Search This Blog

21.1.12

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -27

வென்றவர் தந்தை பெரியாரே!


இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மை வரலாறு எனும் தலைப்பின் கீழ் 28 கட்டுரைகளோடு துக்ளக்கில் மங்களம் பாடி விட்டார், திருவாளர் கே.சி. லட்சுமி நாராயண அய்யர்வாள்.

இவர் யார் என்றால் அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் எனும் நூலின் பிரதம ஆசிரியர்.

பார்ப்பனர்கள் அந்தணர்கள் என்பதே மோசடி! அந்தணர் என்போர் அறவோர்

மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்

என்று அந்தணர்களுக்கு இலக்கணம் சொன்னவர் திருவள்ளுவர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர் வள்ளுவர்; பிறப்பிலேயே பேதம் என்பது பார்ப்பனர்களின் அடிப்படைக் கொள்கை. இந்த முரண்பாட்டில் திருவள்ளுவர் குறிப்பிட்ட அந்தணர் என்ற சொல்லைத் திருடிக் கொள்வது அசல் போக்கிரித்தனம் அல்லவா!

அந்த நூல் வெளியீட்டு விழாவில் இந்த அய்யர்வாள் என்ன பேசினார்? (9-.10-.2002)

தமிழ் நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் என பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அது கடவுள் எதிர்ப்பு, நாஸ்திக உணர்வு என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. தமிழ் நாடும், தமிழ் மொழியும் தோன்றிய நாளிலிருந்து பிராமணர் இங்கு இருக்கின்றனர். தமிழில் தோன்றிய முதல் நூலே தொல்காப்பியன் என்ற பிராமணன் எழுதியதுதான். சமஸ்கிருதம்தான் இந்தியக் கலாச்சாரத்தின் வேர். அதைக் கைவிட்டால் கலாச்சாரம் அழிந்துவிடும். இதையெல்லாம் வருங்கால பிராமணர்கள் மறந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்று பேசியதிலிருந்தே இந்த அய்யர்வாளின் கண்மூடி இனவெறித்தனத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

திருவள்ளுவரையே பகவன் என்ற பார்ப்பானுக்கும் ஆதி என்ற பறைச்சிக்கும் பிறந்தவர் என்று எழுதும் மோசடிக்காரர்கள் ஆயிற்றே! இல்லாத அகத்தியருக்குப் பொல்லாத மாணவராக தொல் காப்பியரை ஆக்கி விட் டனர் என்றாரே பெரும் புலவர் இலக்குவனார்! விளம்பரம் பெற்றவர்களைப் பூணூல் கூட்டுக்குள் நுழைக்கும் கலையில் கை தேர்ந்தவர்கள் எதையும் எழுதுவார்கள்.

நள்ளிரவில் தலைமறைவான சங்கராச்சாரியார்

ஒரு நாள் நள்ளிரவில் தண்டத்தை விட்டுவிட்டு காஞ்சி மடத்திலிருந்து தலை மறைவாக ஓடிய ஆசாமி சாட்சாத் ஜெயேந்திரர்தான் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

அவர் அங்கு என்ன பேசினார்?

எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. ராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தாம் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்ட போது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள்! ஆண்டவன் கூட அப்புறம்தான் அந்தணன்தான் முதலில்.

ஈஸ்வரனைத் துவேஷித்தால் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் அந்தணனைத் துவேஷித்தால் மன்னிப்பு கிடையாது என்று பேசினாரே - புரிகிறதா?

பூணூல் திருமேனியான இவர்கள் கூறும் மும்மூர்த்திகளான கடவுள்களுக்கும் மேலானவர்களாம் பார்ப்பனர்கள்!

பிறப்பில் பேதம் பேசும் கூட்டத்தையும், அதனைக் கட்டிக் காத்திடக் கற்பிக்கப்பட்ட கடவுளையும் தந்தை பெரியார் ஏன் பின்னி எடுத்தார் என்பது இப்பொழுது விளங்கி இருக்க வேண்டுமே!

பெரியவாள் பெரியவாள்! தானாம்

எவ்வளவுக் கேவலத்தின் குழியில் விழுந்திருந்தாலும் பெரியவாள் என்ற மரியாதையில் ஒரே ஒரு அட்சரத்தையும் குறைத்துக் கொள்கிறார்களா?

எவ்வளவோ சங்கை கெட்டும் அந்த மனுஷர்தான் கொஞ்சமாவது வெட்கப் படுகிறாரா?

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் இந்தியன் வங்கியின் பொது மேலாளராக இருக்கக்கூடிய பார்ப்பான் ஒரு கோடி ரூபாயை சங்கராச்சாரியார் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கு நன்கொடையாகத் தூக்கிக் கொடுக்கிறாரே - சங்கரா நேத்ராலயாத்துக்காக ஒரு கோடி ரூபாயை நாட்டுடமை யாக்கப்பட்ட வங்கியிலிருந்து விளாசுகிறார்களே -இதை எந்தப் பத்திரிகைக்காரன் எழுதுகிறான், விடுதலையைத் தவிர? ஆமாம் இந்தப் பிராமணரை - ஜெகத் குரவை யாரும் துவேஷிக்கக் கூடாது.

கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக இருந்தாலும் இவரைத் துவேஷிக்கவே கூடாது. அனுராதா ரமணன் என்ற பார்ப்பனப் பெண் எழுத்தாளரைக் கையைப் பிடித்து இழுத்திருந்தாலும் துவேஷிக்கவே கூடாது. என் எதிரிலேயே மைதிலி என்ற பெண்ணுடன் சங்கராச்சாரியார் உறவு வைத்தார் என்று அந்த எழுத்தாளர் சொன்னார் அல்லவா? அதற்காகக்கூட சங்கராச்சரியார் பிராமணர் என்கிற காரணத்தால் துவேஷிக்கவே கூடாது - துவேஷித்தால் பிர்ம்மஹித்தி பாவம் வந்து சேர்ந்து விடுமே.

அடேயப்பா, எப் படிப்பட்ட ஜெகத் குரு இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!

எழுதுகிறார் சோ பார்ப்பனர், சங்கர ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது என்று கொஞ்சம் கூட லஜ்ஜை இன்றி எழுதுகிறாரே! இஃதல் லவா பார்ப்பனப் பாசத்தின் உச்சம்!

இதோ ஒரு வெடிச்சிரிப்பு!

ஒரு வெடி சிரிப்பைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

கே.சி. நாராயண அய்யர்வாளின் புத்தித் தீட்சண்யம் இருக்கிறதே அது என்ன சாதாரணமா?
அண்ணாதுரையின் பெயரை சின்ன தம்பி என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்வதைக் கவனிக்க வேண்டும் (துக்ளக் 7-9-2011) என்று எழுதியிருக்கிறார்.

உண்மை என்ன தெரியுமா? சின்ன தம்பி என்று தந்தை பெரியார் சொன்னது அண்ணாவையல்ல - அவரைச் சிறுமைப்படுத்த அல்ல. குடந்தைக் கழகத் தலைவர் சின்னத் தம்பியைத்தான் தந்தை பெரியார் குறிப்பிட்டார். ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு என்பார்களே, அந்த நிலைக்கு ஆளானவர்கள் சிறு பிள்ளைத் தனமாகத்தான் ஆமாம் சின்னத் தம்பியாகத்தான் எழுதுவார்கள்! தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் கொலைகாரனையும் வீரனாகக் காட்டுவார்கள்.

வாஞ்சி எதற்காக சுட்டான்?

வெள்ளைக்கார அதிகாரியான ஆஷ் துரையைச் சுட்டுவிட்டதால் வாஞ்சி தியாகி ஆகி விட்டானா? இது போன்ற வன்முறைகளை மற்ற மற்ற விஷயங்களில் இந்தப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா?

ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எதற்காகச் சுட்டான்? சுட்ட வாஞ்சி நாதனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் காட்டிக் கொடுத்துவிட்டதே!

ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும், தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்த வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உட னேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக் கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொரு வனும் செய்ய வேண்டிய கடமை.
இப்படிக்கு, ஆர்.வாஞ்சி அய்யர்.

சுதந்திர போராட்ட வீரனா வாஞ்சிநாதன்?

8.-3.-2009 அன்று கோவையில் நடைபெற்ற தமிழ் நாடு பார்ப்பன சங்கத்தின் (தாம்ப்ராஸ்*) மாநில செயற் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றினர்.

சுதந்திரப் போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதனுக்கு செங்கோட்டை நகரில் மணிமண்டபம் அமைத்திடவும், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் அவருக்கு நினைவுத் தூண் நிறுவிடவும் உடனடி நடவடிக்கை எடுத்திட தமிழக அரசினை இச் செயற்குழு கோருகிறது. என்பது தீர்மானம்.

உண்மையிலேயே இந்த வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா?

ஆஷ் துரையைச் சுட்டதற்கு வீர சுதந்திர உணர்ச்சி காரணமல்ல. வாஞ்சி என்னும் பார்ப்பனனின் மதவெறிக் காட்டுத் தீதான்!

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் நோக்கமும் இதுதானே!

இந்தக் கொலைகாரர்களுக்கு நினைவு மண்டபம் எழுப்பவேண்டுமாம்! தங்கள் தர்மத்துக்கு ஆபத்து வந்தால் பிராமணன் ஆயுதத்தை எடுத்துச் சண்டை செய்ய வேண்டும் என்பதுதான் மனுதர்மம் (அத்தியாயம் 8 சுலோகம் 348)

கோயிலில் கொள்ளையோ கொள்ளை!

கோவை பார்ப்பனர்களின் செயற் குழுவில் இன்னொரு தீர்மானம் (4).

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிதம்பரம் சிறி நடராஜர் ஆலய நிர்வாகத்தினை பராமரித்து காத்து வந்திருக்கும் தீட்சதர்களிடமிருந்து, அதனை எடுத்து அறநிலையத் துறையிடம் தமிழக அரசு ஒப்படைத்திருப்பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டனம் செய்கிறது. அதனை நிவர்த்திக்கும் பொருட்டு அக்கோயிலை தீட்சதர்கள் வசமே உடனடியாக திருப்பி வழங்கிட இச் செயற்குழு கோருகிறது. என்பது இன்னொரு தீர்மானம்.
இந்த நாட்டுக் கோவில்கள் எல்லாம் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை. தமிழன் கட்டிய கோயில்களில், தமிழ் மண்ணில் உள்ள கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாது - தமிழும் உள்ளே நுழைய முடியாது. கேட்டால், தமிழன் சூத்திரன், தமிழ் நீஷ மொழி - இவை உள்ளே நுழைந்தால் சாமி தீட்டுப் பட்டுவிடும், கடவுள் தோஷமாகிவிடுமாம்.

சட்டங்கள் போட்டாலும், உச்சநீதிமன்றம் வரை சென்று தடை வாங்கிவிடும் கூட்டம்தான் இந்தப் பார்ப்பனக் கூட்டம்.

மற்றபடி பேசுவதைப் பாருங்கள். இப்பொழுதெல்லாம் எங்கேயா ஜாதி? பார்ப்பான் எவ்வளவோ திருந்தி விட்டான் என்று பேசும் தமிழின விபீடணர்களும் இருக்கத்தான் செய் கின்றனர்.

கோவில்களில் அர்ச்சகப் பார்ப் பனர்கள் கொள்ளை அடித்ததை - அரசால் நியமிக்கப்பட்ட சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையிலான ஆணையமே வண்டி வண்டியாக அம்பலப்படுத்தியதே!

பக்த சிரோன்மணியான முதல் அமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரே சட்டமன்றத்தில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைப் போட்டு உடைக்கவில்லையா?

விசாகப்பட்டினம் தொடங்கி திருநெல்வேலி வரை உள்ள கோயில்களில் நடைபெற்ற 65மோசடிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று சொன்னாரே!

ஓமந்தூர் ராமசாமியார் என்ன பெரியார் ராமசாமியின் சீடரா?

ஏன் வெகுதூரம் போவானேன். திருப்பதி நாமதாரி கடவுளான ஏழுமலையான் கோவிலின் நகைகள் களவு போயின. மன்னர் கிருஷ்ண தேவராயர் அளித்த வைர நகைகள் எல்லாம் காணவே காணோமாம். இது பற்றி உயர்நீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய் சிரிக்க வில்லையா? காலக்கெடு அளித்து கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றதே உயர்நீதிமன்றம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்களுக்காகத் தீர்மானம் போடுகிறதே பார்ப்பன சங்கம். அந்தத் தீட்சதர்களின் வண்டவாளம் என்ன?

ஆண்டு ஒன்றுக்கு அக்கோவில் வருமானம் ரூபாய் 37,199 என்றும் செலவு ரூபாய் 37,000 என்றும் மீதித் தொகை ரூபாய் 199 என்றும் பேட்டா செருப்புக் கடை விலை நிர்ணயம் போல நீதிமன்றத்திலே தீட்சதர்கள் சொல்ல வில்லையா?

அந்தக் கோவில் நிர்வாகம் அரசு வசம் வந்ததும் அதன் வருமானம் என்ன? முதல் 15 மாத வருமானம், :ரு 25,12,485 என்று இந்து அறநிலையத் துறை அறிவித்து விட்டதே!

எத்தனை நூறு ஆண்டு காலம் இந்த தீட்சதப் பார்ப்பனர்களின் கொள்ளையோ கொள்ளை நடந்திருக்கிறது.

அந்தக் கொள்ளையைத் தொடர வேண்டும் என்கிற பார்ப்பன இனநல வெறியின் அடையாளம்தானே பார்ப் பனர்களின் கோவைத் தீர்மானம்.

ஒழுக்கத்துக்கும், பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? அது தெரிந்த கதைதானே!

கடவுளுக்கும் பூணூல்

பார்ப்பன ஜாதி வெறி அவர்களோடு விட்டதா? கடவுள்களுக்கே பூணூல் போடுகிறார்களே. திருப்பதி வெங்கடா ஜலபதிக்கு மூன்றரை கிலோ எடையில் தங்கத்திலான பூணூலை அணிவித்தாரே காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரசுவதி.

50 லட்சம் மதிப்புள்ள வைரத்தாலான பூணூலை நாமக்காரரான சிறீரங்கம் ரங்கநாதனுக்கு அணிவித்தாரே நாராயண ஜீயர்!

கர்ப்பகிரகத்தில் இருப்பது சாமி, புரோகிதப் பார்ப்பானும் சாமி என்று அழைக்கப்படுவதன் சூட்சமம் புரிகிறதோ!

பார்ப்பனத் தலைவர்களின் யோக்கியதை

பார்ப்பனர்களில் பெரிய தலைவர் கள் என்று விளம்பரப்படுத்தப் பட்டவர்களின் நிலைப்பாடுகள்தான் என்ன? எந்த அளவிற்குப் பார்ப்பனப் பித்துப் பிடித்தவர்களாக இருந்தார்கள்! அரசியலில் நீட்டி முழக்கினாலும் அவர்களின் ரத்தத்தில் ஊறிய சனாதன - வருணாசிரம உணர்வு எத்தகையது ? இதோ ஒரு பட்டியல்!

திருமலை ஸ்ரீ வேங்கடவனுக்காக தனது சீடர் அளித்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள வைரம் பதித்த தங்கப்பூணூலை, திருமலை - திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஏ.பி.வி.என். சர்மா, இணை நிர்வாக அதிகாரி பலராமய்யா ஆகியோரிடம் திருமலையில் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கிறார் ஸ்ரீரங்கம் ரங்க நாராயண ஜீயர்.

(தினமணி 7.3.2007)

1931_இல் கேரளம் - குருவாயூர் கோவில் நுழைவு சத்தியாக்கிரகம் நடந்தது. எம்.கே.ஆச்சாரியார் கோவில் பிரவேசம் செய்ய விரும்புகிறவர்கள் மத பக்தியினால் சாமி தரிசனத்துக்காக கோவிலுக்குள் செல்ல வேண்டுமென்று விரும்பவில்லை. அரசியல் காரியங்களை முன்னிட்டு சமஉரிமை வேண்டும் என்பதற்காகவே கோவில் பிரவேசம் செய்ய விரும்புகின்றனர். ஆகையால் அதைத் தடுக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.

(குடிஅரசு 29.-11.-1931).

15.-4.-1931 இந்து இதழில் எஸ்.சத்திய மூர்த்தி அய்யர் கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் முதல் தீர்மானம் 7 வது பிரிவைப் பற்றி என்ன எழுதினார்?

பொதுக்கிணறு, பொது வீதி, பொது இடம் ஆகியவைகளை உபயோகித்துக் கொள்ள எல்லோருக்கும் உரிமையுண்டு என்பதைப் பற்றி பொது இடமும் என்பதில் வகுப்புப் பாத்தியமுள்ள பொது இடமும், தனிப்பட்டவர்களால் விடப்பட்ட பொது இடமும், கோவில் சம்பந்தப்பட்ட பொது இடமும் இதில் சம்பந்தப்பட்டதல்ல என்று எழுதினாரே சத்தியமூர்த்தி அய்யர்.

23-.11.-1931 இல் தஞ்சை ஜில்லா பிராமண சபை 2 ஆவது ஆண்டு விழா கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பேசிய பார்ப்பனர் ஆங்கிலப் படிப்பி னால் பிராமணியம் கெட்டுவிட்டது என்றும், இன்னொருவர் பிராமணியம் ஒரு நாளும் அழியாது, அது எந்தக் காலத்திலும் நிலை பெற்றிருக்கும் தன்மை உடையது என்றும் பேசினார்.

மற்றொருவர் சாரதா சட்டத்தை எதிர்த்து, அதற்குக் கீழ்ப் படியாமல் இருக்க வேண்டும். இந்தியாவில் எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய அரசாங்கம் நமக்கு அனேக தீங்குகளைச் செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால் நாம் ஜாக்கிரதையாக இருந்து காரியங்களைச் செய்யப் போவதும் நிச்சயம். ஆகையால் நாம் முன் ஜாக்கிரதையாக இருந்து காரியங்களைச் செய்ய வேண்டும் என்றும் பேசினார். (தமிழ்நாடு 26-.11.-1931)


எவ்வளவு தொலைநோக்கு பார்த் தீர்களா?

29-.12.-1931 இல் கல்கத்தாவில் அகில இந்திய வர்ணாசிரம சுயராஜ்ய சங்க மாநாட்டில்.

(1) தீண்டாதார்கள் இந்து மதத்தில் சேர்ந்தவர்கள்தான்.

(2) சில சீர்திருத்தக்காரர்களால், அவர்கள் அனாவசியமாய்க் கிளப்பி விட்டது காரணமாக, அவர்கள் வர்ணாசிரம தர்மிகளுக்கு விரோதிகளாகி விட்டனர். (6) தீண்டாத வகுப்புப் பிள்ளைகளுடன் வருணாசிரம தர்மிகளின் பிள்ளைகளும் சேர்ந்து பள்ளிக் கூடங்களில் படிக்கும் படி வற்புறுத்தும் பிரிட்டீஷ் அரசாங் கத்தின் போக்கையும், இந்திய சமஸ்தானங்களின் போக்கையும் கண்டு இம்மாநாடு கண்டிக்கிறது. என்பது தீர்மானம். வெள்ளைக்காரர்களை எதிர்த்தோம், எதிர்த்தோம் என்கிறார்களே. இதன் சூட்சுமம் இப்போது புரிந்திருக்க வேண்டுமே!

1932 டிசம்பரில் சென்னை மயிலாப் பூரில் பார்ப்பன சபையில் சர். சி.பி. ராம சாமி அய்யர் தலைமையில் வி.வி.சீனி வாசய்யங்கார் பேசுகையில் பிராமண னுக்கும் மற்ற சமூகத்தினருக்கும் முக வசீகரத்தில் வித்தியாசம் இருக்கிறது என்று கூறினார்.

சமூகத்திலிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி பிரித்துக் காட்டும் பிரி வினைவாதிகள் - இந்தப் பிர்மா முகத்தில் பிறந்தவர்கள் என்பதற்கு இந்த எடுத் துக்காட்டு மிகப் பொருத்தமானதே!

இதன் மூலம் பார்ப்பனர்கள் வேறு, தமிழர்கள் வேறு என்று சொல்லவில் லையா? அதை நாம் சொல்லும்போது மட்டும் முகம் சுளிப்பது ஏன்?

ஜஸ்டிஸ் கட்சியினரைக் காட்டிலும், ஆங்கிலேயர்கள் ஆயிரம் மடங்கு நல்லவர்கள். வகுப்பு வாரி பிரதிநிதித்துவப்படி உத்தியோகம் பெற அது பாடுபட்டு வந்திருக்கிறது. ஆனால் காங்கிரசின் நோக்கம் இதை ஒழிக்க வேண்டுமென்பதே என சென்னையில் டி.பிரகாசம் பேசினார்.

(குடிஅரசு _ 31.-3.-1935) ஜஸ்டிஸ் கட்சியின்மீது இந்த பார்ப்பனக் கூட்டம் ஏன் நாலு கால் பாய்ச்சல் பாய்கிறது புரிகிறதா?

லோக மான்ய திலகர் என்று பட்டுப் பீதாம்பரம் அணிந்த சொற்களால் ஏற்றிப் போற்றுகிறார்களே - அவர் எப்படிப்பட்டவர்? மதத்தை அரசியலில் நுழைத்தவர். பிளேக் நோய் வந்தபோது, அதற்குக் காரணமான எலிகளை வெள்ளைக்காரர்கள் வேட்டையாடியபோது நமது விநாயகப் பெருமானின் வாகனம் எலி; இந்த வெள்ளைக்கார மிலேச்சர்கள் நமது மதத்தில் தலையிடுகிறார்கள் என்று வெறி உணர்ச்சியை ஊட்டியதன் காரணமாக உணர்ச்சி வயப்பட்ட பக்தர்கள் இரு வெள்ளைக்கார அதிகாரிகளைக் கொன்று விட்டனர். இதன் பின்னணியிலிருந்து தூண்டியவர் என்பதால் இந்தப் பாலகங்காதர திலகருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதே - மறுக்க முடியுமா?

இந்தத் திலகர் சொல்கிறார்

சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்தவுணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?

இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்ல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் (The Gobblers, The oil Mongers and Petty-Traders) சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா? என்று பேசினாரே (டாக்டர் அம்பேத்கர் அவர்களின் காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன? என்ற நூல்).

காந்தியாருக்கு அவமானம்!

இந்தத் திலகர் இறந்தபோது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காந்தி யார் சென்றார். திலகரின் பாடையைத் தூக்குவதற்காக காந்தியார் சென்ற போது, அங்கிருந்த பார்ப்பனர்கள் நீ வைசியன், இந்தப் பாடையைத் தூக்கக் கூடாது என்று கூறி காந்தியாரைப் பிடித்துத் தள்ளி னார்கள் என்றால் அதன் தன்மை என்ன?

மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் நிலை என்ன?

காந்தியாரையே தீண்டிய அவரின் உயிரையே குடித்த இந்தப் பார்ப்பனப் பாம்புகள் எந்தத் தைரியத்தில் பார்ப்பனர்களுக்காக வக்காலத்து வாங்குகின்றன? இது பெரியார் சகாப்தம் - அவர்களின் பருப்பு ஈரோட்டு நெருப்பில் வேகாது என்பதுதான் நமது பதிலாக இருக்கு முடியும். ஆந்திரப்பிரதேசத் தலைநகர் அய்தராபாத்துக்குப் பக்கத்தில் அக்கிர(ம)காரம் ஒன்று உருவாகிறது. அய்தராபாத்துக்கு 90 கி.மீ. தூரத்தில் நாக்பூர் சாலையில் 1200 ஏக்கர் பரப்பளவில் பார்ப்பனச் சேரியாம். 1000 பார்ப்பனக் குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 சதுர அடி மனையாம். 4 லட்ச ரூபாய் விலையாம்.

அங்கு மனை வாங்கச் சில பாரதிய ஜனதாக் கட்சிக்காரர்கள் முயன்றனராம். பார்ப்பனர் அல்லாதார் என்பதால் விற்க முடியாது என்று கூறி விட்டார்களாம். அவ்வளவு ஜாதி வெறி! டாக்டர் பி. கமலாகரசர்மா என்பவர் இதன் உரிமையாளராம். வெளிநாடு வாழ் இந்தியராம்! இது செய்தி.

எவ்வளவு பச்சைப் பார்ப்பன ஜாதி வெறி. பார்ப்பனர்கள் திருந்தி விட் டார்கள் என்கிறார்களே! உண்மையா?

பாம்பு சீற மறந்தாலும் இந்தப் பண்டாக்கள் தம் பண்பை மறவார் - என அண்ணா சொன்னது சரிதானே!

(விடுதலை 5-.01.-2008)

ஊழலைப் பற்றிப் பார்ப்பனர்களா பேசுவது?

ஊழலைப்பற்றி பார்ப்பனர்கள் எழுதுவது பேசுவதுதான் வேடிக்கை. இவர்களின் அடிப்படையே ஊழ லானது அருவருப்பானது.

பிர்மாவின் நெற்றியிலிருந்து ஒருவன் பிறந்தான் என்பதைவிட பித்தலாட்டம் வேறு என்ன?

கடவுளுக்கு இதைக் கொடு _ கடவுளிடமிருந்து நீ கேட்பதைப் பெற்றுத் தருவேன் என்பதைவிட பெரிய ஊழல் எது?

நடைமுறை உலகுக்கேகூட வருவோம். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. இராமச்சந்திர அய்யர் என்ற பார்ப்பனர் தன் பதிவேட்டில் வயதைத் திருத்திப் பதவிக் காலத்தை நீட்டிக் கொண்டாரே (1964) எந்தப் பார்ப்பனப் பத்திரிகை கண்டித்து எழுதியது?

தலைமை நீதிபதி என்கிற பெரிய பதவிக்கு சென்றாலும் பார்ப்பானின் அற்பத்தனம் மோசடித்தனம் மட்டும் மாறுவதில்லையே!

பெரிய பெரிய மனிதர்கள் என்று பார்ப்பனர்கள் மலை மேலே ஏற்றி வைத்துச் சூடம் சாம்பிராணி காட்டு வார்களே -_ அவர்களின் யோக்கியதை என்ன? இதோ ஒரு கொசுறு.

திலகர் சுயராஜ்ய நிதி மோசடி!

திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெய ரில் காங்கிரஸ் ஒரு கோடி ரூபாயைத் திரட்டியது. அந்த நிதியில் பெரும் மோசடி, ஊழல் நடைபெற்றது. பெருங் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம், ஊழலில் சம்பந்தப்பட்டனர். இதுபற்றி திலகரால் ஏற்படுத்தப்பட்ட மராட்டா பத்திரிகையே காரசாரமாக எழுதியது.

1. தோழர் சி. ராஜகோபாலாச்சாரி யாரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் பணம் ரூ.19 ஆயிரத்துக்கு இதுவரை கணக்கு இல்லை.

2. டி. பிரகாசம்பந்தலுவுக்கு ரூ.10 ஆயிரம் கடனாகக் கொடுக்கப்பட்டு, அந்தக் கடன்தொகை பின்னர் ரத்து செய்யப்பட்டது.

3. ரூ.44,500-க்குக் கொடுக்கப்பட்ட செக்குகள் மாற்றப்படவில்லை.

4. ரூ.20 ஆயிரம் டெபாசிட்டில் வைக்கப்பட்டதைப்பற்றி பாங்கு சம்பந்தப்பட்ட கேஷ் புத்தகத்திலும் டே புக்கிலும் பதிவு செய்யப் படவில்லை.

5. அதேபோல ரூ.20,225 டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கும் பதிவு இல்லை.

6. அங்கத்தினர்களின் ஜாபிதாபடி, அவர்களிடம் வசூல் செய்த பணத் திற்கும், கணக்குப் புத்தகங்களில் வரவு வைக்கப்பட்ட பணத்திற்கும் காரணம் காட்ட முடியாத வித்தியாசம் இருக்கின்றது.

இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால் இதைப்பற்றி தினமணி ஏடு எழுதிய சமதானம் வேடிக்கையானது.

ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செலவிட்டதில் ஏதோ சில தொகை களைத் திரும்பிக் கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள் கஷ்டப் படலாம். ஆனால் மோசம் செய்ய வேண்டுமென்று எடுத்துக் கொள்ள வில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாய்விட்டால், அதனால் மூழ்கிப் போவது எதுவுமில்லை. ஏனெனில், தியாகிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரசைச் சார்ந்தது என்று தினமணி மோசடிக்கும் ஊழலுக்கும் வக்காலத்து வாங்கியது.

----------(குடிஅரசு 24.11.1935 பக்கம் 9 திருடியது காங்கிரஸ்காரர்கள்தான் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையிலிருந்து)

போதுமா? இன்னும் தேவையா?

1500 கிலோ தங்கமே தங்கம்

கேதான் தேசாய் என்ற குஜராத் பார்ப்பனர். மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கொள்ளையடித்தது கொஞ்சம் தான் ரூ.2500 கோடி! வீட்டில் பதுக்கி வைத்திருந்த தங்கக் கட்டிகள்கூட கொஞ்சம்தான் ஆமாம். 1500 கிலோ தான்! பஞ்சாப் மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக ரூ. இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

1992 இல் இதே பதவியில் இருந்து லஞ்சம் ஊழலுக்காகப் பதவி நீக்கப் பட்ட இதே ஆசாமி மறுபடியும் அதே பதவியில் அமர்த்தப்படுகிறார். அதே லஞ்ச வேட்டை ஆட அனுமதிக்கப் படுகிறார் என்றால் பார்ப்பனர்களுக் குத்தான் இத்தகைய லாட்டரி அடிக் குமே தவிர மற்றவர்கள் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே!

பார்ப்பனீய எதிர்ப்பு இன்று - நேற்றா?

பார்ப்பனர்களை அவர்களின் ஆதிக்கத்தையும் ஆணவத் திமிரையும் எதிர்த்துத் திராவிடர் கழகம் போர்க்குரல் கொடுப்பது உண்மைதான் என்றாலும் _ பார்ப்பன எதிர்ப்பு என்பது நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கப்பட்டதுதான். கபிலர் போன்றவர்களும், சித்தர்களும் சினம் கொண்டனர் என்பதற்கு எத்தனை எத்தனையோ ஆதாரங்கள் உண்டு.

பார்ப்பனர்களின் பாதுகாவலர் களுள் ஒருவராகக் கருதப்பட்ட சர். சி.பி. ராமசாமி அய்யர் சென்னை மயிலாப் பூரில் பேசும்போது (26.12.1957) இந்த உண்மையை ஒப்புக் கொண்டார்.

பார்ப்பனர் - _பார்ப்பனர் அல்லா தார் போராட்டம் இன்று நேற்று தோன்றியதல்ல உபநிடத காலம் முதல் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டுள் ளாரே! (விடுதலை 27.12.1957).

என்ன வித்தியாசம் பார்ப்பன எதிர்ப்பு என்பது வெறும் பேச்சோடு, வார்த்தைகளோடு அன்று இருந்தது. தந்தை பெரியார் காலத்தில் ஓர் இயக்கமாக _ மக்கள் எழுச்சியாக மாற்றப்பட்டதுதான் _ இந்தக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதாரின் வெற்றிக்கு முலாதாரமாகும்.

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகும் தக்க ஏற்பாடுகள் இருந்து வருவதால் பார்ப்பனர்கள் இப்பொழுது இப்படி யெல்லாம் எழுதும் நிலைக்கு, புலம்பும் தன்மைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பார்ப்பனர்கள் பழனியில் மாநாடு கூட்டி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களை பாடை கட்டித் தூக்கிச் சென்று வீரமணி ஒழிக! என்று ஆத்திரக் குரல் கொடுக்கும் அளவுக்குப் பெரியாருக்குப் பிறகு திராவிடர் கழகம் வெற்றி பெற்று விட்டதே!

பார்ப்பனர்கள் மகாமகா யோக் கியர்கள்; காலத்துக்கு ஏற்ப மாற்றங் களை ஆலிங்கனம் செய்து கொள் பவர்கள் என்று ஒரு கருத்து ஊதிப் பெரிதாகக் காட்டப்படுகிறது.

அப்படியா? எந்தப் பார்ப்பான் சோ உட்பட ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளாது இருக்கிறான்?

பூணூல் -_ தான் இரு பிறவியாளன் (துவி ஜாதி) பிர்மாவின் முகத்தில் பிறந்த உயர் ஜாதிக்காரன் _ மற்றவர்கள் சூத்திரர்கள் _ அடிமைகள் _ வேசி மக்கள் என்று கூறாமல் கூறுவது தானே பூணூல்?

ஒரு பார்ப்பனர் பார்வையில்

மாலி என்ற பார்ப்பனர் ஒருவர் ஞான பீடம் என்று ஒரு நாடகத்தை நடத்தினார். அந்த நாடகத்தின் மய்யப் பொருள் கல்வி ஞானம் இருந்தால் தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரும் மடாதிபதி ஆகலாம் என்பதுதான்.

இது காஞ்சி சங்கராச்சாரியார் காதில் விழுந்தது. நேரில் அழைத்து மிரட்டினாரே!

ஏன், பார்ப்பனர்கள்தான் சொல்லட்டுமே!

இவ்வளவு அழுக்கை தன் முதுகில் வைத்துக் கொண்டு _மானுட சமூகத்தில் பிறப்பு உட்பட எந்தவகையிலும் பேதம் இருக்கக் கூடாது _ அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைத் தோளில் சுமந்து, மனிதனாகப் பிறந்தது பிறர்க்குத் தொண்டு செய்வதே என்ற பாட்டையில் பயணித்த தந்தை பெரியாரையும் அவரால் உண்டாக் கப்பட்ட இயக்கத்தையும் கொச்சைப் படுத்துவதன் மூலம் துக்ளக்கும் அதனைச் சார்ந்த பார்ப்பனர்களும் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு விட்டனர்.

மனுதர்மத்தைக்கூட தலையில் சுமந்து ஆடும் அளவுக்கு இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றால், இவர் களாவது திருந்துவதாவது என்ற முடிவுக்குத் தானே வர வேண்டும்!

துக்ளக் கட்டுரைத் தொடர்களுக்கு நாம் எடுத்து வைத்த மறுப்பு ஒவ் வொன்றுக்கும் ஆதாரக் குறிப்புத் தரப்பட்டுள்ளது.

ஆனால் திருவாளர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்களால் எழுதப்பட்ட கட்டுரைக்கு ஆதாரங்கள் உண்டா? சோ எழுதுவதும் இப்படித் தானே! திருப்பதியில் மொட்டைத் தலையனைக் கண்டதுண்டா என்ற போக்கில்தானே எழுதுகிறார்கள். எடை போடுங்கள் வாசகர்களே!

(நிறைவு)-
--------------------------கலி.பூங்குன்றன் அவர்கள் 21-1-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

தமிழ் ஓவியா said...

செய்திச் சிதறல்கள்!

ஒய்திஸ் கொலவெறிடி? 1-7 கோடி பேர் இணையத்தில் பார்த்தனர்.

ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் ஒன்றும் புரியாத வர்களாக இருக்கிறார்கள் என்று பொருளோ! மொழி யையும் குலைத்து பெண்களையும் இழிவுபடுத்தி, பொருளையும் குழப்பி - ஒட்டு மொத்தத்தில் விளம்பரப் பலூனை வீதியில் பறக்கச்செய்து விட்டனர் அவ்வளவு தான்!

குஜராத் லோக் அயுக்தா தொடர்பான வழக்கில் ஆளுநர் நடவடிக்கை சரி என்கிறது குஜராத் உயர்நீதிமன்றம்

ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? முதல் அமைச் சரைக் கலக்காமல் இந்த முடிவை எடுக்கலாமா? என்றெல்லாம் கேள்வி எழுப்புவது ஒருபுறம் இருக் கட்டும். கடந்த ஒன்பது ஆண்டு காலமாக லோக் - அயுக்தாவுக்கு நீதிபதியை நியமிக்க எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லையே முதல் அமைச்சர் மோடி. இதை பற்றி ஏன் கேள்வி எழுப்பவில்லையாம்!

இவர்தான் ஊழலற்ற பரிசுத்த யோவான் ஆயிற்றே - ஏன் நீதிபதியை நியமிக்கவில்லை. மடியில் கனம் - அதனால் பயமோ!

லோக்பால் சட்டம் - ஊழல் ஒழிப்பு என்றெல்லாம் நாடாளுமன்றத்தில் தொண்டைத் தண்ணீர் வற்ற குரல் கொடுக்கும் - ரகளை செய்யும் பிஜேபி - தமது ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் லோக் - அயுக்தாவுக்கு கடந்த ஒன்பது ஆண்டு காலமாக நீதிபதியை நியமிக்காததுபற்றி மவுனம் சாதிப்பது ஏன்? ஓ, பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கும்பல் என்றாலே இரட்டை வேடம்தானோ!

வரதட்சணை வழக்கில் தண்டனையைக் குறைக்கலாம்.

மத்திய சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்தியத் தண்டனைச் சட்டம் 498ஏ பிரிவின்கீழ் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, மற்றும் அபராதமும் விதிக்கப்படுகிறது. வரதட்சணை வழக்கில் பிணையிலும் வெளி வர முடியாது.

கணவர்மீது வீண் பழி சுமத்தித் தண்டனை பெற் றுத் தரப்படுகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில்கூட இப்படி ஒரு கருத்துப் பேசப்பட்டு வருகிறது. ஏதோ ஓரிரண்டு இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகத் தண்டனையைக் குறைப்பது பற்றிச் சிந்திக்கக் கூடாது.

ஆண் ஆதிக்கம் உடைய ஒரு சமுதாயம், தண் டனையைக் குறைத்தால் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே வாய்ப்பு அதிகம். இதுகுறித்து ஒரு முடிவை எடுக்குமுன் பொதுக் கருத்தைத் திரட்ட வேண்டும். குறிப்பாகப் பெண்களின் கருத்து என்ன என்பதுதான் முக்கியம்.

பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்கள் சட்டமன் றங்களிலும் நாடாளுமன்றத்திலும் அளிக்கப்பட்டு இருந்தால், இதுபோன்ற பிரச்சினைகளில் வலிமை யான கருத்து வெளிப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்குமே!

திருவண்ணாமலை அருகே மேல் செட்டிப்பட்டு கிராமத்தில் சுடுகாட்டுப் பாதை கோரி மக்கள் சாலை மறியல் !

பாரதம் சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஒடிய நிலையில் சுடுகாட்டுக்குப் பாதை கேட்டுப் போராடும் அவல நிலைதான் இன்றும்.

உயிரோடு இருக்கும் பொழுதுதான் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர் என்றால், பிணமான பிறகும்கூட நிம்மதி இல்லை என்பதுதான் யதார்த்தம்!

அதிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை. மேல் செட்டிப்பட்டு கிராமத்தில்கூட தாழ்த்தப்பட்ட 100 குடும்பங்களுக்குத்தான் இந்தப் பிரச்சினை.
பட்டா நிலம் வழியாக செல்லுவதில் சிக்கல்.

செத்தபிறகு ஜாதி என்ன? மதம் என்ன? அனைவருக்கும் பொது மின் சுடுகாடு (கிராமங்கள் உள்பட) ஏற்பாடு செய்யாவிட்டால் என்ன சுதந்திரம்? சுபிட்சம்? பெரும்பாலும் சுடுகாடுகளில் கால் வைக்க முடிவதில்லை. அவ்வளவு அசுத்தம் - மேலும் சமூக விரோதிகளின் உல்லாச பூங்கா! வெளிநாடுகளில் சுடுகாடு எப்படி தூய்மையாக இருக்கிறது! வெளி நாடுகள் சென்று வரும் நமது அமைச்சர்கள் இதைப் பற்றிச் சிந்திக்கக் கூடாதா?
-----------"விடுதலை” 22-1-2012