Search This Blog

10.10.12

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா?

தீண்டாமையும் இஸ்லாமும்

இந்து மதத்தில் தீண்டாமையானது பலமான இடம் பெற்றிருக்கிறது என்பதை எந்த இந்துவும் இதுவரை மறுக்கவே இல்லை. அப்படி மறுப்பவர்கள் தாங்கள் யோக்கியமான இந்துவா, இந்து சாஸ்திரங்களை புராணங்களை வேத சாஸ்திரங்கள் எனபவைகளை கடவுள் வாக்குகள். கடவுள் நடவடிக்கைகள் என்பவைகளை அப்படியே ஒப்புக்கொள்ளுபவர்களா அல்லது தங்களுக்கு இஷ்டமானபடி சமயத்துக்கு மக்களை ஏய்ப்பதற்கு ஆக பேசுபவர்களா? என்பதை முதலில் நாணயமாய் முடிவு செய்து கொள்ள வேண்டும். ஜாதி பேதங்களையும், தீண்டாமையையும் ஒழிக்க இந்து மதம் இடம் கொடுக்குமானால் இந்து மதத்துக்கும் இஸ்லாம் மதத்துக்கும் வேறு என்ன வித்தியாசம் இருக்கிறது என்று நாம் பந்தயம் கட்டி கேட்கின்றோம். மதத்தின் பேரால் வயிறு வளர்த்து மரியாதை சம்பாதித்துத் திரியும் சோம்பேறிகள், எல்லா மதங்களிலும் இருக்கலாம். அதனால் மத தத்துவ ஆதாரங்களின்படி தீண்டாமையும், ஜாதி வித்தியாசமும், பேதமும் இஸ்லாம் மதத்தில் இல்லை என்பதையும் இந்து மதத்தில் இருப்பதோடு அல்லாமல் அமுலிலும் மிக்க கொடுமையான தத்துவத்துடன் இருந்து வருகிறது என்பதையும் நாம் எங்கும் நிரூபிக்கமுடியும்.

இந்த நிலைமையில் தீண்டாதார் என்று இழிவாய் கருதப்படும் மக்கள் ஜாதிபேதத்தையும் தீண்டாமையையும் முக்கியத்துவமாய்க் கொண்ட இந்து மதத்தைவிட்டு அதில்லாத மதத்துக்குப் போவதால் என்ன கெடுதியென்று கேட்கின்றோம்.

முஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் கொடுப்பானா? என்று ஒரு தலைவர் கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் இருந்தால் மாத்திரம் இவர் தன் பெண்ணைக் கொடுக்கக்கூடுமா என்று நாம் கேட்டால் அது அதிகப் பிரசங்கித்தனமாய்விடும் என்று அஞ்சுகிறோம்.

பெண்கொடுப்பது வாங்குவது கர்னாடகக் காலம் ஆகப்போகிறது. புதிய உலகில் அவனவனுக்குப் பிடித்தது தானாகவே ஜோடி சேரப்போகிறது. அப்படியே சில இடங்களில் சேர்ந்தும் வருகிறது.

ஆனால் ஒரு தீண்டாதவன் முஸ்லீமானாலும் ஒரு கூட்ட தீண்டாதவர்கள் முஸ்லீம்களானாலும் அவர்களைப் பொறுத்தவரை தீண்டாமை அந்த நிமிடமே ஒழிந்துவிடுகிறது மாத்திரம் நேரில் பிரத்தியக்ஷத்தில் பார்த்து வருகிறோம்.

இஸ்லாம் மதத்தில் பெண்கள் மூடிபோட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அது மத சம்பிரதாயமல்ல. ஏனெனில் இந்து சமூகத்திலும் சிறிது பணமோ வலிமையோ சந்தேகமோ இருந்தால், பெண்கள் மூடித்தான் வைக்கப்படுகிறார்கள். இது பெண் அடிமையைப் பொறுத்ததாகும். தீண்டாமை, அதாவது ஆண் அடிமை தீர்ந்த உடன் பெண் அடிமை தீரப்போகிறது. அதற்காகப் போர் நடக்கப் போகிறது. அந்தக் காலம் வெகுதூரத்தில்இல்லை. ஆதலால் அதற்கும் இதற்கும் சம்மந்தம் வைப்பது தகுந்த நியாயம் சொல்ல முடியாத பயங்காளித்தனமே ஆகும்.

ஆதலால் இதுவரை தீண்டாமை விலக்குக்காக சமூக சீர்திருத்தக்காரர்களும், அரசியல் கிளர்ச்சிக்காரரும் செய்த சகலவித முயற்சிகளிலும் கிளர்ச்சிகளிலும் தோல்வியே அடைந்துவிட்டார்கள்.

அம்பேத்கார் உபதேசமே இப்போது தீண்டாமை ஒழிவதற்கு உண்மையான சாதனமாய் இருக்கிறது. சுமார் 6,7 கோடி பேர்கள் ஏற்கனவே அனுபவித்துப் பார்த்துவிட்டார்கள்.

தீண்டாதவர்கள் இஸ்லாமாகிமுஸ்லீமாகி மனிதர்களாவதுதான் யோக்கியமான மார்க்கம் என்று கூறுகிறோம்.

இதை ஆட்சேபிப்பவர்கள் தங்களால் இதுவரை இது விஷயத்தில் செய்யப்பட்ட காரியம் இன்னது, அதனால் ஏற்பட்ட பயன் இன்னது, அல்லது காந்தியார் ஈறான மற்ற சீர்திருத்தக்காரர்களால் ஏற்பட்ட காரியம் இன்னது என்று அனுபவரீதியாய் எடுத்துக்காட்டி ஆட்சேபிக்கத் தாழ்மையாய்க் கேட்டுக்கொள்ளுகிறோம்.


-------------- தந்தைபெரியார் -”குடி அரசு” துணைத்தலையங்கம் 09.08.1936

19 comments:

Selva said...

மதம் என்றாலே மனிதனைக் குருட்டு முட்டாளாக்கி இல்லாத ஒன்றைக்காட்டி மூளைச் சலவை செய்யும் சாக்கடைதான். அந்தக்காலத்தில் நெறி கெட்டுத்திரிந்த மனிதனை நல்வழிப்படுத்தவே கடவுள்மார் உருவாக்கப்பட்டனர். இப்போது மனிதன் அறிவுடையவனாகப் பரிணாம வளர்ச்சியுற்று பகுத்தறியும் தன்மை கொண்டிருக்கிறான். இந்து சமயத்தில் சாதிக்கொடுமை இருப்பதால் அதைப் பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு ஒரு சாக்கடையில் இருந்து ஏன்தான் இன்னொரு சாக்கடையில் மதமாற்றம் என்று மனிதனைத் தள்ளவேண்டும்? இது ஒரு சீர்திருத்த வாதத்தின் தோல்வி என்றல்லவா எடுக்கவேண்டும்!

தமிழ் ஓவியா said...


ஜெய்ராம் ரமேஷ் கூறியதில் என்ன குற்றம்?


நாட்டுக்குத் தேவை கழிவறைகளே தவிர கோவில்கள் அல்ல என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறிவிட்டாராம் - உடனே இந்தச் சங்பரிவார்க் கும்பல் தன் வானரப் புத்தியைக் காட்டும் வகையில் தாண்டிக் குதிக்கிறது. மத்திய அமைச்சர் வீடு முற்றுகையாம்!

பகுத்தறிவு, மனிதநேயம், மனித நாகரிகம், சமூக வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் இந்தக் காலகட்டத்திலும்கூட மனிதன் மலத்தை மனிதனே சுமக்கும் அவலம்; இது சமூகத்திற்கே மாபெரும் தலைக்குனிவு அல்லவா?

இன்னும் பள்ளிக்கூடங்களில்கூட கழிவறை வசதிகள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்பது - நமது வீழ்ச்சியைக் காட்டவில்லையா?
இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு என்பதெல்லாம் எவ்வளவு முக்கியமோ, இந்த வரிசையில் கழிவறை வசதி என்பதும் மிகமிக அவசியம் - ஒரு நாகரிகச் சமுதாயத்தில்.

பாதாள சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவோர் நச்சு வாயு தாக்கி மரணம் அடைந்தனர் என்கிற செய்தி அடிக்கடி நாளிதழ்களில் வருவ தில்லையா - இந்தத் தொழிலைச் செய்வதற்கென்று ஒரு ஜாதி எனும் நிலை இன்னும் நீடிக்கலாமா? அப்படி நீடிக்கவிட்டால் அரசு என்று ஒன்று இருக்கிறது - அது மக்களின் நலனுக்கானது என்று உச்சரிக்க உதடுகளுக்குத்தான் உரிமை உண்டா?

சட்டம் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. மனிதன் மலத்தை மனிதன் அள்ளுவதற்கு யாரையும் பணியில் அமர்த்தக் கூடாது - அப்படி அமர்த்தினால் ஓராண்டு சிறை என்கிறது சட்டம். சட்டம் வந்து கடந்த 19 ஆண்டுகளில் இதுவரை யாரும் இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டதில்லை என்பதி லிருந்து இது பல்லும், நகமும் இல்லாத காகிதத் துப்பாக்கி என்பது விளங்கவில்லையா? ஊரையும், உலகத்தையும் ஏமாற்ற இதுபோன்ற சட்டங்கள் என்பதுதான் உண்மை.

ஒரு பக்கத்தில் அய்ந்து நட்சத்திர கலாச்சாரம்; இன்னொரு பக்கத்தில் மலத்தைக் கையால் அள்ளி தலையில் சுமக்கும் அவலம்!
அதேநேரத்தில் கடவுள் பொம்மைகளைச் செய்து வைத்து, கோவில் கட்டி வருடம் பூராவும் திருவிழா, தேர் என்று சொல்லி புத்தியையும், பொருளையும், பொழுதையும் நாசகாரப்படுத்தும் போக்கு இன்னொருபுறம்.

இவ்வளவு விரிவாக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சொல்லமாட்டார்; சொல்லவில்லையென்றாலும் அவர் கூறியதன் பொருள் இதுதானே!
திருப்பதி ஏழுமலையானுக்கு எதற்குக் கோடி கோடியான பணம் - தங்கக் கட்டிகள் ஏன்? ஆறுகால பூஜை ஏன் - படையல் ஏன்?

கடவுள் என்ற பொம்மைகள் சாப்பிடுகின்றனவா? அவை சாப்பிடும் என்று தெரிந்திருந்தால் கரு வறைக்குப் பக்கத்திலேயே கழிவறை கட்டி வைத்திருக்கமாட்டார்களா?
கோவில் இல்லை என்று யார் அழுகிறார்கள்? கோவில் கட்டாவிட்டால் குடி மூழ்கியா போகும்? அதுவும் ஓர் ஊருக்குள் எத்தனை எத்தனை எண் ணிக்கையில் கோவில்கள்? பிள்ளையார் கோவில் என்றால் ஒன்று போதாதா? - வீதிக்கு வீதி, மரத்துக்கு மரம் எத்தனை எத்தனை விநாயகன் கோவில்கள்?

கோவில்களில் முடங்கிக் கிடக்கும் நிதியை கழிவறை போன்ற மக்கள் நலன் சார்ந்த பணி களுக்குத் திருப்பிவிட்டால் என்ன? எந்தக் கடவுள் வந்து கேட்கப் போகின்றது? என்றைக்குச் சிற்பி செதுக்கி, கருவறையில் நட்டு வைத்தானோ, அந்தக் கணம் முதல் அப்படியே அடித்து வைக்கப்பட்டுள்ளன கோவில் சிலைகள்.

அதற்காக அரசும், மக்களும் ஏன் கவனம் செலுத்தவேண்டும்? உயிருள்ள மனிதனின் தேவை களைப் பூர்த்தி செய்வதுதான் அரசின் கடமையே தவிர, கற்களுக்கும், மரங்களுக்கும், குட்டிச் சுவர் களுக்கும் கவலைப்படுவது வேண்டாத வேலை யாகும்.
கர்ம யோக் என்று சொல்லி மலம் எடுப்பது தெய்வ காரியம் என்று குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி சொன்னபொழுது அதனை ஏற்றுக்கொண்டது சங் பரிவார்க் கும்பல்.

அதற்கு மாறாக கோவில் கட்டுவதற்குப் பதிலாக நவீன கழிவறைகளைக் கட்டவேண்டும் என்று ஒரு மத்திய அமைச்சர் சொல்லும்பொழுது விழுந்து பிராண்டுவது ஏன்?
பக்தி வந்தால் புத்தி போவது ஒரு பக்கம், பண்பாடும் பறிபோகிறது என்பதுதான் கவனிக்கத் தக்கதாகும்.

ஒருவனுக்கு அவசரமாக போகவேண்டும் என்றால், கழிவறையைத் தேடுவானா - கருவறை யைத் தேடுவானா? சிந்திப்பீர், நாட்டு மக்களே! 10-10-2012

தமிழ் ஓவியா said...


சமூகநீதியின் வெற்றி: அருந்ததியர் இனத்தவரான திரு. பி. தனபால் சட்டப்பேரவைத் தலைவர்


சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு திரு. பி. தனபால் அவர்கள் ராசிபுரம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர். அவர் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

முன்பு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சிவ சண்முகம் (பிள்ளை) அவர்கள் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பதவி வகித்து சிறந்த பெயர் எடுத்தவர். அவர் தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவான பறையர் பிரிவைச் சார்ந்தவர். அதுவே அப்போது சமூகப் புரட்சிதான்!

ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே வாய்ப்பற்ற பிரிவினரான அருந்ததியர் என்ற பிரிவைச் சார்ந்தவர் சட்டமன்றத் தலைவராவது இதுவே முதல் முறை.

அவருக்கும், அவரை இந்தப் பொறுப்பில் அமர்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர் களுக்கும் திராவிடர் கழகம் சார்பில் மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்! இது சமூகநீதி யின் வெற்றிகளில் ஒன்றாகும்.

அனைவருக்கும் பொது வாக நடந்து நற்பெயர் எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் புதிய சட்டமன்றத் தலைவருக்கு உண்டு என்பதையும் இந்நேரத்தில் நாம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.சென்னை கி. வீரமணி
10.10.2012 தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

கருநாடக அரசின்மீது 365 அய் பயன்படுத்தவேண்டும்:தமிழர் தலைவர் பேட்டி


சென்னை, அக்.10- காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவர் என்கிற முறையில் பிரதமர் பிறப்பித்த ஆணையை மதித்துச் செயல்படுத்தாத - உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் புறந்தள்ளி செயல்படும் கருநாடக மாநில அரசின்மீது இந்திய அரசமைப்புச் சட்டம் 365 அய் பயன்படுத்தவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காவிரி நதிநீர் ஆணையம் கூட்டப் பெற்று அதன் தலை வராக இருக்கக் கூடிய பிரதமர் மன்மோகன்சிங் தெளி வாக ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். தமிழ்நாட்டுக்கு நொடிக்கு 9000 கன அடி நீரை கருநாடகம் அளிக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆணை.

அந்த ஆணையையும் கருநாடக அரசு மதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும், பிரதமர் கூறிய அதே ஆணையை வழிமொழியும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த இரண்டு ஆணையையும் கருநாடக மாநில அரசு செயல்படுத்தவில்லை.
சில நாள்கள் மட்டும் தண்ணீரைத் திறந்துவிட்டு, பிறகு நிறுத்திவிட்டது.

மறு ஆய்வு மனுவை கருநாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன்மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாத நிலையில், ஏற்கெனவே பிரதமரும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த ஆணை செயலில் இருக்கிறது என்று பொருள்.

1. பிரதமர் ஆணையைச் செயல்படுத்தாத நிலை; 2. உச்சநீதிமன்ற ஆணையைச் செயல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு என்று மேலும் மேலும் கருநாடக மாநில அரசு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு என்ன செய்யவேண்டும்?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 365 ஆவது பிரிவைப் பயன்படுத்தி கருநாடக மாநில அரசின் நிருவாகத்தை மத்திய அரசே கையில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
356 அய் பயன்படுத்துவதற்காவது ஆளுநர் அறிக்கை தேவைப்படும். 365-க்கு அது தேவைப்படவேண்டிய அவசியம் இல்லை.

365 பிரிவு என்ன கூறுகிறது?

Effect of failure to comply with, or to give effect to, directions given by the Union. - Where any State has failed to comply with, or to give effect to any directions given in the exercise of the executive power of the Union under any of the provisions of this Constitution, it shall be lawful for the President to hold that a situation has arisen in which the Government of the State cannot be carried on in accordance with the provisions of this Constitution.

இந்திய அரசியல் சாசனப்படி வழங்கப்பட்டுள்ள செயல் அதிகாரத்தின்கீழ், மத்திய அரசுக்கு வகுக்கும் ஆணைகளை நிறைவேற்றுவதற்கு அல்லது அமல்படுத்துவதற்கு ஒரு மாநில அரசு தவறினால், அந்த மாநிலத்தில் இந்திய அரசியல் சாசனப்படி அரசை நடத்துவதற்கு இயலாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்று குடியரசுத் தலைவர் கருதுவது சட்டப்படி சரியானதாகும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 365 ஆவது பிரிவு தெளிவாகக் கூறுகிறது.

மூன்றாவதாக மாநிலத்தில் கலவரத்தைத் தூண்டும் ஒரு வேலையிலும் கருநாடக அரசு நடந்துகொண்டு வருகிறது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்களையும் குருக்களையும் பயன்படுத்தி, கருநாடக மாநிலத்தில் கலவரத்தை உண்டாக்கும் போக்கு நடந்துகொண்டு இருக்கிறது. கலவரம் நடைபெற்றால் அந்தப் பகுதியை Disturbed Area என்று அறிவித்து, இராணுவத்தை அனுப்பலாம். இராணுவத்தின்மூலம் அணைகளைக் கையகப்படுத்தலாம்.

திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத்தைப் பொருத்தவரையில் கருநாடக மக்களுக்கோ, அம்மாநில விவசாயிகளுக்கோ நாங்கள் எதிரியல்ல; அவர்களும் வாழட்டும்; தமிழ்நாட்டு மக்களும் வாழ விடப்படவேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு.

இரு மாநில மக்களிடையே மோதல் போக்கை யாரும் உருவாக்கிவிடக் கூடாது - உணர்ச்சிவயப்படவும் கூடாது. சமூக விரோதிகளுக்கு இடம்தரும் வகையில் நடந்துவிட எந்த வகையிலும் அனுமதிக்கக் கூடாது.

இரு மாநில மக்களும் ஒருவருக்கொருவர் விரோதிகள் அல்ல; மனிதாபிமான அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டிய பிரச்சினை இது.

தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன?

கருநாடக மாநிலம் உரிய நேரத்தில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடாததால், தமிழ்நாட்டில் குறுவைச் சாகுபடி அறவே நடைபெறவில்லை.
சம்பா சாகுபடியும் கேள்விக் குறிக்கு ஆளாகிவிட்டது. இந்த நிலைக்கு என்ன காரணம்? விரைவில் தேர்தல் வர இருக்கின்ற காரணத்தால், கருநாடக மாநில அரசியல்வாதிகள் இந்தப் பிரச்சினையை அரசியல் கண்ணோட்டத்தில் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு அணுகுகிறார்கள். பாமர மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற மலிவான யுக்தியாக இதனைக் கைகொண்டுள்ளனர்.

வெளியுறவுத் துறை அமைச்சர்
எஸ்.எம். கிருஷ்ணா

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தான் ஒரு மத்திய அமைச்சர். எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானவர் என்பதைக் கூட மறந்து, புறந்தள்ளி கருநாடக மாநிலத்துக்காரராக நடந்துகொள்கிறார். அவரும் வாக்கு வங்கி அரசியலை நடத்திட முன்வந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.

யார் பிரிவினை வாதிகள்?

இந்திய ஒருமைப்பாடு பேசும் தேசிய வாதிகள்தான் இப்பொழுது பிரிவினைவாதிகளாக மாறியுள்ளனர்.

எங்களை எல்லாம் பார்த்து பிராந்தியவாதிகள் என்று வருணித்தவர்கள், கேலி செய்பவர்கள் எல்லாம் இப்பொழுது பிராந்தியவாதிகளாக, பிரிவினைவாதி களாக மாறி விட்டார்களே!

வேற்றுமையில் ஒற்றுமை என்றார் அன்றைய பிரதமர் நேரு. இது வெறும் காகிதத்தில்தானே அது இருக்கிறது?

- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்.நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம்!

கருநாடகத்தில் காவிரி உற்பத்தியாவதால் அந்த நீர் முழுவதும் கருநாடக மாநிலத்துக்கே சொந்தம் என்றால், நெய்வேலியில் உற்பத்தியாவதால் அந்த மின்சாரம் முழுவதும் தமிழ்நாட்டுக்கே சொந்தம் என்ற நிலையில் வரும் 15 ஆம் தேதி காலை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடு போராட்டம் எனது தலைமையில் நடைபெற உள்ளது. முதல் நாள் நெய்வேலியில் நடக்க இருக்கும் போராட்ட விளக்கப் பொதுக் கூட்டத்திலும் நான் பேசுகிறேன். முற்றுகைப் போராட்டம் வன்முறைக்கு இடமின்றி அறப் போராட்டமாகவே நடைபெறும்.

- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்.


தீர்வுதான் என்ன?

(1) வட மாநிலங்களில் அசாம், பிகார் போன்ற மாநிலங்களில் ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. தென்னகத்திலோ போதிய அளவு நீர் இல்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா முழுமையும் உள்ள நதிகளை ஒன்றிணைக்கும் தேசிய அளவிலான திட்டத்திற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். முதற் கட்டமாக குறைந்த பட்சம் தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும். நிதி தேவைப்படும் என்றால் உலக வங்கியில் கடன் வாங்கலாம். நாற்கர சாலைகள் போன்ற வற்றிற்காக மத்திய அரசு கடன் வாங்க வில்லையா? இந்தியாவில் கோயில்களில் இல்லாத செல்வமா? திருப்பதி கோயிலிலும், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலிலும் இல்லாத சொத்துக்களா? தங்கத்தின் இருப்புகளை மக்களுக்குப் பயன்படும்படி, மக்கள் நலத்திற்காகப் பயன்படுத்துவது என்பதுதானே முக்கியம்!

(2) இந்தியாவில் உள்ள எல்லா நதிகளையும் நாட்டுடமை ஆக்க வேண்டும். நதிநீர்ப் பிரச்சினைக்கு இவைதான் நிரந்தரத் தீர்வுகளாக இருக்க முடியும்.

- செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர்.10-10-2012

தமிழ் ஓவியா said...

உச்ச நீதிமன்றம், பிரதமர் ஆணைகளை நிறைவேற்றாத கருநாடக அரசு மீது 356 பிரிவை பயன்படுத்துக! தி.மு.க தலைவர் கலைஞர் அறிக்கை


சென்னை, அக். 10 - காவிரி நதிநீர்ப் பிரச்சினையின் நீண்ட வரலாற்றை விரிவாக விளக்கியுள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள்; ``காவிரி ஆணை யத்தின் தலைவரான பிரதமர் அவர்களின் கருத்தையே அலட்சியப்படுத்திய கருநாடக அரசின் மீது அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவைப் பயன்படுத்துங்கள்! என்று பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு :-

நெடுங்காலமாக காவேரித் தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தீர்வு காண முடியாமல் தமிழகத் திற்கும், கருநாடகத்திற்கும் இடையே நிலவிட வேண்டிய சகோதர உணர்வுக்கும் நெருக்கடி ஏற்பட்டு, இரு மாநில மக்களும் ஒற்றுமையாகப் பேசி விவாதித்து நட்புணர் வோடு பழகத் தலைப் பாட்டால்தான் இந்திய ஒருமைப் பாட்டுக்கு வலிவு என்ற நிலையில், என் தலைமையிலே இருந்த தி.மு.கழக ஆட்சியில், அன்றைக்குப் பிரதமராக இருந்த திரு.வாஜ்பாஜ் அவர்களைச் சந்தித்து, காவேரி ஆணையத்தை 1998ஆம் ஆண்டு உரு வாக்கக் கூடிய ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டது.

இரு மாநில உறவும் பாதிக்கப்படக்கூடிய சூழ் நிலையை உருவாக்கிய அறிக்கை

அதற்குப் பிறகும்கூட, அந்த ஆணையத்திற்கு மரியாதை காட்டாமல் அதை ஏற்றுக் கொள்ளாமல், ``பல் இல்லாத ஆணையம், அதனால் ஒரு பயனும் விளையாது என்று, அப்போது இங்கேயிருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் அறிக்கைகள் விட்டும், அந்த ஆணையத்தின் கூட்டங்களுக்குச் செல்லாமல் புறக்கணித்து, இரு மாநில மக்களுக் கிடையே ஏற்பட வேண்டிய உறவும் நேசமும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவானது.

`தண்ணீர் கேட்கும் உரிமையே தமிழகத்திற்கு இல்லை என நல்லுறவுக்கு ஊறுதேடும் நடவடிக்கை

அந்த நேரத்தில் நல்லவேளையாக திரு. எடியூரப்பா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது நான் அவரிடம் பலமுறை விவாதித்து, கருநாடக மாநிலத் தார், தமிழக மாநிலத்தார் என்ற இரு மாநிலத்தாரும் விரோத உணர்வைக் கைவிட்டு நட்புணர்வோடு பழகிட வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக பெங்க ளூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை நான் சென்று திறந்து வைத்தும், அதற்கு ஈடாக கருநாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் உள்ள சர்வக்ஞர் சிலையைத் திறப்பது என்றும் முடிவு செய்து அவ்வண் ணமே இரு மாநிலங் களிலும் இரு விழாக்கள் சகோதர உணர்வோடு நடத்தப்பட்டன.

தமிழ் ஓவியா said...

இப்போது திடீரென்று தமிழகத்திற்குத் தர வேண்டிய காவிரித் தண்ணீரைத் தராமல் கருநாடக அரசு பிடிவாதம் செய்ததை ஒட்டி, தமிழக அரசு உச்சநீதிமன்றம் வரை முறையிட்டு அதிலும் உரிய பயன் கிடைக்க முடியாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கருநாடகம் தர மறுத்த நிலையில் காவேரி ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான தலைவரான பிரதமர் அவர்களே, தமிழகத்திற்குத் தண்ணீரை கருநாடகம் திறந்து விட வேண்டுமென்று ஆணை பிறப்பித்த நிலையிலே கூட - அந்த ஆணையை, காவேரி ஆணையத்தின் தலைவர் பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளாகவோ அல்லது அதிகாரப்பூர்வ ஆணையாகவோ கருநாடக அரசு கருதாமல் - மேலும் மேலும் வறண்டு கிடக்கும் தமிழக விவசாய நிலங்களுக்கு உரிய தண்ணீரைத் தர மறுத்து - தாமதம் காட்டி வருவது மட்டுமல்ல, தண்ணீரைக் கேட்கின்ற உரிமை தமிழ் நாட்டிற்கு இல்லை என்பது போன்ற நடவடிக்கை களில் ஈடுபட்டு - அதன் காரணமாக இரு மாநில ஒற்றுமைக்கும் ஊறு தேடி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களை பகை நாட்டு மக்களைப் போலவும், பன்னெடுங் காலமாக விவசாயத்தையே நம்பி வாழும் தமிழக உழவர் பெருமக்களை பரம்பரை விரோதிகள் போலவும் எண்ணிக் கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாக கருநாடக அரசின் நிர்வாகத்தில் இருப்போர் கன்னட மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் நிரந்தரமான ஒரு பகையை உருவாக் கும் முயற்சியிலே ஈடுபட்டிருப்பது இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டையே கேள்விக்குறியாக ஆக்கியிருக்கிறது. இந்த நிலைமை வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக் கத்தக்கதுமாகும்.

தமிழகத்தின் சார்பில் அமைதியான முறையி லும், நீதி மன்றங்களின் வாயிலாகவும் எடுத்து வந்த நிலைப்பாட்டுக்கு எதிராக கருநாடக அரசு ஒத்துழை யாமை கிளர்ச்சியை நடத்துவது போன்ற நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருவது, இந்திய நாட்டு ஒற்று மையை வலியுறுத்துகிற அனைவருக்கும் எதிரான செயலாகும்.
பிரதமரின் கருத்தையே அலட்சியப்படுத்தி துரோகம் இழைக்கும் செயல்!

காவேரி ஆணையத்திற்கு தொடக்க காலத் தில் இந்த ஆணையத்தின் குழுவின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு வலிவு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், ஆணையத்தின் தலைவரான ஒரு பிரதம ருடைய கருத்தையே அலட்சியப்படுத்தி, அதற்குப் பணிய மறுத் துச் செயல்படும் அந்த அரசுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டியது, இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத் திற்கு துரோகம் இழைக்கிற செயலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையோடு,

நான் பிரதமரைக் கேட்டுக் கொள்வது - இரு மாநிலத்தாரும் அன்பால் பிணைந்து, சகோதரப் பாசத்தோடு இந்திய ஒற்றுமையை, ஒருமைப் பாட்டைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காக, கருநாடக அரசின் மீது அரசியல் சட்டத்தில் 356ஆவது பிரிவைப் பயன்படுத்துவது பற்றி இறுதி முடிவுக்கு வர வேண்டும். இந்த வேண்டுகோள் கருநாடகத்தார் மீது எந்தக் காழ்ப்புணர்வோடும் கூறப்படுவதல்ல. எதிர்காலத் திலாவது மத்திய அரசு கருநாடகம் போன்று கடிய நெஞ்சத்தோடு செயல்படுகிற மாநில அரசுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாட்டு வயல்வெளிகள் மயானபூமிகளாக ஆகி விடக் கூடாது என்பதற்காகவும் கண்ணீரும் கம்பலை யுமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர், தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...


பெரியார் பிறந்தநாள் மலர் தினத்தந்தியின் புத்தக மதிப்புரை


பெரியார் 134-வது பிறந்தநாள் மலர்

தந்தை பெரியாரின் 134-வது பிறந்தநாள் மலரை விடுதலை வெளியிட்டுள்ளது. பெரியார் பற்றி பிரமுகர்கள் எழுதிய கட்டுரைகளும், பல ஆண்டு களுக்கு முன் பெரியார் எழுதிய வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டுரைகளும், பெரியார் பற்றிய அபூர்வ தகவல்களும் நிறைந் துள்ளன. வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன.

பெரிய அளவில் 320 பக்கங் கள் கொண்ட வண்ண மலரின் விலை ரூ.100 தான்.

(வெளியிட்டோர்: பெரியார் சுயமரி யாதை பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், 84-1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை - 7


நன்றி: தினத்தந்தி, 10.10.2012

தமிழ் ஓவியா said...


கலை - இலக்கிய ஆர்வலர்களுக்கு


பெரியார் கலை இலக்கிய அணி முக்கிய அறிவிப்பு

அன்புடையீர்! வணக்கம்.

தமிழர் தலைவர் அவர்களால் காலம் கருதி தொடங்கப்பட்டுள்ள பெரியார் கலை இலக் கிய அணி அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது. எனவே, பெரியார் கொள் கையை முழுமையாக ஏற்றுக்கொண்ட எழுத்தாளர்கள் (கதை, கட்டுரை, நாடகம், கவிதை எழுதுவோர்) மற்றும் ஆடல், பாடல், இசை, நடிப்பு இசைக் கருவி இசைத்தல், தந்திரக் கலை, ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், லாவணி பாட்டுடன் கதை சொல்லல், குறும் படம் தயாரித்தல் போன்றவற்றில் ஆற்றலும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முகவ ரிக்கு உடன் தொடர்பு கொண்டு தங்களின் விருப்பத்தை முகவரி, தொலைபேசி எண் ணுடன் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் முனைந்து, விரைந்து செயல்பட்டு தங்கள் பகுதியில் உள்ள மேற்கண்ட திறன் படைத்தோர் பட்டியலைத் திரட்டி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு
மஞ்சை வசந்தன், இலக்கிய அணி செயலர் சித்தார்த்தன், கலைத் துறை செயலர்

தொடர்புக்கு:

மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி, பெரியார் திடல், 50, ஈவிகே சம்பத் சாலை, சென்னை - 7. தொடர்பு எண் : 94442 10999

தமிழ் ஓவியா said...


அர்ச்சகரை அறைக்குள் பூட்டிவிட்டு கோவிலில் நகை திருட்டு

பாலக்காடு, அக்.10- அர்ச்சகரை அறைக்குள் பூட்டிவிட்டு, கோவிலில் இருந்த தங்க செயின் மற்றும் பணத்தை, சிறுவன் திருடிச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மாநிலம், திருச்சூர் அருகே, மலப்புரம் சாலையில் உள்ளது, எடப் பாள் பையங்காடு பத்திரகாளி அம் மன் கோவில். நேற்று காலை, 5:30 மணிக்கு, அர்ச்சகர் சுரேந்திரன், கோ வில் நடையை திறந்து உள்ளே சென் றார். கருவறையைத் திறந்ததும், உற்சவர் சிலை இருந்த அறைக்கு சென்றார். அப்போது, அர்ச்சகரை பின் தொ டர்ந்து வந்த, 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், உற்சவர் அறைக்கு சென்ற சுரேந்திரனை, உள்ளே வைத்து பூட்டினான். பின், மூலவர் விக்ரகத்தில் இருந்த மூன்றரை சவரன் நகை, பணம் மற்றும் அர்ச்சகரின் மொபைலை திருடிச் சென்றான்.

அர்ச்சகர் சத்தம் போட்டு, ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்க முயன்றும் பலனில்லை. இதையடுத்து, உள்ளேயிருந்த சாதனங்களை கொண்டு, பூட்டை உடைத்து வெளியே வந்து காவல்துறையில் புகார் அளித்தார்.

சக்திவாய்ந்த அம்மனுக்கு சாதாரண சிறுவனைக் கூட தடுக்க முடியவில்லை. இதை மக்கள் உணர்ந்தால் நல்லது.

தமிழ் ஓவியா said...


உடைந்தது ஒரு குட்டு!


பி.ஜே.பி.யின் முன்னாள் தலைவர் வெங்கையா நாயுடு அய்தராபாத்தில் கடந்த 6 ஆம் தேதி பேட்டியளித்தார்.

அப்பொழுது என்ன கூறினார்?

ஆயுள் காப்பீட்டுத் துறை, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி உயர்த்த முயற்சித்தபோது காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் அவரை அறியாமலேயே ஓர் உண்மையைக் கக்கி விட்டார். ஆயுள் காப்பீடு, சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை உயர்த்திட பி.ஜே.பி. விரும்பியது என்பதுதான் அது.

இப்பொழுது அந்த நிலையிலிருந்து பல்டி அடிப்பது ஏன்? என்னே பரிதாப அரசியல்!

தமிழ் ஓவியா said...

ஜோதிட நம்பிக்கையே சுத்த நத்திகம்!


திரைப்பட இயக்குநர் திரு. பாக்கியராஜ் அவர்கள் சென்னை சர்.பி.டி.தியாகராயர் அரங்கில் ஒரு விவாத அரங்கு நடத்தி ஒளிப்பதிவு செய்தார்.

ஜோதிடத்தை எதிர்த்து நானும், ஜோதிடத்தை ஆதரித்து நடிகர் திரு. ராஜேஷ் மற்றும் பருத்திவீரன் படத்தில் நடித்த திரு. சரவணன் போன்றோரும் வாதிட்டோம். அப்போது, நான் முன்வைத்த ஒன்பது கேள்விகளுக்கு ஒருவராலும் பதில் சொல்ல இயலவில்லை. அதில் முதல் கேள்வியை இங்குக் குறிப்பிட்டால் உங்களுடைய சிந்தனைத் தூண்டலுக்குத் துணை நிற்கும் என்பதால் அதை விளக்க விரும்புகிறேன்.

ஜோதிடத்தை, வாஸ்துவை, இராசிக்கல்லை ஆதரித்து அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நான், இறுதியில் அக்கேள்வியைக் கேட்டேன்.

ஜோதிடத்தை ஆதரித்துப் பேசும் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? என்றேன். எங்கள் நெற்றியைப் பார்த்தாலே தெரியவில்லையா? நாங்களெல்லாம் பழுத்த பக்தர்கள்! என்றனர்.

ஆனால், நீங்கள்தான் சுத்த நாத்திகர்கள் தெரியுமா? என்று கேட்டேன். அனைவரும் அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் என்னைப் பார்த்தனர்.
ஆம், ஜோதிடத்தை யாரெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள்தான் அசல் நாத்திகர்கள் என்று ஆணித்தரமாய் மீண்டும் சொன்னேன்.

அதெப்படி? அனைவரும் சேர்ந்து கேட்டனர்.

உண்மையான கடவுள் தத்துவம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறப்பதற்கு முன் அவன் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அவன் வாழ்வை, தலையெழுத்தாக நிர்ணயித்து, அவனைப் பிறக்கச் செய்து, அவனை வாழச் செய்கிறது கடவுள் என்கின்றது.
அதன்படி பார்க்கின், ஒருவனது வாழ்க்கை அவன் சென்ற பிறவிகள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப, இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது என்பது பொருள்.

ஆனால், ஜோதிடம் என்ன சொல்கிறது? ஒருவன் பிறக்கும்போதுள்ள கிரகங்களின் நிலையே அவன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்கிறது.

அப்படியாயின் ஒருவன் வாழ்வை கிரகங்கள் தீர்மானிக்கின்றனவே தவிர கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது. அதன்படி பார்த்தால் கடவுளுக்கே வேலை இல்லை. அப்படியாயின் கடவுளே இல்லை என்று ஆகிறது.

ஆக, ஜோதிடத்தை மறுக்கிறவன் கடவுளை மறுக்கிறான். எனவே அவன் நாத்திகன்தானே!
வாஸ்துவை நம்புகிறவன் அதைவிடப் பெரிய நாத்திகன். காரணம், வாசக்காலை மாற்றி அமைத்தால் வாழ்வே மாறுகிறது என்றால் வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை. கிரகங்களும் தீர்மானிப்பதில்லை; வாசலும் ஜன்னலும் இருக்கும் இடங்களே தீர்மானிக்கின்றன என்றாகிறது. அதன்படி, வாஸ்துவை நம்புகிறவன் கடவுளையும் மறுக்கிறான். ஜோதிடத்தையும் மறுக்கிறான் என்றுதானே பொருள்?

எல்லோரையும்விட இராசிக்கல்காரன் மகாபெரிய நாத்திகன். காரணம், வாழ்வை கடவுளும் தீர்மானிப்பதில்லை; கிரகங்களும் தீர்மானிப்பதில்லை; வாஸ்துவும் தீர்மானிப்பதில்லை; அணிகின்ற கல்லைப் பொறுத்தே வாழ்வு அமைகிறது என்கிறான்!

எனவே, எல்லாமே ஒன்றுக்கொன்று முரண். முரண்பட்டவை எதுவும் உண்மையல்ல என்பது பொருள். ஆக கடவுளும் இல்லை; ஜோதிடமும் பொய்; வாஸ்து சுத்தப் பொய்; இராசிக்கல் இணையில்லாப் பொய் என்பது விளங்குகிறது அல்லவா?

எனவே, பிஞ்சுப் பிள்ளைகள் இவற்றைக் கொஞ்சம் சிந்தித்தாலே மடமையில் இருந்து மீண்டு அறிவு வழியில் செம்மையாய் வாழலாம்; சிந்திக்கலாம்! பெரியவர்கள்கூட இதனை ஆழமாகச் சிந்தித்தால் மடமை நீங்கி அறிவுடன் வாழலாம்! அச்சம் தவிர்க்கலாம்!

- சிகரம்

தமிழ் ஓவியா said...

சிலிண்டர்களில் வண்ணங்கள் எதற்காகப் பூசப்படுகின்றன? - வி.வேணி, தாம்பரம்

சிலிண்டரின் மேல் பூசப்படும் வண்ணங்களுக்கும் உள்ளே அடைக்கப் பட்டுள்ள வாயுக்களுக்கும் சம்பந்தம் உண்டு. அந்த வண்ணத்தைக் கொண்டே உள்ளே என்ன வாயு நிரப்பப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். சிலிண்டரின் மேலே கருப்பு வண்ணமும் கழுத்தில் வெள்ளை வண்ணமும் பூசப்பட்டிருந்தால மருத்துவத்திற்குப் பயன்படும் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டராகும்.

நைட்ரஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்களில் சாம்பல் வண்ணமும், ஆர்கான் வாயுக்கு பச்சை வண்ணமும், அசிட்டிலினுக்கு மெரூன் (பிரௌன்) வண்ணமும், நைட்ரஸ் ஆக்சைடுக்கு நீல வண்ணமும், சமையல் எரிவாயுவிற்கு சிவப்பு வண்ணமும், டெலிபோன் கேபிள்களில் வரக்கூடிய வாயுக்களுக்கு சாம்பல் வண்ணமும் பூசப்படுகின்றன.
வாயுக்களைப் பிரித்துக் காட்டவே வண்ணங்கள் பூசப்படுகின்றன.

- முகில் அக்கா

தமிழ் ஓவியா said...

தெரியுமா?


மனிதன் வாழ தேவையான ஆக்சிஜன் 6.9%.

மருத்துவ அறிவியலின் தந்தை ஹிப்போகிரடஸ்.

ஒரு நாளில் இதயம் 1,00,000 முறை துடிக்கும்.

அதிக மருத்துவமனைகள் கொண்ட நாடு சீனா (929 மருத்துவமனை).

மனிதனின் தலை ஏறக்குறைய நான்கு கிலோ எடை உடையது.

உடலில் ஊசிமூலம் மருந்து செலுத்தும் முறை 1853ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
புதிதாகப் பிறந்த குழந்தையின் சராசரி எடை 2.6. கிலோகிராம்.
மனித செல்லை (Human Cell) தொழிற்சாலையுடன் தொடர்புப்படுத்தியவர் ஜார்ஜ் காமோ

தமிழ் ஓவியா said...

தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத கடவுள் நம்மை எப்படிக் காப்பாற்றும்?


மகள் : அப்பா

அப்பா : என்ன?

மகள் : எனக்கு ஒரு சந்தேகம்?

அப்பா : கேளும்மா

மகள் : உங்களை ஒருவர் அடித்தால் என்ன செய்வீங்க?

அப்பா : திரும்ப அடிப்பேன்.

மகள் : உங்களுடைய பணம் நகைகளைத் திருடிக் கொண்டு ஓடினால் என்ன செய்வீங்க?

அப்பா : ஓடிப்போய்ப் பிடிப்பேன்.

மகள் : உங்கள் முன் ஒருவரைக் கொலை செய்ய வந்தால் என்ன செய்வீங்க?

அப்பா : என்னால் முடிந்த முயற்சி செய்து தடுப்பேன்.

மகள் : இதுவெல்லாம் நம்முடைய கோயிலில் அதுவும் சிலை முன் நடந்தது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருந்த கல்லுசிலையினை, ஊர்வலமாக மனிதர்கள் இழுத்துக்கொண்டு வருகிறார்கள். இதனிடம் போய் நீங்கள் நம் குடும்பத்தைக் காப்பாற்று என்கிறீர்கள். அம்மாவோ நோய்நொடி இல்லாமல் காப்பாத்துன்னு சொல்றாங்க. என்னையும் நல்லா படிக்கணும், தேர்வில் அதிகம் மதிப்பெண் வாங்கணும் என வேண்டச் சொல்றீங்க. இது எல்லாம் கேட்டுக்கிட்டு நம்மையெல்லாம் காப்பாத்துனு வேண்டுற சாமியே திருட்டுப் போய்விடுகிறது. தன்னையே காப்பாத்திக்க முடியாத சாமி நம்மை எப்படிப்பா காப்பாத்தும்.

ஏ.ரக்சந்தா, எட்டாம் வகுப்பு,

திருமகள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.

தமிழ் ஓவியா said...

பூச்சிப் பிரியர்

பெற்றோரின் கட்டாயத்திற்காகப் பள்ளி சென்றார். எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார். பள்ளி விட்டதும் பட்டாம்பூச்சி , வண்டு, வெட்டுக்கிளி போன்றவற்றைப் பிடித்துப் பேரின்பம் கொள்வார்.

பிடித்த பூச்சிகளை வீட்டிற்குக் கொண்டுவந்து அவை என்ன செய்கின்றன? என்ன சாப்பிடுகின்றன? எப்படிச் சாப்பிடுகின்றன என்று கவனித்துப் பார்ப்பார்.

விதவிதமான பூச்சிகளின் படம் கொண்ட ஒரு புத்தகம் வைத்திருப்பார். அந்தப் புத்தகத்தின் படத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பூச்சிகளைப் பிடித்துவிட்டார். ஒவ்வொரு பூச்சியைப் பிடித்ததும் புத்தகத்தில் அதன் படம் தேடி, இது என்னால் பிடிக்கப்பட்டது என எழுதி தேதியும் குறித்து வைப்பார்.

ஒரு நாள் ஒரு மரத்தின் பட்டையை உரித்துப் பார்த்தார். அதன் உள்ளே அபூர்வமான இரண்டு பூச்சிகள் இருந்தன. வலது கையில் ஒரு பூச்சியையும் இடது கையில் இன்னொரு பூச்சியையும் பிடித்துக் கொண்டார். அப்போது இன்னொரு பூச்சி கண்ணில் பட்டதும், வலது கையிலிருந்த பூச்சியை வாயில் வைத்துக் கொண்டு மூன்றாவது பூச்சியைப் பிடிக்க முயற்சி செய்தார்.

வாயில் வைத்த பூச்சி தன் கொடுக்கினால் அவரது நாக்கில் ஒருவிதத் திரவத்தை வெளியிட்டது. நாக்கு எரிந்ததும் த்தூ த்தூ என பூச்சியைத் துப்பினார். பூச்சி பறந்து சென்றது.

இப்படியெல்லாம் சிறுவயதில் ஆர்வம் கொண்ட இவர் பிற்காலத்தில் புழு, பூச்சி, தாவரம், குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்ற பல உண்மைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு எடுத்துச் சொன்ன சார்லஸ் ராபர்ட் டார்வின்.
--------பெரியார் பிஞ்சு ஜூலை 2012

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் வாழ்வில்...


எல்லோருக்கும் பொது

மாஸ்கோ நகரின் கிரம்லின் மாளிகையில் முடி திருத்தும் கடை ஒன்று இருந்தது.. அங்கு விவசாயி, தொழிலாளி, உயர் பதவியிலிருப்பவர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் முடிதிருத்தம் செய்யச் செல்வர்.

ஒரு நாள், ரஷ்ய அதிபராயிருந்த லெனின் சென்றபோது 6 பேர் வரிசையில் அமர்ந்திருந்தனர். ஏழாவது நபராக வந்த லெனினைப் பார்த்து அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். பதிலுக்கு வணக்கம் தெரிவித்த லெனின், அங்கிருந்த செய்தித்தாளைக் கையில் எடுத்துக் கொண்டு வரிசையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்துவிட்டார்.

உள்ளே முடிதிருத்தம் செய்து முடித்தவர் வெளியே வந்ததும் வரிசையிலிருந்த 6 பேரும், அதிபர் அய்யா, நீங்கள் உள்ளேபோய் முடிதிருத்தம் செய்து கொள்ளுங்கள் என்றனர்.

உடன்படாத லெனின், நீங்கள் 6 பேரும் வரிசையில் காத்திருக்கும்போது இப்போது வந்த நான் முன்னே செல்வது விதிமுறையை மீறியதற்குச் சமமாகும். நாட்டை ஆள்பவன் என்றாலும் சாதாரண குடிமகன் என்றாலும் வரிசை ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். விதியைத் தளர்த்தினால் நாட்டின் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கூறினார். தனது முறை வரும்வரை காத்திருந்து சென்றார்.

வரிசை என்பது எல்லோருக்கும் பொது. உயர்பதவிகளில் இருப்பவர்களுக்காக விதியைத் தளர்த்தக்கூடாது என்றதோடு, தானும் வரிசையில் அமர்ந்து வந்து விதிமுறைகளைப் பின்பற்றியவர் லெனின்.

தமிழ் ஓவியா said...

உலகப் புகழ் பெற்றவர்கள்


நம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 - 1ஜூன் 1968)

எத்தகு துன்பம் வந்துற்ற போதும் ஏற்றமிகு வாழ்வு வாழ முடியும் என்று துணிந்த நெஞ்சுடனும், மாறா உள்ள உறுதியுடனும் ஓயாது உழைத்து வரலாற்றில் தனிச்சிறப்புடன் குறிப்பிடப்பெற்றவர்தான் ஹெலன் கெல்லர்.

பிறப்பு: 1880 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் நாள் அலபாமா மாநிலத்தில் டஸ்கம்பியாவில் [TUSCUMBIA] பிறந்தார். இவரது தந்தையார் ஆர்தர் - ஹெச் ஹெலன். அவர் உள்ளூர் நாளிதழ் ஒன்றின் பதிப்பாளர் - பருத்தி பயிரிட்டு வந்த நிலக்கிழார் மற்றும் படைத்தளபதியாகப் பணியாற்றிய பன்முகத் திறனாளர். இவரது தாயார் காதரின் ஆடம் கெல்லர், வர்ஜினியாவின் கவர்னர் மரபில் தோன்றியவர். ஹெலனைச் சிறப்புடன் வளர்த்து குடும்பத்திற்குப் பெருமையும் உலகினுக்கு நலமும் கூட்டியவர். ஹெலன் தனது 19ஆம் மாதத்தில் கடுமையான மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் விளைவாக இவர் பார்க்கும் திறனையும், கேட்கும் திறனையும் இழந்தார்.

திருப்புமுனை ஏற்படுத்திய ஆசிரியர்:

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம்பெல், பார்வை இழந்தோர் நலவாழ்விற்குத் தொண்டறம் புரிந்துவந்தார். இவர் வழிகாட்டலால் ஹெலன் தன் 7ஆம் வயதில் பார்வை இழந்தோர் பயிலும் பெர்கின்ஸ் [PERKINS] பள்ளியில் 1887ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டார். இவருடைய ஆசிரியையாக ஆனி சலிவன் (ANNE SULLIVAN) நியமிக்கப்பட்டார். பாஸ்டன் நகரில் உள்ள அதே பெர்கின்ஸ் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றவர்தான் ஆனி சலிவன். பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் இழந்த ஹெலனுக்கு வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்க ஆனி எடுத்த முயற்சிகள் வியப்பை ஊட்டுபவை. W - A - T - E - R என்ற வார்த்தையின் பொருளை உணர்த்த வேகமாகத் தண்ணீர் வெளிவரும் குழாய்க்கு அடியில் ஹெலனின் கையை வைத்து குளிர்ந்த நீர் கையைத் தொட்டுச் செல்லும்போது W - A - T - E - R என்று மெதுவாகச் சொல்லியும் பின்னர் அவ்வார்த்தையை கையில் விரல்களால் எழுதிக் காட்டியும் புரிய வைத்தார் ஆனி. இவ்வார்த்தையை முதன்முதலில் பொருளுடன் கற்றுக்கொண்ட ஹெலனின் உள்ளத்தெழுந்த உவகையைச் சொல்ல இயலாது. அன்று இரவு முடிவதற்குள் ஹெலன் 30 வார்த்தைகளைக் கற்றுக் கொண்டார். இவ்வாறு அவர் படிப்பு துவங்கியது. இரவு முழுவதும் விழிப்புற்றெழுந்து மேலும் மேலும் வார்த்தைகளைக் கற்பதில் ஆர்வம் கொண்டார்.

பிரெய்லி முறை:

8 வயது துவங்கும்போது ஹெலன் பிரெய்லி முறையில் வேகமாகக் கற்கவும் எழுதவும் ஆற்றல் பெற்றார். லூயிஸ் பிரெய்லி விதைத்த விதை ஹெலன் வாயிலாக ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர் ஊன்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இளம் வயதிலேயே பயனுள்ள எண்ணங்களை எழுத்தாக்கினார். இத்திறனை உணர்ந்த அனைவராலும் ஹெலன் அதிசயக் குழந்தை [THE MIRACLE CHILD] என்று அழைக்கப்பட்டார். ஹெலன் தனது 9ஆம் வயதில் ஆசிரியர் சாரா ஃபுல்லர் [SARAH FULLER] என்பவரின் உதவியோடு முதன்முதலாக பேசவும் கற்றுக்கொண்டார். தொடர்ந்து பல ஆண்டுகள் பயிற்சி எடுத்து எல்லோருக்கும் புரியும் வகையில் பேசும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார். கோடை விடுமுறையில் இவர் பிரெய்லி முறையில் ஜெர்மன், பிரெஞ்சு, இலத்தீன் போன்ற மொழிகளை எல்லாம் கற்றார். இவர் தம் இருபதாம் வயதில் (1900இல்) ராட் கிளிஃப் [RAD CLIFFE] கல்லூரியில் சேர்ந்தார். இக்கல்லூரியில் இவர் படித்த நான்கு ஆண்டுகளும் இவர் ஆசிரியர் ஆனி சலிவன் இவருடைய மொழிபெயர்ப்பாளராய் இருந்து கற்றலை எளிமையாக்கினார். 1904ஆம் ஆண்டு ஹெலன் இளம்கலை (B.A.)பட்டதாரியாக வெளிவந்தார். மாற்றுத் திறனாளிகளில் முதன்முதலில் பட்டம் பெற்றவர் இவரே.


தமிழ் ஓவியா said...

படைப்பாளி ஹெலன்:

கற்றலுடன் நின்றுவிட்டால் அது வாழ்வில் முழுமையான வெற்றியை அளிக்காது. கற்றவற்றைப் பிறர் மகிழ்ந்து ஏற்கும்வகையில் நூல்களாக எழுதத் துணிந்தார். இவரது எழுத்துகள் பொதுமக்களால் குறைத்து மதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் துணிவையும், தன்னம்பிக்கையையும் ஊட்டின. ஹெலன் கல்லூரியில் பயிலும்போதே ‘THE LADIES HOME JOURNAL’ என்ற செய்தித்தாளில் என் வாழ்க்கை வரலாறு [The Story of my Life] என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் இன்று 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. 1908ஆம் ஆண்டில், தான் உணர்ந்த உலகு ‘THE WORLD I LIVE IN’ என்ற நூலை எழுதினார். 1913ஆம் ஆண்டு இருட்டில் இருந்து வெளியேறு ‘OUT OF DARK’ என்ற தலைப்பில் பொதுவுடைமைக் கருத்துகளைத் தொடர் கட்டுரைகளாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து இவர் 12 நூல்களை எழுதினார். பொதுவுடைமைக் கட்சியில் இணைந்து காரல் மார்க்ஸ் [KARL MARX] மற்றும் ஏஞ்கெல்ஸ்[ENGELS] ஆகியோர் நூல்களை விரும்பிக் கற்றார். 1917இல் நடைபெற்ற இரஷ்யப் புரட்சியை அங்கீகரித்தார். காணும் திறனும் கேட்கும் திறனும் வெளியுலக அனுபவங்களால் மட்டும் விரிவடைவதில்லை என்பதும், அவை உள்ளத்தெழும் உயரிய சிந்தனை வளத்தால் விரிவடையும் என்பதும் ஹெலன் கெல்லரின் அசையாத நம்பிக்கை.

பாராட்டும் - பட்டமும்:

அற்புதமான உழைப்பாளி [The Miracle Worker] என்று இவரது வாழ்க்கை நிகழ்வுகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. இதன் பின்னர் இவரது வாழ்க்கையை ஆர்தர்பென் (ARTHOR PEN) திரைப்படமாக எடுத்து 2 ஆஸ்கர் (OSCAR) விருதுகளை வென்று இவரது தகுதிக்கு மணிமகுடம் சூட்டினார். இவர் வாழ்நாள் முழுவதும் வீழ்ச்சியுற்ற மக்களெல்லாம் நல்வாழ்வு வாழவும், மாற்றுத் திறனாளிகளும், மகளிரும் சம வாய்ப்பும் - சம உரிமையும் பெறவும் உறுதியுடன் உழைத்தார். இவரது அறிவுத்திறனையும் - தொண்டறத்தையும் பாராட்டி ஹார்வர்டு பல்கலைக்கழகம், கிளாஸ்கோ பல்கலைக்கழகம், டெம்பிள் பல்கலைக்கழகம், ஸ்காட்லாந்து - பெர்லின், ஜெர்மனி மற்றும் நம் நாட்டின் டெல்லிப் பல்கலைக்கழகம் ஆகிய அனைத்துப் பல்கலைக்கழகங்களும் கவுரவ டாக்டர் பட்டம் தந்து இவர்தம் புகழைப் பன்மடங்கு உயர்த்தின. கற்றவர்க்கு எல்லா நாடும் சொந்த நாடு _ எல்லா ஊரும் சொந்த ஊர் என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ப இவர் வாழ்ந்து காட்டினார்.

உலகப் புகழ்:

இவர்தம் பயன்மிகு செயலாற்றலின் விளைவாக ஜப்பான் நாட்டின் புனிதப் புதையல் ‘JAPAN’S SACRED TREASURE’ என்ற பட்டத்தையும், பிலிப்பைன்ஸ் மக்கள், பிலிப்பைன்ஸ் நாட்டின் தங்க இதயம் THE PHILIPPINES GOLDEN HEART’ என்ற சிறப்பையும், லெபனான் நாட்டினர் நல்லெண்ணத்திற்காக லெபனானின் தங்கப் பதக்கத்தையும் ‘LEBANON’S GOLD MEDAL OF MERIT’ மேலும் தான் பிறந்த நாட்டில் மக்கள் உரிமைக்கான ஜனாதிபதியின் பதக்கத்தையும் ‘PRESIDENTIAL MEDAL FOR FREEDOM’ பெற்றார்.

1952ஆம் ஆண்டு இவரது முன்னேற்றத்தின் முன்னோடியான லூயிஸ் பிரெய்லியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபொழுது பிரான்சு நாட்டின் பிரசித்தி பெற்ற செவாலியர் விருது பெற்றார்.

பட்டம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவுற்ற பொழுது இவர் பயின்ற ராட் கிளிஃப் [RAD CLIFFE] கல்லூரி, சாதனை புரிந்த முன்னாள் மாணவி (ALUMNAE ACHIEVEMENT AWARD) என்ற விருதினை வழங்கிப் பெருமை சேர்த்தது. அத்துடன் அவர் படித்த பள்ளியில் ஹெலன் கெல்லர் பெயரில் தோட்டம் அமைத்து - அவரது உயிருக்குயிரான ஆசிரியர் ஆனி சலிவன் பெயரில் நீர் ஊற்றினையும் அமைத்து ஆசிரியர் - மாணவர் அர்பணிப்புத் தன்மையை நிலைநிறுத்தினர்.

தொண்டறம்:

1921ஆம் ஆண்டு அமெரிக்காவில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை (AMERICAN FOUNDATION FOR THE BLIND) துவங்கப்பட்டு, வீழ்ச்சியுற்ற மக்கள் எழுச்சிபெறவும், அவர்தம் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்களுக்காகத் தொடர்ந்து செல்வம் திரட்டவும், அறக்கட்டளையை வலுவூட்டவும் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார் - ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதினார் - கருத்தாழம் கொண்ட கட்டுரைகளை வெளியிட்டார். இவர் பிறர்நலனுக்கென அய்ந்து கண்டங்கள் - 35 நாடுகள் - சுமார் 40,000 மைல் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உலக மக்களை ஒரே குடும்பமாக இணைக்க பெரும்முயற்சி எடுத்தார்.

விட்டுச் சென்ற செய்திகள் (LEGACY):

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்ற அவருடைய கருத்துக்கேற்ப உலகில் வாழும் வாய்ப்பிழந்த மக்கள் அனைவர் நெஞ்சங்களிலும் நம்பிக்கை மலர்களை மலரச் செய்த மாண்பாளர்.

- சாரதாமணி ஆசான்