Search This Blog

3.10.09

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம் மிருகக்காட்சியல்ல-இழிவாகபேட்டியளித்த தூதரை வெளியேற்றுக!

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம் மிருகக்காட்சியல்ல - எல்லோரும் பார்க்க! என்று
ஆணவமாகவும், இழிவாகவும் பேட்டியளித்த இலங்கைத் துணைத் தூதரை வெளியேற்றுக!
இந்திய அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்


இலங்கை முகாம் களில் முடக்கப்பட் டுள்ள ஈழத் தமிழர் களை நேரில் சந்திக்க வும், முகாம்களைப் பார்வையிடவும் அனு மதிக்கவேண்டும் என்ற வேண்டு கோளைக் கொச்சைப் படுத்தி, ஆணவமாகப் பேட்டியளித்த இந்தி யாவுக்கான இலங் கைத் துணை தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை இந்திய அரசு உடனடியாக வெளியேற்ற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த முதல் தேதியன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல உள்ளது.

மிருகக் காட்சி சாலையா?

இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க அனுமதி அளிக்கவேண்டும் என்று பலரும் கேட்கிறார்கள். நாங்கள் என்ன மிருகக்காட்சி சாலையா நடத்துகிறோம்; பார்வையாளர்களை அனுமதிக்க? என்று எதிர்க்கேள்வியைப் போட்டுள்ளார்.

இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி மற்றும் அய்.நா. செயலாளர் போன்றவர்கள் எல்லாம் (ஏன், இந்து ராம் கூட) சென்று பார்த்தார்களே, அவர்கள் பார்த்தது மிருகக்காட்சி சாலைதானா?

மறைமுகமான ஒப்புதலே!

ஒரு வகையில் மறைமுகமாக இலங்கைத் துணைத் தூதர் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கை முகாம்களில் ஈழத் தமிழர்கள் மிருகங்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்று உலகம் முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளது. அதனை வேறு வகையில் ஒப்புக்கொண்டுள்ளார் என்றே இதனைக் கருதவேண்டும்.

ஒரு பொறுப்புள்ள அதிகாரியின் பேட்டியாக அது அமைந்திடவில்லை. ஆணவமும், அதிகார வெறியும், சிங்கள வெறித்தனத்தின் பிரதிபலிப்பும்தான் இதில் பொங்கி வழிகிறது!

தமிழக மீனவர்களைத் தாக்கவில்லையாம்!

அதேபோல, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதாக வெளிவருவது எல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளாம். தமிழக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனவாம். இலங்கை _ இந்திய உறவுக்குக் குந்தகம் ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல் என்றும் கூறி இருக்கிறார்.

இதைவிட அபாண்டமான பொய் ஒன்றும் இருக்க முடியாது. தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் பலியானதெல்லாம் எப்படி பொய்யாக, புனைந்துரையாக இருக்க முடியும்? இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டதெல்லாம் எப்படி கற்பனையானதாக இருக்க முடியும்?

பொய்யைத் தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்று இலங்கை தரப்பில் ஒரு முடிவை எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

கச்சத்தீவுபற்றியும் ஆணவப் பேட்டி

கச்சத்தீவைப்பற்றிக் குறிப்பிடும்பொழுதும், அது இலங்கையின் ஒரு பகுதி என்றும், கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இருக்கிறதா, இல்லையா? என்பதை விவாதிக்க இடமில்லை என்றும், வேண்டுமானால், உங்கள் அரசைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்றும் கேலியாகவும், குத்தலாகவும் பதில் சொல்லியிருக்கிறார்.

பல வகைகளிலும் இலங்கை அரசு இந்தியாவை அவமானப்படுத்தி வருகிறது.

இப்பொழுது ஒரு துணைத் தூதுவரே ஏளனமும், கேலியும் செய்யும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்துள்ளது.

இலங்கைத் தூதரை வெளியேற்றுக!

இந்த அதிகாரியின் பேட்டியை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசு உடனடியாக இவரை வெளியேற்றவேண்டும். இதன்மூலம் இந்தியாவின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.

இலங்கைக்குத் தூதராக ஒரு தமிழர்

நாம் நீண்ட காலமாக வற்புறுத்தி வரும் இலங்கையில், இந்தியாவுக்கான தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்கவேண்டும். இதுதான் சரியான பதிலடியாகக் கூட இருக்க முடியும்.

தமிழர்களின் வேண்டுகோள்

குட்டைக் குட்டக் குனிந்து கொடுக்கும் இந்தியாவின் போக்கில் மாறுதல் தேவை_ இது ஒட்டுமொத்தமான உலகத் தமிழர்களின் வேண்டுகோளாகும்.

தலைவர்,
திராவிடர் கழகம்.


--------------------------"விடுதலை" 3-10-2009

1 comments:

venkatesh.s said...

உங்கள் blog மிகவும் நன்றாக உள்ளது . உங்கள் தகவல்கள் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவையை மேம்மேலும் தொடர வாழ்த்துக்கள்.. மிக்க நன்றி