பகுத்தறிவாளர் கழகம் துவக்குவதற்கு முன் பகுத்தறிவாளர் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும். பகுத்தறிவாளர் என்றால் மனிதன். மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மனிதன் ஒருவன்தான் சிந்திப்பான். வாய்ப்பு வசதி, தேவை, வளர்ச்சி இவைகளைப் பற்றி மனிதன் ஒருவன்தான் சிந்திக்கின்றான், நிலைமைக்கேற்பத் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவன் மனிதன் ஒருவனேயாவான். மற்ற எந்த ஜீவனுக்கும் இந்த அறிவு கிடையாது.
பகுத்தறிவுள்ள மனிதன் பகுத்தறிவினைப் பயன்படுத்திச் சிந்திக்காத காரணத்தால் சாம்பலையும், மண்ணையும் பூசிக்கொண்டு இராகுகாலம், குளிகை, எமகண்டம் என்றும், பூனை குறுக்கிட்டால் கெட்ட சகுனம் என்றும் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டு முட்டாளாக இருக்கின்றான்.
மனிதன் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகின்றன. அப்படிப்பட்ட மனிதர்கள் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி என்கின்றவைகளில் இன்னமும் நம்பிக்கை கொண்டு மடையர்களாக, முட்டாள்களாக இருக்கின்றனர். சுமார் 100, 150 ஆண்டுகளுக்குள், தோன்றிய இரயில், மோட்டார், மின்சாரம், தந்தி, டெலிபோன், ரேடியோ என்பவைகளும், இன்றைக்குத் தோன்றுகின்ற விஞ்ஞான அதிசய அற்புதங்கள் என்பவைகளும் மனிதனின் பகுத்தறிவு வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்டவைகளேயாகும். இவற்றையெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டிருக்கிற நம் ஒரு நாட்டு மனிதன் மட்டும் தான் மதம் - கடவுள் - சாஸ்திரம் என்கின்ற மூடநம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டிருப்பதன் காரணமாக சிந்திப்பது பாவம், பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ச்சி செய்வதுபாவம் என்று கருதிக்கொண்டு இன்னமும் காட்டுமிராண்டியாக இருக்கிறான்.
ஆடு, கோழி, பன்றிகளைத் தின்பவன் மாடு தின்பது பாவம் என்கிறான். ஆடு, மாடு, கோழிகளைத் தின்பவன் பன்றி தின்பது பாவம் என்கின்றான். எதனால் பாவமென்றால், மதத்தில் அப்படி இருக்கிறது; பெரியவர்கள் அப்படிச் சொல்லி இருக்கிறார்கள் என்று மதத்திற்கு அடிமையாக இருக்கிறான்.
அதன் காரணமாக மனிதன் அறிவு வளரவேண்டிய அளவிற்கு வளர்ச்சியடையாமல் இருக்கிறான். இங்குள்ள இந்த விஞ்ஞான விந்தைகளைக் கண்டவர்களெல்லாம் இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்பவைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு தங்கள் அறிவிற்கு முக்கியத்துவம் கொடுத்துச் சிந்தித்தலேயாகும். உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் அறிவிற்கு முதன்மை கொடுத்து அறிவைக்கொண்டு சிந்திக்கின்றார்கள்.
பகுத்தறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடக்கும் நாடுகள் உலகில் பல இருக்கின்றன. பல கோடிக்கணக்கான மக்கள் பகுத்தறிவாளர்களாக இருக்கிறார்கள்.
நம் ஒரு நாட்டில் மட்டும் எதற்காக இத்தனை மதம்? இதனால் மனிதன் ஒருவனுக்கு ஒருவன் பிரிந்து வேறுபட்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் என்பதைத் தவிர இவைகளால் மனிதன் பெற்ற பலனென்ன? இத்தனைக் கடவுள்களும், மதமும் இருந்து மனிதனை ஒன்றாக்க வில்லையே! இன்றைக்கு உலகம் மிகச் சுருங்கிவிட்டது. முன் மாதக் கணக்கில் பயணம் செய்து போகவேண்டிய இடத்திற்கு ஒருசில மணிநேரத்திற்குள் இன்று போகும்படியான வசதி கிடைத்துவிட்டது. நினைத்தவுடன் 10 ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பேசும்படியான (டெலிஃபோன்) சாதனங்கள் ஏற்பட்டுவிட்டன. இரண்டு நாட்களுக்குள் உலகத்தின் எந்தப் பாகத்திற்கு வேண்டுமானாலும் போகும்படியான நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. இன்னும் மனிதனின் உறுப்புக்களை மாற்றியமைக்கவும், மனிதனின் உறுப்பில் கேடானதை நீக்கி வேறு மிருகங்களின், இறந்த மனிதனின் உறுப்பினை வைத்துச் சரி செய்யும்படியான அளவிற்கு வைத்திய வசதியும் இன்று பெருகியுள்ளதென்றால் இதற்குக் காரணம் மனிதனின் அறிவு வளர்ச்சியினாலேயேயாகும்.
பகுத்தறிவு என்பதற்குச் சக்தி எவ்வளவு இருக்கிறது? அதற்கு எவ்வளவு பலன் இருக்கிறது? அதனால் எவ்வளவு நன்மை விளைகிறது? அதனால் எவ்வளவு கேடுகள் நீங்குகின்றன? என்பவைகளைச் சிந்தியுங்கள். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கடவுள் என்கின்ற முட்டாள்தனமான நம்பிக்கையால் மனிதன் வளர்ச்சியடையாமல் கேட்டிற்கு ஆளாகின்றான்.
மனிதனை மாற்றவேண்டும்; மனிதனைச் சிந்திக்கச் செய்யவேண்டும் பகுத்தறிவுடைய வனாக்கவேண்டும். உலகில் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடையவர்கள் பலர் இருக்கின்றனர். என்றாலும், இதில் எவரும் கடவுள் சக்தியை உண்மையில் நம்புவது கிடையாது. நம்பி அதன்படி நடந்து கொள்வதும் கிடையாது. எவ்வளவு தீவிரமான கடவுள் நம்பிக்கைக்காரனாக இருந்தாலும் தனக்குச் சிறு நோய் ஏற்பட்டால் டாக்டரிடம் சென்றுதான் மருத்துவம் செய்து கொள்கின்றானே தவிர, கடவுள் அருளால்தான் இந்த நோய் நமக்கு வந்தது என்று கருதி சும்மா இருப்பதில்லையே! கடவுள் சர்வ வல்லமை உள்ளவர் என்கின்றபோது அவர் தனது நோயினைத் தீர்ப்பார் என்று கருதி எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரன் வைத்தியம் செய்து கொள்ளாமல் இருக்கிறான் என்று கேட்கின்றேன்.
இன்று நாட்டிலிருக்கிற கேடெல்லாம் மதத்திற்காக கடவுளுக்காகச் செய்யப்பட்டவைகளேயாகும். சைவன் எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றான்? முஸ்லிம், கிறிஸ்தவன் எத்தனை பேரைக் கொன்றிருக்கின்றார்கள்? மதத்தையும், கடவுளையும் பலாத்காரத்தால், கொலையால்தான் மக்களிடையே பரப்பி இருக்கின்றனரே தவிர அன்பாலல்ல. கடவுள் நம்பிக்கையற்றவர்களையெல்லாம் கொடுமைகள் செய்து அழித்து ஒழித்திருக்கின்றனர். நாம் இன்னமும் இந்த அளவிற்கு வரவில்லை.
பகுத்தறிவு என்பது அறிவைக்கொண்டு சிந்திப்பது. அனுபவத்திற்கு ஏற்றதைப் பஞ்சேந்திரியங்களால் உணர்ந்து கொள்ளக்கூடியதை ஏற்றுக்கொள்வதாகும். அதற்கு மாறானது எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளாததாகும். அதனைப் பரப்புவதே இக்கழகத்தின் கொள்கையாகும்.
2 comments:
அன்று பகுத்துணர்ந்த பெரியார் சொன்னதையே,இன்று வேறுவிதமாக கற்பிதம் செய்து கொண்டு பகுத்தறிவு என்பது மனிதனுக்கு கடவுள் அருளிய ஆறாவது அறிவே. அதைக் கொண்டு சிந்தித்தால் கடவுளை அறிந்த்து கொள்ளலாம் என்ற மூடக்கருத்து இன்று நிலவிவருகிறது. அதாவது கடவுள் இருக்கின்றான் என சிந்திக்கின்ற அறிவாம் இது விலங்கினங்களுக்கு இல்லாததால் அவைகளுக்கு அய்ந்தறிவை மட்டும் படைத்தானாம். ஆகையால் நாம் கேட்பதெல்லாம் கடவுள் படைத்த விலங்குகள் மட்டும் ஒரே மாதிரியாக கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாமலிருக்கும் போது, மனிதனுக்கு சிந்திக்கின்ற ஆறாம் அறிவைக் கொடுத்தும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து ஒரே கடவுளை வணங்காமல் பல கோடி கடவுளர்களை வணங்குவது ஏன்??????
அன்று பகுத்துணர்ந்த பெரியார் சொன்னதையே,இன்று வேறுவிதமாக கற்பிதம் செய்து கொண்டு பகுத்தறிவு என்பது மனிதனுக்கு கடவுள் அருளிய ஆறாவது அறிவே. அதைக் கொண்டு சிந்தித்தால் கடவுளை அறிந்த்து கொள்ளலாம் என்ற மூடக்கருத்து இன்று நிலவிவருகிறது. அதாவது கடவுள் இருக்கின்றான் என சிந்திக்கின்ற அறிவாம் இது விலங்கினங்களுக்கு இல்லாததால் அவைகளுக்கு அய்ந்தறிவை மட்டும் படைத்தானாம். ஆகையால் நாம் கேட்பதெல்லாம் கடவுள் படைத்த விலங்குகள் மட்டும் ஒரே மாதிரியாக கடவுளைப்பற்றிய சிந்தனையே இல்லாமலிருக்கும் போது, மனிதனுக்கு சிந்திக்கின்ற ஆறாம் அறிவைக் கொடுத்தும் மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சிந்தித்து ஒரே கடவுளை வணங்காமல் பல கோடி கடவுளர்களை வணங்குவது ஏன்??????
Post a Comment