Search This Blog

26.8.12

பிறந்த குழந்தை பேசியதா?உண்மைத் தன்மை என்ன?

கேழ்வரகில் நெய் வடிகிறதா?

கேழ்வரகில் நெய் வடிகிறது என்று ஒருவன் சொன்னால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று? என்ற பழமொழி நம் நாட்டில் உண்டு. இதே செய்தியை மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் சொன்னால் கேட்பார் யாராக இருந்தாலும் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொண்டு ஆமாம், ஆமாம்; கேழ்வரகில் நெய் வடியத்தான் செய்யும் என்று சொல்லிக் கொண்டு தோப்புக் கரணமும் போடுவார்கள்.மாட்டுச்சாணி, மாட்டு மூத்திரம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய அய்ந்தினையும் ஒரு கலக்குக் கலக்கி, பஞ்ச கவ்யம் என்று கொடுத்தால் தட்சணை கொடுத்தல்லவா பக்தி மயமாகி முகம் சுளிக்காமல் குடிக்கின்றனர்?

பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது வார்த்தை அழகுக்காக அல்ல; அர்த்தம் நிறைந்த யதார்த்தம் ஆகும்.

கடவுள் நம்பிக்கை நாளும் குறைந்து வரும் நிலையில், அதனைத் தூக்கி நிறுத்த இடைஇடையே சில மூடத்தனங்களைக் கட்டி விடுவார்கள்.

பிள்ளையார் பால் குடித்தார் என்ற புரளியைக் கிளப்பி விடவில்லையா ஆர்.எஸ்.எஸ்.கும்பல்?

பிள்ளையார் கொழுக்கட்டை தின்றால் பத்து லட்சம் ரூபாய் தரத் தயார் என்று திராவிடர் கழகத் தலைவர் சென்னை - அண்ணாசாலையில் டாம் டாம் போட்டுச் சொல்லவில்லையா?

சில ஆண்டுகளுக்கு முன் சிலுவைக் குழந்தை என்ற ஒரு புரளி கிளப்பப்பட்டது. மார்பில் இருந்த மச்சத்தை மய்யப்படுத்தி மக்களை மடையர் களாக்கினார்கள்.

தலையில்லா முண்டம் டீ குடித்தது என்ற தலை நகரமான சென்னையிலேயே கிளப்பி விட் டார்கள். செய்தியாளர்கள் காவல்துறை ஆணையர் சிறீபால் அய்.பி.எஸ். அவர்களை இதுபற்றிக் கேட்டபோது யாராவது முண்டம்தான் இதைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் பதில் கூறினாரே!

இப்பொழுது திருப்பூர், ஈரோடு பகுதிகளில் ஒரு வதந்தியைக் கிளப்பியுள்ளனர். திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உடனே பேசியதாகக் கட்டிவிட்ட கரடி அந்த வட்டாரம் முழுவதையும் கிடுகிடுக்க வைத்துள்ளது.

பிறந்த குழந்தை பேசியதால் மற்ற குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் பிரச்சாரம் செய்யப் பட்டது.

பிள்ளைகளைப் பெற்ற மகராசிகள் என்ன செய்தார்கள்? வீட்டு வாசல்களில் தேங்காய்களை உடைத்தனராம். குழந்தைகளின் தலையைச் சுற்றியும் தேங்காய் உடைத்தனராம். (தேங்காய் வியாபாரியின் வேலையாக இருக்குமோ!)


இதன் உண்மைத் தன்மை என்ன? திருப்பூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மதி வாணன் இதுகுறித்து என்ன சொன்னார்?

மருத்துவமனையில் பிறந்த குழந்தை பேசிய தாகச் சொல்வது உண்மையல்ல! ஒரு குழந்தை பிறந்தவுடன் சரளமாகப் பேச நூறு சதவீத வாய்ப்பு இல்லை. இது  முழுக்க முழுக்க வதந்தியாகும். இதை யாரும் நம்பிப் பயப்பட வேண்டாம் என்று கறாராகச் சொல்லி விட்டாரே!

இதற்கு என்ன பதில்? காவல்துறையில் உள்ள உளவுப் பிரிவினர், இந்த வதந்தியைக் கிளப்பி விட்ட விஷமிகளைக் கண்டுபிடித்து சட்டப்படி தண்டிக்க வேண்டாமா? அவ்வாறு செய்யாவிட்டால் இது போன்ற வதந்திகள் கிளப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஊடகங்கள் இத்தகைய பொய்ச் சேதிகளை தோலுரித்துக் காட்ட வேண்டாமா? மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கடமை ஏடுகளுக்குக் கிடையாதா?

ஊடகங்கள் மூடநம்பிக்கைகளுக்கு இறக்கை கட்டி பறக்க விடாமல் இருந்தால் போதாதா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அறிவை நாசப்படுத்துபவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் நினைவிற்கு வருகிறது. மக்களை மீட்பது பெரியாரியலே! மறக்க வேண்டாம்!


               ------------------"விடுதலை” தலையங்கம் 25-8-2012

16 comments:

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் : அய்.நா. மன்றத்தில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் வழங்க உள்ளனர் தி.மு.க. தலைவர் கலைஞர் அறிவிப்பு


அம்பத்தூரில் நடைபெற்ற `டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். (24.8.2012)

சென்னை, ஆக.25-ஈழத்தமிழர்களுக்கு உரிமை கள் வழங்கக் கோரி டெசோ மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை அய்.நா. மன்றத்தில் மு.க. ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் நேரில் வழங்க உள்ளார்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தெரிவித்தார்.

அம்பத்தூரில் 24.8.2012 அன்று நடைபெற்ற `டெசோ மாநாட்டுத் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-

ஈழத்திலே இருக்கின்ற அவல நிலை, ஈழ மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள், அவர்கள் விடுகின்ற கண்ணீர், அவர்கள் ஏற்கெனவே சிந்திய ரத்தம், இவை களையெல்லாம் எண்ணிப் பார்த்து, நடந்தது போக, இனி நடக்க வேண்டியதாவது நல்லதாக நடக்கட்டும், அதற்கு நம்மால் ஆனதைச் செய்வோம் என்று தமிழகம் மாத்திரமல்ல, உலக நாடுகளிலே யார் யாருக்கு மனித உள்ளம் இருக் கிறதோ, அவர்களெல்லாம் அந்தச் சிந்தனையிலே இன்றைக்கு இருக்கிறார்கள்.

அந்தச் சிந்தனையின் விளைவை நல்ல அறுவடையாகச் செய்து, ஏங்கித் தவிக்கின்ற தமிழ் ஈழ மக்களுக்கு நன்மைகளைச் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தோடு, கடந்த 12 ஆம் தேதியன்று சென்னை மாநகரத்திலே டெசோ சார்பில் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு என்ற தலைப்பிலே நடத் தினோம். அதைப்போலத்தான் 1956-ஆம் ஆண்டு சிதம்பரத்திலே நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில் அண்ணாவின் ஆணைக்கிணங்க எந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்தேனோ, அந்த தமிழ் ஈழ உரிமைக்கான தீர்மானத்தை கொஞ்சம் விரிவு படுத்தி, இன்றுள்ள நிலைமைக்கு ஏற்ப மாற்றி அமைத்து, அவைகளை நிறைவேற்றுகின்ற ஒரு மாநாட்டை நடத்துகிறோம் என்றால், அதற்கு ஒரு காலத்திலே தமிழர்களுக்காக - ஈழத் தமிழர் களுக்காக, இலங்கைத் தமிழர்களுக்காக குரல் எழுப்பி வந்தவர்கள், இன்றைக்கும்கூட வேறு இடத்திலே இருந்து குரல் எழுப்புபவர்கள், நாம் எழுப்புகின்ற குரலோடு அவர்களும் இணைந்து குரல் எழுப்ப வேண்டுமேயல்லாமல், அதற்கு எதிர் குரல் எழுப்பினால் என்ன பொருள்?

நாதஸ்வரக் கச்சேரியிலேகூட, ஒரு வித்வான் நாதஸ்வரத்திலே ஒரு இசையை முழங்கும்போது, பக்கத்திலே இன்னொரு வித்வான் அவரோடு சேர்ந்து கச்சேரியிலே நாதஸ்வரம் வாசிக்க வந்த வித்வான் அவரும் அதற்கேற்றாற் போல் நாதஸ்வரம் வாசித்தால்தான் அந்தக் கச்சேரி களை கட்டும். என்னிடத்தில்தான் நாதஸ்வரம் இருக் கிறது என்று; மற்றொருவர் அவர் பாட்டிற்கு ஊதட்டும், நான் என் நாதஸ்வரத்தைப் பயன் படுத்தி என் வழியில் ஊதுகிறேன் என்று ஊதினால் கேட்க சகிக்காது. அது இசையாக இருக்காது. வசைக்கு உரியதாகத்தான் ஆகும்.



தமிழ் ஓவியா said...

மதுரை டெசோ மாநாடு

அதுபோல, தமிழர்களுக்கு, குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு வாழ்வாதாரங்களை வளப்படுத்திக் கொடுக்க வேண்டுமென்று நானும் சில நண்பர் களும் சேர்ந்து, நண்பர்கள் என்றுகூட சொல்ல மாட்டேன், மரியாதையாகச் சொல்கிறேன், வேறு சில தமிழ்நாட்டுத் தலைவர்களும் சேர்ந்து இதே ``டெசோ மாநாட்டை மதுரையிலே நடத்தினோம். மதுரையிலே நடத்திய டெசோ மாநாட்டிற்கும் இப்போது சென்னையிலே நடத்திய டெசோ மாநாட்டிற்கும் இடையிலே காலம் பல வருடங்கள் உருண்டிருக்கிறது என்றாலும்கூட, பெரிய வித்தி யாசம் ஒன்றும் இல்லை. அந்த மாநாட்டினுடைய குறிக்கோளும் ஈழத் தமிழர்களை வாழ வைக்க வேண்டும் என்பதுதான்.

தமிழ் ஓவியா said...

இங்கே நாம் அண்மையில் நடத்திய மாநாடும் ஈழத் தமிழர்களுக்காகத்தான், அவர்களுடைய வாழ்வுரிமை பாதுகாப்புக்குத்தான். ஆனால், அன் றைக்கு ஒன்றாகச் சேர்ந்து என்னோடு இருந்து அந்த தீர்மானத்தை வென்றெடுக்க பாடுபட்டவர்கள், பணியாற்றியவர்கள் இன்றைக்கு வேறு குடித்தனம் போய் விட்ட காரணத்தால் நான் ஈழத் தமிழர் களுக்காகப் பேசும்போது அவர்களின் சுருதி மாறிப் போயிருக்கிறது. அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

ஒற்றுமை இல்லை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன், ஈழத் தமிழன் இன்றைக்கு வெற்றி முகட்டிலே சென்று கொடி பறக்க விடாமல் போனதற்குக் காரணமே, அவர்களிடத்திலே ஒற்றுமை இல்லாததுதான். வீரம் இருந்தது. ஆற்றல் இருந்தது. புஜபல பராக்கிரமம் இருந்தது. அஞ்சாமை இருந்தது. யாரையும் பொருட் படுத்தாத அளவிற்கு பொருதடக்கை தோள் இருந் தது. எல்லாம் இருந்தும் கூட, இறுதியாக தமிழ் ஈழத் திலே அந்த போராட்டத்திலே ஈடுபட்ட தளபதிகள் மடிந்து போனார்கள், அல்லது கொல்லப் பட்டார்கள். ஏன்? அவர்களுக்குள்ளே ஒற்றுமை இல்லை.

நான் சொன்னேனே, ``டெசோ மாநாடு - அந்த டெசோ மாநாடு மதுரையிலே நடைபெற்ற போது, நானும் அன்றைய ஆந்திர முதலமைச்சராக இருந்த என்.டி.ராமாராவ் அவர்களும், வாஜ்பாய் அவர் களும், பகுகுணா அவர்களும் விடுதலைப் போரா ளிகளை யெல்லாம் மதுரையிலே கூட்டி வைத்து உங்களுக்கு என்ன குறை? ஏன் உங்களுக்குள்ளாக மோதிக் கொள்கிறீர்கள் என்று கேட்டபோது, அப்படி எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை, நாங் கள் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன் னார்கள்.

தமிழ் ஓவியா said...

நான்தான் அவர்களையெல்லாம் பார்த்து, என்னுடைய கையைப் பிடித்து சத்தியம் செய்து கொடுங்கள், ஒருவரையொருவர் விரோதித்து, நாங்கள் மோதிக் கொள்ளமாட்டோம், யாரையும் கொல்லமாட்டோம், ஒற்றுமையாக இருப்போம், எங்களுக்கு சிங்களவர்கள், சிங்கள அரசுதான் பகையே தவிர, எங்களுடைய போராட்டக் குழு விலே இருக்கின்ற நாங்கள் பல பெயர்களிலே இருந் தாலும்கூட, ஒற்றுமையாக இருப்போம், நாங்கள் ``டெலோ என்று இருக்கலாம், ``ஈ.பி.ஆர்.எல்.எப். என்று இருக்கலாம், நாங்கள் ``எல்.டி.டி.ஈ. என்று இருக்கலாம், நாங்கள் ஈராஸ் என்று இருக்கலாம். எந்தப் பெயரிலே இருந் தாலும் நாங்கள் ஒற்று மையாக இருப்போம் என்று சத்தியம் செய்து கொடுத்தார்கள்.

அந்த சத்தியத்தை அவர்கள் உறுதியாக கடைப் பிடித்து இருப்பார்களேயானால் இன்றைக்கு தமிழ் ஈழம் கிடைத்து இருக்கும் (பலத்த கைதட்டல்). தமிழ் ஈழத்தினுடைய கோட்டை முகப்பிலே நம்முடைய புலிக்கொடி பறந்து கொண்டிருக்கும். சேர, சோழ, பாண்டியர்களுடைய கொடி பறந்து கொண்டி ருக்கும். ஈழ நாட்டினுடைய உரிமைக்கொடி பறந்து கொண் டிருக்கும்.

தமிழ் ஓவியா said...

ஈழ நாடு பல மன்னர்களைப் பெற்றிருந்த வீர வரலாற்றுக்கு உரிய நாடு. அந்த நாட்டில் பூண் டற்றுப் போனது தமிழ் இனம் என்ற நிலைமைக்கு அது உள்ளாகியிருக்கிறதே அதற்குக் காரணம், இப்போதா வது நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். நம்மிடத்திலே ஒற்றுமை இல்லை, அதனால்தான்.

பாட்டி கதை சொல்ல வேண்டுமென்றாலும், ஒரு கூடையிலே சுள்ளிகளைக் கொண்டு வந்து கொட்டி, இவைகளையெல்லாம் உடைக்க முடியுமா, முறிக்க முடியுமா என்று கேட்டபோது, ஒவ்வொன்றாக எடுத்து ஒருவன் சுலபத்திலே முறித்தான். பிறகு பந்தயத்திற்கு வந்தவன் நாலைந்து சுள்ளிகளை ஒன்றாகக் கட்டி இப்பொழுது முடியுமா? என்று கேட்டான். இவன் முறித்துப் பார்த்தான். முடியவில்லை.

காரணம், அய்ந்தாறு சுள்ளிகளும் ஒன்றாகக் கட்டப்பட்டிருந்த கார ணத்தால் அதை முறிக்க முடியவில்லை. தனித் தனியாக இருக்கும் போது முறியக்கூடிய அந்தக் குச்சிகள், நாலைந்தை ஒன்றாகக் கட்டி முறிக்கச் சொன்னபோது முடியவில்லை என்றால் என்ன காரணம்? ஒற்றுமையாக இருந்து, வலிவாக இருந்தால் எவனும் நம்மை நெருங்க முடியாது (பலத்த கைதட்டல்).

கட்டுப்பாடு குறித்து தந்தை பெரியார் சொன்ன கருத்து

நான் இதை ஈழத்திற்கு மாத்திரம் சொல்ல வில்லை. இங்கே உள்ள நமது கழகத் தோழர் களுக்கும் சொல்கின்றேன். நம்முடைய இயக்கத் திலேகூட எந்தளவுக்கு எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஒற்றுமையாக இருக்கிறோமோ, அந்த அளவிற்கு நாமெல்லாம் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்முடைய லட்சியம் நிறைவேறும். எந்த அளவிற்கு உறுதியோடு ஒற்றுமை யோடு பணி யாற்றுகிறோமோ, அதுவரையில் நம்மை யாராலும் அசைக்க முடியாது. அதைத்தான் பெரியார் அடிக்கடி சொல்வார். திராவிட முன்னேற்றக் கழகத் திலே கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என் றெல்லாம் சொல்லி வருகிறீர்கள். கடமை, கண்ணி யத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
கட்டுப்பாடுதான் மிகவும் முக்கியம். கட்டுப்பாடு மாத்திரம் திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருந்தால், அதை நீங்கள் உறுதியாகக் கடைப் பிடித்தால் உங்களை எவனும் ஜெயிக்க முடியாது என்று (பலத்த கைதட்டல்) பெரியார் சொல் வார். அதைப்போலத்தான், தமிழ் ஈழத்திலே உள்ள போராளித் தோழர்கள், போராளிகள், போராளித் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்றைக்கு தமிழ் ஈழத்திலே தமிழ் ஈழ வெற்றிக் கொடி பறந்து கொண்டிருக்கும். அதை நாம் பார்த்து மகிழ்ந்து இருக்கலாம். இன்றைக்கு அம்பத்தூரில் நடைபெறு கின்ற கூட்டம், தமிழ் ஈழம் பெற்றோம் என்பதற்கான வெற்றிக் கூட்டமாக இருந்திருக்கும்.

அதை நாம் தவற விட்டுவிட்டதற்குக் காரணம், கட்டுப்பாடு இல்லாமல், ஒருவரையொருவர் பகைத்துக் கொண்டு, இவர் இருந்தால் நாம் தலைவனாக முடியாது என்கின்ற உணர்வோடு, அவரை ஒழித்து விட்டால்தான் நாம் தலைவனாக முடியும் என்று எண்ணிய காரணத்தால் ஏற்பட்ட விளைவுகள்தான் இன்றைக்கு தமிழ் ஈழத்திலே தவித்துக் கொண்டிருக்கின்ற என்னரும் தமிழ் மக்களை, தாய்மார்களை, குழந்தைச் செல்வங்களை பார்த்துப் பார்த்து, பார்த்து நாம் கண்ணீர் விட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தேவைதானா? சேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நாடு! பக்கத் திலே இருக்கிறது; முத்துக்குளிக்கும் கடல்கள் இலங்கையைச் சுற்றி இருக்கிறது. ஒரு காலத்திலே ஈழ நாட்டுக்கு அமைந்த துறைமுகத்தில் என்னென்ன பொருள்கள் எல்லாம் குவிந்தன என்பதை இன்று நேற்றல்ல, பல நூற் றாண்டு களுக்கு முன்பு எழுதப்பட்ட பட்டினப் பாலை என்கின்ற கவிதையில் புலவன் சொல் கின்றான், ``நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் எனத் தொடங்கி ஈழத்து உணவும், காழகத் தாக்கமும்

தமிழ் ஓவியா said...

என்று ஈழத்தினுடைய உணவு தமிழ்நாட்டிற்கு வந்தது. புரவி - குதிரை தமிழ்நாட்டிற்கு வந்தது. இவைகளெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருவதற்காக காவிரி பூம்பட்டினத் துறைமுகத்திலே இவை களெல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன என்று தமிழ்ப் புலவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய கவிதை இது.
ஈழம் பெயரில் மாநாடு

இன்றைக்கும் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்பொழுது கூட மத்தியிலே உள்ள ஒரு அதிகாரி, தமிழ் ஈழ மாநாட்டிற்கு நாம் ஆயத்தங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்று கேள்விப்பட்டு, பிரதமருக்குத் தெரியாமல், அங்குள்ள விஷயம் தெரிந்த அமைச்சர்களுக்குத் தெரியாமல் ஒரு அதிகாரி ``நாங்கள் ஈழத்தை ஒத்துக் கொள்ள முடியாது என்று முதலிலே அறிவித்தார். அப்படி அறிவித்த அந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் எனக்கு அடங்காத கோபம். உடனே தம்பி டி.ஆர்.பாலுவை அழைத்து, ``என்னய்யா இது, `ஈழம் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறாரே, யார் அவர்? என்று கேட்டவுடன், பாலு டெல்லிக்கு தொடர்பு கொண்டு நான் சொன்னதைச் சொல்லி, ஈழம் புதிய வார்த்தை ஒன்றும் அல்ல, ஈழத்து உணவும், காழகத் தாக்கமும் என்று சங்க இலக்கியத்திலே இருக் கிறது, பட்டினப்பாலையிலே இருக்கிறது, இதுகூடத் தெரியவில்லையா உங்களுக்கு என்று கேட்டபிறகுதான் அவர்கள் மனம் திருந்தி ஒத்துக்கொண்டு, ஈழம் பெயரில் மாநாட்டை நடத்தலாம், எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொன்னார்கள்.

மாநாட்டிற்கு அனுமதி கிடையாதென்று நீதிமன்றத்திற்குச் சென்ற அ.தி.மு.க. அரசு

வடக்கே இருக்கிற மத்திய அரசு, டெல்லி அரசுகூட ஈழ மாநாடு நடத்துவதைப் பற்றி எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லி அனுமதி அளித்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டி லே உள்ள சர்க்கார் - ஈழ மாநாடு நடத்துவதை நாங்கள் ஏற்க முடியாது என்று; தான் நேரடியாகச் சொன்னால் நன்றாக இருக்காது, ஊர் கேலி பேசும் என்ற எண்ணத்தால், காவல்துறை அதிகாரியை விட்டு ஈழ மகாநாட்டிற்கு தமிழ் ஈழ மகாநாட்டிற்கு தடை விதித்தார்கள்.

தமிழ் ஓவியா said...

அதுவும் தன்னுடைய போலீசை நேரடியாக அனுப்பினால் கெட்ட பெயர் வந்து விடும் என்று பயந்து யாரோ ஒரு அ.தி.மு.க. ஆதரவாளரைப் பிடித்து - ``உன் பெயரால் தடை வாங்கு என்று சொல்லி, உயர் நீதிமன்றத்திலே போய் அவர் தடை கேட்கிறார். இந்த மாநாட்டிற்கு அனுமதி கிடையாது என்று காவல்துறை சொல் கிறது. எந்த மாநாட்டிற்கு?

மூவேந்தர்கள் ஆண்ட பரம்பரை

அந்தப் பரம்பரையிலே வந்த நாம் நடத்துகின்ற அந்த மாநாட்டிற்கு அனுமதி கிடையாது என்று - நான் இழிவாகச் சொல்லமாட்டேன் - இந்த விவரங்களே புரியாத, இந்த இலக்கியங்களையே படிக்காத ஒரு காவல்துறை அதிகாரி உங்களுக்கு அனுமதி கிடையாது என்று சொல்கிறார். நாம் அதை எதிர்த்து வாதாடு கிறோம். காலையிலே பத்து மணிக்கு வாதாடத் தொடங் கினோம். பனிரெண்டு மணி வரையிலே நீதிமன்றத்திலே வாதாடினோம். நம்முடைய வழக்கறிஞர்கள் வில்சன் போன்ற வர்கள், சண்முகசுந்தரம் போன்றவர்கள் எல்லாம் வாதாடினார்கள். வாதாடிய பிறகு அனுமதி கிடைத்தது. எப்படி? நேரடியாக மாநாடு நடத்திக் கொள்ளுங்கள் என்றல்ல.

பல நிபந்தனைகளைப் போட்டு அனுமதி கிடைத்தது. அதற்குப் பிறகு நான் சொன்னேன், சரி நாம் பந்தல் அமைத்து, கொட்டகைப் போட்டு நடத்துகின்ற மாநாட் டிற்குத்தானே அனுமதி கிடையாது என்கிறார் கள், பரவாயில்லை. வெளிநாட்டிலே இருந்து அறிஞர்கள், விற்பன் னர்கள், தமிழ்க் காவலர்கள் எல்லாம் வந்து விட்டார்கள். மலேசியா, சிங்கப்பூரிலிருந்து ஆர்வ முள்ள தமிழர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் இலங்கையிலே இருந்துகூட பயந்தவர்கள் போக மீதி நண்பர்களெல்லாம் வந்து விட்டார்கள்.

ஆகவே, மாநாட்டை நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது உயர்நீதி மன்றத்திலே இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று பிற்பகல் 2 மணிக்கு அனுமதி அளித்தார்கள். மகாநாடு மாலை 4 மணிக்கு; இரண்டு மணி வரையிலே அனுமதி கிடைக்கவில்லை. அதுவரையிலே நாங்கள் வேறு இடத் திலே அனுமதிக்காகக் காத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறோம்.

பிறகு அனுமதி கிடைத்ததும் நான் சொல்கிறேன், அந்த பரபரப்பு, அந்த எழுச்சி முதலிலே அனுமதிக்கப்பட்ட இடத்திலே இருந்து நம்முடைய அண்ணா அறிவாலயத்திலே இருந்து அனுமதிக்கப் பட்ட இடத்திற்கு - உயர்நீதிமன்றம் நடத்தலாம் என்று ஒப்புக்கொண்ட இடத்திற்கு மாற்றிய பிறகு, அந்த ஒரு மணி நேரத்திலே ஆயிரக்கணக்கானவர்கள் வந்த வேகம் இருக்கிறதே (பலத்த கைதட்டல்), அவர்கள் காட்டிய உற்சாகம் இருக்கிறதே அது கண் கொள்ளாக் காட்சி. அந்த கண்கொள்ளாக் காட் சியை உருவாக்கித் தந்தவர்கள் யார்? தமிழகத்திலே இருந்த துரைத்தனத்தார். தமிழகத்திலே இருந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்.

நான் ஒன்றைச் சொல்கிறேன். இந்த மாநாடு இவ்வளவு வெற்றிகரமாக நடந்ததற்குக் காரணம், உலக நாடுகள் எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து பிரமாதமான மாநாடு, வெற்றிகரமான மாநாடு என்று சொன்னதற்குக் காரணம், என்னுடைய உழைப்பு மாத்திரமல்ல, தம்பி ஸ்டாலினுடைய உழைப்பு மாத்திரமல்ல, நம்முடைய கழகத்தினு டைய, தலைமைக் கழகத்தினுடைய செயலாளர்கள் அவர்களுடைய உழைப்பு மாத்திரமல்ல, இதற்கு மிக முக்கியமான காரணம் - மாநாட்டிற்குத் தடை விதித்த ஜெயலலிதாதான் மிக முக்கியமான காரணம். எனவே நான் மகாநாட்டில் அவர்களுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டேன். இப்பொழுது நான் அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

தமிழ் ஓவியா said...

மாநாட்டிற்கு எவ்வளவு பெரிய தடை!

ஒரு தமிழனுக்காக குரல் கொடுக்கின்ற ஒரு மாநாட்டிற்கு எவ்வளவு பெரிய தடை பாருங்கள். எவ்வளவு பெரிய உள்ளம் பாருங்கள். அவர்கள் தடுத்தது தவறு என்று சொல்லவில்லை. அவர்கள் தடுத்தது நியாயமற்றது என்று கூறவில்லை. அவர்களோடு சேர்ந்து கொண்டு லாலி பாடிக் கொண்டிருக்கின்ற ஒரு சில நண்பர்கள் - எல்லா நண்பர்களும் அல்ல. ஒரு சில நண்பர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை யோடு நடத்தப் பட்ட ``டெசோ மாநாடு பயனற்றது, இதனால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். நான் அவர்களுக்குக் கூற விரும்புகின்றேன், இங்கே நம்முடைய தம்பி பாலு அவர்களும், தம்பி துரைமுருகன் அவர்களும் எடுத்துக் கூறியதைப் போல, மாநாடு 12 ஆம் தேதி முடிந்து விட்டது.

ஆனால், அந்த 12ஆம் தேதிக்குப் பிறகு நாம் அப்போது மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தையெல்லாம் பாலு தலைமையிலே நம்முடைய பாராளுமன்ற கழக உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் டெல்லியிலே மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து, தீர்மானங்களுடைய பிரதியை யும், இன்னொரு பிரதியை திருமதி சோனியா காந்தி அவர்களிடத்திலும் வழங்கியிருக்கின்றார்கள். அதோடு நாம் விடப்போவதில்லை. அதற்குப் பிறகு அவர்களிடத் திலே கொடுத்த அந்தத் தீர்மானங் களையும், இன்னும் நாம் என்ன செய்ய வேண்டு மென்று விரும்புகிறோமோ, கோருகிறோமோ அவற்றையும் இணைத்து அதை விரைவில் இன்னும் 20 அல்லது 30 நாட்களில் ஐ.நா. மன்றத்திற்கு அனுப்ப இருக்கிறோம் (பலத்த கைதட்டல்).
ஐ.நா. மன்றத்திற்கு நாம் தருகின்ற அந்தத் தீர்மானம் நம்முடைய தம்பி டி.ஆர். பாலு மூலமாகவும், கழகத் தினுடைய பொருளாளர் மு.க. ஸ்டாலின் மூலமாகவும் - இருவரும் அங்கே சென்று வழங்குவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். ஐ.நா. அதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகின்றேன். அந்தத் தீர்மானத்தில் ஒன்று - மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட நான்காவது தீர்மானம்.

“India has the Duty, Right and Responsibility to undertake measures for ensuring peace and equality in the neighbouring Sri Lanka.
Indian Government has been protecting a number of Nationalities, Religions and Languages. as required by its democratic traditions. But contrary to this Indian situation, in the neighbouring Sri Lanka there is no protection for the Tamil Nationality, Religion and Language.
Therefore this Conference points out to the Indian Government that a question has naturally arisen in the hearts of Tamils as why the Indian Government has been silent on the undemocratic developments in Sri Lanka.
The Indian Government should, therefore, take all necessary steps to ensure a total change of environment in Sri Lanka and a life of equality and peace to the Sri Lankan Tamils by redeeming their political, economic and cultural rights.
This conference urges the Government of India to bring forth a Resolution in the U.N.O., for bestowing full right to the Tamils in Sri Lanka to decide the political solution themselves, which they have been demanding.”

தமிழிலே சொன்னால் --

அண்டை நாடான இலங்கையில் அமைதியும் சமத்துவமும் நிலவுவதற்கு உரிய பணிகளை மேற் கொள்ள வேண்டிய கடமையும் உரிமையும் பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், மொழிகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஜனநாயக மரபுகளைப் பாதுகாத்துவரும் இந்திய அரசு அண்டை நாடான இலங்கையில் இந்த நிலைகளுக்கு எதிரிடையாக நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தமிழர் நெஞ்சங்களில் எழுந்துள்ளதை இம்மாநாடு இந்திய அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலைகள் மாறி, ஈழத் தமிழ்மக்கள் அரசியல், பொருளாதாரம், பண்பாட்டு உரிமைகளை மீட் டெடுத்து சமத்துவமும் அமைதியும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ள இந்திய அரசு முனைந்து, முழுமூச்சுடன் செயல்பட வேண்டும்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழுஉரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டு மென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

- என்ற இந்தத் தீர்மானங்களையெல்லாம் விரை விலே அய்.நா. மன்றத்திலே நான் ஏற்கெனவே குறிப் பிட்டவாறு திராவிட முன்னேற்றக் கழகத்தினு டைய சார்பிலே மாத்திரமல்ல; டெசோ இயக் கத்தின் சார்பிலே கொடுப்பதாக இருக்கிறோம். அதற்கு உங்களுடைய வரவேற்பும், வாழ்த்தும், ஆதரவும், அன்பும் தேவை என்று கூறி விடை பெறுகிறேன்.

-இவ்வாறு கலைஞர் அவர்கள் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...

துணிவைத் துறக்காதீர்!
எழுத்துரு அளவு
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் துணிவு மிகவும் தேவை. அந்தத் துணிவை, தைரியம் என்றும் கூறலாமெனினும், `தைரியம் என்பதைவிடத் `துணிவு என்று கூறும்போது அதன் தனித்துவம் மிளிரவே செய்கிறது!

துணிவினால் எதனையும் அடைய முடியும் எவராலும்; `துணிவு என்று சொல்லும்போது, எந்தத் தொல்லைகள், துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் இவற்றை எளிதில் எதிர்கொண்டு வாழ்க்கையில் ஏறுநடை போடத் தேவையான ஒன்று அது என்பதை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கி.வீரமணி
விடுதலை, 24.7.2006

தமிழ் ஓவியா said...

புகழ்



மனிதர்களுக்குப் பணமும், பதவி அதிகாரமும் எவ்வளவு இருந்தாலும் அவர்கள் இன்னொன்றுக்காக வாழ்வில் ஏங்குகிறார்கள். தன்னை மற்றவர் மதித்துப் பாராட்டும் அளவுக்கு தனது பெயர் வெளியே உலா வர வேண்டும். கூட்டமான அறையில் நுழைந்தால் மற்றவர்கள் உரையாடல், தானே நின்று போகும் அளவுக்கு, தான் ஒரு மிக முக்கிய மனிதராக சமூகத்தில் பேசப்பட வேண்டும் என்பதை விரும்புவதுதான் புகழ் விரும்புவது என்பதாகும்!

இது தவறல்ல. அதனை அடைவதற்கென்றே தவறான வழிமுறை களில் செல்வது தான் தவறு.

கி.வீரமணி
`விடுதலை`, 30.8.2006

தமிழ் ஓவியா said...

புரிகிறதோ...

கேள்வி: சுமார் ஆறு லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப் - 2 தேர்வு வினாத் தாள் வெளியானதால், ரத்து செய்யப்பட்டது நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளைக் காட்டுவதாகக் கொள்ளலாமா?

பதில்: பங்கு மார்க்கெட்டின் உயர்வும், வீழ்ச்சி யும் ஒரு சிலருக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே தெரிகிறது; பட்ஜெட்டில் வரப் போகிற சில அம்சங்கள் சில நிறுவனங்களுக்கு முன் கூட்டியே தெரிகிறது; சில தீர்ப்புகள் கூட சிலரால் முன் கூட்டியே அறியப்படுகின்றன. இவற்றையெல்லாம் எந்தக் கோளாறில் சேர்ப் பீர்கள்? மொத்தமாகச் சொல்வதானால் கோளாறு நம் நாட்டுப் பிரஜைகளாகிய நம்மிடையே இருக் கிறது. நம்மில் பலர் தலைவர்களாக இருக்கிறார் கள். அது மிகப்பெரிய கோளாறாக இருக்கிறது.

- துக்ளக், 29.8.2012

எவ்வளவு சமத்தான பதில் பார்த்தேளா? சர்வீஸ் கமிஷன் தலைவர் அவாள் ஆத்துக்காரர் என்றவுடன் எப்படி எல்லாம் சுற்றி வளைப்பு!

சர்வீஸ் கமிஷன் தலைவர் பார்ப்பனர் அல்லா தாராக இருந்திருந்தால் இந்த சோ பேனாவாலா எழுதுவார்? பூணூல் விஷ மையால் அல்லவா எழுதுவார்!

ராஜாவைப் பற்றி கலைஞர் எழுதினால் ஊழலுக்கு என்ன ஜாதி வேண்டிக்கிடக்கு என்பார். நடராஜ் அய்யர் என்றவுடன் மாத்திரம் ஜாதி வந்துவிட்டதே! 25-8-2012

தமிழ் ஓவியா said...

பெரியார் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்


பெரியோர் என்று பல மாமனிதர்களைச் சொல்வதுண்டு. ஆனால் பெரியார் என்றால், மூடப் பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து சமுதாய சமத்துவம் காணப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களை மட்டுமே அடையாளம் காட்டி நிற்கும் சொல்லாகத் திகழ்கிறது.. அத்தகு பெருமைபெற்ற நம் அய்யா அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளுள் சில:

@@@@@

அய்யாவின் அறிவாற்றல்

கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் அய்யா சொற்பொழிவாற்றினார். மொழிபெயர்ப்புப் பணிக்காக நமது உண்மை ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் உடன் சென்றிருந்தார். இயல்பிலேயே தன்னம்பிக்கையினை அதிகமாகப் பெற்ற அய்யா அவர்கள் எதையும் தாமே செய்து பார்ப்போம் என்ற ஆர்வம் கொண்டவர்.

கான்பூர் மாநாட்டினை முடித்துவிட்டு லக்னோ சென்று பேசச் சென்றார். ஆங்கிலத்தில் பேச முயன்றார். ஆசிரிருக்கோ வியப்பு. பேசும் இடமோ பல்கலைக்கழகம், அய்யா படித்ததோ மூன்றாம் வகுப்புவரை மட்டுமே. எனினும், அறிவு ஆசான் துணிச்சலுடன் பேச நினைத்தார்.

ஒரு சிறிய முன்னேற்பாட்டின்படி பேசத் தொடங்கினார். அதாவது, அய்யா ஆங்கிலத்தில் பேசுவார். அய்யாவுக்குப் பேசும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஆசிரியர் அந்த வார்த்தையினை எடுத்துக்கொடுத்து சரிசெய்ய வேண்டும். அய்யாவின் விருப்பப்படி ஆசிரியர் தயார்நிலையில் இருந்தார்.

தமிழ் ஓவியா said...

அய்யா பேசத் தொடங்கினார். பேசிக்கொண்டிருந்தபோது அடுப்பு எனும் பொருளை உணர்த்தும் ஆங்கிலச் சொல்லினைச் சொல்ல வேண்டும். அது அவரது நினைவுக்கு உடனே வரவில்லை. பேச்சு தடைப்பட்டது. ஆசிரியரைப் பார்த்தார். அவசரத்தில் ஆசிரியருக்கும் அந்த வார்த்தை நினைவில் வராததால் ஆசிரியர் சிறிதுநேரம் யோசித்தபோது, அய்யா ஓவன் (Owen) என்னும் ஆங்கிலச் சொல்லினைக் கூறி பேச்சைத் தொடர்ந்து ஆசிரியரை மட்டுமின்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் (Appropriate Word) சரியான சொல்லையே தேர்வு செய்து பேசினார். லக்னோ பல்கலைக்கழகத்தில் அய்யா பேசிய பேச்சுத் திறமையும் நுண்ணறிவும் பாராட்டுக்குரியதே. அய்யா அவர்கள் கருத்தைத்தான் பார்த்தார். அதற்குத்தான் முன்னுரிமை கொடுத்தார்.

@@@@@

அய்யாவின் பொறுமை

அய்யாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர் பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்துள்ளார். அப்போது கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.

இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த அய்யா, இப்படியா பேசுவது? பொறுமையாக அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும் என்றார்.

உடனே அந்தப் பார்ப்பனர், பெரியவரே நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார். இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பேசுவர் என்றார். அய்யாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக இறங்கிவிட்டார். அய்யா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்தப் பார்ப்பனரைப் பார்த்து, அவர்தானய்யா ராமசாமி நாயக்கர். இப்படிப் பேசிவிட்டீரே என்றார். கழிப்பறையிலிருந்து அய்யா வந்தவுடன் பார்ப்பனர் எழுந்து நின்று இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, என்னை மன்னித்துவிடுங்கள் அய்யா. தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும் பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று உபசரித்துச் சென்றார்.

@@@@@

அய்யாவின் சமாளிப்புத் திறமை

ஒருமுறை அய்யாவும் அண்ணாவும் மும்பை சென்றிருந்தனர். அங்கு எம்.என்.ராய் அவர்களைச் சந்தித்தனர். அய்யாவிடம் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தவர் ராய். தமது அன்பினை வெளிப்படுத்த அய்யாவுக்கு விருந்து கொடுக்க நினைத்து அழைத்தார். அய்யாவும் அண்ணாவும் விருந்திற்குச் சென்றனர். ராய்க்கு ஆங்கிலம் மட்டுமே தெரியும். தமிழ் தெரியாது. அய்யாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் மட்டுமே தெரியும்.

பிரமாதமாக நடைபெற்ற விருந்தில் இருவருக்கும் ராய்தான் பரிமாறினார். அய்யாவுக்கு, குறிப்பிட்ட ஒரு பதார்த்தத்தின் மீது ஆசை ஏற்பட்டது. மனதிற்குப் பிடித்ததைக் கேட்டு விடுவது அய்யாவின் குணங்களுள் ஒன்று. எப்படிக் கேட்பது? ராய்க்குத் தமிழ் தெரியாதே, ஊறுகாய் என்றால் ராய்க்குப் புரியாதே, என நினைத்தார். இதன் ஆங்கிலப் பெயரும் அப்போது மறந்துவிட்டது அய்யாவுக்கு.

அய்யாவின் தேவையை அண்ணா புரிந்துகொண்டார். எனினும் அய்யாவின் சமாளிப்புத் திறமையைக் கண்டு ரசிக்க விரும்பினார். ராய் அருகில் வந்தபோது, நாக்கில் கையை வைத்து நாக்கால் ஒரு சொடக் கொடுத்து ஓசை எழுப்பிக் காட்டினார் அய்யா.

உணவு பறிமாறிக்கொண்டிருந்த ராய் புரிந்துகொண்டு, ஓ பிக்கிள் என்றார். உடனே, எஸ் எஸ் பிக்கிள் என்றார் மலர்ச்சியுடன் அய்யா.

நாவினால் ஓசை எழுப்பியே தமது கருத்தைத் தெரிவித்துச் சமாளித்த அய்யாவின் திறமையை எண்ணி வியந்தார் அண்ணா.

@@@@@


தமிழ் ஓவியா said...

நாகப்பட்டினம் விஜயராகலு வீட்டிற்கு அய்யா உணவு சாப்பிடச் சென்றார். 15 பேருக்கு உணவு தயார் செய்யப்பட்டிருந்தது. அய்யா 25 பேருடன் சென்றார். சென்றவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரி மெதுவாகச் சாப்பிடும் இயல்புடையவர். பச்சரிசிச் சோறு காலியாகிவிட்டது. எனவே, அழகிரிக்கு மோர் சாப்பாடு சாப்பிட்டபோது குறுவை அரிசிச் சோறு பரிமாறினர். சிவந்த நிறத்தில் பெரிது பெரிதாக இருந்த சோற்றினைப் பார்த்த அழகிரி கோபமுற்றார். சாப்பிட்ட கையை உதறிவிட்டு வேகமாக எழுந்தார். இதனைப் பார்த்த அய்யா, அப்பா அழகிரி இதுவரை மல்லிகைப்பூ, இப்போது ரோசாப்பூ என்றதும் அனைவரும் சிரித்தனர். மேலும் அய்யா, அழகிரிக்கு இரண்டு சாத்துக்குடிப் பழம் கொடுங்கள். பசியும் தணியும் சினமும் போய்விடும் என்றாராம்.

@@@@@

தண்ணீரும் மோரும்!

ஒரு பத்திரிகையின் உதவி ஆசிரியர் ஒருவர் அய்யாவிடம் பேட்டி காண வந்தார். வந்தவருக்குக் காப்பி கொடுக்கச் சொன்னார் அய்யா. நான் இப்ப இங்க காப்பி சாப்பிடுகிறேன். போன தலைமுறையில் இது நடந்திருக்குமா? நான் ஆச்சாரமான பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவன் என்றார் வந்தவர். புன்முறுவல் பூத்த அய்யா, இப்போது காபி சாப்பிடுகிறீர் என்றால் என் பிரச்சார மாற்றம்தானே! என்றார்.

மேலும் அய்யா, பல வருடங்களுக்கு முன்பு ஒரு பார்ப்பன நண்பர் - குடும்ப நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஏதாவது சாப்பிடுங்கள் தாகமாக வந்திருப்பீர்களே என்றேன். ஒன்றும் வேண்டாம் என்றார் நண்பர். கொஞ்சம் வற்புறுத்தவே, சரி மோரும் தண்ணீரும் கொடுங்கள் என்றார். கொடுத்தோம்.

மோரில் சிறிது நீரைச் சேர்த்துச் சாப்பிட்டார். எதற்காக மோரில் நீரைக் கலந்து சாப்பிட்டீர்கள் என்றேன். மோரில் நீர் கலந்தால் மோர் சுத்தமாகிவிடும் அதனால்தான் என்றார். நீரும் மோரும் எங்கள் வீட்டிலே இருந்தது. எங்க வீட்டு மோரை எங்க வீட்டுத் தண்ணீரே சுத்தப்படுத்துமா என்று கேட்டேன் என்றார். பேட்டி காண வந்தவர் தனது மடைமைத்தனத்தை நினைத்து தலைகுனிந்து சிரித்தாராம்.

நாகம்மையார் மரணமடைந்தபோது உள்ளே சென்று பார்க்கச் சென்றவர்களைப் பார்த்து, யாரும் அழக்கூடாது. அழுவதால் இறந்தவர் மீண்டு வரப் போவதில்லை. அமைதியாகச் சென்று பார்த்து வாருங்கள் என்றார் அய்யா. மேலும், அவரது உடல் அடக்கத்தினைப் புதுமையான முறையில் செய்தார். நாகம்மையாரின் உடலினை ஒரு பெட்டியில் வைத்து (முஸ்லிம் முறை) மாடு பூட்டிய வண்டியில் எடுத்துச் சென்று (கிறித்துவ முறை) எரியூட்டி (இந்துமுறை) ஒற்றுமையினைப் புகுத்தி சமத்துவம் கண்டார் அய்யா.

@@@@@


தமிழ் ஓவியா said...

அய்யாவின் தாடி ரகசியம்

ஒரு நாள் இரவு அய்யாவின் வீட்டு மாடியில் அவரது நண்பர்கள் அய்யா தாடி வளர்ப்பது ஏன் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முக அழகுக்காக தாடி வளர்ப்பதாக என்னிடம் அய்யா சொன்னார் என்றார் மாயவரம் நடராசன். எஸ்.வி.லிங்கமோ, இல்லையில்லை ரஷ்ய அறிஞர்கள் எல்லோரும் தாடி வைத்துள்ளனர். அவர்களைப் பார்த்தபின் வைத்தேன் என்று என்னிடம் கூறினார் என்றார். உடனே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், சவரச் செலவு தினமும் நாலணா மிச்சமாகிறது என்றாரே என்னிடம் என்றதும், பட்டுக்கோட்டை அழகிரி, கொஞ்ச நேரம் என்றாலும் இன்னொரு வரிடம் தலைகுனிந்து உட்காருவது தன்மானக் கேடாக உள்ளது என்றாரே என்னிடம் என்றார்.

மேடைஏறி பலரைத் தாக்கித் திட்டும்போது, போனால் போகிறான் கிழவன், வயதானவன் என்று விட்டுவிடுவார்கள் என்று என்னிடம் கூறினாரே என்றார் பூவாளூர் பொன் னம்பலனார். அப்போது கி.ஆ.பெ.விசுவநாதம், தூங்குங்கள் நாளை உங்களுக்கு உண்மையான காரணத்தை அய்யாவிடமே கேட்டுச் சொல்கிறேன் என்றார்.

மறுநாள் அய்யாவிடம் தாடியின் ரகசியம் கேட்டுவிட்டு, தினமும் பத்து நிமிடம் வீதம் மாதம் 300 நிமிடங்கள் வீணாகிறதே. பல நல்ல காரியங்களை இந்த நேரத்தில் செய்யலாமே என்று நினைத்து விட்டேன். தானாக வளர்ந்துவிட்டது. வேறெதுவும் காரணம் இல்லை என்று அய்யா கூறியதாக அனைவரிடமும் கூறினார். அப்போது கருகுடி சின்னையா பிள்ளை, இன்னும் யார் யாரிடம் என்னென்ன காரணங்கள் சொல்லியுள்ளாரோ அதையும் கேட்டு அனைவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

ஒருமுறை ரயில் நிலையத்திலிருந்து வந்தபோது எதிரில் வந்த ஒருவர் அய்யாவைப் பார்த்து, நீங்கள் ஏன் தாடி வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு பிளேடு செலவு மிச்சம், உனக்கு என்ன நஷ்டம் என்று கூறியுள்ளார்.

தமிழிசை ராஜா அண்ணாமலை (செட்டியாரும்), ஆர்.கே. சண்முகம் (செட்டியாரும்) தமிழிசை இயக்கம் தொடங்கி அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். பல லட்சம் செலவு செய்தனர். வீண் விரயம் செய்வதைக் கண்டித்து அய்யா கூட்டத்தில் பேசினார்.

மருமகனுக்குப் பல் தேய்க்க சோம்பேறித்தனம். பல் தேய்க்கும்படி மருமகனிடம் சொல்ல வெட்கப்பட்டார் மாமியார். ஒரு யுக்தி தோன்றியது மாமியாருக்கு. கரும்பு மென்று தின்றால் பல் சுத்தமாகுமே என்று நினைத்து, மாப்பிள்ள இந்த ஊர்க் கரும்பு ரொம்ப ருசியாக இருக்கும். ஒரு பணத்துக்குக் கரும்பு வாங்கிச் சாப்பிடுங்கள் என்று கூறி பணமும் கொடுத்து அனுப்பினார். மாப்பிள்ளையோ பணத்தை வாங்கி எள்ளுப் புண்ணாக்கு வாங்கித் தின்றுவிட்டு பல்லை மேலும் கேவலமாக்கி வந்து நின்றார். மாமியாருக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதுபோலல்லவா இந்தத் தமிழிசைக் கிளர்ச்சியும் ஆகியுள்ளது. தமிழ் மக்களுக்குப் பகுத்தறிவு உணர்வு தோன்றிவிடுமானால் தமிழிசை தானாக வளர்ந்துவிடும் என்றார்.

(தந்தை பெரியார் பற்றி வெளிவந்த நூல்களிலிருந்து