Search This Blog

26.1.11

வீரமணியின் வாழ்வும் - பணியும் முனைவர் பட்ட ஆய்வு

வீரமணியின் வாழ்வும் - பணியும் எனும் தலைப்பில்

பேராசிரியர் நம்.சீனிவாசனின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு
கழகப் பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டு

மிகச் சிறப்பாக தயாரிக்கப்பட்டதாக நேர்முகத் தேர்வு தேர்வாளர்களின் ஒருமித்த பாராட்டு

வீரமணியின் வாழ்வும் - பணியும் எனும் தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களால் எழுதப்பட்ட முனைவர் (பிஎச்.டி.) பட்டத்துக்கான ஆய்வேடு - கடினமான உழைப்பில் மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளதாக நேர்முகத் தேர்வாளர்கள் பெரிதும் பாராட்டினர். கழகப் பொறுப்பாளர்கள், பேராசிரியர் நம்.சீனிவாசன் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்துப் பாராட்டினர்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரி வளாகத்தில் , பாண்டித்துரைத் தேவர் அரங்கில், பேரா. நம். சீனிவாசன் அவர்களுக்கு "வீரமணியின் வாழ்வும் - பணியும்" என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான வாய் மொழித் தேர்வு 24.1.2011 காலை 10 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி முதல்வரும், ஆய்வு நெறியாளரு மாகிய முனைவர் விஜயன் தலைமை தாங்கினார். புறத் தேர்வாளராக காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தின் தமிழ்த்துறை தலைவர் பாண்டி கலந்துகொண்டார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு தொடங்கிய நிகழ்வில் பேரா. நம். சீனிவாசன் தன் ஆய்வினை விளக்கினார்.

வீரமணியின் வாழ்வும் - பணியும்" என்ற தலைப்பை எடுத்துக்கொண்ட காரணத்தை விளக்கினார். திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி ஒரு சமூக இயக்கமான திராவிடர் கழகத்தின் தலைவர். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், கல்வி நிறுவனங்களின் தலைவர், சமூக விடுதலைக்கான போராளி எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் . அவருடைய வாழ்க்கை என்பதும், பணி என்பதும் இன்றைய மாணவர்களுக்கு மிகப்பெரிய முன்னுதாரணமாகும். 340 பக்கங்கள் உள்ள இவ்வாய் வேடு 5 இயல்களைக் கொண்டது .

முதல் இயல் வீரமணி அவர்களின் வாழ்க்கைத் தகவல்கள் எனக் குறிப்பிட்டு 70 பக்கங்களில் அவர் ஆய்வேட்டில் குறிப்பிட்டுள்ள தமிழர் தலைவர் அவர் களின் வாழ்க்கைத் தகவல்களை அவையோர் அறிந்து கொள்ளும்வண்ணம் மட மடவென எவ்விதக் குறிப்பும் இல்லாமல் விளக்கினார்.

தமிழர் தலைவரின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, 10 வயதில் மேடையில் பேசத் தொடங்கு தல், அவருக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் - எடைக்கு எடை வெள்ளி, எடைக்கு எடை தங்கம், அவர் பெற்ற பட்டங்கள், தங்கப் பதக்கங்கள், பொது வாழவில் அவர் மீது ஏவப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் பட்டியல், சந்தித்த விபத்துகள், பிற தலைவர்களோடு தொடர்பு, பிற பத்திரிகைகளில் அவரைப்பற்றி வந்துள்ள கட்டுரைகள், அவருடைய பண்பு நலன் எனப் பட்டியலிட்டு தந்துள்ளேன் எனக் குறிப்பிட்டபோது அவையில் அமர்ந்திருந்த மாணவ - மாணவிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

இரண்டாவது இயல் "வீரமணியின் பணிகளில் தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி " எனக் குறிப்பிட்டு தமிழருக்காக, தமிழ் நாட்டுக்காக , தமிழ் மொழிக்காக தந்தை பெரியாரின் வழியில் தமிழர் தலைவர் ஆற்றி வரும் அரும் பணிகளைப் பட்டியலிட்டார்.

மூன்றாவது இயல் "வீரமணியின் எழுத்தும் பேச்சும்" என்பதில் தமிழர் தலைவர் அவர்கள் எழுதியுள்ள புத்தகங்கள் 39, அவர் பேசிய பேச்சுகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்கள் 45 எனக் குறிப்பிட்டு அவரின் எழுத்தினைப் பற்றி, பேச்சாற்றல் பற்றி இவ்வியலில் விளக்கியுள்ளேன் எனக் கூறினார்.

நான்காவது இயல் " வீரமணியின் சமூகப் பணிகள் " எனக் கூறி , சமூக நீதிக்காக தமிழர் தலைவர் அவர்கள் பாடுபட்டதுதான் மற்ற பணிகளை விட அதிகம் என்பது எனது ஆய்வின் முடிவு எனக் குறிப்பிட்ட ஆய்வாளர் நம்.சீனிவாசன் அதற்கான ஆதாரங்களை பல்வேறு ஆய்வுத் தரவுகளோடு விளக்கினார்.

மண்டல் கமிசன் அமலாக்கம், 31-சி சட்டம் போன்றவற்றில் தமிழர் தலைவரின் அரிய பணிகளை பல்கலைக் கழக மாணவ மாணவிகளுக்கும், பேராசிரியர்களுக்கும் அற்புதமாய் விளக்கினார். அய்ந்தாவது இயலான 'வீரமணியின் நிருவாகப் பணிகள் "என்பது விடுதலை போன்ற பத்திரிகை நிருவாகம், இயக்க நிருவாகம்- திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி எனப் பல்வேறு பிரிவுகள், கல்வி நிருவாகம், பெரியார் திடல் நிருவாகம் எனப் பல்வேறு நிருவாகப் பணிகளை இவ்வியலில் விளக்கியுள்ளேன்.

முடிவாக வீரமணி அவர்களோடு கண்ட பேட்டியினை ஆய்வேட்டில் இணைத்துள்ளேன் எனக் குறிப்பிட்டு தனக்கு கொடுக்கப்பட்ட 20 நிமிடத்தில் நிறைவான உரையினை ஆய்வாளர் பேரா. நம். சீனிவாசன் நிகழ்த்தினார். பின்னர் கேள்வி நேரம் ஆரம்பித்தது.

பார்வையாளர்கள் பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்தனர்.அனைத்து கேள்விகளுக்கும் நறுக்குத் தெறித்தாற்போல் பதில்களை பேரா.நம். சீனிவாசன் அளித்தார். (கேள்வி-பதில் தனியாக வரும்). பின்னர் புறநிலைத் தேர்வாளர் முனைவர் பாண்டி தன் மதிப்புரையை அளித்தார்.

"தமிழ் மொழிக்காக , தமிழ் இனத்துக்காகப் பாடுபடும் ஓர் அற்புதமான தலைவரைப் பற்றிய ஆய்வேடு இது. சிறப்பான களப்பணி செய்து, பல அரிய தகவலகளைத் திரட்டி ஓர் ஆய்வாளர் தந்திருக்கும் ஆய்வேடு. இளமைக் காலத்தில் தலைவர் வீரமணி அவர்கள் எப்படியெல்லாம் துன்பப்பட்டார், எப்படி உதவியெல்லாம் பெற்று படித்தார் என்பதனை ஆய்வேட்டில் நான் படித்தபொழுது கண் கலங்கினேன். சிறப்பான களப்பணி மூலம், அருமையான அணுகுமுறை மூலம், அருமையான கருதுகோள் அடிப்படையில் வாழுகின்ற ஒரு போராளியைப் பற்றிய ஆய்வேடு இவ்வாய்வேடு; இளைஞர்களுக்கு முன்னு தாரணமாகத் திகழும் ஒரு தலைவரைப் பற்றிய ஒரு முன்னுதாரண ஆய்வேடு. ஆய்வாளரின் கடுமையான உழைப்பு ஆய்வேட்டின் ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகின்றது.

நல்ல அருமையான ஆற்றொழுக்கு நடை, நடையில் எந்த இடத்திலும் தடையேயில்லை. இலக்கணப் பிழையோ, சொற்றொடர் பிழையோ எந்த இடத்திலும் இல்லை. ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காகவே தேடித் தேடிப் பார்த்தேன். இல்லை. பிழையே இல்லை. நல்ல இலக்கண மரபோடு அமைந் திருக்கின்ற ஆய்வேடு. தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிசமாய் அமைந்திட்ட தலைவரைப் பற்றிய மிக நல்ல ஆய்வேடு எனக் குறிப்பிட்ட தேர்வாளர் ஆய்வாளரான பேரா.நம். சீனிவாசன் அவர்களிடம் கேள்விகள் கேட்டார்.

அவையோர் மகிழ்வுற, தெளிவுற பதில்களை அளித்தார் ஆய்வாளர். முடிவில் புற நிலைத்தேர்வாளர் முனைவர் பாண்டி அவர்கள், ஆய்வாளர் எவ்வளவு தூரம் ஆழ்ந்து முகிழ்ந்து இவ்வாய்வேட்டை உருவாக்கி இருக்கின்றார் என்பதனை ஒவ்வொரு பதிவிலும், ஒவ்வொரு பதிலிலும் காண முடிகின்றது. என்வே இது மிகச்சிறந்த ஆய்வேடு என மதிப்பீடு அளிக்கின்றேன் என தனது மதிப்பீட்டு உரையை முடித்தார்.

முடிவில் நெறியாளர் முனைவர் விஜயன் அவர்கள், புற நிலைத் தேர்வாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் இது மிக சிறந்த ஆய்வேடு என மதிப்பிடப்பட்டு, முனைவர் பட்டம் பேரா.நம். சீனிவாசன் அவர்களுக்கு அளிக்க மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு பரிந்துரைக்கிறேன் என அறிவித்தார்.

பலத்த கைதட்டல்களுக்கு இடையில் நன்றியை எதிர்பார்க்காது நாளும் உழைக்கும் அற்புதத் தலைவருக்கு, தனது நன்றிக்கடனாய், படித்த தமிழர்களின் நன்றிக்கடனாய் அற்புதமான ஆய்வேட்டினை, தனது உன்னதமான உழைப்பால் அளித்த பேரா. நம். சீனிவாசன் அவர்களுக்கு, தி.க. தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர் தே.எடிசன்ராசா, ப.க. மாநிலத்தலைவர் வா. நேரு, மண்டலத் தலைவர் வே.செல்வம், பொறியாளர் சி. மனோகரன், ஓய்வுபெற்ற நீதிபதி பொ. நடராசன், தி.மு,.க. இலக்கிய அணிஸ் செயலாளர் ச.அமுதன், மதுரை முனியசாமி, ப,க. மாவட்ட செயலாளர் பா.சடகோபன் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டி, போற்றி மகிழந்தனர். நிகழ்வில் மதுரை வானொலி இயக்குநர் முனைவர். சுந்தர. ஆவுடையப்பன், மன்னர் கல்லூரி முதல்வர் ச.நேரு, முனைவர் இராஜா.கோவிந்தசாமி, பேரா.அழகேசன் எனப் பல சான்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

-------------------- "விடுதலை” 26-1-2011


2 comments:

Anonymous said...

அன்புராஜீன் வாழ்வும் பணியும் எனும் தலைப்பில் ஆய்வு எதுவும் ந்டக்கிறதா?

கொசுத் தொல்லை தாங்க முடியல...நாராயணா!

http://periyardk.org/pm.php?subaction=showfull&id=1294078905&archive=&start_from=&ucat=1&

தமிழ் ஓவியா said...

தமிழினத்திற்காக பாடுபடும் யாரா இருந்தாலும் ஆட்வு செய்வோம். அது அன்புராஜாக இருந்தாலும் சரி, உங்க ஆத்தா அப்பனா இருந்தாலும் சரி,நீ, நான் அனைவரும் ஆய்வுக்கு உட்பட்டவர்களே.


நாகரிகமா விமர்சித்தால் நாகரிகமா பதில் வரும்.

நாராயணன் என்ன கொசு ஒழிக்கும் தலைவனா?