுத்துக்காட்டுவார்.

லாகூரில் ஜாட்-பட் தோடக் என்னும் ஜாதி ஒழிப்புச் சங்கம் நடைபெற்றது. அவர்கள் நடத்த இருந்த ஜாதி ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கும்படி அண்ணல் அம்பேத்கர் கேட்டுக்கொள்ளப் பட்டார். தலைமை உரையை எழுதி அனுப்பினார் அம்பேத்கர். அதில் கண்டுள்ள சில பகுதிகளை நீக்கி விடுமாறு அச்சங்கத் தார் கேட்டுக் கொண்டனர். அம்பேத்கர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தத் தலைமை உரையை, அம்பேத்கர் அவர் களிடமிருந்து ஜாதியை ஒழிக்கும் வழி என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் பெரியார். முதல் பதிப்பு 1936. பதினாறாம் பதிப்பாக 2010 இல் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.

அம்பேத்கரின் கருத்துகள் தமிழ் நாட்டில் பெரும் அளவு பரவியதற்கு இந்நூல் முக்கிய காரணமாகும்.

இதழ் நடத்துவதில் பெரியார் கையாண்ட அறிவு நாணயம் சாதாரணமானதல்ல.

திராவிடன் இதழுடன் குடிஅரசு இதழையும் தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். குடிஅரசு விற்பனை வாரம்தோறும் பதினாயிரமாக உயர்ந்தது. அதனையும் அத்துடன் சேர்த்துத் திராவிடன் நாளிதழையும் அச்சிட வேண்டியி ருந்ததால், குடிஅரசு இதழின் பக்கங்கள் 16 ஆக குறைக்கவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று. விஷயங்களை நிறைவாகத் தரவேண்டும் என்பதற்காக யார்தான் விளம்பரங்களின் மூலம் வரும் வருமானத்தை இழக்க முன் வருவார்கள் தந்தை பெரியாரைத் தவிர?

ஏடுகளை நடத்தும்போது எந்த வகை யிலும் கொள்கை சமரசத்துக்கு இடம் தந்தவரல்லர் பெரியார் -அதுபற்றி அவர் என்ன சொல்லுகிறார்?

தமிழ் மக்களுக்குத் தேவையான சில கருத்துகளைச் சொல்லிப் பதிந்தாக வேண்டும். இன்று ஏற்றுக்கொள்ளா விட் டாலும், நாளை ஒரு நாள் ஏற்றுக்கொள் ளும் நிலை வரும். இக்கருத்துகளை சொல்லும் நிலையில், நான்தான் இருக் கிறேன். சொல்லவேண்டிய கருத்துகளை நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சிட்டு, நானே படித்துக் கொள்ளும் நிலைக்குப் போனாலும் குடிஅரசை வெளியிட்டு, என் கருத்துகளை வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டியது எனது கடமை (குடிஅரசு, 10.6.1929) என்று கூறும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இதழாளர் உலகிலும் - எவரும் நெருங்க முடியாத உயரத்தில் உயர் பண்புகளின் பெட்டகமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறார்.

அவர்தம் 38 ஆம் ஆண்டு நினைவு நாளில் அம்மாபெரும் புரட்சியாளரின் சிந் தனைகளை வாசிப்போம் - சுவாசிப்போம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!


-------------------கவிஞர் கலி. பூங்குன்றன்,
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் -"விடுதலை” 29-1-2012

2 comments:

தமிழ் ஓவியா said...

மீனவர்களுக்கென தனியே பாதுகாப்புப் படை, மத்திய அரசு உருவாக்கிட வேண்டும்


தமிழக மீனவர்களின் உரிமை காத்திட

நிரந்தர தீர்வு கண்டிட ஒன்றுபட்டு நிற்போம்!

தமிழர் தலைவர் முக்கிய அறிக்கைசென்னை, ஜன.29- கடலோரக் காவல்படையில் மீனவர் பாதுகாப்பு படைப் பிரிவு ஒன்றை தனியே 24 மணி நேரமும் கண்காணிக்கும்படியாக மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகளை காத்திட நிரந்தர தீர்வு கண்டிட ஒன்றுபட்டு தீர்வு காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

அன்றாடம் ஆபத்து

தமிழ்நாட்டு மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலிலேதான் உள்ளது. அத்தொழிலைத் தவிர அவர்களுக்கு வேறு தொழில் ஏதும் தெரியவே தெரியாது. தங்கள் வாழ்க்கையை அன்றாடம் ஆபத்துக்குரியதாகவும், இயற்கையின் கொடுமைகளால் பாதிக்கப்படக் கூடியதாகவும் இருந்தாலும் துணிந்து கடல் மேல் வாழ்கிறார்கள் அவர்கள்!

டில்லி அரசின் பல்லவி!

அத்தகைய வீரர்களுக்கு இலங்கை அரசு, நாளொருமேனியும் பொழுதொருவண்ணமும் கொடுக்கும் தொல்லைகள் எழுதி முடியாத ஒன்று!

ஏடுகளை எடுத்தால், ஊடகங்களைப் பார்த்தால், தமிழ்நாட்டு மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கைது, சிங்களவர்கள் தாக்குதல், சிறைப்பிடித்தல் - இப்படித்தான் அன்றாட அவலங்கள்.

மத்தியில் உள்ள டில்லி அரசோ கவலைப்படுகிறோம்! (We are Concerned) என்ற பல்லவியையே மாறி மாறிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்!

தமிழக மீனவர்களுக்கு தொல்லையோ தொடர் கதை

நமது வெளியுறவு அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவரது ஆட்சி சகாக்களைச் சந்தித்துப் பேசி உறுதிமொழி பெற்றுத் திரும்புகிறார்கள்!

ஆனால், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு வரும் தொல்லைகளோ தொடர்கதை!

இதற்கு மத்திய அரசு ஏன் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணக் கூடாது?

தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் அந்தரங்க சுத்தியோடு இந்த நிலையை மாற்றிட எடுக்கும் அத்தனை முயற்சிகளும், பயன் தரும் அளவில் இல்லாததற்கு முக்கிய காரணங்களாவன. கச்சத் தீவினை இந்திய அரசு இலங்கை அரசுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து, அங்கு நமது மீனவர்கள் மீன்பிடி உரிமையையும் விட்டுக் கொடுத்து, யாருக்கும் தெரியாத ஒரு ஒப்பந்தம் போட்ட கொடுமைதான்.

இதனை மீட்கவும், தமிழ்நாட்டு மீனவர்களுக்குரிய தொழில் அடிப்படை உரிமையைக் காப்பாற்ற போதிய ஏற்பாடுகளையும் அசட்டையின்றி செய்ய மத்திய அரசு முன் வருதல் வேண்டும்.

திராவிடர் கழகம் போட்ட ரிட் மனு

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து தந்தது சட்டப்படி செல்லாது என்ற சட்டப் பிரச்சனை அடிப்படையில் திராவிடர் கழகம் போட்ட ரிட் மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது.

நமது முதல் அமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கச்சத்தீவு வழக்கும் நிலுவையில் - முழுமையான விசாரணைக்கு வராமல் - உள்ளது.

சட்டப்படி, மீனவர்களுக்குப் போதிய பாதுகாப்புத் தர வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை - அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பும் சில சில நேரங்களில்தான் இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினரால் செயல்படுத்தப்படுகிறது!

மீனவர் பாதுகாப்பு படைப்பிரிவு

இது மேலும் பலப்படுத்தப்பட்டு கடலோரக் காவல் படையில் மீனவர் பாதுகாப்புப் படைப் பிரிவு என்றே ஒன்று தனியே அமைத்து நாளும் 24 மணி நேரமும் - ரோந்திலேயே இருக்கும்படி கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் மத்திய அரசு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் - அமைப்புகளும் - முதல் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து ஒன்றுபட்டு ஒரு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி, அதில் குறுக்குசால் ஓட்டப்படாத ஒருமித்த தீர்மானம் - முடிவு ஏற்பட வேண்டும்.

அனைவரும் ஒரே குரலில்

அனைவரும் ஒரே குரலில், ஒரே அணியில், மனிதாபிமானமற்ற முறையில் மீனவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் - திட்டமிட்டே இலங்கையில் சிறைப்பிடித்து வைத்தல், மீன் வலைகளைப் பறிமுதல் செய்வது, படகுகளை இழுத்துச் செல்லுதல் போன்றவைகளுக்கு தடுப்பு முறைகளை உருவாக்க நாம், மத்திய அரசை வற்புறுத்திட வேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு தீர்வு. இன்றேல் இந்த அவலங்கள் நீங்காதவைகளாகி விடக் கூடும்!

கி. வீரமணி தலைவர்,திராவிடர் கழகம் 29-1-2012

தமிழ் ஓவியா said...

மநுநீதிக்கு வக்காலத்தா? புதிய வக்கீல் பதில்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட மநுநீதியை இன்று அலசி, ஆய்ந்து பார்ப்பது தேவை யற்ற வேலையல்லவா? இன்று நம்மை கட்டுப்படுத்துவது இந்திய அரசியல் சாசனமும், சட்டங்களும்தானே, மனுவைப் பற்றி நமக்கேன் கவலை? என்று நினைக்கும் வாசகர்கள் நினைவில் வைக்க வேண்டியது:

னமநுநீதி போன்ற தர்மசாஸ் திரங்களை முழுமையாக நம்பியவர் கள்தான் இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தையும், பின்னால் சுதந்திர இந்தியாவின் இந்து சிவில் சட்டம் இயற்றப்பட்டதையும் முழு மூச்சாக எதிர்த்தவர்கள்.

னஇவர்களின் வாழையடி வாழையாக வந்துள்ள சங்பரிவார் கூட்டத்தினரின் இந்து ராஜ்யத்தில் மநுநீதி மீண்டும் தலை தூக்கும் வாய்ப்பு நிஜமானது. இவர்கள் பார்வையில், மநுநீதி காலாவதியாகிப் போன, பெண்ணுரிமைக்கும், சமூக நீதிக்கும் எதிரான, நாம் குழி தோண்டி புதைக்க வேண்டிய மூத்த பொய்மை அல்ல. இந்து மதத்தின் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்.

இப்படிச் சொல்வதை சிலர் நம்பாமல் போகலாம். ஆனால் இந்து ராஜ்ய வாதிகளையே பேச வைப் போம். இவர்களின் பழம்பெரும் குருவான கோலவால்கர் சொற்பாடி மனித குலத்தின் முதன்மையான, மிகச் சிறந்த, மாமேதையான சட்ட நிபுணர் மநுதான். குருஜி பழங் காலத்து மனிதர். ஏதோ சொல்லி யிருக்கலாம் என்று விட்டுவிட் டாலும்.

இவ்வியக்கத்தை சார்ந்த நவீன காலவாதிகளும் இதையே தான் சொல்கிறார்கள்! விஸ்வ இந்து பரிஷத் நடத்திய இந்து வழக்குரை ஞர்களின் இரண்டாவது மாநாட்டில் (ஏப்தல் 18-19, 1992) உரையாற்றிய உத்தரப் பிரதேசத்தின் அட்வகேட் ஜெனரல், மநு ஸ்மிருதி அனை வருக்கும் நியாயம் வழங்கியது. இது எக்காலத்திற்கும், மனிதகுல முழு மைக்கும் ஏற்றது என்று சர்டிபிகேட் வழங்கினார்.

பெண்கள்,சூத்திரர்கள், வைசியர்கள்,சத்திரியர்கள் ஆகியோரைக் கொலை செய்வது மைனர் குற்றமாகும்... பெண் வேத மந்திரங்களை ஓத முடியாது. அவள் பொய்க்குச் சமம் என்ற சாதீய, பெண் அடிமைத்தன நியதிகளைக் கொண்டதுதான் மநுதர்மம் என்பது அட்வகேட் ஜெனரலுக்கு தெரியாமல் இருக்க முடியாது. தெரிந்தும் அவர் மநு தர்மம் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று கூறியிருப்பது, இவர்களுடைய இந்து ராஜ்யத்திலும் மநு (அ) தர்மம் கொடி கட்டிப் பறக்கும் என்பதற் கான எச்சரிக்கைதான்.
மநுதர்மம் தான் இந்து தர்மமா?

இவ்விடத்தில் இது சம்பந்தப் பட்ட மற்றோர் அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் போற்றும் மநுதர்மம் எல்லா இந்துக்களுக்கும் பொதுவானது என்ற பார்வை தவறானது.

புராதன இந்தியாவில் அனைவரையும் கட்டுப்படுத்திய பொதுவான இந்து மதம் சார்ந்த சட்டங்கள் ஏதுமில்லை. உண்மை யில் அக்காலத்து மக்கள் தங்களை இந்துக்களாக உணரவில்லை. பல்வேறு உபசாதிகளை, சைவம், வைணவம் போன்ற பிரிவுகளை சார்ந்தவர்களாகவே உணர்ந்தனர். ஜாதி அடிப்படையில் பழக்க வழக்கங்கள், சம்பிரதாய சடங்குகள் வேறுபட்டன. உயர் ஜாதிகளில் பெண்கள் ஒடுக்கப்பட்ட அளவிற்கு பிற்படுத்தப்பட் ஜாதிகளில் கட்டுப் பாடுகள் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி யின் நிருவாக வசதியை முன்னிட்டு, இந்துக்களை கட்டுப்படுத்துவதற் கான கோட்பாடுகளை வரைய றுக்கும் பணி சில பண்டிதர்களிடம் விடப்பட்டது. பார்ப்பன ஜாதியை சார்ந்த இப்பண்டிதர்கள், மிசச் சிறுபான்மையினராக உயர்ஜாதி களைக் கட்டுப்படுத்திய மநுஸ்மிருதி, தர்ம சாஸ்திரம் போன்ற நூல்களின் அடிப்படையில் சமூக நியதிகளையும் ஒழுங்கு முறைகளையும் தொகுத் தளித்தனர். ஆகவே, பார்ப்பனீய மரபுகளும் மாண்புகளும், இந்து என்ற லேபில்- பெற்று பெரும் பான்மை சமூகத்தினரின் மரபுகளாக மாற்றப்பட்டன. இதன் விளைவாக பெரும்பான்மை மக்கள் குறிப்பாக பெண்கள் அனுபவித்து வந்த ஓரளவு சுதந்திரத்தையும் இழந்தனர்.

-மைதிலி சிவராமன்

- நன்றி : (தீக்கதிர் 29.1.2012)