Search This Blog

7.1.11

நாத்திகம் என்பது ஒரு நன்னெறி


திருச்சியில் சந்திப்போம் - வாருங்கள்!

செய்தியாளர்களை நேற்றுச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திருச்சியில் நடைபெற உள்ள உலக நாத்திகர் மாநாட்டின் நோக்கம் குறித்து சில அரிய கருத்துகளை எடுத்துக்காட்டுடன் விளக்கினார்.

இன்றைக்கு மதம்கூட பகுத்தறிவின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என்று அவர் கூறிய கருத்து முக்கியமானதாகும்.

நம்பு - அதுதான் மதம் கூறும் முதல் தாரக மந்திரம்! நம்பு என்ற சொல்லுக்குப் பொருள் - ஆராயாதே- அப்படியே ஏற்றுக் கொள்! என்பதாகும்.

நம்பினால் நடராஜா, நம்பாவிட்டால் எமராஜா என்ற பழமொழிகூட நாட்டில் வெகு காலமாக நடமாடிக் கொண்டும் வருகிறது.


அப்படிப்பட்ட மதம்கூட காலத்தின் வளர்ச்சியில் பகுத்தறிவின் தாக்கத்திற்கு ஆளாகித் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பது அடிக்கோடிட்டுக் குறிப்பிடத் தக்கதாகும்.


மக்கள்தொகைப் பெருக்கம் என்பது - இன்றைக்கு மானுடத்திற்குப் பெரும் அறைகூவலாக இருந்து வருகிறது. கடவுள்தான் கரு உருவாவதற்கும் காரணம், பிண்டம் பிடித்துப் போடுபவன் ஆண்டவன்தான்; அதில் தலையிடக்கூடாது; அதனைக் கட்டுப்படுத்துவது கடவுளுக்கு விரோதமான காரியம் என்று மதங்கள் கூறி வருகின்றன.


மக்கள்தொகைக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்து, கர்ப்ப ஆட்சி குறித்து, இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன் சிந்தித்த தொலைநோக்காளர் தந்தை பெரியார் அவர்களே!


அன்றைக்கு அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அநேகம். இன்று அரசாங்கமே மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்தவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டது. நாம் இருவர், நமக்கு இருவர் என்ற நிலையையும் கடந்து, நமக்கு ஒருவர் என்ற சிந்தனை வளர்ச்சியை மனிதகுலம் தொட்டு விட்டது.

திருமண நிகழ்ச்சிகளில்கூட குடும்பக் கட்டுப்பாட்டின் அவசியம் குறித்துத் தந்தை பெரியார் பேசுவார்.அதன் விளைவுதான் தமிழ்நாட்டில், மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாடு உணர்வு மேலோங்கி இருப்பதற்கு முக்கியக் காரணமாகும்.

‘Birth Pangs’ எனும் தலைப்பில் தி வீக் என்னும் ஆங்கில வார இதழ் (22-3-1992) ஒரு சிறப்புக் கட்டுரையைத் தீட்டி யிருக்கிறது.

“The State had infact benefited from an awareness movement set in motion by the social reformer Periyar E.V.Ramaswamy Naicker in the mid 20s. Shocking a caste-ridden society, which he revelled in doing, he had ridiculed the concept of a woman being just a child bearing machine. He spoke powerfully for contraception,status of women and late marriage. Poet - patriot - Bharatidasan at about the same time wrote poems on prevention of unwanted pregnancies and the need to check population growth. This was long before Family Planning Programmes were even thought out”
- என்று தி வீக் எழுதியது.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி யாரும் நினைத்துப் பார்க்காத கால கட்டத்திலேயே அது பற்றி பெரியார் பேசினார்.

பெண்கள் என்ன குழந்தைகள் பெறும் இயந்திரமா என்று கேட்டார். பாரதிதாசன் என்ற கவிஞரும் அதனையொட்டி அந்தக் காலகட்டத்திலேயே குடும்பக் கட்டுப்பாடு பற்றி கவிதைகள் எழுதியுள்ளார் என்று எழுதியுள்ளது தி வீக் இதழ் என்றால், இந்த இயக்கத் தின் தொலை நோக்குப் பார்வையையும் மானுடத்தின் மீது கொண்டி ருந்த அக்கறையையும் தெரிந்து கொள்ளலாம். தந்தை பெரியாரின் இந்தக் கொள்கையை இன்று உலகமே ஏற்றுப் பின்பற்றும் நிலை!

கடவுளை மறுக்கும் நாத்திகர்கள் என்று இதனால் தூற்றப்பட்டதும் உண்டு. மதம் இதில் மார்தட்டி எதிர்ப்புக் குரல் கொடுத்தது.

இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? உலகக் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் தலைவரும், வாடிகன் நகரின் ஆட்சித் தலைவருமான போப், மதத்தின் பழைய அந்தப் பிடிப்பிலிருந்து வெளியேறி, மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கிறித்துவர்கள் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியுள்ளதை செய்தியாளர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

இதன் பொருள் - மதமும்கூட பகுத்தறிவின், நாத்திகத்தின் தாக்கத்திற்கு ஆளாகித் தீரவேண்டிய அவசியத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதாகும்.

பகுத்தறிவு என்பதும், நாத்திகம் என்பதும் ஏதோ எதிர்மறை கொள்கை என்று பிரச்சாரம் செய்யப்பட்டு வருவது தவறு. நாத்திகம் என்பது ஒரு நன்னெறியாகும்; பகுத்தறிவு என்பது ஒரு வாழ்க்கை முறையாகும்- சிறந்த செப்பனிடப்பட்ட பாதையாகும்.

உலக நாத்திகர் மாநாட்டை திருச்சியில் திராவிடர் கழகம் நடத்துவதற்குக் காரணம் - மானுடத்தை நேர் வழியில், நிம்மதியான தன்மையில், வாழ்க்கையின் மகிழ்வை நுகரச் செய்வதற்காகவேயாகும். திருச்சியில் சந்திப்போம் - வாருங்கள்!


திருச்சியில் சந்திப்போம் - வாருங்கள்! (2)

நாத்திகர் மாநாடு ஏன் என்ற செய்தியாளர் விடுத்த வினாவுக்கு நாத்திகத்தின் நன்னெறி குறித்து விளக்கம் தந்தார் தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

கோயில்கள் பெருகுகின்றன - விழாக்களுக்கு மக்கள் கூடுகின்றனர். கோயில் உண்டியல்கள் நிரம்பி வழிகின்றன என்பதால் நாட்டில் ஆத்திகம் பெருகிவிட்டது; நாத்திகம் தோல்வி அடைந்து விட்டது என்று பொருள் அல்ல.

பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது என்றார் காஞ்சி சங்கராச்சாரியார். பக்திப் பழமாகி வாழ்நாள் எல்லாம் பக்திப் பிரச்சாரத் திலேயே காலங் கழித்த திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன கருத்தும் மிக முக்கியமானது.

கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக்குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால், ஒழுக்கமும் இருக்கிற தென்று கொள்ளலாமே!

வாரியார் பதில்: ஊ ஹும்...

அப்படியில்லை.. பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே இல்லை...

-------------(ஆனந்தவிகடன் 22.12.1991)

இதற்கு வேறு எங்கும் சாட்சியம் தேட வேண்டாம். காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே கண்கண்ட சாட்சியும், காட்சியுமாகும். எந்த மதமாக இருந்தாலும் பாவங்களிலிருந்து கரையேறுவதற்கு சுலபமான கழுவாய்களைத் தயாராக வைத்துள்ளனர். பாவ மன்னிப்பு, தொழுகை, பிராயச்சித்தம் என்று வைத்துக் கொண்டுள்ளனர். 12 வருடங்கள் பாவம் செய்தாலும் கும்பகோணம் மகாமகக் குளத்திலே மகாமகத்தன்று ஒரு முழுக்குப் போட்டு விட்டால் 12 வருடங்கள் செய்த பாவங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாகப் (Whole Sale) பறந்து ஓடி விடும் என்றால் பஞ்சமா பாதகங்களைச் செய்ய யார் தான் அஞ்சுவார்கள் - தயங்குவார்கள்?

குறைந்த முதலீடு - கொள்ளை லாபம் என்கிற ஏற்பாடுதானே இது?

காஞ்சி மச்சேஸ்வரர் கோயிலில் என்ன நடந்தது? தேவநாதன் என்ற குருக்கள் பார்ப்பான் கோயில் கருவறையையே கருவை உண்டாக்கும் அறையாக காம விளையாட்டுக் கட்டிலாக மாற்றிடவில்லையா? கடவுள் என்ன செய்யும்? அன்றாடம் கடவுளைக் குளிப்பாட்டி ஆடை அணிவிக்கிற அந்தக் குருக்கள் பார்ப்பானுக்குத் தெரியாதா? கடவுளாவது வெண்டைக் காயாவது! அது ஒரு உலோகம் அவ்வளவுதான் என்று அனுபவத்தில் நன்கு தெரிந்து வைத்திருந்ததால்தானே கருவறைக்குள் பக்தைகளிடம் சல்லாபம் நடத்தி இருக்கிறான்?

அதிகம் கேட்டால் அப்பட்டமாகச் சொல்லுவானே! எங்கள் மதத்தில் எங்கள் கடவுள் செய்யாத காரியத்தையா - லீலைகளையா புதிதாகச் செய்துவிட்டேன்? என்ற கேட்க மாட்டானா? அப்படியே கேட்டாலும் அதற்கு எதிர் பதில் சொல்லுவதற்குச் சரக்கு இல்லையே! உண்மையைத் தானே சொன்னதாகப் பொருள்? பாதிரியார்கள் சிறுமிகளிடம் நடத்திய பாலியல் குற்றத்தைப் பற்றி போப் மனம் வருந்திப் பேசவில்லையா? ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர்க்குப் பாவ மன்னிப்பு வழங்கவில்லையா?

அன்பு உபதேசிக்கப்பட்ட இஸ்லாமிய நாடுகளில் நாளும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? குண்டுகளை வைக்கவா நபிகள் நாயகம் கற்றுக் கொடுத்தார்?

ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவுப் பிரார்த்தனை யின்போது எகிப்து தேவாலயத்தில் (அலெக்ஸாண்டிரியா) மனித வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பரிதாபகரமான முறையில் பலியாகியுள்ளார்களே! 30 பேர் காயம் அடைந்துள்ளனரே! இதனைத் தொடர்ந்து ஆத்திரப்பட்ட கிறித்துவர்கள் மசூதி ஒன்றின்மீது கல்லெறிந்து தாக்கியுள்ளார்களே இதன் பொருள் என்ன? தேவாலயத்தில் குண்டு வைத்தவர்கள் முஸ்லிம்கள் என்று கிறித்துவர்கள் கருதியதுதானே?

அதே நாளில் நைஜீரியாவின் தலைநகரமான அபுஜாவில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் பலியாகி யுள்ளனர். இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் இதனைச் செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்து மதத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதன் மாபெரும் தலைவர்களே தலைமை தாங்கி ஆயிரக்கணக் கானவர்களைக் கூட்டிச் சென்று, ஒரு பட்டப் பகலில் இஸ்லாமியர்களின் 450 ஆண்டு கால வரலாறு படைத்த வழிபாட்டுத் தலத்தை அடித்து நொறுக்குகின்றார்கள். ஆமாம், நாங்கள்தான் இடித்தோம் உங்களால் என்ன செய்ய முடியும்? என்று நாடாளுமன்றத்திலேயே அக்கட்சியின் தலைவர் குரல் கொடுக்கவில்லையா? அவர்கள் நம்பும் இராமனே ஒரு கொலைகாரன்தானே!

சூத்திரன் என்ற காரணத்துக்காக தவம் செய்த சம்புகனை வாளால் வெட்டி இராமன் படுகொலை செய்யவில்லையா?

இத்தகு மத ஆதிக்கச் சமுதாயத்தைச் செப்பனிட வேண்டுமானால், மக்களுக்கு வழி காட்டக் கூடிய மாற்றுத் தத்துவம் தேவையே! அது எது? அதுதான் நாத்திகத் தத்துவம் - ஒரு மாற்றுப் பண்பாடு (An Alternative Culture) அதன் அருமையை விளக்குவதுதான் திருச்சியில் வரும் 7,8,9 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கும் உலக நாத்திகர் மாநாடு.

சந்திப்போம் வாருங்கள்! உரத்த சிந்தனைகளைச் செவி மடுப்போம் கூடுங்கள், கூடுங்கள்!

--------------------”விடுதலை” தலையங்கம் 5,6 - 1- 2011

2 comments:

தமிழ் ஓவியா said...

நாத்திகர்களே!

உலக நாத்திகர் மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் தி டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு (13.6.2008) வெளியிட்ட ஒரு தகவல் மிகவும் பொருத்தமானதாகும். நாத்திகர்களே!

வயது முதிர்ந்தவர்கள் பேரறிவு கொண்டவர்களாக இருப்பர் என்ற முதுமொழியில் ஏதோ சிறிது உண்மை இருப்ப தாகவே தோன்றுகிறது. அதிக மூளைத் திறன் கொண்ட மக்கள் மற்றவர்களை விட 15 ஆண்டு கள் கூடுதலாக வாழக்கூடும் என்ற அண்மையில் நடத்தப் பட்ட ஓர் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது.

அறிவார்ந்த மக்களின் மூளை மிக மெதுவாகவே மூப்பு அடைவதால், அவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதை இத்தாலி நாட்டு கலாப்ரியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். உண்மையில் அவர்களை அறிவாளிகளாக ஆக்கும் எஸ்.எஸ்.ஏ.டி.எச்., என்ற மரபணுக்குத்தான் நன்றி கூறவேண்டும்.

இந்த மரபணுவின் ஆற்றல் குறைவாக இருப்பவர்கள் 85 வயதுக்கு மேல் உயிர் வாழ்தல் இயலாது. ஆனால் இந்த மரபணுவின் ஆற்றல் அதிகமாக உள்ளவர்கள் 100 வயது வரை வாழக்கூடும் என்று எதிர் பார்க்கலாம்.

500 முதிய ஆண், பெண் மக்களைப் பற்றிய விவரங் களைப் பகுத்தாய்வு செய்த பின்னர் இந்த இத்தாலிய ஆய்வுக் குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இவர்களில் 65-85 வயதுப் பிரிவில் உள்ள 115 பேரிடம் ஆற்றல் சோதனையை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள் ளப்பட்டது.

இந்த மரபணுவின் ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் இச் சோதனையில் குறிப்பிடத்தக்க அளவில் மிக மோசமாகப் பதில் அளித்தது முன்னர் கூறிய அய்யத்தை உறுதிப்படுத்தியது. ஆற்றல் குறைந்த மரபணு கொண்ட மக்களில் சிலர் 85 வயதுக்குப் பின் வாழ்ந்திருந்த போதும், ஆற்றல் நிறைந்த மரபணு கொண்ட மக்கள் 100 வயது வரை வாழ இயலும். படித்தல், சவால் அளிக்கும் பணியாற்றல், கலாச்சார வாழ்வை மேம்படுத்திக் கொள் ளுதல் போன்ற வாழும் முறை கள் ஆற்றல் குறைந்த மரபணு கொண்டிருப்பதை விட மிக முக்கியமானது என்று ஆய் வாளர் கியூசெப்பே பாசரிலோ கூறுகிறார்.

இந்த மரபணுவின் அறியும் ஆற்றல் பாதிப்புகளை நான்கு ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக அடையாளம் கண்ட றிந்த லண்டன் அரசர் கல்லூரி யின் மனஇயல் கல்வி நிறுவனத் தின் பேராசிரியர் ராபர்ட் ஃப்ளோ மினின் இந்தக் கண்டுபிடிப் புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுகிறார்.

அதிக அளவு அறிவாற்றல் கொண்ட மக்கள் அதிகக் கடவுள் நம்பிக்கை கொண்டவர் களாக இருப்பதில்லை. எதனை யும் கேள்வி கேட்டறியும் மனம் படைத்தவர்கள் என்பதுவே இதன் காரணம் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. உலஸ்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட்வின் தலை மையில் ஆய்வை மேற்கொண்ட இக்குழுவினர் அறிவாற்றலுக் கும், நாத்திகக் கருத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருப் பதைக் கண்டறிந்துள்ளனர். இது உண்மை என்பதற்கு எடுத்துக்காட்டு தந்தை பெரியார் ஆவார்கள். பார்வதி தேவியாரின் ஞானப்பால் உண்டு சின்ன வயதிலே பாடல் பாடினார் என்று பார்ப்பனர்கள் தூக்கிப் பிடிக்கும் திருஞான சம்பந்தன் அற்ப ஆயுளில் - வயது 18இல் மரணமடைந்தான் என்பதையும் கவனத்தில் கொண்டால் நாத்திகர்கள் நீண்ட ஆயுள் பெற்றிருப்பதன் உண்மை புரியும்.

- மயிலாடன் 7-1-11

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம்

தமிழர் தலைவரின் மனிதநேயம்பற்றி கவிஞர் வாலி


அண்மையில் ஆனந்த விகட னில் வெளியாகி உள்ள ஓர் அரு மையான, பெருமிதமிகு கட்டு ரையைப் படித்தேன்; சுவைத்தேன். காவியக் கவிஞர் வாலி அவர்களின் நினைவு நாடாக்கள் என்ற தொடரில் ஆசிரியரைப் பற்றி அவர் கூறியுள்ள செய்தி பொன் எழுத்து களால் பதிவு செய்யப்பட வேண்டிய சொற்கள் என்றால் மிகையே இல்லை!

அப்பலோ மருத்துவமனையில் கவிஞருக்கு பைபாஸ் சர்ஜரி முடிந்து i.c.u.-லிருந்து மீண்ட பின்னர், பேச்சு வராமையால் - வந்து பார்த்த கலைஞர் முதல் அனைவருக் கும் கைகளாலேயே நன்றி கூறிய தும், பேச்சு வாராமையால் கவலை யுற்ற நேரத்தில் கவிஞர் கூறுகிறார்:-

அப்போதுதான் அவர் வந்தார்; ஒரு மணி நேரம் உடனிருந்து, ஊமைத்தனத்தால் உளமொடிந் திருந்த எனக்கு ஆறுதல் கூறினார். வாலி! அமெரிக்காவில் நானும் பைபாஸ் பண்ணிக்கிட்டவன்தான்; எனக்கும் vocal card பாதிக்கப்பட்டு முழு ஊமையாக ஆயிட்டேன்; என் மனைவி, மக்கள் விழிகளில் கண்ணீர்! மெல்ல மெல்ல எனக்கு பேச்சு வந்திடுச்சு. அது மாதிரி உங்களுக்கும் வரும். இன்னும் மூணுமாசத்திலே நீங்கள் மேடையேறிப் பேசுவீங்க; என் வாக்குப் பொய்க்காது! என்றார். என்ன ஆச்சரியம்! அவர் வாக்கு பலித்தது! நான் மேடையேறிப் பேசினேன்! என்னளவில் அவர் வாக்கு தெய்வ வாக்கு. ஆனால் அவர் தெய்வத்தை ஏற்காத தீவிர நாத்திகர்! அவர் ஒரு நாணயமான நாத்திகர்; அவர்தான் திராவிடர் கழகத் தலைவர், மானமிகு. கி.வீரமணி அவர்கள். என்று கட்டுரையின் இறுதியில் ஆசிரியரின் பண்பினைக் குறிப்பிட்டு, நாணயமான ஒரு நாத்திகன் நாணய மற்ற ஓர் ஆத்திகனைவிட நூறு மடங்கு மேலானவன்! என்று ஆணித்தர மாகக் கூறியுள்ளார்!

மானமிகு ஆசிரியரைப் பற்றி எத்தனையோ பேர் புகழ்ந்து பேசி யுள்ளார்கள். தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் வளர்ந்த நமது ஆசிரியரின் மனித நேயம்பற்றி கவிஞர் வாலியின் அற்புதமான சொற்களால் நாம் உணர்கிறோம். உலக நாத்திகர் மாநாடு நடந்து கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஓர் ஆத்திக கவிஞரின் சொற்கள் கவனிக்கத்தக்கன. ஆசிரியரின் நாணயமிக்க குணநலத்தாலேயே எல்லோர் மனத்திலும் இடம் பெறுகின்றார்.
பணியுமாம் என்றும் பெருமை என்னும் திருக்குறளுக்கு நமது ஆசிரியரே முன் உதாரணமாகிறார். விடுதலை வாசகர், பகுத்தறிவாளர்.
சித்ரா சுந்தரம்.7-1-11