Search This Blog

13.10.12

மதுவிலக்கு திராவிடர்கழகத்தின் நிலைப்பாடு!-கி.வீரமணி


Image - தமிழகத்திற்குக் காவிரி நீர் தர மறுக்கும் கருநாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம்

இந்தியா முழுமையும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தாமல் ஒரு மாநிலத்தில் மட்டும் மதுவிலக்கு என்பது நடக்காத காரியம். எனவே, மதுவிலக்கை இந்தியா முழுமையும் கொண்டுவரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானம் கூறுகின்றது.
13.10.2012 சனியன்று காலை சென்னை பெரியார் திடல் துரை.சக்கரவர்த்தி நிலையத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஏ.எம். கோபு அவர்களின் மறைவிற்கும் (வயது 87- மறைவு: 13.9.2012),
பி.பி.சி. தமிழோசை சங்கர் அண்ணா என்று உலகத் தமிழர்களால் போற்றப் பெற்ற லண்டன் வாழ் தமிழர், சிறந்த தமிழ் உணர்வாளர், சங்கரமூர்த்தி அவர்களின் மறைவிற்கும் ( வயது 82 - மறைவு: 10.9.2012),
இலண்டன் தமிழ்ச் சங்க நிறுவனர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களின் வாழ்விணையரும் விருந்தோம்பும் பண்புக்கு எடுத்துக் காட்டான வருமான பாமிலா செல்வநாயகம் அவர்களின் மறைவிற்கும் (18.9.2012), தந்தை பெரியார் பற்றாளரும், தமது மறைவிற்குப் பிறகும்கூட தமது உடலை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கச் செய்தவரும், தம்மால் நடத்தப்பட்டு வந்த மருத்துவமனையை நமது அறக்கட்டளையிடம் ஒப்படைத்த தொண்டறச் செம்மலுமான சேலம் மாரியப்பனார் அவர்களின் மறைவிற்கும் (வயது 98; மறைவு 30.9.2012) , கழகத் தலைமைச் செயற்குழு தனது இரங்கலைத் தெரிவிப்பதுடன், இப் பெருமக்களின் மறைவால் துயருறும் குடும்பத்தினர்க்கும், நண்பர் களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2: மதுவிலக்கு பற்றிய நமது நிலைப்பாடு

அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகளும் சில தமிழ் ஏடுகளும் தமிழக அரசு மதுவிலக்கை உடனே அமுல்படுத்த வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று கூறி, வாக்கு வங்கி அரசியலுக்குக் கவர்ச்சிகரமான மூலதனங்களில் ஒன்று என அதைக் கையில் எடுத்துப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சில கட்சித் தலைவர்கள், தங்களது அனுமானப் படி, ஆகஸ்டு 15, அக்டோபர் 2  ஆம் தேதி, தமிழ்நாடு அரசு அதன் முதல் அமைச்சர் மூலம் அறிவிப்பு வரப் போவதாக எண்ணி, தாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் வந்தது என்பது போன்ற ஒரு மாயையை உண்டாக்க வேண்டும் எனக் கருதியும், இதைச் செய்தன. இனியும் ஏக்கப் பெருமூச்சுடன் செய்து அரசியல் நடத்து கின்றன.
குடி குடியைக் கெடுக்கும் என்பது மதுக் கடை முன்பே உள்ள விளம்பரம்தான்.
மதுவினால் பல குடும்பங்கள் தமிழ் நாட்டில் சீரழிகின்றன என்பதும் உண்மையே!

ஆனால் அத்தகைய மது ஒழிப்பை, திறம்பட, வெற்றிகரமாகச் செய்ய இன்றுள்ள யதார்த்த நிலை என்ன?

தமிழ்நாட்டில் மட்டும் திடீரென்று மது விலக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டால் அதன் விளைவு  என்ன?... மதுக்கடைகளில் விற்பனை இருக்காது. ஆனால், 1. கள்ளச் சாராயம் காய்ச்சுதல் பெருகாதா?
2. காவல்துறையின் மாமுல்  சாம்ராஜ்யமான பேரபாயம் ஏற்படாதா?
இந்நிலையில், சுற்றியுள்ள மாநிலங் களுக்கு அந்த வருவாய் செல்லாதா?
முன்பு கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் குறிப்பிட்டது போல, கொழுந்து விட்டெரியும் தீப்பந்த வளைவுக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழ்நாடு திகழக்கூடும்.

எனவே இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்குக்குப் போராடுவதே அறிவு நாணயம்; அந்தரங்கச் சுத்தி!

எனவே இந்தியா முழுவதிலும்  பூரண மதுவிலக்கு, கள்ளச் சாராய உற்பத்திக்கான கதவுகளை முற்றாக மூடுதல், காவல்துறையின் மாமூலை ஒழிக்கத் தக்கதோர் பாதுகாப்பு.

இவையின்றி திடீரென்று தமிழக அரசு மதுவிலக்கு செய்தால் எதிர்பார்க்கும் பயனைவிட, எதிர்பாராத விளைவுகளையே அதிகமாக உருவாக்கும் என்பது தெளிவு.

(அ) இப்போது இரவு வரை விற்கப்படும் மதுக் கடைகளை - குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் விற்குமாறு செய்யலாம்

(ஆ)  ஊருக்குள், குடியிருப்புப் பகுதிகளில், பள்ளிகள், மற்றும் மருத்துவமனைகள் அருகில் இப்போது இருப்பது போல் இல்லாமல் மதுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் மட்டுமே விற்பனை செய்ய விதிகளை மாற்றி அமைத்தால்,  இதனால் ஓரளவு பயன்கிட்டலாம்!

(இ) கடுமையான பிரச்சாரத்தை மேற் கொள்ளலாம்.

(ஈ) இளைஞர்களுக்கு - மாணவர்களுக்கு விற்பதைத் தடுக்க வேண்டும்.

(உ) மதுவின் விலையை அதிகமான அளவுக்கு உயர்த்திடலாம்.

இப்படி சில உத்திகளைக் கையாண்டு குடிப் பழக்கம் அடுத்த தலைமுறைக்குத் தொற்றாமல் தடுக்கலாம்.

குடியினால் வரும் கேட்டினை இளைய தலை முறைக்கு எடுத்துச் சொல்லும் தீவிரப் பிரச்சாரத்தை முடுக்கி விடலாம்.

இதுதான் மதுவிலக்கு பற்றிய திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு!

தீர்மானம் எண். 3: உணவு விடுதி பெயர்ப் பலகையில் பிராமணாள் என்னும் சொல்லை நீக்குதல்

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் காலந் தொட்டு பல்வேறு கால கட்டங்களில் பிராமணாள் உணவு விடுதி பெயர்ப் பலகை அழிக்கும் போராட்டம் நடத்தப்பட்டு, அதன் நியாயம் உணரப்பட்டு, உணவு விடுதிகளில் பிராமணாள் என்பது அறவே நீக்கப்பட்டு விட்ட ஒரு சூழ் நிலையில்,  முதல் அமைச்சர் தொகுதியான சிறீரங்கத்தில்   பிராமணாள் போர்டு தலை காட்டியுள்ளது.
வருணாசிரமக் கண்ணோட்டத்தில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று அவமதிக்கும் இந்த பிராமணாள் பெயர்ப் பலகையை அகற்ற வேண்டும் என்று திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு கிடைத்துள்ளது. பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திராவிடர் கழகத்தின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்துள்ளனர்.

சங் பரிவாரக் கூட்டத்தின் ஆதரவில் உணவு விடுதி உரிமையாளர் மிரட்டல் தொனியில்  நடந்து கொள்கிறார். மேலும் இது முதல் அமைச்சரின் தொகுதி என்று தேவையில்லாமல் முதலமைச்சரின் பெயரும் இதில் சம்பந்தப்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. என்பதை இச்செயற்குழு முதலமைச்சரின் கவனத் துக்குக் கொண்டு வருகிறது.

இதேபோல திருச்சி தில்லை நகரில் ஒரு உணவு விடுதியில் பிராமணாள் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில், கழகத் தோழர்களின் வேண்டுகோளை ஏற்று, பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிராமணாள் பெயர்ப் பலகையை இரு வார காலத்திற்குள் சிறீரங்கத்தில் அகற்றா விட்டால் திராவிடர் கழகத்தின் சார்பில் நேரடித் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவது என்று இச் செயற்குழு தீர்மானிக் கிறது.

தீர்மானம் எண் 4: கிரிக்கெட் ஊழல்களும், உற்சாகப்படுத்தப்பட வேண்டிய வேறு விளையாட்டுகளும்

கிரிக்கெட் என்னும் விளையாட்டு, இந்தியாவின் வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்களின் ஆதிக் கத்தில் இருப்பதால், அளவுக்கு மீறிய விளம்பரங்கள் (பெரும்பாலும் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளி ல்தானே இருக்கிறது!) மற்றும் வணிக விளம்பரங்கள் மூலம் கொழுத்த பணம்  பார்ப்பனர்களின் காட்டில் மழையாகப் பெய்கிறது. விளையாடும்போது சம்பளம், மாத சம்பளம், ஆண்டு சம்பளம், பந்தைப் பிடித்தால் அதற்கொரு தொகை, ஆறு ஓட்டம் அடித்தால் அதற்கொரு தொகை (இவை எல்லாம் கிரிக்கெட் விளையாட்டுக்குள் அடங்காதா?) என்று பெரும் வணிகமாக நடந்து கொண்டுள்ளது.

இவை போதாதென்று விளையாட்டுக்காரர்கள் சூதாட்டத்திலும் ஈடுபடுவதால் அதைக் கண்டு உலகமே சிரிக்கிறது.

இப்பொழுது நடுவர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டு, நடுவர் என்ற பெயரையே கொச்சைப்படுத்தி விட்டனர்.

அய்.பி.எல். 20 என்று பெரும் பணத் திமிங்கிலங்கள் குத்தகை எடுக்கும் கிரிக்கெட் அறிமுகமான பிறகே சூதாட்டம், ஊழல் என்பது உச்சத்திற்கே சென்றுவிட்டன.

இந்த அய்.பி.எல். கிரிக்கெட்டுக்கு உடனே தடை விதிக்கவேண்டும். நம் நாட்டுக்கே உரித்தான ஹாக்கி, சடுகுடு மற்றும் கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஊக்கம் தந்து, எல்லா வகையிலும் (பொருளாதாரம் உள்பட) மாநில, மத்திய அரசுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இந்த வகையில் இளைஞர்களை ஈடுபடுத்தி,  ஒல்லும் வகைகளில் எல்லாம் முயலவேண்டும் என்று இச்செயற்குழு கேட்டு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண் 5: காவிரி நீர்ப் பிரச்சினை

காவிரி நீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம், காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப் புக் குழு ஆகிய அத்தனை சட்டப் பூர்வமான அமைப் புகளின் ஆணைகளை அவமதிக் கும் கருநாடக மாநில அரசின் மீது இந்திய அரச மைப்புச் சட்டம் 365 ஆவது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து, தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய நீரை உடனே அளிக்க ஆவன செய்யுமாறு பிரதமர் அவர்களை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை கருநாடகம் கொடுக்காத பட்சத்தில் நெய்வேலி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது என்றும் இச்செயற் குழு வலியுறுத்துகிறது.


நதிகளை நாட்டுடமை ஆக்குதல், இந்திய அளவில் உள்ள நதிகளை இணைத்தல், முதற்கட்டமாக தென் னக நதிகளை ஒருங்கிணைத்தல்பற்றி ஆய்வு செய்து,  செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6: ஈழத் தமிழர் வாழ்வுரிமை

(அ) அய்.நா.வின் மனித உரிமைக் குழுவின் தீர்மானத்திற்குப் பிறகும்கூட ஈழத்தில் தமிழர் பிரச்சினைக்குச்  சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை; அன்றாட வாழ்வுரிமையும் பாதிக்கப்பட்டுள்ள நிலை தான் அங்கு. இந்த நிலையில் அய்.நா.வின் செயல்பாடு தீவிரமாக வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு தூண்டு கோலாக இருக்கவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
ஈழத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் மிகவும் காயப்பட்டுள்ள நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டாதது கடும் கண்டனத்திற்குரியது. அத்தகைய முடிவுகளை கைவிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

ஆ) அதுபோலவே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இந்திய அரசின் போதுமான அழுத்தம் இல்லா மையே சின்னஞ்சிறு தீவு நாடான இலங்கை அரசின் அத்துமீறலுக்குக் காரணம் என்பதை இச்செயற்குழு உறுதியாக நம்புகிறது.

கச்சத் தீவை மீட்பது ஒன்றே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும் - இந்த வகையில் இந்திய அரசு சட்டப்படியான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 7: வேண்டாம் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று சட்ட ரீதியாகவும், நீதிமன்ற தீர்ப்புகள் ரீதியாகவும், உறுதிபடுத்தப்பட்ட நிலையில்,  அகில இந்திய நுழைவுத் தேர்வுகளைத் தமிழ்நாட்டுக்குள் திணிப் பதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டிய லுக்குக் கொண்டு வருவதுதான் ஒரே தீர்வு என் பதையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8: விலைவாசி உயர்வும்- மதவெறி அமைப்புகளுக்குச் சாதக நிலையும்

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுகளுக்கு அபரிதமான முறையில் அழைப்பு விடுப்பது - பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார்க்கு விற்பது - மக்களின் அத்தியாவசியமான பொருள் களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற வற்றின் விலைகளை உயர்த்துவது என்றெல்லாம் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முடிவுகள், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்மீது கடுமையான வெறுப்பு மேலோங்க வழி வகுக்கும் என்பதுடன்,  மத்திய அரசின் இத்தகைய நடவடிக் கைகள் மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவாக மாறக்கூடும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்று இச்செயற்குழு பிரதமருக்கும், கூட்டணித் தலைவருக்கும் எச்சரிக்கை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 9: கழகத்தின் பிரச்சாரத் திட்டம்

மாதந்தோறும் கீழ்க்கண்ட தலைப்புகளின் அடிப் படையில் தமிழ்நாடு தழுவிய அளவில் திராவிடர் கழகப் பொதுக் கூட்டங்கள் - தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

மாதம்        நிகழ்ச்சி
ஜனவரி        மதவெறி எதிர்ப்பு
பிப்ரவரி        தமிழர் உரிமை காப்பு
மார்ச்        மகளிர் புரட்சி
ஏப்ரல்        ஒடுக்கப்பட்டவர் உரிமை காப்பு -  தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி!
மே            தொழிலாளர் உரிமைக் காப்பு (சமதர்மம் - சமத்துவம்)
ஜூன்        மொழி மானம், உணர்வு உரிமைக் காப்பு
ஜூலை        கல்விப் புரட்சி
ஆகஸ்ட்        சமூகநீதி எழுச்சி
செப்டம்பர்        தமிழர் எழுச்சி - புரட்சி
அக்டோபர்        மூடநம்பிக்கை ஒழிப்பு
நவம்பர்        ஜாதி ஒழிப்புப் புரட்சி
டிசம்பர்        இன இழிவு ஒழிப்பு
மேற்கண்ட அட்டவணைப்படி பிரச்சாரக் கூட்டங்களை நடத்தும்படி கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படு கின்றனர்.

தீர்மானம் எண் 10: கழக மாநாடுகள்

ஆ) இம்மாதம் 27 ஆம் தேதியன்று தேனி மாவட்டம் கம்பத்திலும்,  நவம்பர் 23 ஆம் தேதி புதுவையிலும் வட்டார மாநாடுகளை நடத்துவது என்று தீர்மானிக் கப்படுகிறது.
       --------------------------"விடுதலை” 13-10-2012

0 comments: