Search This Blog
13.8.12
தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை
தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலி யார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்சக்கணக் காகக் கூடி, என்னை ஆடம்பரமாக வரவேற்று பல சங்கங்களின் சார்பில் வரவேற்பு அளித்து, நமது முயற்சிகள் ஈடேறத் தமிழ்நாட்டிற்கே வழிகாட்டியாக முதன் முதல் 1001 ரூபாய் பரிசளித்த உங்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வ மான நன்றியைத் தெரிவிக்கின்றேன். என்னைப் பற்றிப் புகழ்ந்து பேசி, நான் ஏதோ செய்து விட்டதாக வரவேற்புகள் அளித்தது எதற்கு என்பது எனக்கு நன்கு தெரியும். உண்மையில் அப்புகழ்ச்சிகளுக் கெல்லாம் நான் தகுதியுடையவனல்ல. ஆனால், எனது தொண்டின் கருத்தினி டமும், அவசியத்தினிடமும், நீங்கள் வைத்துள்ள உண்மை அன்பும், ஆசையுமே இதற்குக் காரணமென எண்ணுகிறேன். மேலும் எனக்கு ஊக்கத்தைத் தூண்டவே எனக் கருதுகிறேன். இந்த நன்றி, வார்த்தையால் மட்டும் போதாது. எனினும் கருத்திற்கிணங்க நீங்கள் இட்ட பணியை நிறைவேற்ற எனது ஆயுள்வரை தயாராக இருக்கிறேன். (கை தட்டல்) நான் உங்களுக்காகப் பல தொண்டுகள் செய்ததாக எனக்கு முன் பேசிய தலைவர்கள் கூறினார்கள். ஆனால், நான் தமிழர்களுக்காகச் செய்ததை விட மற்றவர்களுக்காகச் செய்ததே மிக அதிகமாகும். நீதிக் கட்சி, தாழ்த்தப்பட் டோர், முஸ்லிம்கள் ஆகியவர்களுக்காகச் செய்ததைவிட, காங்கிரசிற்கு நான் உழைத்தது கணக்கு வழக்கில்லை. எனது வாலிபப் பருவத்தையும், ஊக்கத்தையும் காங்கிரசிற்காகவே கழித்தேன். இன்று அதன் சக்கையைத்தான் உங்களுக் காகச் செலவிடுகிறேன். நான் முன்பு சென்றது தப்பு வழி என உணர்ந்து திருந்தி சென்ற 15 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். நான் கோரிய பலனில் நூற்றில் ஒன்றுகூட இன்னும் வரவில்லை. ஓரளவுக்குத் தமிழர்களுக்கு உண் மையைத் தெரிவித்து வருகிறேனே ஒழிய, இன்னும் காரியம் கைகூடவில்லை. சுமார் முப்பதிற்கு மேற்பட்ட சங்கங்கள் இன்று எனக்கு வரவேற்பளித்தன. அவை களில் தொழிலாளர்கள் சார்பாகவும், முஸ்லிம்கள் சார்பாகவும், விசுவப் பிரா மணர்கள் சார்பாகவும் அளித்த வரவேற்புப் பத்திரங்களையே மற்றவைகளைக் காட் டிலும் நான் பெருமையாகக் கொள்ளுகின் றேன். தொழிலாளர்கள் சம்பந்தமாக இன்று சிலவற்றைக் கூற ஆசைப் படுகிறேன்.
அன்பும், பக்தியும், கவலையும் தொழிலாளரிடமே!
முன்பு இரண்டொரு சந்தர்ப்பங்களில் சென்னையில் நடைபெற்ற கடற்கரைக் கூட்டங்களில் தொழிலாளர்களைப் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லியுள்ளேன். எனக்குத் தொழிலாளர்களிடம் உண்மையில் அன்பும், பக்தியும், கவலையும் வேறெதையும்விட அதிகம் என்பதை உண்மைத் தொழிலாளர்கள் 15, 16 வருடமாகத் தொழிலாளருடன் பழகுபவர் அறிவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர் சங்கத்தை அரசியல் கூட்டமும், சுயநலக் கூட்டமும் வேட்டையாடின. அவைகளுக்குக் காட்டிக் கொடுத்தவன் நான் என்பதும் எனக்கு நன்கு தெரியும். ஆனால், பின்பு உண்மை உணர்ந்து தொழிலாளர்களை அரசியல் புரட்டுக்காரர்களிடத்திலிருந்தும், சுயநலக் கூட்டத்திலிருந்தும் விடுவிக்கப் பெரிதும் பாடுபட்டேன்; முடியவில்லை. காதினிக்கப் பேசுபவர்களைக் கண்டு தொழிலாளர்கள் மயங்குவது அறியப் பெரிதும் வருந்தி னேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு நாகை யில் ரயில்வே வேலை நிறுத்தத்தை ஆரம் பிக்கக் கூடாதென்று அவர்களை எவ்வ ளவோ வேண்டியும் சில போலிகளை நம்பி வேலை நிறுத்தம் ஆரம்பித்ததால் தொழி லாளர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டனர். நான் வேண்டாமென்ற வேலை நிறுத் தத்தை மீறி நடத்துவது கண்டும் பின்னி டாது, தொழிலாளர்களுக்காக அதில் கலந்துகொண்டு பாடுபட்டு, அதற்காக நான் சிறை சென்றதை அக்காலத் தலைவர்கள் உணர்வார்கள்.
தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை
எதனால் தொழிலாளர் நன்மை அடை வார் என்பதில் எனக்கும் அரசியலாளர் கள், தொழிலாளர்களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டதால் என்னால் தொழிலாள ருடன் அதிகமாகக் கலந்து கொள்ள முடியாது போயிற்று. எனினும் தொழி லாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை - பார்ப்பனரல்லா தாரின் விடுதலையாகும். பார்ப்பனரல்லா தார் முன்னேற்றமென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே. இயந்திரத் தின் பக்கத்தில் நிற்பவனே தொழிலாளி என்று கருதுகிறார்களே ஒழிய, நிலத்தை உழுபவன் - உழவனும் தொழிலாளிதான் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் தான் அவ்வியக்கம் எத்தன்மையது என்பதை உணர்வர். இந்து மதக் கோட்பாட்டின்படி நாம் அத்தனை பேரும் தொழிலாளிகளே. பல வர்ணம், ஜாதிகள் சொல்லப்பட்டாலும் உலகத்தில் சூத் திரன், பிராமணன் என்ற இரண்டே ஜாதிதான் உண்டு என வருணாசிரமிகள் என்போரும், வைதிகர்கள் என்போரும் கூறி வருகின்றனர். இவ்வாறு பார்க்கும்போது பார்ப்பனர்கள் அத்தனை பேரும் முதலாளிகள், நாம் அனைவரும் தொழிலாளிகள். பார்ப் பனர்கள் பாடுபடாமலேயே வயிறு வளர்க்கின்றனர். நாம் பாடுபட்டும் வயிறு கழுவ முடியாத நிலையிலிருக்கின்றோம். எனவே, இந்நிலை மாறினால்தான் நமது தொல்லைகள் நீங்குமே ஒழிய, ஆலையில் வேலை செய்பவனுக்கு ஒரு நாலணா கூலி அதிகமாகக் கிடைத்து விட்டதாலேயே தொழிலாளிப் பிரச்சினை முடிந்துவிடாது.
தொழிலாளரை ஆதரியுங்கள்
அந்த வழியில் எனக்கு விழிப்பேற்பட்ட காலம் முதல் சூத்திரன் என்று சில சோம்பேறிகளால் பேரிடப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகிறேன். அவர்கள் வார்த்தைகளை நம்பி தொழிலாளிகள் இன்று எங்களைப் பரிகசித்தாலும், கேலி செய்தாலும் கடைசி வரை நாங்கள் தொழிலாளிகளுக்காகவே உழைப்போம். இன்று வேலை நிறுத்தத்தால் சூளை மில் முதலிய மில் தொழிலாளர்கள் கஷ்டப்படுகின்றனர்.முன்னின்ற தொழி லாளர் தலைவர் பலர் அரசாங்கத் தலை வர்களுக்குக் கீழ்ப்படியாத காரணத் தாலேயே இன்று தொழிலாளிகள் கஷ்டப்படுத்தப்படுகின்றனர். எனவே, நாம் அத்தொழிலாளர்களுக்குச் சகாயம் செய்வதுடன், வேலையிழந்த பலருக்கும் நம்மால் ஆகும் வேலைகளைக் கொடுத்து ஆதரிக்க வேண்டுமென உங்களை வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். இக் கூட்டத்தின் சார்பாகக்கூட தொழிலாளர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும்.
அடுத்த ஆண்டில் ரூ. 10001 பெறுவேன்!
1001 பேர் சிறை சென்றதன் அறி குறியாக நீங்கள் இன்று 1001 ரூபாய் கொடுத்தீர்கள். இது எனது சொந்தச் செலவிற்கல்ல. நமது தொண்டு, இயக்கம், எண்ணம் நிறைவேறுவதற் காகவே உதவினீர்கள். இதைப்போல் மற்ற ஜில்லாக்காரர்களும் செய்ய வேண்டுமென வழிகாட்டினர் சென்னைத் தோழர்கள். நாம் எண்ணுவது சரியாயிருக் குமானால், இனியும் ஒரு வருடம் ஆச்சாரியார் நம்மீது கருணை வைத்தால் அடுத்த ஆண்டில் 10001 ரூபாய் பெறுவேன் எனக் கருதுகிறேன். முதன் மந்திரியாரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாண்டில் 10001 தொண்டர்களைப் பிடிப்பதன் மூலம் நமக்கு 10001 ரூபாய் நீங்கள் கொடுக்க வழிசெய்து உதவ வேண்டுகிறேன்.
சிறை செல்வது பிரமாதமல்ல
சிறை சென்றதில் புகழோ, தியாகமோ ஒன்றுமில்லை. அதன் ரகசியம் எனக்குத் தெரியும். என்னுடைய வழக்கில்கூட அய்க்கோர்ட்டு நீதிபதி முன்பு, 7 தடவை சிறை சென்றவருக்கு இது என்ன பிரமாதம்? என்று கூறிய தாகக் கேள்வியுற்றேன். ஒரு காரியத் திற்காகத்தான் தாங்கள் சிறையில் கஷ்டம் அனுபவித்ததாகச் சிலர் சொல்வது, வெளியில் வந்தால் என்ன கூலி என்ப தற்காகவே, இதை எதிரிகள்தான் சொல்லிக் கொடுத்தார்கள். மந்திரி வேலை முதலில் எனக்குத்தான் என உரிமை பாராட்டவே தாங்கள் கஷ்டமனுபவித்த தாகக் கூறுவதுண்டு. உண்மையில் நமது உணர்ச்சியை மாற்றக்கூடிய நிலையில் அவ்வளவு கஷ்டம் சிறையில் ஒன்று மில்லை. சிறை செல்வதால் ஏற்படும் பலாபலனை உணர்ந்தே செல்லுகிறோம். இதில் என்ன தியாகம் இருக்கிறது? நான் சிறையில் அதிகம் கஷ்டப்படவில்லை. 3 சிறை அதிகாரிகளும் என்னை நன்கு கவனித்தனர். ஆனால், அரசாங்கத்தின் பழிவாங்கும் எண்ணம் அங்கு தாண்ட வமாடுகிறது. உடல் நோயுற்றவர் களிடத்துச் சிறிதுகூட கருணை காட்டப் படவில்லை. அவர்களை ஒழிக்கவே டாக்டர்கள் நினைக்கின்றனர்.
சிறைச்சாலை டாக்டர்கள் போக்கு
முன்பு பேசியதுபோல இன்று நான் பேச முடியவில்லை. எனக்குச் சில பொறுப்புகள் இருக்கின்றதென சில தலைவர்கள் எனக் குப் புத்தி புகட்டுவதுண்டு. அது எனக்கு முடிவதில்லை. ஆனாலும் ஓரளவுக்கு அடக்கியே பேசுகிறேன். வெளியில் காயலா கண்ட ஒருவன் 6 மாதத்தில் செத்து விடுவான் என்றால், சிறையில் 15 நாட்களிலேயே இறந்து படுவான். இதற்கு அரசாங்கத்தாரோ, மற்ற யாரோ, யார் பொறுப்பாளி என்று என்னால் கூற முடியாது. அல்லது அந்த நிர்வாகத் தோரணையோ என்னவோ தெரியவில்லை. ஒருவனுக்கு நோய் என்றால் அவன் பொய் பேசுவதாகவே டாக்டர்கள் நினைக்கின்றனர். இன்னும் சொல்வேன்; ஒருவனுக்கு நோய் என்றால் காதிலிருக்க வேண்டிய ஸ்டெதெஸ்கோப்பை கழுத்தில் போட்டுக்கொண்டே அவனை டாக்டர்கள் பரிட்சிக்கின்றனர். இதை ஏன் சொல்லுகிறேனென்றால் கைதிகளை அவ்வளவு மோசமாக நினைக்கின்றனர். இதைப் பற்றிச் சர்க்கார் சிறிதுகூடக் கவலை எடுத்ததாகத் தெரியவில்லை.
சட்டம் மீறல் - சண்டித்தனம் நமது கொள்கையல்ல
இதனால் உங்களைச் சிறைக்குச் செல்லுங்கள் என நான் கூறவில்லை. ஏன்? மக்களிடம் ஒழுங்கு மீறும் எண்ணத்தையும், சட்டத்தை மறுக்கும் உணர்ச்சியையும் உண்டாக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். காரணம்? அது பின்னர் நமக்கே திரும்பிவிடும். பலவற்றிற்கும் பட்டினியிருந்த காந்தி இன்று பட்டினி இருப்பது கூடாதென் கிறார். ஏன்? பலர் சிறு காரியங்களுக்கும் அதைப் பின்பற்றுகின்றனர். அதேபோலச் சட்டம் மீறல், சிறை செல்லும் உணர்ச்சி, அடாவடி, சண்டித்தனம் ஆகியவைகளை அவர்களே கற்றுக் கொடுத்தனர். இந்த 24 மாத ஆட்சியில் 100, 200 இடங்களில் சத்யாக்கிரகக் கூப்பாடு கேட்கின்றது கண்டு வருந்துகின்றனர் காங்கிரஸ்காரர் கள். இரண்டு பக்கங்களிலும் தொல்லை. என்ன செய்வது என்றே முடிவுக்கு வர முடியாது தவிக்கின்றனர். எனவேதான், காரணம் சொல்லாது இந்தி எதிர்ப்பாளர் களை வெளியில் விட்டனர். தொண்டர்கள் விடுதலைக்கு இதுவரை சரியான காரணம் சொல்லப்படவில்லை.
சட்டம் மீறக் கூடாதென்பதே எனது எண்ணம். ஆனால், மக்கள் உணர்ச்சியைத் தப்பாக எண்ணி அதனை அடக்க அரசாங்கத்தார் தப்பான முறைகளைப் பலவந்தமாக உபயோகித்தால் நியாயமான உரிமைகளை இழக்க எவனும் பின்னிட மாட்டான்.
மூச்சு விடுவதே சட்ட விரோதமானால் அதற்காகத் தற்கொலை செய்து கொள்வது மேலா? சிறை செல்வது மேலா? எனவே, மக்கள் மீது அரசாங் கத்தார் மீண்டும் அடக்குமுறை உபயோ கிக்க முன் வந்தால் அதனை வரவேற் பேனே ஒழிய, அதற்காகச் சிறிதும் பயப்பட மாட்டேன்.
ஏமாற்றப் பார்க்கின்றனர்!
இந்தி எதிர்ப்பைப் பற்றி ஏமாற்றிக் காரியம் செய்ய எண்ணுகின்றனர். நேற்றுகூட இந்தியை எடுத்து விடுவதாக ஆச்சாரியார் சொன்னார். எனவே, மறியல் செய்ய வேண்டாம் என இந்தி எதிர்ப்புச் சர்வாதிகாரியாயிருந்த ஒரு அம்மையார் சொன்னதாகப் பத்திரிகை யில் பார்த்தேன். அது உண்மையானால் அன்று சென்ட்ரல் ஸ்டேஷனில் காலில் விழுந்த மூர்த்தியாரிடமே ஆச்சாரியார் கூறியிருக்கலாமே இந்தியை எடுத்து விட்டேன் என்று. அதை விட்டு யோசிக் கின்றேன் என்பானேன். எனவே, கட் டாயம் எடுபடவில்லை என்பது விளங்க வில்லையா? எனவே, மக்களை ஏமாற்றத்தானே இது. இந்தி சம்பந்தமான சர்க்கார் உத்தரவை நேற்று விடுதலை யில் நீங்கள் பார்த்திருக்கலாம். அது எல்லாப் பள்ளிக்கூட அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் கட் டாயம் என்பது நன்றாக எழுதப்பட்டி ருக்கின்றதே. 100 பள்ளிகளிலிருந்து இன்று 225 பள்ளிகளிலாயிற்று. இன்று 4, 5, 6ஆம் பாரங்களிலும் வைக்கப் போவதாகச் சொல்லுகின்றனர். இதில் தேசியம் ஒன்றுமில்லை. வேறெதையோ எண்ணி தமிழர்மீது கட்டாயமாகச் சுமத்துகின்றனர்.
அகராதி கூறுகிறதே!
இனி, நாங்கள் வேறு; ஆரியர்கள் வேறு என்பதைப் பல இடங்களில் கூறியுள்ளோம். பல பார்ப்பன நண்பர்கள் தனியே என்னிடத்தில் வந்து இதை மட்டும் விட்டுவிடு; மந்திரிசபையை எவ்வளவு வேண்டுமானாலும் தாக்கு என்று கூறுகின்றனர். ஆனால், இந்தி என்றால் ஆரியர் மொழியென அகராதி கூறு கின்றது. நீங்கள் எடுத்துப் பாருங்கள். அந்த ஆரிய மொழியைத் தமிழர் தலையில் ஏன் கட்டாயப் பாடமாகப் புகுத்த வேண் டும்? பல பத்திரிகைகள் இந்துஸ்தானி என்று கூறினாலும், சர்க்கார் உத்தரவு இந்தி என்றுதான் கூறுகிறது; ஒரு இடத்தில் இந்தி என்பது; பின்னர் இந் துஸ்தானி என்பது; 200 வார்த்தைகள் படித்தால் போதும், கட்டாயமில்லை; பாசா காவிட்டாலும் பரவாயில்லை; இப்பொழுது அசட்டை செய்தால் பின்னால் உத்தி யோகங்கள் கிடைக்காது வருந்த நேரிடும் என்று இடத்திற்குத் தக்கவாறு பேசுவதன் கருத்தென்ன? எனவே, இனி உண்மை கூறாது, சூழ்ச்சியாகச் செய்யும் தந்திரங் களை நினைக்கும் போது இதில் ஏதோ பின்னால் ஆபத்து இருக்கிறதென உணருகிறோம். எனவே, எந்த விதத்திலும் ஆரிய பாஷை கட்டாயப் பாடமாகாமல் இருப்பதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்தால்தான், பின்னர் நீங்கள் தமிழர் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
தமிழ்க் கலையைக் காப்பது தமிழன் கடமை
ஒரு சிலர் கன்னட ராமசாமிக்குத் தமிழ் அபிமானம் ஏன் என்கின்றனர். அவர்கள் தமது தாய்மொழியை - கலையை விற்று, பிறருக்கு அடிமையாகி, தன்னையும் விற்றுப் பேசுகின்றனர்.
கன்னடன், தெலுங்கன், மலையாளி என்போர் யார்? எல்லோரும் தமிழர்களே - திராவிடர்களே. தமிழிலிருந்துதான் இவைகள் வந்தன. அம்மொழிகளில் கலந்துள்ள வடசொற்களை நீக்கிவிட்டால் எஞ்சுவது தனித் தமிழே. அப்பொழுது கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்ற பெயர் மறைந்துவிடும். எனவே, எங்கள் மொழியிலுள்ள சீரிய கலைகளை ஒழிக்க முயல்வதாலேயே பலத்த கிளர்ச்சி செய்கிறோம். இது ஒரு அற்ப விஷயமல்ல. தமிழ்க்கலை ஒழியாதிருக்க நாம் வகை தேட வேண்டுவது உண்மைத் தமிழன் கடமையாகும். எல்லாப் பள்ளிகளிலும் இந்தி வைத்து விட்டால், இந்தி வேண்டாத மாணவர்கள் எங்கு சென்று படிப்பது என்று சிலர் கேட்கின்றனர். 3ஆம் பாரம் வரை தனிப் பள்ளிக்கூடங்களை ஆங் காங்கு ஏற்படுத்தி அதில் மாணவர்களைத் தயார் செய்து 4ஆம் பாரத்தில் கொண்டு சேர்த்துவிடலாம். இது ஒரு பெரிய காரியமல்ல. இதற்குச் சர்க்கார் உத்தரவு தேவையில்லை. இத்தகைய பள்ளிகளை விரைவில் சென்னையில் தொடங்கச் சிலர் முயல்கின்றனர். அதற்கு நீங்கள் ஆக்கம் அளியுங்கள்.
லட்ச ரூபாய் வேண்டும்
தென்னிந்திய நலவுரிமைச் சங்க மென்பது காங்கிரஸ்காரர்களால் 500, 1000 அடி ஆழத்தில் புதைப்பட்டதாகச் சொல்லப்படும் கட்சியாகும். அக்கட்சி புதைக்கப்பட்டதா? அன்றி நாட்டில் வேரூன்றி கிளை விட்டு ஓடுகின்றதா? என்பதைக் கண்ணுற்றவர் அறிவர். சென்னையிலும், வெளி ஜில்லாக்களிலும் காங்கிரசை விட அதிக உறுப்பினர்களைச் சேர்த்து ஆங்காங்கு கிளைச் சங்கங்கள் நிறுவ வேண்டும். இதைத் தேர்தலுக்கு மட்டும் பயன்படுத்துவதோடு அல்லாது இதைக் கொண்டு சமுதாய முன்னேற் றத்திற்கு வேலை செய்ய வேண்டும். நமக்கு பணத்தைப் பற்றிக் கவலை யில்லை. நமக்கு ஆள் பலம் அதிகம் என்பது காண மகிழ்ச்சியடைகிறேன். இன்று எனக்குக் கொடுத்த 1001 ரூபாய்களும் ஒவ்வொரு ரூபாயாக வந்தது என்பது எனக்குத் தெரியும். எப்படி இதைச் சேர்க்க முடிந்ததோ, அதேபோல் தலைவர் குமாரராஜா போன்றவர்கள் வெளியில் பிச்சைக்குப் போக வேண்டும். அவர் மேல் துண்டை எடுத்து நீட்டிப் பிச்சை கேட்டால் பதினாயிரம், லட்சக்கணக்கில் சேர்க்க லாம். 6 மாதத்தில் லட்ச ரூபாய் சேர்த்தால் ஒழிய நமக்கு வெற்றியில்லை. எனவே, ஒவ்வொரு ஜில்லாத் தோழர்களும் இம் முயற்சியில் ஈடுபட்டு உதவ வேண்டு கிறேன்.
-------------------18.06.1939 அன்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்ற வரவேற்புக் கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவு-"குடிஅரசு" - சொற்பொழிவு - 25.06.1939
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
உலகின் உச்சிக்கே சென்ற சிறப்பு!
டெசோ சார்பில் மாநாடு நடத்தப்படும் என்ற தகவல் வெளிவந்த நாள் முதல் பல்வேறு வகையான விமர்சனங்கள் - எதிர் விமர்சனங்கள் ஊடகங்களை ஆக்ரமித்துக் கொண்டன.
மாநாடு நடக்குமா? அப்படியே நடந்தாலும் அம் மாநாட்டில் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்களா? என்ற வினாக் கணைகளும் முன் வைக்கப்பட்டன.
இவை எல்லாம் முறியடிக்கப்பட்டு, மாநாட்டுக் கான அழைப்பிதழ்களும், விளம்பரங்களும் வெளிவந்து, மாநாட்டுக்கான பந்தல் போன்ற அடிப்படைப் பணிகள் நிறைவுற்று, தமிழ்நாடு, இந்திய நாடு என்கிற எல்லைகளையும் கடந்து பெரும் எதிர்பார்ப்பு என்கிற கட்டத்தை அடைந்த நிலையில்,
தமிழ்நாட்டில் நடைபெறும் அ.இ.அ.தி.மு.க. அரசு - அரசு என்ற நிலைப்பாட்டையும் தாண்டி, காழ்ப்புணர்ச்சியுடனும், அரசியல் உள்நோக்கத் துடனும், இந்த மாநாடு நடைபெற்றால் அதன் பலன் அரசியலில் தமக்கு எதிராக உள்ளவர் களுக்குப் போய்விடுமோ என்ற அச்சத்துடன், மாநாட்டுக்குக் காவல்துறை அனுமதி இல்லை என்கிற சிறுபிள்ளைத்தனமான ஒரு செயலில் இறங்கியது வேதனைக்குரியது.
நீதிமன்றம் வரை செல்லவேண்டிய ஒரு நிலை - மாநாடு நடைபெற்ற நேரத்திற்கு மூன்று மணிக்கு முன்பு வரைகூட எந்த இடத்தில் மாநாடு நடைபெறும் என்ற கேள்விக்குறி செங்குத்தாக மக்கள் மத்தியில் எழுந்து நின்றது.
இது - இதற்கு முன்பு எங்கும் கேள்விப்படாத ஒரு நிலையாகும். என்றாலும் இறுதி வெற்றி யாருக்கு? இறுதியாகச் சிரிப்பவர்கள் யார்? என்ற கேள்விக்கு - நியாயத்தின் பக்கமும், உண்மையின் பக்கமும்தான் என்ற விடை சென்னை உயர்நீதி மன்றத்தின் மூலம் கிடைத்து விட்டது.
அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் வரை சென்று அதன் கதவுகளைத் தட்டினார்கள் என்றால் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெப்பம் எத்தனை டிகிரி என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் வாயு வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இல்லை, இல்லை - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., திட லிலேயே நடத்திக் கொள்ளலாம் என்று உயர்நீதி மன்றத்தின் ஆணையை ஏற்று மூன்றே மணி நேரத்தில் மாநாட்டுப் பந்தலில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள், இமாலய சாதனை என்றே சொல்ல வேண்டும்.
தோழர்களிடையே ஒரு வெறி உணர்வுடன் கூடிய உற்சாகம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் சக்திகள் - அதிகாரப் பீடங்கள், தம் மனப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுமா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஊடகங்கள் ஓர் ஆரோக்கியமான திசையில் தம் பயணத்தைத் தொடங்கினால் கூட நல்லதுதான்.
மாநாடு திட்டமிட்டபடி அதே இடத்தில் நடந்தது என்பது உட்பட மாநாட்டின் ஒவ்வொரு நட வடிக்கையும் கண்ணில் ஒத்திக் கொள்ளத் தக்கதாக, கண்ணியமான ஒளியுடன், மிகுந்த கட்டுப்பாட்டோடு, நீதிமன்றத்தின் கட்டளை களையும் இன்னொரு பக்கத்தில் கவனத்தில் கொண்டு, எடுத்துக்காட்டான மாநாடாக நடை பெற்றதை வரலாறு என்றென்றும் சிறப்பான வகையில் பாடம் சொல்லிக் கொண்டே இருக்கும் என்பதில் அய்யமில்லை.
நேற்று காலை நடைபெற்ற ஆய்வு அரங்கம், மாலையில் நடைபெற்ற மாநாடு - இவற்றில் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துகள், நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள் மாநாட்டின் தகுதியையும், மாண்பினையும் உலகத்தின் உச்சி மேட்டுக்கே கொண்டு சென்றுவிட்டன என்று சுருக்கமான சொற்களில் சொல்லலாம். தடைகளையெல்லாம் தாண்டி பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்தது சாதாரணமானது அல்ல - மக்களின் இந்த மனக் கண்ணாடியைப் பார்த்தாவது மனமாற்றம் அடைய வேண்டியவர்கள் மனமாற்றம் அடைவார்களா? எங்கே பார்ப்போம்! 13-8-2012
எங்கள் இயக்கத் தோழர்களுக்கு ஈடு இணை யார்?
இலட்சியத்தையே சுவாசக் காற்றாகக் கொண்ட கருஞ்சட்டைத் தோழர்களுக்கு நிகர் யார்?
தான் வாழ்கிற போதும் கொள்கைக் கோட்பாடுகளையே கால்களாகக் கொண்டு நடக்கின்றனர். தனது மரணத்திற்குப் பிறகும் தாம் சுவாசித்த கொள்கைக் காற்றில் எந்த வித மாசும், மாற்றமும் வந்து சேர்ந்துவிடக் கூடாது என்னும் தன்மையில் மரணசாசனம் எழுதி வைத்து விட்டல்லவா மறைகின்றனர்?
இப்பொழுது இன்னும் ஒரு படி மேலே! சத்தை இழந்து செத்துப் போகும் இந்த உடல் மண்ணுக் கும் நெருப்புக்கும் இரையாவதை விட ஏன் பிறருக்குப் பயன்படக்கூடாது என்று சிந்திக்க எத்தனைப் பேர்களால் முடியும்?
மரணம் என்றாலே பெரும் அச்சத்தில் உறையும் மக்கள் மத்தியிலே தந்தை பெரியார் இயக்கத்தில் தம்மை ஒப்படைத்துப் பக்குவப்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் தனது உடலை மருத்துவக் கல்லூரி களில் ஒப்படைக்க முன்வர ஆரம்பித்து விட்டார்கள்.
மருத்துவம் பயிலும் இரு பால் மாணவர் களுக்குப் பயன்படவேண்டும் என்று கருது கிறார்கள். உயிரோடு இருக்கும்போதே சம்பந்தப் பட்ட மருத்துவ மனைகளில் பதிவு செய்தும் வைத்துள்ளார்கள்.
இதோ ஒரு பெரியார் பெருந்தொண்டர்: கரூர் நகர திராவிடர் கழகத்தின் முன்னாள் தலைவர் மானமிகு கு.முருகேசன் அவர்கள் (வயது 87), அவருடைய பிறந்த நாள் கடந்த பத்தாம் தேதி.
அதனை ஒரு விழாவாகக் கூட எடுத்துக் கொள்ள வில்லை. அந்த நாளில் அவர் என்ன செய்தார் தெரியுமா?
எண்ணிப் பார்த்தால் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன! தனது மரணத்துக்குப் பின் தம் உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு கரூர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க. இராசசேகரனிடம் அளித்தார்.
அத்துடன் நிறுத்திக் கொண்டாரா? தான் மட்டுமா? தன் குடும்பமே அந்தக் கொள்கைத் தடத்தில் பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எத்தனை பேர்களால் சாத்தியப்படக்கூடியது? தன் இணையர் மருதாம்பாள், மகன் சித்தார்த்தன் ஆகியோரும் தங்கள் உடல்களை தங்கள் மரணத்துக்குப் பின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப் படைக்கும் பத்திரத்தில் கையொப்பமிட்டு அளித் தனர்.
சிறிய அளவில் வீட்டு அளவில் எளிமையான நிகழ்ச்சியாக அமைந்தது இது. அவருக்குக் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பற்றி எழுத்தாளர் சோலை அவர்களால் எழுதப்பட்ட வீரமணி - ஒரு விமர்சனம் என்ற நூலை மாவட் டக் கழகத் தலைவர் அளித்துப் பாராட்டினார்.
இதற்கு ஒத்துழைப்புத் தந்த முருகேசனார் குடும்பத்தைச் சேர்ந்த மகள் மலர்க்கொடி, மகன் சித்தார்த்தன், அழகிரி, இணையர் மருதாம்பாள் ஆகியோருக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதன் மகிழ்வாக பெரியார் பெருந்தொண்டர் முருகேசனார் விடுதலை வளர்ச்சிக்கு ரூ நூறு நன்கொடையையும் அளித்தார்.
இப்பொழுது சொல்லுங்கள். திராவிடர் கழகத் தோழர்களுக்கு ஈடும் இணையும் இந்தத் தரணி யிலும் உண்டோ?
செய்தி: டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் மீது மத்திய அரசு நட வடிக்கை எடுக்காவிட்டால் கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? - தோழர் தா. பாண்டியன்
சிந்தனை: பரவா யில்லை தீர்மானங்கள்மீது குறை சொல்ல முடிய வில்லை. அதுவரை மாநாட்டுக்கு வெற்றிதான்; அகில இந்தியக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட இந்திய அரசுக்கு அழுத் தம் கொடுக்க செய்ய தோழர் தா.பா. முன்வரு வாரா என்று தெரிய வில்லை.
செய்தி: இன்றைய நவீன உலகிற்கு ஏற்றாற் போல அறிவியல் தொழில் நுட்ப முறையில் வேதங்கள் பதிவு செய்யப்பட்டுப் பாது காக்கப்பட வேண்டும். - சிருங்கேரி சங்கராச்சாரியார்
சிந்தனை: மிலேச் சர்கள் கண்டுபிடித்த நவீனக் கருவிகளைக் கொண்டு வேதங்களைப் பாதுகாப்பது ஆகம விதி களுக்கு உகந்தது தானா? அப்படியே வேதங்கள் பாதுகாக்கப்படுவது எதற் காக? பிராமணன் - சூத்திரன் பேதங்கள் பாதுகாக்கப்படத்தானே!
சும்மா ஆடுமா அவா ளின் குடுமி? 14-8-2012
இந்தியா கொடுக்க வேண்டிய அழுத்தம்
டெசோ சார்பில் சென்னையில் நடத்தப்பெற்ற ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பதினான்கு தீர்மானங்களும் காலத்தாற் நிறைவேற்றப்பட்டவை - முத்தாய்ப் பானவை!
ஈழத் தமிழர் வரலாற்று ஓட்டத்தில் டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டப்படத் தகுந்தவையாகும்.
முதல் இரண்டு தீர்மானங்களும், ஈழத்தில் தமிழர்கள் படுகொலை (Genocide) செய்யப் படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்ததாகும். அங்கே இனப்படுகொலை நடந்தது என்பதை அய்.நா.வால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட குழு அறிக்கை கொடுத்தாகிவிட்டது.
அதனடிப்படையில் அய்.நா.வின் மனித உரிமைக் குழுவில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. (ஜெனீவாவில் நடக்க இருந்த மனித உரிமைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த அடியாட்களால் தாக்கப்பட்டனர் என்பது எத்தகைய கேவலம்!)
இத்தகு சூழ்நிலையில்தான் டெசோ சார்பில் கூட்டப்பட்ட மாநாட்டில் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஒரு மேற்பார்வைக் குழுவை நியமித்திட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ள நாடுகளுக்கு அடிப்படையான கடமை உணர்ச்சி ஒன்று இருக்கிறது. அத்தீர்மானம் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக வற்றிப் போய்விடாமல், உயிர்த் துடிப்புடன் செயல்படுத்தப்படுவதற்கான முயற்சிகளை உந்துதலைக் கொடுக்க வேண்டாமா? ஜெனீவா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த இந்தியாவுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கவில்லையா?
இந்தியாவுக்கு இருக்கும் கடமையினை டெசோ மாநாட்டுத் தீர்மானம் நன்றாக வலியுறுத்தியுள்ளது.
இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய போருக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ள மறுவாழ்வுத் திட்டங்களைப் பார்வையிட இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் (பா.ஜ.க.) தலைமையில் 12 பேர் கொண்ட குழு அதிபர் ராஜபக்சே உட்பட பலரையும் சந்தித்தது.
தமிழர்களுக்கு ஓரளவுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வழிவகுக்கும் 13 ஆவது சாசன ஒப்பந்தம், 1987 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றியெல்லாம் பேசப்பட்டதாகவும், அவற்றை நிறைவேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டதாகவும் குழுவின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார். ஆனால் அவ்வாறு தாம் உறுதியளித்ததாக இந்தியக் குழுவிடம் கூறவேயில்லை என்று கூறிவிட்டாரே அந்தச் சத்தியப் புத்திரர் ராஜபக்சே!
இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் தலைமையில் அந்தக் குழு சென்றிருந் தாலும் அது இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டதுதான். அந்தக் குழுவையே அவமதிக்கும் வகையில் இப்படி அந்நாட்டு அதிபர் நடந்து கொண்டிருக்கிறாரே - இது குறித்துக் கூட இந்திய அரசு விளக்கம் கேட்டிருக்க வேண்டாமா?
சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைக் கூட அலட்சியப்படுத்தும் போக்கில் நடந்து கொண்டு வருகிற இலங்கை இனவாத பாசிச அரசை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, உரிய தண்டனையை அளிக்காவிட்டால், உலகின் பல பகுதிகளிலும் பல ராஜபக்சேக்கள் தோன்றுவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களுக்கு ஆதரவாக வெள்ளை அரசுக்குப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வரவேண்டும் என்று அய்.நா.வில் தீர்மானத்தை முன்மொழிந்த இந்திய அரசு, நமது தொப்புள் கொடி உறவு உள்ள ஈழத் தமிழர்கள் விடயத்தில் மட்டும் ஏன் அது போன்ற முயற்சியில் ஈடுபடக்கூடாது? டெசோ மாநாட்டில் இந்த அழுத்தம் கலந்த உணர்வு தலை தூக்கி நின்றது என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.14-8-2012
டவுட் தனபாலு
லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் : இலங்கைத் தமிழர்கள் பிரச்னையை, வட மாநிலத்தவர்கள் அறிந்துகொள்ளவே இல்லை. ஈழத்தமிழர் என்றால் விடுதலைப் புலிகள்; பயங்கரவாதிகள் என்றே கருதி வருகின்றனர்.
எனவே, ஈழத் தமிழர்களின் உண்மை நிலையை விளக்க, வடமாநிலம் முழுவதும் கூட்டங்களை டெசோ அமைப்பு நடத்த வேண்டும்.
டவுன் தனபாலு: சுத்தம்...! உள்ளூர் ராயப்பேட்டையில, ஒரு மாநாட்டை நடத்தி முடிக்கிறதுக்குள்ள தி.மு.க.வினருக்கு நாக்கு தள்ளி போயிடுச்சு... இதுல, வடமாநிலங்களுக்கும் வந்து, உங்க வீரத்தைக் காட்டுங்க கைப்புள்ள...ன்னு, வெத்தலை, பாக்கு வைக்குறீங்களே...!
தினமலர்: 14.8.2012
யாருக்கு நாக்குத் தள்ளிப் போச்சு என்பது ஊருக்கும், உலகுக்கும் தெரிந்த விஷயம்! என்னென்ன ஜகதலப்பிரதாபம் எல்லாம் செய்து பார்த்தும் கடைசியில் மூக்குடைபட்டு பார்ப்பனக் கூட்டத்தின் வயிறு வெடிச்சுப் போச்சே - என்ன பதில்?
யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?
இந்தியாவின் தென்கோடியில் கருநாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் ஒன்றுள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் இதுவும் ஒன்று. (காஞ்சி மடம் இந்தப் பட்டியலில் வராது.)
இந்தச் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளாம். சென்னையில் டேரா போட்டுள்ளார். (மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்துக் கொண்டு வழக்கம் போல இருக்காளாம்.)
19.8.2012 கல்கி அட்டைப்படம் போட்டு ஆராதித்து சாங்கோபாங்கமாகப் பேட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும் நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:
‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’
என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.
உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.
இந்த மனிதகுல விரோதிகள் இவர்கள்! சகமனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கக் கூடிய மனிதநேயமற்ற வகையில் மனித உருவில் நடமாடும் பேர்வழிகள்தான் ஆச்சாரியார்களாம் - ஜகத்குருக்களாம்- ஸ்ரீலஸ்ரீகளாம்.
நியாயமாக தீண்டாமையைப் பச்சையாகப் பேசும் இந்த வர்ணாசிரம விரியன்கள், பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின் கீழ் வெஞ்சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் துணிச்சலாக அதனைச் செய்யத்தானே வேண்டும்? நம் அரசுகளுக்கு ஏது அந்த முதுகெலும்பு?
குறிப்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், சிருங்கேரி சங்கர மடத்துக்கும் ஆகாது - அந்த அளவுக்கு ஜென்மப் பகை என்பது வேறு விஷயம்! 15-8-2012
பொத்தனூர் செல்வோம் - வாருங்கள்!
நாமக்கல் மாவட்டம், பொத்தனூர். அது ஓர் ஊராட்சிதான். அந்த ஊராட்சிக்கு ஒரு வரலாறு உண்டு. அவ்வூர் ஊராட்சித் துணைத் தலைவராகவும், தலைவராகவும் இருந்து (1957-1976) தொண்டறம் செய்த வர் ஒருவர் உண்டு. அவர் ஒரு கொள்கை வீரர் - கருஞ்சட்டைக்காரர் - தந்தை பெரி யார் அவர்களின் சேனையைச் சேர்ந்தவர்.
1944 இல் கல்லூரியில் படிக்கும்போதே நீதிக் கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதே கழகத்தில் இணைந்தவர்.
இவர் ஊராட்சித் தலைவராக இருந்த போது ஓர் ஆணை பிறப்பித்தார். ஜாதி யின் பெயரைக் குறிக்கும் கடைகளுக்கோ, உணவு விடுதிகளுக்கோ அனுமதி (லைசென்ஸ்) வழங்கப்படமாட்டாது என் பதுதான் அந்த ஆணை. இப்படி ஆணை பிறப்பித்த ஊராட்சியை ஏன் கலைக்கக் கூடாது என்று அரசிடமிருந்து தாக்கீது வந்தது என்றால் பாருங்களேன்.
கருஞ்சட்டைத் தோழர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கொள்கை முத்தி ரையைப் பொறிக்கக் கூடியவர்கள் ஆயிற்றே!
அந்தக் காலத்திலேயே இன்டர்மீடியட் வரை படித்தவர். கழகப் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு சிறைவாசம் ஏகியவர். மிசா கைதியாக ஓராண்டு இருந்தது அந்த அமைதியின் உருவம்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (டிரஸ்டின்) தலைவர் - ஈரோடு மண்டலத்தின் கழகத் தலைவர்.
அய்யாவின் அன்புக்குரிய செல்லப் பிள்ளை. அடக்கத்தின் மறுபதிப்பு. க.ச. என்று அன்போடு அனைத்துத் தரப்பாலும் அனைத்துப் பாராட்டப்படக்கூடியவர் நமது பொத்தனூர் க.சண்முகம் அவர்கள்.
மாணவர் பருவத்தில் கழகத்தின் படிக் கட்டில் காலைப் பதித்த அந்தத் தோழர் இன்று முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர்! வயது 90. காலம்தான் வேலையைக் காட்டியது என்றாலும், இன்று அவரை நோக்கினாலும் முதுமைக் குலை தள்ளவில்லை. தெள்ளிய நீரோட்டம் போன்றே காட்சியளிக்கிறார்.
வரும் 19 ஆம் தேதி அந்தப் பெருமக னாருக்கு அந்தப் பொத்தனூரில் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா! தொடர்ந்து நாமக் கல் வட்டார திராவிடர் கழக மாநாடும் நடைபெற உள்ளது.
நமது தமிழர் தலைவர் தலைமை வகிக் கிறார். பெரியார் பெருந்தொண்டர்களைப் பாராட்டும் வகையில் பல்வேறு யுக்தி களைக் கையாண்டு பெருமைப்படுத்தி வருபவர் நமது தமிழர் தலைவர்!
காலை முதல் பிற்பகல் இரண்டு மணி வரை பல்வேறு அம்சங்களுடன் பிறந்த நாள் விழாவும், வட்டார மாநாடும் களை கட்டப் போகின்றன.
தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்வதைக் கடமையாகக் கருதி வர இருக்கிறார்கள்.
கலை நிகழ்ச்சிகளும் உண்டு - கட் டாயம் வாருங்கள் தோழர்களே!
திராவிடர் கழகம் பிறந்ததே அந்தச் சேலம் மாவட்டத்தில்தான்! ஒருங்கிணைந்த சேலம் மாவட்டம் என்பது மிகப் பெரியது. இன்றைக்கு அது சேலம் மாநகரம், சேலம் மாவட்டம், ஆத்தூர் மாவட்டம், மேட்டூர் மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் என்று பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுக் களப்பணி ஆற்ற வேண்டிய அளவுக்குக் கழகப் பணிகள் இன்று வளர்ந்துள்ளன. அன்று ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவராக இருந்து அரும்பணி யாற்றிய அருமைத் தலைவர் நமது மானமிகு க.ச. அவர்கள்.
அந்த மாவட்டம் நீதிக்கட்சி, தன்மான இயக்க காலந்தொட்டு தந்தை பெரியார் அவர்களின் கொள்கைத் தொட்டிலாக இருந்து வருவதாகும்.
அந்த வரலாறு படைத்த மாவட்டத்தில், பொத்தனூரில் சங்கமிப்போம் வாருங்கள் கழகத் தோழர்களே!
நாம் சந்திப்பது என்றால் கொள்கை யின் சங்கமம் என்றுதானே பொருள்! இலட்சிய முழக்கத்துக்கான ஏற்பாடு என்றுதானே அர்த்தம்!
வேலைகள் அதிகமாக நம்மைச் சந்திக் கும் வேளை இது. வாருங்கள் தோழர்களே!
கழகக் குடும்பங்களைச் சந்திக்கும் பொழுதுதான் எத்தனை உற்சாகம்! ஆர்வப் பெருக்கு!
நமது கழகப் பொதுக்குழு, திருச்சியில் முடிந்த மறுநாள் - மகிழ்ச்சியோடு கூடு வோம் பொத்தனூரில். வாரீர்! வாரீர்!!
15-8-2012
Post a Comment