Search This Blog

11.8.12

புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட அவலம் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்பட்டு விட்டதா?

அண்ணாவின் அரசா?

புத்த மார்க்கத்திற்கு ஏற்பட்ட அவலம் திராவிடர் இயக்கத்திற்கு ஏற்பட்டு விட்டது என்று கருதக் கூடிய அளவுக்கு அண்ணாவையும், திராவிடத்தையும் கட்சியில் கொண்டுள்ள அண்ணா திமுக ஆகிவிட்டது. ஆரியத் தலைமை இதனைத் திட்டமிட்டு செய்து வருவதையும் அறிய முடிகிறது.

எடுத்துக்காட்டாக திராவிடர் இயக்கம், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கும் வகையிலும், ராமன் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். நீதிமன்றத்திற்குச் செல்லும் அளவுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செய்துள்ள ஒன்றே ஒன்று போதும் - இது அண்ணா திமுக அல்ல. அக்கிரகார திமுக என்பதற்கு. அண்ணா தி.மு.க.வின் அதிகார பூர்வ ஏடான Dr. நமது எம்.ஜி.ஆர். ஏட்டில் பூணூலுக்கு மகத்துவம் கற்பித்து எழுதும் அளவிற்கு மிக வெளிப்படையாக ஆரியத் தன்மையின் வெளிப்பாடு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.
திவ்ய தேசங்களும், திருத்தல யாத்திரையும் என்று ஆன்மீக வெளியீடுகள் போல வண்ண வண்ண புராணக் கடவுள் படங் களுடன்  Dr. நமது எம்.ஜி.ஆர்.  ஏட்டில் வெளியிடப்படுகின்றனவே!

அய்யாவும், அண்ணாவும் எதிர்த்து வந்த அடிப்படை ஆன்மீகத்தை அதிகார பூர்வமான அந்த ஏட்டில் தூக்கிப் பிடித்து வருணனைக் கட்டுரைகள் தீட்டப்படுகின்றன. ஜெயலலிதா என்பவரின் தனிப்பட்ட நம்பிக்கைகள் தான் அக்கட்சியின் கொள்கைக் கோட்பாடுகளா?

அரசு அலுவலகங்களுக்குள்ளோ, வளாகங்களுக்குள்ளோ, எந்தமதத் தொடர்பான சின்னங்கள், படங்கள் இருக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்த அண்ணா எங்கே? கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறி அறிக்கை விடும் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எங்கே?

எப்படி எல்லாம் கிருஷ்ணனைப் பற்றி வர்ணனை தெரியுமா?
கண்ணபிரான் அவதரித்த இத்திரு நாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்றும் கோகுலாஷ்டமி என்றும் உள்ளம் மகிழ்ந்து கொண்டாடும் இந்நன்னாளில் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடை கிறேன்.
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன், எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. என்னை அன்புடன் வணங்குவோர் உள்ளத்தில் நிறைந்திருப்பேன் என்று கண்ணபிரான் பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறி முறையினை உலகுக்கு எடுத்துரைத் தார். ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்ததே இந்த உலகத்தில் தீமைகளை ஒழிப்பதற்காக என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடும் ஒவ் வொருவரும், அறத்தைப் போற்றி, தீமைகளை முறியடிக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும். அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன் என்ற கண்ணபிரானின் போதனைக்கேற்ப, நம் கடன் அறத்தை வளர்ப்பதே என்ற உயரிய குறிக்கோளுடன் ஒன்றிணைந்து அனைவரும் வாழ வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய திருநாளில், குழந்தைகளின் மாவினால் ஆன காலடிளை இல்லங்கள் தோறும் பதித்து, ஸ்ரீகிருஷ்ண பகவானே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து போற்றி வணங்கி மகிழ்வார்கள். இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, மீண்டும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள் கிறேன்.
                             ---------------------{ நமது எம்.ஜி.ஆர். நாள் 11.8.2012 பக்கம் 13)

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் - தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இப்படி கிருஷ்ணனைப் புகழ்ந்து கசிந்துருகி அறிக்கை வெளி யிட்டுள்ளாரே -_ அதே கிருஷ்ணனைப் பற்றி அவர் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அறிஞர் அண்ணா அவர்கள் - _ அதுவும் முதலமைச்சராக இருந்த நிலையில், அதுவும் சட் டப் பேரவையிலே என்ன பேசினார்?

பள்ளிப் புத்தகத்தைப் பார்க்கிறோம்.  ஆரம்பப் பள்ளிப் புத்தகத்தில் ஒருபடம் இருக்கும். ஒரு குழந்தை குனிந்து நிற்க, இன்னொரு  குழந்தை முதுகில் ஏறி உறியிலிருந்து வெண் ணெய் எடுப்பதாகப் படம் இருக்கும்.
கண்ணன் தின்னும் பண்டம் எது?
கண்ணன் தின்னும் பண்டம் வெண்ணெய் என்பதைக் கற்றுத் தர இப்படி போட்டிருக்கும். கைக்கெட்டாத பொருளை எவருக்கும் தெரியாமல் எப்படி எடுப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இப்படம் இருக்கிறது. இப்படி நான் சொல்வதால் புராணம் கூடாது என்று சொல்வதாக  எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்தக் கருத்தை இங்கு சொல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பொதுக் கூட்டத்தில் வைத்துக் கொள்கிறேன்.
பள்ளிக்கூடத்துக் கட்டடத்துக்குப் பக்கத்தில் உள்ள பிறர் வீட்டுத் தோட்டத்தில் காய்த்துக் தொங்குகிற மாங்கனியைப் பறிக்க சோனிப் பையன் ஒருவனை குனிய வைத்து மாங்காய் பறிக்கலாம் என்ற வழியை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக ஆகிறது. இக்கருத்தை பகுத்தறிவு என்று  எடுத்துக் கொண்டாலும் சரி, பயப்படாமல் உலக அறிவு என்று திருத்தி அமைத்தால் கல்வி அறிவும் தரமும் பெருகும்
              -------------முதலமைச்சர் அண்ணா கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதத் திற்குப் பதிலளிக்கையில் 23.3.1967இல் பேசிய பேச்சின் ஒருபகுதி.

இப்படி சட்டப் பேரவையிலேயே பேசிய அண்ணா எங்கே? அவர் பெயரைக் கட்சியில் சூட்டிக் கொண்டு, திரிபுவாதம், எதிர்வாதம் செய்யும் அ.இ.அ.தி.மு.க. எங்கே?
இப்பொழுது எண்ணிப் பார் க்கட்டும். புத்த மார்க்கத்தில் புகுந்த ஆரியம் அதனை உருக்குலைத்தது போல திராவிட இயக்கத்திலே புகுந்த ஆரியம் அதே வேலையைச் செய்கிறது.

இல்லையா? அப்படி ஒரு வேளை அவர்கள் திட்டமிட்டுச் செய்தாலும், உண்மையான திராவிடர் இயக்கமான, தாய் நிறுவனமான திராவிடர் கழகம், ஆரியத் திரிபுகளை, எதிர் நடவடிக்கைகளை அவ்வப்பொழுது தோலுரித்து அம்பலப்படுத்தி வருவதால் புத்தர் இயக்கத்துக்கு ஏற்பட்ட ஊடுருவலின் தீய விளைவு இங்கு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று உறுதியாக நம்பலாம்.
அதே நேரத்தில் அண்ணாவின் கொள்கைகளிலும், திராவிட இனப் பண்பாட்டுத் தளத்திலும் நம்பிக்கையுள்ளவர்கள் அ.இ.அ.தி.மு.க.வில் இருக்க முடியாது என்பதை உணர வேண்டும் -  உணர்வார்களா?

                  ------------------- மின்சாரம் அவர்கள் 11-8-2012”விடுதலை” ஞாயிருமலரில் எழுதிய கட்டுரை

24 comments:

தமிழ் ஓவியா said...

நூல்கள் - நூலகம் அறிஞர்கள் பார்வையில்....


எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் - - டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் - - பகத்சிங்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது வரும் முன் பணத் தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் - சார்லி சாப்ளின்

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் -- - சேகுவாரா

ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம். - தோழர் சிங்காரவேலர்

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும் சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு -- - சி.கே. செஸ்டர்டன்

புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை; அவற்றின் மேல், கவனம் இது உங்கள் வாழ்வை மாற்றிவிடக் கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது - -எலன் எக்ஸ்லே

உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும். - - வால்டேர்

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருப வன் அதைவிடப் பெரிய முட்டாள் - -அரேபியப் பழமொழி

உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத் தில் உள்ளது. -- - கூகிவா திவாங்கோ

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது - - ஜார்ஜ் பெர்னாட்ஷா

போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங் களை வாசிக்கத் தேவைப்படுகிறது! - எல்பர்ட்கிரிக்ஸ்

தமிழ் ஓவியா said...

புத்தகங்கள் இருந்தால்போதும் சிறைக் கம்பிகளும் கொட்டடிகளும் ஒரு வரை அடைத்து வைக்க முடியாது. - - மாவீரன் பகத்சிங்

ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது - - பிரடெரிக் எங்கெல்ஸ்

காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் - - எட்வின் பி. விப்பிள்

ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததி யினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் - புத்தகங்களே - ஹென்றிதொறோ

நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத் துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம் - - கரோலின் கோர்டன்

தமிழ் ஓவியா said...

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக் கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் - மார்டின் லூதர்கிங்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் - வின்ஸ்டன் சர்ச்சில்

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித் தாராம் - - காந்தியார்

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப் பட்டபோது, புத்தகங்களுடன் மகிழ்ச் சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார் - - நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழு துங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று - - பெட்ரண்ட்ரஸல்

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப் பதிலளித்தார் - - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்

தமிழ் ஓவியா said...

கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் - - தந்தை பெரியார்
வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் - நெல்சன் மண்டேலா றீ பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம்
குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.
பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம் - போவீ
புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கி றோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம் - - சீனப் பழமொழி
நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும்போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை. ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள். -- கிறிஸ்டோபர் மார்லே
புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம் - - சீனப் பழமொழி
ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை - ஆர்.டி. கம்மிஸ்
ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை - சார்லஸ் இலியட்
விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக் கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம் - அறிஞர் அண்ணா
ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்பட வில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியதுதான் - - டோனி மாரிஸன்
ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது; அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். - - ஆர்.டி. கம்மிங்
ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் உயர்ந்தவன் அல்லன் - - மார்க் ட்வைன்
உன் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக் குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள் - - ஜேம்ஸ்ரஸல்

தொகுப்பு: முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை

தமிழ் ஓவியா said...

தோளில் துண்டுப் போடுவது


தோளில் துண்டு போடுகிற கலாச்சாரம், இடுப்பில் துண்டு கட்டுகிற கலாச்சாரத் திற்கு எதிராக வந்தது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாத உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, வேறு யாரும் சட்டை அணியக் கூடாது. தோளில் துண்டுப் போடக்கூடாது, அப்படியே போட்டாலும் உயர் ஜாதிக்காரர்களை கண்டால் அந்தத் துண்டை எடுத்து இடுப்பில் கட்ட வேண்டும் என்று இருந்த அநீதியை எதிர்த்து பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் கடுமையாகப் போராடியது.
ஒடுக்கப்பட்

ட இசை வேளாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வரம், தவில் வாசிக்கிற கலைஞர்கள், தோளில் துண்டுபோடக்கூடாது, என்று இருந்த ஜாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து, பெரியாரின் போர்வாளான பட்டுக்கோட்டை அழகிரி தொடர்ந்து போராடி, அவர்களுக்கு அந்த உரிமையை பெற்றுத் தந்தார்.
இன்று கூட தோளில் துண்டு

போடுகிற பழக்கம் அரசியல் கட்சிகளில் அதிகம் இருப்பது திமுகவிடம்தான். அதற்குக் காரணம் பெரியார் மூலம் ஏற்பட்ட பழக்கமே. தோளில் துண்டு போடுகிற இந்தப் பழக்கம், திராவிட இயக்கங்களின் பழக்கம் என்பதினால்தான் பார்ப்பன பத்திரிகைகள் அரசியல்வாதிகள் பற்றியான நகைச்சுவைகளில், கார்ட்டூன்களில் தோளில் துண்டு போட்ட உருவங்களையே வெளியிடுவார்கள். அரசியல்வாதிகள் தோளில் துண்டு போட்டுக் கொள்வது உங்களுக்கு எந்த வகையில் இடைஞ்சலாக இருக்கிறது? நீங்கள் ஏன் எரிச்சல் அடைகிறீர்கள்? தோளில் துண்டு போடுவது அநாகரிகமல்ல, சுயமரியாதை. தோளில் பூணூல் போடுவதுதான் அநாகரிகம்.
2007 ஆம் ஆண்டு எழுதியது.. வழக்கறிஞர்

கு. காமராஜ் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவந்த சமூக விழிப்புணர்வு மாத இதழுக்ககாக ஜூலை 2007 ஆம் ஆண்டு எழுதியது. எஸ்.என்.சிவசைலம், சேலம்.

தமிழ் ஓவியா said...

ஆண்டுகள் ஐம்பது போயின


நாத்திகத்தின் போர்வாளை
கூர் தீட்டும் பணியில் உங்கள் வாழ்வில் ஐம்பதாண்டுகள் போயின
பரம்பரை எதிரிகளின்
பாசாங்கு மொழிகளை
திராவிடருக்கு
எடுத்து இயம்பும் பணியில்
ஆண்டுகள் ஐம்பது கழிந்தன
தங்கள் வாழ்வில் ஒவ்வொரு வீட்டின்
முற்றத்திலும் முரசு அறைந்து சொல்வது போல்
தந்தை பெரியாரின் கொள்கை ஒலிக்கும்
விடுதலைக்கு ஆசிரியராய்
உங்கள் வயதில் ஆண்டுகள் ஐம்பது போயின

வண்ண அச்சா கூடுதல் பக்கங்களா இன்னும் ஒரு பதிப்பா அதுவும் திருச்சியிலா இணையத்திலும்
உலகெங்கும் விடுதலையை
உடனுக்குடன் படிக்க
ஏற்பாடா எனக் கேட்போர் வியக்க வளர்ச்சியை
நோக்கியே வலம்வரும் நாத்திக விடுதலையின்
நயம் மிக்க ஆசிரியரே !
எங்களின் திசைகாட்டியே !

ஐம்பது வயதைத் தொட்டாலே அலுத்துக்கொள்வோர் ஏராளம் என்ன இருக்கிறது இனி
என அவர்கள் விடும் ஏக்கப் பெருமூச்சுகள்
தாராளம்

அல்ல ! அல்ல !
ஐம்பதுக்குப் பின் என்
சாதனைகள் பாரீர்
எனப் பட்டியலிடும் அணிவகுப்பாய்
எழுத்துக்களும் பேச்சுக்களும்
எண்ணிலடங்கா இயக்க செயல்பாடுகளும் ...

பெரியார் என்னும் சகாப்தத்தின் தொடர்ச்சியாய் தொடர்ந்திடும் தங்கள் தொண்டு தொடர்ந்திடவே
துணை நிற்போம் என்றும்.

முனைவர் வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்.

தமிழ் ஓவியா said...

போக்குவரத்தைக் கவனித்த முதல்வர் காமராசர்


கல்வி வள்ளல் - பச்சைத் தமிழர் கர்மவீரர் என்று புகழப்படும் காமராசர் அவர்கள் இரவு நீண்ட நேரம் விழித்து கடமை ஆற்றிய முதல்வர் என்பது எத்தனை சரியோ அத்தனை சரியான விசயம் எங்கும் படுத்தவுடனே அவர் தூங்கி விடுவார். காரில் எங்காவது நெடுங்தூரப் பயணம் என்றால் காரின் பின் சீட்டில் அப்படியே சுருட்டி படுத்து விடுவது அவரது வழக்கம் -_ வெளியூர் சுற்றுப் பயணம் முடித்து அவர் அப்படித் திரும்பிக் கொண்டிருந்தார் ஒரு சமயம். ஒரே இடத்தில் நீண்ட நேரம் தனது கார் அப்படியே நிற்பதும் ஏராளமான கார்களின் ஆரன்கள் ஒலிப்பதும் அவரை விழிப்படையச் செய்தன. எழுந்து வெளியே பார்த்தார் காமராசர் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் (அப்போது மர்மலான் பாலம்) டிராபிக் ஜாம் ஆகியிருந்தது முன்னால் பார்த்தார். காமராசர் நடுப் பாலத்தில் ஒரு லாரி பிரேக் டவுன் ஆகியிருந்தது ஒரே ஒரு டிராபிக் போலீஸ்காரர் போக்குவரத்தை சரிபடுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

தான் ஒரு முதலமைச்சர் என்பதை எல்லாம் மறந்து விட்டு உடனே காரை விட்டு இறங்கி தானும் அந்தப் போலீஸ்காரரோடு உதவியாக இருந்து போக்குவரத்தை சரிப்படுத்திவிட்டே மறுபடியும் காரில் ஏறினார் காமராசர். அது மட்டுமல்ல. பொறுப்போடு சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் போய் அது போன்ற இடங்களில் இன்னொருவரைக் கூடுதலாகப் போட்டால் என்னண்ணேன் என்று கண்டித்து விட்டும் வந்தார். ம். இப்படியெல்லாம் தமிழகத்தில் முதல்வர் இருந்தார்கள். அது ஒரு காலம்.

தகவல்: மு. அன்புக்கரசன், பெரியகுளம்

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


சும்மா ஆடுமா?

செய்தி: இந்தியாவில் இப்போது விலைவாசி உயர்வைவிட கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை பயங்கரவாதம்தான். மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஒரு நாட்டின் பாதுகாப்பை, கேள்விக்குறியாக மத்திய அரசு மாற்றிவிட்டது. இந்த நிலை மாற, நரேந்திரமோடி அல்லது ஜெயலலிதா யாராவது ஒருவர் கண்டிப்பாக பிரதமராக வர வேண்டும். இவர்கள் இருவருமே பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள்

- துக்ளக் சோ

சிந்தனை: பயங்கரவாதத்தை அடக்குவதாக இருந்தால் 2000 சிறுபான்மையினரைக் கொலை செய்ய வேண்டும்; அவர்களின் வீடுகளையும், வியாபார நிறுவனங்களையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அந்தச் சிசுவை தீயில் தூக்கிப் போட்டு மகிழ்ச்சிக் கூத்து ஆட வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரைப் பிரதமராக்க வழியில்லை என்றால் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்குத் தனி விமானத்தில் சிறப்பு விருந்தினராகச் செல்ல வேண்டும் அல்லது மோடியை அழைத்து 40 விதமான வகையறாக்களோடு சிறப்பு விருந்து அளிக்க வேண்டும் - அப்படிப்பட்டவரைப் பிரதமராக்கலாம் சோவின் குடுமி சும்மா ஆடுமா? 11-8-2012

தமிழ் ஓவியா said...

தமிழன் என்றாலே துவேஷம்தானா?


கேள்வி: தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் ஏழாவது மணல் திட்டில் இலங்கைக் கடற்படையின் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளதுபற்றி?

- மு. பெரியசாமி, விட்டுக்கட்டி

பதில்: அங்கிருந்துதான் இலங்கைக் கடல் பகுதியின் எல்லை ஆரம்பிக்கிறது. ஆறாவது திட்டு வரை இந்தியாவின் கடல் எல்லை. நமது எல்லையில் ஒரு பாதுகாப்பு அரணும் இல்லை. தன் எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதில் இலங்கை முனைப்புடன் இருப்பதில் தவறில்லை. ஆனால், இந்திய மீனவர்களை அச்சுறுத்தக் கூடாது. காலம் காலமாக இருந்துவரும் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்வதில்லை என்பதுதான் பரிதாப நிலை.

(கல்கி, 12.8.2012)

ஈழத் தமிழர்கள் பிரச்சினையாக இருந்தாலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையானாலும் இந்தப் பார்ப்பனர்கள் எதிரிகளின் பக்கம் நின்றுதான் வெண்சாமரம் வீசுவார்கள். நம் வீட்டுக் கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத்துவிட்டு, இப்படித் தொங்க வேண்டியுள்ளதே என்பதுபற்றி ஒரே ஒரு வரி எழுதமாட்டார்கள்.

எதிரிகளோடு சேர்ந்துகொண்டு துப்பாக்கியை நம் பக்கம் திருப்புவார்கள் - தமிழர்கள் என்றால் அவ்வளவுத் துவேஷ நஞ்சு இந்தப் பார்ப்பனர் களுக்கு!

தமிழ் ஓவியா said...

தடைக்கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு! டெசோ தலைவர் கலைஞர்

சென்னை, ஆக. 11- மாநாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டாலும் தடந்தோள்கள் உண்டு என்று கூறினார் டெசோ தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (10.8.2012) கூறியதாவது:

செய்தியாளர் :- டெசோ மாநாட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத் தில் தொடுத்த பொது நல வழக்கில், தமிழக அரசு, மாநாட்டிற்கு அனுமதி வழங்கிடக் கூடாது என்று தடுத்தி ருக்கிறார்கள். ஆனால், நீதிபதி அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட் டார். இந்த நிலையில் டெசோ மாநாடு திட்ட மிட்டபடி நடக்குமா?

கலைஞர் :- நடக் கும்.

செய்தியாளர் :- மத் திய அரசு ``ஈழம் என்ற வார்த்தையைப் பயன் படுத்தக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்களாமே?

கலைஞர் :- மத்திய அரசிடமிருந்து அப்படி எந்த ஆணையும் அதி காரபூர்வமாக உள்துறை அமைச்சரிடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோ எதுவும் வரவில்லை. ``ஈழம் என்று சொல்லக் கூடாது என்று யாரோ சொன்னதாக ஒரு சில பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. அது உங்களுக்குப் பெரிய தலைப்பாக ஆகியுள் ளது. ``ஈழம் என்ற வார்த்தை தமிழ் இலக் கியங்களிலேயே ஈரா யிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம் பெற்றி ருக்கிறது. ``பட்டினப் பாலை என்ற இலக்கிய நூலில், ``ஈழத்து உண வும், காழகத் தாக்க மும் என்று பூம்புகார் கடற்கரையில் வந்து நின்ற படகுகளில், கப் பல்களில் இறக்குமதி, ஏற்று மதிக்காக வந்த பொருள்கள் என்ன என் பதைக் குறிக்க ``ஈழத்து உணவும், காழகத் தாக் கமும் என்ற வார்த்தை கள் இடம் பெற்றுள் ளன. எனவே ``ஈழம் என்பது இல்லாத சொல் அல்ல, கற்பனை சொல் அல்ல. வரலாற்றிலேயே இடம் பெற்ற ஒரு சொல்.

செய்தியாளர் :- ``டெசோ மாநாட்டில் என்னென்ன தீர்மானங் கள் நிறைவேற்றப்பட வுள்ளன?

கலைஞர் :- அவை களையெல்லாம் இப் போதே சொன்னால், மாநாட்டிற்கு பிறகு என்ன அவசியம்?

செய்தியாளர் :- காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இந்த மாநாட் டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார்களே?

கலைஞர் :- அது அவர்களுடைய கருத்து.

செய்தியாளர் :- அவர்கள் சொன்னதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

கலைஞர் :- நான் அதைப்பற்றி ஒன்றும் நினைக்கவில்லை. அவர் கள் அப்படி சொல்வார் கள் என்றுதான் நாங் களும் நினைத்தோம்.

செய்தியாளர் :- அழைப்பு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா?

கலைஞர் :- அழைப்பு எல்லோருக் கும் தரப் பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அழைப்பு கொடுத்து, விடுத்த வேண்டுகோளின் காரண மாகத்தான், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட தின் காரணமாகத்தான் இங்கே வர விரும்பிய பல பேருக்கு விசா போன்ற அனுமதிகளை மத்திய அரசு வழங்கி யிருக்கிறது.

செய்தியாளர் :- ``டெசோ மாநாட்டிற் காக காவல்துறை ஆணை யர் அனுமதி வழங்கு வார் என்று எதிர்பார்க் கிறீர்களா?

கலைஞர் :- அமை தியான முறையில் மாநாடு நடக்க காவல்துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை அவர்கள் தட்டிக் கழிக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். யாருடைய உத்தரவுக்காகவோ, யாருடைய கட்டளைக் காகவோ, யாருடைய கருத்துக்களுக்காகவோ தேவையில்லாமல் ஒரு அவப்பெயரை அவர்கள் தேடிக் கொள்ளமாட் டார்கள் என்று நான் நம்புகிறேன்.

செய்தியாளர் :- மறுக் கும் பட்சத்தில் ``டெசோ மாநாடு நடக்குமா?

கலைஞர் :- ``தடைக் கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு என்று எங்கள் கவிஞர் பாரதிதாசன் பாடியிருக் கிறார்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாடு: சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் டெசோ தலைவர் கலைஞர் அறிக்கை


சென்னை, ஆக.11- டெசோ மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு என்று சென்னை காவல்துறை தெரிவித்துள் ளதைத் தொடர்ந்து சட்டப்படியான வழிமுறைகள் கடைப்பிடிக்க இறுதி முயற்சி செய்யப்படும் என்றார் கலை ஞர் அறிக்கை வருமாறு:

சட்டப்படி உள்ள வழிமுறைகளை யெல்லாம் கடைப்பிடிக்க இறுதிவரை முயற்சி செய்வோம்.

எங்கள் வேண்டுகோளின்படி இந்திய அரசு ஆதரித்து, ஐக்கிய நாடுகள் மன்றம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை மேலும் வலியுறுத்துவது தான் இந்த மாநாட்டின் உண்மையான நோக்கம் என்பதை தொடக்கம் முதலே விரிவாக வெளியிட்டும், பத்திரிகையாளர்களுக்குச் சொல்லியும் வந்திருக்கிறோம்.

ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மட் டுமே இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தும், மாநாட்டினை எப்படியும் நடக்கவொட் டாமல் செய்வதற்கு சில முயற்சிகள் நடைபெறுகின்றன.

விடுதலைப்புலிகளும், வேறு தீவிரவாத இயக்கங்களைச் சார்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடும் என்று காவல் துறைக்கு தகவல் வந்துள் ளதாக போலீஸ் கமிஷனர் உத்தரவில் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்கு மாறானது.

நீதித்துறையின் எல்லா அமைப்புகளி லும் எங்கள் நிலையை விளக்கி, நீதியைப் பெற முயற்சி செய்வோம். ஒரே நாட்டின் குடிமக்களாக இருந்தும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வரும். ஈழத் தமிழர்களுடைய வாழ்வுரிமையைப் பாது காக்க நாங்கள் எவ்வாறு செயல்படுவது என்பதை, நாங்கள் சட்டப்படி எடுக்க விருக்கிற இறுதி முயற்சிக்குக் கிடைக்கிற பயனைப் பொறுத்து எங்கள் அமைப்பு முடிவெடுத்து அறிவிக்கும்.

தமிழ் ஓவியா said...

கீதை புகழ் பாடுகிறார் தமிழக முதல்வர்!


தமிழக முதல்வர் ஜெயலலிதா எந்த வொரு மதப் பண்டிகையையும் விடுவதில் லை. அரசின் சார்பாக அதற்கு வாழ்த்து தெரிவித்துவிடுவார். கிருஷ்ண ஜெயந் திக்கும் அப்படியாகவே அறிக்கை வெளி யிட்டிருக்கிறார்.

இந்திய அரசு மதச்சார்பற்றது என்று அரசியல் சாசனத்தில் பொறிக்கப்பட்டுள் ளது. இதன் அர்த்தம் மதம் என்பது குடி மக்களின் தனிப்பட்ட விவகாரமேயன்றி, அரசு அதில் சம்பந்தப்படாது என்பதாகும். ளநஉரடயச எனும் அந்த ஆங்கிலச் சொல்லுக்கு மதத்தோடு சம்பந்தப் படாதது என்றுதான் வெப்ஸடர் ஆங்கிலப் பேரகராதி பொருள் தந்துள்ளது. ஆனால், மத்திய ஆட் சியாளர்களோ-காங்கிரசார் என்றாலும், பாஜகவினர் என்றாலும்-இதற்கு சகல மதங்களையும் சமமாக நடத்துவது என்றே அர்த்தப்படுத்தி அப்படியாகவே நடந்து வந் தார்கள். இது அர்த்தம் அல்ல, அனர்த்தம்.

பெரியார் கேட்டார்: ஆங்கிலத்தில் எசைப என்றொரு சொல் இருக்கிறது. இதன் பொருள் ஆணோடு சம்பந்தப்படாத பெண் என்பதுதானே தவிர, சகல ஆண் களையும் சமமாக பாவிப்பவள் என்றா சொல்லுவீர்கள்? உண்மையில் மதச் சார்பற்றது என்பதை சகல மதச்சார் பானது என்று ஆக்கி விட்டார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

அவர்கள் வழியில் தீவிரமாகச் செல் கிறார் முதல்வர் ஜெயலலிதா. இதிலே இவர் நடத்தும் கட்சியின் பெயர் அண்ணா திமுக., தங்களுடையது பெரியார் -அண்ணா பாரம்பரியம் என்று சொல் லிக்கொண்டு, அவர்களது படங்கள் மேடையின் பின்னணி திரைச்சீலையில் இடம் பெறுகின்றன. அப்படிப்பட்டதொரு கட்சியின் ஆட்சி கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவிக் கும் என்று பாவம், அவர்கள் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள்!

தமிழ் ஓவியா said...

புராணங்களையும், இதிகாசங்களை யும் பெரியாரும் அண்ணாவும் எப்படி யெல்லாம் விமர்சித்து எழுதினார்கள், பேசினார்கள் என்பதைத் தமிழகம் அறியும். அவர்கள் வழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் முதல்வரோ பகவத் கீதையின் மூலம் வாழ்க்கையின் நெறி முறையைக் கண்ணபிரான் உலகிற்கு எடுத்துரைத்தார் என்று கீதையையும் புகழ்ந்திருக்கிறார்.கீதை பற்றி பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் எத் தகைய கருத்துக்களைக் கொண்டிருந் தார்கள் என்பதை அம்மையார் அறியார் போலும்.

யுத்த களத்தில் மனச் சோர்வு கொண்டு அர்ச்சுனன் தளர்ந்து நின்றபோது, அவனுக்குத் தைரியம் கொடுக்க கிருஷ்ணன் கீதையை உபதேசிக்கிறான். அர்ச்சுனனுக்கு ஏன் மனச்சோர்வு வந்தது தெரியுமா? போரில் சொந்தபந்தங்களைக் கொன்றுவிட்டால் மணம்புரிய ஆண்கள் இன்றி தனது ஷத்திரிய குலப்பெண்கள் இதர வருணத்து ஆண்களேடு சேர்ந்து விடுவார்களே, வருணதர்மம்- சாதியக் கட்டுமானம்-குலைந்து போகுமே என்பதுதான் அவன் கவலை. கீதையின் முதல் அத்தியாயத்தின் சுலோகங்கள் 40 முதல் 43 வரை இதையே விவரிக்கின்றன.

இதற்கு கிருஷ்ணன் இரண்டுவித மாகத் தேறுதல் சொல்கிறான். முதல் வகை தத்துவரீதியானது. இரண்டாவது வகை காரியார்த்தமானது. மரணம் என்பது உடலுக்குத்தானே தவிர ஆன்மாவிற்கு அல்ல; எதிரே இருக்கும் சொந்தபந்தங்களின் உடல்தான் அழி யுமே தவிர அவர்கள் - அவர்களது ஆன்மாக்கள்-அழியமாட்டா, எனவே கொல்லு என்பது. யுத்தத்தில் நியாயம் யார் பக்கம் இருக்கிறது என்று ஆராய்ந்து அதை நடத்து அல்லது நடத்தாதே என்று சொல்லாமல், ஆன்மா அழியப் போவ தில்லை. ஆகவே நடத்து என்றான்.

இதிலுள்ள ஆபத்து என்னவென்றால் இந்தக் கருத்தியலைக் கொண்டு நியாய வான் ஒருவனும், அநியாயக்காரன் ஒரு வனும் தத்தம் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்க முடியும். ஆன்மா அழிவற்றது எனும் தைரியத்தில் காந்திஜி ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி னார். அதே தைரியத்தில்தான் கோட்சே அவரைச் சுட்டுக் கொன்றான்! இரு வரையும் உத்வேகப்படுத்தியது ஒரே கீதை!

இரண்டாவது வகைத் தேறுதல் காரியார்த்தமானது என்பது எப்படி என்றால் வருண தர்மம் ஒருபோதும் அழியாது, அதை உருவாக்கியது தானே, அதற்கு ஆபத்து வரும் போதெல்லாம் தான் மீண்டும் மீண்டும் அவதரிப்பேன் என்று தைரியம் சொன்னது.

சதுர்வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று ஆரம்பமாகிறது அத்தியாயம் நாலின் சுலேகம் 13. குணத்துக்கும், செய்கைக்கும் தக்கபடி நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப்பட்டன. உருவாக்கியவன் நானே என்றாலும் அவற்றை மாற்றிச் செயல்பட வைக்க என்னாலும் முடியாது என்பதை அறிந்திடு என்பது அதன் முழு அர்த்தம்.

தமிழ் ஓவியா said...

இது மிகவும் வினோதமானது. வருணாசிரம அமைப்பை பகவானே உருவாக்கினார் என்றது மட்டுமல்லாது, அதை அவரே நினைத்தாலும் மாற்றி யமைக்க முடியாது என்று அவரை விட்டே சொல்ல வைத்தது! உருவாக்கிய ஒன்றை மாற்ற முடியாத அளவிற்கு பலவீனமான வரா பகவான்? அப்படிப்பட்டவர் எப்படி பக வான் ஆவார்? - இப்படிக் கேள்விகள் எழலாம். இது பற்றியெல்லாம் கவலைப் படாது, வருணாசிரம அமைப்பு நிரந்தர மானது, அதை யாராலும் மாற்றியமைக்க முடியாது எனச் சொல்வதே கீதாசிரி யனின் நோக்க மாக உள்ளது.

குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி தானே வருணப் பாகுபாடு என்று கிருஷ் ணன் கூறியிருக்கிறான் என்று நினைக்க லாம். குணம் - செய்கை என்பதெல்லாம் ஒரு மனிதன் பெரியவனான பிறகுதான் தெரியவரும். ஆனால், வருணப் பாகு பாடோ பிறந்தவுடனேயே வந்தது, பெற் றோரின் வருணத்திலிருந்து வந்தது. குணம், செய்கையின் அடிப்படையில் அது முன்னமே-பரம்பரை பரம்பரையாக - நிச்சயமாகிப்போன விஷயம். இப்போது தந்தையின் வருணமே பிள்ளையின் வரு ணம். இதுதான் இந்த சுலோகத்திற்கு அர்த் தம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திரர் கூறியிருக்கிறார் அவரது தெய்வத்தின் குரல் நூலில். இதற்கு மேல் அப்பீல் உண்டோ?

இன்னும் சந்தேகம் இருந்தால், அத்தி யாயம் ஒன்பதின் சுலோகம் 32 அய்ப் படித்துக் கொள்ள வேண்டும். அதில் பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர் களும் பாவ யோனியிலிருந்து பிறந்த வர்கள் என்று திட்டவட்டமாகச் சொல்லப் பட்டுள்ளது. பாபயோனய எனும் சொற்கள் அங்கேயிருந்து நம்மைக் காலங்காலமாக மிரட்டிக் கொண்டிருக்கின்றன.

இப்போதும் சந்தேகம் நீங்கவில்லை யென்றால் அத்தியாயம் பதினெட்டின் சுலோகங்கள் 41 முதல் 44 வரை படி யுங்கள். அதில் ஒவ்வொரு வருணத்தவ ருக்கும் இவைதாம் கடமைகள் என்று கிருஷ்ணன் வரையறுத்துச் சொல்கிறான். இதை மீறக்கூடாது எனும் மிரட்டல்தொனி அவற்றில் பட்டவர்த்தனமாக உள்ளது. அந்தக் கடைசிச் சுலோகம் இப்படி முடி கிறது- பணிவான தொண்டூழியம் செய்வதே சூத்திரர்களின் இயல்பான கர்மமாகும்.

கீதையில் வரும் கர்ம யோகம் பற்றிப் பிரமாதமாக வைதீகர்கள் பேசுவார்கள். அது விதித்துள்ள கர்மம் இதுதான். அங்கு தர்மம் பற்றியும் அடிக்கடி பேசப் படும். அந்த தர்மம் வருணதர்மமேயன்றி வேறில்லை. அந்த தர்மம் குலைந்து விடக்கூடாது என்றே அர்ச்சுனன் கவலைப்பட்டதை அறிவோம். அவனுக்கு கிருஷ்ணன் முடிவில் காரியார்த்தமான தைரியம் சொன்னான். அது தான் அந்தப் புகழ்பெற்ற சம்பவாமி யுகே யுகே சுலோகம். அதன் முழு அர்த்தம்: பார்த்தா! எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போ தெல்லாம் நான் அவதரிக்கிறேன்.

இதுதான் கீதையின் சாரம். இதுதான் கிருஷ்ணனின் அவதார மகிமை. கிருஷ்ண ஜெயந்தியையும் கீதையையும் இந்துத்துவாவாதிகள் போற்றிப் புகழு கிறார்கள் என்றால் அது புரிந்து கொள்ளக் கூடியதே. உள்ளடக்கம் தெரியாமல் ஏதோவெரு பண்டிகை என்று பாமர இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால், சகல குடிமக்களின் வரிப் பணத்தில் இயங்குகிற ஓர் அரசின் முதல்வர் ஏன் கிருஷ்ணனைப் புகழ வேண்டும், கீதையைப் போற்ற வேண்டும்? இது அரசியல் சாசனப் பிரகடனத்திற்கு எதிரானது, அவரது சொந்த திராவிட இயக்கப் பாரம்பரியத்திற்கு முரணானது, நாட்டில் எழுந்து வரும் சமூக நீதிக் கோட்பாட்டிற்கு - சம தர்மச் சிந் தனைக்கு முற்றிலும் விரோதமானது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு கிருஷ்ண பக்தி இருக்கலாம். ஏன் அவரது கட்சியின் கொள்கைகளில் ஒன்றாகக் கூட அதை மாற்றலாம். அது அவருடைய சொந்த விவகாரம், அவருடைய கட்சி யினுடைய உள் விவகாரம். அவருடைய இஷ்டத்திற்கு அதிமுகவை ஆட்டி வைக்கலாம். ஆனால் தமிழக அரசின் முதல்வர் என்ற வகையில், அவர் இப்படி அறிக்கை விடும்போது விஷயம் ஆறரைக் கோடித் தமிழர்களையும் அதில் இழுத்து விடுவதாக ஆகி விடுகிறது. அதற்கான அதிகாரம் அம்மை யாருக்கு கிடையாது.

அதனால்தான் நமது அரசியல் சாசனத்தில் அரசு மதச்சார்பற்றது என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் அம்மையார் கிருஷ்ண ஜெயந்தி கொண் டாடலாம். ஆனால், அவர் அரசு கொண் டாடக்கூடாது என்பது. இது இந்துப் பண்டிகைக்கு மட்டு மல்ல, எல்லா மதப் பண்டிகைகளுக்கும் பொருந்தும்.

- அருணன்

நன்றி: தீக்கதிர் 11.8.2012

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் ஊர்வலங்கள்


பிள்ளையார் என்ற இந்து மதக் கடவுளுக்குப் பல நாமகரணங்கள் உண்டு என்றாலும், அதனைப் பெரிது படுத்தி விளம்பரம்செய்து இந்தியத் துணைக் கண்டத்தின் தேசியத் திருநாள் போல பிள்ளையார் சதுர்த்தியைப் பெரிதுபடுத்தி யுள்ளனர்.

இதனை முக்கியப் புள்ளியாக வைத்து இந்துத்து வாவுக்கு ஒரு புதிய உந்து சக்தியை உண்டாக்குவதற்கான வகையில் மூளையைச் செலுத்தியவர் மகராஷ்டிரப் பார்ப்பனரான பாலகங்காதரத் திலகர்.

பிள்ளையார் என்பதற்கு இன்னொரு பெயர் வினாயகர் என்பதாகும். கவுதம புத்தருக்கு இந்தப் பெயர் உண்டு. இந்தப் பெயரை உருட்டல் புரட்டல் செய்து, எங்கெங்கெல்லாம் புத்தர் உருவச் சிலைகள் இருந்தனவோ அந்த இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு, இந்த விநாயகனாகிய பிள்ளையாரின் சிலை களைச் செய்து வைத்துவிட்டனர்.

ஆரியப் பார்ப்பனர்களின் மனப்பான்மையைத் தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இருக்காது.

பொம்மைகளைக் கோயில்களில் கடவுள் களாக்கி, அவற்றின் ஏஜென்டுகளாகப் பார்ப்பனப் பெருச்சாளிகள் புகுந்து கொண்டு மக்களின் அறியாமை, அச்சம், பேராசை இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தங்களைப் பிறவி முதலாளிகளாக ஆக்கிக் கொண்டு, சுரண்டல் வேலையை அதிகார பூர்வமான தொழிலாக செய்து கொண்டவர்கள் இந்தப் பார்ப்பனர்கள்தாம்.

விநாயகன் என்ற கடவுளின் உருவத்தைப் பார்ப்பவர்களுக்கு இப்படி ஒரு மிருகமே இருக்க முடியாது என்கிறபோது எப்படி கடவுளாக இருக்க முடியும் என்ற கேள்வி எழாமல் போகாது.

உருவமற்றவர் கடவுள் என்று ஒரு புறத்தில் ஓதிக் கொண்டு, இவ்வளவு ஆபாசமாக ஒரு கடவுளை ஆரியப் பார்ப்பனர்கள் உருவாக்கியுள்ள பித்தலாட்டத்தை என்ன சொல்ல!

எந்த அளவுக்கு விநாயகனைப் பயன்படுத் தினார் திலகர் என்றால், இரண்டு ஆங்கில அதிகாரிகளை படுகொலை செய்யும் அளவுக்கு வெறியை ஊட்டினார்.

புனேயில், பிளேக் நோய் பரவியதால், அந்த நோய்க்குக் காரணமான எலிகளை வேட்டையாட ஆங்கிலேயர் ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, செயல்படுத்தவும் பட்டது.

அந்தத் தருணத்தில் இந்த திலகர் என்னும் பார்ப்பனர் - கிறிஸ்தவர்களாகிய வெள்ளைக் காரர்கள் நமது கடவுளான விநாயகரின் வாகனத்தைக் கொல்லுகிறார்கள். இதனை அனுமதிக்கலாமா என்ற ஆவேச வெறியைக் கிளப்பினார்.

இதன் காரணமாக இந்துத்துவா வெறியர்கள் இரு ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர். இதன் காரணமாக திலகர் தண்டிக்கப்படவும் செய்தார்.

அந்தக் காலந்தொட்டு நாடு தழுவிய அளவில் பிள்ளையார் ஊர்வலங்களை சிறுபான்மையினரி டம் கலகம் விளைவிக்கும் ஒருயுக்தியாக மேற் கொண்டனர். இந்த அனுபவம் சென்னையிலும் உண்டு.

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண் டும் என்றால் வீட்டுக்குள் கொண்டாடிக் கொண்டு தொலையலாம். வீட்டுக்குப் பின்புறத்தில் உள்ள கிணறுகளிலும், குளங்களிலும் பிள்ளையார் சிலைகளைக் கரைக்கலாம். (அப்படித்தான் நடந்து வந்தது;) திலகரின் திட்டத்துக்குப் பிறகுதான் வீதிகளில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் கைங்கர்யம் நடைபெறத் தொடங்கியது.

நீர்நிலைகளில் கரைக்கப்படும் பிள்ளையார் பொம்மைகளில் வண்ணம் தீட்டப்பட்டு இருக்கக் கூடாது. இராசயனக் கலவையான வண்ணம் தீட்டப்பட்டிருந்தால் அது தண்ணீரை நஞ்சாக்கும், சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கிறது.

அது குறித்து எந்தவித மதிப்பையும் கொடுக் காமல் பல வண்ணப் பிள்ளையார்களை ஊர்வல மாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக் கிறார்கள்.

குறிப்பிட்ட அடி உயரத்திற்கு மேல் பிள்ளையார் பொம்மைகள் எடுத்துச் செல்லக்கூடாது என்று உத்தரவிட்டும், அதை இந்துத்துவவாதிகள் பொருட்படுத்துவதில்லை. இந்த முறையாவது காவல்துறை என்ன செய்யப்போகிறது என்பதை யும் பார்ப்போம்! 11-8-2012

தமிழ் ஓவியா said...

50 ஆண்டுகளுக்கு முன்....


அறிவுடையார் எல்லாம் உடையார். அறிவினைப் பெறும் வழிகல்வி இப்படி ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்வள்ளுவர் அறுதியிட்டுக் கூறினார். ஈ.வெ. ராமசாமி தம் வாழ்நாள் முழுவதும் எடுத்துரைத்து வந்தார்.

பெரியார் பொது வாழ்க்கைக்கு வந்த காலத்தில், எத்தனையோ பள்ளிக் கூடங்களில், ஆதி திராவிடர் பிள்ளைகளை சேர்க்கவே மாட்டார்கள். ஆகவே அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட் டவர்கள் சிலராவது படித்தால் தான், பள்ளிக்கூடம் அங்கீகரிக்கப்படும் என்று அரசு ஆணையிட நேர்ந்தது. அது பல்லாண்டு ஏட்டளவில் நின்றது ஏன்? சிற்றூர்களில் ஆதிதிராவிடப் பிள்ளைகள் மற்றவர்களோடு இருந்து படிக்க முயன்றால், பல பகுதிகளில் மற்ற சாதிக்காரர்கள் தாழ்த்தப்பட் டவர்களை பலவகையான துன்பங்களுக்கு ஆளாக்குவார்கள்.

ஆசிரியர்கள், சில வேளை சில ஆதி திரா விடர்களை பதிவேட்டில் எழுதி வைப்பார்கள். ஆனால், பள்ளிக்கு வர விடுவதில்லை. ஆய்வாளர், ஆண்டு தணிக்கைக்கு வரும்போது, அப்பிள்ளை களை கொண்டு வந்து யாரும் தொடாமல் ஒரு மூலையில் உட்கார வைத்து அனுப்பி விடுவார்கள். பெரும்பாலான ஆய்வாளர்கள் அதற்கு உடந்தை யாக இருப்பார்கள்.

பார்ப்பனரால் விளைந்த கேடு!

கோவைக்கு அருகிலுள்ள சிங்காநல்லூரிலும், இருங்கூரிலும் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளை களை 1930ஆம் ஆண்டு தொடக்கம் வரையில் சேர்க்காமல் இருந்தார்கள். பிறகு, கோவை சமூகத் தொண்டு சங்கத்தாரின் தலையீட்டால், சில பிள்ளைகள் சேர்ந்தார்கள். பார்ப்பனர்கள், உள்ளூர் பார்ப்பனரல்லாத காவல்துறை சப்-இன்ஸ் பெக்டரை வசப்படுத்திக் கொண்டு, பார்ப்பனத் தெரு வழியே பிள்ளைகள் போகக் கூடாதென்று விரட்டினார்கள். திரு. ஆர்.கே.சண்முகம் எம்.எல்.ஏ., சிங்கா நல்லூர் சென்று சப்-இன்ஸ்பெக்டரிடம் பேசினார். பலனில்லை, கோவை டெப்டி சூப்பிரன் டெண்டை அழைத்து வந்து ஆணையிடச் செய்தார். இருப் பினும் பழமை தொல்லை கொடுத்தது.

திரு.ஆர்.கே. சண்முகம் கட்டி வந்த நூற்பாலை கட்டுமான வேலைக்கு ஆள் போகாதபடி கட்டு திட்டம் செய்தார்கள். மீண்டும் ஆர்.கே.சண்முகம் சிங்காநல்லூருக்கு வந்தார். பார்ப்பனத் தெருவில் தீண்டப்படாதவர்கள் நடந்ததற்காகச் செய்யப்படும் கட்டுப்பாட்டால் நீங்கள் கூலி இழந்து பட்டினி கிடக்கப் போகிறீர்களே ஒழிய, எந்தப் பார்ப்பன னாவது தன் வேலையை விட்டு விட்டு சும்மாயிருக்க போகி றானா? என்று ஆர்.கே. சண்முகம் கேட்டார். அப்புறம் பார்ப்பனரல்லாதாருக்குத் தெளிவு ஏற்பட்டது; வேலைக்கு வந்தார்கள்.

தொடக்கப்பள்ளியில் ஆதி திராவிடர்களை சேர்ப்பதற்கு இத்தனைப்பாடு! இந்திய சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கே.சண்முகமே தலையிட்டு சேர்க்க வேண்டிய நிலை.

நீதிக்கட்சியின் குரல்

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நசுக்கப்பட்டவர்களுக்கும் முதலில் குரல் கொடுத் தது, நீதிக் கட்சியாகும்.

அக்கட்சித் தலைவர்கள், இவரைத் தொடலாம், அவரை தொடக்கூடாது என்னும் மனப்பான்மையில் இருந்து விடுபடத் தொடங்கிய முன்னோடிகள் ஆவார்கள்.

உயர்திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் தீட்டிய புரட்சியாளர் பெரியார் என்ற நூலிலிருந்து, பக்கம் 53-55

தமிழ் ஓவியா said...

1939ஆம் ஆண்டிலேயே...
எழுத்துரு அளவு
ஈழத் தமிழர் பிரச்சினை - இன்று - நேற்றல்ல, 1939ஆம் ஆண்டிலேயே பற்றி கழகம் அக்கறை செலுத்தியுள்ளது. இதோ ஆதாரம்:

தீர்மானத்தை இதே படிக்கிறேன்:

ஈழத் தமிழர் இன்னல்

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகக் கமிட்டிக் கூட்டம் 10-8-1939 அன்று ஈரோட்டில் பெரியார் மாளிகையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத் தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப் படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.ப.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர்களை இலங்கைக்குச் சென்று அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை, 11.8.1939

தமிழ் ஓவியா said...

மாநிலமும் மத்தியும்!
எழுத்துரு அளவு
தென்னாட்டு நகர சபைகள் வடக்கே இருந்து வருபவர்களுக்கெல்லாம் வரவேற்பு வாசித்தளிக்கின்றது. ஆனால் வடநாட்டார் அப்படிச் செய்வதில்லை. இரண்டொரு தென் னாட்டுத் தலைவர்களுக்குத்தான் அங்கே நகர சபை மரியாதை கொடுக்கிறது. மத்திய சர்க்காரி டமிருந்து மாநிலங்களுக்கு அதிகாரம் பரவ லாகக்கப்பட வேண்டும்.

இந்திய கூட்டாட்சி என்று சொல்லப்பட் டாலும் நடைமுறையில் மாநிலங்களுக்கு மத்திய சர்க்கார் அனுப்பும் தாக்கீதுகளைப் பார்க்கும் போது மத்திய அரசு ஏக அரசாகவே இருந்து வருகிறது.

- சர் ஏ.இராமசாமி (முதலியார்) மே மாதம் 1959ஆம் ஆண்டு சேலம் நகரசபை வரவேற்பில் பேசியது.

தமிழ் ஓவியா said...

கிறிஸ்து மதமும் பணச் செலவும்

அமெரிக்க சர்வ கலாசாலையொன்றில் பேராசிரியராக திகழும் இந்திய தோழர் டாக்டர் சுதந்திரபோஸ் பிரபுத்த பாரத என்ற பத்திரிகையில், கீழ் நாட்டில் கிறிஸ்துவ பாதிரிகள் செய்யும் வேலையை பற்றி எழுதியுள்ள குறிப்பின் சாராம்சம் வருமாறு:-

அமெரிக்கா யுனைடெட் ஸ்டேட்ஸ் பிராட்டஸ்டான்ட் சர்ச்சானது வெளிநாடு களில் தன் மதத்தை பரப்புவதற்காக மதப் பாதிரிகளை அனுப்பி வைக்கின்ற செலவு 4 கோடி டாலர்கள் ஆகின்றது. அதாவது சுமார் 12 கோடி ரூபாய்களாகும்.

ரிப்பப்ளிக் நாடான சைனாவில் புராடஸ்டான்ட் மதத்தைச் சார்ந்தவர்களில் 120 பிரிவுகளுக்குமேல் இருக்கின்றார்கள். இதுவரையில் அந்த நாட்டில் மாத்திரம் அரை லட்சம் கோடி டாலர்கள் செலவு செய்திருக்கிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன்பு வரையிலும் சைனா நாட்டில் உள்ள 700 நகரங்களில் 8000 பிராட்டஸ் டான்ட் மிஷினரிகள் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றைய தினமோ 5000 மிஷினரிகள்தான் 400 நகரங்களில் மாத்திரம் வசித்து வருகிறார்கள். கத்தோலிக் கிறிஸ்துவ பாதிரி மிஷினரிகளோ, சில வருஷங்களுக்கு முன்பு 4000 பேர்கள் இருந்தவர்கள் இன்றைய தினம் 200, 300 மிஷினரிகளுக்கும் குறைவாகவே இருந்து வருகிறார்கள்.

அய்க்கிய அமெரிக்க நாட்டின் லுதர்ன் சர்ச் பொருளாளரான டாக்டர் கிளாரன்ஸ் இ.மில்லர் சமீபத்தில் தெரிவிக்கிறதாவது:-

ஒரு சைனாக்காரரை கிறிஸ்துவர் என்ற மதமாற்றத்திற்கு கொண்டு வருவதற்கு ரூ.1300 வீதம் செலவாகி வருகிறது. இந்த கணக்குப்படி இயேசு நாதரின் பெயரை சைனா நாட்டில் நிலை நிறுத்த வேண்டுமானால் 175 லட்சம் கோடி டாலர்கள் ஆக்க வேண்டும். இதிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை மதத் தின் பேரால் செலவு செய்யும். கிறிஸ்துவ மதமாகட்டும். அன்றி வேறு எந்த மதமாகட்டும் முன்னேறுவதற்கு வழியின்றி சிதைந்து வருவது ஏன் என்று மக்கள் ஆலோசித்து பார்ப்பார்களாக.

- 30.7.1933 குடிஅரசு

தமிழ் ஓவியா said...

சென்னை: ஈழம் என்ற வார்த்தையை டெசோ மாநாட்டில் பயன்படுத்த மத்திய வெளியுறவுத் துறை அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் நாளை நடக்கவிருக்கும் டெசோ மாநாட்டில், ஈழம் என்ற வார்த்தையைத் தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தார். முக்கிய நிர்வாகிகளும் பேசினர்.

இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தடை இல்லை என மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தமிழ் ஓவியா said...

ஆவணி அவிட்டம் பூணூல் புதுப்பித்தலாம்!

ஆரியர் உருவாக்கிய பொருளற்ற மூட விழாக்களில் பூணூல் விழா குறிப்பிடத்தக்கவொன்று பார்ப்பான் வாழ்வின் நான்கு கட்டங்களில் முதன்மையான பிரமச்சரியத்திற்குத் தொடர்புடையது இது.

திருமணமாகாத மாணவர் பருவத்தில் பார்ப்பன இளைஞன் வேதங்களை முழுமையாகக் கற்றுக் கொள்ளுவதற்கெனத் தன் குருவுடனேயே தங்கி வாழக் கடமைப்பட்டவன்.

அவன் கருவான காலத்திலிருந்து ஆசானிடம் கற்று முடித்துத் திரு மணம் பண்ணிக் கொள்ளும் வரை யிலான பிரமச்சரியக் கட்டத்தில், அவனின் பெற்றோரிடமிருந்து அவன் மீது படியும் பாவக் கறையினைக் கழுவிக் கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட 12 தூய்மைப்படுத்தும் சடங்குகள் வற்புறுத்தப்படுகின்றன.

கர்ப்பதானம், புண்சவனம், சீமந்தோநயனம், ஜாத கர்மம், நாமகரணம், நிஷ்க்கரணம், அன்னப்ராசனம், சுத கர்மம், உபநயனம், சமாவர்த்தனம், கேசந்தம், விவாஹம்.

இவற்றுள் சட்டக் கட்டாயமாகக் கருதப்படும் முகாமையான இரண்டு சடங்குகள் சுதகர்மமும் உபநயனமும் ஆகும். இவ்விரண்டிலும் ஒரு சிறு குடுமியை விட்டு வைத்து, தலையில் நடுவட்ட மழிப்பு நிகழ்த்தும் சுதகர்மத்திற்கும் மேலாக உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு மதிக்கப்படுகிறது. பூணூல் அணியும் முன்பு வரை அவன் சூத்திரத் தன்மையுடன் இருப்பதாயும், அணிந்தவுடன் அவன் இரண்டாம் முறையாகப் புதிய பிறப்பு எடுப்பதாயும் தத்துவம் கற் பிக்கப்படுகின்றது. இதை அச் சிறுவ னின் எட்டாம் அகவையிலேயே நடத்தி விடலாம்.

பருத்தி நூல்கள் மூன்றினை ஒன்றாகச் சுருள் செய்து மாலை வடிவ மாக்கிப் பார்ப்பனச் சிறு வனின் இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரையிலும் குறுக்கே அணிவிக்கப் படும் முப்புரி நூலுக்கு யக்ஞோப விதா எனப் பெயர்.

இச்சடங்கின் தொடக்கத்தில் பார்ப்பனச் சிறுவன் சூரியனுக்கு எதிரே நின்று மும்முறை தீ வலம் வரவேண்டும். பிறகு குரு காயத்ரி மந்திரத்தைப் பத்து முறை ஓதி யக்ஞோபவிதா முப்புரிக்குத் தெய்வத் தன்மை ஏற்றிவிட்டு, அதனைப் பையனை மாட்டிக் கொள்ளச் செய்வார். பூணூலணிந்த புதிய பிறவி, தனக்கும் தன் ஆசானுக்கும் தேவையான உணவுக்கென்று விழா வில் வந்து குழுமியுள்ள கூட்டத்தினரிடம் பிச்சை கேட்டுக் கையேந்து வான்.

பின்னர் சாவித்ரி ஜெபம் பண்ணுமாறு குரு அவனைப் பயிற்றுவித்து, வேதமோதி சமயச் சடங்குகளை நிறைவேற்றும் தகுதியை அவனுக்கு உண்டாக்குவார். இறுதியாக அவனுடைய இடையில் மூஞ்சைப் புல்லாகிய அரைஞாண் கட்டப்பட்டு பூணூலணியும் உபநயனச் சடங்கு முடிக்கப் பெறுகிறது.

காலப் போக்கில் க்ஷத்திரியரும், வைசியரும் தங்களை முப்புரிநூல் அணியும் சடங்கிற்கு உட்படுத்திக் கொண்டு இரு பிறப்பாளர் பட்டியலில் இணைந்து கொண்டாலும், இன்று நடைமுறையில் இவ்விரு வர்ணத்தாரும் சூத்திரராகவே பாவிக் கப்படுகின்றனர். எனவே இவர்களின் பூணூல் மாட்டும் செயலுக்குச் சிறப்பேதும் கிடையாது.

பார்ப்பனர்களைப் பார்த்து ஆசாரியாரும், பத்தரும், செட்டியாரும் கூடப் பூணூல் போட்டுக் கொள்வதுண்டு. விசுவ பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால் சாத்திரத்தில் இதற்கு இடம் உண்டா என்றால் அதுதான் இல்லை.

இந்த மாதம் 24 ஆம் தேதி (ஆவணி 8) பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறார்களாம். இட ஒதுக்கீட்டில் இன்னும் ஜாதி ஏன்? ஜாதி வாரி கணக்கெடுப்பு கூடாது என்கிற பார்ப்பனர்கள்தான் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புதுப்பித்துக் கொள்கின்றனர். 20-8-2010

தமிழ் ஓவியா said...

உலகின் உச்சிக்கே சென்ற சிறப்பு!

டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு வகையான விமர்சனங்கள் - எதிர் விமர்சனங்கள் ஊடகங்களை ஆக்ரமித்துக் கொண்டன.

மாநாடு நடக்குமா? அப்படியே நடந்தாலும் அம் மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா? என்ற வினாக் கணைகளும் முன் வைக்கப்பட்டன.

இவை எல்லாம் முறியடிக்கப்பட்டு, மாநாட்டுக் கான அழைப்பிதழ்களும், விளம்பரங்களும் வெளிவந்து, மாநாட்டுக்கான பந்தல் போன்ற அடிப்படைப் பணிகள் நிறைவுற்று, தமிழ்நாடு, இந்திய நாடு என்கிற எல்லைகளையும் கடந்து பெரும் எதிர்பார்ப்பு என்கிற கட்டத்தை அடைந்த நிலையில்,

தமிழ்நாட்டில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க. அரசு - அரசு என்ற நிலைப்பாட்டையும் தாண்டி, காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் உள்நோக்கத் துடனும், இந்த மாநாடு நடைபெற்றால் அதன் பலன் அரசியலில் தமக்கு எதிராக உள்ளவர் களுக்குப் போய்விடுமோ என்ற அச்சத்துடன், மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி இல்லை என்கிற சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலில் இறங்கியது வேதனைக்குரியது.

நீதிமன்றம் வரை செல்லவேண்டிய ஒரு நிலை - மாநாடு நடைபெற்ற நேரத்திற்கு மூன்று மணிக்கு முன்பு வரைகூட எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்ற கேள்விக்குறி செங்குத்தாக மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.

இது - இதற்கு முன்பு எங்கும் கேள்விப்படாத ஒரு நிலையாகும். என்றாலும் இறுதி வெற்றி யாருக்கு? இறுதியாகச் சிரிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு - நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும்தான் என்ற விடை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து விட்டது.

அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவுகளைத் தட்டினார்கள் என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெப்பம் எத்தனை டிகிரி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இல்லை, இல்லை - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திட லிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றத்தின் ஆணையை ஏற்று மூன்றே மணி நேரத்தில் மாநாட்டுப் பந்தலில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.

தோழர்களிடையே ஒரு வெறி உணர்வுடன் கூடிய உற்சாகம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் சக்திகள் - அதிகாரப் பீடங்கள், தம் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஓர் ஆரோக்கியமான திசையில் தம் பயணத்தைத் தொடங்கினால் கூட நல்லதுதான்.

மாநாடு திட்டமிட்டபடி அதே இடத்தில் நடந்தது என்பது உட்பட மாநாட்டின் ஒவ்வொரு நட வடிக்கையும் கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாக, கண்ணியமான ஒளியுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு, நீதிமன்றத்தின் கட்டளை களையும் இன்னொரு பக்கத்தில் கவனத்தில் கொண்டு, எடுத்துக்காட்டான மாநாடாக நடை பெற்றதை வரலாறு என்றென்றும் சிறப்பான வகையில் பாடம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்று காலை நடைபெற்ற ஆய்வு அரங்கம், மாலையில் நடைபெற்ற மாநாடு - இவற்றில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியையும், மாண்பினையும் உலகத்தின் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்றுவிட்டன என்று சுருக்கமான சொற்களில் சொல்லலாம். தடைகளையெல்லாம் தாண்டி பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்தது சாதாரணமானது அல்ல - மக்களின் இந்த மனக் கண்ணாடியைப் பார்த்தாவது மனமாற்றம் அடைய வேண்டியவர்கள் மனமாற்றம் அடைவார்களா? எங்கே பார்ப்போம்! 13-8-2012

தமிழ் ஓவியா said...

எங்கள் இயக்கத் தோழர்களுக்கு ஈடு இணை யார்?இலட்சியத்தையே சுவாசக் காற்றாகக் கொண்ட கருஞ்சட்டைத் தோழர்களுக்கு நிகர் யார்?

தான் வாழ்கிற போதும் கொள்கைக் கோட்பாடுகளையே கால்களாகக் கொண்டு நடக்கின்றனர். தனது மரணத்திற்குப் பிறகும் தாம் சுவாசித்த கொள்கைக் காற்றில் எந்த வித மாசும், மாற்றமும் வந்து சேர்ந்துவிடக் கூடாது என்னும் தன்மையில் மரணசாசனம் எழுதி வைத்து விட்டல்லவா மறைகின்றனர்?

இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே! சத்தை இழந்து செத்துப் போகும் இந்த உடல் மண்ணுக் கும் நெருப்புக்கும் இரையாவதை விட ஏன் பிறருக்குப் பயன்படக்கூடாது என்று சிந்திக்க எத்தனைப் பேர்களால் முடியும்?

மரணம் என்றாலே பெரும் அச்சத்தில் உறையும் மக்கள் மத்தியிலே தந்தை பெரியார் இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துப் பக்குவப்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் தனது உடலை மருத்துவக் கல்லூரி களில் ஒப்படைக்க முன்வர ஆரம்பித்து விட்டார்கள்.

மருத்துவம் பயிலும் இரு பால் மாணவர் களுக்குப் பயன்படவேண்டும் என்று கருது கிறார்கள். உயிரோடு இருக்கும்போதே சம்பந்தப் பட்ட மருத்துவ மனைகளில் பதிவு செய்தும் வைத்துள்ளார்கள்.

இதோ ஒரு பெரியார் பெருந்தொண்டர்: கரூர் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மானமிகு கு.முருகேசன் அவர்கள் (வயது 87), அவருடைய பிறந்த நாள் கடந்த பத்தாம் தேதி.

அதனை ஒரு விழாவாகக் கூட எடுத்துக் கொள்ள வில்லை. அந்த நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா?

எண்ணிப் பார்த்தால் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன! தனது மரணத்துக்குப் பின் தம் உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு கரூர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க. இராசசேகரனிடம் அளித்தார்.

அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? தான் மட்டுமா? தன் குடும்பமே அந்தக் கொள்கைத் தடத்தில் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை பேர்களால் சாத்தியப்படக்கூடியது? தன் இணையர் மருதாம்பாள், மகன் சித்தார்த்தன் ஆகியோரும் தங்கள் உடல்களை தங்கள் மரணத்துக்குப் பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப் படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித் தனர்.

சிறிய அளவில் வீட்டு அளவில் எளிமையான நிகழ்ச்சியாக அமைந்தது இது. அவருக்குக் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பற்றி எழுத்தாளர் சோலை அவர்களால் எழுதப்பட்ட வீரமணி - ஒரு விமர்சனம் என்ற நூலை மாவட் டக் கழகத் தலைவர் அளித்துப் பாராட்டினார்.

இதற்கு ஒத்துழைப்புத் தந்த முருகேசனார் குடும்பத்தைச் சேர்ந்த மகள் மலர்க்கொடி, மகன் சித்தார்த்தன், அழகிரி, இணையர் மருதாம்பாள் ஆகியோருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதன் மகிழ்வாக பெரியார் பெருந்தொண்டர் முருகேசனார் விடுதலை வளர்ச்சிக்கு ரூ நூறு நன்கொடையையும் அளித்தார்.

இப்பொழுது சொல்லுங்கள். திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஈடும் இணையும் இந்தத் தரணி யிலும் உண்டோ?

தமிழ் ஓவியா said...

டவுட் தனபாலு

லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் : இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, வட மாநிலத்தவர்கள் அறிந்துகொள்ளவே இல்லை. ஈழத்தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்; பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர்.

எனவே, ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வடமாநிலம் முழுவதும் கூட்டங்களை டெசோ அமைப்பு நடத்த வேண்டும்.

டவுன் தனபாலு: சுத்தம்...! உள்ளூர் ராயப்பேட்டையில, ஒரு மாநாட்டை நடத்தி முடிக்கிறதுக்குள்ள தி.மு.க.வினருக்கு நாக்கு தள்ளி போயிடுச்சு... இதுல, வடமாநிலங்களுக்கும் வந்து, உங்க வீரத்தைக் காட்டுங்க கைப்புள்ள...ன்னு, வெத்தலை, பாக்கு வைக்குறீங்களே...!

தினமலர்: 14.8.2012

யாருக்கு நாக்குத் தள்ளிப் போச்சு என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த விஷயம்! என்னென்ன ஜகதலப்பிரதாபம் எல்லாம் செய்து பார்த்தும் கடைசியில் மூக்குடைபட்டு பார்ப்பனக் கூட்டத்தின் வயிறு வெடிச்சுப் போச்சே - என்ன பதில்?