மத அடிப்படைவாதம்!
மத அடிப்படைவாதம் (Fundamentalism) எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் அது ஆபத்தானது தான். கண்டிக்கப்பட வேண்டியதுதான். அது அந்த மதத்துக்கேகூட ஊறு விளைவிக்கக்கூடியதுதான். இஸ்லாமிய மதத்தில் தாலிபான்கள் என்று சொல்லப்படுபவர்களின் நடவடிக்கையால் அம் மதத்தின் மீதான மதிப்பை பெரிதும் சேதப் படுத்திக் கொண்டு வருகிறது.
உலகின் பல நாடுகளில் இந்தத் தாலிபான்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். அண்மைக் காலமாக பாகிஸ்தான் இந்த அமைப்பினால் பெரும் இடர்ப்பாட்டுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சரவையில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஷாபாஸ்பட்டி ஆவார். இவர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்.
மத நிந்தனை நடவடிக்கை தொடர்பான சட்டத்தில் திருத்தம் ஒன்றை பாகிஸ்தான் மக்கள் கட்சி உறுப்பினர் ஷெர்ரி ரகுமான் முன்மொழிந்தார். அதனை சிறு பான்மை விவகாரத்துறை அமைச்சரான ஷாபாஸ்பட்டி வழிமொழிந்தார்.
இதனால் கோபம் கொண்ட தெரிக் - ஏ - தாலிபான் பிரிவைச் சேர்ந்தவர்கள் கிறித்துவரான, சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சரான அவரை பாதுகாப்பு வலிமையாக உள்ள அமைச்சரின் குடியிருப்புப் பகுதிக்குள்ளேயே புகுந்து சுட்டுக் கொன்றனர் என்பது எத்தகைய கொடுமை!
இந்த ஆண்டு சனவரி 4ஆம் தேதி இதே காரணத்துக்காக ஒரு கொலை நடந்தது. பஞ்சாப் ஆளுநர் சல்மான்தகீர் மத நிந்தனை நடவடிக் கைக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்துகள் சொன்ன காரணத்துக்காகச் சுட்டுக் கொல்லப் பட்டார்.
அதனைத் தொடர்ந்து தன் உயிருக்கும் ஆபத்து நேரலாம் என்று சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் அச்சம் தெரிவித்திருந்தார். அவர் அச்சப்பட்டபடியே சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்படி ஓர் ஆபத்து இருக்கும்பொழுது அமைச்சருக்கு ஏன் போதிய பாதுகாப்புக் கொடுக்கப்பட வில்லை என்ற கேள்வி நியாயமானது.
அவர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள் இருவரும் இல்லை என்பது வருத்தத்துக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இதில் இரு பாதுகாப்பு வாகனங்கள் வேறு - மத அடிப்படைத் தீவிரவாதத்தின் முன் இவை எல்லாம் எம்மாத்திரம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
பாகிஸ்தானில் இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவில் இருக்கின்ற சங்பரிவார் என்கிற தாலிபான்களுக்குத் தீனி போட்டதுபோல் ஆகி விடும்.
உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. கருத்துகள், வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த மாற்றத்துக்கு மதமாக இருந்தாலும் தயாராக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விடும்.
முகம்மது நபிகள் சீர்திருத்தக்காரர் என்று நம்புவது உண்மையாக இருந்தால், சீர்திருத்தத்தைக் காலந்தோறும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே! மாறுதலே கூடாது என்றால், நபிகள் நாயகம் அவர் காலத்தில் நிலவி வந்த ஆயிரக்கணக்கான கடவுள்களை இல்லை என்று சொல்லியிருக்க முடியுமா?
அப்பொழுதும் அவருக்கு எதிர்ப்பு இருந்தது என்பது உண்மைதான். அவர் விரட்டப் பட்டு இருக்கின்றார் என்றாலும் அவர் சீர்திருத் தத்தை ஏற்றுக் கொண்டதாலும், வலியுறுத்திய தாலும்தானே அந்த நிலை அவருக்கு ஏற்பட்டது?
மத அடிப்படைவாதம் பேசுவோர் இதுபற்றிச் சிந்திக்க வேண்டாமா?
மாற்றம் என்பதுதான் மாறாதது என்று சொல்லுவார்கள். அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதது மதமாக இருந்தாலும், எந்த அமைப்பாக - நிறுவனமாக இருந்தாலும் ஒரு தேக்க நிலையை அடைந்தே தீரும்.
இருக்கிற மதங்களிலே பிற்காலத்தில் தோன்றியது - இஸ்லாமிய மதம் என்பதால் அது சற்று சீர்திருத்தப் பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்தப் பெருமையைக் குலைக்கும் வகையில் தாலிபான் அமைப்பினர் நடந்து கொள்வது - அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் மார்க்கத்துக்கும், நபிகள் நாயகத்துக்கும் செய்யும் துரோகமாகத்தான் கருதப்பட முடியும்.
உலகில் மிகப் பெரிய மதங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த வழிகாட்டிகள், சான்றோர்கள் இந்தச் சூழலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
பாகிஸ்தானிலும் நாத்திக எண்ணங்கள் அரும்பி வருகின்றன என்பதும் நல்ல சமிக்ஞையே!
-------------------" விடுதலை” தலையங்கம் 4-3-2011
2 comments:
எனக்கு தெரிந்து சமீப காலங்களில் தமிழ் ஓவியா வலைப்பூவில் வந்த
சிறந்த கட்டுரை இது தான்.
மத அடிப்படைவாதம் (Fundamentalism) எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் அது ஆபத்தானது தான்.
சிறந்த கருத்து. தமிழ் ஓவியா இதுவரை இஸ்லாமிய மத மத அடிப்படைவாதத்தை கண்டிக்காதது வருத்தம்.
சகோ.தமிழ் ஓவியா...//உலகில் மிகப் பெரிய மதங்களில் ஒன்றாகக் கருதப்படும் இஸ்லாம் மதத்தினைச் சேர்ந்த வழிகாட்டிகள், சான்றோர்கள் இந்தச் சூழலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.//--மிக்க நன்றி.
காட்டுமிராண்டிகளின் தேசமா பாகிஸ்தான்...? --இந்த சம்பவத்தை நான் கண்டித்து போட்ட பதிவு.
அப்புறம் மிக முக்கியமான ஒரு விஷயம்... சகோ.தமிழ் ஓவியா..!
//அடிப்படைவாதம்//--இதை நீங்கள் தவறாக புரிந்துள்ளிர்கள். ஏனெனில் //தாலிபான்கள்// மத அடிப்படைவாதிகள் அல்ல.
புரியவில்லை என்றால்...
"கடவுள் இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்"--இது பெரியார் அவர்களின் அடிப்படைவாதம்.
"நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்"--இது தங்களின் அடிப்படைவாதம்.
இதை கொள்கையாக மிகச்சரியாக நீங்கள் பின்பற்றுபவர்கள் என்றால் நீங்களும் ஒரு "பெரியாரிய அடிப்படைவாதி".
நான் இஸ்லாம் எனும் கொள்கையை வாழ்க்கை நெறியாக பின்பற்றுகிறேன். அதில் உள்ள அடிப்படைகளை பின்பற்றுபவன், நான் ஒரு "இஸ்லாமிய அடிப்படைவாதி".
இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு எதிரானவர்கள் அதன் விரோதிகள். அவர்கள்தான் கொலை செய்தார்கள். அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல.
சாமி கும்பிட்டு தன் சாதியை உயர்வாகவும் மற்றவனை தாழ்த்தியும் திறியும் ஒருவனை... அவன் தி.க. வில் இருந்தாலும்... அவனை எப்படி "பெரியாரிய அடிப்படைவாதி" என்பது...???
அதேபோல ஏனெனில் தாலிபான்கள், 'முஸ்லிம் கொலைகாரர்கள்', 'குண்டு வைக்கும் முஸ்லிம்கள்', 'முஸ்லிம் பெல்ட் பாம் பயங்கரவாதிகள்' எல்லாம் "மத அடிப்படைவாதிகள்" அல்ல. அவர்கள் மத அடிப்படையை பின்பற்றி இருந்திருந்தால் மனிதர்களாகி...முஸ்லிம்களாகி இருந்திருப்பர், சகோ.
தயவு செய்து மாற்றி யோசியுங்கள் சகோ...
இப்படிக்கு
ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி.
Post a Comment