Search This Blog

31.10.12

தீபாவளிக்குப் பதிலாக இந்து மதம் ஒழிப்பு நாள் பண்டிகை! -பெரியார்

            
  1916-இல் தோன்றி பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சியென்றும் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை சங்கம், எப்படி 1926- இருந்து நம்மால் நடத்தப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கதோடு 1936- இல் பிணைய நேரிட்டது என்பதையும், பிறகு எப்படி 1944- இல் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்ட திராவிடர் கழகம் தோன்றுவிக்கப்பட்டதென்பதையும், பிறகு எப்படி அது எதிரிகளும் கண்டு அஞ்சும்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் எடுத்துக் கூறிவிட்டு, வெளி எதிரிகளெல்லாம் ஒழிந்துவிட்ட நேரத்தில் உள்ளெதிரிகள் தோன்றி தொல்லை கொடுப்பது எந்த இயக்கத்திலும் சகஜந்தான் என்றும், பொதுமக்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் பொறுமையோடு கவனித்துப் பார்த்து, புத்தியோடு ஆலோசித்துப் பார்த்து உண்மை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்றும், சீக்கிரத்தில் பொது மக்கள் உண்மை உணர்ந்து இந்த கிளர்ச்சிக்காரர்களை வெறுத்து ஒழிக்கப் போவது என்பது நிச்சயமான பதில். தனக்கு நம்பிக்கையுண்டென்றும், இதன் பயனாய் இக்கிளர்ச்சிக்காரர்கள் ஒன்று அனமதேயமாக வேண்டும் அல்லது வேறு கட்சியை சரணடைய வேண்டும் என்கிற நிலை சீக்கிரமே ஏற்பட்டுவிடும்.

மேலும் பேசுகையில் திராவிடர் கழகம் அரசியல் போட்டா போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்து வருவதற்கான காரணங்களை கூறிவிட்டு, இன்றைய காங்கிரஸ் விரைவாக செல்வாக்கு இழந்து வரக்காரணமே காங்கிரஸ்காரர்களிடையே இருந்து வரும் பதவிப் போட்டி என்று குறிப்பிட்டார்.


காரணம் வர்ணாஸ்ரமம் ஒழிய அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் யாவும் ஒழிந்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுகையில், தீபாவளி, ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் பண்டிகைகள் தானென்றும், வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்ப்பவர்கள் நரகாசூரன் அடைந்த கதியை, இரணியன் அடைந்த கதியை அடைவார்கள் என்பதை வலியுறுத்தவே பாகவதம் முதலிய கற்பனைக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும், திராவிட மக்கள் இவற்றை நம்பி மோசம் போகக் கூடாதென்றும் கூறினார்.

இந்து மதத்திற்கு ஒரு கடுகளவு ஆதாரம் இருக்காவிட்டாலும் கூட வருணாஸ்ரம தர்மம் ஒழியாது என்று குறிப்பிட்டுப் பேசுகையில், காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும், காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு, முஸ்லீம்களையும், தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும், இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும், திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும்,

தான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக - கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும் திராவிட நாடு பிரிவினை அடைந்ததாக வேண்டியதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு, முஸ்லீம்களைப் போல் எதிர்த்து மோதுதலும் ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாட்டோடு திராவிட நாடு பிரிவினையையே லட்சியமாகக் கொண்டு போனோமானால் விரைவில் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாகத் திராவிடர் கழகத்தின் முயற்சி வீண்போகவில்லை என்பதற்கு அடுத்தக் கட்டமாக, நம்மவர்கள் மந்திரிகளாகவும், நம்மவர்கள் நீதிபதிகளாகவும், நம்மவர்கள் கலெக்டர்களாகவும் பெரிய பெரிய பதவிகள், மேலும் மேலும் அதிகமாகப் பெற்று வரக் காரணமே திராவிடர் கழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் என்றும், திராவிடர் கழகம் ஒழிக்கப்பட்டுப் போனால் பார்ப்பனர்களே சகல உயர் உத்தியோகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் கூறி, ஒவ்வொரு மானமுள்ள திராவிடனுக்கும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதே ஒப்பற்ற கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.

 
--------------------------------------------- திருவத்திப்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 19.11.1949- அன்று ஆற்றிய சொற்பொழிவு.-”விடுதலை” 21.11.1949

0 comments: