Search This Blog

12.10.12

தீபாவளியும் காங்கிரசும்தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன. நமது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பணநெருக்கடியின் மூலம் மிகச் செல்வந்தர் என்று கருதப்படுகிறவர்களில் பலர் அன்றாடம் செலவிற்கு வகையின்றி திண்டாடுகிறார்கள். ஏழைக்குடியானவர்களும், தொழிலாளிகளும் தானிய விலை குறைந்ததின் காரணத்தாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணத்தாலும் ஏக்கமுற்றிருக்கின்றனர். இந்த நிலையில் மதத்தின் பெயரால் அனுஷ்டிக்கப்படும் பழைய பழக்கவழக்கங்களில் நமது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டுப் பற்றுதலால் தீபாவளியின் போது ஏராளமான பொருள் நமது நாட்டில் வீண் விரையமாக்கப்படுகிறது.

அப்படிப்பட்ட வீண் செலவுகளில் பட்டாசு முதலிய வெடிகள் சுடுதல், பலகார தின்பண்டங்களை அளவுக்கு மிஞ்சி சாப்பிடுதல், புது வஸ்திரங்கள் வாங்குவதில் தன் நிலைமைக்கு அதிகமாகச் செலவு செய்தல் முதலியன முக்கியமாகும். இவற்றில் வெடிகள் சுடுவதின் மூலம் நமது நாட்டுப் பொருள் சீனா முதலிய அந்நிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அவ்வந்நிய நாடுகளில் நமது நாட்டிலுள்ள மூட ஜனங்கள் தேவைக்கு வெடி கள் செய்வதென்று மனித நன்மைக்கு உபயோகமில்லாத ஒரு தொழில் வளர்க்கப்பட்டு வருகிறது. தீபாவளியில் தின்பண்டங்கள் தின்ன வேண்டு மென்று இருக்கும் வழக்கத்தால் மக்களிடையே நோய் விருத்தியாகிறது. தின்பண்டங்களை ஒவ்வொருவரும் தனது தேக நிலைக்குத் தகுந்த அளவு நிரந்தரமாக புசித்து வர வேண்டுமேயொழிய வருஷத்தில் சில தினங்களை மாத்திரம் பண்டிகைகள் கொண்டாடும் விசேஷ தினங்களென ஏற்படுத்திக் கொண்டு அந்த நாட்களில் மாத்திரம் அதிகமாகப் புசித்தால் நோயடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் அஜீரணத்தால் ஏற்படும் காலரா வென்னும் தொத்து நோய் ஒவ்வொரு வருஷமும் ஆரம்பமாவது தீபாவளி காலத்தில் தான் என்பதை சகலரும் அறிவர்.

தீபாவளியில் புது வஸ்திரம் கட்டியாக வேண்டுமென்றிருக்கும் வழக்கம் மேற்கண்ட மற்ற இரண்டு தீங்குகளையும் விட மிகவும் பாதகமானது. மக்களுக்கு வஸ்திரம் அவசியமெனக் கொண்டாலும் ஒவ்வொருவரும் தனக்கு வேண்டிய வஸ்திரங்களை நாளடைவில் அந்தந்த சமயத்திலுள்ள தேவைக்குத் தக்கவாறும், தனது பொருள் நிலைமைக்குத் தக்கவாறும் வாங்கிக் கொள்ளவேண்டும். பழைய வஸ்திரங்கள் கிழியாமல் வேண்டிய அளவு இருக்கும்போது புதிதாய் வாங்கவேண்டியதில்லை. பொருள் கஷ்டம் ஏற்படுங்காலத்தில் கிழிந்த வஸ்திரங்களைக் கூடிய வரையில் மறுபடியும் செப்பனிட்டுத் தைத்து உபயோகப்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டுமே யொழிய புதிய வஸ்திரம் வாங்கித்தான் ஆக வேண்டுமென்ற நியதியை கைக்கொள்ளக் கூடாது. ஆனால் தீபாவளிக் கொண்டாட்டம் என்னும் மூட சம்பிரதாயத்தின் காரணமாய் ஒருவன் தன் வசத்தில் ஏராள மான வஸ்திரங்கள் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த போதிலும், தற்சமயம் அவசிய செலவுக்கே பணமில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்த போதிலும் பண்டிகைக் காலத்தில் புது வஸ்திரம் வாங்கி உடுத்தவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிறான். இதன் பயனாய் ஏழை மக்கள் தங்களுக்கு வேண்டிய துணிகளை தீபாவளி சமயத்தில் தவிர வேறு சமயங்களில் வாங்காமல் இருக்கிறார்கள். துணி வியாபாரத்தில் ஒரு வருஷத்திய வியாபாரம் முழுவதும் ஒரு தினத்தில் நடத்தவேண்டி இருப்பதால் ஒரு நெருக்கடி ஏற்பட்டுத் துணி விலை அதிகப் பட்டு ஏழைகளுக்கு நஷ்ட முண்டாகிறது. ஆகையால் நமது நாட்டு மக்கள் இவ்வித நெருக்கடியிலும், கஷ்டத்திலும் பட்டுழலாமலிருக்கவேண்டுமானால் தீபாவளிப் பண்டிகை யைக் கைவிட வேண்டியதவசியம். தேச நலத்தை விரும்புகின்றவர்களும், ஏழைமக்களின் அறியாமையை அகற்றப் பாடுபடுகிறவர்களும் தாங்கள் செய்கையில் தீபாவளியைக் கொண்டாடாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டு வதும் தவிர தீபாவளியைப் பகிஷ்கரிக்க வேண்டுமெனப் பொதுமக்களிடை தீவிரப் பிரசாரஞ் செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

பொது நன்மையைக் கோரும் அறிவாளிகளிடையில் இவ் விஷயத்தைப் பற்றி அபிப்பிராய பேதமிருக்க இடமில்லை. ஆனால் நமது நாட்டின் தற்காலத்திய பொது வாழ்க்கையில் இவ்விஷயத்தில் மாறுப்பட்டஅபிப்ராய மேற்பட்டிருப்பதிலிருந்து எந்த அளவுக்கு நமது பொது வாழ்க்கை பகுத்தறிவுக்கு முரண்பட்டிருக்கிறதென்று வெளியாகிறது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் கக்ஷிக்காரருடைய நிலை மேற்கண்ட நமது அபிப்பிராயத்திற்கு நேர் விரோதமாயிருக்கிறதென்பது வெட்ட வெளிச்சமாயிருக்கிறது. தாங் களே மற்றெல்லோரையும் விட தேசமக்களிடை செல்வாக்குப் பெற்றவர் களென்று காங்கிரஸ்காரர் வீறாப்புப் பேசிக்கொள்ளுகிறார்கள். காங்கிரசின் சார்பாய் இங்கிலாந்து சென்றிருக்கும் காந்தியார், தானே இந்திய தேசத்திற்கு ஏகப்பிரதிநிதி யென்றும் இந்தியாவிலுள்ள எந்த சமூகத்தைப்பற்றியும் பேச மற்றெவருக்கும் உரிமையில்லை யென்றும் வட்டமேஜை மகாநாட்டில் மார் தட்டுகிறார். இவ்வளவு செல்வாக்கும், பிரதிநிதித்துவமும் பெற்ற கூட்டத்தார் தற்சமயம் பாமர மக்களிடையே எவ்வித பிரசாரஞ் செய்கிறார்களென்று உற்று நோக்க வேண்டியதவசியம்.

காங்கிரஸ் திட்டத்தில் தற்காலம் அமுலிலிருப்பது இரண்டே அம்சங்களாகும். ஒன்று குடியை ஒழித்தல், மற்றொன்று அன்னிய ஆடையை ஒழித்தல். இவ்விரண்டுக்குமாக கடைகளின் முன் மறியல் செய்ய கொஞ்சகாலம் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் இப்பொழுது மதுபான மறியலும், அன்னிய ஆடை மறியலும் பிரயோசனமற்றனவென்று புலப்பட்டுவிட்டது. ஆகையால், தங்கள் திட்டத்தை அமுலுக்குக்கொண்டுவர காங்கிரஸ்காரர் புதிய இரண்டு வழிகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். ஒன்று ஜாதிக்கட்டுப் பாடு, மற்றொன்று பண்டிகை. ஜாதிக்கட்டுப்பாட்டின் மூலம் குடியை நிறுத்துவதென்றும், பண்டிகைகள் கொண்டாடுவதின் மூலம் கதர் வியாபாரத் தைப் பெருக்கி அன்னிய ஆடையை பகிஷ்கரிப்பதென்றும் தீர்மானித் திருக்கின்றனர். நமது தேசமக்களிடையில் ஒற்றுமை யேற்படாமல் பிரித்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான ஜாதிகள், ஜாதிக்கட்டுப்பாடு என்னும் ஒரே ஆயுதத்தின் பலத்தால் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆயினும் நாளாவட்டத்தில் ஏற்பட்டுவரும் முன்னேற்ற உணர்ச்சியும், அறிவும் பொது மக்களிடம் பரவுவதால் ஜாதிக் கட்டுப்பாடுகள் தளர்ந்து ஜாதிகள் மறைந்து போவதற்கு வசதிகள் ஏற்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஜாதியிலும் கல்வி கற்று முற்போக்கடைந்த மக்கள் ஜாதிக்கட்டுப்பாட்டை எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால் காந்தீயமென்னப்படும் வர்ணாச்சிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸ் கக்ஷியோவெனில் முன்னேற்ற உணர்ச் சியை எதிர்த்து, மக்களின் அறிவுவளர்ச்சியைத் தடுத்து ஜாதிக்கட்டுப் பாடு என்னும் நாகரீகமற்ற மூட ஜனங்களின் பலவந்தச் செயல்களுக்கு ஆக்கந் தேடுகிறது. மதுவிலக்கின் பெயரால் வருணாச்சிரமத்தை நிலை நாட்டும் காங்கிரஸ் முயற்சியை எதிர்க்கவேண்டியது அறிவாளிகளின் கடமையாகும்.

காங்கிரஸ் திட்டத்தின் இரண்டாவது பகுதி பண்டிகைகள் கொண்டா டுவதின் மூலம் கதர்விற்பனையைப் பெருக்கி அன்னிய ஆடையைப் பகிஷ்கரித்தல். தற்சமயம் மூலை முடுக்குகளிலெல்லாம் “தீபாவளிக்குக் கதர் வாங்குங்கள்” என்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்டுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.ராஜகோபாலாச்சாரியார் தனது அறிக்கையில் “தீபாவளி நமது தேச மக்கள் அனைவருக்கும் பொதுவான பண்டிகை, ஏழை, பணக்காரர், ஆண், பெண் முதலியவர்கள், குழந்தைகள் எல்லோரும் அன்றைய தினத்தைச் சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். முக்கியமாக தீபாவளி விடுதலைக் கொண்டாட்டமாகும். அன்று நரகாசுர னிடமிருந்து உலகம் விமோசனம் பெற்ற நாள். ஆகையால் தீபாவளி என்பது விடுதலைக்கு அறிகுறி. தென்னாட்டில் நாம் அநாதி காலமாக புது ஆடைகள் வாங்கியணிந்து தீபாவளி கொண்டாடி வருகிறோம். ஆயிரக் கணக்காண வருஷங்களாக இவ்வாறு நடத்திவந்தோம். இவ்வருஷ தீபாவளி தமிழ்நாட்டில் கதர் அபிவிர்த்தியைச் சந்தோஷமாய்க் கொண் டாடும் பண்டிகையாயிருக்கவேண்டும்” என்று எழுதியிருக்கிறார். இதிலிருந்து நமது மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடித்தான் ஆக வேண்டுமென்று காங்கிரஸ்காரர் எவ்வளவு அக்கரையாக வேலைசெய் கிறார்களென்பது வெளிப்படுகிறது. அப்படிக் கொண்டாடுவதிலும், புராணத் தில் இப்பண்டிகையைப் பற்றி கட்டிவிடப்பட்டிருக்கும் பொய்க்கதையில் நம்பிக்கை வைத்தே கொண்டாட வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறது. தீபாவளி விடுதலை தினமென்றும், நரகாசுரன் கதையைப் பாமர மக்கள் நம்ப வேண்டுமென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் பிரசாரஞ் செய்ய முற்படுவது வெட்கக் கேடான விஷயமாகும்.

நரகாசுரன் கதையை திரு.இராஜகோபாலாச்சாரியார் நம்புவதில்லை. ஆனால் பாமர மக்கள் அந்தப்புரட்டில் நம்பிக்கை வைக்கவேண்டு மென்றும், இப்படி குருட்டு நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் இந்து மதத்திலுள்ள மற்ற புரட்டுகளையும் ஜனங்கள் நம்ப இடமேற்படுமென்றும் இப்படி மத ஆதிக்கம் வலுத்து, வருணாச்சிரமம் தழைத்தால் பிராமண செல்வாக்கு நிலை நிற்கு மென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் முதலிய காங்கிரஸ் கக்ஷிக்காரர் கருதியே இம்மாதிரி பிரசாரம் செய்கின்றார்கள். தனது தீபாவளி அறிக்கையில் மற்றோரிடத்தில் திரு.இராஜகோபாலாச்சாரி யார் குறிப்பிடுவதாவது.

“ஆலைத் துணிகளை அணிந்து தீபாவளி கொண்டாடுவது சிரார்த்த பிண்டத்திற்கு சீமை பிஸ்கோத்து வைப்பது போலவேயாகும். ஹோமத்தீ யில் நெய்க்கு பதிலாக கோக்கோஜத்தை விடுவது போலாகும்” என்கிறார்.

இப்படிப் பிரசாரஞ் செய்வதின் மூலம் மக்கள் சிரார்த்தஞ்செய்யவும், ஹோமம் வளர்க்கவும் முற்படுவார்களென்றும் அதன்மூலம் தனது ஜாதியார் என்றென்றைக்கும் சோம்பேரிகளாய் வயிறு வளர்க்க இடமேற்படுமென்றும் திரு.இராஜகோபாலாச்சாரியார் கனவு காண்கிறார். உலக மக்களிடையே பகுத்தறிவு தோன்றிவிட்டதென்பதையும், தமிழ்மக்களிடையே சுயமரியாதை இயக்கம் பரவி வருகிறதென்பதையும், திரு.இராஜகோபாலாச் சாரியாருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். நரகாசுரன் கதையில் நம்பிக்கை வைக்கும் காலம் மலையேறி விட்டது. திரு.ராஜகோபாலாச்சாரியார் தனது சுய ஜாதி மக்களின் நன்மையைக்கோருபவரானால் காலத்திற்கேற்றவாறு அவர்களது தொழிலை மாற்றிக் கொண்டு மதத்தின் பெயராலும், வருணாச்சிரமத்தின் பெயராலும் பிறரை ஏமாற்றி, பண்டிகைகளென்றும், சிரார்த்தமென்றும், ஹோமமென்றும் ஏய்த்துப் பிழைக்காமல், அவரவர் சக்திகேற்ற நாணயமும், கண்ணியமும் வாய்ந்த தொழில்களில் ஈடுபடவேண்டுமென்று பிரசாரஞ் செய்வாராக.

தீபாவளியில் கதர் வாங்க வேண்டுமெனச் செய்யப்படும் பிரசாரத் தைப்பற்றி ஒரு வார்த்தை மட்டும் சொல்ல விரும்புகிறோம். கிராமத்தில் உண்ண உணவின்றிப் பட்டினி கிடக்கும் ஏழைகள் நூற்று, நெய்து பிழைப் பதற்காகவே கதர்ப்பிரசாரம் செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தற் சமயத்தில் கதர் வேஷ்டி வாங்குவதென்றால் சுமார் கெஜம் ஒன்றுக்கு அணா ஒன்பது கொடுக்கவேண்டியதிருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே ஏற்பட்டிருக்கும் ஆலைத்துணியில் இந்த கதரைவிட உயர்ந்த காடாத்துணி வாங்குவதென்றால் கெஜம் நான்கு அணாவுக்கு கிடைக்கிறது. கதருக்கு பதிலாக இந்த ஆலைத்துணியை வாங்குவதால் நமது நாட்டுப்பணம் வெளி நாட்டுக்குப் போவதில்லை யென்பதோடு கெஜம் ஒன்றுக்கு ஐந்தனா மிச்சமும் ஏற்படுகிறது. கெஜம் ஒன்றுக்கு ஒன்பதணா கொடுத்து கதர் வாங்கு வதில் ஏழைகளுக்கு நூற்பதில் இரண்டணாவும் நெய்வதில் இரண்டணாவும் கிடைக்கலாம். ஆலைத்துணி வாங்குவதால் ஏற்படும் ஐந்தணா மிச்சத்திலிருந்து இந்த நான்கணாவையும் நேரே நூற்கிறவர்களுக்கும், நெய்கிறவர்களுக்கும் மணியார்டர் மூலம் அனுப்பிவிட்டால் பாக்கி இன்னும் ஒரு அணா வேறு தர்மச்செலவுக்கு மிச்சப்படுகிறது. மேலும் ஆலைத்துணிக்குக் கொடுத்த நான்கணா மூலம் ஆலையில் வேலை செய்யும் எவ்வளவோ ஏழைத்தொழிலாளிகள் பிழைப்பார்கள். இப்படி ஒரு தர்ம பண்டு ஏற்படுத்தி கவர்ன்மெண்டார் மூலமோ அல்லது பொது ஜன நம்பிக்கை பெற்ற ஒரு ஸ்தாபனத்தின் மூலமோ ஏழைகளுக்கு உதவுவதே நாகரீக முறையாகும். அதை விட்டு விட்டு ஆயிரக்கணக்கான வருஷங் களுக்கு முன் மனித சமூகம் நாகரீகமடையாமல் காட்டு மிராண்டிகளா யிருந்த காலத்தில் துணி உற்பத்தி செய்த முறையை இன்றைய தினம் பின்பற்ற வேண்டுமென்றும், அதற்காக, கதர் என்ற ஒரு தொழிலை சிருஷ்டி செய்து அதன் மூலம் ஏழைகளுக்கு உதவுவதாகச் சொல்லப்படும் பொருளில் ஒட்டிக்கிரட்டி பொது ஜனங்களை நஷ்டப்படச் செய்வது ஒழுங்கு முறை யாகாது. உணவின்றி வருந்தும் ஏழைகள் நமது நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற நாகரீகமடைந்த தேசங்களிலுமிருக்கிறார்கள். தற்சமயம் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் உலகத் திலுள்ள எல்லாத் தேசங்களிலும் ஏழைகளின் தொகை பெருகி வருகின்றது. மற்ற நாகரீகமடைந்த தேசத்தார் ஏழைகளைப் பாதுகாக்க வேண்டி பல நவீன தொழில்களை நாகரீக முறைகளில் சிருஷ்டிக்கிறார்கள். அப்படியும் தொழில் கிட்டாத ஏழைகளுக்கு உதவ ஒரு பண்டு ஏற்படுத்தி அதிலிருந்து மாதா மாதம் உதவியளிக்கின்றார்கள். நமது தேசத்தாரும் இவ்வித நாகரீக முறையையே கைக்கொள்ள வேண்டும். கதர் என்பது தற்சமயம் நமது நாட்டாரை தேசீயத்தின் பெயரால் அடக்கியாள முற்பட்டிருக்கும் ஒரு சிறு பான்மைக் கூட்டத்தாரின் சூழ்ச்சி யென்று எச்சரிக்கை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

( S.R. )

              --------------"குடி அரசு" - தலையங்கம் - 01.11.1931.

0 comments: