Search This Blog

26.1.12

பகடிக்குரிய பெயரா பாரிவேந்தர்?



கலை எனப்படுவது இனக்கொலையானால் கலையைக் கொலைசெய் என்றார் தந்தை பெரியார். ராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் அறிவார்ந்த முறையில் திறனாய்வு செய்த நிலையில்தான், அவ்விரண்டு நூல்களும் தமிழினத்தின் அடையாளத்தைச் சிதைப்பதைக் கண்டுணர்ந்த தந்தை பெரியார் மேற்காட்டிய முழக்கத்தை முன்வைத்தார். தீ பரவட்டும் என ஆணையிட்டார் பேரறிஞர் அண்ணா. பெரும் பேராசிரியர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் திகழ்ந்த இரா.பி.சேதுப் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் இருவரும் அண்ணாவிடம் வாதப்போர் புரிந்து தோற்றனர். திராவிடர் இயக்கத்தின் கொள்கை முழக்கம் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. தமிழ் உயிர்த் துடிப்போடு சிலிர்த்தெழுந்தது. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என்ற புரட்சிக் கவிஞரின் சங்கநாதம் தமிழரை வீறுகொள்ளச் செய்தது. ஆம் வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டிய திராவிட இயக்கம், தமிழின் மறுமலர்ச்சிக்கும் உயிரும் உரமும் ஊட்டியது. மூடநம்பிக்கையின் முடை நாற்றம் வீசிய திரைப்படத்துறையைப் பகுத் தறிவுப் பாசறையாக மாற்றியது அப்பேரியக்கம். ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரே! நன்றாய்த் தெரிந்து சொல்வீரே என மக்களிடம் வேண்டுகோள் வைத்தது. ஜாதித் தளைகளை உடைத்து, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சமத்துவத்திற்கான கருத்தியலை மக்கள் மனதில் ஆழப்படுத்தியது.

அந்த மறுமலர்ச்சியை, உணர்ச்சிப் பெருக்கை, அந்த இயக்கங்களின் ஆட்சிக் காலத்திலேயே சிதைக்கும் முயற்சி படிப்படியாக வெற்றி பெற்று வருகிறது.

மக்கள் திலகம் முதல்வராக இருந்த போது வெளிவந்த படம் ஒன்று அந்த ஏழு நாட்கள் என்பது. அதில் மலையாள இளைஞன் மிக நேர்மையானவனாகவும் அவனின் நண்பன் ஒரு சிறுவன் தமிழனாகவும் - திருடனாகவும் காட்டப்பட் டான். அது கண்டு தமிழினம் சிலிர்க்கவில்லை. தமிழின வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிவருவதும் சமூகநீதியின் அடிப் படையாக விளங்கிவருவதுமான இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான ஒரு திரைப்படம் ஜென்டில்மேன். அதை எதிர்த்து எந்தத் தமிழனும் ஆர்த்து எழவில்லை, உப்புக்கருவாடு ஊற வைத்த சோறு என சோற்றுப் பிண்டமானான் மானமிகு மனிதனாக இருக்க வேண்டிய தமிழன். கல்லக்குடி போராட்டத் தலைவனின் காதல் மொழியைக் காட்டி கலைஞரை கேலி செய்த இருவர். திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவரை இழிவு செய்த ஒருநாள் முதல்வன், கலப்பு மணத்தை எதிர்த்து ஜாதி வெறியர்களின் கொலை வெறியைச் சித்தரித்த காதல் எனத் தமிழன் மறுமலர்ச்சியின் அடையாளங்களைச் சிதைப்பது.... இந்த போக்கின் விளைவாக தமிழ்ப் பெயர் வைத்தவர்களை ஒருபால் தொடர்பாளர்கள், கொலையாளிகளாகக் காட்டுவது, கரைவேட்டிக் கட்டியவர்களைக் கொடுமையாளர்களாகக் காட்டுவது, வெடிகுண்டு வைப்பவர்களையும் தேசத்துரோகம் செய்பவர்களையும் இசுலாமியர்களாகச் சித்திரிப்பது, கறுப்பு நிறமுடையவர்களைக் கேலி பேசுவது எனும் நிலையில் திரைப்படங்கள் வருவது தமிழினத்தை இழிவு செய்வதும், இன ஓர்மையைச் சிதைப்பதுமான திட்டமிடப்பட்ட செயல்களாகத் தொடர்கின்றன. இச்சூழலில் தமிழின் அடையாளக் குறியீடுகளை எவ்வளவு இழிவு செய்ய முடியுமோ அவ்வளவு இழிவு செய்யும் முயற்சியில் ஷங்கர் எனும் திரைப்பட இயக்குநர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

தமிழர் வரலாற்று மரபில் வள்ளல்கள் பலர் இருந்தாலும், அவர்களில் எல்லாம் தலைசிறந்தவனாகப் போற்றப்படுபவன் பாரிவள்ளல். முல்லைக்கு தேரீந்தவனாக மட்டும் அவன் இருந்ததில்லை. வறுமையால் வாடிய மக்களின் பசிப்பிணியைப் போக்கியவன். புலவர்களை நண்பர்களாகப் பெற்றிருந்தவன். நட்பின் இலக்கணமாகத் திகழ்ந்தவன். கொடை யின் குறியீடாகத் திகழ்பவன். அவன்மீது இந்த ஷங்கருக்கு என்ன கோபம்? ஒரு திரைப்படத்தில் அந்தக் கொடை வள்ளலின் இரண்டு மகள்களின் பெயரையும், அழகற்ற இரு பெண்களுக்குச் சூட்டி, அப் பெண்களின் தந்தையே அவர்களை வலிய ஒருவனுக்கு மணம் முடிக்க முன்வருவதாக காட்டினார். தந்தையே தரகனாகும் கொடுமை கண்டு தமிழினம் சிலிர்த்தெழவில்லை இப்போதோ நண்பன் எனும் திரைப் படத்தில் பாரிவேந்தர் என ஒரு பாத்திரம், அறிவும், முயற்சியும், ஒழுக்கமும் இல்லா ஒரு பாத்திரத்திற்குப் பாரிவேந்தர் எனப் பெயர்சூடியதில் அந்த இயக்குநர் யாரைப் பகடி செய்கிறார்? பாரியையா? இல்லை அந்தப் பட்டத்திற்கு உரியவரையா? இருவரையும் இழிவு செய்வதுதான் அவரின் நோக்கம் என்பது அவரது திரைப்படங்களின் தொடர்ச்சி காட்டு கிறது. இந்தப் போக்கு மிகவும் கண்டிக் கத்தக்கது. கன்னடத் திரைப்படம் ஒன்றில் ஒரு தமிழ்க்குடும்பமே தமிழில் பேசிக் கொள் வதாக ஒரு காட்சி, அதற்கே கருநாடக மாநிலம் கொதித்தெழுந்தது. அந்த உணர்வில் ஒரு விழுக்காடாவது தமிழகத்தில் இல்லையே?

ஷங்கர் அவர்களே, உங்களுக்கு ஒரு வார்த்தை இந்தியத் தத்துவ வரலாற்றில் மதிக்கத்தக்க ஒருவராக இன்றும் திகழ்பவர் மாத்துவர். இவரின் தத்துவம் துவைதம் என்பது. இவர் ஆதிசங்கரரின் பரம எதிரி, இவர் நூலில், ஆதிசங்கரரைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் சவுக்குப் பதிலாக ஷ வையே பயன்படுத்தியுள்ளார். அப்படி எழுதியதின் வாயிலாகச் சங்கரரின் பிறப்பையே இழிவு செய்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஷங்கரர் என்றால் இழிபிறப்பினன் என்பது பொருளாம். பெயரிலேயே இழிவைச் சுமந்து திரியும் நீங்கள், மற்றவர்களை இழிவு செய்ய முன்வராதீர்கள். தமிழோ தமிழ்மரபோ உங்களின் கேலிக் குரியவை அல்ல. உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். ஆம் உங்களின் பெயரில் உள்ள எழுத்தையும் கூடத்தான்.

பேராசிரியர் பச்சமுத்து உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்துவரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறுவனர். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, காணார், கேளார், கால் முடப்பட்டோர் பேணுநரின்றிப் பிணியால் வாடியோர் ஆகியோருக்குச் செய்த அறங் களைப் போல, இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப்படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே!

--------------- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் “விடுதலை” 26-1-2012 இல் எழுதிய ஆசிரியருக்கு கடிதம் பகுதியிலிருந்து

3 comments:

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!


இன்றைய நாளேடுகளில் எதிர்மறை யான தலைப்பில் ஒரு சேதி வெளியாகி யுள்ளது. பாரத ரத்னா விருது - சச்சின் டெண்டுல்கருக்கு இல்லை என்பது தான் அந்தச் செய்தி.

கிரிக்கெட் விளையாட்டுக்காரருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்படும் என்று யார் சொன்னது!? அதிகாரப் பூர்வமாக எப்பொழுதாவது சொல்லப் பட்டதா?

பார்ப்பன ஊடகங்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு தகவலை உலவ விட்டு, அது பழமாக ஆகி விடாதா? என்ற தந்தி ரத்தில் உலவ விட்ட அக்கப் போர் சேதி அது. இப்பொழுது என்ன போடுகிறார் கள்? பாரத ரத்னா பட்டத்தின் பட்டியலில் சச்சின் இடம் பெறவில்லையாம் - மகா மகா தந்திரசாலிகள் பார்ப்பனர்கள். எப்படியோ ஒரு சேதி அவாளைப்பற்றி!

தி.மு.க. மாஜி அமைச்சர் எ.வ. வேலு: சங்கம் மருவிய காலத்தில், சமணமும், பவுத்தமும் பரவியது.

அய்ந்தாம் நூற் றாண்டுக்குப் பிறகு சிவன், பிரம்மா, விஷ்ணு என, பல்வேறு கடவுள்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்தக் காலம் தொட்டு, சங்க இலக்கியமும், பக்தி இலக்கியமும் படிப்படியாக வளர்ந்தது.

டவுட் தனபாலு: நீங்க இப்படியெல்லாம் பேசறது, கழகத்தின் பரிணாம வளர்ச் சின்னு எடுத்துக்கலாமா...? ஐந்தாம் நூற்றாண்டில் அடையாளம் காணப்பட்ட கடவுள்களை, 19ஆம் நூற்றாண்டில் இல்லைன்னு மறுத்து, பகுத்தறிவு பேசியது தப்புன்னு இப்பவாவது. உங்க தலைவர் ஒத்துக்கு வாராங்கறதுதான், என்னோட டவுட்! - தினமலர் 26.1.2012

முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு ஒரு வரலாற்றுத் தகவலை சொல்லியிருக் கிறார். அவ்வளவுதான் இதில் கடவுள் நம்பிக்கை உண்டா - இல்லையா என்ற கேள்வி எங்கே வந்தது?

ராஜராஜசோழன் ஆட்சியில் தமிழ் நாட்டுக் கோவில்களில் சமஸ்கிருதம் புகுத்தப்பட்டது; தேவதாசி முறை கொண்டு வரப்பட்டது என்று சொன்னால் - அது ஒரு வரலாற்றுத் தகவல்தான். உடனே கோவில்களில் வழிபாட்டு முறைகளில் தமிழ் வேண்டும் என்று போராடலாமா? தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நீதிக்கட்சி எப்படி கொண்டு வரலாம் என்று கேட்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதற்கு அப்பனான முட்டாள்தனம் தினமலரின் கிறுக்கல்.

எந்த ஒரு வகையிலாவது திராவிடர் இயக்கத்தைச் சீண்டுவது என்பது சிண்டுகள் கூடி எடுக்கப்பட்ட தீர்மானம் போலும்!

ஊழல் முடிவுக்கு வராத நிலையில் பொறுமையிழக்கும்போது கன்னத்தில் அறைவதைத் தவிர வேறு வழியில்லை - அன்னா ஹசாரே

இந்தச் செய்தியை வெளியிட்ட ஏடுகள் சில காந்தியவாதி அன்னாஹசாரே கூறியதாகக் குறிப்பிட்டுள்ளன.

அன்னாஹசாரே குழுவினரில் உள்ள வர்களே ஊழல்களுக்கு அப்பாற்பட்ட வர்கள் அல்லர் என்று செய்திகள் வெளி வந்தனவே - அவர்களின் கன்னத்தில் யார் அடிப்பது?

அறக்கட்டளை, நிதியை தன் பிறந்த நாள் கொண்டாடுவதற்குப் பயன்படுத் தினார் என்று வழக்கே தொடுக்கப்பட்டுள் ளதே - இந்த ஹசாரேயின் கன்னத்தை யார் வீங்க வைப்பது?

அன்னாஹசாரேயின் இந்தப் பேச்சு வன்முறையைத் தூண்டக் கூடியது என் பதில் அய்யமில்லை. இவர் கைது செய்யப் படுவாரா?

சட்டம் தன் கடமையைச் செய்யுமா? எங்கே பார்ப்போம்.

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியின் புத்தகத்தை வாசித்த நான்கு எழுத்தாளர்கள் வெளியேற்றம்.

இந்த விழாவில் சல்மான் ருஷ்டி கலந்து கொள்வதாக இருந்தது. அவர் உயிருக்கு மிரட்டல் இருப்பதாக ஒரு கதையைக் கட்டி வரவிடாமல் தடுக்கப்பட்டார்.

இப்பொழுது என்னவென்றால் ருஷ்டி யால் எழுதப்பட்டு உலகெங்கும் பரபரப்புக்கு உட்படுத்தப்பட்ட அவரது சாத்தானின் கவிதைகள் எனும் நூலிலிருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டிய நான்கு எழுத்தாளர்கள் அரங்கிலிருந்து வெளி யேற்றப்பட்டனராம். இந்த விழாவில் பங் கேற்ற உலக நாத்திக அறிஞரான ரிச்சர்டு டாக்கின்ஸ் அதே மாநாட்டில் கூறிய கருத்து, அந்த மாநாட்டுக்கே பொருத்த மாக ஆகி விட்டதுதான் ஆச்சரியம்.

மதத்தினால் தூண்டுதல் பெற்றோம் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அள வுக்கு அதிகமாக அனுதாபம் காட்டப் படுகிறது. வெறும் வெறுப்பின் அடிப்படை யிலேயே செயல்படும் மக்களுக்கு இத்தகைய அனுதாபம் காட்டப்படக் கூடாது என்றாரே டாக்கின்ஸ். அதனை இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

மதத் தொடர்பான எந்த செய்தியையும், கருத்தையும் எழுதலாம், பேசலாம்; ஆனால் மதத்துக்கு மாறான கருத்துகளைச் சொன்னாலோ விட் டேனா பார்! என்று வெறி கொண்டு தாவிக் குதிப்பது - 21ஆம் நூற்றாண்டில் தான் நாம் இருக்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. உண்மையைச் சொல்லப் போனால் நபிகள் நாயகமே ஒரு சீர்திருத்தவாதி தானே!
---"விடுதலை” 26-1-2012

எனது கவிதைகள்... said...

பேராசிரியர் பச்சமுத்து என்கின்ற மருத்துவர் அய்யா பாரிவேந்தர் உழைப்பின் குறியீடு. முயற்சியின் வடிவம். ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்விட்டு வளர்ந்துவரும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர். ஓர் அரசியல் கட்சியின் நிறுவனர். இன்று ஆயிரக்கணக்கான ஏழை, எளியோருக்கு வாழ்வளிக்கும் வள்ளல் பாரிவேந்தர் என அவரை மற்றவர்கள், அவரால் பயன்பெறும் மக்கள் அழைத்து மகிழ்கின்றனர். விருதுக்கு ஏற்ப வாழும் வாழ்க்கை அவரின் வாழ்க்கை. அவரைச் சிறுமைப்படுத்துவது தனிமனித அவதூறாகும் இது மன்னிக்க முடியாத குற்றமே!
தமிழன் என்றமுறையில் பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் “விடுதலை” 26-1-2012 இல் எழுதியமைக்கு நன்றியும், வாழ்த்துக்களும் அய்யா!
மற்றும் இயக்குனர் திரு.ஷங்கர் அவர்களை 13/01/2012 தேதியிட்ட தினகரன் நாளிதழை பட்டித்துப் பார்க்கச் சொல்லுங்கள் அதில் கடந்தமாதம் கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட தானா புயலில் பாதிக்கப்பட்ட
SRM கல்விகுழுமத்தில் படித்துவரும் 328 ஏழை மாணவ/மாணவிகளின் படிப்புசெலவு 7-கோடியை தள்ளுபடிச்செய்த ஒரே கல்வியாளர் டாக்டர்.பாரிவேந்தர் ஒருவரே ஒழிய வேறு யாரும் இருக்கமுடியாது!
மக்கள் பணத்தை சினிமா என்ற பெயரில் சுருட்டும் இயக்குனர் திரு.ஷங்கர் அவர்கள் என்னசெய்தார்!
இதுபோல விஷமதனமான செயல்களில் அவர்கள் ஈடுபடாமல் இருந்தால் அவரது நல்லபெயர் கெடாமல் இருக்கும்!


உண்மைவிரும்பி.
மும்பை.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி