Search This Blog

4.10.12

டெசோ தீர்மானம்!தமிழர் உரிமை வெல்லட்டும்!

டெசோ தீர்மானம்

டெசோ  அமைப்பின் கூட்டம் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களின்தலைமையில் நடைபெற்றது.

12.8.2012 அன்று சென்னையில் டெசோ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு - உலக மக்களின் குறிப்பாக உலகத் தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - குறை சொல்ல வேண்டும் என்று காத்திருந்தவர்களின் கண்களைக்கூட திறந்து விட்டிருக்கும்.

அம் மாநாட்டுத் தீர்மானங்கள் - ஈழத்தில் நடை பெற்ற - நடைபெற்று வருகின்ற அவலங்களை விளக்கி, ஈழத் தமிழர்க்கான வாழ்வுரிமையைப் பெற்றுத் தரும் வகையில் உலக அமைப்பான அய்.நா. மூலம்  செயல்படுத்த வைப்பதுதான் அடுத்த கட்ட செயல்பாடாக இருக்க முடியும்.

அந்தத் திசையில்தான் டெசோவின் அடுத்த கட்ட பயணமாகும். ஈழத்தில் நடந்து முடிந்த அவலம் என்பது எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியாது என்பது உண்மைதான் என்றாலும், அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிக் கிடப்பதிலிருந்து விடுபட்டு, இப்பொழுது அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கும் ஈழத் தமிழர்களின் சுயமரியாதையோடுகூடிய வாழ்வுரிமைக் காப்பாற்றப்படுவதற்கான உத்தரவாதத்தை உறுதி செய்வது தான் அறிவார்ந்த, தொலைநோக்குடை யோரின் கடமையாக - செயல்பாடாக இருக்க முடியும்.


உலக நாடுகளுக்கிடையே ஓரளவு விழிப் புணர்வை டெசோ மாநாடு உண்டாக்கியுள்ள நிலையில், அய்.நா.வின் பொதுச் செயலாளரையும் (நியூயார்க்) மனித உரிமை அமைப்பின் பொறுப்பாளரையும் (ஜெனிவா) நேரில் சந்தித்து எழுத்து மூலம் கோரிக்கைகள் வைப்பது என்பது முறையான, ஜனநாயக ரீதியான செயல்பாடாகும். முக்கியமாக டெசோ சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டுத் தீர்மானங்களை அய்.நா. மூலம் செயல்படுத்த வைக்க - இந்திய அரசின் ஒத்துழைப்புத் தேவை என்பதை உணர்ந்த நிலையில்தான். அய்.நா. தலையிட இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் வாயிலாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்பொழுது நல்லதோர் சூழ்நிலை கனிந்து இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். டெசோ தலைவர் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் பொறுப் புடன் எழுதிய பதில் கடிதத்தில் வழக்கம் போல சடங்கு ரீதியான ஜாக்கிரதை வார்த்தைகளுக்குப் பதிலாக, சற்று வெளிப்படையாகவே இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா தயாராகி விட்டது என்பதைக் காட்டுகிறது. இது வரவேற்கத் தக்கது; இந்திய அரசு மனத் தூய்மையுடன், உறுதியுடன் செயல்பட்டால் எல்லா வகையிலும் பயனுடையதாகவே இருக்கும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிசிடம் அய்.நா. மன்ற பொதுச் செயலாளர் பான் - கீ மூன் கொடுத்துள்ள அழுத்தமும் முக்கிய மானது. தமிழர் பிரச்சினைக்கு உடனடி அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளதை நல்ல கண்ணோட்டத்திலேயே எடுத்துக் கொள்வோம்.

இந்தச் சூழ்நிலையில் டெசோ வின் பிரதி நிதிகளாக தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு ஆகியோர் நியூயார்க்குக்கும், ஜெனிவாவுக் கும் சென்று முறைப்படியான கோரிக்கையினை அளித்து செயல்படத் தூண்டுவது - மிகச் சரியான - துல்லியமான பாதையில், நோக்கில் டெசோ செயல்படுகிறது என்பதற்கான அடையாளமாகும்.


தமிழ்நாட்டுத் தலைவர்கள் வழக்கமான இறக்கப் பாட்டுப் பாடாமல், இந்திய அரசையும், அய்.நா.வையும் வலியுறுத்தும் போக்கில் கருத்துக் களை எடுத்து வைக்க முன் வர வேண்டும் என்பது நமது கனிவான வேண்டுகோளாகும்.

எல்லாரும் இங்கு தனித்தனிதான் என்ற ரத்தத்தை வெளியேற்றிவிட்டு, எல்லாரும் இங்கு ஒன்றுதான் என்ற புதிய ரத்தத்தோடு ஒருங் கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும் அன்போடு  அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத் துகிறோம்! தமிழர் உரிமை வெல்லட்டும்!



                         -----------------------"விடுதலை” தலையங்கம் 4-10-2012

3 comments:

தமிழ் ஓவியா said...

சத்துணவுப் பணியாளர்கள்: நீதிமன்றத்தில் மேல்முறையீடு வேண்டாம்

முதல்வருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!



ஆசிரியர் பயிற்சி பெற்று தேர்வானவர்களுக்கு மற்றொரு தேர்வு - சமூகநீதிக்கு எதிரானது - மறுபரிசீலனை செய்ய வேண்டும்; சத்துணவுப் பணியாளர்கள் நியமனம் தொடர்பாக மேல் முறையீடும் தேவையில்லை என்று முதல் அமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:

தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலம் ஆசிரியர்களாகப் பணிபுரிந்தவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பணி புரிய வாய்ப்புள்ளவர்கள் என்பது போன்ற ஒரு நிலைமையை தமிழக அரசு உருவாக்கியது மனிதநேயக் கண்ணோட்டத்தில் தவறான ஒன்றாகும்.

ஆசிரியர்கள், தங்களது அறிவுத் திறனை - நவீனமயப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் - தற்காலத் தேவைக்கேற்ப Updating their knowledge and Skills என்பது முக்கியம்தான் என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கான பயிற்சிகளை ஆசிரியப் பணியில் நீடித்தே அவ்வப்போது கொடுக்கலாமே!

அதை விட்டுவிட்டு அவர்களை மற்றொரு புதுவகை நுழைவுத் தேர்வை எழுதி தேர்வெனும் தடை ஓட்டப் பந்தயத்தில் கலந்து தாண்டி ஜெயித்துக் காட்டுங்கள் என்பது விரும்பத்தக்கதல்ல. பணி அனுபவம் வாய்ந்தவர்களுக்குக் குறிப்பிட்ட கால அவகாசம் தந்து, அதற்குள் அவர்கள் தங்கள் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, போட்டியிடலாம் என்று அரசு ஆணையிடலாம்.

அப்படித் தகுதி பெற்றவர்கள் (Department test எழுதி கூடுதல் தகுதி பெற்றவர்களாகி வாருங்கள் என்று ஆணை பிறப்பித்து) அப்படி வருகின்றவர்கள் அதன் அடிப்படையில் பதவி உயர்வு, ஊக்க போனஸ் என்று வைத்தால் சோம்பிப் பின்தங்கும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கடுமையாக உழைத்து முன்னேறவே முயற்சிப்பார்கள்!

இப்படிப்பட்ட பாதிப்புக்குள்ளாவோர் பெரிதும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, கிராமப்புறங்களிலிருந்து வந்து பணியில் சேர்ந்தவர்கள் என்கிறபோது இப்பிரச்சினை சமூகநீதிக் கண்ணோட்டத்தோடும், மனிதநேயத்துடன் கூடிய ஈர நெஞ்சத்துடனும் அணுக வேண்டிய ஒன்று என்பதை, தமிழக அரசுக்குக் குறிப்பாக முதல் அமைச்சர் அவர்களுக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் மறுபரிசீலனை தேவை.

சத்துணவுப் பணியாளர்கள் நீக்கம்

சத்துணவுக் கூடங்கள், அங்கன்வாடிகளுக்கு 29 ஆயிரம் ஊழியர்கள் முறைப்படி - இடஒதுக்கீடு - உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களைப் புறந்தள்ளி, நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சென்னை உயர்நீதிமன்றம் அரசின் நியமன ஆணையை ரத்து செய்துவிட்டது. உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள குறைபாடுகளைச் சரி செய்து உரிய முறையில் புதிதாக நியமனம் செய்வதே சரியானதாகும். மாறாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று முதல் அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்தால் அரசின் நிலை மிகவும் கேலிக்குரியதாக ஆகாதா என்பதையும் தமிழக அரசின் தலைமை சிந்திக்க வேண்டும்.


சென்னை
4.10.2012

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம் 4-10-2012

தமிழ் ஓவியா said...

கருப்புச் சட்டை - ஏன்? : கலைஞர் விளக்கம்


சென்னை, அக்.4- கருப்புச் சட்டை அணிந் திருப்பது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம் வருமாறு:

செய்தியாளர் :- இன்றையதினம் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள். நாளையதினம் தான் போராட்டம் அறிவித்திருந்தீர்கள். பொதுவாக உங்களை வெள்ளுடை பார்த்துத் தான் எங்களுக்குப் பழக்கம். இன்றைக்கே கருப்பு சட்டை அணிந் திருப்பதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா?

இழிவை எடுத்துக்காட்ட....

கலைஞர் :- தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான் கழகத்தின் தொண்டர்கள், தோழர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் அணிய வேண்டும் என்று தான் முடிவெடுத்தோம். ஆனால் வேண்டு மென்றே காவல் துறையின் மூலமாக பல பகுதிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டு விட்டது. தடை விதிக்கப்பட்டு விட்ட காரணத்தால், அதை அணிவகுத்துச் சென்று மீறுவதால் எதுவும் அசம்பா விதங்கள், வன்முறைகள், விரும்பத்தகாத காரியங் கள் ஏற்பட்டு, பொது மக்களுக்கு சோதனை உரு வாகக் கூடாது என்ற எண்ணத்தினால், நாளைக்கு அணிவகுப்பாக இருந்து இதை நடத்துவதை விட இன்று முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கருப்புச் சட்டை அணிந் தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. அதன் அடையாளமாகத் தான் இன்றைக்கு கருப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். இதைப் பற்றி முரசொலியில் இன்று கடிதம் எழுதியிருக்கிறேன். அந்தக் கடிதத்தை விளக்கமாக நாளைக்குப் படித்தால், நான் இதை அணிந்திருப்பதற்கான நோக்கத்தையும், அதற்குரிய முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்ள முடியும்.

பெரியார் காலத்தில் கருப்புச் சட்டைப் படை!

செய்தியாளர் :- திராவிட இயக்கப் போராட் டங்களில் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பைத் தெரிவிப்பது என்பது நீண்ட காலமாக தொடர்ந்து வந்த ஒரு மரபு. இதற்கு முன்பு எப்போது கருப்புச் சட்டை போராட்டம் நடைபெற்றது?
கலைஞர் :- கருப்புச் சட்டை அணிவதையே பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தில் நாங்கள் எல்லாம் இருந்த போதே அறிமுகப்படுத்தி, கருப்புச் சட்டை படை என்று ஒன்றை உருவாக்கினார். அந்தக் கருப்புச் சட்டைப் படையில் அப்பொழுதே படைவீரர்களில் ஒருவனாகச் சேர்ந்தவன் நான். அதன் முதல் வரிசையிலே கருப்புச் சட்டை தொண்டனாக நான் இடம் பெற்றிருக்கிறேன். அப்போது அந்தக் கருப்புச் சட்டை படைக்கு செயலாளர்களாக இருந்தவர்களில் ஒருவர் மறைந்த நண்பர் ஈ.வி.கே. சம்பத் அவர்கள் ஆவார்கள். சம்பத்தும், நானும் குடிஅரசு அலுவலகத்திலே இருந்த போது, அவர் முன்னிலையிலே நான் கையெழுத்திட்டு - இருவரும் கை குலுக்கிக் கொண்டு - இந்தப் படையில் நான் அன்றைக்குச் சேர்ந்திருக்கிறேன்.

செய்தியாளர் :- துண்டறிக்கை விநியோகிக்கும் போராட்டத்தில் நாளைக்கு எந்தெந்த இடங்களில், யார் யார் தலைமை வகிப்பார்கள் என்று முடிவாகியிருக்கிறதா?
துண்டறிக்கை விநியோகம்

கலைஞர் :- ஆயிரம் விளக்குத் தொகுதியிலே நான் துண்டறிக்கை வெளியிடவிருக்கிறேன். வில்லிவாக்கத்தில் பொதுச் செயலாளர் பேராசிரியர் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். கொளத்துரில் பொருளாளர் மு.க. ஸ்டாலின் துண்டறிக்கைகளை விநியோகிப்பார். நாளைய தினம் அவரவர்களும், அவரவர்களுக்குரிய எல்லைகளை வகுத்துக் கொண்டு இந்தப் பிரசுரங்களை விநியோகிப்பார்கள். அந்தப் பிரசுரங்களில் எந்தவிதமான சட்ட விரோதமான வார்த்தைகளும், அல்லது அநாகரிகமான வார்த்தைகளும் இடம் பெறாது. இடம் பெறக் கூடாது என்பது தலைமைக் கழகத்தின் ஆணை.

செய்தியாளர் :- துண்டறிக்கையின் மாதிரி ஏதாவது சொல்லப்பட்டி ருக்கிறதா?

கலைஞர் :- இன்றைக்கு முரசொலியில் துண்டறிக்கையிலே இடம் பெற வேண்டிய வாசகங்களின் மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஞாயிறன்று ஞாயிறுக்குச் சிலை திறப்பு



காவேரிப்பட்டணத்தில் காலக்கதிரவன்
பெரியாரின் சிலை திறப்பு!

ஞாயிறாம் தலைவருக்கு
ஞாயிறன்று பெருவிழா!

ஞாலத்திற்கே ஞானதர்மம்

வாரி வழங்கும்
வற்றா ஜீவநதி
வள்ளல் பெரியாரன்றோ!

சிலையா அது?
சிங்கத்தின் பார்வை!

கைத்தடியா அது?
கைபர் கணவாய்க் கூட்டத்தை - ஒரு
கை பார்க்கும் காலவெடி!

தாடியா அது?
தாழ்ந்து வீழ்ந்த
சமூகத்தைத் தாங்கிப் பிடித்து
கரையேற்றும் தாம்பு!

தர்ப்பைக் கூட்டத்தின் தறுதலை சாத்திரத்தை
சாம்பலாக்கும் தணல்!

கண்ணாடியா அது?
காலக் கணக்கைக்
கணிக்கும் நுண்ணாடி!

பள்ளியின் முன்னின்று
பள்ளி கொண்ட மக்களை
தட்டி எழுப்பும் தாயினும் சிறந்த தந்தை!

நம் விடிவெள்ளி!
நம் மூச்சுக் காற்று!
நம் குருதி நாளம்!
நம் இதயத் துடிப்பு!

பெரியார் சிலை திறப்பைக்
காணாத கண்களும்
கண்களா?

தமிழர் தலைவரின் உரையமுதைக்
கேளாத காதுகளும்
காதுகளா?

பேரணியில் பங்கு பெறாத
கால்கள் இருந்துதான்
என்ன பயனோ?

ஞாயிறன்று வாருங்கள்
காவேரிப்பட்டணத்தைப்
பாருங்கள்! பாருங்கள்!!

- மின்சாரம் -