இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல்
தமிழ் சமுதாயத்திற்கு ஓர் ஆவணம்!
தமிழர் தலைவர் அறிவார்ந்த விளக்கவுரை
இனமான பேராசிரியர் க.அன்பழகன் பற்றி இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற தலைப்பில் முனைவர் ந.க. மங்களமுருகேசன் தொகுத்த நூல் தமிழ் சமுதாயத்திற்கு ஒரு ஆவணம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
இந்த நாள் நம்முடைய இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் ஏனென்றால் நம்முடைய இயக்கம் பிரச்சார பெரும்புயலை சூறாவளியாக நாடெங்கும் நடத்தியிருக்கிறது என்றாலும் போதிய தகவல்களை அவ்வப்பொழுது ஆவணப்படுத்தக் கூடிய வாய்ப்பு திராவிடர் இயக்கத்திற்கு வெகு வெகு குறைவாக இருந்த காலகட்டம் என்று ஒன்று உண்டு.
பொதுவாகவே நீதிக்கட்சி என்றழைக்கக் கூடிய பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாக தொடங்கி பிறகு திராவிடர் இயக்கமாக மலர்ந்து வளர்ந்து சாதித்துள்ள இந்த இயக்கத்தின் அடிநாள் வரலாறுகளைப் பற்றிய குறிப்புகளைத் தேடினால் அப்பொழுது நடத்தப்பட்ட பல ஏடுகள் இப்பொழுது கைக்குக் கிடைப்பதில்லை.
மிகவும் நாங்கள் தொல்லைப்பட்டு திராவிடன் போன்ற இதழ்களை சேகரித்துஅல்லது ஜஸ்டிஸ் என்று ஆங்கிலத்திலே நடந்த அந்த ஏடுகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்தோம். எப்படி இருந்தது என்பதையாவது பார்க்கக்கூடிய அளவிலேதான் இருந்தது.
சிலவற்றைத்தான் தொகுத்திருக்க முடியும். அதற்கும் மிக சிறப்பான பதிலை நம்முடைய பேராசிரியர் அவர்கள் இனமானப் பேராசிரியர் அவர்கள் அற்புதமாக அளித்திருக்கிறார்கள் என்பதை இந்த உரையிலே சொன்னார்கள்.
தமிழனைப் போல சிறந்த அறிவாளியும் இல்லை. தமிழனைப் போல தன்னை மறந்தவனும் இல்லை என்று அழகாகச் சொன்னார்கள். மற்றவர்களுடைய வரலாற்றை எல்லாம் தொகுத்தவன் - தன் வரலாற்றை மறந்துவிட்டானே? என்பதை மிக அழகாக எடுத்து சுட்டிக் காட்டினார்கள்.
ஜஸ்டிஸ் கட்சி இந்த நாட்டை ஆண்டிருக்கிறது. 1916லே தொடங்கி பிறகு 1920, 1926 பிறகு 1936 என்று வரலாற்றிலே பல இடங்கள் வந்திருக்கின்றது. ஏனென்றால் இது வரலாற்று ஆய்வாளர்கள் - அறிஞர்கள் சிறப்பாக குழுமியிருக்கக்கூடிய ஒரு அறிவு சார்ந்த அவையாகும்.
இந்த அவை அந்த நிலையிலே இதை நினைவூட்டுவது மிக மிக முக்கியம் தேவை என்று கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.
நூல்களைத் தேடிப் பார்த்தேமேயானால் நீதிக்கட்சி ஆட்சி எவ்வளவு சிறப்பானதொரு ஆட்சி என்பதைப் பற்றி ஏடுகள் தொகுக்கப் படவில்லை.
இரண்டு மூன்று புத்தகங்கள்தான் ஆங்கிலத்திலே கிடைத்தன. அந்த புத்தகங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக. நாங்கள் திராவிடர் கழகத்தின் சார்பிலே அவைகளைத் தேடி ஆங்கிலத்திலே இருந்ததால் வெளியிட்டு இன்றைக்கு நீதிக்கட்சி வரலாறு தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு விடுதலை ஏட்டிலே தொடர்ந்து வந்து கொண்டி ருக்கிறது.
விடுதலை படிக்கக் கூடிய வாசக நேயர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும். 1917 ஒரு வரலாறு. ஒரே ஆண்டில் எத்தனை நிகழ்வுகள்? எத்தனை மாநாடுகள் இவை அத்தனையும் உண்டு. அந்த செய்தி விடுதலையிலே தொடர்ந்து கட்டுரைகளாக வெளியிடப்பட்டு வருகிறது. அவை தொகுக்கப் பட்டு தமிழ் நூலாக ஆக்கப்படும் விரைவிலேயே.
வரலாற்றுக்குறிப்புக்காக நீதிக்கட்சியினுடைய கொள்கைகள் - அதனுடைய சாதனைகள் - மாநாடுகள் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Foundation) என்பதுதான் அதற்கு அதிகார பூர்வமான பெயர். எஸ்.அய்.எல்.எஃப் என்று சொல்லுவார்கள்.
சேலம் மாநாட்டிலே அந்தப் பெயரைப் போட்டுத்தான் மாநாட்டையே நடத்தினார்கள். அன்றைக்கு ஜஸ்டிஸ் பத்திரிகையிலே சர்.ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் எழுதிய குறிப்புகள் Mirror of the year தலையங்கங்களின் தொகுப்பு இருக்கிறது. அற்புதமான ஆங்கிலம் - சிறந்த கருத்தோட்டம். பெரிய வரலாற்றுக் குறிப்புகள் இவைகள் எல்லாம் தொடங்கியது.
சர். ஏ.ராமசாமி முதலியார் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிய நேரத்திலே ஒரு புத்தகத்தை நண்பர் பேராசிரியர் சண்முசுந்தரம் அவர்கள் எங்களுக்கு அளித்தார். மறைந்தும், மறையாமல் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்ற பாலகாந்தன் அவர்கள் அவர் உயிருடன் இருக்கும் பொழுது சிறப்பாகச் சொல்லுவார்கள்.
நாங்கள் வெளியிட்டு அதை வெளியே கொண்டு வந்தோம். ரொம்ப பேருக்கு ஆச்சரியம். அந்த நூலுக்கு பெயர்தான். Mirror of the year அதே போல 1929 முதல் சுயமரியாதை மாநாடு உள்பட ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டின் தொகுப்புகள் இந்தத்தொகுப்பு கடந்த ஜனவரியிலே சரியாக திருச்சியிலே நம்முடைய டாக்டர் ராமசாமி அவர்களால்தான் வெளியிடப்பட்டது.
வரதராஜீலு என்று சொல்லக்கூடிய அவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். அவர்கள் அந்த வரலாற்றை எழுதியவர்கள்.
முன்னாள் மேயர் சுந்தர்ராவ் நாயுடு சிந்தாதரிப் பேட்டையில் சிலை வைக்கப்பட்டிருக்கிறதே- சுந்தர்ராவ் அவர்களுடைய தந்தையார் வரதராஜீலு அவர்கள். இப்படி ஒரு மூன்று, நான்கு நூல்களையே கண்டுபிடிப்பதற்கு மிக சிரமமாக இருந்தது.
ராஜா சர் முத்தையா செட்டியார் அவர்களிடத்திலே பேசிக்கொண்டிருந்த பொழுது அவர் ரொம்பத் தெளிவாக ஒரு முறை சொன்னார். இந்த மூன்று நூல்களுக்கு மேலே எதுவும் புத்தகம் கிடையாது. நீங்கள் அதைத்தேடிக் கண்டு பிடித்தீர்க ளேயானால் போதும். ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏதாவது ஆதாரம் வேண்டுமானால் இந்த நூல்களிலிருந்துதான் கிடைக்கும்.
திராவிடர் இயக்க காலத்திலே, சுயமரியாதை இயக்க காலத்திலே தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் குடிஅரசு பதிப்பகம், உண்மை விளக்கப் பதிப்பகம், அது போல பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றில் சுப.வீரபாண்டியன் அவர்கள் சொன்னது போல 147 ஏடுகள் வந்தன. அவை எல்லாம் யாரும் பாதுகாத்து வைத்திருப்பதாக இல்லை.
பேராசிரியர் நடத்திய ஏடு புதுவாழ்வு ஓராண்டு நடந்தது என்று சொன்னால் பேராசிரியர் அவர்களிடத்திலே அந்த புதுவாழ்வு தொகுப்பு இருக்குமா என்பது சந்தேகம். பலர் நூல் எழுதியிருப்பார்கள். அவர்களது ஒன்றாம் பதிப்பு, இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு வந்திருக்கும். அதுவே அவர்களிடம் இருக்காது. ஆகவே இந்தப் பணி எவ்வளவு சிறப்பானது என்பதற்காக சொன்னேன்.
பேராசிரியர் மங்களமுருகேசன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். (கைதட்டல்). ஏனென்றால் அவர்கள் இன்றைக்கு தொகுத்து அளித்திருக்கக்கூடிய இனமான தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் என்ற இந்த நூல் சமுதாயத்திற்கு ஒரு பெரிய ஆவணம். இதுதான் மிக முக்கியம்.
இன்னமும் பெரியார் தேவையா? என்று கேட்கக் கூடிய சில புரியாதவர்கள் இருக்கிறார்கள். அறியாமையில் உளறுகிறார்கள். நோயிலேயே தலைசிறந்த கொடுமையான நோய் ஒன்று இருக்கிற தென்றால் அது அறியாமை நோய். இந்த அல்சைமர்சை விட, அதாவது செலக்டிவ் அம்னீ சியா என்று சொல்லுகிறார்கள் பாருங்கள். மறதி நோய் என்று. அந்த மறதி நோயைவிட ரொம்ப கொடுமையான நோய் தமிழனுக்கு இருக்கிறது.
அந்த நோய்க்காவது சிகிச்சை உண்டு. பல பேருக்கு இதை நினைவூட்ட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் வரலாற்றையே மறந்துவிட்டோம்.
தன்னுடைய தாயை அடையாளம் காண வில்லை. இந்த நோய்க்கு ஆளான பல பேரை பார்த்தீர்களேயானால் வீட்டில் இருப்பார்கள். சில பேர் உளறிக்கொண்டிருப்பார்கள். இன்றைக்கு நம்மிடத்தில் சில பேர் உளறுகிறார்கள் என்று சொன்னார்கள் பாருங்கள். அந்த நோய்க்கு ஆளானவர்கள்தான் அவர்கள். அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்களே தவிர, மதிக்கப்படவேண்டியவர்கள் அல்ல. இன்னும் கேட்டால் மதித்து பதில் சொல்லக்கூடியவர்களும் அல்ல. அவ்வளவு வேதனையாக இருக்கிறது. பெரியார் அவர்களுடைய பயணம் எவ்வளவு முக்கியமான பயணம் என்பதைச் சொல்லி பெரியார் பிறந்திருக்காவிட்டால்....?
நாமெல்லாம் என்ன நிலைக்கு ஆளாகியிருப்போம். ஒரே ஒரு கேள்வி. அந்த கேள்விக்கு விடை காணட்டும். பெரியார் பிறந்திருக்கா விட்டால் நாமெல்லாம் முழங்காலுக்கு கீழே வேட்டிகட்ட வாய்ப்பு உண்டா? தோளிலே துண்டு போடக்கூடிய உரிமை உண்டா? நினைத்துப் பார்க்க வேண்டும்.
படிக்கிற உரிமை மற்ற உரிமைகள் எல்லாம் இருக்கட்டும். தெருவில் நடக்கிற உரிமை உண்டா? அந்த கொடுமைகள் எல்லாம் இருந்திருக்கின்றன. பேராசிரியர் அவர்களைப் பற்றி விளக்குகிற நேரத்திலே சுப.வீ. அவர்கள்இருக்கிறார்கள்.
ஆர்க்காட்டார் அவர்கள் அவரது பல்வேறு சிந்தனைகளை இணைத்து இங்கே சொன்னார்கள். இன்றைக்கு பெரியார் தேவைப்படுகிறார் என்று சொல்லுவதற்கு காரணம் என்ன? இன்றைக்கும் தைரிய மாகச் சொல்லுகின்றானே.
தமிழனுக்குப் புத்தாண்டு சித்திரை தான் என்று சொல்லுகின்றானே. எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள். பகுத்தறிவு சாதாரண அறிவு. சிறு பிள்ளை கூட ஒரு கேள்வி கேட்குமே.
தமிழனுக்கு ஆண்டு எது? பிரபவ, விபவ, சுபவ என்று சொல்லுவது உண்மையாக இருக்குமே யானால் ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்லட்டும். துக்ளக் அய்யருக்கு என்ன வேலை என்றால் இந்த மாதிரி வேலை தான் பண்ணிக்கொண்டிருக் கின்றார்.
இன்னும் பல வேலை பண்ணிக்கொண்டிருக் கின்றார். ரொம்ப மிக முக்கியமான வேலை என்னவென்றால் யாராவது அடையாளம் தெரியாத ஆளை கூப்பிட வேண்டியது. உடனே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிற மாதிரி சொல்லுவது.
காரணம் என்ன வென்றால் நம்முடைய தோழர்கள் சும்மா இருக்கிறார்கள். இலக்கியம் படித்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் அதுதான் தவறு. மறுக்க வேண்டிய நேரத்தில் மறுக்க வேண்டும்.
இதோ நம்முடைய பெருங்கவிக்கோ இருக் கிறார். பெருங்கவிக்கோ இந்த மாதிரி ஒரு கூட்டத்திற்குப் போனால் சும்மா இருக்க மாட்டார். பழைய காலத்தில் எப்படி சுய மரியாதைக்காரன் எப்படி மேடை ஏறி சட்டையைப் பிடிப்பானோ அது மாதிரி சட்டையைப் பிடிப்பதற்கு தயாரானவர்தான் அவர்.
இன்னமும் அந்த துணிச்சல் அவருக்கு இருக்கிறது. (கைதட்டல்). ஈழப்பிரச்சினை போன்ற சூழலில். நான் கலவரம் பண்ண வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்பட வேண்டும். ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட வேண்டும். அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.
சில நேரங்களில் ரொம்ப பகுத்தறிவு பேசியதாலே இப்படி ஆகிவிட்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பகுத்தறிவு என்றால் உணர்ச்சிக்கு ஆட்படக் கூடாது. அறிவு வயப்படு, அறிவு வயப்படு என்று சொல்லி எல்லாவற்றிலும் அறிவு வயப்பட்டுக் கொண்டேயிருக்கின்றான். சில நேரங்களில் அறிவு வயப்பட வேண்டியதும் உண்டு. உணர்ச்சி வயப்படவேண்டியதும் உண்டு. என்னுடைய மகளை, என்னுடைய தாயை ஒருவன் மான பங்கப்படுத்தினால் இதைப் பார்த்து அறிவு பூர்வமாக இதற்கு என்ன செக்சன் வரும்?
அதற்கு என்ன வரும் என்று யோசனை பண்ணிக்கொண்டிருப்பேனா? அப்பொழுது நாம் உணர்ச்சி வயப்படுவோம். அந்த உணர்வு நமக்கு வரவேண்டும்.
தமிழ் ஆண்டுகள் 60 என்று சொல்லுகின் றார்கள். 60க்கு மேல் இருந்தால் இவனுக்கு சொல்வதற்கு வழி கிடையாது. 60 ஆண்டுகளோடு முடிந்துவிட்டது என்பதை பகுத்தறிவு கண்ணோட்டத்தோடு ஏற்க முடியுமா? 60 ஆண்டுகள் என்று பெயர் சொல்லுகின்றார்களே இதில் ஒன்றாவது தமிழ்ச் சொல் உண்டா?
தந்தை பெரியார் ஏன் இவைகளைப் பற்றிக் கேள்வி கேட்டார். ராமையாவாக அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் நுழைந்த பேராசிரியர் அவர்கள் ஏன் அன்பழகனாக மாறினார்? நாராயணசாமியாக இருந்தவர் நெடுஞ்செழியனாக ஏன் மாறினார்?. அதனுடைய அடிப்படை என்ன? எந்த பெயர் இருந்தால் என்ன? என்று ஏன் அவர்கள் நினைக்கவில்லை?
படை எடுப்பிலேயே ரொம்ப ஆபத்தான படை எடுப்பு பண்பாட்டு படை எடுப்புதான். கைகளிலே கால்களிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியும். ஆனால் மூளையிலே போடப்பட்ட விலங்கு கண்ணுக்குத் தெரியாது.
அந்தத் திரையில் இருப்பதால்தான் தமிழன் இன்றைக்கும் அடிமையாக இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார் திராவிடர் சமுதாயத்தை திருத்தி மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்குவதுதான் என்னுடைய ஒரே வேலை என்று சொன்னார். இந்தத் தொண்டு செய்ய எனக்குத் தகுதி உண்டா என்று யாரும் கேட்காதீர்கள். இந்தத் தொண்டை யாரும் செய்ய முன்வராததால்தான் அந்தத் தொண்டை நான் மேற்போட்டுக் கொண்டு செய்கின்றேன் என்று பெரியார் சொன்னார்.
95 ஆண்டுகள் வரையிலே தன்னுடைய மூத்திர சட்டியைத் தூக்கிக்கொண்டு, அலைந்தார் தந்தை பெரியார். இந்த மக்களுக்கு அறிவு கொடுக்க வேண்டும். இந்த மக்களுக்கு உணர்ச்சி ஊட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் பாடு பட்டார்கள்.
பெரியார் நடத்திய மொழிப்போராட்டமா? அதனுடைய வேர் எங்கே என்று பார்த்தால் இந்த பண்பாட்டுப் படை எடுப்புதான் காரணம் என்றிருக்கும். அரசியல் போராட்டமா? அதனுடைய வேர் இங்கே தான் இருக்கும். பெரியார் சொன்ன உதாரணம் ரொம்ப அற்புதமான உதாரணம். இதுவரையில் யாரும் பதில் சொல்ல முடியாது.
எனக்கு அறிவுப் பற்றுதான் முக்கியம். வளர்ச்சிப் பற்றுதான் முக்கியம் என்று சொன்னார்.
இவருக்கு தேச பக்தி இல்லையா? என்று பெரியாரைப் பார்த்துக்கேட்டார்கள். பெரியார் சொன்னார். நான் மனிதனை நேசிக்கிறேன். எனக்கு மனிதநேயம்தான் முக்கியம் என்று சொல்லி ஒரே வார்த்தை கேட்டார்.
என்ன தேச பக்தி. எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்னைத் தொட்டால் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். என்னைப் பார்த்தால் ஏழு மைல் ஓட வேண்டும் என்று சொல்லுகின்றான். தீட்டு பட்டுவிடும் என்று ஓடுகிறான்.
பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்தவன். ஹலோ என்று சொல்லி என்னிடம் கைகுலுக்குகின்றான். இவன் எனக்கு அந்நியனா? அவன் எனக்கு அந்நியனா? என்று கேட்டார்.
இதுவரையில் யாராவது பதில் சொல்ல முடிந்ததா? அந்நியன் என்றால் யார்? எனக்கு பக்கத்து வீட்டுக்காரன்தான் அந்நியன் ஆரியன்-திராவிடன் அந்தி வேளையில் கலந்ததா? இடையூறாக இருந்ததா? என்பது பிரச்சினை இல்லை. திராவிடன், ஆரியன் என்பதை இரத்தப் பரிசோதனை செய்து கொண்டு பேசவில்லை. அது பிரச்சினை இல்லை. பண்பாட்டு அடிப்படையில் எங்களுடைய தமிழை இன்னமும் நீச பாஷை என்று சொல்லுகிறாய். தமிழன் அர்ச்சகனாக இருக்கக் கூடாது என்றுசொல்லுகின்றாய்.
தமிழன் கட்டிய கோவில், தமிழன் வடித்த சிலை, தமிழன் கொடுத்த மானியத்தைப் பெற்றுக்கொண்டு கோவில் கருவறைக்குள்ளே தமிழனை விட மறுக்கிறாய். இன்னமும் நீதிமன்றத்திற்குச் சென்று தடுக்கிறார்களே. இதுதானே பண்பாட்டு அடிமைத் தனம். இதை சொல்லிவிட்டு தந்தை பெரியார் சொன்னார்.
பேராசிரியர் அவர்கள் எங்கு சென்றாலும் பெரியாரின் தத்துவங்களை எல்லாம் பேசாத நாள்கள் எல்லாம் பிறவா நாள்கள் என்று கருதகக்கூடியவர். தெளிவாகச் சொல்லக்கூடியவர். பெரியார் என்ன சொன்னாரோ அந்தக் கருத்தை விரிவாக்கி அதை இன்றைய தலைமுறைக்கும், நாளைய தலைமுறைக்கும் உரையிலே எழுத்திலே இனமானப் பேராசிரியர் அவர்கள் வடித்துக் காட்டியிருக்கின்றார்.
அய்யா அருமையாகச் சொன்னார். சிறைச் சாலைக்குள்ளே போன ஒருவன் விடுதலையாகி வெளியே வரவேண்டும் என்றால் அப்படி வர வேண்டும், எந்த வழியாக அவன் உள்ளே போனானோ எந்த வழியாக அவனை அழைத்துக் கொண்டு போனார்களோ அந்தக் கதவு திறக்கப் பட்டு அவன் வெளியே வர வேண்டும். அதற்குப் பெயர்தான் விடுதலை.
ஆரியம் படமெடுத்தாடுகிறது தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் விளக்கவுரை
ஆரியம் படமெடுத் தாடுகிறது. தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேராசிரியர் கருத்தை எடுத்துக்காட்டி விளக்கவு ரையாற்றினார்.
சென்னை பெரியார் திடலில் 5.1.2012 அன்று இரவு முனைவர் ந.க.மங்களமுருகேசன் தொகுத்த இனமானத் தந்தை பெரியார் பாதையில் பேராசிரியர் நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
ஜன்னலை உடைத்துக்கொண்டு வந்தால் அதற்கு விடுதலை என்று பெயரா? அவருடைய நிலைமை என்ன ஆகும்? மறுபடியும் சிறையில்தானே இருக்க வேண்டும். குறுக்கு வழியிலேயே போக முடியுமா?
மூளையில் போடப்பட்ட விலங்கு
எப்படி மூளையில் விலங்கு போட்டு அவன் அடிமைப்படுத்தி வைத்தானோ. அந்த பண்பாடு, அந்த மொழி அந்த அமைப்பு, அந்த நாகரிகம் இவை மூலமாக நீ அடிமைபட்டாயே அந்த அடிமைத்தனத்திலிருந்து உன்னை வெளியே கொண்டு வரவேண்டாமா? என்று கேட்டுத்தான் அதனுடைய விளைவு தானே சுயமரியாதைத் திருமணம். அதனுடைய விளைவுதானே பார்ப்பனரை நீக்கிய நிலை.
நல்ல மந்திரம் சொல்ல ஆள் இல்லை என்று ம.பொ.சி.சொன்னதை எடுத்து சுப.வீ. சொன்னார். நல்ல மந்திரம் சொல்லியிருந்தால் என்ன சொல்லியிருப்பார்? இவர் வீட்டுப் பெண் காப்பாற்றப் பட்டிருக்குமா?
சோமன் முதலில், கந்தர்வன் இரண்டாவது என்று சொல்லி நமது சமுதாயத்தை அல்லவா இழிவுபடுத்தினான். சோமோ, பிரதமோ,விவிதே, கந்தர்வோ
என்று மந்திரம் சொன்னால் என்ன நிலை. முதலில் புரோகித திருமணம் செய்பவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால், மானமும், அறிவும் இருந்தால் முதலில் மந்திரத்தில் என்ன சொல்லு கிறார்கள் என்று புரிந்துகொண்டார்களா? அதை புரிந்துகொண்டால்அந்தமந்திரத்தை அனுமதிப்பார்களா?
பார்ப்பன மந்திரத்திற்கு என்ன அர்த்தம்?
மறைமலை அடிகளார் தமிழர் சமயம் என்ற நூலில் சொல்லுகிறார். பெரியாரை விட்டு விடுங்கள். மறைமலை அடிகளார் சொல்லுகிறார். ரிக்வேதத்தில் இருக்கிறது. மற்றதில் இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சொல்லுகிறார்.
ஆரிய முறைப்படி மந்திரங்கள் சொல்லி நடத்தக்கூடிய திருமணம் விவாஹம் என்பது நடந்தால் அதிலே எந்தப் பெண்ணும் முதலில் மணமகனுக்குக் கட்டி வைக்கப்படுவதில்லை. மணமகனுக்கு அவர் துணைவி ஆவதில்லை. மனைவியாவதில்லை. மாறாக முதலில் சோமனுக்கு, இரண்டாவது கந்தர்வனுக்கு, மூன்றாவது இவனுக்கு என்று ஆகி நான்காவதாகத்தான் மனுஷ ஜாதிக்கு மனைவியாகிறாள் என்று மந்திரம் சொல்லுகிறார்கள்.
மறைமலை அடிகளார் இந்த மந்திரத்தை விளக்கிச் சொல்லுகிறார். விவாக மந்திரார்த்த போதினி என்ற பெயரில் பார்ப்பனர்களே இந்த மந்திரத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்கள்.
பார்ப்பனர் தமிழர் அல்லர்
அது இன்றைக்கு மாற்றப்பட்டதா இல்லையா? தமிழன் தமிழனாக திராவிடனாக தன்னை உணரக் கூடிய நிலை வந்ததா இல்லையா? தமிழன் கண்டாய், ஆரியன் கண்டாய் என்று பிரிக்கும் பொழுது ஆரியன் வேறு தமிழன் வேறு என்று ரொம்பத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
பார்ப்பனர் தமிழர் அல்லர். ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார் மறைமலை அடிகள் அவர்கள். ஆனால் அதையும் தாண்டி தமிழன், தமிழன் என்று சொல்ல ஆரம்பித்தவுடனே பெரியார் பார்த்தார். எதை சொல்லி வைத்தால் இவனைத் தடுக்க முடியும் என்று பார்த்தார். ரொம்ப சரியான வார்த்தையைப் பிடித்தார்.
திராவிடன் என்று சொன்னால்தான் பார்ப்பான் மறுபடியும் தமிழன் என்ற போர்வையில் வரமாட்டான் என்று நினைத்து சொன்னார். தமிழ் பேசுகிறவன் எல்லாம் தமிழனா? என்று அண்ணா கேட்டாரே.
ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி ரொம்ப அற்புதமாக தமிழ் பேசக் கூடியவர். அவருக்கு வெள்ளி நா படைத்த பேச்சாளர் என்று பெயர். சீனிவாச சாஸ்திரி அற்புதமாக ஆங்கிலம் பேசுகிறார் என்பதால் அவர் வெள்ளைக்காரராக ஆகிவிடுவாரா? தமிழன் என்பதற்கு என்ன அடையாளம் என்பதை விளக்கும் பொழுது அண்ணா சொன்னார். சும்மா தமிழன், தமிழன் என்று எல்லோரையும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
தமிழன் என்றால் யார்?
மொழியால் தமிழன் மட்டுமல்ல. வழியால் தமிழன். விழியால் தமிழன் இந்த மூன்று சொல்லும் எவ்வளவு அழகாக செய்திருக்கிறது பாருங்கள்.
பார்வை என்றால் வெறும் பார்வையில்லை. அவனுடைய நோக்கு. அவனுடைய இலக்கு. இவை அத்தனையையும் பார்க்க வேண்டும்.
தமிழன் இதிலே அடிமையானான் பாருங்கள். அதனுடைய விளைவுதானே சித்திரை தமிழ் வருடப்பிறப்பு. தமிழ் வருடப் பிறப்பு ஆபாசமான அருவருப்பான கதை. நாரதனுக்கும், கிருஷ்ண னுக்கும் குழந்தை பிறந்தது என்று எழுதி வைத்திருக்கின்றான். இதைவிட கொடுமையான அசிங்கம். இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய ஆபாசம் வேறு உண்டா?
ஜாதியினால் எவ்வளவு பெரிய கொடுமை நடந்தது என்பதைப் பற்றிச் சொல்லும்பொழுது எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன.
இலக்கியம் படித்த அறிஞர்கள் நிறைய பேர் இந்த அரங்கத்தில் இருக்கிறார்கள். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே சொல்லு கிறார். 1944-லிலே திராவிட நாடு பத்திரிகையிலே நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை. பண்பாட்டுப் படை எடுப்பைப் பற்றி எழுதுகிறார்.
இலக்கியங்களில் பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பழைமை மலிந்து மக்கள் கருத்தைப் பாழாக்குகின்றன என்பது ஒரு புறமிருக்க புலவர் பெருமக்களுக்குரிய இலக்கணங்கள்தான் என்ன?
1944இல் பேராசிரியர் சொல்லுகிறார்
இந்த செய்தியை எப்பொழுது எழுதுகின்றார்? 1944இல். இன்றைக்கும் இதை நமது புலவர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. தந்தை பெரியார் ஏன் இலக்கியங்களை குறை சொன்னார்?
ஒன்றையும் அவர் விட்டு வைக்கவில்லை என்று சொல்லுவார்கள். அவரைத் தவிர வேறு யாராலும் துணிச்சலாக சொல்ல முடியாது. அதே உணர்வை பேராசிரியர் அவர்கள் கொஞ்சம் கூட மறைக்காதவர்.
அவர்கள் கையில் தூரிகை இருந்ததில்லை. அவர்களுடைய கையில் இருந்தது எக்ஸ்ரே கருவிகள்தான். உடைந்த எலும்பை உடைந்த எலும்பாகக் காட்டினால்தான் அதை ஒட்ட வைக்க முடியும் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது.
இலக்கணத்திலும் மூடநம்பிக்கை
இலக்கியங்களில் மூடநம்பிக்கை புகுந்தது முக்கியமல்ல. இலக்கணத்திலும் புகுந்தது என்பது தான் பேராசிரியர் அவர்களின் கருத்து. ரொம்ப ஆழமானது. இன்றைக்குப் பல புலவர்கள் இதைப் பற்றிப் பேச வேண்டும்.
பேராசிரியர் மேலும் சொல்லுகிறார்.
தொல்காப்பியத்திலே சில இடைச்செருகல் வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தை தழுவியவை. இவைகளின் உரைகளோ ஒப்பியன் மொழி தோன்றாக் காலத்திலேயே தமிழ் மொழி, வடமொழி ஒப்பிலக்கணங்களாக அமைந்தன. ஆனால் பிற்கால இலக்கணங்களில் அய்ந்தெழுத் தால் ஒரு பாடை உண்டென அறையவும் நாணு வரோ மக்கள் என்று இலக்கண கொத்து சாமிநாத தேசிகர் கூறுகின்ற அளவுக்கு தமிழ் இழிந்தது எதனால்? வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தை புறக்கணித்ததால் அன்றோ? இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்கு கற்பனை கேடு பயப்பதன்றோ பேராசிரியர் சொல்லுகிறார்.
ஆரியத்தின் ஊடுருவல்
ஆரியத்தின் ஊடுருவல் வருணாஸ்ரம தர்மம், மனுதர்ம தத்துவம், ஜாதி தத்துவம் எப்படி உள்ளே நுழைந்தது? தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்ற நிலையிலே மாணவராக அவர் உருவான காலகட்டத்திலேயே அவர் வெறும் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் மட்டும் படித்தவராக இல்லை. அய்யாவின் பகுத்தறிவுப் பல்கலைக் கழகத்தில் சுயமரியாதைப் பல்கலைக் கழகத்திலும் படித்தவராக இருந்த காரணத்தினாலே தெளிவாக இந்தக் கருத்தைச் சொல்லுகிறார். இலக்கியத்திற்குக் கற்பனை துணை என்றாலும் இலக்கணத்திற்குக் கற்பனை கேடு பயப்பதன்றோ வெண்பா பாட்டியல். (இங்கே அறிஞர்கள் உட் காந்திருக்கிறார்கள். இவர்கள் அளவுக்கு எனக்குத் தமிழ் தெரியாது. பேராசிரியர் அவர்கள் மாணவராக இருந்தபொழுது துணிச்சலாக சொல்லியிருக் கின்றார். பெரியாருடைய கருத்துகளை பின்பற்றும் பொழுது இந்த கருத்துகள் வரும்.)
வச்சனந்தி மாலை என்ற பிற்கால நூல் எவ்வளவு கற்பனையில் சூழ்ந்ததாகவும், கருத்துக்கு ஒவ்வாத தாகவும் அமைந்திருக்கிறது என்பதை புலவர்கள் நினைத்துப் பார்க்கட்டும். பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கலாமா?
ஏன் இந்த அறியாமை உருவெடுத்து வந்த பாட்டியல் ஏடு பல்கலைக் கழகங்களில் பாடமாய் அமைதல் வேண்டும்? (வச்சனந்தி மாலை என்பதை பல்கலைக் கழகத்தில் பாடமாக வைத்தார்கள். இன்னமும் இந்த அழுக்கு மூட்டை கருத்துகள், அறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் செல்லரித்த கருத்துகள் தான் இன்றைக்கு நாம் இலக்கியம், இலக்கணம் என்ற பெயராலே மாணவர்களுக்குப் படிப்பு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக் கின்றோம். இதை தந்தை பெரியார் கண்டித்தார். இந்த இயக்கம்தான் கண்டித்தது.)
ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து எப்படிப்பட்ட போர் நடைபெற்றது. கருத்துப் போர் அறிவுப்போர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் சொல்லுகிறார்) இதனைப் படிப்பதனால் ஏதாவது பயனிருக்க முடியுமா? என்று கேட்கிறார் பேராசிரியர்.
ஆரியம் படமெடுத்தாடுகிறது
நால்வகை ஜாதியை இந்நாட்டினில் நாட்டினீர் என்று கபிலர் அகவல் ஆரியரைப் பார்த்து முறையிடும் உண்மையை உணர்த்தும் எழுத்திலும் நால்வகை ஜாதியா? (எழுத்தில் நால்வகை ஜாதி என்பது ரொம்ப பேருக்குத் தெரியாது.) உயிரெழுத்தும், மெய் எழுத்தும் முதலெழுத்து உயிர் மெய் சார்பு எழுத்தின் வகையாம் என அறிவுடன் எட்டு ஆயிரம் ஆண்டுகளாய் வழங்கிய உண்மைக்கு மாறாக ஆரியம் புகுந்து வளம் பெற்று தமிழக இலக்கியம் இயற்றும் தொண் டினை ஏற்று மெல்ல, மெல்ல ஆரியப் புலவர் எல்லோர் உள்ளமும் ஆரியக் கருத்துறையும் மடமாக்கி அவர்கள் எழுப்பிடும் ஒலியும், பொருளும் ஆரியத்தை வெளியிடும் நிலையை உண்டாக்கிவிட்டது.
முக்காலத்திலும், மொழி வழங்கிட துணை புரியும் அறிவியற் சாலையாம் இலக்கணத்திலும் ஆரிய நச்சரவு தன்படத்தினை எடுத்து ஆடிடு கின்றது. (பேராசிரியருடைய எழுத்து 1944இல் வெளிவந்தவை) பாட்டியலில் பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும் (இலக்கியத்தோடு நிற்கவில்லை. பார்ப்பன படைஎடுப்பு இலக்கணத்திலும் ஊடுருவி விட்டது. மொழியை எப்படிக் கெடுத்தார்கள் என்பதை ரொம்ப அற்புதமாக சொல்லுகின்றார் பேராசிரியர்)
அடுத்த ஆறு மெய்கள் அரச வர்ணமென்றும் நான்கு மெய்கள் வைசிய வர்ணமென்றும் பிற இரண்டும் சூத்திர வர்ணமென்ற ஜாதி (எழுத் திலேயே இப்படி நான்கு ஜாதியை உண்டாக்கி விட்டார்கள் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று உண்டாக்கிவிட்டார்கள்)
பிரிவுகள் என்றெண்ணி நாட்டின் அறிஞர் என்று எண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும் எழுத்திலும் வருணப் பொருத்தம் வகுத்துள்ளனர்.
சூத்திர எழுத்துகள்
ல,வ,ர,ன என்ற நான்கும் வைசிய எழுத்துகள். ழ, ற என்பன சூத்திர எழுத்துகள் ஆகும். இதிலும் ஒரு உண்மை விளங்குகிறது. (பேராசிரியர் சொல் லுகிறார்). தமிழ் மொழிக்கே சிறப்பாக உள்ள ழ,ற,ண என்ற மூன்று எழுத்துகளும் வைசிய சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன.
வடமொழி, ல,ள வாகவும், ஒலித்திடுமானாலும் தமிழுக்கு சிறப்பு தனி எழுத்தாக உள்ளது. ழ வடமொழியில் இல்லை. இதை சூத்திர எழுத்து என்று கூறப்படுவதின் பொருள் என்ன? ஆரியரிடமிருந்து பிரித்துக்காட்டக் கூடிய அளவுக்கு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத் தான் ஆரியர்-சூத்திரர், தாசி மக்கள் என்று நான்காம் வருணத்தினராய் வழங்கினர் என்பதினுடைய விளைவன்றோ என்று கேட்கின்றார்.
அது மட்டுமல்ல. பாட்டு எழுதும் பொழுது இலக்கணத்தில் விதி வைத்திருக்கின்றார்கள். இங்கே கவிஞர்கள் இருக்கிறார்கள். இதை எல்லாம் இன்றைக்குத் தாராளமாக எழுது கிறார்கள். ஏன்? இந்த இயக்கம் வந்ததினாலே தாராளமாக எழுதுகிறார்கள்.
தலையை வாங்கியிருப்பான்!
பழைய காலத்து ராஜாவாக இருந்தால் தலையை வாங்கியிருப்பான். அதுவும் நமது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் செய்த கொடுமை சாதாரண கொடுமையல்ல. அது மிகப்பெரிய கொடுமை. அதில் ரொம்ப அழகாக சொல்லு கின்றார்.
பார்ப்பனரை வெண்பாவிலும் (பார்ப்பனருக்கு வெண்பா இடஒதுக்கீட்டை முதன் முதலில் ரிசர்வ் செய்த வர்கள் அவர்கள்தான்) அரசரை ஆசிரியப் பாவிலும் வணிகரை கலிப்பாவிலும் சூத்திரரை வஞ்சிப்பாவிலும் பாட வேண்டுமாம்.
சூத்திரனுக்குவஞ்சிப்பாவை ஒதுக்கியிருக்கின் றார்கள். கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள் அவர்களுக்காகவே இதை நான் படிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
வைசியருக்குப் பலவகை அதற்கடுத்து ஆசிரியப்பா வைசியருக்கு வகை பல குறைந்த கவி சூத்திரர் என்ற திராவிடருக்கு ஆரிய வஞ்சனை உருவெடுத்து வழங்கிய வஞ்சிப்பா. கொஞ்சிடப் பயனற்ற வஞ்சியினம் பல கொண்ட பாவன்று.
இனம் பல கலந்த வெண்பா கலப்புடைய ஆரியத்துக்குப் பண்பால் பொருத்தும் பகுத்து பாகுபடுத்திடும் முறை பொருத்தமுடையதா? தாழ்ப்பாள் இயற்றுமிடத்திலும் ஆரியத்துக்கு முதல் தாம்பூலம் என்ன அழகாக எழுதியி ருக்கின்றார் பாருங்கள். இது கவிதை. இலக்கியம் இலக்கணம். இதெல்லாம் உண்டு.
மகாபாரத சூடாமணி
இன்னொரு செய்தியையும் இந்த இடத்தில் இதற்கு தொடர்பாக சொல்ல வேண்டும். மகாபாரத சூடாமணி, என்று ஒரு நூல் இசைக்கு இந்த நூலை யார் எழுதியவர்கள் என்றால் சங்கீத கலாநிதி முடிகொண்டான் வெங்கட் ராம அய்யர் மற்றும் ஆர்.விசுவநாத அய்யர். சங்கீதாதிராக மேள லட்சணம் என்னும் நான்காம் பகுதியில் கீழ்க் கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
நம்முடைய மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கின்ற இறையனார் இருக்கிறார் பாருங்கள். அவர் நன்றாகப் பாடுவார். அவர் ஒரு முறை இந்த செய்தியை சொல்லி புத்தகத்தையே கொண்டு வந்து காட்டிவிட்டார். அதிலிருந்து தான் நான் குறிப்பெடுத்தே வைத்தேன். வம்சம் நான்கு என்று போட்டு எழுதப்பட்டிருக்கிறது.
பாட்டிலும் ஜாதி
சட்ஜம், மத்திமம் காந்தாரம் இவை மூன்றும் தேவர். (பாட்டு பாடுவதில் ராகத்தில்) பஞ்சமம்-விதுரர். ரிஷபம், தைவதம்-ரிஷிகள், நிஷாதம்-ராட்சதர் வம்சங்களாம்.
பாட்டு நான்கு. அந்தணன் ஜட்சமத்திமமான பஞ்சமே ஜாதி தந்தவைத்த முந்தானே ரிஷபம், சத்திரியனாகும் முன்பு காந்தார நிஷாத மொழித் திடல் வைசியனாகும்.
சிந்தை சேர் அந்தக ஜாதிகள் சூத்திரனாகுமே. சட்ஜமம், மத்திமம் பஞ்சமம் மூன்றும் பிராமண ஜாதி, வைதம், ரிஷபம், இவ்விரண்டும் சத்ரிய ஜாதி, காந்தாரம், நிஷாதம் இவ்விரண்டும் வைசிய ஜாதி, அந்தரகா களீஸ் வரங்கள் சூத்திரஜாதி.
பாட்டில் ஏழு சுரங்கள் பாடினால் கூட அதிலேயும் ஜாதி. இலக்கணத்தில் ஜாதி. வர்ணாஸ்ரம தர்மம். இலக்கியத்தில் வர்ணாஸ்ரம தர்மம். இவை அத்துணையும் இன்றைக்கு இல்லையே. எல்லோரும் பாடுகிறார்கள். சூத்திரன் பாடுகிறான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறதென்றால் இதற்கு என்ன காரணம்? பெரியார் பிறந்திருக்கா விட்டால் இதை எடுத்துச் சொல்ல பேராசிரியர் போன்றவர்கள் விளக்கியிருக்காவிட்டால் இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்குமா?
பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்க அவர்களுடைய ஆதிக்கத்தை மறுபடியும் கொண்டு வரலாம் என்கின்ற சூழ்நிலைகள் இன் றைக்கு உருவாகிக்கொண்டிருக்கின்ற.ன தமிழர்களே நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை சொல்வதற்குத் தான் தமிழ்ப்புத்தாண்டு வருகிறது.
கலைஞர் சட்டம் கொண்டு வந்தார் என்பதற்காக தடுக்கப்பார்க்கிறார்கள். எந்த சட்டத்தை தடுத் தாலும் தமிழர்களுடைய திராவிடர்களுடைய திருநாள் ஒரே திருநாள் தை முதல்நாள்தான் என்பதைக் கொண்டாடக் கூடிய அளவிற்கு ஒரு பெரிய பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிக்கக் கூடிய புரட்சியை ஆழமாக அமைதியாக உறுதியாக செய்யுங்கள். பெரியார் திடலில் மூன்று நாள்கள் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுங்கள்.
நம்மால் மட்டும்தான் முடியும். கொள்கை உள்ளவர்களால் முடியும். இலட்சியத்திலே நம் பிக்கை உள்ளவர்களால் முடியும். தங்களை சமுதாயத்திற்காக அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறவர்களால் முடியும் என்ற உணர்வோடு இந்த புத்தகத்தை வாங்குங்கள். படியுங்கள். படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள். உங்கள் ரத்தங்களிலே இந்த உணர்வுகளை எற்றிக்கொள் ளுங்கள் என்று கூறிமுடிக்கின்றேன்.
-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
---------------------"விடுதலை” 28-1-2012