Search This Blog

9.10.12

நெய்வேலி மின்சாரத்தை கருநாடகத்திற்குக் கொடுக்கக் கூடாது!நெய்வேலி முற்றுகை ஏன்?

நெய்வேலி முற்றுகை ஏன்?

மேட்டூரில் நேற்று (8.10.2012) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடக் கொடுக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாகப் பேசும் அம்மாநிலத்திற்குப் பாடம் கற்பிக்கும் வகையிலும், ஒரு நெருக்கடியைக் கொடுக்கும் வகையிலும், தன் தவறைக் கருநாடகம் உணர்வதற்கான ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் தன்மையிலும் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.

தமிழ்நாட்டுக்குக் கருநாடகம் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட கொடுக்க முடியாது என்று சொன்னால், தமிழ்நாட்டில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கருநாடகத்திற்குக் கொடுக்கக் கூடாது என்று வற்புறுத்தும் வகையில் வரும் 15ஆம் தேதி நெய்வேலியில் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 88 லட்சம் மக்கள் விவசாயத் தொழிலை நம்பியே வாழ்கிறார்கள். பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களே விவசாய தொழிலாளர் களாகவும் இருக்கின்றனர்.

இந்த ஆண்டு கருநாடகம் குறிப்பிட்ட காலத் தில் தண்ணீரைத் திறந்து விடாததால் 4.15 லட்சம் ஏக்கர் குறுவை நாசமாயிற்று. 14 லட்சம் ஏக்கர் சம்பாவின் கெதி என்ன என்பது தமிழ்நாட்டு மக்களின் கழுத்துக்கு மேல் தொங்கும் கொடுவாள் கேள்வியாக உள்ளது.

மேட்டூரில் திராவிடர் கழகத் தலைவர் குறிப் பிட்டது போல தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை ஏற்பட்டால் ஆச்சரியப் படுவதற்கில்லை.

28 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெற்று வந்த தமிழ்நாடு, கருநாடக மாநிலத்தின் அடாவடித்தனம். சட்டம் - நியாயம் மீறல் காரணமாக 16 லட்சத்து 36,000 ஏக்கர் விவசாய நிலங்களாகக் குன்றிப் போய்விட்டது.
நடுவர் மன்ற தீர்ப்பின்படி கருநாடக மாநிலம் 10 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் தான் காவிரி நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்திட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் 19 லட்சம் ஏக்கர் நிலங்களுக்குக் காவிரி நீர் மூலம் விவசாயத்தை விரிவுபடுத்தியுள்ளது.

நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பாக அளித்த ஆண்டு ஒன்றுக்கு 205 டி.எம்.சி. தண்ணீரை - எந்த கால கட்டத்திலும் கருநாடகம் தமிழ்நாட் டுக்கு அளித்ததேயில்லை.

எடுத்துக்காட்டாக
2001 - 2002இல் 162.73 டி.எம்.சி.,
2002 - 2003இல் 94.86 டி.எம்.சி.,
2003 - 2004இல்    65.13 டி.எம்.சி.,
2004 - 2005இல் 124.58 டி.எம்.சி.

தண்ணீரைத்தான் வழங்கி இருக்கிறது. இதில்கூட பெரும்பாலும் கருநாடகத்தில் பெரு மழை பெய்து அணை வழிந்த நிலையில் வடிகாலாக வந்து விழுந்ததுதான்.

இடைக்கால 205 டி.எம்.சி. தண்ணீரையே கொடுக்க மனம் இல்லாத கருநாடக மாநிலம், நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பான 419 டி.எம்.சி. தண்ணீர்பற்றி கனவிலும் நினைத்துத் தான் பார்க்க முடியுமா?

நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், காவிரி நதி நீர் ஆணையம் இவற்றின் தீர்ப்புகளை மதிக்காமல் அலட்சியப்படுத்தினால் அதற்கான தண்டனை கிடையாதா? மேல் நடவடிக்கை என்ற நிலை இந்தியாவில் இல்லையா? என்கிற அரசமைப்புச் சட்ட குழப்ப நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது என்றே கருத வேண்டும்.

இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது - மாநிலக் கட்சிகளல்ல; அகில இந்தியா என்று பேசும் தேசியக் கட்சிகள்தான். புரியும் படியாக எளிதாகச் சொன்னால் பிரிவினைக்கு வித்திடு பவை இந்தத் தேசியக் கட்சிகளே! ஒருக்கால் கருநாடகமும் தமிழ்நாடும் தனித்தனி சுதந்திர நாடுகளாக இருந்திருந்தால் காவிரி நீர்ப் பிரச்சினை எளிதாக தீர்ந்திருந்தாலும்  ஆச்சரியப்படுவ தற்கில்லை. பந்து இப்பொழுது மத்திய அரசின் வசம் உள்ளது - என்ன செய்யப் போகிறது என்று நாடே எதிர்பார்க்கிறது. இதன் மேல் ஓர் அழுத்தம் தான் அக்டோபர் 15 அன்று அறிவிக்கப்பட்டுள்ள நெய்வேலி முற்றுகைப் போராட்டமாகும். தோழர்களே தயாராவீர்!

                     --------------------”விடுதலை” தலையங்கம் 9-10-2012

10 comments:

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்துக்கு
நெய்வேலியிலிருந்து மின்சாரத்தை வழங்கக் கூடாது!
அக்டோபர் 15இல் நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்!

மேட்டூரில் தமிழர் தலைவர் அறிவிப்பு


மேட்டூர் அக்.9- தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தர மாட்டேன் என்று கூறும் கருநாடக மாநிலத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலியில் உற்பத்தியாகும் மின் சாரத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் கூடக் கொடுக்கக் கூடாது - வரும் 15ஆம் தேதி காலை என் தலைமையில் என்.எல்.சி. முன் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

திராவிடர் கழகம் இரு அணியினர் தலைமையில் நடத்திய காவிரி நீர் உரிமை எழுச்சி பிரச்சாரப் பயணத் தின் நிறைவு நாள் கூட்டம் மேட்டூரில் நேற்று மாலை (8.10.2012) சதுரங்காடி திடலில் நடைபெற்றது.கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு?

இதுவரை தமிழ்நாட்டில் பட்டினிச் சாவு என்பது இல்லாமலிருந்தது. ஆந்திர மாநிலம், மகாராட்டிர மாநிலங்களில் விவ சாயிகள் மத்தியில் பட்டினிச் சாவு - தற் கொலைகள் நடந்து வந்தன. அந்தநிலை தமிழ்நாட்டி லும் நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எலிக்கறி சாப்பிடும் அவல மும் ஏற்படலாம். குறுவைச் சாகுபடி செய் யாமல் போனதானது - பஞ்சத்திற்கான முன் அறிவிப்புக் காலமாகும்.

இந்தியாவுக்குள்தானே தமிழ்நாடும், கருநாடகமும் இருக்கின்றன?

மேற்கு வங்கம், வங்காளதேசம் இரு நாடுகளுக்கிடையே பிரச்சினையாக இருந்த கங்கை நீர்ப் பிரச்சினை தாவா சில மணிகளில் தீர்த்து வைக்கப்பட்டது இரு சுதந்திர நாடுகளுக்கிடையே நீர்ப்பிரச்சினையில் சுமுக முடிவு எடுக்கப்பட முடிகிறது.

அதே நேரத்தில் இந்தியாவுக்குள்ளிருக்கும் இரு மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை. 1974-75-களில் தொடங்கப்பட்ட சிக்க லுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. எத்தனை முறை பேச்சு வார்த்தை நடத்தப் பட்டது! அதற்கு எந்தவிதப் பலனும் ஏற்படவில்லையே!

நடுவர் நீதிமன்றம் : திராவிடர் கழகத்தின் முதல் குரல்

1980இல் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் காவிரி நீர்ப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார், நடுவர் மன்றம் (கூசரெயேட) அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை திராவிடர் கழகத் தின் சார்பில் முன் வைத்தோம் எம்.ஜி.ஆர். நமது கருத்தை ஒன்றும் அலட்சியப்படுத்த வில்லை.

சமூக நீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1991இல் நடுவர் மன்றத்தை அமைத்தார்.205 டி.எம்.சி. நீரை ஆண்டு ஒன்றுக்குத் தமிழ்நாட்டுக்குக் கருநாடகம் அளிக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் இடைக் கால தீர்ப்பாகும். இந்த அளவு ஒருமுறைகூட கொடுக்கப்படவில்லை. இறுதித் தீர்ப்பில் 419 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்கு அளிக்கப் பட வேண்டும் என்று கூறப்பட்டது.

விதிகள்பற்றிக் கவலைப்படாத கருநாடக அரசுகள்

இயற்கையில் மழை பொய்த்து வறட்சி ஏற்படுமாயின் அந்தக் கால கட்டத்தில் நீர் பங்கீடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விதி முறைகளும் (னுளைவசநளள கடிசஅரடய) உண்டு.

கருநாடக மாநிலத்தைப்

தமிழ் ஓவியா said...

பொறுத்தவரையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எந்த விதிமுறைகளையும் பொருட்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

காவிரி நதிநீர் ஆணையம் - கழகத்தின் கருத்து

காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்ட நேரத்திலேயே திராவிடர் கழகம் ஒரு கருத்தை முன் வைத்தது. இந்த ஆணையத்தின் தலை வருக்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்ற நீதி பதிக்கு உள்ள அதிகாரம் இந்த ஆணை யத்தின் தலைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை ஆணையத்தின் தலைவராக நியமித்தால் உரிய நியாயமான பலன் கிடைக்காது என்று திராவிடர் கழகம் சொன்னது சரி என்பது இப்போது விளங்கி விட்டதே!

தமிழ்நாடு கருநாடகத்தின் வடிகால் மாநிலமா?

நதி நீர் உற்பத்தியாகும் மாநிலத்துக்கே சொந்தமென்றால் கங்கை நீர் வேறு மாநிலத்திற்குப் போகலாமா? காவிரியை கருநாடகத்திற்குள் அடக்கிக் கொண்டுவிட முடியுமா?

இப்பொழுது நிலை என்ன? கருநாடகத் தில் கடுமையான மழை வெள்ள அபாயம் ஏற்பட்டு அணை உடைந்து விடும் என்ற ஆபத்து ஏற்படும்பொழுது, தமிழ்நாடு வடிகால் மாநிலமாகக் கருதப்பட்டு, கருநாடகத்தின் அணைகள் திறந்து விடப்படுகின்றன.
கருநாடகத்தைப் பொறுத்தவரை உண்மையான தீவிரவாதிகள் யார் என்றால் அங்குள்ள அரசியல்வாதிகள் தான் - பொது மக்களல்ல!

கிருஷ்ணா, மத்திய அமைச்சரா? கருநாடக அமைச்சரா?

மத்திய அமைச்சராக வெளியுறவுத்துறை அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா தான் ஒரு மத்திய அமைச்சர் என்பதைக்கூட மறந்து அய்.நா.வுக்குச் சென்றவர் அவசர அவசரமாக பிரதமருக்கு என்ன கடிதம் எழுதுகிறார்?
தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது - கொடுக்க முடியாது என்று எழுதுகிறாரே! அரசமைப்புச் சட்டப்படி ஒரு மத்திய அமைச்சர் இப்படி நடந்து கொள்வது குற்றமல்லவா?

தமிழ் ஓவியா said...

உச்சநீதிமன்ற ஆணை, நதி நீர் ஆணையத்தின் தலைவர் பிரதமரின் ஆணைக்கு எதிராக ஒரு மத்திய அமைச்சர் நடக்கலாமா? கருத்துக் கூறலாமா? இப்படிக் கூறுபவரை பதவி நீக்கம் செய்ய வேண்டாமா?

பிரதமரின் அறிவிப்பு திருப்தியளிக்க வில்லை என்றாலும் அந்தக் குறைந்தபட்ச தண்ணீரைக் கூடக் கொடுக்க கருநாடக முதல் அமைச்சர் தயாராக இல்லையே! ஷெட்டர் தண்ணீரின் ஷட்டரை அல்லவா மூடுகிறார்! (பலத்த சிரிப்பு)

இரு வகையான தீர்வுகள்

நாங்கள் வெறும் குற்றம் மட்டும் சொல்ல வில்லை - இந்தப் பிரச்சினைக்கு இரு தீர்வுகளையும் சொல்லியுள்ளோம்.

முதல் தீர்வு இந்தியாவில் அனைத்து நதிகளும் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும். இரண்டாவது தீர்வு. இந்தியாவில் உள்ள நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்; குறைந்த பட்சம் தென்னக நதிகளையாவது இணைக்க லாமே!

மதத் தலைவர்களும் மடி கட்டி நிற்கின்றனரே!

கருநாடகத்தில் என்ன நடக்கிறது? அனைத்துமதத் தலைவர்களையும் இணைத் துப் போராட்டம் நடத்துகிறார்களே! தவித்த வாய்க்குத் தண்ணீர் என்பது எந்த மதத்திலும் கூறப்படவில்லையா? மனிதாபிமான மற்றது தான் மதமா? கட்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மண்ணின் மைத்தர்களாக அங்கே குரல் கொடுக்கிறார்களே இங்கே நம் நிலைமை என்ன - சிந்திக்க வேண்டாமா?

நாம் கேட்பது பிச்சையல்ல - சலுகையும் அல்ல! உரிமையைத்தான் கேட்கிறோம்; அதுவும் சட்டத்தில் உள்ளதைத்தான் வலியுறுத் துகிறோம்.

அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

காவிரி நீர் உரிமைப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் உடனே கூட்ட வேண்டும். அந்தக் கூட்டத்தில் இப்பொழுதுள்ள பிரச்சி னைக்குத் தீர்வு காணும் கருத்துக்களை நடைமுறை சாத்தியத்தோடு எடுத்துக் கூறலாம். குறைந்தபட்ச ஒரு திட்டத்தோடு அது நடைபெற வேண்டும். கடந்த கால பிரச்சினைகளை எல்லாம் விலா வாரியாகப் பேசும் மேடையாக அந்தக் கூட்டத்தைப் பயன்படுத்திட நினைக்கக் கூடாது. அது எதிர் விளைவைத் தான் ஏற்படுத்தும்.

நெய்வேலி மின்சாரம் - முற்றுகைப் போராட்டம்!

கருநாடக மாநிலத்திற்கு ஓர் அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுக்கலாம். ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட தமிழ்நாட்டுக்கு நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறுகிற கருநாடகத்துக்கு எங்கள் மாநிலத்தில் நெய்வேலியில் உற்பத்தியாகிற மின்சாரத்தி லிருந்து ஒரு யூனிட்டுக்கூட கொடுக்க மாட்டோம் என்று கூற வேண்டும். இதன்மூலம் நாம் நம் வலிமையைக் காட்டலாம். அப்படி ஒரு நெருக்கடியைக் கொடுத்தால்தான் அவர்கள் சிந்திப்பார்கள்.

வரும் 15ஆம் தேதி காலை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் (பலத்த கரவொலி!)

கேட்டால் நாமும் சொல்லலாம்; அதுவும் கருநாடகம் சொல்லும் அதே தத்துவத்தின் அடிப்படையிலேயே சொல்லுவோம். தங்க ளுக்கு மிஞ்சிதான் தானம் தருமம்! எங்க ளுக்கே மின்சாரம் கடும் பற்றாக்குறை, இந்த நிலையில் எதற்காக மற்ற மாநிலங்களுக்கு நாம் மின்சாரத்தை வழங்க முடியும்? வழங்க வேண்டும்?

நெய்வேலி மின்சாரம் எங்கள் தோழர்களின் உழைப்பு!

கருநாடக மாநிலத்தில் காவிரி நதி என்பது இயற்கையிலேயே கிடைக்கக் கூடியது. நெய்வேலி மின்சார உற்பத்தியோ எங்கள் தோழர்களின் உழைப்பால் உற்பத்தியாகக் கூடியது. எனவே நாங்கள் அப்படி ஒரு முடிவை எடுப்பதில் நியாயமும் அதிகம் இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் குறிப் பிட்டார். 9-10-2012

தமிழ் ஓவியா said...


மனித குலத்தின் பலகீனமே கடவுள் அயன்ஸ்டின் கடிதம் : ஏலத் தொடக்கம் 30 லட்சம் டாலர்


லாஸ் ஏஞ்செல்ஸ், அக். 9- கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி விஞ்ஞானி ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் கைப்பட எழுதிய கடிதம் இப்போது ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது. ஏல விலையின் தொடக்கம் 30 லட்சம் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1955 இல் அய்ன்ஸ்டீன் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னர் அவர் ஜெர்மானிய மொழியில் எழுதிய இந்த கடவுள் கடிதத்தில் மதம், கடவுள், ஓரினப் பண்புகள் ஆகி யவை பற்றிய தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கையைத் தேர்ந்தெடு : புரட்சிக்காக பைபிள் விடுக்கும் அறைகூவல் என்ற தத்துவஞானி குட்கின்ட் என்பவரின் நூலை அய்ன்ஸ்டீன் படித்த பிறகு, குட்கினுக்கு பிரின்ஸ்டன் பல்கலைக் கழக முகவரி அச்சடிக்கப்பட்ட கடிதத் தாளில் இக்கடிதம் எழுதப்பட்டது என்று பாக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

ஒரு வெளிப்பாடு மற்றும் மனிதகுலத்தின் பலவீனங்கள் என்பதை விட மேலான எது ஒன்றையும் கடவுள் என்ற சொல் எனக்கு உணர்த்த வில்லை. மரியாதைக்குரியதே ஆயினும் பைபிள், குழந்தைத் தனமான, பழங்காலக் கட்டுக் கதைகளின் ஒரு தொகுப் பேயாகும். எந்த ஒரு விளக் கத்தாலும், அது எவ்வளவு தான் நுணுக்கமானதாக இருந்தாலும், இந்த எனது கருத்தை மாற்ற இயலாது என்று அய்ன்ஸ்டீன் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

1921 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர் அய்ன்ஸ்டீன்.
இக்கடிதம் தொடக்க விலையைப் போன்று மூன்று மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்படலாம் என்று இந்த ஏலத்தை நடத்தும் லாஸ் ஏஞ்செல்சைச் சேர்ந்த ஏல நிறுவனத் தலைவர் காஜின் கூறுகிறார்.

வெப்பக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஒரு அல மாரியில் வைக்கப்பட்டிருக்கும் இந்தக் கடிதம் கடந்த முறை 40,400 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது. தற்போது அந்தக் கடிதம் அது அனுப்பப் பட்ட உறை, அஞ்சல் தலை, அஞ்சல் சீலுடன் இப்போது விற்பனை செய்யப்பட உள்ளது.

கடவுள் மற்றும் மதம் பற்றிய அவரது தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவாற்றல் மிகுந்த தணிக்கை செய்யப்படாத அவரது சிந்தனைகளும், கருத்துகளும் இதுவரை வெகு சில மக்களுக்கு மட்டுமே எட்டக்கூடியவையாக இருந்தன என்று காஜின் கூறுகிறார். கடவுள் இருக்கிறாரா - இல்லையா என்ற கருத்தற்ற, மதத்தினைப் பற்றிய சிக்கல் நிறைந்த கண்ணோட்டம் கொண்டவர் அவர் என்ற வாதத்துக்கு இக்கடிதம் வலு சேர்க்கிறது என்று அய்ன்ஸ்டீன் பற்றிய வல்லுநர்கள் நம்புகின்றனர். அமைப்பு ரீதியான மத நம்பிக்கையை நிராகரித்த அவர், பிரபஞ்சத்தில் ஓர் உணர்வு பூர்வமான ஆற்றல் செயல்படுவது பற்றி அடிக்கடி பேசியிருக்கிறார்.


(நன்றி: தி இந்து 7.10.2012)

தமிழ் ஓவியா said...


காவிரி நீர் கர்நாடக கோரிக்கை நிராகரிப்பு போராட்டத்திற்கும் நீதிபதிகள் கண்டனம்


புதுடில்லி, அக். 9- காவிரியில் தமிழகத் துக்கு தண்ணீர் திறந்து விட பிரதமர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கர்நாடகா விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிரா கரித்துவிட்டது. இது தொடர்பாக போராட் டங்கள் நடத்துவதால் எந்த பலனும் இல்லை என்று கர்நாடகாவுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பருவமழை பொய்த்துவிட்டதாக கூறி காவிரியில் தமிழகத் துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுத்தது. இது தொடர்பாக தமி ழகம் முறையிட்டதால் காவிரி நதிநீர் ஆணைய கூட்டம் கடந்த மாதம் 19ஆம் தேதி டில்லியில் நடந்தது. அப்போது, தமிழகத்துக்கு காவிரி யில் அக்டோபர் 15ஆம் தேதி வரை நொடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு ஆணை யத்தின் தலைவரான பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதன்படி தண்ணீர் திறக்கப்படாததால் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு செய்தது.

இதை தொடர்ந்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நா டகாவுக்கு உச்சநீதிமன் றம் உத்தரவிட்டது. வேறுவழியின்றி கர்நா டகா தண்ணீர் திறந்தது.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை கர் நாடகா தாக்கல் செய் தது. இந்த மனு நீதிபதி கள் டி.கே.ஜெயின், மதன் லோக்கூர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு நேற்று விசார ணைக்கு வந்தது.

அப்போது, கர்நாடகா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஃபாலி நாரிமன் கூறுகையில், காவிரியில் இனிமேலும் கர்நாடகாவால் தண் ணீர் திறந்துவிட முடி யாது. இப்போதே கூடுத லான தண்ணீர் தமிழ கத்துக்கு செல்கிறது. காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதை எதிர்த்து நதி நீர் ஆணையத்தில் மறுஆ ய்வு மனு தாக்கல் செய் துள்ளோம். தண்ணீர் திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தர விட்டுள்ள நிலையில், கர்நாடகாவின் முறை யீட்டை காவிரி நதி நீர் ஆணையம் விசாரித்து முடிவு எடுக்க தயங்கும் என்று அஞ்சுகிறோம். எனவே, தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக காவிரி நதி நீர் ஆணையம் பிறப் பித்த உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வைத்தியநாதன் வாதாடு கையில், தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை தர கர்நாடகா மறுப்ப தாக குற்றம்சாட்டினார்.

பின்னர் நீதிபதிகள் கூறுகையில், காவிரி நதிநீர் ஆணையத்தில் கர்நாடகா தாக்கல் செய் துள்ள மறுஆய்வு மனு மீது பிரதமர் முடிவு எடுப்பதை எங்களது உத்தரவு எந்த வகை யிலும் பாதிக்காது. தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. காவிரி விவகாரம் தொடர் பாக கர்நாடகாவில் பல் வேறு போராட்டங்கள் நடத்துவதால் எந்த பலனும் ஏற்படாது. இதுபோன்ற போராட் டங்கள் சில நேரங்களில் பாதகமாகிவிடும். உங் கள் நிலை நியாயமான தாகவே இருந்தாலும் போராட்டம் காரண மாக அது ஏற்றுக் கொள்ளப்படாமல் போய்விடும் ஆபத்து உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர் பான இந்தப் பிரச் சினையை அரசியலாக்க வேண்டாம் என்றனர். கர்நாடகாவின் மனு வெள்ளிக்கிழமை மீண் டும் விசாரணைக்கு வரு கிறது.

தண்ணீர் திடீர் நிறுத்தம்

இதற்கிடையே காவிரியில் தமிழகத் துக்கு தண் ணீர் திறந்து விடுவதை கர்நாடகா நேற்றிரவு திடீரென நிறுத்திவிட்டது.

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்


பிள்ளையாரே! உமக்கா இந்தக் கதி?

பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரால், கடந்த ஒரு மாத காலமாக நடந்த கூத்துக் களை நாடே அறியும்!

யார் இந்தப் பிள்ளையார்? பல்லவ மன்னன் நரசிம்மவர்மனின் காலத்தில்தான், பிள்ளையார் தமிழ் நாட்டிற்கே . . . அழையாத விருந்தாளியாக வந்து சேர்ந்தார்! இதைக் கொண்டு வந்தவர் பல்லவரின் தளபதி பரஞ்சோதி!

கி.பி. 630-க்கும் கி.பி. 668-க்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது 1340 ஆண்டுகளுக்கு முன், இங்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரே ஒரு பிள்ளையார்தான். இன்றைக்கு பட்டாசுகளில் மத்தாப்புகளில், ரகம் ரகமாக இருப்பது போன்ற பல விதமான வேடிக்கை, வேடிக்கையான பிள்ளையார் களுக்கெல்லாம் முன்னோடி! நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. பார்வதியின் அழுக்குருண்டைதான் பிள்ளையார் என்ற அசிங்கமான கதை மட்டுமல்ல -

பெண்கள் நடமாடும் ஆற்றங்கரையிலும் குளத்தங்கரையிலும், அரச மரத்தடியிலும், தெரு முனைகளிலும் உட்கார்ந்து கொண்டு,

தாயைப் போலப் பெண்ணை இன்று வரை தேடிக் கொண்டிருக்கிற கேவலமான கதையையும் சொல்லி, அதை மனிதப் பிறவிக்கும் கூட இலாயக்கற்றதாக ஆக்கி விட்டனர். அதை வைத்தே, பிழைப்பு நடத்தக் கற்ற சில தன்னலவாதிகள்! சுரண்டல் புத்தி படைத்தோரின், படைக்கலனே . . . இன்று பிள்ளையார்தான்!

எவ்வளவு மனித ஆற்றல், எவ்வளவு பொருட் செலவு, எவ்வளவு அறிவு நாணயக் கேடு, அதுவும் கியூரியா சிட்டி என்ற செயற் கைக்கோள், பூமியில் இருந்து 57 கோடி கி.மீ. தூரத்திலுள்ள செவ்வாய் கிரகத்தை ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் காலத்தில்! பார்ப்பவர்கள், கேட்பவர்கள் சிரிப்பார்களே என்ற வெட்கம் சிறிதும் இல்லாமல் பிள்ளையார் விளை யாட்டு நடத்தி மகிழும் இவர்களை எண்ணி உலகோர் கைகொட்டி சிரிக்க மாட்டார்களா?

பிள்ளையாரை வணங்கி வாழ்ந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை அவன் வணங்கிய பிள்ளையாரே காப்பாற்றவில்லையே! போரில் தோற்று விட்டானே!! எண்ணிப் பார்க்க வேண்டாமா?

இதனைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்த நரசிம்மவர்மனாவது இன்று இருக்கின்றானா? அவனுடைய வாரிசாவது ஏதாவது இருக்கிறதா?

இருட்டு அறையில் இல்லாத பூனையைத் தேடியலையும் இந்தக் குருட்டு மனம் இனியும் எதற்கு? இதற்காக ஏன் மதக் கலவரங்கள்? மனிதநேயமற்ற முரட்டுச் செயல்கள்? கலவரம் . . . தடியடி, கைது போன்ற தேவை யற்ற நட வடிக்கைகள். இந்த இலட்சணத்தில் இதற்கு அரசாங்க விடுமுறை வேறா? விட்டிற்பூச் சியே விளக்கை நாடிச் சென்றால் அதற்கு விடிவு காலந்தான் ஏது? தண்ணீரிலே தூக்கி எறியப்படுவதற்குள் இத்தனை அலங்கோலமா?

அந்தோ! பிள்ளையாரே! உனக்கா இந்தக் கதி?

- நெய்வேலி க.தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு


சென்னை, அக்.7-இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன. நடப் பாண்டில் மட்டும் 6406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சித் தகவல்களை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை சார்பில் 2012இல் குழந்தைகள் என்ற தலைப்பில் நாடு தழுவிய சர்வே நடத்தப்பட்டது. இதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 24 சதவீதம் அதிகரித்துள்ளன. குழந்தை கடத்தல் என்பது 43 சதவீதம், பாலியல் வன் முறை 30 சதவீதம் என்று உயர்ந் துள்ளன. நடப்பாண்டில் மட்டும் 6406 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதையும் சேர்த்து இதுவரை நாடெங்கிலும் மொத்தம் 33,100 வழக்குகள் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில்தான் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் அதி களவில் பதிவாகியுள்ளன.

இங்கு 16.6 சதவீதமும், மத்தியபிரதேசத்தில் 13.2 சதவீதமும், டெல்லியில் 12.8 சதவீதமும், பீகாரில் 6.7 சதவீதம், ஆந்திராவில் 6.7 சதவீதம் என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகியுள்ளன.உத்தர பிரதேசம் மற்றும் டெல் லியில் குழந்தை கடத்தல் அதிகமாக உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசத்தில் குழந்தை பாலி யல் வன்முறை சம்பவங்கள் அதிகள வில் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா, சட்டீஸ்கர் மாநிலங்களில் சிசுக் கொலைகள் அதிகளவில் நடக்கின்றன.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்த பெண் குழந்தையை வாங்குவதில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. இங்கு பதிவாகும் வழக்கு களில் 74 சதவீத வழக்குகள் பெண் குழந்தையை வாங்கிய வழக்குகள் தான்.

பாலியல் சம்பவங்களில் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் நடந்த மாநிலமாக மேற்கு வங்கம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 298 பாலி யல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தங்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலையில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு உட் படுத்தப்படுகின்றனர்.

இவ்வாறு புள்ளி விவரங்களில் கூறப்பட்டுள்ளது.8-10-2012

தமிழ் ஓவியா said...


தமிழகத்திற்கு தரும் தண்ணீரை நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது மன்மோகன்சிங் திட்டவட்டம்


புதுடில்லி, அக். 7- காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி நதிநீர் ஆணையத் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டிருந்தார்.

செய்தி வருமாறு:

தமிழகத்திற்கு நாள்தோறும் 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில் அதன் தலைவர் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டிந்தார்.

இதனை கண்டித்து கருநாடக மாநிலத்தில் வேலை நிறுத்தம், போராட்டம் என்று பல்வேறு வகைகளில் தங்களது எதிர்ப்பினை கருநாடக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர்.

கருநாடகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்தனர்.

தமிழகத்திற்கத் திறந்துவிடும் தண்ணீரை நிறுத்துவதற்கு உடனடி உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்திற்குத் திறந்து விடும் தண்ணீரை நிறுத்துவதற்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தம்மைச் சந்தித்த கருநாடக அமைச்சர்களிடம் பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,

மத்திய குழுவின் அறிக்கை கிடைத்த பிறகே அடுத்த கட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சராக இருந்து கொண்டு உச்சநீதிமன்ற ஆணை, பிரதமரின் ஆணைகளுக்கு விரோதமாகக் கருத்துச் சொல்லும் கிருஷ்ணாவை
அமைச்சர் பதவியிலிருந்து நீக்குக!


காவேரிப்பட்டணம், அக்.8- மத்திய அமைச்சர் என்பதை மறந்தும், உச்சநீதி மன்ற தீர்ப்பு, பிரதமரின் ஆணைகளுக்கு விரோதமாகவும் காவிரி நீர் பிரச்சினையில் கருத்துச் சொல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். நேற்று (7.10.2012) காவேரிப்பட்டணத்தில் நடந்த பெரியார் சிலை திறப்பு விழாவில் அவர் பேசியதாவது:

மத்திய அமைச்சராக வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம். கிருஷ்ணா அய்.நா.வுக்குச் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து பிரதமருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கருநாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு நீர் கூடக் கொடுக்கக் கூடாது என்று எழுதியிருக்கிறார்.மத்திய அமைச்சராக ஒருவர் இருப்பது - இந்தியா முழுமைக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்துத்தானே?
ஏதோ கருநாடக மாநிலத்துக்கு மட்டுமே உரிய மத்திய அமைச்சராகப் பேசலாமா? எழுதலாமா? கருத்துக் கூறலாமா?

தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 9000 கன அடி நீரை விட வேண்டும் என்று உச்சநீதி மன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு எதிராக ஒரு மத்திய அமைச்சர் கருத்துத் தெரிவிக்க லாமா? அப்படி கருத்துத் தெரிவிப்பது - நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?

காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவ ராக இருக்கக் கூடியவர் பிரதமர். பிரதமரும் வினாடிக்கு 9000 கனஅடி நீரை கருநாடகம் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட வேண்டும் என்று கூறியுள்ளார். எஸ்.எம். கிருஷ்ணா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் பிரதமரின் உத்தரவுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

இப்படி ஒரு மத்திய அமைச்சர் நீதிமன்ற அவதூறுக்கு ஆளாகலாமா? பிரதமரின் கருத்துக்கு விரோதமாகவும் நடந்து கொள்ளலாமா? அப்படி நடந்து கொண்டும் ஒருவர் மத்திய அமைச்சராக சட்டப்படி நீடிக்கலாமா? நீடிக்கத்தான் முடியுமா?
இதனைப் பிரதமர் தான் அனுமதிக்க லாமா? இப்படி ஒவ்வொரு மத்திய அமைச் சரும் பிரதமருக்கும் நீதிமன்றத்திற்கும் விரோதமாக நடந்துகொண்டால் மத்திய அரசு என்பதற்கான பொருள் தான் என்ன?

எனவே பிரதமர் அவர்கள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து உடனே நீக்க வேண்டும். (பலத்த கைதட்டல்) இல்லையெனில் ஒவ்வொரு மத்திய அமைச்சரும் நீதிமன்ற அவமதிப்பைத் தான் செய்வார்கள். பிரதமரின் கருத்துக்கு மாறாகவும் நடந்து கொள்வார்களே!
மத்திய அமைச்சராக இருக்கக் கூடிய ஒருவரே தான் ஒரு மத்திய அமைச்சர் இந்தியா முழுமைக்கும் பொதுவான அமைச்சர் என்பதை மறந்து, கருநாடக மாநில உணர்வோடு நடந்து கொள்கிறார்.

நம் தமிழ்நாட்டின் நிலை என்ன? காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் போன்ற ஒட்டு மொத்தமான தமிழர்களின் பொதுப் பிரச்சினையில் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறோமா?

மற்ற மற்ற மாநிலங்களில் சட்ட விரோத மான, நியாய விரோதமான பிரச்சினை களில்கூட கட்சிகளை மறந்து ஒன்று சேர் கிறார்கள். நம் தமிழ்நாட்டிலோ நமக்குள்ள நியாயமான, சட்ட ரீதியான பொதுப் பிரச் சினையில் தனித் தனியாக நிற்கிறோமே - முரண்பாடாகப் பேசுகிறாமே அண்டை மாநிலங்களவைப் பார்த்த பிறகாவது திருந்த வேண்டாமா? மன மாற்றம் அடைய வேண்டாமா? - என்று பேசினார் தமிழர் தலைவர் கி.வீரமணி.

தமிழ் ஓவியா said...


பெரியார் பகுத்தறிவு கலை - இலக்கிய அணி


தமிழர்களின் தன்மானத்தை வளர்ப்பதற் கும் தமிழர்களுக்கு அறிவூட்டுவதற்கும், தமிழர்கள் மனிதத் தன்மை அடைவதற்குப் பயன்படாத இயலோ, இசையோ, நடிப்போ எதற்காக வேண்டும்? அது என்ன மொழியில் இருந்தால் என்ன? (குடிஅரசு 22.1.1944) என்ற வினாவை 68 ஆண்டுகளுக்கு முன்பா கவே எழுப்பினார் தொலைநோக்காளர் தந்தை பெரியார்.

இன்றைக்கும் இந்த வினா தேவைதான் என்பதை நாட்டு நடப்புகள் நாளும் நினைவூட்டிக் கொண்டு தானிருக்கின்றன.ஒரு படிமேலே சென்று அறிவார்ந்த சினத்தோடு ஒரு கருத்தையும் வெளிப்படுத்தினார் வெண்தாடி வேந்தர்.

ஆரியம், புராணங்களில் அனேகம் முத்தமிழ்க் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க மானத்தில் நம்பிக்கையுள்ள நாம் எதைப் பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும். அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார்.

நம் நாட்டில் எத்தனையோ புலவர் பெரு மக்கள் தோன்றினார்கள்; காவியங்கள் படைத்தார்கள்; புரவலர்கள், அரசர்கள் இருந்தார்கள் எவரின் அறிவாவது இந்த வகையில் சிந்தித்ததுண்டா? மாறாக இந்த ஆரியக் கலாச்சாரச் சாக்கடைகளில் தானே உருண்டு புரண்டார்கள்.

இந்த நிலையில் தமிழ் குடிகொண்டு இருக்கும் பெரும்பாலான இலக்கியங்கள், பதினெண் புராணங்கள், இதிகாசங்கள் அத்தனையுமே தந்தை பெரியார் மேலே கூறிய குற்றச்சாற்றுகளி லிருந்து தப்பவே முடியாது.

பக்தி இலக்கியங்கள் மறுமலர்ச்சி கொண் டவை என்று பசப்புபவர் உண்டு. பக்தியினால் எந்த மறுமலர்ச்சித் தாக்கத்தை உண்டு பண்ண முடியும்?
திராவிடர் இயக்கம் அரும்பியபிறகுதான் அதுவும் தந்தை பெரியார் அவர்கள் தன்மான இயக்கம் கண்ட பிறகுதான் குறிப்பாக 1937இல் ராஜாஜி இந்தியைத் திணித்ததால் ஏற்பட்ட எதிர்ப்புப் புயல் காரணமாகத்தான் தமிழர்கள் ஓர் அணியில் நின்று களம் அமைத்து வெற்றி கண்ட நிலையில் தான், தமிழ், தமிழின உணர்வு, மறுமலர்ச்சி, பகுத்தறிவுக் கிளர்ச்சி தமிழர்கள் மத்தியில் மூண்டெழுந்தன.

இலக்கியத் துறையில் புரட்சிக் கவிஞர், புலவர் குழந்தை பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், புலவர் இலக்குவனார், அறிஞர் அண்ணா என்று ஒரு படை வரிசை கிளம்பிற்று.திரைப்படத் துறையில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் படைப்பு கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர். இராதா போன்ற வர்களின் நுழைவுதான் மறுமலர்ச்சி அத்தியா யத்தை முளைக்கச் செய்தன.
அதுவும் நாடக மேடைகளில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் புரட்சிப் பயணம் பாமர மக்களின் மத்தியில் கூட தந்தை பெரியார் அவர்களின் புரட்சிப் பூக்களின் மணத்தினை நுகரும்படிச் செய்தது.

இன்னொரு பக்கத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் கைகளில் வகையாக சிக்கிக் கொண் டுள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி தங்கள் ஆரியப் பண்பாட்டுச் சரக்குகளை மக்கள் மூளை யில் திணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதுவும் தொலைக்காட்சி என்ற ஊடகம் (தமிழர்கள் கைகளில் இருந்தாலும்) ஆரிய ஆதிக்கப் புரிகளாகத்தான் துள்ளித் திரிகின்றன.இராமாயணத்தைத் தொடர் ஒளிபரப்பும் அளவுக்குத் தமிழர் துரோகத்தைச் செய்து கொண்டு தானிருக்கின்றனர்.
இந்த நிலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களால் காலங் கருதி தொடங்கப்பட்டுள்ள பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதன் சிறப்பையும், அவசியத்தையும் உள் வாங்கிக் கொண்டு அதன் பொறுப்பாளர்கள் தம் கடமையினை ஆற்ற வேண்டும்.இந்தப் பணிக்காக நாளைய தமிழின மறு மலர்ச்சி உலகம் அவர்களுக்கு நன்றியறிதலைத் தெரிவித்துப் போற்றும் என்பதில் அய்யமில்லை.
பணி தொடரட்டும்!
தொடரட்டும்!!8-10-2012