Search This Blog

19.8.12

திருநீற்று மோசடி!-நீறு பூசியவன் ஒழுக்கவானா?

திருநீற்று மோசடி!

(எவ்வளவு பழி பாவங்களைச் செய்தாலும் திருநீறு பூசிக் கொண்டு விட்டால் அந்தப் பழி பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடும் என்கிற பித்தலாட்டத்தை விளக்கும் கட்டுரை இது. 24.6.1928 குடிஅரசு ஏட்டிலிருந்து எடுத்துத் தரப்படுகிறது. - ஆ.ர்)

விருத்தாசலம் புராணம், விபூதிச் சருக்கம், 14ஆம் பாட்டு-

நீறு புனைவார் வினையை
நீறு செய்தலாலே
வீறுதனி நாமமது
நீறென விளம்பும்
சீறு நரகத்துயிர்
செலாவகை மருந்தாய்க்
கூறுடைய தேவிகையில்
முன்னிறை கொடுத்தார்.

இதன்பொருள்:-  திருநீறு தரித்தவர்களுடைய தீவினையை நீறாகச் செய்கிறபடியினாலே, வெற்றியுள்ள அதின் பெயரும் நீறென்று சொல்லப்படும். பொல்லாத நரகத்தில்  உயிர்கள் போய் விழாதபடிக்கு ஒரு மருந்தாகத் தனக்கொரு பாகமான பார்வதி கையிலே முன்பு சிவன் கொடுத்தது இந்தத் திருநீறு என்பதாம்.

சிவபுராண புளுகு

கதை:- ஒரு காலத்தில் மகா பாவங்களைச் செய்த ஒருவனுடைய ஆயுசு முடிவிலே, யம தருமராஜா அவனைக் கொண்டு வந்து நரகத்திலே போடுகிறதற்குத் தூதர்களை அனுப்பினான். அவர்கள் வருகிற சந்தடியைக் கண்டு அவனுடைய வீட்டுக்கு முன்னே குப்பை போட்டுச் சாம்பலிலே புரண்டு கிடந்த ஒரு நாய் பயந்தெழுந்து, சாகக்கிடந்த அவன் மார்பிலும் தலையிலும் ஏறி மிதித்துக் கொண்டு போய் விட்டது. அப்பொழுது அந்த நாயின் காலிலே ஒட்டின சாம்பல் அவனுடைய மார்பிலும் நெற்றியிலும் பட்டது. அதைக் கண்டு யமதூதர்கள் கிட்டப் போக பயந்து விலகி விட்டார்கள். உடனே சிவகணங்கள் வந்து அவனைக் கயிலாயத்திலே கொண்டு போய் வைத்தார்கள் என்று சிவ புராணக் கதைகளில் சொல்லப் பட்டிருக்கிறது.

பாவத்திற்குப் பரிகாரம்

தெளிதல்: இதை வாசிக்கிற என் ஜென்மதேசவாசிகளாகிய கனதனவான்களும் கற்றோரும், கல்லாதோருமாகிய அன்பர்களே! வெந்து சாம்பலாய்ப் போன சாணத்திற்கு உண்டாயிருக்கிற மகத்துவம் எத்தனை? சிவனும் சக்தியும் ஆத்ம வருக்கங்களின் பாவ வினை தீர அதைத் தரித்துக் கொண் டார்கள் என்று சொல்லியிருக்கிறதே. இப்படிக்கொத்த உபதேசத்தை நம்புகிறவர்கள் தங்கள் மனதின்படி சகல பாவங்களையும் செய்து, அன் றன்று கொஞ்சம் நீற்றை (சாம்பலை) பூசிக் கொண்டால் தாங்கள் அன் றாடம் செய்கிற பாவகருமம் தொலைந்து போம் என்றெண் ணார்களோ!

அப்படியே தாங்கள் உயிரோ டிருக்கும் நாளெல்லாம் நீறு பூசாமல் விட்டுவிட்டாலும், தாங்கள் சாகும் போது கொஞ்சம் நீற்றைப் பூசிக் கொண்டால் போதுமல்லவா? அப்படி இல்லாவிட்டாலும் தங்கள் முறையார் தங்களை தகனிக்கக் கொண்டு போகிறபொழுது, எப்படி யும் தங்கள் நெற்றியிலே கொஞ்சம் நீறு பூசி எடுத்துப் போவார்கள். அதனாலேயாவது கயிலாயம் சேரலாம் என்று கவலையற்று பாவம் செய்து கொண்டிருக்கமாட்டார்களா?

இதெல்லாம் வீணென்று நமது முன்னோர்களில் அனேகர் சொல்லி எச்சரித்து இருக்கின்றார்கள். அவைகளிற் சிலவற்றை இதனடியில் குறிப்பிடுகிறோம்.

சிவவாக்கியர்:

இருக்கு நாலுவே தமும்
எழுத்தறவே யோதினும்
பெருக்க நீறு பூசினும்
பிதற்றினும் பிரானிரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து
உண்மைகூற வல்லிரேல்
சுருக்க மற்ற சோதியைத்
தொடர்ந்து கூடலாகுமே
என்கிறார்.

பட்டினத்தார்:

நீற்றைப் புனைந்தென்ன
நீராடப் பொயென்ன நீ மனமே
மாற்றிப்பிறந்த வகை
யறிந்தாயில் மறை முடியில்
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி
மந்திரம் ஏதுக்கடா
ஆற்றிற்கிடந்து துறை
தெரியாமல் அலைகின்றாயே
என்கிறார்
நெஞ்சறி விளக்கம்!
வேடத்தைத் தரித்தாலென்ன
வெண்பொடியணிந்தா லென்ன
நாடொத்து வாழ்ந்தாலென்ன
நதிசலங் கண்டாலென்ன...
என்கிறது.

கவனிப்பு: நீறு பூசிக் கொண் டால் எல்லாப் பாவமும் போய் முத்தியடைவாய் என்கிற உபதேசம் கடவுளை பைத்தியக்காரனாக்குகிறது. போலாகிறதல்லவா! எப்படி யெனில்; ஒரு நியாயாதிகாரி ஒரு கொலைபாதகனை நோக்கி அடா! அங்கே கொஞ்சம் சாணியுண்டு; அதைச் சுட்டுப் பொடியாக்கிப் பூசிவா, உன்னை மன்னித்து விடுதலையாக்குவேன் என்று தீர்ப்பு பண்ணினால், அதைக் கேட்ட வர்கள், அவரைப் பைத்தியம் பிடித்தவன் என்று நிந்திப்பார் களல்லவா! அப்படியே விபூதி பூசுதல் பாவத்தைச் சாம்பலாக்கு மென்று சிவன் சொன்னார் என்று சொல்லுகிறவர்கள் சிவனை பைத்தியக்காரனாக்குகிறார்கள்.

நீறு பூசியவன் ஒழுக்கவானா?

அப்படிப்பட்டவர்கள் சிவனுக்கு எப்படி அஞ்சி, பயப்படுவார்கள்? பக்தியாய் இருப்பார்கள்? ஆன் றோர்கள் பரிசுத்தம் (ஒழுக்கம்) இல்லாதவன் கடவுளை தரிசிக்க மாட்டான் என்கிறபடியால், விபூதி பூசுதலுக்கும் பரிசுத்தத்திற்கும் சம்பந்தம் என்ன  இருக்கிறது? ஒன்றுமில்லை. விபூதி பூசுதல் பரிசுத்தத்திற்கு காரணம் என்று எள்ளளவேனும் நினைக்கலாகாது. அப்படியே காரணமாயிருந்தால், திருடன் ஒரு கையினாலே திருடிமறுகையினாலே விபூதி பூசி, புண்ணியசாலியாயிருப்பான் அல்லவோ!

1 comments:

தமிழ் ஓவியா said...

டெசோ மாநாட்டின் தீர்மானம் மத்திய அரசு பரிசீலனை மத்திய அமைச்சர் நாராயணசாமி தகவல்



சென்னை, ஆக.19- டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை செய் கிறது என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித் தார்.

மத்திய இணை அமைச்சர் நாராயண சாமி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். அவர், விமான நிலையத்தில் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

நிலக்கரி ஒதுக்கீட் டில் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள தாக குறிப்பிட்டுள்ளது சரியானது அல்ல. தலைமை தணிக்கை குழு அதிகாரி, தனது வரம்பை மீறி செயல்படு கிறார். ஏல முறையில் அமல்படுத்தி இருந்தால், பொதுமக்கள் பாதிக் கப்படுவார்கள். இப் போது, மத்திய அரசு எடுத்த முடிவினால் கூடு தல் மின்சாரம் தயாரிக் கப்பட்டுள்ளது.

அசாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். வதந்தி பரப்பும் விஷமி கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். அதற்காக துணை ராணுவ படையின் உதவியை மாநில அரசு கோரினால் உடனடி யாக அனுப்பி வைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

டெசோ மாநாட்டில் திமுக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலனை செய்கிறது. மத்திய அரசும் இலங்கை தமி ழர்கள் நலனில் மிகுந்த அக்கறை காட்டி வரு கிறது. எனவே அந்த தீர்மானத்தை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.