அய்யாவும் - அம்மாவும் நம் வழிகாட்டிகள்!
தமிழர் தலைவர் அறிக்கை
அன்னை மணியம்மையார் நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று மார்ச் 16ஆம் தேதி - அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த நாள் - நினைவு நாள்நம் அறிவு ஆசானை 95 ஆண்டு காலம் வாழ வைக்க, பசி நோக்காது, கண்துஞ்சாது, தொண்டறமே தனது வாழ்வின் குறிக்கோள் என்ற நிலையில், பட்டம், பதவி, பணம், புகழ் - எதையும் நாடாது பற்றற்றாராக விளங்கிய நம் பகலவன் தந்தையின் கொள்கை, தொண்டின்மீது பற்று வைத்து, அவர்கள் மறைந்த பின்பு அவர்கண்ட புரட்சி இயக்கத்தினை வழிநடத்திய போர் முனைத் தலைவி அவர்!
அவர் இயக்கத்தின் தலைமை ஏற்றபோது, பெரியார் காலத்தில் மறைந்து நின்று இருந்த துரோகம் கொஞ்சம் வேகமாகவே வெளிச்சம் காட்டி, விஷமத்தைக் காட்டி விளையாடத் துவங்கியது!அடக்கம் மிகுந்த தனது ஆற்றலால் எல்லா சோதனைகளையும், துரோகிகளான சோதாக்களையும் ஒரு சேர முறியடித்து, நெருக்கடி காலம் என்ற இருண்ட காலத்திலும் அணையா விளக்காக அய்யா உருவாக்கிய இந்த இயக்கத்தினைக் கட்டிக் காத்தவர் நம் அன்னையார்!எல்லையற்ற எளிமையும், அடக்கமும், ஆற்றலும், சிக்கனமும், தொண்டுள்ளமும் இணைந்த ஓர் உருவத்திற்குப் பெயர்தான் மணியம்மையார் என்பதாகும்!அன்று மட்டுமல்ல., அவர் மறைந்து, அண்ணா வால், புரட்சிக் கவிஞரால், கலைஞரால் மற்றும் பல்வேறு சான்றோர் பெரு மக்களாலும் பாராட்டப்பட்ட அன்னையாரை, ஜாடை மாடையாகவும் தாக்கி எழுதி, தங்கள் தரத்தைக் காட்டத் தவறாத தருக்கர்களும் வாழுகின்றனர்! அதை அவர்கள் லட்சியம் செய்ததே இல்லை!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரிலிருந்து ஒரு துரோகி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கு ஓர் அஞ்சலட்டை எழுதி, கையொப்பமிட்டு எழுதியதற்கு புரட்சிக் கவிஞர் - நீங்கள் மணியம்மையை அன்னை என்று எழுதலாமா? என்று கோபம் கொப்பளிக்க, எழுதிய கடிதத்தை அப்படியே குயில் ஏட்டில் - தலையங்கத்தில் போட்டு, தோலை உரித்துப் பதில் சொன்னார் புரட்சிக் கவிஞர்!தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில்தான் இது நடந்தது! அதில் முக்கியப் பகுதிகள்... இதோ! படியுங்கள்!
நாம் இளைமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம். முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒரு பொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம்; முருகனைப் பாடுவதை விட்டோம்.பாரதி தமிழ்ப்பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன், பாரதியைப் புகழ்ந்தோம் - பாடினோம் - இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்படுத்தவில்லை. ஆனால் நாம் புகழ்வதற்கும், புகழ்ந்து பாடுதற்கும் பாரதியைவிட ஒருவர் இருக்கின்றாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
தாம் போகும் வழியை மறித்துக்கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ் நெறிகாப்பேன், தமிழரைக் காப்பேன், ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல, மலை மேல் நின்று மெல்ல அல்ல, தொண்டை கிழிய முழக்கமிடும் ஓர் இருடியத்தால் செய்த உள்ளத்தைக் கண்டோம்.அது மட்டுமல்ல. குன்று உடைக்கும் தோளும், நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும், இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணுகுண்டுப் பட்டறைதாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம். புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டு மென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள்.ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் - போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிப் பொதிமாடுபோல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை,அன்னை என்று புகழாமல் நாம்வேறுஎன்ன என்று புகழவல்லோம்?பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டி ருப்பார்கள்.ஒரே ஒரு மாலையை என் துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்ன தில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக்கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை.
- இதுதான் புரட்சிக் கவிஞர் எழுதியது.புரட்சிக் கவிஞர் அவர்கள் துவக்கத்தில் தந்தை பெரியார் திருமணம் என்ற பெயரால் செய்த சட்டப் படிக்கான பாதுகாப்பை ஏற்காமல் கடும் விமர்சனம் செய்தவர்! அவரே 11 ஆண்டுகள் கழித்து 1.5.1960 அன்று அன்னை மணியம்மை என்று ஏற்றத்துடன் எழுதிப் பாராட்டினார்; அப்பகுதியைப் படிக்கும் எவருக்கும் கண்களில் நீர் சிந்தாமலிருக்க முடியாது!தனது கருத்தாக்கத்தின் விரிவை - சிந்தனை வளத்தின் பெருக்கத்தினை - புரட்சிக் கவிஞர் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார் தெரியுமா?அந்த நம் அன்னையார் விட்ட பணிமுடிக்க, அய்யாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின் கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்டதால்தான் நம் இயக்கம் எழில் குலுங்கும் கொள்கைப் பூங் காவாக, எவரும் எதிர்த்தழிக்க முடியாத கட்டுப்பாடுள்ள இராணுவமாக நின்று இமாலயச் சாதனைகளை இலகுவில் செய்து வரலாறு படைக்கிறது!தந்தையும், அன்னையும் நம் வழிகாட்டிகள், வரலாற்றுச் சுவடுகள் - அவர்தம் பாதை நம் பாதை; பயணிப்போம், வெற்றி பெறுவோம்!வாழ்க பெரியார்!வாழ்க அன்னையார்!
------------------------கி. வீரமணிதலைவர்,திராவிடர் கழகம் -"விடுதலை” 19-3-2011
1 comments:
அம்மா பற்றி அய்யா
மணியம்மையார் இயக்கத் தொண்டுக்கென்றே என்னிடம் வந்த இந்த 20 ஆண்டில் எனது வீட்டு வசதிக்கான பல காரியங்களுக்கு, தேவைக்கு உதவி செய்த வந்ததன் காரணமாக என் உடல் நிலை எப்படியோ என்தொண்டுக்குத் தடையாய் இல்லாமல் நல்ல அளவுக்கு உதவி வந்ததால் என் உடல், பாதுகாப்பு, வீட்டு நிருவாகம் ஆகியவற்றில் எனக்குத் தொல்லை இல்லாமல் இருக்கும் வாய்ப்பை அடைந்தேன்.
விடுதலை 15.10.1962
எனது காயலா சற்று கடுமையாகத்தான் எளிதில் குணமாகாது. மூத்திர வழியிலே கற்கள் இருக்கின்றன. அவை கரைய மாதக்கணக்கில் காலமாகும். ஒரு சமயம் ஆப்பரேசன் - அறுவை சிகிச்சை தேவை இருந்தாலும் இருக்கலாம். ஆனாலும் நான் பயப்படவில்லை; எதற்கும் தயாராக இருக்கிறேன் மணியம்மையார் கவனிப்பும், கண்காணிப்பும், உதவியும் அளவிடற்கரியது.
ஆகஸ்டு முடிந்தால் 93 வயது முடிந்து விட்டது. செப்டம்பர் பிறந்தால் 94 ஆவது ஆண்டு பிறக்கின்றது. தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகிறேன். நான் சென்னைக்கு வந்தால் உண்மை மாத இதழையும் சென்னைக்குக் கொண்டு வந்து விடலாம் என்று கருதுகிறேன்.
சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன. பிரைமரி பள்ளி ஒன்றும் இருக்கிறது. அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது.
வரும் ஆண்டு முதல் உயர்நிலைப்பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையெல்லாம் திருமதி மணியம்மையார் முயற்சியில் தான் நடைபெறுகின்றன.
10,12 ஏக்கர் தோட்டப்பண்னை ஒன்றும் நடைபெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் கட்டடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டியிருக்கிறது.
நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்க மாட்டார்கள். திருச்சி நடப்புகள் பாதிக்கப்படும். இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.
விடுதலை தலையங்கம் 19.7.1972
தொகுப்பு: மாடாகுடி இரா.சம்பந்தன்.
Post a Comment