Search This Blog

15.1.12

பெரியார் பார்வையில் பொங்கல் விழா

தந்தை பெரியார் அவர்களின் பார்வையில் பொங்கல் விழா

பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும்.

இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு, அறு வடைப் பண்டிகையென்று சொல்லப்படுவ தாகும். ஆங்கிலத்தில ஹார்வெஸ்ட் பெஸ் டிவல் (Harvest Festival) என்று சொல்லப் படுவதின் கருத்தும் இதுதான்.

மத சம்பந்தமாக பார்ப்பனர் கட்டிவிட்ட கதை

என்றாலும் பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப் படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மை யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூஜிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடாமல், இம்மாதிரியான இந்திர விழா பற்றி கிருஷ்ணன் பொறாமைப்பட்டு தனக்கும் அந்த விழாவை (பூஜையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்த தாகவும், இந்த இந்திரவிழா, கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியதைக் கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு இந்த கிருஷ்ண மூர்த்தி விழா ஈடேறாமல், நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி விழாக் கொண்டாடுவோர் வெள் ளாண்மைக்கு ஆதரவாகயிருந்த கால் நடைகள், ஆடுமாடுகள் அழியும் வண்ணமாகப் பெரு மழையாகப் பெய்யச் செய்து விட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள், கிருஷ்ண மூர்த்தியிடம் சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணமூர்த்தி மக்களையும், ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை(கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியதாகவும், இதனால், இந்திரன் வெட்கமடைந்து, கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன் எனக்கு ஒரு நாள் பண்டிகை, உனக்கு ஒரு நாள் பண்டிகையாக மக்கள் முதல்நாள் எனக்காகப் பொங்கல் பண்டிகை யாகவும், பொங்கலுக்கு மறுநாள் பண்டிகை உனக்காக மாட்டுப் பொங்கலாகவும் கொண் டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான, ஆபாச முட்டாள் தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.

இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திரனின் யோக்கியதை எப்படிப்பட்டது, மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். மற்றும் இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையும், மறுநாளைக்கு ஒரு கதையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்தி பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராள மான முட்டாள்தனத்தையும், மூடநம்பிக் கையையும் புகுத்திவிட்டார்கள்.

பார்ப்பன ஆதிக்கத்தின் சுயநல சூழ்ச்சி

நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படி இருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டுமென்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல் பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உண வருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்ப மாகக் காலம் கழிப்பதையும், நம்மால்கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். மற்றபடியாக மதச்சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர் விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறி வுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதற்கழகு.

---------------ஈ.வெ.ராமசாமி -"விடுதலை" 13-10-1970

3 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்ப் புத்தாண்டிற்குத் தயாராகிறது பெரியார் திடல்!


தமிழர்களே திடல் நோக்கி வாருங்கள்!

சென்னை, ஜன.14- சென்னை பெரியார் திடலில் தை 1,2,3 (ஜனவரி 15 முதல் 17 வரை) ஆகிய நாள்களில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்காக, பெரியார் திடலில், தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில், கிராமியச் சூழல் போன்ற வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது

இதில், குடிசைகள், ஆட்டுப் பட்டி, பனைமரம் போன்றவைகள் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

இதனைக் காண்பவர்கள் சென்னையில் உள்ளோமா அல்லது வளமிக்க கிராமத்தில் உள்ளோமா என்று வியக்கின்றனர்.

பெரியார் திடலே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழா சிறக்க இரவு பகல் பாராது தோழர்கள் பணியாற்றிக் கொண்டுள்ளனர். தமிழர்களின் வாழ்

தை முதல் நாளைத் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடும் வகையில் மூன்றுநாட்கள் (ஜனவரி 15 முதல் 17 வரை) சென்னை பெரியார் திடலில் திராவிடர் திருநாள் விழாக் கொண்டாடப் படுகிறது. இந்நிகழ்வில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டை ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலைகளும், தமிழர்களின் பாரம்பரிய பல்சுவை உணவு விற்பனைக் கண்காட்சியும் நடைபெறுகின்றன.

முதல் நாள்

கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை, கலை வாணன் குழுவினரின் ஏன் தமிழ் புத்தாண்டு கிராமிய இசை மற்றும் திருச்சி கலைக் குழுவினரின் மார்கழியின் உச்சியில் மலரட்டும் தை ஒலி, ஒளி, நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இரண்டாம் நாள்

பன்னீர் அவர்களின் தனி ஆவர்த்தனம், திண் டுக்கல் சரவணனின் கவனக நிகழ்ச்சி, ரோபோ சங்கரின் நகைச் சுவை நிகழ்ச்சி, மற்றும் தை -1 தமிழ் புத்தாண்டு விளக்க கருத்தரங்கம் ஆகியவை நடைபெறுகிறது.

இறுதி நாள்

கருங்குயில் கணேஷ் குழுவினரின் கிராமியக் கலை நிகழ்ச்சியும் தஞ்சை செல்வி கலை குழுவின் கிராமியத் திரை இசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது வழங்கப்படுகிறது. நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தொழிலதிபர் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலிருந்து பெருமக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப் படுகின்றன.

இவ்விழாவினை திராவிடர் கழகத்தின் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பான தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்துகிறது. மூன்று நாள்களிலும் அறிஞர் பெரு மக்களும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்கின்றனர்.

ஆரியப் புரட்டை முறியடிக்க, தமிழர் பண்பாட்டை மீட்க, தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற உண்மை உணர்வை ஊட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா இதுவாகும். தமிழர்களே, குடும்பம் குடும்பமாகத் திரள்வீர்! திரள்வீர்!!

தமிழ் ஓவியா said...

புத்துணர்வு பெறுவோம்!


தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது - தமிழ் உணர்வோடு தை பிறந்தது; இனி வழி பிறக்குமா என்று ஏங்கும் மக்களிடையே பொங்கும் துயர் போக்கி, புதுப் பொங்கல்போல, புத்தாக்கச் சமுதாயம் படைப்போம்!

சமத்துவ சமுதாயத்தினைக் காண் போம்; அனைவர்க்கும் அனைத்தும் என்ற சுயமரியாதைச் சமதர்மப் பொங்கலாக்கி பொலிவுடன் சுவைப்போம்!

தமிழ்ப் புத்தாண்டில் தமிழர்கள் மேலும் புத்துணர்வு பெறட்டும்!

பொங்கலோ பொங்கல்
இனிய வாழ்த்துக்கள்!

தலைவர் வீரமணி திராவிடர் கழகம் 14.1.2012

தமிழ் ஓவியா said...

பொங்கலோ பொங்கல்!

தமிழர்களின் புத்தாண்டான தை முதல் நாளில் தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் பொங்கலோ பொங்கல்! என்ற புத்தொலி கேட்கும்.

எந்த ஓர் இனத்திற்கும் தனித் தன்மையான பண்பாட்டு அம்சங்கள் உறுதியாக உண்டு. அந்த வகையில் தமிழர்களின் பண்பாட்டுத் தோட்டத்தில் மலர்ந்து மணம் வீசும் மலர்தான் இப்பொங்கல் பொன்னாள்!

இன்னும் ஒரு வகையில் சொல்லவேண்டுமானால், உலகெங்கும் நடைபெறும் அறுவடைத் திருவிழா (ழயசஎநளவ குநளவஎயட)வாகவும் இப்பொங்கல் தமிழ் நாட்டுக்கு அமைந்துவிட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொலவடை தமிழின விவசாயிகள் மத்தியில் நடனமிடும் நம்பிக்கை மொழியாகும்.

வீட்டைத் தூய்மைப்படுத்தி வீதியில் வண்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் இவ்விழாவிற்கு முன்னதாக நடைபெற்று முடிந்துவிடும். புத்தாண்டான தை முதல் நாள் பொங்கலன்று தமிழர் இல்லங்களில் புதுப் பொலிவு கண்சிமிட்டும்.

செந்நெல், செங்கரும்பு, இஞ்சி, மஞ்சள், பழங்கள் என்று வகை வகையாக இவ்விழாவில் மேலோங்கி நிற்பதைக் காணமுடியும். அந்த வகையில் இயல் பாகவே இயற்கையில் அமைந்த இனிய விழாவாகவும் இவ்விழா பொலிவதை என்னென்று சொல்ல!

காணும் பொங்கல் என்று ஒரு நாளை ஒதுக்கி, உற்றார் உறவினர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பதும் வாழ்த்துக்களைக் கூறுவதும் நம்மிடையே உள்ள இடைவெளிகளை நிரப்பும் தன்மை கொண்டதாகும்.

வேளாண்மைக்கு உற்ற தோழனாக விளங்கும் கால்நடைகளை ஓம்புவதும் பொருத்தமானதாகும்.

இது போல எல்லா வகையிலும் பொருத்தமாக தமிழர்களுக்கு அமைந்திருப்பது போல மற்ற இனத்தவர்களுக்கு அமைவது என்பது அரிதினும் அரிதே!

மற்ற மற்ற நாடுகளில் அவர்களுக்காக பண்பாட்டு விழாவைக் கொண்டாடும்போது எந்த அயல் பண்பாட்டுக் குறுக்கீடுகளும் இருப்பதில்லை.

ஆனால் தமிழர்களுக்கோ நம்மைப் பிடித்த ஆரிய கிரகணம் நம்முடைய மகிழ்ச்சியில், நம்முடைய பண்பாட்டுத் திருவிழாவில் தன் அற்பப் புத்தியைக் காட்டிக் கொண்டு சிரிக்கிறது; வாதப் பிரதி வாதங்களுக்கு இடம் கொடுக்கிறது - தமிழ் நாட்டுக்கு இது பெரும் கெட்ட வாய்ப்பே!

ஆரியப் பார்ப்பனர்களுக்கு என்று ஒரு நாடு கிடையாது. அவர்களுக்கென்று இருக்கும் சமஸ்கிருத மொழியோ செத்துச் சுண்ணாம்பாகிவிட்டது.

இந்த விரக்தியிலும், வெறுப்பிலும் தமிழர்களுக்கு என்று இருக்கின்ற தனிச் சிறப்புகளை அவர்களால் சீரணித்துக் கொள்ள முடியவில்லை. தங்கள் ஆற்றாமையைப் பல வழிகளிலும், வடிவங்களிலும் காட்டிக் கொண்டு விடுகிறார்கள்!

அதன் வெளிப்பாடுதான் தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மறுப்பது. தமிழ் செம்மொழி என்றால் கோணலாகச் சிரிப்பது போன்ற சில்லறைத் தனங்களில் அற்பத்தன்மைகளுடனும் அவர்கள் நடந்து கொள்கின்றனர்.

தமிழர்களிடம் அவர்கள் பதிய வைத்துள்ள மூடத்தனமான கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை ஒரு வகையில் அவர்களுக்கு அரணாக அமைந்து விடுவதால் பார்ப்பனர்களின் பிழைப்பு நடந்து கொண்டே இருக்கிறது.

தமிழர்களைத் தன்னுணர்வு கொள்ளச் செய்யவும், பண்பாட்டு மீட்சி பெறவும், அவர்களின் புத்தியை பிணைத்திருக்கும் பக்தி விலங்கை உடைப்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.

இந்த அடிப்படைப் பணியைத்தான் தந்தை பெரியார் மேற்கொண்டார்; திராவிடர் கழகம் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறது.

தமிழர்கள் முன் நிற்கும் தலையாய பணி இதுதான். இங்கு பக்தி என்பது கடவுள் நம்பிக்கை என்பதை விட ஆரியத்திற்கு அடிமைப்பட்ட தன்மையே!

நம் பணி மேலும் வலிமையாகத் தொடரவும் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி வீறுகொண்டு எழச் செய்யவும் தமிழர்களின் புத்தாண்டுப் பொங்கல் பொலிவு நாளில் உறுதி எடுப்போம்!

தமிழா தமிழனாக இரு! என்று தமிழர் தலைவர் கொடுத்த முழக்கம் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கட்டும்!

பொங்கலோ பொங்கல்! 14-1-2012