Search This Blog

20.10.12

முன்னுதாரணமற்ற நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா. பெரியார்

தோழர் வீரமணி அவர்களின் 50 ஆண்டு சாதனை நிறைந்த இதழியல் வாழ்க்கை (3) 
 பொன்னீலன்
தலைவர்,
அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

(25.8.2012 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விடுதலை ஆசிரியர் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை)


கவிஞர் கலி.பூங்குன்றன் சொல்கிறார்

கவிஞர் கலி.பூங்குன்றன் சொல்கின்றார், ஈரோட்டாரின் கைத்தடியை எழுது கோலாய்ப் பெற்ற ஆசிரியர் இவர் என்று. எவ்வளவு ஆழமான சித்தரிப்பு. அவர் மேலும் சொல்கிறார், காலத்தின் திசையைச் சாட்டை அடி கொடுத்து மாற்றி, சமூகத்தை முன் நோக்கி நடத்துகிறார் வீரமணி. இந்த மதிப்பீடு முற்றிலும் உண்மை, உண்மை, உண்மை.

எங்களூரில் ஒரு அபூர்வம்

எங்கள் ஊர் மிகமிகப் பின்தங்கி யது. குமரி மாவட்டத்தில் பெரியாரின் வலுவான சுவடுகள் எங்கும் பதிந்துள்ளன. இடை யிலே அன்னியச் சிந்தனையின் ஊடுருவலால், சற்றுத் தொய்வு ஏற்பட்டது போல் தோன்றி னாலும், இன்று மாவட்டம் மீண்டும் பெரியார் சிந்தனைகளால் புத்தெழுச்சி பெற்று வருகிறது. ஆனாலும் எங்கள் ஊரிலோ, பெரியாரைப் பற்றிய பேச்சே இது வரை பொது மேடையில் எழும்பியதில்லை. அண்மையில், அபூர்வமாக ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு பரதநாட்டிய அரங்கேற்றம். வாழ்த்துவதற்காக நான் போனேன். மண்டப வாசலில் மிகப் பெரிய ஒரு வரவேற்புத் தட்டி, அரங் கேற்றம் காண வரும் அனைவரையும் வரவேற்கிறோம். திராவிடர் கழகம், கன்னியாகுமரி மாவட்டம்என்று எழுதியிருந்தது. என் தலை அளவு பெரிய பெரிய எழுத்துக்கள். மனம் கொள்ளாத மகிழ்ச்சி எனக்கு. மேடையில் ஏறிப் பேசினேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இரண்டு புதுமைகள் முதன் முறையாக நம் ஊருக்குள் நுழைந்துள்ளன. ஒன்று பரதநாட்டியம். அதைவிட முக்கியமானது இன்னொன்று. அது தான் திராவிடர் கழகம். கூட்டம் உற்சாகமாகக் கைத்தட்டி ஆரவாரித்தது. திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் தோழர் வெற்றி வேந்தன் தலைமையில், தோழியர்களும், தோழர்களும் உட னேயே மேடையில் நிறைந்து விட்டார்கள். எந்த ஆற்றல் இவர்களை ஊக்கு வித்தது? வீரமணியுள்ளே இயங்கும் பெரியாரின் பேராற்றல்தானே?

மூன்று முகங்கள்

தோழர்காள், மனித குல விடுதலை மூன்று முகம் கொண்டது. அரசியல் விடுதலை, பொருளாதார விடுதலை, பண்பாட்டு விடுதலையும் பெறுவதற் காக கடுமையாகப் போராடிக்கொண் டிருக்கிறோம்.

பண்பாட்டு விடுதலையும் நூறு முகம் கொண்டது. வருணாசிரம விடுதலை, சாதீய விடுதலை, பெண் விடுதலை, மூடத்தனத்தில்இருந்து விடுதலை, மொழி விடுதலை, இன விடுதலை என அதை விரித்துக் கொண்டே போகலாம். இந்த விடுதலை களுக்கான பேராயுதமாகத் தொடங்கப் பட்டதுதான் விடுதலை நாளிதழ். அதை மேலும் மேலும் கூர் தீட்டி, லாவகப் படுத்தி, மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக் கிறார் தோழர் கி.வீரமணி அவர்கள். வெண்தாடி இல்லாத பெரியாராகப் பெரியாரின் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக் கிறார் 50 ஆண்டுகளாக. புதிய சாதனை இது. வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத அரிய சாதனை இது.

முழுக்க முழுக்க சமூக விடுதலைக்காக நடத்தப் படும் இந்த இதழுக்கு விளம்பரம் கிடைக்குமா? கிளுகிளுப்பான செய்தி ஏதாவது உண்டா? எல்லாச் செய்திகளும் சமூக விடுதலையை நோக் கியவையே. ஆதிக்கங்களுக்கு முற்றிலும் எதிரானவையே.

விடுதலை நாளிதழ் எனக்குத் தபாலில் வரும்; தினமும் காலையில் சில நாளிதழ்கள் சுடச்சுடப் படிப்பவன் நான். ஆனால் எந்த நாளிதழிலும் இல்லாத மனிதரை மனிதராக்க முயலும் விடுதலை யின் செய்திகள் வரிவிடாமல் என்னை வாசிக்க வைக்கும். மனதை விசாலப்படுத்தும். மன அழுக்குகளை மேலும் நீக்கும். பிற நாளிதழ்களில் வராத செய்திகள் அவை. விடுதலைக்கு லட்சத் துக்கு மேற்பட்ட சந்தாக்கள் குவிவதன் உட்பொருள் இதுதான். அதைக் காலத்துக்கு ஏற்ற முறையில் சிறப்பாகத் தொடர்வதோடு, மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டு வருகிறார் தோழர் வீரமணி.  வண்ண வண்ணப் படங் களுடன் உள்ளத்தைத் தொடும் செய்திகள். உள்ளூர் செய்திகள், உலகச் செய்திகள், அரசியல் செய்திகள், சமூகச் செய்திகள், பெண்கள் பற்றி, இளைஞர் பற்றி, விளையாட்டு வீராங்கனைகள், வீரர்கள் பற்றிய செய்திகள், எல்லாமே ஆதிக்க விடுதலைஎன்னும் கோணத்தில் வாசர்களைச் சிந்திக்க வைக்கும் விதத் தில்வரும். விடுதலை நாளிதழ் எல்லை களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. வாசகர்கள் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் கருஞ்சட்டை விடு தலைப் படை தினம் தினம் புதுப்பிக்கப் பட்டு, புதுப் பொலிவோடும், வீரத்தோடும், விவேகத்தோடும், விடுதலை லட்சியத் தோடும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

பரவசப்பட்டேன்

தந்தை பெரியார் தொடங்கிய பல்வேறு கல்வி நிறுவனங்கள் அறிவியல் அறிவோடு சமூக அறவியல் அறிவையும், பகுத்தறிவையும், விடுதலை அறிவையும் மக்களுக்குப் பரப்பிக் கொண்டு வருகின்றன. என் மறுபக்கம் நாவலுக்கு வழங்கப் பெற்ற பெரியார் விருதைப் பெறுவதற்காகத் தந்தை பெரியார் , அன்னை மணியம்மை பல்கலைக் கழகத்தினுள் நான் நுழைந்த போது, அங்கு நடப்பவற்றை நேரடியாகக் கண்டு பரவசப்பட்டேன்.
தோழர் வீரமணி அவர்கள் இன்னும் நூறாண்டு வாழ்ந்து, இந்தத் தொண்டு களை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டும். விடுதலை எல்லா இந்திய மொழிகளிலும் வெளிவரவேண்டும். பெரியாரியம் தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பரவவேண்டும். பெரியார் என்றால் அது பெரியாரியம். சமூக விடுதலைச் சிந்தனைக் கருத்தாயுதம். இந்தியாவுக்குத் தேவையான சமூக விடுதலை ஆயுதம்.

ஒரு வரலாற்றுச் சம்பவம்

தோழர்களே, ஒரு வரலாற்றுச் சம்பவம். ஜீவாவின் மறைவுக்குப் பின் ஜீவா மகளுக்கு மாப்பிள்ளை தேடித் திருமணம் நடத்தியவர் தந்தை பெரியார். அந்தத் திருமணத்தில் மணமக்களுக்குப் பெரியார் அளித்த பரிசு ஜீவா மொழி பெயர்த்த, பகத் சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன்? நூலின் முதல்பிரதி. அண்ணா அளித்த பரிசென்ன? சுயமரியாதைத் திருமணச் சட்டம் என்னும் பெரும் விடுதலை ஆயுதம். வீரமணி அதை ஆய்ந்து அலசி சுயமரியாதைத் திருமணத் தத்துவமும்  நடைமுறையும் என்னும் நூலாக உருவாக்கி, தமிழ் மக்கள் கைகளில் தந்திருக்கிறார். இவை போல அவர் தந்து கொண்டிருக்கும் சமூக விடுதலைக்கான நூலாயுதங்கள் ஒன்றா இரண்டா?

சாதீயப் புரட்சி!  வர்க்கப் புரட்சி!!

இந்தியப் புரட்சி இருமுகம் கொண் டது. சாதீயப் புரட்சி ஒரு முகம் என்றால், வர்க்கப் புரட்சி மறுமுகம். இந்த இரு புரட்சிகளையும் முரண் இன்றி செய்யும் விடுதலை இந்திய விடுதலையை மேலும் மேலும் விசாலப்படுத்தி வருகிறது.
அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்திட விரும்புகிறேன். தோழர் கே.டி.கே.தங்க மணி அவர்கள் என்னிடம் சொன்னது, இது. அன்று பெர்லின் நகரில் உலகத் தத்துவ அறிஞர்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதி லும் இருந்து அறிஞர்கள் அதில் கலந்து கொண்டார்கள்.

வால்ட்டர் ரூபன் சொன்னது

அந்த மாநாட்டை முன் நின்று நடத்தி யவர் அன்றைய உலகப் பேரறிஞர் வால்ட்டர் ரூபன் அவர்கள். அவர் ஒரு ஆழமான இந்தியவியலாளரும் கூட. இந்தியா பற்றி நிறைய ஆய்வுகள் செய்தவர்.

அந்த மாநாட்டிற்கு அன்றைய இந்தியப் பேரறிஞர் தேவிபிரசாத் சட்டோ பாத்தியாயா வேறு சிலரோடு சென்றிருந்தார். இந்தியத் தத்துவங்களின் அடிப்படை ஆன்மீகமே என்பவர்களை மறுத்து, லோகாயுதம் என்னும் நாத்திகத் தத்துவமும் பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் வளர்ந்து வந்திருக்கிறது என்று ஆராய்ந்து உலகுக்கு அறிவித்த மேதை அவர்.
மாநாட்டு இடைவேளையின்போது, இந்திய அறிஞர்கள் ஒரு குழுவாக புல்தரையில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் வால்ட்டர் ரூபன் ஒரு கேள்வி கேட்டார். நவீன இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத மகத்தான மாமனிதர் யார்? என்பது கேள்வி. அது காந்தி என்றார் ஒரு இந்திய அறிஞர். நம் பொதுப் புத்தியில் இதுதானே பதிந்திருக்கிறது. காந்தியின் முன்னுதாரனமாக புத்தர் இருந்திருக்கிறார், வேறு சொல்லுங்கள் என்றார் ரூபன். நேரு என்றால் இன் னொருவர். அவருக்கு முன்னுதாரணம் அசோகர் என்றார் ரூபன். இந்திய அறிஞர்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அப்படி என்றால் அவர் யார்? நீங்களே சொல்லுங்கள் என்றார்கள் ரூபனிடம். இந்தியாவின் முன்னுதாரணம் இல்லாத நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா. பெரியார்தான் என்றார் ரூபன். திகைத்துப் போனார்கள் இந்திய அறிஞர்கள்.
எந்த அடிப்படையில் சொல்லுகிறீர்கள் என்றார் கள். இந்திய சமூகத்தில் மேலிருந்து கீழே வரை ஆழமாகப் பரவி, சமூக வளர்ச்சியை முடக்கிக் கொண்டிருக் கும் கொடிய நோய் வருணாசிரமம் அல்லது மனுதர்மம். இந்த நோய்க்கு எதிராகத் தெளிவாக, மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருப்பவர் பெரியார் ஈ.வெ.ரா. எனவே அவரே முன்னு தாரணமற்ற மாமனிதர் என்றார் ரூபன். என்ற மார்க்சியப் பேரறிஞர்.

தோழர்களே, இதன் உட்பொருள் என்ன, புரிகிறதா? ஈரோட்டுப் பாதை மீண்டும் விரிவுபடுத்தப் படவேண்டும். மார்க்சியமும் பெரியாரியமும் களத்தில் கைகோர்த்து இறங்கவேண்டும். இந்தப் பணியை மிகக் கவனமாகச் செய்து கொண்டிருக்கிறார் தோழர் வீரமணி அவர்கள் என விடுதலை வழி புரிந்து கொள்கிறேன்.  இவற்றோடு அம்பேத் காரியமும் வீரமணியின் விடுதலையில் இணைவதைக் காண்கிறேன். இந்தப் பாதையைத் துவக்கிய மாமனிதர் தந்தை பெரியாரின் தொடர்ச்சியாக இன்று களத்தில் பேராடிக் கொண் டிருக்கும் விடுதலையையும் அதன் ஆசிரியர் தோழர் வீரமணி அவர் களையும் அவருக்குத் தோள் கொடுக் கும் தோழமைகளையும் மனமாரப் பாராட்டுகின்றேன். எல்லா வகையிலும் உதவும் துணைவியாரையும் பாராட்டு கிறேன்.                            (நிறைவு)


                   --------------------"விடுதலை” 19-10-2012

7 comments:

தமிழ் ஓவியா said...

நமக்கு சமுகப்பற்று வேண்டாமா?

சென்னையில் 1. எழும்பூர், 2. திருவல்லிக் கேணி, 3. மைலாப்பூர், 4.அடையாறு, 5. மாம்பலம், 6.நுங்கம்பாக்கம், 7. கோலேஹால், 8. கானமந்திரம், 9. சௌந்தர்யஹால், 10. சங்கீதவித்வத்சபா ஆகிய சங்கீத சபாக்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு சபாவிலும் பல பிராமணரல்லாத பிரபுக்கள் மெம்பராகச் சேர்ந்து மாதச் சந்தா கொடுத்தும் நமது சகோதரர்களை மேற்படி சபாக்களில் கமிட்டி மெம்பர், காரியதரிசி, தலைவர் முதலிய பதவி களுக்கு இவர்களைச் சேர்க்காமல் பிராமணர் களையே நியமிப்பதால் எல்லா சபாக்களிலும் நமது தமிழர்களை ஆதரிக்காமலும் சங்கீத இளைஞர்களை விருத்திக்கு கொண்டுவர முடியாமலும் மிக அதிக சங்கீத வித்வ தொகையினர்களுக்கு மிடங்கூட தெரியாமல் அவதிப்பட்டுக் கிடக்கிறார்கள்.

ஆனந்த விகடன், தினமணி, சுதேசமித்திரன், ஜயபாரதி முதலிய பத்திரிகைகளும் தமிழர் பேரையே வெளியே காட்டாமலிருப்பதை உணரந்தாவது சங்கீதத்தைக் கொண்டு ஜீவனம் நடத்தலாமென்று பால்ய முதல் சங்கீதத்தையே நம்பி வேறு ஒரு தொழிலையு மறியாதுள்ள தமிழர்களைப் பற்றி சுயமரியாதை யுள்ள நமது மாபெருந் தலைவர்களும் நமது விடுதலை, குடிஅரசு முதலிய பேப்பர்களும் இனி சும்மா யிருக்கலாகுமா?

4-2-1938இல் நடந்த ராஜா சர் அண்ணா மலைச் செட்டியார் வீட்டு கல்யாணத்தில் சரஸ்வதிபாய் (ஒரு பார்ப்பனத்தி) (கதை) காலக்ஷேபம் நடந்தது வருந்தத்தக்கதே.

நமது தமிழரில் சங்கீத வித்வான்களாயுள்ள சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, காஞ்சீபுரம் ரத்தினசாமிப்பிள்ளை, (நாயனாபிள்ளை குமார்) மன்னார்குடி ராஜகோபால பிள்ளை, திருப்பரம் புரம் சாமிநாதபிள்ளை, கீவளூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, மதராஸ் பிருந்தா முக்தா அபிராமி சகோதரிகள், திருக்கோகர்ணம் கனகாம்புஜம், மதுரை சுப்புலட்சுமி, திருகோகர் கணம் மாணிக்கம் இன்னும் எவ்வளவோ வித்வான்களிருக்கிறார்களே, இவர்களை நமது தமிழ் அன்பர்களாவது ஆத ரிக்க முன்வராதது எடுத்துக்காட்ட வேண்டிய தாகயிருக்கிறது.

பார்ப்பனத்திகள் பாட்டு, பரதநாட்டியம், சினிமா முதலியவைகளில் பெரும் பணத்தை அடித்துக்கொள்வதற்குத் தகுதியாக பிரசாரஞ் செய்ய ஒவ்வொரு பிராமணனும் பத்திரிகையும் கங்கணக் கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த் தாவது நமது தமிழர்கள் இனி கொஞ்சமாவது விழிப்படைந்து சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது பொதுஜன அபிப்பிராயம்.
பொதுஜனம், குடிஅரசு, 20-02-1938

தமிழ் ஓவியா said...

.கடன் நிவாரண மசோதா

சென்னை அசம்பிளியிலும் கவுன்சிலிலும் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட கடன் நிவாரண மசோதாவை நமது கவர்னர் ஒப்புக் கொள்ளாமல் வைஸ்ராய் அங்கீகாரத்துக்காக ஒதுக்கி வைத்திருப்பதினால் சென்னை மாகாணத்தில் அதற்கு இருந்துவரும் எதிர்ப்பை அவர் ஓரளவு உணர்ந்திருக்கிறார் என்றே தோற்றுகிறது.

ஆனால், சென்னை நிலைமையை வைஸ்ராய் அவ்வளவு செவ்வையாக உணர்ந்திருக்க முடியாது. ஆகவே, சென்னை மாகாண எதிர்ப்பை வைஸ்ராய் சரியாக உணருமாறு செய்வது சென்னை மாகாணத்தாரின் நீங்காக் கடமை. பத்திரிகைகளில் கண்டனங்கள் எழுதுவ தினாலும் ஒரு சில கண்டனத் தந்திகள் அனுப்புவதினாலும் பயன் ஏற்படாது. எதிர்ப்பு சரியான முறையில் உருவாக வேண்டும்.

பிரஸ்தாப மசோதாவை எல்லாக் கட்சியாரும் எல்லா வகுப்பாரும் எதிர்க்கிறார்கள். ஆகவே, சென்னை மாகாணத்தாரெல்லாம் அய்க்கியப்பட்டு எதிர்ப்பை உருப்படுத்த வேண்டும். சென்னையிலே ஒரு மகாநாடு கூட்டவேண்டும்.

ஜில்லாக்கள், தாலூகாக்கள், நகரங்கள், கிராமங்கள் தோறும் கண்டனக் கூட்டங்கள் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றி வைஸ்ராய்க்கு அனுப்பவேண்டும். வைஸ்ராய் மூச்சுத் திணருமாறு பிரதி நிமிஷமும் கண்டனத் தந்திகள் பறக்கவேண்டும். பிரச்சினை மிகவும் முக்கியமானது;

சென்னை மாகாண சமூக வாழ்வையே அசைக்கக் கூடியது. ஆகவே, ஆபத்தின் கவுரவத்தை யுணர்ந்து அதற்கு அநுகுணமாகச் செயலாற்ற தேச மகாஜனங்கள் முன்வருமாறு வேண்டுகிறோம்.

குடிஅரசு - பெட்டிச் செய்தி - 27-02-1938


தமிழ் ஓவியா said...

நீடாமங்கலத்தில் மொட்டையடித்த கதை

பரியாரி விளக்கம்

விடுதலை பத்திராதிபர் அவர்கட்கு, ஈரோடு.

அய்யா, நீடாமங்கலம் அரசியல் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்டதற்காக என்னையும் என்னுடன் சேர்ந்த சுமார் 15, 20 பேர்களையும் தலைமயிரை மொட்டையடிக்கும்படி அனுமந்தாபுரம் பண்ணை எஜமான் கிருஷ்ணமூர்த்தி அய்யர் சொல்லியபடி நான்தான் எல்லோருக்கும் தலைமயிரை மொட்டையடித்தேன்.

எனக்கும் மொட்டையடிக்க வேண்டுமென்று சொன்னபொழுது என் தகப்பனார் அய்யர் முன் விழுந்து என் மகனுக்குக் கல்யாணம் பேசியிருக்குது. அவன் மயிரை மட்டும் மொட்டையடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார். என் தலைமயிரைக் கொஞ்சமாவது முன்னும் பின்னும் எடுக்கும்படி என் தகப்பனிடம் சொன்னார். என் தகப்பன் எனக்கு முன்னும் பின்னும் தலைமயிரைச் சிரைத்தார். நான் மொட்டையடித்த சுமார் 20 பேர்களில் எனக்கு

ஞாபகமுள்ளவர்கள் பெயர்கள் வருமாறு:-

முழு மொட்டையடிக்கப்பட்டவர்கள்: 1. தேவசகாயம், 2. செல்வம், 3. துளசி, 4. ராமையன், 5. கூத்தன், 6. செங்கோல், 7. சின்னப்பன், 8.எஸ். ஆரோக்கியம், 9. செல்வ ஆரோக்கியம், 10. சூசை மாணிக்கம், 11. கோபாலன், 12. வீரைய்யன், 13. சாமியப்பன், 14. பொ. ரெத்தினம், 15. கா. ரெத்தினம், 16. தங்கமுத்து, 17. ஆறுமுகம்.

எனக்கு மட்டும் கொஞ்சம் முன்னும் பின்னும் என் தகப்பன் மயிரைச் சிரைத்தார். மற்றும் இருவருக்கு அதாவது சின்னப்பன், தங்கமுத்து ஆகியவருக்கு கல்யாணமாக வேண்டியிருந்ததால் அவர்கள் கேட்டுக்கொண்டதால் முன்னும் பின்னும் கொஞ்சம் கொஞ்சம் சிரைத்தேன். இவை முற்றும் உண்மையாகும்.

நீடாமங்கலம் சந்தான ராமசாமி உடையார் பண்ணையில் எடுக்கப்பட்ட போட்டோ படத்தில் நானும் நிற்கிறேன். என்னையும் மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு நேரே சேரிக்குப் போகும்படி எச்சரித்து, எங்கட்கு 0-14-0 அணா கொடுத்து அனுப்பியபொழுது சந்தான ராமசாமி உடையாரும் எங்கட்கு ரூ. 1-0-0 கொடுத்து, வேறு யார் கூப்பிட்டாலும் போகாமல், நடந்தவற்றைப் பிறருக்குச் சொல்லாமல் நேரே சேரிக்குப் போகச் சொன்னார். நாங்கள் நேரே சேரிக்குப் போனோம்.

- கே. ஆறுமுகம். ( நீடாமங்கலத்தில் மொட்டையடித்த தோழர் கே. ஆறுமுகம் எழுதிய கடிதம்) குடிஅரசு, 16-02-1938

தமிழ் ஓவியா said...

ஆச்சாரியார் ஆட்சியிலே!

முஸ்லிம்கள் பெற்ற பரிசு - வந்தேமாதரம்

தமிழர்கள் பெற்ற பரிசு - இந்தி மொழி

விவசாயிகள் பெற்ற பரிசு - பணமுடை மிராசுதாரர்கள் பெற்ற பரிசு - கடன் தொகை சுவாஹா

தொழிலாளிகள் பெற்ற பரிசு - தடியடி, வேலைநிறுத்தம்

சமதர்மிகள் பெற்ற பரிசு - 144, 124ஏ, சிறைவாசம்

பார்ப்பனரல்லாத உத்தியோகஸ்தர் பெற்ற பரிசு - சம்பள வெட்டு

பொதுமக்கள் பெற்ற பரிசு - வரி உயர்வு (ரெஜிஸ்டிரேஷன் கட்டணம்)

ஆதிதிராவிடர் பெற்ற பரிசு - தலைமொட்டை, அடி (நீடாமங்கலக் கொடுமை)

பத்திரிகைகள் பெற்ற பரிசு - ஜாமீன்தொகை

ஆனால், பார்ப்பனர் பெற்ற பரிசு - பத்தில் நாலு மந்திரி. 26இல் 19 உத்தியோகம்

இவ்வளவிற்கும் பதிலாக நீங்கள் ஆச்சாரியாருக்கு என்ன பரிசு அளிக்கப் போகிறீர்கள்?

குடிஅரசு - 06.02.1938


தமிழ் ஓவியா said...

தேவசகாயம் பேச்சு!
ஆண்டமாரே!

நாங்கள் நீடாமங்கலம் காங்கிரஸ் கூட்டத்திற்கு வேடிக்கை பார்க்கப் போனோம். அங்கு எல்லோரும் சாப்பாட்டிற்கு போகும் போது எங்களையும் கூப்பிட்டார்கள்.

நாங்களும் சாப்பாட்டுக்குப் போனோம். பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எங்களை ஒரு சபாபதி உடையார் என்பவர் வந்து தலை மயிரைப் பிடித்து இழுத்து, ஏண்டா பள்ளப் பயல்களா? உங்களுக்கு இவ்வளவு ஆணவமா, இந்தக் கூட்டத்தில் வந்து உட் கார்ந்து சாப்பிடலாமா? என விறகுக் கட்டையால் அடித்தார்கள்.

அடி பொறுக்கமாட்டாமல் சிலர் ஓடி ஆற்றில் விழுந்து அக் கரைக்குப் போய்விட்டார்கள். நாங்கள் சிலர் அடிப்பட்டுவிட்டு வீட்டுக்குப் போய்விட்டோம். மறுநாள் நாங்கள் வயலில் அறுவடை அறுத்துக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டது யார்? அவர்களைக் கொண்டுவா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் வந்து சொன்னார். நான் போனேன்.

அப்போது அய்யர் , அவனை சும்மா கொண்டு வருகிறாயா? அடி படவாவை என்று சொன்னார். தலையாரி மாணிக்கம் தடிக் கம் பால் அடித்துக் கொண்டு வந்தார். அடி பொறுக்கமாட்டாமல் ஓட ஆரம்பித்தேன். என்னைப் பிடித்துக் கொண்டுவந்து விளா மரத்தில் கட்டி வைத்து மறுபடி 10 அடி தடிக்கம்பால் அடித்தார்.

நாட்டாமைக்கார அடைக்கலம், நாட்டாமை ராமன் ஆகியவர் களை அய்யர் கூப்பிட்டு, இவனை அவிழ்த்துக் கொண்டு போய் மொட்டை அடித்து சாணியை ஊத்தி விடு என்று சொன்னார். அந்த பிரகாரம் பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம் மொட்டை அடித்தார். தலையாரி மாணிக்கம் சாணி ஊத்தினார். பிறகு நான் தலையை முழுகி விட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.

நாலுநாள் சென்றபிறகு எங்களைப் பற்றி ஏதோ பேப்பரில் வெளிவந்ததாக நாட்டாமைக்கார அடைக்கலம், நாட்டாமைக்கார ராமன் ஆகியவர்கள் வந்து என்னையும் கதிர்வேல் மகன் ஆறு முகம், பட்டி அருளானந்தம் மகன் சூசை ஆகியவர்களையும் ஆத்துக்கு அக்கரைப் புறமாக அய்யர் கூப்பிடுவதாகக் கூட்டிக் கொண்டு போனார்கள்.

உடையார் பங்களாவைச் சேர்ந்த வாழைக் கொல்லையில் எங்கள் மூன்று பேரையும் வைத்து போட்டோ படம் எடுத்தார்கள். அதன்பிறகு பங்களாவுக்கு கூட்டி வந்து எழுதாத காகிதத்தில் ஒவ்வொருவரிடமும் ஆறு கையெழுத்து வாங்கி னார்கள். ஏதோ எழுதின காகிதம் சிலவற்றில் கையெழுத்துப் போட்ட பிறகு அய்யர் எங்களுக்கு மொத்தமாக 14 அணா கொடுத்தார்.

பிறகு உடையார் 1 ரூபாய் கொடுத்து, போய் கள்ளுக் குடித்து விட்டு வீட்டில் படுத்துக் கொள்ளுங்கள். வீடுபோய்ச் சேருங்கள் என்று சொன்னார். நாங்கள் போய்விட்டோம். எங்களுக்கு ஆளுக்கு 0-4-3 அணா வந்தது என்று பேசினார்.

(நீடாமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி பாதிக்கப்பட்ட தோழர் தேவசகாயம் 28.01.1938 அன்று ஈரோட்டில் ஆற்றிய உரை)
குடிஅரசு - சொற்பொழிவு - 30.01.1938


தமிழ் ஓவியா said...

புது காங்கிரஸ் தலைவர் யோக்கியதை!

சுபாஷ் சந்திரபோசுக்கு பார்ப்பனர்களின்
(ஆனந்தவிகடனின்) சர்ட்டிபிகேட்:

சுபாஷ் போஸுக்கு ஒரே ஒரு குறை மட்டும் உண்டு. சுபாஷ் போசுக்கு மற்ற தேசத் தலைவர்களுடன் ஒத்துழைக்கும் இயல்பு அவ்வளவு போதாது. தேசபந்து காலஞ்சென்றதும், உடனே தாம் வங்காளத்தின் தலைவராக வரவேண்டுமென்பதில் கொஞ்சம் அவசர புத்தி காட்டினார்.

இதன் பயனாக, உரிய காலத்தில் வங்காளத்தின் ஒப்பபற்ற தலைவராக வரவேண்டியவர் ஒரு கும்பலின் தலைவர் ஆனார். வங்காளத்தில் காங்கிரஸ்காரர்கள் பிளவுபட்டு, காங்கிரஸ் வேலைகள் ரொம்பவும் சீரழிந்து போயிருந்ததற்கு சிறீ சுபாஷ் போஸ் பெரிதும் பொறுப்பாளி என்பதை தேசம் மறந்து விட முடியாது ஜவஹர்லாலுக்கு இதே பார்ப்பனர்கள் (சுதேச மித்திரன்) கொடுத்த நற்சாட்சி பத்திரம் முன்னமே எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.

எனவே, எந்தத் தலைவரானாலும் சரி, பார்ப்பன அடிமையாய் இருந்தால் விளம்பரப்படுத்தி மகாத்மா ஆக்குவதும் சுதந்திர புத்தி கடுகளவாவது இருந்தால் அவர் எப்படிப்பட்ட தியாகியானாலும் இழிவுபடுத்தி ஒழிப்பதும் பார்ப்பன இயற்கை - ஆரிய தர்மம் என்பதை உணர்வோமாக.

குடிஅரசு - கட்டுரை - 23.01.1938

தமிழ் ஓவியா said...


'மறுபிறப்பில்' எனக்கு நம்பிக்கை இல்லை


கேள்வி: மறுபிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

குஷ்வந்த சிங்: இல்லை. மறுபிறப்பு என்பது படுஅபத்தமான விஷயம். எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை கிடையாது. நாம் எங்கிருந்து வந்தோம் என்பது யாருக்கும் தெரியாது. இறந்த பிறகு நாம் எங்கே போகப் போகிறோம் என்பது யாருக்கும் தெரியாது!

கேள்வி: மதம் பற்றி உங்கள் கருத்து என்ன?

குஷ்வந்த் சிங்: எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது. மதம் என்பது மனத்தின் மாயை. நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. இந்த வாழ்க்கையின் முடிவு பற்றி ஒன்றும் தெரியாது. இவைபற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமல் மதத்தைப் பற்றி பேசுவதால் என்ன பயன்? விளையப் போவதும் என்ன? என்னைப் போன்று கடவுளை மறுப்பவன் மதத்தைப் பற்றி என்ன சொல்ல முடியும்?

தலைப்பு: குஷ்வந்த் சிங்குடன் ஒரு நேர்காணல்! நேர்காணல்: ராகவன்தம்பி

காலச்சுவடு (ஆகஸ்ட் 2012 பக்.31)