Search This Blog

6.10.12

பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு தமிழர்களே புருஷர்களாக!

வெள்ளைக்காரன் இருந்திருந்தால்........


பார்ப்பனர் தமிழர் கலப்பு உடையவர்கள் ஆனாலும், ஆரிய கலாசாரத்தைப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள். அதுவும் தங்களை - தங்கள் பிறவியை உயர்த்திக் கொள்ளவும் மற்றவர்களைத் தாழ்த்தவும் மாத்திரமே அக்கலாசாரத்தை ஒரு சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ளுகிறவர்கள்.
இதனாலேயே, இதற்காகவே அவர்கள் தங்களை மற்ற தமிழர்களிடமிருந்து வாழ்க்கை முறையில் பிரித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி வருகிறோம். எதுபோல் என்றால், நம் நாட்டில் உள்ள சட்டைக்காரர்கள் அல்லது ஆங்கிலோ இந்தியர்கள் என்கின்ற பிரிவார் அய்ரோப்பியர் அல்லர்; வெள்ளைக்காரர்களும் அல்லர். தமிழர் பெண்களும் அய்ரோப்பிய ஆண்களுக்குமாகப்  பிறந்தவர்கள்.அப்படி இருந்தாலும் அவர்கள் தகப்பனையே முக்கியமாகக் கருதி, தாயை மறந்து அய்ரோப்பிய கலாசாரத்தை அதாவது பழக்க வழக்கம், மனப்பான்மை ஆகியவற்றைக் கையாண்டு, தங்களை சட்டைக்காரர், இந்தோ-அய்ரோப்பியர்கள் என்று சொல்லிக் கொண்டு (வெள்ளையன் காலத்தில்) உயர்வு வாழ்வு, உயர்ந்த சலுகை பெற்று துரை என்ற பெயரால் தொப்பி போட்டுக் கொண்டு வாழ்ந்ததைப் போல், இந்தப் பார்ப்பனர்கள் தங்களை ஆரியப் பட்டமாகிய பிராமணர்கள், அய்யர், ஆச்சாரியன், ரிஷிகள் முதலிய பட்டத்தை வைத்துக் கொண்டு, ஆரியச் சின்னமாகிய பூணூலைத் தரித்துக் கொண்டு ஆரிய உடை அணிந்து கொண்டு ஆரிய பழக்க வழக்க நடப்பு மனப்பான்மையைக் கொண்டு தனி சலுகை, தனி உரிமை முதலியவற்றை அனுபவித்துக் கொண்டு நம்மை தலையெடுக்க வொட்டாமல் செய்து வருகிறார்கள் என்று சொல்லி வந்திருக்கிறேன்.
இன்று அதைச் சட்டபூர்வமாய் கொண்டு அடைந்து வருகிறார்கள். ஆட்சிக் கலப்படமற்ற ஆரியர் ஆட்சி என்பதை ஆச்சாரியார் மறுப்பாரா? டில்லி ஆட்சி என்றால் என்ன? மத்திய ஆட்சி என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே, எல்லாம் பெரிய தலைமைப் பதவிகளிலும் தமிழர் அல்லாதவன் அல்லது ஆரியக் கலாசாரத்தைப் பின்பற்றுகிறவன் அடைந்து வருகிறான் என்பதை ஆச்சாரியார் மறுக்க முடியுமா?
இந்தக் காரணத்தில்தான் நான் ஆரியர் - திராவிடர் அல்லது பார்ப்பனர் (பிராமணர்) தமிழர் (சூத்திரர்) என்று பிரித்துக் கூறுகிறேன். இதில் எப்படி ஓட்டை கண்டுபிடிக்க முடியும்? மற்றும் ஒரு துணிகரமான விஷயம் என்னவென்றால் பார்ப்பானின், உயர்வாழ்வையே பொதுநல நல்வாழ்வாகவும் பார்ப்பானின் (ஆரிய) ஆட்சியையே நல்ல ஆட்சியாகவும் கொண்டு பேசப்படுவதே ஆகும்.
தமிழ், தமிழ்நாடு, தமிழர் ஆட்சி, தமிழர் வாழ்வு என்பனவெல்லாம் அடியோடு அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதே ஆரிய ஆட்சியின் சட்டமும் திட்டமுமாக இருந்து வருகிறது.
1 . மேல்ஜாதி, கீழ்ஜாதி பிரிவு ஒழிந்து மக்கள் ஒரு ஜாதி ஆவதை ஆச்சாரியார் நான் சர்வ வல்லமையுடன் எதிர்க்கிறேன். இதை நான்தான் சொல்லமுடியும். இதற்காகவே உயிர் வாழ்கிறேன் என்கிறார்.
2. தமிழ்நாட்டுக்கு ``தமிழ்நாடு என்ற பெயர் கூடாது.
3. தமிழ்நாடு தமிழ்மொழி நாடாக அமைக்கப்படக்கூடாது.
4. தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டிகளாய் (மற்ற மொழிக்காரர்களை விடக் குறைந்த எண்ணிக்கை உடையவர்களாய்) இருக்கும்படியான அளவில் கன்னடியர் நாட்டையும், மலையாளிகள் நாட்டையும், சேர்த்து ஒரு நாடாக்கி தமிழர்களைச் சிறுபிரிவினராக ஆக்க வேண்டும் என்கிறார்.
5. இது முடியாவிட்டால் தமிழ் நாட்டுடன் ஒரு கன்னட ஜில்லாவும், ஒரு மலையாள ஜில்லாவுமாவது சேர்ந்து இப்போது இருக்கிறபடி இருந்து கொண்டு, பார்ப்பனர் அல்லாதவர்-தமிழர் என்ற பெயரால் தமிழனின் பங்கு பதவி, உத்தியோகங்களைப் பெரும்பாலும் கேரளத்தானும், கர்நாடகத்தானுமே அடைந்து இருக்கட்டும் என்கிறார்.
6. இதுவும் முடியாது என்றால், இன்னும் அய்ந்து ஆண்டுகளுக்கு ஆவது பிரிவினை அமைப்பே வேண்டாம் என்கிறார்.
7. இதுவும் முடியாவிட்டால் தமிழ்நாடு டில்லி ஆட்சியில் (மத்திய ஆட்சியில்) இருக்கும்படி தமிழ்நாடு ஆட்சியை டில்லிக்குக் கொடுத்துவிட வேண்டும் என்கிறார்.
இவற்றை என்ன என்னவோ காரணங்களைச் சாக்காகக் கொண்டு  வலியுறுத்துகிறார்.
இதற்குச் சிறிது கூட சிந்தனை இல்லாமல் வெகு சமீபத்தில் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத்தையும், சில மாதங்களுக்கு முன் செய்யப்பட்ட சட்டசபைத் தீர்மானங்களையும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் அடியோடு எதிர்க்கும் முறையில் துணிவாகப் பேசுகிறார்.
இந்தியாவை 21 சுதந்திர நாடாகப் பிரித்து அந்நாடுகளுக்குப் பூரண அதிகாரம் கொடுப்பது என்று திட்டம் செய்து கொண்டு, அந்தப்படி இந்தியாவை மொழி வழியாகவே பிரித்து, 25 ஆண்டுகளாகப் பிரிவினையைக் காரியத்தில் செய்து கொண்டு வந்து, அந்த முயற்சி தமிழ்நாட்டிற்கு வரும்போது, அதுவும் தமிழ் நாட்டானும், கேரள நாட்டானும், கர்நாடக நாட்டானும் அனேகமாய் அபிப்பிராய பேதமில்லாமல் பிரிந்து கொள்ள விரும்பி, ஆவலாய் இருக்கும்போது, அவரவர்கள் சட்டசபையிலும் பிரிந்து கொள்ளத் தீர்மானித்துக் கொண்டிருக்கும்போது இடையில் தீவட்டிக் கொள்ளைக்காரர் புகுந்தது போல - சில பொறுப்பற்ற நாணயமற்ற சுயநலமிகளைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு கொள்ளைக்கு வருவது போல் முரட்டுத்தனமாய்க் கூப்பாடு போட்டுக் கொண்டு பேயாட்டம் ஆடுகிறார். இதைத் தமிழ் மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பார்கள் என்றே கருதுகிறார்.
மேலே காட்டப்பட்ட ஏழு அய்ட்ட பேச்சுகளும், விஷமமும், சதிகளும், துரோகங்களும் நிறைந்து வழிபவைகளாகவே இருக்கின்றன.
ஜாதி இருக்க வேண்டுமென்றால் என்ன அருத்தம்?
பிராமணன்,  சூத்திரன், பஞ்சமன் என்பதாக மதத்தின்படி, சாஸ்திரத்தின்படி, சட்டத்தின்படி, பழக்கத்தின்படி  மக்கள் இருக்க வேண்டும்; நடத்தப்படவேண்டும், அவரவர்களுக்கு மதசாஸ்திர சட்டப் பழக்க வழக்கத்தின்படி உண்டான தன்மைகள்படி அவனவன் நடக்க, பலாபலன்களை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்பதுதானே அருத்தம்.
இப்பொழுது தெரிகிறதா? பொதுமக்களே! ஆச்சாரியார் கல்வித் திட்டத்தை ஆதரித்த முண்டங்களே!! ஆச்சாரியாரின் கல்வித் திட்டம் வர்ணாசிரமத்தை-ஜாதி முறையை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டமேயாகும் என்பது.
ஆச்சாரியார் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் அவர் திட்டங்கள் பெரிதும் ஜாதியைக் காப்பாற்றும் திட்டம்தான் என்று நான் கூறி வந்ததும் 1938_ல் ஆச்சாரியார் முதல் மந்திரியாய் இருந்த காலத்தில் வடமொழியையும் இந்தியையும் தமிழர்களிடையில் கட்டாயமாய் புகுத்தியதன் உள் அந்தரங்கமும் வர்ணாசிரமம் - ஜாதி முறையை பாதுகாக்கவே என்பதும் இப்போது மக்கள் உணரலாம்.
நான் காங்கிரசிலிருந்து விலகக் காரணம் என்ன என்பதும் இப்போதாவது  பொதுமக்கள் உணரலாம். வெள்ளையன் போகாமல் இந்த 10 வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து ஜாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள் மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது.
ஆச்சாரியார் பெண் காந்தியார் மகனைக் காதலித்ததும் யார் யாரோ தடுத்தும், காந்தியார் தடுத்தும், ஆச்சாரியார் தடுத்தும் காந்தர்வ விவாகமாக முடிந்ததும் வெள்ளையன் ஆட்சியின் பலன் அல்லவா?
அவ்வளவு ஏன்? பண்டிட் மோதிலால் நேரு மகள் முஸ்லிமைக் காதலித்தது வெள்ளையன் ஆட்சியின் பயன் அல்லவா?
இதனால் ஒரு குறைவுமில்லை என்றாலும், இதன் தத்துவம் ஜாதி செத்து வருகிறது என்பதுதானே! அந்தப் போக்கு அப்படியே சென்று இன்றுவரை வெள்ளையன் இருந்திருந்தால், 100க்கு 75 பார்ப்பனர்கள் ஒழிந்தே இருப்பார்கள். முற்றும் ஆரியம் மலையேறி இருக்கும்.
இந்த நிலையில் வெள்ளையன் போக நேரிட்டதும் தமிழ் நாட்டின் ஆட்சி மத்திய ஆட்சியின் கீழ் என்னும் பேரால் வடநாட்டான் ஆரியன் கைக்குப் போனதும் எல்லாம் ஜாதியைக் காப்பதற்கே அல்லாமல் வேறு எதற்கு? உயர்ந்த ஜாதியை காப்பதற்கே அல்லாமல் வேறு எதற்கு? உயர்ந்த ஜாதியான் என்பதற்குக் கடுகளவு யோக்கியம், ஒழுக்கம், நாணயம் எவனிடமாவது இருக்கிறதா?
மத்திய ஆட்சி என்பதற்கு ஆக எந்த இலாகாவிலாவது அறிவோ, நாணயமோ இருக்கிறதா?
துரோகிகள், நாட்டைக் காட்டிக் கொடுத்து மானத்தை விட்டுக் கூட்டிக் கொடுப்பவர்கள், தெரியாதவர்கள் போல் நடித்து மக்களை ஏய்த்து ஈனவாழ்வு வாழ்ந்தாலும் மற்ற பொதுமக்களாவது இன்றைய ஆட்சியின் எல்லாத் துறைகளும், எல்லா முறைகளும் ஜாதியைக் காப்பாற்றவும் புதுப்பிக்கவுமே ஆகும் என்பதை உணர வேண்டாமா? தமிழர்களே!  உணர்மின்! ஆத்திரத்தில் சொற்கள் தடிப்பாக வருவதால் மேலே போகப் பயந்து கொண்டு இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
மற்ற அய்ட்டங்களைப் பற்றி பின்னால் எழுதலாம் என்று இருக்கிறேன்.
குறிப்பு: இக்கட்டுரையை எழுதத் தொடங்கும்போது சொற்களை நிறுத்தி அடக்கமாகவே போட முடிந்தது.
எழுத எழுத ஆத்திரம் மேலோங்கியதால், எனக்கும் கட்டுப்படுத்த முடியாததால், திடீரென்று நிறுத்திக் கொண்டேன்.
        -----------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை -`விடுதலை, 21.6.1956

3 comments:

தமிழ் ஓவியா said...

(பெரியாரிடம் கேள்வி...பெரியார் பதில் தருகிறார்)

இச்சொல்லை (திராவிடன்) தாங்கள் தேர்ந்தெடுத்ததன் சிறப்புக் காரணம் ஏதேனுமுண்டோ?
****
சக்கிலியன், பறையன், பஞ்சமன், செட்டி, முதலி, நாயக்கன் என்னும் சாதிப்பெயர்களெல்லாம் சூத்திரன் என்னும் பட்டியலில் சேர்க்கப் பட்டிருப்பதால் அந்த இழிவு நீங்குவதற்காகத்தான் மொத்தத்தில் ஒரே இனப் பெயரான ''திராவிடர்'' என்று சொல்ல வேண்டுமென்கிறேன்.

இதை நிலைநாட்டினால் நமக்கு ஏற்படக் கூடிய பொதுப் பலன் யாதோ?

திராவிடர் ஆட்சி என்றால் ஒரே இனம், ஒரே வழிபாடு, ஒரே கொள்கை; அதற்குப் புறம்பாக இருப்போர் திராவிட நாட்டில் இருக்க ஆசைப்பட்டால் அவர்கள் யாராயிருந்தாலும் சரி, ''தனிப்பட்டு அவர்களது மதக் கோட்பாட்டை வைத்துக் கொள்ள முடியுமே'' யன்றி ''அதை முன் வைத்து மற்ற பெரும்பான்மையினரை அடிமைப்படுத்தி வாழ முடியாது''.

*******

திராவிடர்களில் மதத்தால் வேறுபட்டோர் பற்றி என்ன கூறுவீர்கள்?
****
திராவிடர் ஆட்சியில் ''முசுலிம்'' என்றோ, ''கிருத்துவர்'' என்றோ, ''ஆதித்திராவிடர்'' என்றோ ''பிரிவினைகள்'' ''ஒருநாளும் இருக்க முடியாது''.

எல்லோரும் ஒரே இனமாகத் ''திராவிடர்களாக'' வாழ்வோம்.

மதத்தால், சமய வழிபாட்டால் ''சைவன்'', ''வைணவன்'', ''பவுத்தன்'' என்ற பிரிவு போன்று ''இஸ்லாமிய''த் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கு உரிமை தரப்படுமே யன்றி ''பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது''.

அதே போன்று ''ஆதித்திராவிடன்'' என்ற இழிவுப் பட்டத்தையும் ஒழித்துத் ''திராவிடனாக'' வாழச் செய்வோம்.

..தந்தை பெரியார்..பெரியாரியல்…மனிதன்...பேரா மா.நன்னன்

தமிழ் ஓவியா said...

யாரவது, ‘ என்னடா, இழவுக்கு போகின்றவன் மாதிரி கறுப்புடை அணிந்திருகிறாயே; அல்லது நீ என்ன திருட்டு பயலா?’ என்று கேலி செய்தால், ‘இது ஒன்றும் அப்படி அல்லப்பா; கறுப்புடை அணிந்து கொள்வதற்காக என்னை சாவுக்கு போகின்றவன் என்றோ, திருடப்போகின்றவன் என்றோ கூறினால், கறுப்புடை அணிந்து கோர்ட்டுக்கு செல்லும் வக்கீல் எல்லாம் என்ன இழவுக்கா போகிறார்கள்? அல்லது, திருடத்தான் போகிறார்களா? கோர்ட்டில் கறுப்புடை அணிந்து நீதி வழங்கும் நீதிபதிகள், வெயிலுக்கு கறுப்புக் குடை பிடித்து செல்வோர் – பள்ளி ஆசிரியர் இவர்கள் எல்லாம் என்ன, இழவுக்கு போகிறார்களா? கருப்புடையணிந்து பட்டம் பெரும் பட்டத்தாரிகள் எல்லாம் திருட்டுத்தனத்திற்காகவா பட்டம் பெறுகிறார்கள்?’ என்றெல்லாம் கேளுங்கள் என்று கூறினோம். அதை கேட்ட மக்கள் பெருவாரியாகக் கருஞ்சட்டை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் உற்சாகத்தோடு அணிந்துகொண்டனர். கறுப்புச் சட்டை அணிந்து செல்வதை ஒரு பெருமையாகக் கூட பலர் கருத ஆரம்பித்துவிட்டனர்.

- தந்தை பெரியார் (விடுதலை 11.03.1948)

Anonymous said...

நல்ல பதிவு. பெரியாரின் இந்த சிந்தனை எத்துணை உண்மையானது ... பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழரே