Search This Blog

7.10.09

இலஞ்ச மனப்பான்மை சமூகத்தில் பரவியதற்கு காரணம்-பக்தியே


ஊழலின் ஊற்றுக்கண்

பொதுவாக கோவில் அமைப்பு பக்தி நேர்த்திக்கடன், பிராயச்சித்தம் என்பவையே ஊழலின் வயப்பட்ட ஒன்றுதான். கடவுளே நீ இதைக் கொடு உனக்கு நான் இதைத் தருகிறேன் என்பதே நேர்மையானது அல்லவே!

12 வருடங்கள் பாவம் செய்து, மகாமகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் குளித்தால் பாவம் போகும் என்ற ஒரு ஏற்பாடு இருந்தால் பாவம் செய்ய யார்தான் தயங்குவார்கள் - அஞ்சுவார்கள்?

ஒழுக்கக் குறைவு இலஞ்ச மனப்பான்மை சமூகத்தில் பரவியதற்கே காரணம் இந்த வழிபாட்டு பக்தி முறைதான் மூலமாகும்.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கே மதத்தில் மோட்சம் கிடைக்கும் என்றால், இந்த நாட்டில் எதுதான் நடக்காது?

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் திருப்பதி ஏழுமலையான் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் கோயில் நகைகளே கொள்ளை போயிருக்கின்றன. நீதிமன்றம்வரை கதை நாறி குறிப்பிட்ட நாளுக்குள் நகை இருப்பையும், கணக்கையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு போடும் அளவுக்குக் கோயிலில் கொள்ளையோ கொள்ளை நடந்துகொண்டு இருக்கின்றது.

இப்பொழுது சபரிமலை அய்யப்பன் கதையும் நடு வீதிக்கு வந்து நாற்றம் மூக்கைத் துளைக்கிறது.

அய்யப்பப் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணைப் பாயாசம், அப்பம் போன்ற பிரசாதங்கள் விநியோகத்திலும் ஊழல் கொடிகட்டிப் பறக்கும் செய்தி ஏடுகளில், இதழ்களில் வெளிவந்துவிட்டது.

கோவிலுக்குச் சென்று பிரசாதம் பெறுவது என்கிற பக்திப் பழக்கவழக்கத்தின் அடுத்த பரிமாணமாக அஞ்சல் மூலமாகவும் பிரசாதம் என்கிற (அஞ்சல் வழிக் கல்விபோல) வியாபார யுக்தியைத் தொடங்கினார்கள். சரியான முறையில் தயாரிக்கப்படாததால் அவ்வாறு அனுப்பப்படும் பொருள்கள் கெட்டு துர்நாற்றம் எடுத்து, திருப்பியும் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அய்யப்பன் கோயில் பிரசாதமான அப்பம் என்பது பிரசித்தி பெற்றதாம். அதனைத் தயாரிக்க எந்த ரக அரிசியைப் பயன்படுத்துவது, வெல்லத்தின் அளவு என்ன? மற்றும் அதில் சேர்க்கப்படவேண்டிய பொருள்கள் யாவை எந்த அளவு என்பதற்கெல்லாம் வரையறை உண்டாம். இவற்றையெல்லாம் தூக்கி எறிந்து, மட்ட ரகமான பொருள்களை வாங்கி (கணக்குக் காட்டுவது மட்டும் உயர்ந்த வகைப் பொருள்களை வாங்கியதாக) கொள்ளை அடித்துள்ளனர். கோயிலில் உடைக்கப்படும் தேங்காய்களை விற்பது வரையில் பகற்கொள்ளை நடந்திருக்கிறது. இவற்றை எல்லாம் தணிக்கை அறிக்கை பட்டாங்கமாக வெளியில் கொண்டுவந்துவிட்டது. இந்த அறிக்கை கேரள உயர்நீதிமன்றம்வரை சென்றுவிட்டது.

இதன்மீது நீதிமன்ற நடவடிக்கை தயாராகிக் கொண்டு இருக்கிறது. அறநிலையத் துறை அமைச்சர் சுதாகரனும் ஊழல் பெருச்சாளிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியுள்ளார்.

பக்தி உணர்வு குன்றி வருவதால் நாட்டில் தீயொழுக்கம் பெருகிவிட்டது என்று கீறல் விழுந்த கிராமபோன் தட்டின் பாடலைப் போல சொல்லிவரும் பெரிய மனுஷர்கள், பாகவதர்கள் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏடுகளும், இதழ்களும்கூட இந்தச் சுருதியில் எழுதுவதுண்டு. தலையங்கங்களைத் தீட்டுவதும் உண்டு. கருத்துமழை பொழிவதும் உண்டு.

திருப்பதி கோயில், அய்யப்பன் கோயில்களிலேயே ஊழல் நாற்றம் முச்சந்திக்கு வந்துவிட்டதற்குப் பிறகும் அவ்வாறு சொல்லவோ, எழுதவோ கடுகத்தனை அளவுக்காவது தகுதி உண்டா என்று கேட்க விரும்புகிறோம்.

கடவுளை மற; மனிதனை நினை என்று கூறினார் தந்தை பெரியார். கடவுளின் சொத்து சமாச்சாரங்களில் நடக்கும் ஊழலைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளைத் தண்டிப்பதில்கூட கடவுளை மறந்துதான் மனிதனைத் தேட வேண்டியுள்ளது.

கோயில் சொத்துகளைத் திருடும், ஊழல் செய்வோரை அந்தக் கோயில் கடவுளே தண்டிக்கவில்லை _ காரணம் அதன் கையாலாகாத்தனம் தெரிந்ததே.

சிற்பி அடித்து வைத்த உருவங்கள் தானே கடவுள்கள் அவற்றிற்கென்று சக்தி எங்கேயிருந்து வரும்?

மனிதர்கள் பகுத்தறிவோடு சிந்திக்கட்டும்!

-------------------"விடுதலை" 7-10-2009

1 comments:

பித்தனின் வாக்கு said...

அய்யப்பன் படம் மிகவும் அழகு. எனது கம்பூயூட்டர் ஸ்கிரினுக்கு எடுத்துக் கொண்டேன். பதிவு இட்டமைக்கு நன்றி.
தங்களின் கருத்துக்கு நன்றி. ஆனால் லஞ்சம் அரசியல்வியாதிகளால் தான் தலை விரித்து ஆடுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.