Search This Blog

19.10.12

மெய்சிலிர்க்க வைத்த விடுதலை ஆசிரியர் வீரமணி

தோழர் வீரமணி அவர்களின் 50 ஆண்டு சாதனை நிறைந்த இதழியல் வாழ்க்கை
(25.8.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக் கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை)
மிகுந்த மதிப்பிற்குரிய முத்தமிழ் அறிஞர், செம்மொழிச் செம்மல், டாக்டர் கலைஞர் அவர்களே,
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சமூகப் போராளி, பகுத்தறிவுச் சிங்கம், கருப்புச் சட்டையும் வெள்ளைத் தாடியு மாகத் தென்னகத்தின் சமூக வாழ்வைப் புரட்டிப் போட்ட புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் உயிர்த் தொண்ட ராக, உற்ற தோழராகச் சமூக வாழ்வைத் தொடங்கி, இன்று வரை அணுப்பிசகாமல் பெரியார் வழியில் நடந்து, அந்தப் பாதையை மேலும் மேலும் விசாலப்படுத்திக் கொண்டு வரும் மதிப்பிற்குரிய தோழர், விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் பெரியோர்களே, இந்த அரங்கமே கொள்ள முடியாத அளவு திரண்டிருக்கும் பெரியாரின் தொண்டர்களே, தோழர்களே, நண்பர்களே, எல்லோர்க்கும் வணக்கம்!
இந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாத நாள்களில் ஒன்றாக மதிக் கிறேன். முத்தமிழ்ச் செம்மல் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமையில், விடுதலை ஆசிரியர் பற்றிப் பேசக் கிடைத்த அரிய வாய்ப்பு இது.
டாக்டர் கலைஞர் அவர்களை நேசிப் பவர்களில் நானும் ஒருவன். இந்தியப் பெருநாட்டில் நமக்கு அபூர்வமாகக் கிடைத்த அரசியல் தலைவர்களில் மிகமிக அபூர்வமாக வாய்த்த இலக்கிய அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களே. அவர் ஒரு கவிஞர், வசனகர்த்தா, சமூக உணர்வோடு கதைகள் எழுதிய சிறுகதை யாளர், வரலாற்றாளர். . . பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும் இந்தத் தகுதிகள் எல்லாம் இருந்தன. ஆனால் காலம் அவரை நமக்கு அதிக நாள் தொண்டு செய்ய விட்டு வைக்கவில்லை. கலைஞர் அவர்கள் சாதனைகள் மேல் சாதனைகள் செய்து, வாழ்ந்து கொண்டி ருக்கிறார். இன்னும் நீண்ட காலம் வாழ்வார்; வாழவேண்டும்.
திருவள்ளுவரை உலகம் அறியச் செய்தவர்களில் முதன்மையான ஒருவர் டாக்டர் கலைஞர் அவர்கள். குமரி முனைக்காரனான நான், அவருக்குச் சிறப்பாக நன்றி சொல்ல வேண்டும். ஆசியப் பெரும்பரப்பின் தென் முனையில், குமரிக் கடலில், திருவள்ளுவர் சிலையை அதிகாரத்துக்கு ஒரு அடி என்ற கணக்கில் கம்பீரமாக எழுப்பி, எங்கள் குமரி மண்ணையும் உலகுக்கெல்லாம் வெளிச்சப்படுத்தியவர் அவர்.
நண்பர்களே, உங்களைப் பெரியார் வழியில் சிந்தித்துப் பார்த்திட வேண்டு கிறேன். இந்தப் பெருங் கூட்டத்தில் அதற்கு மேல் விளக்கம் சொல்லத் தேவை யில்லை என நம்புகிறேன். அச்சிலை நம்மிடம் என்ன பேசுகிறது? பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பேசவில்லையா? வைதீக - வருணாசிரம எதிர்ப்பைப் பேசவில்லையா? இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள். அந்த முனைக்கு அந்த சிலைஏன் தேவை என்பது புரியும்.

அது மட்டுமா, உலகமே வியக்க, தமிழகத் தலைநகரில் நூலகம் அமைத்த புத்தகங்களின் காதலர் அவர்.
ஜீவாவின் உரை
இன்னொன்றும் இந்த மேடையில் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிடப் பேரியக்கம் தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடிப்பதற்கு முந்திய காலம் 1962 எனக் கருதுகிறேன். ஒரு கல்லூரியில் உலக இலக்கியத்தில் வள்ளுவம் என்னும் தலைப்பில் சொற்பெருக்காற்றினார் புரட்சியாளர் பா.ஜீவானந்தம் அவர்கள். கட்டுக்கடங்காத கூட்டம். மூன்று மணி நேரத் திருக்குறள் பெருமழை. எல்லோ ருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அரசு நிர் வாகம் என்ன செய்தது? கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய அந்தக் கல்லூரிப் பேராசிரியரைப் பணி நீக்கம் செய்தது. ஒரு கல்லூரியில் நடந்த இலக்கியக் கூட்டத்திற்கே அன்று நேர்ந்த கதி இது.
அது கலைஞரின் கை!
காலம் கடந்தது. என் முதல் நாவல் கரிசல் வெளிவந்தபோது, அதிகாரிகள் என்னைச் சுற்றி வளைத்தார்கள். யாருடைய அனுமதி பெற்று நாவலை வெளியிட்டாய் என்று கேட்டார்கள். அனுமதி தேவை இல்லை என்றேன். அப்படியா சொல்கிறாய், நாங்கள் உன்னைப் பணி நீக்கம் செய்வோம் என்றார்கள். சட்டைப் பையில் இருந்து ஒரு அரசாணையை எடுத்து அவர்களி டம் நீட்டினேன்.  என்ன அரசாணை அது? ஆசிரியர்கள் நூல்கள் எழுதி வெளியிட மேலதிகாரிகள் அல்லது அரசின் முன் அனுமதி தேவையில்லை, அவை அரசுக்கு எதிராகப் பேசாமல் இருந்தால் சரி, அதன் வரவு செலவுக் கணக்கு உரிய முறையில் பேணப்பட வேண்டும் என்றிருந்தது. நான் விடுதலை பெற்றேன். நான் மட்டுமா? என்னைப் போல ஆயிரம் ஆயிரம் அரசுப் பணியாளர்களும், ஆசிரியர்களும் விடுதலை பெற்றார்கள். இவ்வாறு எங்களுக்கு எழுத்து விடுதலை தர ஆணையிட்ட கை எந்தக் கை? இதோ இருக்கும் கலைஞர் அவர்களின் கருணைக் கைதான். அந்தக் கையை இயங்க வைத்த கலைஞரின் இதயத்தை வணங்குகிறேன்.
மகாபெரியவர் என்ன செய்தார்?
நான் யாரையும் குத்திச் சொல்ல விரும்புவதில்லை. ஆனாலும் சில உண் மைகளைச் சொல்லித்தான் ஆகவேண் டும். 1936இல் என்று நினைக்கிறேன். இடைக்காலத்தில் தமிழகத்தில் அதிகாரம் பெற்ற வைதீகம், நடைமுறைப்படுத்திய தாழ்த்தப்பட்டோர் பெருங்கோயில்களுக்குள் நுழைதல்ஆகாது என்ற தடை விதியை முறியடித்து, முதன் முறையாக அரசு அனுமதியோடு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அடித்தள மக்கள் நுழைந்தபோது, மகா பெரியவர் என்று போற்றப்படும காஞ்சிப் பெரியவர் சங்கராச் சாரியார் என்ன செய்தார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது மனம் வருந்து கிறது; அப்படி அவர் என்ன செய்தார் பெரியவர்? கோவிலுக்குத் தீட்டு நேர்ந்துவிட்டது என்று வெளிப் படையாக அறிவித்து, அதற்காக ஒரு முழுநாள் பட்டினி கிடந்து, தன் எதிர்ப்பைக் காட் டினார். பெரியவருக்கு ஆதரவாக, ஏராள மான உயர்ஜாதிப் பெண்கள் கோயிலைக் கழுவிச் சாணியிட்டு மெழுகித் தீட்டுக் கழித்தார்கள். இந்தச் செயல் எவ்வளவு மனித விரோதமானது! 

ஆனால் இன்னொரு பெரியவர் சிருங்கேரி சங்கராச்சாரியார் இது பற்றி என்ன சொல்லுகிறார் கேளுங்கள். பஞ்சமர்கள் எங்களையும் நாங்கள் புழங்கும் இடங்களையும் விட்டு விலகி நிற்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார் களே, அது ஏன்? அவர்கள் பிறப்பாலேயே தீட்டானவர்கள். உலகிலுள்ள மிகச் சிறந்த ஆடை அணிகலன்களால் தங்களை ஒப் பனை செய்து கொண்டாலும், பிறப்போடு தொடர்கின்ற  அவர்களின் அழுக்கை நீக்க முடியாது. இந்த அழுக்கு அவர் ஆன் மாவில் கலந்து நிற்பது. பிறப்போடு தொடர்ந்து வருவது, மாற்ற முடியாதது


விடுதலையின் அரும்பணி
தோழர்களே! இந்தச் செய்தியை நமக்குத் தந்தது எந்த நாளிதழ்? வேறு எதுவும் இல்லை, விடுதலை! இந்தச் செய்தி மட்டுமா? வரலாற்றின் நெடுகிலும் மனித இழிவுகளை ஒழித்து, மனித விடுதலைக்கான விதைகளைத் தேடிப் பொறுக்கித் தினம் தினம் மக்களிடையே விதைத்து, வளர்ப்பது விடுதலை. ஒருவரிச் செய்தியிலிருந்து ஒற்றைப் பத்திச் செய்தி வரை, அரைக்கால் பக்கத்திலிருந்து முழுப் பக்கம் வரை, எல்லாமே வைதீ கத்தின் முதுகில்விழும் சாட்டையடிகள். அதன் ஆசிரியரே இந்த மதிப்பிற்குரிய வீரர் தோழர் வீரமணி, அவரைப் பாராட் டாமல், சிறப்பிக்காமல்வேறு யாரைப் பாராட்டுவது?
மெய்சிலிர்க்க வைத்த ஆசிரியர்
நண்பர்களே! பெரியோர்களே! 1985 என்று நினைக்கிறேன். இன்றைய ரஷ்யா அன்று சோவியத் ஒன்றியமாக இருந்தது. அன்று அது உலகுக்கே வழி காட்டிய ஒப்பற்ற நாடு. அந்த நாட்டைக் காண இந்தியாவில்இருந்து சிலர் சென்றிருந் தோம். ஒரு நாள் காலை நேரம். மாஸ்கோ வின் விரிவான சாலையில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். சாலையை சுகாதாரப் பணியாளர்கள் துப்புரவு செய்து கொண்டிருந்தார்கள்.
அபூர்வமான காட்சி அது. நம் நாட்டு சுகாதாரப் பணியாளரோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் அந்த அபூர்வம் என்ற சொல்லின் பொருளை நீங்கள் உணர முடியும். ரஷ்யாவின் அரசு தலைமைப் பீடமான கிரம்லினில் பணி செய்யும் உயரதிகாரிகள் போலவே இவர்களும் உடுத்தியிருந்தார்கள். அவர்கள் பயன்படுத்திய நவீனக் கருவி கள் எங்களுக்கு வியப்பூட்டின.
எல்லோருக்கும் வியப்புத்தான். ஆனால் ஒரே ஒருவரால் அந்த வியப்பை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. என்னிடம் வந்தார் அவர். பொன்னீலன், இந்த கேமராவைக் கையில் பிடியுங்கள். இந்த அற்புதக் காட்சியைப் பதிவு செய் யுங்கள் என்றார். சொல்லி விட்டு நேரே அந்தத் தெருக்கூட்டும் தொழிலாளர்களிடம் போனார். அவர்களும் இவரை வியப்போடு பார்க்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் தன் இரு பக்கத்திலும் நெருங்கி நிற்கச் செய்து, இதைப் படம் பிடியுங்கள் என்றார் என்னிடம். யார் அவர்? இதோ அமர்ந்திருக்கிறாரே விடுதலை நாளிதழின் ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் சாதனை செய்து கம்பீரமாக வீற்றிருக்கிறாரே, இந்த வீரமணிதான் அவர்.
மெய்சிலிர்த்துப் போனேன் நான். எப்பேர்ப்பட்ட அற்புத மனிதராய் இருக்கிறார் இந்தத் தோழர். தந்தை பெரியார் இவரை எவ்வளவு வலுவாக உள்ளிருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். பெரியார் கற்பனை செய்த ஒரு சமத்துவ சமுதாயம் அங்கே மானிட ரூபத்தில் மலர்ந்திருப்பதைக் கண்டு எவ்வளவு குதூகலிக்கிறார் இந்த மனிதர்!
வரலாறு தெரியாத இனம்
ஆதிசங்கரர் பரம்பரையை நம் உடன் பிறப்புகள் பாதத்தில் பொன் சொரிந்து பணிகிறார்கள். ஆனால் அந்த சங்கராச் சாரியார் பரம்பரைகள் உழைக்கும் மக்களை எவ்வளவு இழிவு படுத்து கிறார்கள்! காலுக்கடியில் போட்டு எப்படி மிதித்துத் துவைக்கிறார்கள்! தெருக் கூட்டுபவர்களை அவர்கள் என்றேனும் மனிதர்களாக மதித்தது உண்டா? வரலாறு தெரியாத இனம் புதிய வரலாறு படைக்க முடியாது என மூச்சுக்கு மூன்று முறை எச்சரித்தாரே தந்தை பெரியார், அதை இந்த சமூகம் உணர்ந்திருந்தால், இந்த சமூக இழிவுகள் என்றோ நம்மை விட்டு ஒழிந்து போயிருக்குமே!
சமூகப் புரட்சித் தொண்டு
இந்த இழிவுகள் முற்றாக ஒழியக் காலம் முழுவதும் போராடிய மாமனிதரே தந்தை பெரியார். 50 ஆண்டுகளுக்கு முன் அவர் விடுதலை நாளிதழ் ஆசிரியர் பொறுப்பைத் தோழர் வீரமணி அவர் களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்தார். வீரமணி அன்று எம்.ஏ.,பி.எல்., படித்த இளைஞர். பல உயர் வாய்ப்புகள் அவரைத் தேடி வரும் சூழல். எல்லா வற்றையும் துறந்து, தந்தை பெரியாரின் வார்த்தைகளில் சொன்னால், முழுநேரத் தொண் டனாய் இருக்கத் துணிந்து,

பத்திரிகைத் தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் இயன்ற அளவு செய்ய ஒப்புக்கொண்டு, குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டவர் நினைவில் வையுங்கள். இது கட்சித் தொண்டல்ல. எந்தப்பதவிக்கும் வாய்ப்புத் தராத சமூகப் புரட்சித் தொண்டு, ஒரு தியாகம். கல்லடி யையும் தடியடியையும் சந்திக்க வேண்டிய ஓயாத போராட்டம். இதற்குத் துணிந்து வந்த வீரமணி அவர்களின் ஒப்பற்ற தியாக உணர்வை எப்படிப் பாராட்டுவது!


-------------------பொன்னீலன்  தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம் - "விடுதலை” 17,18 -10-2012

0 comments: