இலவசக் கட்டாயக் கல்வி
விதைத்தது
நீதிக்கட்சி!
ஆரியப் பார்ப்பனர் வந்தேறிகள். நல்ல நிறமுடையவர்கள். இவர்கள் நிறத்தில் மயங்கிய இந்நாட்டு மன்னர்கள் அவர்கள் கருத்துகளை ஏற்றனர். வர்ணாசிரம தர்மம் உருவாயிற்று. பிறப்பினால் ஒருவன் உயர்ந்தவன் பிறப்பினால் ஒருவன் தாழ்ந்தவன் என ஆயிற்று. பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் என நான்கு சாதிப் பிரிவுகள் அவர்களால் உருவாக்கப்பட்டன. அய்ந்தாம் சாதியாக பஞ்சம சாதியும் தோன்றியது. நான்காம் சாதி சூத்திர ஜாதி அடிமைச் சாதி. இச்சாதியினர் பார்ப்பனர்க்கு வைப்பாட்டி மக்கள் என்றனர். எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வி கொடுக்கக்கூடாது என்றனர். ஆரியப் பார்ப்பனக் குடும்பங்களின் கவர்ச்சியில் திளைத்த மன்னர்கள் - சூத்திர மன்னர்கள் - இவற்றை நடைமுறைக்குக் கொணர்ந்தனர். இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனரல்லாத் திராவிடச் சமுதாயம் கல்வி மறுக்கப்பட்டு நசுக்குண்டு கிடந்தது.
நீதிக்கட்சி தோன்றியது
இவ்வாறு நசுக்குண்ட திராவிட மக்களின் உரிமைகட்கும் நல்வாழ்வுக்கும் போராடத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் கட்சி 1916 இல் தோன்றிற்று. இதைத் தோற்றுவித்தவர்கள் சின்னக் காவனம் நடேச முதலியார், பிட்டி தியாகராயச் செட்டியார், தாரவாத் மாதவன் நாயர் ஆகியவர்கள். இக்கட்சிக்கு ஜஸ்டிஸ் என்ற ஆங்கிலப் பத்திரிகையும், ஆந்திரப் பிரகாசிகா என்னும் தெலுங்குப் பத்திரிகையும், திராவிடன் என்ற தமிழ்ப் பத்திரிகையும் தோன்றின.
காலப் போக்கில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையின் பெயரால் ஜஸ்டிஸ் கட்சி என்றும் அதன் தமிழ் வடிவமாக நீதிக் கட்சி என்றும் அழைக்கப்பட்டது.
மாநாடுகள்
மக்களை ஒன்று திரட்டி அவர்களிடையே மான உணர்வை ஊட்ட நீதிக்கட்சி பல மாநாடுகளை நடத்திற்று. திராவிட மக்கள் கடைத்தேறப் பல தீர்மானங்களை நிறைவேற்றிற்று. இம்மாநாடுகளில் திராவிட மக்கள் கல்வி பெறவேண்டும் என்ற தீர்மானம் தவறாமல் நிறைவேற்றப்பட்டது.
ஆட்சி அமைத்தது
1916 இல் தோன்றிய நீதிக்கட்சி 1921 இல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அப்பொழுது தான் கூறியவற்றுக்கெல்லாம் அவ்வரசு செயல்வடிவம் தர முன்வந்து வெற்றி பெற்றது.
கல்வி குறித்த நீதிக்கட்சியின் தீர்மானங்கள்
1917 ஆம் ஆண்டு டிசம்பர் 8,9 நாள்களில் புதுக்கோட்டை மன்னர் கே.எஸ். துரைராஜா அவர்கள் தலைமையில் சேலத்தில் நடந்த பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை வைசிராய்க்கும் (அரசப் பிரதிநிதி) இந்திய மந்திரிக்கும் அனுப்பப்படக் கோரி சென்னை அரசுக்கு அனுப்பப்பட்டது.
இம்மாநாட்டில் கல்வி குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
3 (அ) தொடக்கக் கல்விதான் நாட்டிற்கு முதல் தேவை என்றும், பிள்ளைகட்குத் தொடக்-கக் கல்வி அளிப்பதற்கான முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றும் மக்களுக்குத் தொடக்கக் கல்வி கொடுப்பதற்குத் தரப்படும் திட்டங்களுக்கு முக்கிய இடம் தரவேண்டும் என்றும், தொடக்கக் கல்வியை எங்கெங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் கட்டாயக் கல்வி ஆக்க வேண்டும் என்றும், நகராட்சிப் பகுதியில் தொடக்கக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டுமென்றும் இதற்கான செலவுகளில் 2/3 பங்கை அரசு ஏற்கவேண்டும் என்றும் எஞ்சிய 1/3 பகுதியை நகராட்சி ஏற்கவேண்டுமென்றும், அவ்வாறு ஏற்க முடியாத நகராட்சி இச்செலவுக்காகத் தனி வரி வசூலித்துக் கொள்ளலாம் என்றும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.
(ஆ) உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்குப் போதிய வசதிகள் இல்லை. ஏராளமான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுவதிலிருந்து இதனை நாம் அறிகிறோம். எனவே, தகுதி பெற்றுள்ள மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேரத் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுகிறது.
(இ) பார்ப்பனரல்லாத மாணவர் கல்வி பெறப் போதிய ஊக்கம் அரசால் அளிக்கப்படவில்லை என இம்மாநாடு கருதுகிறது. எனவே, பொருளாதார வசதியற்ற ஏழை மாணவர்கட்கு உதவி நிதிகள் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.
(ஈ) ஒவ்வொரு ஜில்லாவிலும் பார்ப்பனரல்லாதார் கல்விக் கூடங்கள் அமைக்க வேண்டியது கட்டாயம் என்றும், இதை மாவட்டத்திலுள்ள எல்லாப் பார்ப்பனரல்லாப் பெருமக்களுக்கும் அறிவிக்கிறது.
(உ) படித்து முடிக்கும் வரை எல்லாப் பஞ்சமர் மாணவர்கட்கும் இலவசக் கல்வியை வழங்கவேண்டும் என இம்மாநாடு கருதுகிறது.
(ஊ) நன்கு மேற்பார்வையிடப்படும் பார்ப்பனர் அல்லாதார் மாணவர்க்கான விடுதிகள் கல்வி வழங்கப் படும் எல்லா இடங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது இன்றைய முதன்மையான தேவை என்றும் இவ்வாறு விடுதிகளை அமைக்க வேண்டுமென்றும் பொருளாதார வசதி இல்லாத பார்ப்பனரல்லா மாணவர்க்கு உதவி நிதி அளிக்க வேண்டும் என்றும் இதற்கான முயற்சிகளில் அந்தந்த மாவட்டத்திலுள்ள பார்ப்பனரல்லாப் பிரமுகர்கள் ஈடுபடவேண்டும் என்றும் இம்மாநாடு கருதுகிறது.
இத்தீர்மானம் சுந்தரக் கவுண்டர் அவர்களால் முன் மொழியப்பட்டு சக்ரபாணி நாயுடு அவர்களால் வழிமொழியப்பட்டு பீர்சடா சையது ஷா முகமது பீஷ் சாஹிப் சத்தார் அவர்களால் ஆதரிக்கப்பட்டு நிறைவேறியது.
இவ்விவரங்களை எண் 223 (பொது) 8.3.1918 நாளிட்ட அரசு ஆணையிற் காண்கிறோம். (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 21, 22, 23).
1918 மார்ச் மாதம் நடைபெற்ற தஞ்சை, திருச்சி, பார்ப்பனரல்லாதார் முதல் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 5 - கல்வி
1. இம்மாநாடு தொடக்கக் கல்விக்கு செலவழிப்பதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமான பணத்தை உயர்நிலைக் கல்வி, கல்லூரிக் கல்வி இவற்றிற்காகச் செலவிடும் அரசின் கொள்கை மீது தன் அதிருப்தியைத் தெரிவித்துக் கொண்டு தொடக்கக் கல்வியைப் பரப்புவதுதான் முதலும் முக்கியமானதுமான பணி என அரசு அடிக்கடி உறுதியளித்திருப்பதை நிறைவேற்ற வேண்டுமென்று வற்புறுத்திக் கொண்டு இந்நாட்டில் கல்லாமையையே விரைவில் ஒழிப்பதற்காக இலவச, கட்டாயத் தொடக்கக் கல்வியைப் பரப்பத் தக்க நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டுமென்று எடுத்துக் கூறுகிறது. மேலும் போதுமான தொழிற் கல்வி நிலையங்களையும், தொடக்க, விவசாயப் பள்ளிகளைப் போல் நிறுவி அதன் மூலம் இந்தியத் தொழிலதிபர்கட்கும் விவசாயிகளுக்கும் திறன் வாய்ந்த, ஆய்வுப் பணியாளர் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றது.
2. பார்ப்பனரல்லாத மாணவர் கல்வி நலனுக்காகப் போதிய ஊக்கம் அளிக்கப்படவில்லை என்ற உண்மை காரணமாகவும் பெரும்பான்மையான வரி பார்ப்பனரல்லாதாரால் வழங்கப்பட்டு வருவதாலும், ஆதிதிராவிடர் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லதாராகிய மாணவர்கட்கும், மாணவிகட்கும் ஸ்காலர்ஷிப் வழங்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு கருதுகின்றது.
3. எந்தக் கல்வி நிலையமாவது எந்தத் தனிப்பட்ட சாதி மாணர்கட்கும் இடம் தர மறுத்தால் ரெவின்யூ துறையிலிருந்தோ, பிற பொது நிதியில் இருந்தோ அக்கல்வி நிலையம் எந்த உதவியும் பெற உரிமையுடையதாகக் கூடாது என்று இம்மாநாடு கருதுகின்றது.
4. தஞ்சையில் பெண்களுக்கென ஓர் உயர்நிலைப் பள்ளி திறப்பது மிகத் தேவையான ஒன்று என்பதையும் ஒரு தொழிற்கல்வி நிலையத்தை ஒரு முக்கியமான இடத்தில் நிறுவ வேண்டும் என்பதையும் இம்மாநாடு அரசுக்கு வற்புறுத்துகின்றது.
முன்மொழிந்தவர்:
அய்.குமாரசாமி பிள்ளை, பி.ஏ.,
வக்கீல், நகர் மன்ற உறுப்பினர்,
தாலுகா போர்டு உறுப்பினர்
தஞ்சை தென்னிந்திய நல உரிமைச் சங்கச் செயலாளர்
சிறீமதி அலர்மேல் மங்கைத் தாயாரம்மாள்
ஆதரித்தவர்:
ராஜகோபால் நாயுடு, திருச்சிராப் பள்ளி
தீர்மானம் நிறைவேறியது.
இச்செய்திகளை அரசு ஆணை எண். 82 (உள்துறை) கல்வி 21.1.1919 இல் காண்கிறோம். (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 71, 72, 73). சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாவும்
பெறப்பட்ட விடையும்
19.11.1919 இல் சென்னை சட்டமன்றத்தில் எம்.சி. ராஜா கேட்ட கேள்விகள் பற்றிய குறிப்புகள்.
வினா:
பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகட்கு இலவசக் கல்வி:
நகராட்சி, உள்ளாட்சி மன்றப் பள்ளிகள் உள்ளிட்ட எல்லா அரசுப் பள்ளிகளிலும், உதவி பெறும் பள்ளி-களிலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கட்டணம் வசூலிக்காமலிருக்கக் கூடிய வசதி குறித்து அரசு ஆராயுமா?
அலுவலகக் குறிப்பு:
அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளாட்சித் துறைப் பள்ளிகள் உள்ளிட்ட எல்லாப் பள்ளிகளுக்கும் பொருந்தும். சென்னை கல்வி விதிகளின் (வி.ணி.ஸி.) 84, 99 ஆம் பிரிவுகளை; காண்க. விதி 84_4 வகுப்புகளை மட்டும் கொண்டுள்ள தொடக்கப் பள்ளிகள் வசூலிக்கக் கூடிய குறைந்த பட்சக் கட்டணம் குறித்துக் குறிப்பிடுகிறது. அய்ந்தாம் வகுப்புகள் உள்ள பள்ளிகள் வசூலிக்கக் கூடிய கட்டணம் குறித்தும் அது குறிப்பிடுகிறது. இந்த விதிகளின்படி பஞ்சமர், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களிடமிருந்து கட்டணம் நான்கு வகுப்புகளை மட்டும் கொண்டுள்ள லோயர் எலிமெண்டரி பள்ளிகளில் வசூலிக்க வேண் டியதில்லை. அய்ந்தாம் வகுப்பு உள்ள பள்ளிகளிலும் பஞ்சமர் வீட்டுப் பிள்ளைகளும், பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளும் கட்டணம் செலுத்தப்படாமலே சேர்க்கப்படலாம்.
விதி 99: கல்லூரிகளிலும், செகண்டரி பள்ளிகளிலும் வசூலிக்கத் தக்க குறைந்த அளவு கட்டணம் குறித்துப் பேசுகிறது.
விதி 102: இந்தப் பள்ளிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களிடமிருந்து பாதிக் கட்டணம் வசூலிக்க வகை செய்கிறது. எல்லாப் பஞ்சமர் மாணவர்களையும் கட்டணம் இல்லாமல் சேர்ப்பதற்குக் கல்வித் துறை விதிகள் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அளிக்கப்பட்ட பதில்:
அரசுப் பொதுத் தொடக்கப் பள்ளிகளில் பஞ்சமர் சமுதாய மாணவர்களிமிருந்து எக்கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இத்தகைய அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகட்கு அரசு மானியம் வழங்கக் கணக்கிடும்போது சேர்த்துத் தரப் படுகின்றது. மற்ற பள்ளிகளில் இதுபோன்ற ஒரு கொள்கை பின்பற்றப்படுகிறது. இந்த சலுகையை நீட்டிக்க அரசு இப்போது முன்வரவில்லை.
இவ்விவரங்களை அரசு ஆணை எண். 1573 (உள்துறை) கல்வி 15.12.1919 தாங்கி நிற்கிறது. (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 106, 107, 108).
வளர்த்தது
சுயமரியாதை இயக்கம்!
முதன்முதலில் மாணவர்களுக்கான
இலவச உணவுத் திட்டம்
மாணவர்கள் தவறாது பள்ளிக்கு வருவதற்காக அற்றை நாளில் நீதிக் கட்சியை நிறுவிய சென்னை மாநகராட்சித் தலைவர் பி.தியாராயச் செட்டி மேற்கொண்ட வியத்தகு இலவச உணவுத் திட்டம்.
அடியில்கண்ட கடிதம் தியாகராயரால் 17,2,1922 அன்று அரசு உள்ளாட்சித் துறைச் செயலருக்கு அனுப்பப்பட்டது.
கடிதம்:
சென்னை எண். நி.ஞி.சி. ழிஷீ.110 ஷீயீ 22 நாள்: 17.2.1922
அனுப்புநர்:
திவான் பகதூர் சர்.பி.தியாகராயச் செட்டி எம்.எல்.சி., தலைவர், சென்னை மாநகராட்சி.
பெறுநர்:
அரசுச் செயலர், உள்ளாட்சித் துறை
அய்யா,
மாநகராட்சியின் பல பள்ளிகள் தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ளன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் மாணவர் வருகையும் மனநிறைவு அளிப்பதாக இல்லை. விசாரித்தபோது மாணவர்கள் தாமே உழைத்தும், பொருள் கொண்டு வந்தாலொழிய அவர்தம் பெற்றோரால் நண்பகல் உணவு வழங்க இயலாது என்பதும் குறைந்த நண்பகல் இடைவெளியில் மாணவர்கள் வீடு சென்று திரும்புவதில் உள்ள கஷ்டங்களும்தான் இதற்குக் காரணங்களாக அமைகின்றன எனத் தெரிய வந்தது.
இந்த இன்னல்களையெல்லாம் நீக்கு முகமாகவும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் வருகையும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காகவும் 1920 செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் நடைபெற்ற மாநராட்சிக் கூட்டத்தில் இத்தகைய மாணவர்கட்கு ஒரு நாளைக்கு ஒரு மாணவர்க்கு ஒரு அணாவுக்கு மேல் போகாமல் நண்பகல் சிற்றுண்டி அளிக்க முடிவு செய்தது. பரீட்சார்த்தமாக இத்திட்டம் முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. விளைவு மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. எனவே, இத்திட்டம் சேத்துப்பட்டிலும், மீர்சாகிப் பேட்டையிலும் உள்ள இரு மாநகராட்சிப் பள்ளிகட்கும் நீட்டிக்கப்பட்டது. இன்னும் ஏழு பள்ளிகட்கு இதை நீட்டிக்க முடிவு செய்யப்பட்-டுள்ளது.
2. 1919 ஆம் ஆண்டைய சென்னை மாநகராட்சி சட்டத்தால் இது அனுமதிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் உள்ளாட்சி மன்றக் கணக்கு ஆய்வாளர் இந்தச் செலவை ஏற்க மறுக்கிறார். இந்த வசதியை நிறுத்திவிட்டால் குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அது பாதிக்கும். எனவே, இதற்குச் சிறப்பு ஒப்புதல் அளிக்குமாறு சென்னை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் கீழ்படிதலுள்ள ஊழியன்,
பி.தியாகராயச் செட்டி, தலைவர்
இதுவே கடிதம்.
மாநகராட்சித் தலைவர் எழுதிய இரண்டாம் கடிதம்.
எண். ஸி.நி.ஞி.சி. ழிஷீ.110 ஷீயீ 22 நாள்: 23.5.1922
அனுப்புநர்:
திவான் பகதூர் சர்.பி.தியாகராயர் செட்டி எம்.எல்.சி., தலைவர்,
சென்னை மாநகராட்சி.
பெறுநர்
அரசுச் செயலர், உள்ளாட்சித் துறை
அய்யா, இந்த மாநகராட்சியின் சில மாதிரிப் பள்ளி-களில் நண்பகல் சிற்றுண்டி அளித்ததற்காக ஏற்பட்ட செலவு-களைச் சிறப்பு நிலையில் அனுமதித்து ஆணை பிறப்பிக்கக் கோரிய எண்.ஸி.ளி.நி.ஞி.சி. ழிஷீ.110 ஷீயீ 22 நாள் 17.2.1922 கடிதத்தின் பேரில் தங்கள் ஆணையை விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் கீழ்படிதலுள்ள ஊழியன்,
பி.தியாகராயச் செட்டி,
அலுவலகக் குறிப்பு:
1919 ஆம் ஆண்டைய சென்னை நகர நகராட்சிச் சட்டத்தில் ஷெடியூல் மிமி இல் விதிகள் 1 முதல் பத்து வரை உள்ள பிரிவுகள் நகராட்சியின் செலவுகள் குறித்துப் பேசுகின்றன. இந்தச் சட்டங்களில் எதுவும் நண்பகல் சிற்றுண்டி அளிப்பதற்கான செலவினத்தை அனுமதிக்கவில்லை. எனவே, கணக்குத் தணிக்கையாளரின் எதிர்ப்பு இன்றுள்ள சட்டப்படி சரியானதே. எனினும் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. சட்ட மன்றத்தில் 14.3.1922 அன்று நிறைவேற்றப்பட்ட திருத்தச் சட்டத்தின் பிரிவு 4 (2) அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அத்தகைய செலவினங்களை மேற்கொள்ள வழி வகுக்கிறது. அதுவும் இத்திருத்தம் 1.10.1920 முதல் பின்னாளிலிருந்து நடைமுறைக்கு வருவதாகும். இதற்காக ஏற்பட்ட செலவுகளை அரசு ஒரு சிறப்பு மாற்றம் ஆக 14.3.1922 இல் நிறைவேறிய இச்சட்டம் அமலுக்கு வரும்போது இது வழங்கப்படும். அதுவரை இது அப்படியே இருக்கும்.
இச்செலவுகள் அரசால் அனுமதிக்கப்படுவதாக ஆணை எண். 1008 நாள் 7.6.1922 அறிவிக்கிறது
இவ்விவரங்களை அரசு ஆணை 1008 உள்-ளாட்சித் துறை 7.6.1922 இல் காண்கிறோம். (ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) அரசின் சாதனைகள் பக். 168, 171).
அறுவடை செய்கிறது
இன்றைய இந்திய அரசு!
நீதிக்கட்சியைப் போற்றுவோம்!
வந்தேறி ஆரியப் பார்ப்பனர்களால் தற்குறிச் சமு-தாய-மாக ஆக்கப்பட்ட திராவிடப் பெருங்குடி மக்கள் கல்வியில் முன்னேற நீதிக்கட்சியும் அதன் அரசும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி இவற்றை நூறாண்டுகட்கு முன்னரே அளிக்க முயன்றமை கண்டு மெய்சிலிர்க்கிறோம்.
வறிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த இந்த திராவிட இனச் சிறுவர்கட்கு இலவச நண்பகல் உணவு கொடுத்து கல்வி அளித்த பெருமகனால் பிட்டி தியாகராயச் செட்டியார் என்பதும் காண்கிறோம்.
இந்த முயற்சிகள் காரணமாகத் திராவிட மக்கள் அறிவு பெற்றுத் தன்மான உணர்வையும் அறிவு வழி பெற்று இன்று தலை நிமிர்ந்து வாழ்வது காண்கிறோம்.
நடுவிட அரசின் இன்றைய செயற்பாடுகள்
இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையிலான எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்கச் சட்டம் இற்றை நாளில்அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் 92 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். இக்குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதியளிப்பது மத்திய_ மாநில அரசுகள் மாவட்ட நிருவாகம், உள்ளாட்சி மன்றங்கள் இவற்றின் கடமை ஆக்கப்பட்டுள்ளது என்ற செய்தி 2010 ஏப்ரல் பிறந்ததும் நமக்குக் கிட்டுகிறது.
மகிழ்ச்சி ஊட்டுகிறது
தொண்ணூறு ஆண்டுகட்கு முன்னரே இலவசக் கட்டாயக் கல்வியைச் செயல்படுத்த முனைந்தது நீதிக்கட்சி அரசு. இதற்காக இடையறாது உழைத்தது சுயமரியாதை இயக்கம். தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பின் அதனை இன்று சட்ட வடிவமாக்கியது இன்றைய இந்திய அரசு!
இலவசக் கட்டாயக் கல்வி என்னும் விதையை விதைத்தது நீதிக்கட்சி!
இக்கல்வியின் இன்றியமையாமையை நாளெல்லாம் மக்களிடையே எடுத்துக் கூறி அக்கருத்தை வளர்த்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!
இதன் விளைவுகளை அறுவடை செய்கிறது இன்றைய இந்திய அரசு!
இலவசக் கட்டாயக் கல்விக்கு வித்திட்ட நீதிக்கட்சி வாழ்க! அதனைச் செயல்வடிவம் பெற இடையறாது உழைத்த சுயமரியாதை இயக்கம் வாழ்க!
இதைச் சட்டமாக்கிப் பெரும் நன்மையை இந்நாட்டு மக்களுக்கு விளையச் செய்ய இத்திட்டத்திற்கு இந்திய நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் வாழ்க!
--------------------நன்றி:- “விடுதலை” 4-4-2010