தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வுக்கு இடமில்லை
இந்தியா முழுமையும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்திடும் முடிவை அகில இந்திய மருத்துவக் குழு தன்னிச்சையாக அறிவித்தது.
தொடக்கத்தில் அந்த முடிவுக்குப் பச்சைக் கொடி காட்டிய மத்திய அரசு- தி.மு.க. ஆளும் தமிழ்நாடு அரசு மற்றும் சில மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போர்க்கொடி உயர்த்தின.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டும் விட்டது.
இந்த நிலையில், மத்திய மருத்துவக் குழு உச்சநீதிமன்றம் சென்றது. மத்திய அரசு புதிய சூழ்நிலையைப் புரிந்துகொண்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மாநிலங்களைக் கலந்துகொண்டு முடிவு எடுக்கப்படும் என்று கூறியது. இந்த வழக்கில் தி.மு.க. அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.
மத்திய மருத்துவக் குழுவுக்கு அதிக அதிகாரமா? மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா? என்ற கேள்விக்கிடையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களும் தான்.
அரசுக்கு மேலாக சில குழுக்கள் இருந்துகொண்டு மேல் வருண மனப்பான்மையுடன் நடந்துவருகின்றன. மக்களுக்கு நேரடியாகத் தொடர்பு கொள்ளவேண்டியதும், பதில் சொல்ல வேண்டியதும் அரசுதானே தவிர, மருத்துவக் கவுன்சில் போன்ற அமைப்புகள் அல்ல - அவர்கள் கொழுத்த சம்பளத் தைத் தின்றுகொண்டு குளிர்பதன அறையில் சொகுசான அனுபவத்தில் திளைக்கக் கூடியவர்கள்.
நியாயமாக இதுபோன்ற குழுக்களில் கூட அனைத்துப் பிரிவினருக்குமான பிரதிநிதித்துவம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
பிரதமருக்கு ஆலோசனை கூறிடக் குழு ஒன்று உண்டு (முடிறடநனபந ஊடிஅஅளைளடி) அதில் பார்த்தாலும் சமூகநீதி என்றால், இளக்காரமாகப் பார்க்கும் மெத்தப் படித்த பேர்வழிகள்தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அனுமதி வழங்காத நிலையில், மருத்துவக் கவுன்சில் தானடித்த மூப்பாக நடந்துகொள்வது சரியானதுதானா?
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில அரசுகளே மருத்துவக் கல்லூரிகளை நிதி நெருக்கடியையும் சந்தித்து நடத்திக்கொண்டு இருக்கின்றன.
அந்தந்த மாநில சூழலுக்கு ஏற்ப மாணவர்களைத் தேர்வு செய்வது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொறுப்பாகும். இதில் தலையிடுவதற்குத் தார்மீக ரீதியில் எந்தவித உரிமையும் மருத்துவக் கவுன்சிலுக்குக் கிடையாது.
மத்திய தொகுப்பு என்று கூறி, பிற மாநிலங்களில் உள்ள மொத்த எண்ணிக்கையில் (எம்.பி.பி.எஸில்.) 15 சத விகிதத்தை எடுத்துக் கொள்கிறது. முதுநிலைப் படிப்புக்கோ 50 விழுக்காட்டைக் கபளீகரம் செய்து கொள்கிறது.
ஒட்டகத்தைக் கூடாரத்துக்குள் நுழையவிட்டால், அதற்குப் பிறகு கூடாரமே அதன் கைக்குப் போய்விடும்.
மாநில மருத்துவக் கல்லூரிக்கான இடங்களில் சில சதவிகிதங்களை மாநில அரசுகள் கொடுக்கப் போய், கடைசி யில் உள்ளதும் போச்சே என்று கைபிசையும் நிலை ஏற்பட்டு விடுகிறது.
இந்தத் தொல்லையிலிருந்து நிரந்தரமாக விடுபட கல்வி என்பது பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படவேண்டும். நெருக்கடி நிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்து கல்வி பொதுப் பட்டியலுக்குக் கவர்ந்து செல்லப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நுழைவுத் தேர்வு கிடையாது என்று அறுதியிட்ட பின்பு, சென்னை உயர்நீதி மன்றமும் அந்தச் சட்டத்துக்கு அங்கீகாரம் அளித்தபின், வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டில் திணிக்க இவர்கள் யார் என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.
கடந்த திங்களன்று உச்சநீதிமன்றம் நுழைவுத் தேர்வு குறித்து ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்புக் குறித்துத் தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்ட தகவலுக்கும், நேற்று நாளேடுகளில் வெளிவந்த தகவலுக்கும் முரண்பாடாக உள்ளது.
நுழைவுத் தேர்வை நடத்துவதா? கூடாதா? என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும் என்று உச்சநீதிமன்றம் சொன்னதாகத் தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. நேற்று காலை ஏடுகளின் சேதியோ நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதிமன்ற உத்தரவு என்று வெளிவந்துள்ளது.
இதற்கிடையே நேற்று பிற்பகல் - நுழைவுத் தேர்வு கிடையாது; கல்வித் துறை அறிவிப்பு என்று தொலைக் காட்சிகள் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டன.
இன்று காலை செய்தியோ வேறுவிதமாக உள்ளது. நுழைவுத் தேர்வு நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இருந்தால் நடத்தலாம். அப்படிக்கில்லாமல் மத்திய அரசின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவதாகக் கருதினால் மத்திய அரசின் அறிவுரையைக் கேட்டு செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளதாகச் செய்தி வெளியாகி யுள்ளது.
இது என்ன தீர்ப்பு?
இதைவிடகுழப்பமான உத்தரவைக் கண்டுபிடிப்பது கடினமே!
எது எப்படியாக இருந்தாலும் நுழைவுத் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இடம் கிடையாது - கிடையவே கிடையாது. காரணம், சமூகநீதிக் கதிரவன் தந்தை பெரியார் உதித்த மண் இது. அவர் கண்ட திராவிடர் கழகம் சமூகநீதி வாளினைக் கையில் இன்றளவும் ஏந்தி நிற்கும் பூமியாகும் - எச்சரிக்கை!
-----------------"விடுதலை” தலையங்கம் 9-3-2011
1 comments:
தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு கிடையாது
தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளுக்கு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு நுழைவுத் தேர்வு நடத்துவது என இந்திய மருத்துவக் கழகம் எடுத்த முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 18.2.2011 அன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் வழக்கறிஞர் திரு.கோபால் சுப்பிரமணியம் அவர்கள் இந்திய மருத்துவக் கழகத்திற்கு இந்திய மருத்துவக் கழகத்தின் பொது நுழைவுத் தேர்வு சம்பந்தமான அறிவிக்கைக்கு எந்த ஒப்புதலும் மத்திய அரசு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மத்திய அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியுள்ளத எனக் கூறியுள்ளார். மேற்படி வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகமும் மத்திய அரசும் முரண்படான கருத்தைக் கொண்டிருப்பதால் இரு தரப்பினரும் அமர்ந்து கலந்தாலோசித்து இது குறித்து ஒருமித்த முடிவெடுப்பது நல்லது என்று தெரிவித்தது.
இந்த வழக்கு மீண்டும் 7.3.2011 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய மருத்துவக் கழகத்தின் வழக்கறிஞர் மருத்துவப் படிப்பிற்கான மாற்றியமைக்கப்பட்ட சட்ட நெறிமுறைகள் 21.12.2010 அன்று அறிவிக்கை செய்யப் பட்டது என்றும், மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறை களின் படி, மத்திய அரசின் முன் அனுமதியுடன் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடர்ந்து மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கென இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அதன் மாற்றியமைக்கப் பட்ட நெறிமுறைகளை அமல்படுத்துவதற்குத் தடை யாணை பெற்றுள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் இந்திய மருத்துவக் கழகத்தின் மாற்றியமைக் கப்பட்ட நெறிமுறைகள் சட்டப்படி செல்லத்தக்கதா என்ற கேள்வி எழவில்லை என்று கூறியுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட நெறிமுறைகளால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமாயின் அவர்கள் அதனை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப் பட்டு 2007-08 ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்தவ படிப்பிற்கு மாணவர்களை சேர்க்கும் தற்போதுள்ள நடைமுறை தொடரப்பட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 15.8.2010 இல் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது. தமிழ்நாடு அரசு எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு மேல்நிலைக்கல்வி தேர்வில் மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை அனுமதிப்பது என்ற நிலையை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவிக்கை குறித்து இடைக்கால தடை உத்தரவும் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி அன்று தமிழக அரசால் பெறப்பட்டுள்ளது.
11.1.2011 முதல் 13.1.2011 வரை அய்தராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் மருத்துவ படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரப்படமாட்டாது என முடிவெடுக்கப் பட்டது.
அகில இந்திய அளவில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து ஏற்கெனவே இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிவிக்கையினை திரும்பப் பெற வேண்டும் என்று 3.1.2011 அன்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசின் கொள்கையின்படி, எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு ஏதும் இன்றி தற்போது உள்ள நிலையிலேயே இவ்வாண்டும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
விடுதலை 10-3-11
Post a Comment