Search This Blog

22.1.12

பெரியாரின் தாக்கம் அதிருதுல்ல!



தினமலர் உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு தந்தை பெரியாரையோ, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களையோ இயக்கத் தலைவர்களையோ சமூக நீதியில் கவலையுடைய வி.பி. சிங் போன்றவர்களையோ சீண்டாவிட்டால் இவர்களுக்குத் தூக்கமே வருவதில்லை.

அதிலும் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த 38 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஒவ்வொரு பார்ப்பானையும் புரண்டு புரண்டு படுக்கச் செய்து வருகிறார். தூக்கத்தில்கூட சிம்ம சொப்பனமாக அவாளுக்கு இருந்து வருகிறார்.

இன்று வெளிவந்த தினமலர் வாரமலர் (பக்கம் 28இல்) நடுத்தெரு நாராயணன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறார்.

நாடகம், சினிமாக்கள் மக்கள் மத்தியில் ஒழுக்கக் கேட்டை வளர்ப்பதுபற்றி 1944இல் இனி என்ன செய்ய வேண்டும்? என்று தலைப்பில் பெரியார் எழுதியதை எடுத்து வெளியிட் டுள்ளது. (பரவாயில்லையே! எப்படியோ கருத்துக்களை விளம்பரப்படுத்துகிறது! பார்ப்பானுக்கு ஏது முன் புத்தி?)

மூடநம்பிக்கைகளையும் ஒழுக்கக் கேடுகளையும் அன்று மட்டுமல்ல இன்றும் கூட சினிமாக்கள் பரப்பி வருவதை தினமலரால் மறுக்க முடியுமா?

தினமலர் திரி நூலுக்கு சமூக அக்கறை இருந்தால், தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தை வரவேற்று எழுதியிருக்க வேண்டும். விளக்கியும் எழுதி இருக்க வேண்டும்.

அவாளுக்கு அதுவா நோக்கம்? எந்த வகையிலாவது பெரியாரைச் சிறு மைப்படுத்த வேண்டும் என்பதுதானே ஒவ்வொரு முறையும் சிண்டை அள்ளி முடியும் போதும் நினைப்பு!

இதே ஈ.வெ.ரா. ஈரோட்டில் சொந்தமாக சினிமா தியேட்டர் வைத்து இதே 1944ஆம் ஆண்டுகளில் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தார். அந்தத் தியேட்டர் ஈ.வெ.ரா. வின் தங்கை கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று தினமலர் எழுது கிறது.

முதல் வரியில் ஈ.வெ.ரா. நடத்தி வந்தார் என்று எழுதுகிறது; அடுத்த வரியில் ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று எழுதுகிறது.
ஏன் இந்த முடிச்சி மாறி வேலை?

பெரியார்தான் நடத்தி வந்தார் என்று சொல்லுவதற்கு அதனால் முடியவில்லை. அதே நேரத்தில் பெரியாரை எப்படியாவது சம்பந்தப்படுத்தியே தீர வேண்டும் என்ற நினைப்பில், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மா பெயரில் நடந்து வந்தது என்று எழுதும் பித்தலாட்டத்தைக் கவனிக்கத் தவறக் கூடாது.

பெரியாரின் அப்பா நாமம் போட்டிருந்தார் - அண்ணன் கிருஷ்ணசாமி பக்திமானாக இருந்தார் என்று சொல்லிக் கூட பெரியாரைச் சீண்ட லாமே!

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை காதணி விழாவில் கலந்து கொண்டு கூட, அதைப் பற்றிக் கண்டித்துப் பேசுவார். சில திருமணங்களில் தாலியை எடுத்துக் கொடுத்து தாலி - முனிசிபாலிட்டி நாய்களுக்குக் கட்டும் லைசென்ஸ் போல என்று கூடப் பேசுவார்தான்.

மூட நம்பிக்கை, பழைமைப் பாசியில் மூழ்கிக் கிடக்கும் மக்களிடத்தில் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு இவை தவிர்க்கப்பட முடியாதவை.

எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும், அதனை முற்போக்குப் பாதை பக்கம் திருப்ப வேண்டும் என்று நினைப்பது - சமுதாய மாற்றத்தில் இருக்கும் அக்கறையைக் காட்டுமே தவிர, அது குறைபாடு உடையதாகாது.

பெரியார் இப்படித்தான் பேசுவார் என்று தெரிந்திருந்தும் அவரைக் கூப்பிடுகிறார்களே - அதை நினைத்துப் பாருங்கள். பெரியார் உடலால் மறைந் திருக்கலாம் உணர்வால் இன்றும்கூட தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளார் - தினமலர்களைப் படிக்கும்போது, அதுதான் நினைவிற்கு வருகிறது.

------------------ "விடுதலை” 22-1-2012

8 comments:

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் பொங்கல் வாழ்த்து


பொங்கல் வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப் பெற்றுவிட்டது. இதற்குக் காரணம் பொங்கல் விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும்.

உண்மையில் இன்று தமிழர்களுக்குத் தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ண மாக பொங்கல் விழாவைத் தவிர வேறு விழா எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.

ஆகவே, தமிழர்கள் இந்த உண்மைக் காரணத்தினாலேயே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டதோடு அதைத் தனிப்பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட இந்த கொண்டாட்ட விழா நாளில் தமிழர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தை அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும். அந்த முறையில் நான் ஒவ்வொரு தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து திராவிட நாடு மூலம் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

என்ன வாழ்த்து என்றால், தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு தமிழர்க்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப் பண்பு பெற்று மானமுள்ள மக்களாக வாழவேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.

ஈ.வெ.ராமசாமி
14.01.1949

(14-.01.1949 திராவிட நாடு இதழில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து)

தமிழ் ஓவியா said...

தமிழர் திருநாள் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள்
செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம்
பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய்
ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப்
பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர்
எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்!

புதிய பரிதியைப் புகழ்ந்து வாழ்த்தி
இதுதான் வல்லான் எழுதிய தமிழோ
எனும்படி இறக்கிய இளஞ்சூட்டின்சுவைப்
பொங்கல் இலைதொறும் போட்டுத் தேன்கனி,
செங்கரும்பின் சாறும் சேர்த்தே

அள்ளூர அள்ளி அள்ளிப் பிள்ளைகள்
தெள்ளு தமிழ்ப் பேச்சுக் கிள்ளைப் பெண்டிர்
தலைவரொ டுண்ணும் தமிழர் திருநாள்!

தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்!
இருளும் பனியும் ஏகின, பரிதி
அருளினால் எங்கணும் அழகு காண்கிறோம்!
கலக்கம் தீர்ந்தது! கருத்திடை அனைத்தும்
விளக்கம் ஆயின! மேன்மைத் தமிழைப்
போற்றுதல் வேண்டும்:

வண்மைத் தமிழர்
திராவிடர் என்று செப்பும் இனத்தின்
பெரும்பகை ஆரியர்; வரம்பு மீறாது
மறச்செயல் தொடங்க மறத்தல் வேண்டா.

ஆடலில் பாடலில் வீடுகள் சிறந்தன!
ஊடலில் கூடலில் உவந்தனர் மடவார்!
தெருவெலாம் இளைஞர் திறங் காட்டுகின்றனர்
சிரித்து விளையாடிச் செம்பட் டுடைகள்
அமைத்தபடி நிறைவேற்றி வைத்தல் வேண்டும்!
ஆள்வோர்க்குத் தமிழர்விடும் அறிக்கை இஃது!
தமிழ்முரசு கொட்டினோம் இணங்கா விட்டால்
சடசடெனச் சரிந்துபடும் ஆட்சிக் கோட்டை!

திராவிடரின் பகைவர்க்கே அடிமை யானோர்,
திராவிடர்க்கு நலம்புரிதல் குதிரைக் கொம்பே!
அரிய தமிழ் நாட்டுரிமை வேண்டும்; அன்றே
அன்புள்ள தெலுங்கர்க்கும் கேர ளர்க்கும்
உரிமையினை நாட்டுவதும் தமிழர் வேலை!
ஒன்று பட்டோம், ஜாதியில்லை; சமயமில்லை;
குரல்கேட்க ஆள்வோரின் காதே! ஒப்பம்
கூறுவாயே இன்றேல் புரட்சி தோன்றும்.

- தமிழர் திருநாள்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...

தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா?

தமிழர்கள் யாவரும் தமிழ்ப் புத்தாண்டைப் பற்றிய தெளிவின்மையோடு, எதை நம்புவது எதைப் புறக்கணிப்பது என்ற குழப்பத்தில் சிக்கியுள்ளார்கள். தமிழக மக்கள் இந்த விசயத்தில் எக்காரணம் கொண்டும் தெளிவுபெற்றுவிடக் கூடாது என்பதில் இப்போது ஆட்சியில் இருப்போரும், அவர்க்கு அறிவுரை வழங்கி வரும் கூட்டமும் மிகத் தெளிவாய் இருக்கிறது. அதன்படி தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாய் கலைஞர் அறிவித்ததை மாற்றி மீண்டும் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது தற்போதைய தமிழக அரசு. இந்நிலையில் எதற்காக தமிழர்கள் தை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது குறித்து விளக்கவே இந்தக் கட்டுரை. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு ஏன் எதற்கு என்பதைப் பற்றியெல்லாம் ஆராயும் முன், நாம் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும்.

அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது. அனைத்துமே வடமொழிப் பெயர்கள். தமிழ் வருடங்கள் எனச் சொல்லப்படுகிற வருடங்களின் பெயர்கள் வடமொழியில் இருப்பதன் ரகசியம் என்ன? அப்படி இருக்கலாமா? அப்படி இருத்தல் உலகத்தின் மூத்தகுடியான தமிழுக்கும் தமிழர்க்கும் மரியாதையாய் இருக்குமா? இந்த அறுபது ஆண்டு சுழற்சி முறையைக் குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டு முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டின் பூர்வகுடி (தமிழ்) மக்களின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்த சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல தமிழகத்தில் நடைமுறைப் பழக்கத்திற்கு வந்துவிட்டது. அறுபது ஆண்டு சுழற்சி முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டியப்த பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழக்கம் இருப்பதைக் கவனியுங்கள். அதாவது ஆரியர்கள் உருவாக்கிய 60 ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார் என்பதை இது குறிக்கிறது. ஒரு சுற்று வந்து விட்டார் என்பது இதன் கரு.

தமிழ் ஓவியா said...

மேலும் இந்த அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. ஒருமுறை நாரதமுனிவர், 'கடவுள்' கிருஷ்ணனை "நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு பெண்ணையாவது தரக்கூடாதா?" என்று கேட்டாராம். அதற்குக் கிருஷ்ணன், "நான் உடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள் என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருஷ்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி "நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்" என்றார். கிருஷ்ணன் நாரதரை "யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்" எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம் . பின் 'கடவுள்' கிருஷ்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு , அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இப்படித்தான் சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் புத்தாண்டு வரலாறு செல்கிறது. தமிழகத்தில் வானியலில் திறமையான அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெரும் புத்தி படைத்த 'கணி'கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அறிவர்'கள் குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார். தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஆரியக் கதை இப்படி இருக்க, தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

தமிழ் ஓவியா said...

அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை---மாசி மாதங்களுக்குரியது)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)

3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)

4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)

5. முன்பனி (புரட்டாசி - அய்ப்பசி மாதங்களுக்குரியது)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு (மீணீஷீஸீ) பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விசயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்து பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்,

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
உண்மை -16-31 -2012

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் புத்தாண்டு : சங்க இலக்கியமும் அறிஞர்களும் சொல்வதென்ன?


பொங்கல் விழா நாளையே தமிழர்கள் புத்தாண்டுப் பிறப்பாக பல்லாண்டு காலமாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பதற்கு அறிஞர்கள் தக்க சான்றுகளாகத் தந்துள்ளனர்.

இரண்டாயிரம் (2000) ஆண்டுகட்கு முற்பட்ட கழக இலக்கியங்களில் இதற்குச் சான்றுகள் உள்ளன.

தைஇத் திங்கள் தண்கயம் படியும் என்று நற்றிணையும் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந்தொகையும் தைஇத் திங்கள் தண்கயம் போல் என்று புறநானூறும் தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ என்று கலித் தொகை யும் தமிழர் வாழ்வில் தைப் பிறப்புச் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், ஆண்டிற்கு மாதங்களை உருவாக்கிப் பெயர்கள் சூட்டியிருப்பதை அறிய முடிகிறது.

தைப்பிறப்பாண்டு வெறும் விழாவையோ அதனாற் கிளர்ந்து எழும் மகிழ்வையோ அடிப்படையாக மட்டும் கொண்டு பிறந்ததல்ல. அறிவியல் தெளிவோடு, கதிரவன் தென்திசை நோக்கி நகர்ந்து மறுபடியும் வடதிசை நோக்கித் திரும்பும் பருவ -கால மாறுதலைக் கொண்டும் கணித்து உருவாக்கப்பட்டதாகும்.

ஆரியர் தமிழ்நாட்டிற்கு வருமுன் வான நூலை ஒரு சிறிதும் அறியார். அவர் அறிந்ததெல்லாம் திங்களுடைய வளர்ச்சி தளர்ச்சியைக் கண்டு காலத்தைக் குறிப்பிடுவது மட்டுந்தான். உவாவு (அமாவாசை)க்கு ஒரு உவா மாதம் என்று அவர்கள் கணக்கிட்டனர். அவர்கள் பல்கித் தமிழ்நாட்டை அடைந்தபோதே தமிழர்களுடைய மதி நுட்பத்தையும், கணித முறைகளையும் கண்டு வியந்து தாமும் தம் முறையைக் கையாளத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் பிறை மாதங்களுக்குப் பெயர் கொடுக்க நினைத்துச் சித்திரை, வைகாசி முதலிய மாதப் பெயர்களையே பெரும்பாலும் சைத்திரம், வைகாசம் எனத் திரித்து வழங்கத் தொடங்கினர்.

சித்திரை மாதத்தில் வரும் உவா நாளுடன் முடிகிற மாதம் சைத்திரம் எனவும், இவ்வாறே ஏனைய மாதங்களுக்கும் பெயர் வைத்துக்கொள்ள ஆரிய மக்கள் சில ஆண்டுகளின் பின் தங்களின் கொள்கைக்கு மாறாகச் சைத்திரம் பங்குனியிலும் வைகாசம் சித்திரையிலும் இவ்வாறே ஏனைய மாதங்களும் முடிவதைக் கண்டு அஞ்சினர்களாய் சித்திரை முதலிய மாதங்களே நிலையானவை; ஆதலினால் அவற்றோடு தங்கள் புதிய மாதங்கள் கூடாமற் போனால் பயனற்றுப்போம் என்று தெரிந்து பங்குனியோடு முடிகிற தமது சைத்திரத்தை அதிமாதம் அல்லது பொய் மாதம் என்று தள்ளி சித்திரை மாதத்தின் உவாவுடன் முடிகிற பிழை மாதமே உண்மைச் சைத்திரம் (நிசசைத்திரம்) என்று கொள்வாராயினர்.

தமிழ் ஓவியா said...

ஆகவே சித்திரை முதலிய பன்னிரு மாதப் பெயர்களும் ஆரியமயப்பட்டுக் கிடத்தல் அறியப்படும். பழந்தமிழ் மக்கள் ஓரைப் (நட்சத்திர) பெயர்களையே மாதப் பெயர்களாகக் கொண்டிருந்தனர் என்பது அறிஞர் பெருமக்களால் தெளிவுறுத்தப்படுதலாலும் பழஞ் சேர நாடான மலையாளத்தில் இவ்வழக்கே இன்றும் நடை முறையிலிருப்பது அறியப்படுதலாலும், சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை என்னும் ஓரைப் பெயர்களால் சுட்டுவதே சிறந்ததென்று தமிழ் மக்கள் கடைப்பிடித்தல் வேண்டும்! (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 25) என்று மறைமலை அடிகளாரின் நண்பர் இ.மு. சுப்பிரமணியம் (பிள்ளை) அவர்கள் கூறியுள்ளார்

முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லாருடைய வாழ்வும் பல வகையில் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள் என்று டாக்டர் மு.வ.கூறுகிறார்.

வடநாட்டாருக்குத் தீபாவளி வருஷப் பிறப்புப் போல, தமிழ்நாட்டாருக்குப் பொங்கல் புத்தாண்டுப் பிறப்பாகும். இடைக்காலத்தில் ஆரியர் தொடர்பால், தை மாதத்திற்குப் பதிலாக, சித்திரை மாதம் புதுவருஷமாக ஆகிவிட்டது. சூரியன் தக்ஷிணாயனத்திலிருந்து அதாவது தென் திசையிலிருந்து உத்திராயனத்துக்கு அதாவது வடதிசைக்கு வரும் பருவமாறுதலை வைத்தே ஆண்டுத் தொடக்கத்தை வரையறுத்தார்கள் இயற்கை வழி வாழ்க்கை நடத்திய நம் மூதாதையர். என்று நாரண துரைக்கண்ணன் கூறியுள்ளார். (பொங்கல் தமிழ்ப் புத்தாண்டு மலர், மலேசியா 15.1.1988)

தமிழ் அரசர்களுடைய கல்வெட்டுகளிலே காணப்படும் காலக் கணக்குகள் அவர்கள் முடிசூடி ஆளத் தொடங்கிய ஆண்டிலிருந்தே கணிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களிடையே பெருவழக்கிலிருக்கும் சாலிவாகன சக வருடம் அக் கல்வெட்டுகளில் இடம் பெறவில்லை.

இச் சாலிவாகன சகவருடம் சாலிவாகனன் எனும் வடநாட்டு அரசனால் இற்றைக்கு 1880 ஆண்டுகளுக்கு முன்னர் நிலைநாட்டப் பட்டதென்பர். இவ்வரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக இருக்கிறது. வட நாட்டரசன் ஒருவன் நிலைப்படுத்திய ஒரு தொடர் ஆண்டை வரவேற்று வழங்கித் தமிழினத்தின் பழமையையும் - பண்பையும், சிறப்பையும் - செல்வாக்கையும் சிதைத்து வந்தமை பெரும் வெட்கத்துக்கிடமானதாகவும் இருக்கிறது என்று இலங்கைப் பேராசிரியர் கா.பொ.ரத்தினம் விளக்குகிறார்.



அந்நாள் இதழ் ஒன்றில்...



கேள்வி: மனிதனுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டுமா?

பதில்: வேண்டியதேயில்லை.

கேள்வி: ஏன்?

பதில்: ஒருவனை ஒழுங்குபடுத்த மனசாட்சியும், தண்டிப்பதற்குச் சட்டங்களும் இருக்கும்போது, வீணாகக் கடவுள் நம்பிக்கை எதற்கு?


பதில் சொன்னவர்:-

உவமைக் கவிஞர் சுரதா

வெளியான இதழின் பெயர்:

சிரஞ்சீவி, 15.5.1952

தமிழ் ஓவியா said...

பொங்கல் பற்றி அண்ணா


ஒரு கலை விழாவாக, ஒரு பண்பாட்டு விழாவாக தமிழகத்திலே நடத்தப்படுவது பொங்கல் விழா.

உழவர் திருநாள் இப்பொங்கல் புதுநாள் என்பதை அனைவரும் இன்று அறிந்து போற்றுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புவரை சங்கராந்திப் பண்டிகையாகவும் சூரிய நமஸ்காரப் பண்டிகையாகவும் இருந்து வந்த நிலைமாறி, இதுபோது, அறுவடை விழா என்றும், உழவர் திருநாள் என்றும், தமிழர் விழா - திராவிடர் திருநாள் என்றெல்லாம் ஏற்றம் பெற்று விளங்கிடக் காண்கிறோம்.

எல்லாப் பண்டிகைகளும் நம்மைப் பிற இனத்தாரின் எடுபிடிகளாக்குவதற்கே பெரிதும் பயன்பட்டு வருவது கண்டு பேராசிரியர் பலரும், சிந்தனையாளர்களும், சீர்திருத்தச் செம்மல் களும், தமிழருக்கே உரித்தானதும் தனிச் சிறப்பளிப்பதுமான இப்பொங்கல் புதுநாள் மாண்பினை மக்கள் அறிந்திடச் செய்துள்ளனர்.