தந்தை பெரியார் சிறை புகு முன் விடுத்துள்ள அறிக்கை!
நான் இன்று தண்டனை அடையப்போவது உறுதி. ஏன் என்றால் இந்தியப் பிரதமர் என்னும் பதவியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் எனது வழக்கு நடக்கிற ஊராகிய திருச்சிகே வந்து எனது வழக்கு நடைபெறும் நியாயத்தல நீதிபதியாகிய செஷன்ஸ் ஜட்ஜ் (மாவட்ட நீதிபதி) அவர்கள் முன்னிலையில் இருந்து "பார்ப்பனர்களைக் கொல்லு என்று சொல்லி இருக்கிறவர்களைக் கண்டிப்பாகத் தண்டிக்க வேண்டும். அது மாபெரும் தேசத்துரோகக் குற்றமாகப் பாவிக்க வேண்டும். இந்தக் கருத்துடையவன் ஜெயிலில் (சிறையில்) இருக்க வேண்டியவன்!" என்பதாகச் சொல்லி தூண்டிவிடும்படியான அளவுக்குப் பேசிவிட்டுப் போயிருக்கும்போது, எந்த நீதிபதிதான் என்னைத் தண்டிக்காமல் விட்டுவிட முடியும்? அதுபோலவே 'அரசமைப்புச் சட்டம் எரித்ததாகக் குற்றம் சாட்டி ஜெயிலில் (சிறையில்) பிடித்து அடைத்து வழக்குத் தொடரப்பட்டிருக்கும் 4000 குற்றவாளிகள் பற்றியும், அந்தக் குற்றம் தேசத் துரோகக் குற்றமாகும், அவர்கள் கடினமாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள், ஜெயிலில் (சிறையில்) இருக்க வேண்டியவர்கள்!' என்பது ஆகவும் விசாரணை செய்துத் தீர்ப்புக் கூறவேண்டிய மாஜிஸ்திரேட் நீதிபதி முன்னிலையிலும் சொல்லிவிட்டுப் போயிருக்கும் போது எந்த ஜட்ஜ்தான், எந்த மாஜிஸ்திரேட்தான் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டியாமல் கடினமாகத் தண்டியாமல் விடமுடியுமா?
உதாரணமாக, பண்டிதநேரு அவர்கள் திருச்சிக்கும், தமிழ்நாட்டில் மற்ற ஊர்களுக்கும் வந்து இப்படியாகப் பேசுவதற்கு முன் 3 மாதம், 6 மாதம், 9 மாதம் போட்ட வழக்குகள் இவர் வந்து இந்தப்படிப் பேசியபின் 9 மாதம், 1 வருடம், 11/2 (ஒண்றரை வருடம்) 2 வருடம் வீதம் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆதலால் என்னை ஜட்ஜீ (நீதிபதி) தண்டிக்கப்போவது உறுதி.
நான் தண்டிக்கப்பட்டால் பொதுமக்களும் குறிப்பாக கழகத் தோழர்களும், "இந்தத் தண்டனையும் நம் கழக முயற்சிகளும் வெற்றிபெறும் நாள், பயனளிக்கும் காலம் நெருங்கிவிட்டது; பூக்க, காய்க்க ஆரம்பித்து விட்டது" என்று மகிழ்ச்சிப் பெருக்கோடு கழகப்பணி ஆற்ற ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்; பங்குகொள்ள வேண்டும்; ஆதரவளிக்க வேண்டும். எப்படியோ இது ஒரு இனப் போராட்டமாகப் பார்ப்பனர்கள் செய்துவிட்டார்கள்.
ஆதலால் கழகத் தோழர்களும், மற்றவர்களும் எவ்விதமான பலாத்காரமான, இம்சையான, கொல்வதான, நாசகரமான காரியம் எதையும் செய்ய முன்னடையாமல், மனதிலும் செய்ய நினைக்காமல் பிறர் சொல்லும்படியும் நடவாமல் சாந்தத்தோடும் சமாதானத்தோடும் கழகப்பணியில் ஈடுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
மற்றும் இன்று நம் தோழர்கள் 3000 பேருக்கு மேல் சிறைப்படுத்தப்பட்டுக் கடினமாகத் தண்டனைக் கொடுமை வழங்கப்பட்டிருப்பதற்கு முக்கியக்காரணம் நாம் செய்த எந்தவிதமான குற்றங்களுக்கு ஆகவும் அல்ல. அதாவது நாம் நம் உரிமைக்கு விரோதமாய், நீதிக்கு விரோதமாய், எவ்வித காரியமும் செய்துவிடவில்லை. யாருக்கும் எவ்விதமான கேடும் செய்துவிடவில்லை - ஏற்பட்டுவிடவுமில்லை.
இதை இன்றைய நம் மந்திரிமார்களே (தமிழக அமைச்சர்களே) சொல்லிவிட்டார்கள்; சொல்லியும் வருகிறார்கள். அப்படியிருந்தும் இந்த நாட்டுப் பார்ப்பனர்களின் கட்டுப்பாடான, பத்திரிகைகளின் கட்டுப்பாடான பொய் விஷமப் பிரசாரத்தின் காரணமாகவும், மத்திய அரசாங்க அதிபர்கள் ஆதிக்கக்காரர்களின் சர்வாதிகாரக்கட்டளைக்காவும் வேறு மார்க்கமில்லாமல் இணங்கி தீரவேண்டிய அரசியத்தின் காரணமாக ஏற்பட்டவைகளாகும்.
ஆதலால் நம் மக்கள் இந்த நடவடிக்கைகளுக்கும், சென்னை அரசாங்க மந்திரிகளுக்கும், பார்ப்பனரல்லாத போலீசு நீதி நிருவாக அதிகாரிகளுக்கும், எவ்வித பந்தமும் இல்லை என்பதாகக் கருதி அவர்களுக்கு வெறுப்பும் அதிருப்தியும் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பலாத்கார, இம்சையான, நாசமான, செயலிலும் ஈடுபடாமல், பார்ப்பனர்கள் தங்கள் கொடுமைச் செயலின் பயனை அனுபவிக்கும் வண்ணம் அதாவது தாங்கள் செய்தது தப்பு என்று உணரும் வண்ணம் அவர்களை நாம் வெறுப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும். அவர்கள் உறவை நீக்க வேண்டும். அவர்கள் சம்பந்தத்தை வெறுக்க வேண்டும். அவர்களுடன் எவ்வித உறவாடலும் சம்ந்தமும் கூடாது. கூடுமானவரை அவர்களுடன் பேசுவதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களை நாம் வேலைக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. பார்ப்பன வக்கீல்களைப் பகிஷ்கரிக்க (புறக்கணிக்க) வேண்டும். அவர்களிடம் எந்தவிதமான வியாபார சம்பந்தமும் வைத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் உண்டி நிலையங்களுக்கு அறவே நாம் செல்லக்கூடாது. அவர்களைக் கண்டிப்பாக நமது நன்மை தீமை ஆகிய காரியங்களுக்கு அழைக்கவோ சம்பந்தப்படுத்தவோ கூடாது. எல்லாவற்றையும் விட அவர்கள் பூசை செய்யும், தொண்டு செய்யும் எந்தக் கோவிலுக்கும் தொழுகை இடத்திற்கும் நாம் செல்லவே கூடாது. அவர்களுக்கு உணவுப் பண்டங்கள் விற்பதோ கொடுப்பதோ கூடாது. நம்முடைய வண்டி வாகனக்காரர்கள் அவர்களை (பார்ப்பனர்களை) ஏற்றக்கூடாது. இன்னும் உள்ள எவ்வித சம்பந்தங்களிலிருந்தும் நாம் விலகி நிற்க வேண்டும். எல்லாவற்றையும்விட பார்ப்பனப் பத்திரிகைகளைப் பகிஷ்காரம் (புறக்கணிப்புச்) செய்யும்படி பிரச்சாரம் செய்ய வேண்டும். மற்றும் இந்தப் பார்ப்பனர்களைப் போலவே வட நாட்டார்களையும் கருதவேண்டும். பார்ப்பனர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்பது மேலே எடுத்துக்காட்டிய அவ்வளவையும் வட நாட்டாருடனும் வைத்துக் கொள்ள வேண்டும். நடந்து கொள்ள வேண்டும். உடனடியான நிருமாணத்திட்டமாக வடநாட்டான் கடைகளை வியாபாரத்துறைகளில் பகிஷ்கரிக்க புறக்கணிக்க ஏற்பாடு செய்ய கழக செயற்குழுவைக் கூட்டி யோசித்து நடத்த வேண்டும். வட நாட்டான் கடைகளில் நம்மவர் வியாபாரம் செய்யக்கூடாது என்று நம்மவர்களை வடநாட்டான்கள் வியாபார தலங்களில் நின்று சமாதான முறையில் சாந்தமான தன்மையில் வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்விதக் காரியங்களை அரசாங்கத்தார் தடுத்தால் அதற்கு மாத்திரம் நாம் இணங்காமல் இருக்கலாம் என்பது எனது கருத்து.
தமிழ்நாடு முழுவதிலும் கன்னியாகுமரி மாவட்டம் முதல் எல்லா மாவட்டங்களிலும் கழகங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு இலட்சம் உறுப்பினகர்களையாவது சேர்க்க வேண்டும்.
அங்கத்தினர்களைச் சேர்ப்பதற்கு நல்லபடி படித்த பெண்களை மாவட்டத்திற்கு இருவர் அல்லது மூவர் வீதம் தேவையான அளவுக்கு அலவன்ஸ் (செலவுப்படி) கொடுத்து உறுப்பினர் சேர்க்கும் ஃபாரங்கள் (படிவங்கள்) இலட்சக்கணக்கில் அச்சடித்துக் கொடுத்து, சேர்க்கச் செய்ய வேண்டும்.
அவர்கள் மூலமே இயக்கப் புத்தகங்களையும் இந்த அறிக்கை முதலியவற்றையும் குறைந்த விலைக்கு விற்கச் சொல்ல வேண்டும். இந்தப் பெண்களுக்குச் சிவப்புக்கரை போட்டக் கருப்புச் சேலை, சிவப்புரவிக்கை சப்ளை செய்ய வேண்டும். திருமதி நாகரசம்பட்டி விசாலாட்சி அம்மையார், ஆனமலை ராமகிருஷ்னம்மாள் முதலியவர்கள் இந்த நிருவாகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிக் கொள்ளச் செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஒருவர் அல்லது இருவர் ஆண் தோழரை இக்காரியத்திற்கு ஏற்படுத்தி அவர்களுக்கும் தேவையான அவலன்ஸ் (செலவுப்படி) கொடுத்து இந்த வேலைகளைச் செய்யச் செய்ய வேண்டும். முழுநேரத் தொண்டர்களாக வரும் ஆண்களையும், பெண்களையும் ஏற்று அவர்களுக்கு உணவு போக்குவரத்துச் செலவு அளித்து மேற்படி வேலை செய்யச் செய்யலாம். ஒவ்வொருவரின் வேலையையும், செய்த அளவையும் அறிந்து வேலைக்குத்தக்கபடி உற்சாகப்படுத்தி அலவன்ஸ் (செலவுப்படி) கொடுத்து வேலை செய்யச் செய்ய வேண்டும்.
மற்றக் கட்சிக்காரர்களைப்பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, காங்கிரசைப் பற்றியோ, கோஷ்டியைப் பற்றியோ, மந்திரிகளைப் பற்றியோ எவ்விதக் குற்றம் குறைகளும் நம் பேச்சாளர்கள் யாரும் பேசக்கூடாது. அவர்கள் நம்மீது சுமத்தும் விஷமப்பிரசாரக் குற்றங்களுக்குக் கண்ணியமான முறையில் சமாதானம் சொல்லலாம். நமது இயக்கத்தின் தலைவர்கள் பொறுப்பானவர்கள் என்கின்ற முறையில் உயர் திரு.தி.பொ.வேதாசலம் அவர்களும், திருமதி. மணியம்மை அவர்களும் மற்றும் பல நண்பர்களும் வெளியில் இருக்கிறார்கள். திரு.வேதாசலம் அவர்கட்கு உடல் நலம் சரியாக இல்லாததால் முழுப்பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பது எனக்குக் கலக்கமாக இருக்கிறது. என்றாலும் தோழர்கள் அவர்களது கட்டளையை மதிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.
திருமதி. மணியம்மையார் கூடுமான அளவு தக்க பேச்சாளர்களுடன் நாடு முழுவதும் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். அங்காங்குள்ள நமது கழகம் அமைத்தல், மெம்பர் (உறுப்பினர்) சேர்த்தல், புத்தகம் அறிக்கை விற்றல் ஆகிய காரியங்களைக் கவனிப்பார்கள்.
நான் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் தண்டிக்கபட்டு சிறைவாசம் செய்து திரும்பிவரும் வாய்ப்பு இருந்து வந்து சேருவேனேயானால் ஒரு லட்சம் அங்கத்தினர், மூவாயிரம் கழகங்கள், 1500 ரூபாய்க்குக் குறையாத அறிக்கைப் புத்தக விற்பனைக் கணக்கு காண்பேனேயானால் நானும் மற்றும் அன்பான தோழர்கள் 4000 பேரும் சிறை சென்றது நல்ல பயன் அளித்தது என்றே கொள்ளுவோம்.
பல நண்பர்கள் நமக்குக் கூடுமான அளவு பொருளுதவி செய்ய முன்வந்திருக்கிறார்கள். முக்கியமாக ஒரு நண்பர் பெரும் அளவுக்கு அதாவது 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக வாக்களித்துள்ளார்.
இந்தச் சிறைப்பிடிப்பில் போக முடியாமல் வெளியில் இருப்பவர்களும், சிறைப்பிடித்து நாள் கணக்கில் வைத்திருந்து விடுதலையானவர்களும் மேற் குறித்த எனது வேண்டுகோள் பணிக்கு நல்ல ஆதரவு தரவும், எங்கள் தண்டனைக் கால அளவுக்கு முழு நேரத்தொண்டு செய்யவும், பலர் தாங்களாகவே முன் வந்திருக்கிறார்கள். தயாராய் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை நான் இதில் குறிப்பிடவில்லை யென்றாலும் அவர்களது முழு சம்மதத்துடன் பெயர்களை மணியம்மையார், திருவாளர்கள் வேதாசலனார், சுப்பிரமணியம், திருநாவுக்கரசு ஆகியவர்களுடன் யோசித்து வெளியிடுவார்கள். அவர்களைக் கழகத்தோழர்கள், அபிமானிகள் (பற்றாளர்கள்) ஆதரவாளர்கள் நல்லபடி பயன்படுத்திப் கொள்ள வேண்டுகிறேன்.
கடைசியாக பலாத்காரம், இம்சை, நாசவேலை, கலவரம், சாந்த சமாதான பங்கம், தனிப்பட்டவர்களிடம் நேரிடையான வாக்குவாதம், கலவரம் ஆகிய காரியங்கள் எதுவும் சிறிதும் தலைகாட்ட இடமில்லாமல் என்னுடைய தோழர்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படி ஏதாவது தாறுமாறாக நடந்து கொண்டால் அவர்கள் எனக்கு எதிரிகளும் கழகத்திற்குக் கேடு செய்பவர்களும் ஆவார்கள்.
என் பிறவி காரணமாக, என் இன இழிவுக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும் என் இனமக்களாகிய தமிழர்களுடையவும், என்னுடையவும், தாய்நாடான தமிழ் நாட்டை பனியா, பார்ப்பனர்களின் அடிமைத் தளையிலிருந்தும் சுரண்டலில் இருந்தும் மீட்டு சுதந்திரமாக வாழ வைக்க வழி செய்வதுமான 'தனித்தமிழ் நாடு' பெறுவதும் என் உயிரினும் இனிய கொள்கைகளாகும்.
அந்த இலட்சியங்களை அடையத் தகுந்த விலையாக என் உடல் பொருள் ஆவி ஆகிய எதையும் கொடுப்பதற்கு உடன்பட்டே நான் இப்போது சிறை செல்கிறேன், சென்று வருகிறேன்.
வணக்கம்! வணக்கம்!! வணக்கம்!!!
------------------------ 14-12-1957 பெரியார் ஈ.வெ.ரா. அறிக்கை : “விடுதலை”, 15.12.1957
3 comments:
aiyavin arumaiyana vaira varikal
tamizhar patriyum thani tamizhnaadu
patriyum. pathivirku paarattukkal
Aachariyarin Uravai?
aachariyarin iravai???? It shows the selfishness of the great leader.. May be Thamil Oviya has edited some part, to project periyar as a hipocrat
Post a Comment