அமெரிக்காவில் கென்னடி சாதனைகளை விளக்கும் காட்சிகளைப் போல தந்தை பெரியாருக்கும் அமைப்போம்! சென்னைப் பாராட்டு விழா ஏற்புரையில் விடுதலை அமெரிக்கா பாஸ்டனில் கென்னடி யின் சாதனைகளை விளக்கும் காட்சி அமைப்பினைப் போல தந்தை பெரியார் அவர்களுக்கும் அமைப்போம் என்றார் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகள்) நிறைவுப் பெருவிழா சென்னை - பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் 25.8.2012 அன்று காலை நடைபெற்றது. விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழாவில் ஏற்புரை ஆற்றினார். இதில் விழா நாயகர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய இந்த இனிய குடும்ப விழாவின் பெருமதிப்பிற்குரிய தலைவர் - எனது சட்டக் கல்லூரி பேராசிரியர் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் மேனாள் நீதியரசர் அய்யா மோகன் அவர்களே, அதேபோன்று, சிறப்பான வழக்கறிஞராகத் தொடங்கி இளமையிலேயே பல்வேறு அரசு பொறுப்புகளில் முத்திரை பதித்து, தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, பிறகு கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிய பதவி களையெல்லாம் வகித்து, அவருடைய ஆசிரியர் ஜஸ்டீஸ் மோகன் அவர்களே பாராட்டக் கூடியவ ராக உயர்ந்து, உச்சநீதிமன்றத்தினுடைய நீதியரசராக உயர்ந்து, சட்டக் கமிஷன் பொறுப்பிலே இருந்து, இன்னும் பல்வேறு பொறுப்புகளிலே இருக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்த நீதியரசர் ஏ.ஆர். இலட்சு மணன் அவர்களே, பெரியார் பேருரையாளர் கொள்கை வைரம், சுயமரியாதை வீரர் அன்பிற்குரிய பேராசிரியர் நன்னன் அவர்களே,
இந்நிகழ்ச்சியிலே நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய திராவிடர் கழகப் பொருளாளர் எனது அன்பிற்குரிய சகோதரர் வழக்கறிஞர் கோ. சாமி துரை அவர்களே, அறிமுக உரையில் சில செய்திகளை எடுத்து வைத்த அருமை நண்பர் வழக்கறிஞர் த. வீரசேகரன் அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு, மிகச் சிறப்பாக பெருமை சேர்த்து, நாங்களெல்லாம் என்றென்றைக்கும் நன்றிக் கடன் பட்டவர்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் அன்பிற்குரிய அய்யா மாண்பமை பாலசுப்பிரமணியன் அவர்களே,
இந்நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிக் கொண் டிருக்கின்ற பாராட்டுக்குரிய அருமை நண்பர் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்களே,
இறுதியிலே நன்றியுரை கூற இருக்கின்ற இந்திய நீதிபதி சங்கத்தின் பொதுச்செயலாளர் நீதிபதி இரா. பரஞ்ஜோதி அவர்களே,
இங்கே கூடியுள்ள சான்றோர் பெருமக்களே, வழக்கறிஞர் பெருமக்களே, எங்களுக்கு எப்போதும் தோன்றாத் துணையாக இருந்து இவ்வளவு பெரிய சுமையை எங்களைப் போன்றவர்கள் சுமப்பதை பளுவாக நினைக்காமல் அதை எளிதாக சுமக் கக்கூடிய அளவில் வழிக்காட்டிக் கொண்டிருக்கக் கூடிய அருமை நண்பர் நிதித்துறை அறிவுரையாளர் இராஜரத்தினம் அவர்களே, திராவிடர் கழகத்தினுடைய செயலவைத் தலைவர் அருமைச் சகோதரர் சு. அறிவுக்கரசு அவர்களே, கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களே, மற்றும் இயக்கக் குடும்பத் தவர்களே, அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் அன் பான வணக்கம்.
ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய தண்டனை எது என்று சொன்னால்...
நம்முடைய அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் ஒன்றைச் சொல்லுவார்கள்; பல மேடைகளிலே, பல விழாக்களிலே அவர் எடுத்து வைத்ததை நான் நினைவுபடுத்திக்கொண்டே, அசை போட்டுக்கொண்டே அமர்ந்துகொண்டிருந்தேன். ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய சங்கடமான ஒரு கட்டம் எது என்று சொன்னால், மிகப்பெரிய தண்டனை எது என்று சொன்னால், அவனை உட்கார வைத்துக்கொண்டு பாராட்டுவதைவிட மிகப்பெரிய தண்டனை வேறு கிடையாது.
நீதியரசர்கள் முன்னாலே இதுவரையிலே எந்த வழக்கிலும் சென்று நான் நின்றதில்லை. ஆனால், இப்பொழுது நான் சிக்கிக் கொண்டேன் என்பதற்காக, அவர்கள் கொடுத்த தண்டனை இருக்கிறதே, அது ஒரு பக்கம் சுவையானது என்று சொன்னாலும்கூட, இன்னொரு பக்கம் என்றென்றைக்கும் அதற்குத் தகுதியானவனா என்ற கேள்வியை நானே என்னை கேட்டுக்கொண்டு, தகுதி ஆக்கிக் கொள், தகுதி ஆக்கிக் கொள் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வுகளை இவர்கள் அளித்திருக்கிறார்கள். அதற்காக தலைதாழ்ந்த நன்றியை அவர்களுக்கும், இந்த விழாக்குழுவினருக்கும் தெரிவித்துக் கொள் கிறேன்.
எவையெல்லாம் செயல்படுத்த முடியுமோ...
இந்த விழாவிலே உரையாற்றிய பெரியார் பேருரையாளர் நன்னன் அவர்கள் பல்வேறு ஆக்க ரீதியான யோசனைகளை எடுத்துச் சொன்னார். அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, எவை எவையெல்லாம் செயல்படுத்த முடியுமோ, அவை எல்லாவற்றையும் செயல்படுத்த முயற்சிப்போம் என்று அவருக்கு வாக்குறுதியைத் தருகிறோம்.
ஏனென்றால், அவர்கள் போன்றவர்கள் எதையும் எதிர்பார்க்காமல், தன் மனதில் பட்டதை அப்பட்டமாக, ஒளிவு மறைவு இல்லாமல், எந்த மேடையாக இருந்தாலும், ஏன் தொலைக்காட்சி யாக இருந்தாலும்கூட அதைப் பற்றி கவலைப்படாமல் எடுத்துச் சொல்லக்கூடிய அன்பு உள்ளம், உண்மை உள்ளம், சுயமரியாதைக்காரருடைய ஓர் வடிவம் அவர்கள்.
உலகத்தில் பெரியார் ஒருவரே!
அய்யா நன்னன் அவர்கள் என்மீதுள்ள பற்றினாலே சொன்னார்கள், நீதியரசர்கள் உள்பட பெரியாருடைய இடத்தை பூர்த்தி செய்கிறேன் என்றும், பெரியாருடைய நகல் என்றும் சொன்னார்கள், அதை பாராட்டுக்குரிய சொற்களாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, அது உண்மை என்று ஒருபோதும் நான் சொல்லமாட்டேன்.
உலகத்தில் பெரியார் ஒருவர்தான் இருக்க முடியுமே தவிர, பெரியார் அவர்களைப் பின்பற்றக்கூடியவர்கள் ஏராளமாக இருக்கலாம். பின்பற்றுவதில் நாங்கள் சற்றுக் கூடுதலாக மதிப்பெண் பெற்றிருக்கலாமே தவிர, பெரியாருடைய நகலாக யாரும் இருக்க முடியாது; பெரியாரின் இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது; பெரியார் அவர்கள் விட்ட பணியை நாங்கள் தொடருகிறோம் அவ்வளவுதான், அவர்கள் போட்டுத் தந்த பாதையில், அவர்கள் விட்டுச் சென்ற பணிகளை, எந்தச் சபலங்களுக்கும் ஆளாகாமல், செய்யவேண்டும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் ஏற்ற உறுதிமொழிக்கேற்ப இந்தப் பணிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த நேரத்திலே ஒன்றை நான் மிகுந்த அடக்கத் தோடும், உணர்வோடும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அன்றுமுதல் இன்றுவரை நான் ஒரு பெரியார் தொண்டன்...
அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி நன்னன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், வாய்ப்போ, என்னுடைய ஆற்றலோ, என்னுடைய திறமையோ என்பதெல்லாம்விட, அய்யா அவர்கள் எந்தப் பணியைக் கொடுத்தாலும், அந்தப் பணியை நான் அப்படியே கீழ்பணிந்து செய்யக்கூடிய ஒரு தொண்டன், அன்றுமுதல் இன்றுவரை ஏன் நாளை வரையும்கூட.
தத்துவங்களுக்கு மறைவு கிடையாது
தந்தை பெரியார் அவர்கள் தனி மனிதர் அல்லர்; அவர் ஒரு தத்துவம்; ஒரு காலகட்டம்; பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல, ஒரு திருப்பம், ஒரு சகாப்தம். அந்த வகையிலே அய்யா அவர்களை, நாம் தத்துவமாக, ஸ்தாபனமாக, ஒரு இன்ஸ்டிடியூசனாக பார்க்கவேண்டுமே தவிர, ஒரு தனி நபராகப் பார்க்கக் கூடாது. நபர்களுக்குத் தோற்றம் உண்டு, மறைவு உண்டு. தத்துவங்களுக்கு மறைவு கிடையவே கிடையாது.
நான் அண்மையிலேகூட அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, பாஸ்டன் மாநகரிலே ஓர் அரிய வாய்ப்பைப் பெற்றேன். பாஸ்டனிலே என்ன புதுமையாக இருக்கிறது என்று பார்த்தபோது, அறிவுச் செறிவுக்கான அந்தச் செய்தியைப் பார்த்தபோது ஜே.எஸ். கென்னடி அவர்களுடைய காட்சிகளும், அவருடைய வாழ்க்கை வரலாறு, அவருடைய சாதனை இவற்றையெல்லாம் புதிதாக மிகப்பெரிய அளவிலே அங்கே அமைத்திருக்கிறார் கள். அதுபோல, தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு, தத்துவங்கள் இவற்றையெல் லாம் நாம் அமைப்பதற்கு, அது எந்த அளவிற்கு நமக்கு வழிகாட்டியாக, நமக்கு ஒரு பாடமாக அல்லது தெரிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பாக அமையும் என்பதற்காக நாங்கள் சென்றிருந்தோம்.
அப்போது அதிலே பல்வேறு கருத்துகளை அவர்கள் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் கள், செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம். அதை செய்திருப்பது ஒரு அரசாங்கம், ஒரு மிகப்பெரிய அமைப்பு, மிகப்பெரிய அளவிலே செய்திருக்கிறது. நாம் அந்த அளவிற்கு இல்லா விட்டாலும் கூட, இங்கே அதுபோல் பல்வேறு செயல்களை செய்யவேண்டும்.
ஜான்.எஃப். கென்னடியின் அருமையான மேற்கோள்!
அங்கே அருமையான வாசகங்கள் பொறிக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதியாக பார்த்துக் கொண்டு வருகிறபோது, ஒரு இடத்தில் இருந்த ஜான் எஃப் கென்னடி அவர்களுடைய அற்புதமான மேற்கோள் ஒன்றினை நான் குறித்து வைத்தேன்.
அது என்னவென்றால்,
A man may die, nations may rise and fall, but an idea lives on
- என்று சொல்லியிருக்கிறார்.
இது எவ்வளவு அற்புதமான கருத்து என்பதை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
-------------------------”விடுதலை” 30-8-2012
மூன்று பேர்களுக்கு எனது நன்றி! தோன்றாத் துணையாக இருக்கும் தோழர்களுக்கும் நன்றி! நன்றி!! விடுதலை ஆசிரியர் ஏற்புரை
எழுத்துரு அளவு
எனது ஆசிரியர் பணிக்கு, இயக்கப் பணிக்குக் காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றி! நன்றி!! என்று கூறினார் விடுதலை ஆசிரியர்.
விடுதலை ஆசிரியராக தமிழர் தலைவர் மான மிகு கி. வீரமணி அவர்களின் அரை நூற்றாண்டு (50 ஆண்டுகள்) நிறைவுப் பெருவிழா சென்னை - பெரியார் திடல் எம்.ஆர். இராதா மன்றத்தில் 25.8.2012 அன்று காலை நடைபெற்றது. விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விழாவில் ஏற்புரை ஆற்றினார். இதில் விழா நாயகர் விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
மனிதர்கள் பிறந்தால், இறப்பார்கள். அதுபோல் தேசங்கள் முன்னாலே வரும், பிறகு கீழே போகும் அல்லது அழியும். ஆனால், ஒரு கருத்தாக்கம், ஒரு புரட்சிகரமான ஒரு சிந்தனை, கருத்து என்று சொன்னால், அந்த சிந்தனை பிறந்துவிட்டால், அதனை அழிப்பதற்கு யாராலும் முடியாது.
அந்த சிந்தனை வளரக்கூடிய சிந்தனையாக இருக்கும். அதைத்தான் அறிஞர் பெருமக்கள், சான்றோர் பெருமக்கள் இங்கு சிறப்பாக எடுத்துச் சொன்னார் கள். அந்த வகையிலே மிக முக்கியமாக உங்களு டைய வழிகாட்டுதல் உரைகளாக, நெறிகளாக நாம் எடுத்துக்கொண்டு, இந்த நேரத்திலே இதற்குக் காரணமான அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களையும், அன்னை மணியம்மையார் அவர் களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
விடுதலையில் பணி புரிபவர்கள் சம்பளத்திற்காகப் பணி புரிபவர்கள் அல்லர்...
இவ்வளவுப் பணிகளையும் நான் செய்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்காக என்னைப் பாராட்டுகிறீர்கள் என்று சொன்னால், அதற்கு நான் ஒரு சிறிதளவாவது தகுதி உள்ளவன் என்று சொன்னால், நான் தனி நபர் அல்ல; அத்தனை பெருமைகளும் சக தோழர்களான இயக்கத் தோழர்களுக்குத்தான் போய்ச் சேரும். நான் தொண்டர் களுக்குத் தொண்டன்.
அதுபோல, விடுதலை அலுவலகத்தில் பணி செய்பவர்கள் யாரும், நான் சேர்ந்த இந்த அய்ம்பதாண்டு காலம்முதல் இன்று வரையிலே ஊதியத்திற்காக என்னுடைய தோழர்கள் வேலை செய்பவர்கள் அல்லர். அவர்கள் தொண்டூழி யம் செய்பவர்களே தவிர, சம்பளத்திற்காக பணி செய்பவர்கள் அல்லர்.
நாங்கள் எதிர்பார்க்கின்ற லாபம் என்னவென்றால்...
இது ஒரு மிஷனரி என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஓர் அறப்பணி இயக்கம். இது லாப நோக்கத்தோடு நடத்தப்படக்கூடியது அல்ல; இதில் எதிர்பார்க்கும் ஒரே லாபம் மான உணர்வு. அவ்வளவுதானே தவிர, நம்முடைய இனத்திற்கு மான உணர்வு வரவேண்டும்; சமத்துவ சமுதாயம் அமையவேண்டும். மூட நம்பிக்கையற்ற சமுதாயம் உருவாகவேண்டும். அறிவியல் மனப்பான்மை இனி வரக்கூடிய தலைமுறையினருக்கும், இப்போது இருக்கக்கூடிய தலைமுறையினரிடையே செழிப் பாக வளரவேண்டும் என்பதுதான் நாங்கள் எதிர் பார்க்கிற லாபமே தவிர, வேறு கிடையாது.
என் இறுதி மூச்சு அடங்கும்வரையில் உறுதியாக இருப்பேன்
அந்த அளவிலே எத்தனையோ சோதனைகளை யெல்லாம் விடுதலை ஏடு தாங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், இது ஒரு கூட்டு முயற்சி; தனி மனிதரின் (என்னுடைய) முயற்சி அல்ல; தவறுகள் நடந்தால் அது என்னு டைய பொறுப்பு; இது வெற்றிகரமாக நடப்பதை நினைத்தால், அந்தப் பெருமை சக தோழர்கள், உழைக்கின்ற, உற்சாகப்படுத்துகின்ற அத்தனை தோழர்களையும் சேர்ந்தது. இந்தப் பெருமைக்கு அவர்கள் உரியவர்கள் என்று சொல்கின்ற இந்த நேரத்திலே, நான் நன்றிக்குரியவனாகக் கருதுவது, முதலாவது என்னுடைய ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த நம்பிக்கையை என்னிடத் திலே வைத்தார்களோ, அந்த நம்பிக்கையை இறுதி மூச்சு அடங்கும்வரையில் காப்பாற்றுவேன் என்பதை இந்த அவையில் உறுதியாக நான் மீண்டும் கூறிக் கொள்கிறேன்.
அதுபோலவே, அன்னை மணியம்மையார் அவர்கள், அவர் பெறாத பிள்ளை நான். அந்த வகையிலே அந்த வாய்ப்பைப் பெற்றவன் நான். அதைத் தெளிவாக நான் மேலும் மேலும் வலி யுறுத்தவேண்டும் என்பதைப்போன்ற ஓர் உணர்வு. அய்யாவிடத்தில், அம்மாவிடத்தில் பணியாற்றக் கூடிய ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று நான் நினைக்கிறேன். மற்ற எவருக்கும் கிட்டாத பெரும் பேறாக அந்தப் பேறு அமைந்தது.
மூன்று பேருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்
இந்தப் பேறு எனக்குக் கிடைத்ததற்கு நான் மூன்று பேருக்கு என் நன்றியினை சொல்லவேண்டும்.
முதலாவதாக, என் வாழ்விணையராக இருக்கக் கூடியவர் திருமதி மோகனா அவர்கள் ஆவார்கள், இங்கே வந்திருக்கிறார்கள். அவர்கள்தான் எந்தவித மான சிந்தனையும் எனக்கு ஏற்படாமல் (அதாவது குழந்தைகள், குடும்பம் மற்ற பிரச்சினைகள் உள்பட) முழுக்க முழுக்க நான் இயக்கத்திலே, ஏட்டிலே எனது சிந்தனையைச் செலுத்துவதற்கு உறுதுணை யாக, எல்லா சுமைகளையும், எல்லா துன்பங் களையும் தாங்கிக்கொண்டு, அதுவும் குறிப்பாக நெருக்கடி கால கட்டத்தில் எத்தனையோ சங்கடங் களைத் தாங்கிக்கொண்டு அவர் எனக்கு உறு துணையாக இருந்தார்.
அதுபோலவே, இப்படி நான் வருவதற்கு, எனக்கு ஏற்பட்ட மனப்போராட்டத்திலே, மிக முக்கியமான ஒரு மனப்போராட்டத்திலே, அய்யாவின் அடிச்சுவட்டிலேகூட நான் குறிப்பிட்டிருக்கிறேன். அது என்னவென்று சொன்னால்,
குறிப்பாக, தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு அய்யா அவர்கள், சென்னை பெரிய மருத்துவ மனையில் சேர்ந்திருந்தார்கள். தந்தி கொடுத்து என்னை வரவழைத்தார். நான் வந்த உடனே, அய்யா அவர்கள் விடுதலையை நிறுத்திவிடலாமா என்று இருக்கிறேன் என்று சொன்னார். பிறகு இதைப்பற்றி ஆய்வு செய்த நேரத்திலே, நீ பொறுப்பேற்பதாக இருந்தால் நாம் இதனை தொடரலாம் என்று அய்யா அவர்கள் கூறினார்.
இயக்கத்திற்கு பலமாக, - பயனாக அமையும் என்பதால்...
அய்யா அவர்கள் எதை சொன்னாலும் நான் கேட்கக் கூடியவன். என்னுடைய திருமண விஷயத் திலும் அய்யா சொன்னபடிதான் நான் நடந்தேன்.
அய்யா, இப்போது இது எதற்கு என்று நான் கேட்டபோது, இயக்கத்திற்கு இது பலமாக இருக்கும் என்று அய்யா கூறினார்.
இயக்கத்திற்கு அது பலமாக, பயனாக அமையும் என்றால், எனக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை; தாராளமாக நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். எனக்காக தனி வாழ்க்கை என்றே நான் அமைத்துக் கொண்டதில்லை, என் திருமண வாழ்க்கை உள்பட.
ஊதியம் பெறமாட்டேன்...
அய்யாவிடம் ஒன்றே ஒன்று சொன்னேன். நீங்கள் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும், நான் ஏற் பதற்குத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஒரு சிறு வேண்டுகோள் என்னவென்றால், தங்களிடத்திலே இயக்கத்திலே நான் ஊதியம் பெறமாட்டேன்; அதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றேன்.
உடனே அய்யா அவர்கள் சிரித்துக்கொண்டே சொன்னார்கள்:
இல்லை, இல்லை இதற்குச் சம்பளமாகக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஹானரோ ரியம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன் என்றார். ஹானரோரியம் கொடுக்கலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, நான் என்ன பதில் சொல்கிறேன் என்று என்னைப் பார்த்தார்.
நான் ரொம்ப அமைதியாக நின்றிருந்தேன். நின்றுகொண்டுதான் அய்யாவிடம் பேசுவேன். நான் அப்போது சிரித்தேன்.
என்னப்பா, சிரிக்கிறாய், பதில் சொல் என்றார் அய்யா.
இல்லீங்கய்யா, அய்யாவிற்குத் தெரியாதது இல்லை. இரண்டும் ஒன்றுதானே அய்யா, பேரு தானே மாற்றி சொல்கிறீங்க என்றேன்.
உடனே, அய்யா சிரித்துவிட்டார்.
அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் என்னுடைய வாழ்விணையர்தான்.
அன்றைய காலகட்டத்தில் எங்களுடைய நண்பர்கள் சாமிதுரை, ஜனார்த்தனம், கிருஷ்ண மூர்த்தி நாங்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டு அலுவலகம் வைத்திருந்தோம் - வழக்குரைஞர் தொழிலுக்காக.
முழுநேரமாக விடுதலைப் பணியைப் பார்த்தால்தான் சிறப்பாக செய்ய முடியும்
அய்யாவிடத்தில் சம்பளம் வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். நமக்கு வசதி யில்லை; சென்னையில் போய் இருக்கவேண்டும். வழக்குரைஞராக முழுநேரம் பிராக்டீஸ் செய்ய லாம்ணு நினைத்து அய்யாவிடம் அதைப்பற்றிக் கூறினோம்.
அய்யா அவர்கள், அதையும் சரியாக செய்ய முடியாது; இதையும் சரியாக செய்ய முடியாது. அதனால் முழுநேரமாக இதைப் பார்த்தால்தான் சிறப்பாக செய்ய முடியும் என்றார்.
சரிங்க அய்யா, உங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். அப்படி என்றால், உங்களிடம் இருந்து சம்பளம் வாங்கமாட்டேன்; இயக்கத்திலி ருந்தும் சம்பளம் வாங்க மாட்டேன் என்று சொன்னேன்.
அதைப்பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் அய்யா.
எனது மாமியார், மாமனார் நன்றிக்குரியவர்கள்
எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த -எனக்கு மகிழ்ச்சி அளித்த நிலை என்னவென்றால், என்னுடைய மாமனார், மாமியார் வசதியானவர்கள். (ரங் கம்மாள் - சிதம்பரம் ஆகியோர்) அவர்கள் அய்யா விடம் மிக மகழ்ச்சியாக சொன்னார்கள், உங்களுக்குப் பயன்படுகிறார் என்றால் எங்களுக்கு இதைவிட வேறு மகிழ்ச்சி ஏது? எங்களுக்கு வேறு என்ன செலவு இருக்கிறது? தாராளமாக அவர்களது குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்கள்.
மாமியார், மாமனாரிடத்தில் பணம் வாங்கினாலும் சுயமரியாதையை இழக்கிறோம்; இயக்கத்திலே பணம் வாங்கினாலும் நம்முடைய கொள் கைக்கு முரண்பாடு. இந்த இரண்டில் எதை செய்வது என்பதைப்பற்றி நானும், எனது துணை வியாரும் ஒன்றிரண்டு நாள் விவாதம் செய்தோம்.
தன்மானத்தை விட்டாலும், இனமானத்தை காப்பாற்றக் கூடிய வாய்ப்பைப் பெற்றேன்
தனிப்பட்ட முறையில் மாமனார், மாமியாரிடம் பணம் வாங்கினால், கொஞ்சமாக சுயமரியாதையை இழக்கிறோம்; ஆனால், இயக்கத்தின் பணம், பொதுப் பணம். ஆகவே அதைப் பெற்றுக் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் தன்மானத்தை நாம் விட்டாலும் பரவாயில்லை; இனமானத்தை நாம் காப்பாற்றக்கூடிய வாய்ப்பைப் பெறுகிறோம்.
ஆகவே, மாமனார், மாமியாரிடம் பணம் வாங்கினால் யார் என்ன சொல்வார்கள்? நமக்கு என்ன கவலை இந்தப் பணியை செய்வதற்கு? என்று நானும், எனது துணைவியாரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.
ஆகவே, அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக இருக்கக் கூடிய ஒரு நிலை. ஆகவே, இந்தப் பணியை நான் செய்வதற்கு எனது வாழ்விணையர் எவ்வளவு பெரிய துணையோ, அதுபோல் என்னுடைய மாமனார், மாமியார் அவர்களையும் இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்த மூவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஆகவேதான் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்னை பாராட்டுவது போல, தாலாட்டுவதுபோல மிகப்பெரிய தண்ட னையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி எப்படி சொல்வது என்பது தெரியவில்லை.
நம்முடைய சமுதாயத்திலிருந்து நீதியரசர்கள் வரமாட்டார்களா?
அய்யா நன்னன் அவர்கள் மிக அழகாகச் சொன்னார், மாணவர் சுற்றுப்பயணத்தின்போது நான் பல நாள் தூங்கிவிடுவேன்; அவர்தான் என்னை எழுப்பியிருக்கிறார். இப்படி பல்வேறு செய்திகளை அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அந்த வகையிலே எங்களுக்குப் பெருமை.
விடுதலைக்கு வந்தபோது, நம்முடைய சமுதாயத்திலிருந்து நீதியரசர்கள் வரமாட்டார்களா? என்று தலையங்கம் எழுதிய கரம் என்னுடைய கரம்.
அய்யா அவர்களே அழைத்து வந்து அமர்த்தியது (பழைய சிந்தாதிரிப்பேட்டை, 2, பாலகிருஷ்ணப் பிள்ளை தெருவிலே) விடுதலை அலுவலகத்திலே, அண்ணா போன்றவர்களும், மிகப்பெரிய முன்னோ டிகளாக இருந்த மேதைகளும் அமர்ந்திருந்த அந்த ஒரு கை இல்லாத நாற்காலியிலே என்னை அய்யா அவர்கள் அமர வைத்துவிட்டு எதிரே உட் கார்ந்தார்.
நான் எழுதிய முதல் தலையங்கம்
அவர்கள் முன்னாலேயேதான் அன்றைய காலகட்டத்தில் முதல் தலையங்கம் எழுதினேன். 25 ஆம் தேதி அங்கே அதிகாரப்பூர்வமாக எழுதி அச்சிடப்பட்டு வந்த நாள் இன்றைக்குத்தான் (25.8.1962).
சமூகநீதிக் கொடி பறக்காத காரணத்தினால்...
ஆனால், இந்த விடுதலையினாலே பலன் ஏற்பட்டு இருக்கிறதா இல்லையா என்பதை அளந்து பார்த்தோமானால், விடுதலையில் பொறுப்பேற்று அய்ம்பதாவது ஆண்டு எனக்கு நடந்துவிட்டது என்ற பெருமையிலே நான் மூழ்கவில்லை; அதிலே பெருமைப்படவில்லை. மாறாக, இந்த அய்ம்ப தாண்டு காலத்திலே இரண்டு தமிழர்கள் உச்சநீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகளாக இருந்து இந்த விழாவிலே என்னை பெருமைப்படுத்தினார்கள்.
அவர்கள் பெருமைமிக்க வழக்குரைஞர்கள்; ஆற்றலாளர்கள், உழைப்பினாலே உயர்ந்த பெருமக்கள். எல்லாம் இருந்தும் சமூகநீதி கொடி பறக்காத காரணத்தால், பலருக்கு அந்த வாய்ப்பு கிட்டாத வாய்ப்பாக இருந்தது. விடுதலையினுடைய குரல், இயக்கத்தினுடைய குரல், அவர்களே சொன்னது போல, தந்தை பெரியார் அவர்கள் இல்லை என்று சொன்னால், நாம் யாருமே இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நிலை.
விடுதலையின் விழுமிய பயன்!
இந்த அரை நூற்றாண்டு காலத்திலே கிடைத்த வெற்றி என்னவென்றால், ஒரு பக்கம் பெரும் பேராசிரியர்கள், மற்றொரு பக்கம் பெரும் நீதியரசர்கள், இன்னொரு பக்கம் பெரும் வழக்குரை ஞர்கள் என்றெல்லாம் இன்றைக்குக் கிடைக்கக் கூடிய அளவிற்கு இந்த விடுதலையின் விழுமிய பயன் வந்தது என்று சொன்னால், இந்தப் பயன் பெருகட்டும்; இந்த சமுதாயம் எழுச்சி பெறட்டும் என்று கூறி, அனைவருக்கும் நன்றி! விருந்துண்டு செல்க! என்று கூறி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்! வளர்க விடுதலை!!
வணக்கம், நன்றி!
- இவ்வாறு விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-----------------------”விடுதலை”30-8-2012