Search This Blog

12.10.12

நெய்வேலியில் முற்றுகை ஏன்? ஏன்?


தோழர்களே, தோழர்களே!
வரும் 15 ஆம் தேதி காலை நெய்வேலி (என்.எல்.சி.) நிறுவனத்தின்முன் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில், திராவிடர் கழகத்தின் சார்பில் முற்றுகைப் போராட்டம், ஏன்? ஏன்?

கருநாடகத்தில் காவிரி உற்பத்தியாவதால், தனக்கு விஞ்சிதான் தான தருமம் என்ற போக்கில் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமாட்டார்களாம்!
எல்லா வகையிலும் சட்ட ரீதியாக, நியாய ரீதியாக முயற்சித்துப் பார்த்தும் மூடனும், மூர்க்கனும் கொண்டது விடான் என்பதற்கேற்ப அசட்டுப் பிடிவாதத்தோடு, முரட்டுத் துணிவோடு, தமிழ்நாட்டுக்குத் தரப்படவேண்டிய தண்ணீரைத் தராமல் தண்ணி காட்டுகிறது கருநாடகம்.

ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கவேண்டாமா? பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்கவேண்டாமா?

நெய்வேலி தமிழ்நாட்டில்தானே இருக்கிறது?

அங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்தானே பிற மாநிலங்களுக்கும் செல்கிறது? என்ன கொடுமை என்றால், உற்பத்தியாகும் 2000 மெகாவாட்டில் தமிழ்நாட்டுக்கு வெறும் 20 விழுக்காடுதானாம். நெய்வேலி நிலக்கரிக்கும், நரிமணம் பெட்ரோலுக்கும் ராயல்டி கேட்டுப் போராடி வெற்றி பெற்றது திராவிடர் கழகமே! இதிலும் வெற்றி பெறுவோம் - வெற்றி பெற்றாகவும் வேண்டும்!

எரிகிறதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடாதா?

தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு தலைவிரித்தாடும் நிலையில், நம் மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஏன் வெளி மாநிலத்திற்கு அனுப்பவேண்டும்?

ஏட்டிக்குப் போட்டியல்ல இது! காவிரி நீரைக் கருநாடகத்தைத் தாண்டி கொடுக்க முடியாது - காவிரி நீர் எங்கள் சொத்து என்றால், இதே வாதம் நெய்வேலி மின்சாரத்துக்கும் பொருந்தாதா?

தூங்கியது போதும் தமிழர்களே, கொதித்தெழுவீர்!  நாம் தூங்குகிறோம் என்று நம் தொடையில் கயிறு திரிப்போர்க்கு - நாம் விழித்துக்கொண்டு இருக்கிறோம் என்ற எழுச்சியைக் காட்டவேண்டாமா?

அதற்குத்தான் இந்த முற்றுகைப் போராட்டம் - தமிழர் தலைவர் தலைமையில்!

தமிழர்களே, அணி அணியாகத் திரள்வீர்!

கருஞ்சட்டைத் தோழர்களே, அலை அலையாகக் கூடுவீர்! கூடுவீர்!!

                 ---------------------"விடுதலை” 12-10-2012

14 comments:

தமிழ் ஓவியா said...


அமெரிக்காவரை துர்நாற்றம்!இந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியும், ஜாதி மனப்பான்மையும் அமெரிக்காவரை துர்நாற்றம் வீசுகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு இந்தியப் பார்ப்பனர்களின் சுயநல ஜாதி வெறியை அம்பலப்படுத்தியுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டம் இயற்றப் பட்டும், அதனைச் செயல்படுத்த விடாமல் பார்ப் பனர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.

அதிகாரப் பூர்வமாக அர்ச்சகர் பயிற்சியைப் பெற்ற 206 பேர்கள் நான்கு ஆண்டுகளாக அர்ச்சகர் பணிக்காகக் காத்துக் கிடக்கின்றனர்.

தங்களுக்கு எப்படியும் அர்ச்சகர் பணி கிடைத்து விடும் என்று எதிர்பார்த்து இருந்தவர்கள் பார்ப்பனர்களின் சூழ்ச்சியினால் பணியின்றித் தவித்துக் கொண்டுள்ளனர். எந்த அளவுக்கு இங்குள்ள பார்ப்பனர்கள்பற்றி அமெரிக்கா வரை எட்டப்பட்டுள்ளது என்பது - லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு விளக்கியுள்ள கருத்திலிருந்து எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதில் உள்ள முக்கியமான பிரச்சினையே தாழ்த்தப்பட்ட மக்களிடம் தூய்மை இன்மையோ, அல்லது பாரம்பரியமான பழக்க வழக்கங்களோ அல்ல.

உண்மையில் இதில் இருக்கும் பிரச் சினையே கோவில் அர்ச்சகர் என்ற முறையில் தங்களுக்குக் கிடைக்கும் அதிகாரத்தையோ, செல்வாக்கையோ, பணத்தையோ பார்ப்பனர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை - என்று நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல அமெரிக்க ஏடு அம்பலப்படுத்தி யுள்ளதே.

இதனை நாம் சொன்னால் பார்ப்பனத்துவேஷம் என்று எகிறிக் குதிக்கும் பார்ப்பனர்கள் அமெரிக்க ஏட்டின் இந்தக் கருத்துக்கு என்ன உள் நோக்கத்தைக் கற்பிக்க முடியும்?

தாழ்த்தப்பட்ட சமூகத் தோழர் மயிலாப்பூர் கபாலீசுவரன் கோவில் அர்ச்சகரானால், மயிலாப் பூர் மதனகோபாலய்யரோ பட்டு மாமியோ அர்ச்சனை செய்ய அந்தக் கோவிலுக்குச் செல்லு வார்களா? கடவுளுக்கு முன் வேறு எதுவும் கண்ணுக்குத் தெரியாது - தெரியக் கூடாது என் கிற தத்துவார்த்த விசாரணையில் ஈடுபடு வார்களா?

நந்தன் நாயன்மார்களில் ஒருவராக இல்லையா? என்று - நாம் கேட்கும் கேள்விக்குச் சாமர்த்திய மாகப் பதில் சொல்லுவார்கள்.

அந்த நந்தன் கோவில் கருவறைக்குள்ளா வைக்கப்பட்டுள்ளார்?

அவர்கள் சொல்லுகிறபடி வாதத்துக்காக ஒப்புக் கொள்வதாக இருந்தாலும், நந்தனை ஏற்றுக் கொண்டபின், அந்தத் தோழரின் பாரம்பரியத் தினரை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்ற வினா எழாதா?

இன்னொன்றையும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

கோவில் வழிபாடுகளையும், மந்திரங் களையும் சமஸ்கிருதத்தில் செய்யாமல், மாநில தாய்மொழியான தமிழிலேயே செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற தாழ்த்தப் பட்டவர்கள் விரும்புவது பாரம் பரியப் பிடிவாதம் கொண்ட பார்ப்பனர்களை மேலும் பதறச் செய்கிறது. சமஸ்கிருதம் பார்ப்பனர்களுக்குத் தங்களின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவதாக அவர்கள் கருதுகின் றனர். கடவுளிடம் என்ன மந்திரங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை சாதாரண பாமர மக்கள் எவராலும் புரிந்து கொள்ள முடியாது. சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி - என்று அந்த ஏடு மட்டைக்கு இரண்டு கீற்றாகக் கிழித்தெறிந்து விட்டதே!

லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் எழுதுகிறதா? திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விடுதலையில் எழுதுகிறாரா என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா!

என்னதான் ஊடகத் துறையிலும், நீதித் துறையிலும், நிருவாகத் துறையிலும் பார்ப்பனர் களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தாலும் தந்தை பெரியார் கொள்கையின் வெற்றியை, அதன் வீச்சை வெகு காலத்திற்குத் தடுத்து நிறுத்திட முடியாது - பெரியார் உலகமயமாவதைத் தடுக்கவும் முடியாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அமெரிக்க ஏட்டின் கருத்துக்களும், தகவலும் ஆகும்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! 12-10-2012

தமிழ் ஓவியா said...


தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


- சா. காந்தி (தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு)

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு (1). இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக் கடியான காலகட்டத்திலும் மின்சா ரத்தை உற்பத்தி செய்யவிடாமல் தமிழ் நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்த மான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலை யங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக் கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகா வாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமை யாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற் றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சா ரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்.

இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரி வாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப் படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத் திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் நிறுவனத் திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது. 2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2 X 600 மற்றும் 1 X 600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகு களை அமைக்க நிறுவனத்தின் உதவி யுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது.

தமிழ் ஓவியா said...

அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அது போலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப் பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

இவை அனைத்தும் ஏற்கெனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள் ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது. சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3 X 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத் திற்குக் கிடைக்கும் என்பது உடன் படிக்கை.

ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப் பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னை யின் இரண்டாவது அலகான 600 மெகா வாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந் துள்ளன. 2012 மார்ச் - மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய் யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (syndronised).. எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின் சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின் சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும்.

தமிழ் ஓவியா said...


இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சா ரத்தைப் போலல்லாமல் குறைந்த விலை யில் கிடைக்கும் மின்சாரமாகும். எனி னும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது. நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷ னும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரித மாக முடிக்க வேண்டும் என்ற கோரிக் கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது. ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத் திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை. ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடை முறை காரணமாக, இன்று நாம் கிட்டத் தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக் குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும்.

தமிழ் ஓவியா said...

என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக் காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தனக்கு சொந்தமான மின் நிலை யங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன் வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற் கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவ றானது. கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிக பட்ச இயங்கு திறன் 80 ஆகும். அதாவது பிரச் சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும்.
இவ்வாறு உற் பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவ தற்கே சுமார் 100 மெகா வாட் மின்சாரம் தேவைப் படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந் திரங்களின் இயக்கத் திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப் போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம் தான். இதில் தமிழகத்திற் குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும் போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும். இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடி யாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பது தான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும்.

இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத் தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22ரூ கழித்து விட்டால் கிடைக்கப் போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சா ரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகா வாட்தான் கூடங்குளம் அணு மின் நிலை யத்திலிருந்து கிடைக்கப் போகிறது (2). எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங் களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற் கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

*************

தமிழ் ஓவியா said...

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக் கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத் துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். மின் பற்றாக்குறை இருக்கும் காலத் தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது. மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக் கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது. 2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடு முறை மற்றும் 40 -க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத் தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்கு களையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது. அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40ரூ மின் வெட்டை முதல்முறையாக அமல்படுத்திய போது ஒழுங்குமுறை ஆணையம் அதற் கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக அய்ந்து வார காலத் திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடிய வில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தர விற்கான அனுமதியை அளித்தது. அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பார பட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்கு முறை ஆணையம் சுயமாகவே தலை யிட்டுத் தன் கடமையை நிறைவேற்றி யிருக்க வேண்டும்.

ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை. பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

தமிழ் ஓவியா said...

1. சென்னை மாநகரம் மட்டுமே தமி ழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

2. மிக உயர் மின் அழுத்த இணைப்பு களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

3. 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப் பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப் படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

4. பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத் திற்காகவும் அதிக அளவு மின்சாரத் தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற் கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

5. உயர்மின் அழுத்த மின் இணைப் புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உள்ள காலத்தில் 10ரூ க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

6. திரைப்பட அரங்குகள், அய்ஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டு களுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

7. புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற் கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது. சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவ தால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத் தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட் டங்களாக வெடித்திருக்கின்றது.

அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்க வேண்டு கிறோம்:

1. பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்தவித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

2. இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்கு முறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும். தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது. 12-10-2012

தமிழ் ஓவியா said...


இலங்கை அரசிற்கு சாட்டை அடி! பிரிட்டனில் தமிழர்களுக்கு ஆளும் கட்சியில் தனித்துவ தகுதி!


இலண்டன், அக்.12- பிரிட்டனில் பிரித்தானியாவின் ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி (Conservative) தனது கட்சிக்கான உப கட்சியாக பிரிட்டானியத் தமிழர் களைக் கொண்ட உபகட்சியாக British Tamils Conservative (BTC) எனும் அமைப்பை அதிகாரப் பூர்வமாக பிரிட்டானியா அறிவித்துள்ளது.

இப்புதிய கட்சியில் பிரித்தானியத் தமிழர்கள் மட்டு மல்லாது ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அய்ரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் அங்கம் வகிக்கின்றனர். கடந்த செவ்வாய்க் கிழமை (09.10.2012) நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். குறிப்பாக Rt. Hon. Thersa Villeris, MP & Minister (Secretary of Stae for Northern Ireland), Lee Scott MP (Chairman, All party group for Tamils), Dr. Syed Kamal MEP, Rt Hon. Grant Shapps, MP (Conservative party Chairman), Jackie Doyle-Price MP, Robert Halfon, MP for Harlow, Rt. Hon., Dr. Rachel Joyce, Roger Evans (GLA member), Dr. Charles Tannock, MEP, Liam Fox, MP ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

இந் நிகழ்வில் தமிழர் தரப்பு British Tamils Conservative பிரதிநிதிகளாக.

Mr. Karan Paul, Dr. Rajah, Dr. Archuna Sivanthan, Mr. patrick Ratnaraja, Mr. Vijay Jeyanthan, Mrs. Thaksha Ravikulan, Mr. Ruthirapathy Seker, Mr. Vasi ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். பல்லின மக்கள் வாழும் பிரிட்டனில் தமிழர்தரப்பிற்கு கிடைத்த முதலாவது உரிமை என்று இதனை சொல்லலாம்.

இவ்வாறான கட்சியை உருவாக்குவதற்கும், அதனூடான தமிழர்கள் தரப்பு விடையங்களை பிரிட்டன் பாராளுமன்றம் வரை கொண்டுசென்று அதனூடாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியை தடுத்து நிறுத்தவும், அரசியல் தீர்விற்கான பிரிட்டன் அரசின் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சிக் காகவும் நீண்ட காலமாக அயராது உழைத்து வந்த MRS. Hazel Weinberg k‰W« MR. KARAN PAUL ஆகியோரின் முயற்சிக்கு கிடைத்த பெரு வெற்றியாகவும் இக் கட்சியின் அங்கீகார அறிவிப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா அரசோடு கூட்டுச் சேர்ந்து இதுவரை காலமும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டுவந்த Liam Fox - MP - தற்போது இக்கட்சியில் இணைந்திருப்பது அனை வரையும் நண்பர்களாக மாற்றி தமிழர்களின் இனப்பிரச் சனைக்கு தீர்வுகாண முனையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் முயற்சிக்கு வலுச்சேர்த்துள்ளது எனலாம்.

பிரிட்டனில் வாழும் தமிழர்கள், குறிப்பாக இளையோர் கட்சி வேறுபாடுகளைக் கடந்து இப் புதிய British Tamils Conservative (BTC) குழுவில் இணைந்து செயற்படவும், தமது சிந்தனை, செயற்திறன் ஊடாக சர்வதேச நாடுகளை வென்று அதனூடாக இலங்கையில் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வைக்க முன்வர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12-10-2012

தமிழ் ஓவியா said...


அண்ணா அறைகிறார்!


குழந்தையை மிரட்டக் கிழவர்கள், அய்ந்து கண்ணனைப் பற்றியும், ஆறு காலனைப் பற்றியும் கதை கூறும் போது குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமேயன்றி, தாத்தா, இதை நான் நம்ப முடியாது என்று கூறுவதுண்டோ?

குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருந்த போதுதான் இடதேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள் எனக் கடவுட் கதைகள் கட்டி விடப்பட்டன.

உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள், அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்தநாள் ஆபாசத்தை இன்னும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடையே பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக் கொண்டுள்ளனர்.

நூல்: உவமைநயம்

தமிழ் ஓவியா said...


லஞ்சம் வாங்குபவன் ஒருப்படுவான்!

நாம் சிரார்த்தம் என்னும் பேரால் பல தானங்களும், வெள்ளி, தங்கம் ஆகியவற்றால் பாத்திரங்களும் அரிசி, காய்கறிகளும் குறிப்பிட்ட சமூகத்தவர்க்குக் கொடுத்தல் அவசியமெனக் கருதி, அவ்வாறு செய்து வருகின்றோம்.

இதனால் நம் பிதிர்கள், சுவர்க்கத்தை அடைவார்கள் என்றும் நம்புகிறோம். இவ்வாறு பிள்ளைகள் செய்வதால், தந்தை தான் செய்த பாபத்தினின்றும் மீளுவது உண்மையாயின் நமது தத்துவமான அவனவன் செய்தவன் அவன வனைச் சாரும் என்பது பொய்யாகப் போகின்ற தன்றோ!

ஒருவன் செய்த குற்றத்திற்காக அவனைச் சார்ந்தார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டால், கோர்ட்டார் விடுவார்களா! உண்மை நீதிபதி விட மாட்டான்! லஞ்சம் வாங்குபவனே அதற்கு ஒருப்படுவான்.

வ.உ.சி. 3.3.1928, காரைக்குடியில்

தமிழ் ஓவியா said...


ஆச்சாரியார் பார்வையில்...


சீத்தாராமைய்யர் ஆத்திரமாய் பேசினார். சாஸ் திரத்தில் நாலு வர்ணங்கள் தானே சொல்லியிருக் கிறது? அய்ந்தாவது வர்ணம் கிடையாதே. இந்த ஜனங்களை நாலாவது வர்ணமாக பாவித்து நடத்தினால் என்ன மோசம் முழுகிவிடும்? என்று சின்ன வக்கீல் கேட்டார். ஜகதீச சாஸ்திரிகள்: இங்கிலீஸ் மொழி பெயர்ப்புகளை படித்து விட்டு சாஸ்திரங்களை கரை கண்டதுபோல் பேசுகிறீர்கள்.

ஆதி சிருஸ்டி நாலு வர்ணம்தான். அதற்கு பிறகு வர்ணக் கலப்பு ஏற்பட்டு சங்கர சாதி உற்பத்தியாயிற்று. பிரதி ரோமச் சேர்க்கைகளின் பலனாகச் சாதி சண்டாளர்கள் உண்டானார்கள். சின்ன வக்கீல்: பிரம்மாவுடைய எண்ணம் சாயாமல் போச்சுப் போலிருக்கிறது.

பறையன், பள்ளன், சக்கிலியன் எல்லோரும் கெட்டுப் போன பிராமண ஸ்தீரிகளின் சந்ததிகள் என்றா சொல்லுகிறீர்கள்? சாஸ்திரிகள்: அப்படி எல்லாம் நோண்டி பார்த்தால் சரிப்படாது. தலைமுறை தலைமுறையாக அவர்களை சண்டாளர்கள் என்று வைத்து நடத்தி வந்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் ருசு கேட்கக் கூடாது. நாம் பிராமணர்கள் என்பதற்கு என்ன ருசு? என்றார்.
(வானதி பதிப்பகம் வெளியிட்ட சி.ராஜகோபாலாச்சாரியார் எழுதிய ராஜாஜி கதைகள் என்ற நூலிலிருந்து)

தகவல்: வி.வாசுதேவன், திருவொற்றியூர்.

தமிழ் ஓவியா said...


தீயில் நடக்கலாம்


முகமதியர் தமது நோன்பிலே, பெருந்தீயில் இறங்கிச் செல்கின்றனர். இது தெய்வத் திருவருளா! அல்லது ஏதேனும் சூழ்ச்சியினாலா? என்றால், அருளும் அன்று! சூழ்ச்சியும் அன்று, முகமதியர் மட்டும் அல்லர்.

இந்துக்களும் திரவுபதை கோயில், முருகக்கடவுள் கோயில் முதலிய இடங்களில் தீயில் இறங்கிச் செல்கின்றனர். தீ அவர்களைச் சுடுவதில்லை. இது தெய்வச் செயல் என்று நீங்கள் எண்ணுதல் வேண்டா.

கையால் தீயை எடுக்கலாம். ஆனால் அதனை வைத்துக் கொண்டிருக்க முடியாது. கை ஒரு மாத்திரை நேரம் அளவு சூட்டைப் பொறுக்கும் காலில் தீயின் வெம்மை சிறிது நேரம் தாழ்ந்தே சுடுமாதலின் அஃது இரண்டு மாத்திரை சூடு பொறுக்கும். தீயில் நடந்து செல்லலாம்.

தீயின் சாம்பல் காலில் ஒட்டிக் கொண்டால் சுடும். தீயில் சாம்பல் உண்டாகாமல் பாதுகாத்து நடப்பின் சுடாதிருக்கும்.

- பாம்பன் குமரகுருதாச அடிகள் (1878 ஆம் ஆண்டில்)

தமிழ் ஓவியா said...


கோவிலுக்குள் மூலஸ் தானம்


கோவிலுக்குள் மூலஸ் தானம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இந்து மதத் தை நம்பாதவர்களும், அதற்கு எதிரிடையாயுள் ளவர்களும் சுற்றித் திரிய இடங் கொடுத்துவிட்டு, இந்து மதத்தைக் கொண் டாடுவதோடு அல்லாமல், இந்து மதத்தில் பிறந்து அதையே நம்பி, அதிலே இருந்து அதற்காகவே இறந்து கொண்டு இருக்கிற இந்து மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பது பொல்லாத தலைவிதியாயிருக்கிறது.

என்னுடைய அபிப்பிராயத்தில் இது தீண்டா மையை விடக் கேவலமான தாயிருக்கிறது.

- பி.டி.ராஜன் (9.6.1928)

(லால்குடி தாலுகா முதலாவது சுயமரியாதை மாநாட்டின் தலைமை உரையில்)
தகவல்: மன்றவாணன்

தமிழ் ஓவியா said...


குன்னர்மிர்தல் கூறுகிறார்


மக்களிடையே இருப்பது சமுதாய, பொருளாதாரப் பிளவுகளும், அவற்றுடன் சமுதாய நலன்கள், வேலை வருவாய் வாய்ப்புகள் இவற்றில் கொடிய சம மின்மையும் ஆகும். சம மற்ற ஏற்றத்தாழ்வுள்ள சமதாய அமைப்பு இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அகற்றமுடியாத பெரும் பகையாக உள்ளது. (ஆசியன் டிராமா - பக்கம் 258)

இந்திய சமுதாய பழக்கவழக்கங்களில் சாதிப் பாகுபாடு ஊடுருவிப் பாய்ந்துள்ளது கடுமையான அறுவை சிகிச்சையாலன்றி, வேறு முறையால் அதனை வீழ்த்திட முடியாது

(பக்கம் 278 - அதே நூல்)
(குன்னர்மிர்தல் எழுதிய ஆசியன் டிராமா என்ற இந்நூல் நோபல் பரிசு பெற்றது)